மறக்க முயன்றேன்
கதையாசிரியர்: பே.செல்வ கணேஷ்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2026
பார்வையிட்டோர்: 4,755
எனது ஏழு வயதில் தங்கை சுபா பிறந்தாள், ஆனால் அவளது ஆயுட்காலமோ ஆறுமாதம் வரைதான்!
கொடிய நோயானது அவளை தாக்கி என்னிடமிருந்து அவளைப் பிரித்தது.
ஓடியாடி,சிரித்துப் பேசி மகிழ வேண்டியவளுக்கு புதைக்குழிதான் இடம் என்று புதைத்துவிட்டார்கள்.
அதையும் மறக்க முயன்றேன்!
எனது பதின்மூன்று வயதில் அம்மா இன்னொருவனுடன் ஓடிச்சென்றுவிட்டாள், என்னையும் அப்பாவையும் அனாதையாக விட்டுவிட்டு…
அதையும் மறக்க முயன்றேன்!
அம்மா ஓடிச்சென்றதை வைத்து வகுப்பில் உள்ள அனைவரும் கிண்டல் செய்தனர் அதனையும் மறக்க முயன்றேன்!
அம்மா இப்படி ஓடிப்போய்விட்டாளே என்று அப்பாவும் குடித்துக்குடித்தே உயிரை விட்டார்…
அதையும் மறக்க முயன்றேன்!
அப்பாவுமில்லாமல், அம்மாவுமில்லாமல் பசியாலும் தனிமையாலும் வாடினேன். அந்த தனிமை நாட்களையும் மறக்க முயன்றேன்!
பசியாலும், வறுமையாலும் என் மனதில் இருந்த ‘கலெக்டர்’ ஆகவேண்டும் என்கிற ஆசையையும் மறக்க முயன்றேன்!
கிடைத்த வேலைகள் செய்து,கண்டவர்களிடமும் ஏச்சும் பேச்சுமாக வாங்கினேன், அந்த வசைச்சொற்களையும் மறக்க முயன்றேன்!
அப்படி போய்க் கொண்டிருந்தபோதுதான் அவளை நான் சந்தித்தேன்,காதல் கொண்டேன்…அவளும்தான்! இறுதியில் திருமணமும் செய்துக் கொண்டேன், அதன் பிறகு எங்களுக்கு ஒரு அழகான குழந்தை பிறந்து, எங்களது வாழ்க்கையை இனிமையாக்கியது.
அந்த இனிமையை சிதைக்கும் விதமாக,குழந்தை பிறந்த இரண்டு வருடத்திலேயே அவளுக்கு புற்றுநோய் தாக்கி, அவளை நடைப்பிணமாக்கியது.
ஒரு வருடமாக அந்த புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்தவள், மரணம் நெருங்குவதை அறிந்தாளோ என்னவோ? என்னிடம் கடைசியாக முத்தம் ஒன்றைக் கேட்டாள், அதுதான் நான் அவளிடம் கடைசியாக கொடுத்த முத்தம்.
அவளது உயிரோ அந்த ஒற்றை முத்தத்திற்காக காத்திருந்தது போல அவளை விட்டு பிரிந்தது, அதனையும் மறக்க முயன்றேன்!
அவளோடு நானும் போய்விடலாமா? என்று யோசித்தேன், ஆனால் இந்த பிஞ்சுக்குழந்தை என்ன செய்தது?
நானும் போய்விட்டால் இக்குழந்தையும் நான் சிறுவயதில் வாங்கிய அதே வசைச் சொற்களை வாங்கிக்கொண்டும், என்னைப் போன்று துன்பங்களை மறக்க முயற்சி செய்துக்கொண்டும் தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும்.
அந்த கஷ்டத்தை நான் அக்குழந்தைக்கு தர விரும்பவில்லை, அந்த ரணங்களை மறக்க முயற்சி செய்துக்கொண்டு வாழ்வதை விட, அந்த ரணங்களுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டியதுதான் என்று முடிவெடுத்தேன்.
அக்குழந்தைக்கு தாயுமானவனாக வாழ…
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒரு உறவு ஒரு பிரிவு
இரா.துரைமாணிக்கம்
September 30, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
September 30, 2026
உறவுகள்
முல்லை அமுதன்
September 27, 2026