மெய்யறிவு பெற்ற சித்தர்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 7
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெகுகாலத்திற்கு முன்பே மாயூரத்தில் சித்தர் ஒருவர் இருந்தார். அவருடைய பெயர் சிற்றம்பல நாடிகள். அவர் மெய்யறிவு கைவரப்பெற்றவர். நன்மை தீமை, இன்ப துன்பம், இகழ்ச்சி புகழ்ச்சி முதலிய எல்லாவற்றையும் ஒரே தன்மையாகப் பார்க்கக் கூடிய பண்பு அவரிடம் நன்றாக அமைந்திருந்தது. இவருக்கு மாணவர்கள் பலர் இருந்தனர். மாணவர் களிலும் மெய்யறிவு அமையப் பெற்றவர்கள் சிலர் இருந்தனர். இவ் வுடலின் நிலையாமையையும் பொய்த் தன்மையையும் நன்குணர்ந்த சித்தர் தமது உடலுக்கு ஏற்படும் எத்தகைய இன்ப துன்பங்களையும் ஒரு பொருட்படுத்தவே மாட்டார்.
ஒரு நாள் ஓர் அன்பர், சித்தரையும் அவருடைய மாணவர்களையும் தமது இல்லத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் உணவளித்தார். இலையில் உணவைப் படைத்த பிறகு நெய்வார்த்கற் பொருட்டு நெய் வைக்கப் பெற்றிருந்த கலயத்தை எடுக்கச் சென்றவர் நெய்க் கலயத்திற்குப் பதிலாக வேப்பெண்ணெய் இருந்த கலயத்தைத் தவறுதலாக எடுத்துக்கொண்டு வந்து எல்லோருடைய இலையிலும் வேப்பெண் ணெயை ஊற்றி விட்டார். சித்தரும் அவருடைய மாணவர்களும் உண்ணத் தொடங்கினர்.
அனைவரும் யாதுஞ் சொல்லாமல், “உடல் அழியக் கூடியது தானே! எதனையுண்டால் என்ன? எவ்வாறு போனால் என்ன?” என்று பேசாது உண்டனர். அக் கூட்டத்தில் இருந்தவர் ஒக்காள மிட்டு வாந்தி பண்ணத் தொடங்கினார். அவ்வளவில் சிற்றம்பல நாடிகள், “நாக்கு ருசிகொள்ள உண்ண விரும்புகிற அஞ்ஞானிகட்கும் நம் திருக்கூட்டத்திற்கும் ஒத்துக்கொள்ளாது,” என்று உரைத்தனர். வாந்தி யெடுக்கத் தொடங்கியவர் அவர்களைவிட்டு நீங்கிப்போய் விட்டார். மெய்யறிவு கைவரப் பெற்றவர்கள் எதிலும் பற்றற்றிருப்பார்கள் என்பது இவரிடத்தில் நன்கு விளங்கியது.
“எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை- நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.”
(உரை.) எல்லாப் படியாலும் – எல்லாவகையாலும், எண்ணினால் – ஆராய்ந்தால், இவ் வுடம்பு – இந்த உடம்பானது, பொல்லாப்புழு -பொல்லாத புழுக்களுக்கும், மலிநோய் – நிறைந்த பீணிகட்கும், புல்குரம்பை – புல்லிய குடிசையாக இருக்கின்றது, நல்லார் – நல்லறிவுடையோர், அறிந்திருப்பார் – இவ் யுடம் பினிழிவை அறிந்திருப்பார்கள்; ஆதலினால் -ஆகையால், அவர்கள், கமலநீர்போல் – தாமரையிலைத் தண்ணீரைப்போல, பிறிந்து இருப்பார் -(உடம்போடு கூடியிருந்தும்) கூடாதவர் களாகவே யிருபபார்கள்; பிறர்க்குப் பேசார் – அதைக் குறித்துப் பிறரிடத்தில் பேசமாட்டார்கள்.
(கருத்து.) மெய்யறிவாளர்கள் இவ்வுடலுக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை ஒரு பொருட்படுத்த மாட்டார்கள்.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026