மீன் வலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 1, 2026
பார்வையிட்டோர்: 66 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

வழக்கம் போல அன்று சூரியன் கண் விழித்து எட்டிப்பார்த்தான். அவன் கண்களிலிருந்து கசிந்த வெளிச்சத்தை கண்டதும் சேவல்களும், பறவைகளும் விடிந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டனர்.

வெளிச்சத்தை கண்ட மகிழ்ச்சியில் பறவைகள் பாட ஆரம்பித்தன. பறவைகளின் காலை நேரம் கீச்சிடும் குரலின் பாட்டை கேட்டு சுந்தரபாண்டி கண் விழித்தான். பறவைகளின் கீச்சு குரல்தான் சுந்தரபாண்டியனின் அலாரம். சுந்தரபாண்டியன் ஒரு மீனவன். மீனவர்கள் எப்போதும் விட்டு பிடிப்பவர்கள் வலையை விட்டு மீனை பிடிப்பார்கள்.

சுந்தரபாண்டி தூத்துக்குடி கடலோரத்தில் ஒரு சிறிய குப்பத்தில் வாழ்ந்து வரும் கடல் பிரியன். கடலும் மீனும்தான் அவனுக்கு சொத்து. சுந்தரபாண்டி படும் கஷ்டங்களும், அவஸ்தைகளும் அவன் வாழும் குடிசையின் கூரையை பார்த்தாலே புரிந்துவிடும். அவன் அணிந்திருந்த அழுக்கு படிந்த தேய்ந்த செருப்பு அவன் வறுமையை உரக்க கத்தி சொல்லும்.

பாண்டியின் மனைவி மளிகை கடையில் வேலை செய்து வந்தால், பெயர் வாணி. சுந்தரபாண்டிக்கு ஒரே ஒரு மகள் LKG படித்து வருகிறாள். குடிசையில் பிறந்த குட்டி மகாராணி, அவள் பெயர் கீர்த்தி. கீர்த்தி இங்கலீஷ் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள். எப்படியாவது கீர்த்தியை நல்லா படிக்கவைத்துவிட வேண்டும் என்று பாண்டிக்கு ஆசை. படிக்காத அப்பாக்கள் பிள்ளைகளை படிக்க வைக்கவேண்டும் என்ற வைராக்கியம் அவனுக்குள் எரிந்துகொண்டு இருந்தது.

இவர்கள் வாழும் வீடு இரண்டு அறைகள் மட்டும்தான், அதில் ஒன்று சமையலறை, இன்னொரு அறையில்தான் அவர்கள் குடும்பம் நடத்தி வந்தார்கள். மழை காலத்தில் கொஞ்சம் சிரமம்தான். கூரை மீது விழுந்த மழைநீர் கூரையை துளைத்துக்கொண்டு வீட்டுக்குள் சொட்ட ஆரம்பிக்கும். வீட்டுக்கு வெளியே கடல் நீர், கூரைக்கு மேலே மழைநீர், வீட்டுக்குள்ளே சொட்டுநீர் சொட்டிக்கொண்டு இருக்கும். தண்ணீருக்கு மேல் பேப்பர் படகு மிதப்பதுபோல அவர்களின் குடிசையின் நிலைமை மிதந்துகொண்டு இருந்தது.

கூரையை மாற்றி புதுக்கூரைபோடவேண்டும் என்று வாணி சண்டையிட்டு கத்திகொண்டே இருப்பாள், அனால் அவள் சத்தத்தை பாண்டி காதுக்குள் போட்டுக்கொள்ள மாட்டான். அவன் மீன் பிடித்து அதில் வரும் வருமானம் சோத்துக்கும், கீர்த்தியின் ஸ்கூல் பீசுக்கும் சரியாகிவிடும். அக்கம் பக்கத்தில் கொஞ்சம் கடன் வாங்குவதுண்டு. கடனை கட்ட போராடுவதும்முண்டு.

அன்று மாலை 6 மணி இருக்கும். அவர்களின் குடிசை வீடு பூட்டியிருந்தது. பாண்டி மீன் மார்க்கட்டில் நண்பர்களோடு நேரத்தை கழித்து கொண்டிருந்தான். கீர்த்தியும், அம்மாவும் கோவிலில் சாமி அபிஷேகத்தை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். குளிர் காற்று வீசி, மழை பெய்ய தொடங்கியது. தூறல் விழும் சத்தம் கேட்டதும் வாணிக்கு மனம் பதற் தொடங்கியது. வீட்டுக்குள் மழைநீர் சொட்டும் என்ற கவலை அவள் நிம்மதியை கொலை செய்தது. கீர்த்தி அம்மாவை பார்த்தால், “அம்மா மழை பெய்யுது வீட்டுக்கு போய்டலாமா, என்னோட பொம்மை நனைந்துவிடும்” என்றாள். மழை சட சடவென இறங்கியது. அதிவேகமான மழை. மழை பெய்ய கூடாது என என பொம்மை நனைத்துவிடும் என்று கீர்த்தி சாமியை வேண்டினாள். எல்லோரும் மழைக்கு பயந்து ஓடி ஒதுங்கினர்.

பாண்டி மழையை பார்த்ததும் அவன் வீட்டின் நிலைமையை கற்பனை செய்து பார்த்தான். கையில் பிடித்திருந்த பீடியை ஒரு முறை உறிஞ்சிவிட்டு, கவலையோடு கீழே வீசினான். குடிசையின் மேல்கூரையை மாற்றுவதற்கு கூட காசு இல்லை, அவனின் இயலாமை அவனுக்கு எரிச்சலூட்டியது.

அம்மாவும் கீர்த்தியும் மழை நின்றபின் வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து உள்சென்று பார்த்தால்… வீட்டில் இருந்த அத்தனை பொருட்களும் நனைந்து ஈரமானது. உடைகள் நனைந்தது, பழைய மிஸ்சி நனைந்தது, பாயும் நனைந்தது. வாணி தலையெழுத்து என்று நொந்துகொண்டு சுத்தம் செய்ய தொடங்கினாள். கீர்த்தி கத்த ஆரம்பித்தாள். கீர்த்தி திடுக்கிட்டு விதுவிதுரத்து போனால், கீர்த்தியின் புத்தக பையும் நனைத்திருந்தது. கீர்த்திக்கு பயமும், அழுகையும் கலந்து வந்தது. எங்க டீச்சர் திட்டுவாங்க, அடிப்பாங்க என்ற பயம்தான். மழையைவிட அதிகமாக அவள் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. இரவில் தூங்கும்போது அவள் கனவில் டீச்சரின் முகம் வந்து வந்து போனதால் தூக்கம் உடைந்தது.

மறுநாள் காலையில் பள்ளிக்கூடத்தில் கீர்த்தி பதட்டமாக உட்கார்ந்திருந்தாள். கண்கள் சிவக்க முகம் வாடி இருந்தாள். டீச்சர் வகுப்புக்குள் வந்ததும் பதட்டம் அதிகரித்தது. முன் வரிசையில் இருந்த ஒரு மாணவன் “டீச்சர் கீர்த்தி நோட்டு புத்தகத்தை தண்ணீர் ஊத்தி நனைச்சிட்டா”. என்று போட்டுக்கொடுத்தான். டீச்சருக்கு கோபம் வெடித்தது. “கீர்த்தி புத்தகத்தை தண்ணீரில் நெனச்சியா என்று டீச்சர் அதட்டினாள்”. கீர்த்தி ஆமாம் என்று தலையசைத்தாள். அவளவுதான், வகுப்பறைக்கு வெளியில் கீர்த்தியும் நனைத்த புத்தக பையும் மௌனமாக முட்டிகால் போட்டுக்கொண்டிருந்தன.

“டீச்சருக்கு என்ன தெரியும் கீர்த்தியின் நிலைமையை பற்றி…”

“மீன்வலைக்குள் மீன் சிக்கிக்கொண்டதுபோல, வறுமை வலைக்குள் பாண்டியின் குடும்பம் சிக்கித்தவிக்கிறது”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *