சீத்தலைச் சாத்தனார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னாளில் மதுரைமா நகரில் சீத்தலைச் சாத்தனார் என்னும் பெயருடையவர் ஓருவர் இருந்தார். அவர் நெல், பயறு, உளுந்து, துவரை முதலிய கூலங்களை வாங்கி விற்று வாணிகஞ் செய்துகொண்டிருந்தார். அதனால் அவர் பெயர் “கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்’ என்று நீண்டு வழங்கியது. கூலவாணி கத்தினால் அவருக்குப் பெரும் பொருள் குவியவில்லை. வாழ்க்கைக்குப் போதிய அளவுக்கே வருவாய் வந்து கொண்டிருந்தது. 

சாத்தனார் ‘நாம் செல்வத்தால் பெரும்புகழ் பெற்று விளங்குவது அருமை, கல்வியையாயினும் நன்கு கற்றுச் சிறப்படைவோம்’ என்று எண்ணினார். நாளும் நூல்கள் பலவற்றைக் கற்று ஆராய்ச்சி செய் தார். பிறகு மணிமேகலை என்னும் நூலைத் தாமே இயற்றினார். அந்நூல் மிகச் சிறந்ததாக விளங்கு கிறது. அதனால் அவருடைய சிறப்பு என்றும் நின்று விளங்குவதாயிற்று. ஒருவர் தேடத்தக்கது புகழே என்பதை உலகம் இவர்பால் அறிந்துணர்ந்தது. 

“ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ் 
கூட்டும் படியின்றிக் கூடாவரம்—தேட்டம் 
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்.” 

(உரை.) மகிதலத்தீர் – நிலவுலகில் உள்ள மனிதர்களே!, கேண்மின் – கேளுங்கள், ஈட்டும் – தேடுதற்குரிய, பொருள்- பொருளைப்பற்றிய, முயற்சி – முயற்சிகளானவை, எண் இறந்த ஆயினும் – அளவில்லாதனவானாலும், ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம்-ஊழ்வினை கூட்டுமளவுக்கே யல்லாமல் அதற்குமேல் சேராவாம், தனம் தரியாது – ஊழால் வந்து சேருகின்ற பொருள் நிலைத்திருக்க மாட்டாது, தேட்டம் மரியாதை – ஆகவே நீங்கள் தேடத்தக்கது சிறப்புத் தங்கிய புகழேயாம். 

(கருத்து.) மிகுந்த முயற்சியினால் அடையக்கூடிய பொருள் ஊழ்வினை உள்ள அளவுக்குத்தான் உண்டாகும்; ஒருவர் முயற்சி செய்து தேடக்கூடியது புகழ்தான். 

– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *