காதல் என்பது…
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதைத்தொகுப்பு:
காதல் தினபூமி
கதைப்பதிவு: May 4, 2026
பார்வையிட்டோர்: 9,380
(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆட்டோ வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எல்லாம் நடந்து முடிந்த மாதிரி இருந்தது. ராகவனுக்கு இன்னும் இருபுறமும் கைகளைப் பிடித்துக் கொண்டு “வேகமாக போப்பா” என்று ஓட்டுநரை விரட்டினார்கள். அந்த இருவரும் ரவுடிகளாக இருந்தாலும் பார்க்க மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ் மாதிரி இருந்தார்கள்.
வீட்டுக்குள்ளே வந்து எதுவும் வாயைப் பொத்தி, கையையும் காலையும் இறுக பிடித்து ஏறக்குறைய. ராகவன் தூக்கி வரப்பட்டு, திணிக்கப்பட்டுத் தற்போது இரண்டு பக்கமும் காவலோடு ஆட்டோவில் போவது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.
வீட்டிலிருந்து. தன்னைத் தள்ளிக் கொண்டு வரும்போது ‘இந்த நேரத்தில் அம்மா எங்கே போய் விட்டாள்?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, எதிர்த்த வீட்டு அக்காவுடன் பேசிக் கொண்டிருந்தவள், இவனை இழுத்துப் போவதைப் பார்த்து, கத்த முயற்சிக்க, அவளையும் கீழே தள்ளி விட்டு இவனை இழுத்து வந்தது இன்னும் மிகப் பெரிய ஆச்சரியமாக கனவு மாதிரி கூட இருக்கிறது.
“எங்கே கூட்டிப் போகிறீர்கள்?” என்று பல முறை கேட்டும் பதிலாக முறைப்பும், எக்காளச் சிரிப்பும் கேட்டு கிலி கலந்த எரிச்சல்தான் மேலோங்கி நின்றது.
ராகவன் ஒரு கணம் ஆட்டோ மெதுவாகப் போகும்போது, குதித்து விட முயன்று, கைகள் முறுக்கி வலி யேற்றி திரும்ப அமைதியாக இருக்க சைகை காட்டப்பட்டான்.
ஏன் இவர்கள் பேசமாட்டேன் என்கிறார்கள் ? ஊமைகளா ? என்று யோசிக்கும்போது ஆட்டோ நகரச் சந்தடிகளைத் தாண்டி ஒதுக்குப்புற அந்த நடுத்தர வீட்டின் முன்னால் நின்றது. ஏற்கனவே வந்த இடம் போல உணர்ந்தவர் திரும்பி பார்த்தபோது நிர்மலா தங்கியிருக்கும் காலனி எனப் புரிந்தது.
ஆட்டோக்காரனை அனுப்பி விட்டு ஏறக்குறைய திரும்பவும் அவன் அள்ளிக் கொண்டு அந்த அறைக்குள் வரப்பட்டான்.
முதலில் தான் காண்பது கனவா என்று தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.
ஏனென்றால் திரைப்படங்களில் தான் இப்படிப்பட்ட எதிர்பாராத காட்சிகள் வரும் என்ன இது.. என் காதலி கண்ணீரோடு தலைவிரி கோலமாக நின்று கொண்டிருந்தாள்.
அவளைச் சுற்றி நிற்கும் இவர்கள் யார்? என்று யோசித்து கொண்டிருக்கும் போது, விளம்பர மாடல் போலத் தோன்றிய அந்த குளிர் கண்ணாடி அணிந்தவன் அருகில் வந்து “நான், ராம். சௌக்கியமா?” என்று கைகொடுத்தான்.
“என்ன…இது… நிர்மலா…” பேச முடியாமல் திணறினான் ராகவன்.
“ஸாரி ராகவன், ஒரு சின்ன தடாலடி காரியம் பண்ணலாம் என்று நினைத்தேன். கொஞ்சம் ரப்பாக நடந்து கொண்டு விட்டார்கள். போங்கடா” என்று அங்கு நின்றவர்களை விரட்டினான் ராம்.
யாரும் அசையாமல் நின்று கொண்டிருந்தார்கள். ராம், ராகவன் அருகில் வந்து, “நீங்கள் நிர்மலாவைக் காதலிக்கிறது உண்மை தானே?” என்று கேட்டான்.
“ஆமாம்” கொஞ்சம் கோபத்தோடு வெட்டிப் பேசினான் ராகவன்.
“நான் நிர்மலாவின் மாமா அவள் என் அக்கா பெண். அவள் எனக்குத்தான் என்று நானும் ஆசைகளை வளர்த்துக் கொண்டேன்.
இடீரென்று என் மனதை திறந்து காட்ட விரும்பியபோது உங்கள் உருவத்தை அவள் இதயத்தில் வைத்திருப்பதாகச் சொல்கிறாள்.
சரி. உங்களையே கூப்பிட்டு அவளுக்குத் தாலி கட்டிக் கூட்டிண்டுப் போகச் சொல்லலாமே என்று தான் அழைத்து வரச் சொன்னேன்..
இந்த நண்பர்கள் கொஞ்சம் உங்களை அசௌகரியப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.
“திடுதிப்பென்று திடீரென்று கல்யாணம் செய்து கொள்வதென்றால்…” ராகவன் கையை உதறிக் கொண்டு இழுக்க ஆரம்பித்தான்.
“யோவ், நீ காதலிச்ச பெண் தானே, தாலிகட்டிக் கூட்டிக் கொண்டு போக வேண்டியதுதானே” கூட்டத்திலேயே ஒருத்தன் கத்தினான்.
நிர்மலா, ராகவன் என்ன செய்யப் போகிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கன்னத்தில் கண்ணீர் வழிந்து கோடுகள் நீண்டிருந்தன.
“சும்மா இருங்கப்பா. காதலிக்கத் தெரிஞ்சவருக்கு… கல்யாணம் பண்ணத் தெரியாமலா இருக்கும்” என்று அமைதிப்படுத்தினான் ராம்.
நிர்மலாவை நிமிர்ந்து பார்த்த ராகவன் அவள் முகத்தில் நிரம்பிய மகிழ்ச்சியைப் பார்த்து தலையைத் தாழ்த்திக் கொள்ள “இந்தாங்க சார். உங்கள் உடைமையை தாலி கட்டி அழைத்துச் செல்லுங்க” என்று தங்கத்தினாலான மாங்கல்யத்தை நீட்டினான்.
வாங்காமல் நின்ற ராகவனைப் பார்த்து, “என்ன திகைத்து விட்டீர்கள். நான் நிர்மலாவிற்காக பதினைந்து பவுனில் செய்த சொக்கத் தங்கத் தாலி. வாங்கி அவள் கழுத்தில் கட்டுங்கள். இது என் பரிசு” என்றான் ராம்.
நிர்மலா நிமிர்ந்து ஆவலோடு பார்க்க, “அது…எப்படி திடுதிப்பென்று.. அப்பா அம்மா எல்லோரும் இருந்து – முகூர்த்தம் பார்த்து.–” என்று ஆரம்பித்தான் ராகவன்.
“நிர்மலாவைக் காதலிக்கும்போது சகுனம் பார்த்தா ஆரம்பித்தீர்கள். இல்லை உங்கள் அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டா காதல் செய்தீர்கள்.
சரி. ஒன்று செய்வோம். தாலியை வாங்கி அவள் கழுத்தில் கட்டி அவளை மனைவியாக்கிக் கொள்ளுங்கள். அப்பா அம்மாவிடம் சொல்லி அற்புதமாக அழைத்துப் போங்கள்” என்றான் ராம்.
“அது – எப்படி… ஸாரி ராம். நான் கல்யாணம் வரையெல்லாம்…” சறுக்கி ஒதுங்கப் பார்த்தான் ராகவன்.
“நிர்மலா, நீ இவனைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று எண்ணித்தான் என் நண்பர்களோடு இந்த நாடகம் நடந்தது. இன்னும் நான் உன் மேல் கொண்டுள்ள அன்பு குறையாது.
ஆனால் நீ காதலிக்கும் இந்த மனிதன் வேடதாரி. கிடைத்தால் மலரை முகர்ந்து கசக்கி எறிந்து விட்டுப் போகக்கூடிய ஒரு சராசரி வில்லன்.
நீ இவனைக் காதலிக்கிறாய் என்று தெரிந்ததும், என் சொந்த ஆசைகளை எல்லாம் விட்டு விட்டு இவனைத் தொடர்ந்தேன்” என்று முடிக்கு முன், ராகவன் அங்கிருந்து வேகமாக ஓட எல்லோரும் எக்காளமாகச் சிரித்தார்கள்.
மனந்தெளிந்த நிர்மலா “மாமா. சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியதற்கு நன்றி.. நானாக உங்களைத் தெரிந்திருக்கும் வரை…” என்று சொல்லி முடிப்பதற்குள், “சினிமா பாணியில் காலமெல்லாம் உனக்காக காத்திருப்பேன் என்று சொல்லட்டுமா” என ஸ்டைலாக ராம் சொல்ல அந்த இடத்தில் சிரிப்பும் கும்மாளமும் நிறைந்திருந்தது.
– 21-12-2003, தினபூமி – ஞாயிறுபூமி.
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
June 9, 2026
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
June 6, 2026
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
June 3, 2026
