கதையாசிரியர்:
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 19,217 
 
 

“சாவித்திரி! சாவித்திரி” எல்லையற்ற கோபத்தோடு கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தார் பத்மனாபன்.

கோபமாக இருந்தாலொழியப் பத்மனாபன் இப்படிக் கத்த மாட்டார் என்று அவளுக்குத் தெரியும். பயந்த படியே சுருதி குறையக் கேட்டாள்.

“என்னங்க?”

“ராதா எங்கே? கல்லுhரியிலிருந்து வந்து விட்டாளா? இல்லையா?”

“வந்து விட்டாள். இதோ கூப்பிடுகிறேன்”

உள்ளுக்குள் சென்று, “ராதா, ராதா. அப்பா கூப்பிடுகிறார் பார், சீக்கிரம் வா” என்றாள்.

ராதா வந்தாள்.

“ராதா, இந்தக் கோலத்தோடு தான் கல்லுhரிக்குப் போனாயா?”

“அப்படியென்றால்?”

“இந்த உடையோடு தான் கல்லுhரிக்குப் போனாயா?”

“ஆமாம், ஏன்?”

“உனக்கு வெட்கமாக இல்லை? உடலெல்லாம் தெரிய ஒரு புடவை. லோ கட், லோ ஹிப்புமாக நீ படிக்கப் போகிறாயா? அழகுப் போட்டிக்குப் போகிறாயா? எனக்கு மானமே போகிறது. போகிறவன், வருகிறவன் எல்லாம் உன்னை ரசித்துக் கொண்டு, சே! சே! ஏம்மா இப்படி?”

“அம்மா, அம்மா அப்பா சொல்வதைக் கேட்டாயா? என் தோழி சீதா இதே உடையோடு அன்று இங்கு வந்த பொழுது அப்பா அவளை எப்படிப் பாராட்டினார், ரசித்தார். அவருக்கு இந்த உடை ரொம்ப பிடிக்கிறது என்பதினால் தானே நானும் அது மாதிரி போட்டுக் கொண்டேன். இப்ப என்னை அப்பா இப்படித் திட்டுகிறாரே?”

“சீதா இன்னொருவர் வீட்டுப் பெண், நீயோ அவர் பெண்ணாச்சே ராதா. ஆண்கள் எல்லாம் ரசிகர்கள் அம்மா. மற்றவர்கள் வீட்டுப் பெண்ணை ரசிப்பார்கள். ஆனால் தன் மனைவியையும், பெண்ணையும் மற்றவர்கள் ரசிப்பதை விரும்பமாட்டார்கள். அவர்களால் அதைப் பொறுத்துக் கொள்ளவும் முடிவதில்லை.”

பத்மனாபன் உண்மை சுட, விக்கித்து நின்றார்.

– சாவி 9-12-1984

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *