இரண்டாவது கொள்ளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2026
பார்வையிட்டோர்: 35 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முகிலரசன் ஒரு கோடீஸ்வரர். அவருக்குச் சொந்தமாகப் பலவித மில்கள் இருந்தன! கார் பங்களா போன்றவைகள் அதிகம். அவரைத் தெரியாதவர்கள் சிங்கை நகரில் எவருமே இல்லை. இருக்கவும் முடியாது! இவ்வளவு செல்வத்தைக் கொடுத்த கடவுள் அவரின் அறிவுள்ள அழகான மனைவியை அவரிடமிருந்து பிரித்துவிட்டான்! செல்வாம்பிகை என்பது அவள் பெயர்! நல்ல அழகு! முகிலரசனின் குணமறிந்து நடக்கும் குணவதி! கணவனைக் கண்ணெனக் காத்த குணவதி! அந்த நல்லவள் இறந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவள் தந்த பரிசாகத் தற்போது உள்ள பிள்ளை தான் முகிலரசனுக்குச் சொத்து சுகம் எல்லாம்!

பள்ளிப் படிப்பை முடித்தான் முரளி! அவனைப் பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் ஒரு கல்லூரியிலே சேர்த்தார் முகிலரசன். தன் சொத்துக்களுக்கு எல்லாம் வாரிசு அவனென்பதால் அவனுக்குத் தேவையானவற்றை அவன் வாங்கிக் கொள்ளவும், அவனுக்குத் தேவையான பணத்தை வங்கியிலிருந்து அவன் எடுத்துக் கொள்ளவும் வழி செய்திருந்தார். முரளியோ பிறந்தது முதல் தாயின் பாசத்தை அறியாதவன். தந்தையோ தன் வியாபாரத்தைக் கவனிப்பதிலும் அவற்றை மேலும் அபிவிருத்திச் செய்வதிலுமே தன் உடல் பொருள் ஆவியைச் செலவிட்டவர்: செலவிட்டுக் கொண்டிருப்பவர். அதனால் முரளி தந்தை பாசத்தையும் அறியாமலேயே வளர்ந்தான்: படித்தான். வாரத்தில் என்றாவது ஒருநாள் தந்தையும் மகனும் ஒரு சில நிமிடங்களே சந்திக்கும் நிலையிலேயே காலம் ஒடியது.

இப்படி இருக்க, விஸ்வநாதன் எனும் ஹோட்டல் அதிபர் முகிலரசனின் பால்ய நண்பர். ஒரு நாள் அவரைக் காணக் காரில் வந்தார். தெய்வாதீனமாக அன்று பங்களாவில் இருந்தார் முகிலரசன். விஸ்வநாதனைக் கண்டதும் மிகவும் மகிழ்வுடன் வரவேற்றார் முகிலரசன். குடிக்கத் தேநீர் கொண்டு வரச் சொன்னார். அவரது பங்களா வேலைக்காரி உடனே சுடச்சுட இரு கண்ணாடித் தம்ளர்களில் தேநீரைக் கொண்டு வந்து, அவ்விருவர் முன்னிலையில் வைத்துச் சென்றாள்.

இருவரும் தேநீரைப் பருகியபடியே பேசினர்.விஸ்வநாதன் முதலில் பேச்சைத் தொடங்கினார். அவர் முகத்தில் ஒருவிதப் படபடப்புத் தெரிந்தது.

“முகிலரசா! இப்போது ஒரு முக்கியப் பிரச்சனை குறித்தே உன்னிடம் வந்தேன்!” என்றார்.

“என்ன…? ஏதும் புதுசா ஹோட்டல் வாங்க எண்ணமா?” முகிலரசன் தொழில் நினைவோடேயே பேசினார்.

”உனக்கு எப்பவுமே தொழிலைப் பற்றித்தான் சிந்தனையா? வேறு எதுவுமே இருக்காதா?” என்று கடிந்தார் விஸ்வநாதன்.

”வி’வம், தேனீயின் குறிக்கோள் என்னவாக இருக்கும்! தேனைக் கொண்டு வந்து கூட்டில் நிரப்புவதே அதன் கொள்கை! அதுபோலத்தான் நானும்! உழைக்க வேண்டும்! சாகும் வரை சம்பாதிக்க வேண்டும் என்பதே! புரிகிறதா?” என்று கூறிவிட்டுச் சிரித்தார்.

“முகிலரசா! உன் மனைவி உன்னை விட்டுப் போய்விட்ட பின் நீ யாருக்காகச் சம்பாதிக்கிறாய்? உன் ஒரே மகனுக்காகத்தான்! வேறு இந்த உலகில் எவருக்காகவும் இல்லை! அந்த ஒரே மகன் வாழ்வு சிறந்த முறையில் இருந்தால்தானே இந்தச் சொத்தையும் சுகத்தையும் அவனால் அனுபவிக்க முடியும்! இல்லையா? ” இப்படி விஸ்வநாதன் தேநீரை உறிஞ்சிவிட்டுப் பேசினார்.

”ஏன்? என் மகன் முரளிக்கு இப்போது என்ன குறை வைத்திருக்கிறேன்? அவன் விரும்புவதை உடனே பெறும் வசதிகள் யாவும் சரிவரச் செய்து கொடுத்துள்ளேன், விஸ்வம்! கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில்தான் அவனைச் சேர்த்துள்ளேன்! பிறகு என்ன அவனுக்குக் குறை?’

”முகிலரசா! சொல்கிறேன் என்று தவறாக எண்ணாதே! உன் பணமும் பவிசும் மட்டும் ஒரு குழந்தைக்கு நிம்மதியைத் தராது! உண்மையான தந்தை தாயாரின் பாசத்தில் தான் ஒரு பிள்ளையின் ஒழுக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வளர்கிறது! தாயின் அன்பை அவன் பிறந்ததுமே இழந்துவிட்டான்! தந்தையின் கண்டிப்பும் அவனுக்குக் கிட்டாமலேயே போய்விட்டது! ஒழுக்கத்தோடும் கண்ணியத்தோடும் அவன் இருந்தால் தான் உனது சொத்துக்கள் யாவும் பின்னால் அவனால் காக்கப்படும்! இல்லையெனில் பணம் சம்பாதிக்க நீ எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் யாவும் புல்லுக்கு இறைத்த நீராகிவிடும்! கல்லில் விதைத்த விதையாகிவிடும்!” என்றார் விஸ்வநாதன்.

”சரி! சரி! விஷயத்திற்கு வா! அவனுக்கு என்ன இப்போது குறை…?” என்று கேட்டார் முகிலரசன் சற்று அலட்சியமாக…

“முகிலரசா! நான் கூறப் போவதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துவிடாதே! உன் மகன்… உன் மகன்…”

“என் மகனுக்கு என்னப்பா சொல்?” என்றார் மீண்டும் ஆவலாக முகிலரசன்.

“உன் மகன் முரளி… போதை மருந்துக்கு அடிமையாகிக் கிடக்கறாண்டா முகிலரசா!” இப்படிச் சொல்லிவிட்டு முகிலரசனின் முகத்தை விஸ்வநாதன் பார்த்தார்! அவர் முகத்தில் எந்தவித மாற்றமோ அதிர்ச்சியோ இல்லை. அவர் ஒரு யதார்த்தவாதிபோல் இருந்தார். அதைக் கண்டு விஸ்வநாதன் அதிர்ச்சியோடு கேட்டார்.

“என்னப்பா முகிலரசா! நான் தீயை விட ஒரு பெரும் விஷயத்தைச் சொன்னேன். நீயோ அலட்சியமாக இருக்கிறாய்? என்ன உன் எண்ணம்? என்ன செய்யப் போகிறாய் அவனை? எப்படி அவன் நிலையை மாற்றப் போகிறாய்?”

“விஸ்வம்! நடப்பது நடக்கும்ர வாழ்வில் நாமொன்று நினைத்தால் தெய்வம் வேறொன்று நினைக்கிறது! என் கையில் எதுவும் இல்லை! அவனவன் விதியை அவனவனே தீர்மானிக்கிறான்! ஒரு தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நான் செவ்வனே செய்து வருகிறேன். ஒரு மகன் தந்தைக்கு என்ன பதிலுக்குச் செய்ய வேண்டுமோ அதனைத் தவறாது அவன் எனக்குச் செய்ய வேண்டும்! அதில் அவன் தவறினால் நானா பொறுப்பு? பாரத் லா படிக்கப்போன மஹாத்மா தன் தாயிடம் ஒரு சபதம் செய்து கொண்டார். ‘வேறு எந்தப் பெண்ணையும் மனத்தால் கூட எண்ணமாட்டேன்! மது வகைகளை அருந்த மாட்டேன்! புலால் உண்ணமாட்டேன்!’ என்று கூறினார்! அதனை அவர் வாழ்வில் செய்து காட்டினார். என் மகன் படித்து உயர வேண்டும் என்று தான் கல்லூரியில் சேர்த்தேனே ஒழிய, அவனைப் போதை மருந்து உற்பத்தி செய்யும் இரகசிய ஸ்தாபனத்திலா நான் சேர்த்தேன்? அவனை அவனே திருத்திக் கொண்டால் சரி! இல்லையாயின் எதுவோ எப்படியோ நடக்கட்டும் போ…!” என்றார் முகிலரசன்.

அதற்கு மேல் விஸ்வநாதன் அவரிடம் வாதிக்கவில்லை! ”சரி! வருகிறேன் முகிலரசா!” என்று கூறி எழுந்து வெறுப்புடன் நடந்து வெளியேறினார்.

இப்படியே காலங்கள் ஓடின. முரளியோ ஹெராயின் என்னும் போதைப் பொருளுக்கு முற்றிலுமே அடிமையாகிவிட்டான்; கூடவே ஊசியும் போட்டுக் கொள்கிறானாம்! இப்போது பாதி உடலாகத் தாடியும் மீசையுமாகப் பார்க்கவே பரிதாபமாக இருக்கின்றானாம்.

முகிலரசனோ தன் மகனைப் பற்றி எந்தவிதக் கலக்கமும் கொள்ளாமல், தன் வியாபாரம் பற்றிய சிந்தனை வயப்பட்டவராக எழுந்து இருந்தார்.

முரளி வீட்டிற்கு அத்தி பூத்தாற்போல் வருவான்; செல்வான்! தந்தைக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு அறவே அறுபட்டப் போனது.

சிங்கை அங்மோகியோ பூங்காவில் தன் கூட்டாளிகளுடன் கஞ்சா புகைத்தபடி இருந்தான் முரளி. விஸ்வ நாதன் தற்செயலாகப் பூங்கா பக்கம் உலவாச் சென்றார். அப்போது அவர் முரளியைப் பார்த்துவிட்டார். ஓடினார் அவனருகே! ஆயிரம் ஆனாலும் அந்தப் போதையிலும் தன் தந்தையின் நண்பரைக்க கண்டு சற்று மரியாதையுடன் எழுந்து வந்தான்.

“அங்கிள்….!” பரிவுடன் அழைத்தான்.

“முரளி! நீ ஏனப்பா இப்படி ஒரு நிலைக்கு ஆளானாய்? உனக்கு எதில் குறை? சொத்திலா ? சுகத்திலா? சொல்லப்பா?”

”அங்கிள்! சொத்தில் குறை இல்லை சுகத்தில் குறையில்லை! எனக்கின்னு யாரு இருக்காங்க?”

“உங்க அப்பாடா முரளி!”

“இல்லே அங்கிள்! அவர் எனக்காக இல்லே! பிறந்ததுமே என்னோட அம்மா இறந்திட்டாங்க! அப்பாவோ அவரோட தொழில் வாணிகம் இதிலேயே போயிட்டார்! எனக்கு அன்பு வேணும்! பாசம்! பரிவு! இரக்கம்! இதெல்லாம் வேணும்! அதெல்லாம் கிடைக்காது! அதனாலே எனக்கு இந்த உலகத்திலே இப்ப ஹெராயின் என் தாயாகவும், ஊசி என் தந்தையாகவும் அபீன் என் சகோதரனாகவும் கஞ்சா என் சகோதரியாகவும் இருந்தது. எனக்குப் போதைங்கிற பாசத்தையம் மயக்கங்கிற அன்பையும் வேண்டிய அளவு தர்றாங்க அங்கிள்! அதுபோதும்! என் மனம் குளிர இருக்கேன் என் இனிடையான எதிர்காலத்தைக் கெடுக்காதீங்க! தயவு செய்து போயிடுங்க!”

“முரளி… நான் சொல்றதை….” விஸ்வநாதன் இப்படி முடிக்கும் முன், கத்தினான் வெறி வந்தவனாக முரளி.

“போங்க இங்கிருந்து…” அதன் பின் விஸ்வநாதன் அங்கு நிற்கவே இல்லை! போய்விட்டார்.

ஒரு நாள் உதயமான சூரியன் முரளிக்கு விநோதமான நாளாக உதித்தது. அந்த உதய வேளையில் போதை தெளிந்தும் தெளியாதவனாக மெலல… சாலையில் நடந்தான். கால்கள் தடுமாறின! பசி வேறு! கால்கள் அவனது கட்டுப்பாட்டை இழந்து அவனோடு ஒத்துழைக்க மறுத்தன! எமனாக ஒரு கல்! எதிரே கிடந்ததை அவன் பார்க்கவில்லை. தடுமாறி விழுந்தான் தலையோ அந்தக் கல்லில் பலமாக அடிபட மௌனமாக அவனது உயிர் அவனிடமிருந்து விடை பெற்றது!

ஓர் இளங்குருத்து முளையிலேயே கருகிப் போனது போல் கறந்த பால் திரிவு கண்டதைப் போல் ஆகிவிட்டது அவனது வாழ்க்கை!

மக்கள் பரபரப்பாகப் பேசினர்! காவலர்கள் வந்தனர்! ஒரு வேனில் அவனது உடல் ஏற்பட்டது. எப்படியோ செய்தி காற்று வாக்கில் விஸ்வநாதனையும் சென்று சேர்ந்தது. ஆனால் முரளி தான் இறந்தான் என்று அவருக்கு முழுச் செய்தியும் கிடைக்கவில்லை. என்றாலும் அவருக்குள் ஓர் அதிர்ச்சி! முரளியாக இருக்குமோ? என எண்ணினார். விரைந்தார். ஆம்! முரளியே தான்! அவனது எலும்புக்கூடு போன்ற உடலைக் கண்டு கண்ணீர்விட்டார்.

சில நிமிடங்கள் வரை அவனுக்காக மௌன அஞ்சலி செலுத்தினார். பிறகு புகழ்பெற்ற தொழில் அதிபரான முகிலரசனின் மகன் தான் எனும் விஷயத்தைக் காவலர்களுக்குச் சொல்லிவிட்டு விரைந்தார், முகிலரசனின் அலுவலகம் நோக்கி….

வெளியே காவல்காரனான மலாய்ச் சிறுவன் ஒருவன் விஸ்வநாதனைக் கண்டு மலாய் மொழியில் வரவேற்று முகிலரசன் உள்ளே இருப்பதாகச் சொன்னான்.

உள்ளே சென்றார் விஸ்வநாதன்! ஏதோ வணிக விஷயமான கோப்புகளில் கையெழுத்துப் போட்டபடியே முகிலரசன் நிமிர்ந்தார். கண்ணீர் கசிய விஸ்வநாதன் நின்று கொண்டிருந்தார். ”முகிலரசா! உன் மகன் நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாம்பா….!” இப்படிச் சொல்லிவிட்டு அழுதார்.

மௌனமாகச் சிரித்தார் முகிலரசன்!

“ஒரு நல்ல விஷயத்திற்காக ஏன் விஸ்வம் கலங்குகிறாய்? எதிர்பாராத ஒன்று தான் அதிர்ச்சியைத்தரும்! இது எதிர் பார்த்த ஒன்றுதானே! அழாதே என்றார்” முகிலரசன்.

”முகிலரசா! உன் நெஞ்சில் பாசம் பரிவு அன்பு எதுவுமே கிடையாதா? உனக்குக் கொள்ளி வைக்க ஒரு பிள்ளை அவன் தான்! அவனே போயிட்டான்! இப்படி வருத்தமின்றிச் சிரிக்கின்றாயே! உன் மனம் என்ன கல்லா? நீ என்ன மிருகமா?” என்று கடிந்துரைத்தார் விஸ்வநாதன்.

“விஸ்வா! பதறாதே! என் மகன் கல் இல்லை! அது தானாகக் கல்லாகிவிட்டது! நான் மிருகமல்ல! அதுவாக மிருகமென ஆகிவிட்டது! நான் என் மேல் நியாயச் சாயம் பூசிக் கொள்ள எண்ணவில்லை! எதற்கும் ஒரு நியாயம் தர்மம் என்று இருக்கிறது. என் மகன் மீது நான் பாசமோ பரிவோ காட்டாதது என் தவறாகக் கூட இருக்கலாம்! அதற்காக நான் அவனது எதிர்காலத்தை இத்தனை வேலைகளுக்கு மத்தியில் கவனிக்காமல் இல்லை! இந்தச் சொத்தும் சுகமும் அவனுக்காகத்தான் சம்பாதித்தேன்! அவனே என்னை நிறுத்தி நியாயம் கேட்டிருக்கலாம்! அவனுக்கு எல்லா உரிமைகளும் உள்ளன! அதை விட்டுட்டுத் தனக்கே வேண்டுமென்றே விஷத்தைத் தேர்ந்தெடுத்தது அவனது பண மமதை! நான் ஏழையாகப் பிறந்தேன்! அவன் பணக்காரனாகப் பிறந்தான்! நான் இல்லாமல் வாடினேன்! அவன் இருக்கிறதென்று ஆடினான்! போய்விட்டான்! புலம்பாதே! போ… வேலையைப் பார்!” என்றார் முகிலரசன்.

“முகிலரசா! அவன் உனக்குக் கொள்ளி போட வேண்டும்! விதி அவனுக்கு நீ கொள்ளி போடும் நிலையை ஏற்படுத்திவிட்டது! வா! அவனுக்குக் கொள்ளியாவது வை! வா போகலாம்!” என்றார் விஸ்வநாதன்.

”கொள்ளியா? நானா? அவனுக்கா? அவன் எப்போது என்னையும் இந்தப் பெருஞ் சொத்துக்களையும் காக்க வேண்டும் என்ற நியதியை மறந்து போதைப் பொருளைத் தொட்டானோ, அன்றே அவனுக்கு அவனே முதற் கொள்ளியை வைத்துக் கொண்டான்! அவனுக்கு ஏன் என்னை இரண்டாவது கொள்ளி வைக்கச் சொல்கின்றாய்?”

இதற்கு மேல் விஸ்வநாதன் வாதம் செய்யவில்லை. வெளியே எழுந்து நடந்தார்.

(1987-ஆம் ஆண்டு)

– விண்ணில் ஒரு மணல் வீடு (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: பிப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

ஆசிரியரின் பிற நூல்கள் கதைத் தொகுதிகள் மரபுத்தொடர்க் கதைகள் (1990) ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு (1995) மனதில் உறுதி வேண்டும் (1995) தியாகப் பிறவி (1995) கட்டுரைத் தொகுதிகள் ஊன்றுகோல் (1989) கட்டுரை மலர்கள் (1990) என்னுரை - விண்ணில் ஒரு மணல் வீடு - பிப்ரவரி 2011 சிறுகதை எழுதுவது என்பது ஒரு கலை. அத்தகைய கலையை ஆர்வத்தோடு படைப்பவனும் படிப்பவனும் கலைஞன். இத்தகைய சிறுகதைகளை ஆர்வத்தோடு வாசகர்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *