புரிதல்
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 7, 2026
பார்வையிட்டோர்: 8
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சின்னையா நாயக்கருக்கு இப்படியோர் சிக்கல் வந்திருக்கக் கூடாது. பாவம், ரொம்பக் கொதித்துப் போயிருக்கிறார். குருட்டு ஈ சுவரில், கதவில் மோதிக் கொண்டு இரையுமே… அதுமாதிரி, அவரும் கண் மூக்கு தெரியாத கோபத்தில்…” எல்லார் மீதும் ‘சள், சள்’ என்று விழுந்து கொண்டிருக்கிறார்.
சும்மாவே… சின்னையா நாயக்கருக்கு கரண்டுக்காரங்க என்றாலே, பிடிக்காது. பார்த்தாலே பற்றிக் கொண்டு வரும். அடிமனசிலிருந்து சீறிச்சினந்து திட்டித் தீர்ப்பார்.
“ஒன்னுக்குமத்த பயல்க. ஒழுங்கா கையெழுத்துப் போடத் தெரியாத பயக. காக்கிச்சட்டை போட்டவுடனே மூவாயிரரூவா சம்பளம். சம்சாரியை மதிப்பானா? அதான்… கிண்டி மேய்தான். வந்து பாருங்கான்…”
என்று ஆத்திரம் ஆத்திரமாய் பொறுமுவார். காலத்திலும் மழையில்லை. மார்கழி தையிலும் மழையில்லாமல் போயிற்று. காடுகரைகளில் பயிர் பச்சை பொசுங்குகிறது. கிணறுகளில் நீர் இழுபறியாகி, வரட்டிழுப்பாகி விட்டது.
இருக்கிற தண்ணீரை ஊற ஊற இறைக்கணும். அதுக்கு கரண்டு வேணும்.
இருக்கிற தண்ணீரை பங்காளிக்குள் பிரித்துப் பாய்ச்சு வதற்குள் பெரும் சண்டைக்காடு.
“நீ வந்து பாரு நா வந்து பாரு’ என்று ஒரே மல்லுக் கட்டு. அடித்துப் பிடித்து இன்றைக்குத்தான் கரண்டு ரூம் சாவியை வாங்கினார்.
மதியக்கரண்டு.
காலையிலேயே வயர்மேன் வெள்ளையும் சொள்ளையு மாய் பளிச்சென்று வந்தார்.
“என்னப்பா… காக்கிச்சட்டை எங்கே?”
“இன்னிக்கு லீவ்!”
“லீவா?”
“ஆமா… ஒரு போராட்டத்துக்குப் போறேன்!” இவருக் குள் திகுதிகுவென்று எரிந்தது. கொந்தளித்துக் குமுறி வந்த கெட்ட வார்த்தைகள்.
‘சம்சாரிக சாகக்கிடக்கான். அவனைச் சீந்த நாதியில்லே. கொள்ளை கொள்ளையா சம்பளமும் போனஸும் வாங்கி வாயில் போடுதீக. இன்னும் என்ன மயித்துக்குப் போராட்டமும், கீராட்டமும்.’
மனசுக்குள் சீறிவந்த வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டார். வெறுப்போடு மேலும் கீழும் பார்த்தார்.
“இன்னிக்கு கரண்டு ஒழுங்கா வரும்லே?” இறுகலான குரலில் கேட்டார்.
“ம். கரெக்டா வரும். லைன் எல்லாம் க்ளீனாயிருக்கு.”
இளமதியத்திற்கே புஞ்சைக்குப் போய் விட்டார். கரண்டு நின்றது. த்ரிபேஸ் கரண்டு வந்தவுடன் மோட் டாரை எடுத்து விட்டார்.
ரெண்டு உறுமு உறுமி விட்டு, மோட்டார் ஓடியது. அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார், சின்னையா நாயக்கர். பெருத்த ஆறுதல்.
வாய்க்காலில் தண்ணீர் கூடவே நடந்து வந்தார். அவர் காலுக்கு முன்னால் பழகிய பாம்பு மாதிரி தண்ணீர் விறுவிறுவென்று ஊர்ந்தது.
புஞ்சைக்குள் தலைவைத்து… காய்ந்த புல், இலைச் சருகுகளோடு சலசலவென்று சத்தமாய் பாத்திக்குள் நீர் பரவியபோது-
‘டடக்’ என்கிற சத்தம். இருதய நரம்பு அறுத்த மாதிரி யிருந்தது. நிமிர்ந்து பார்த்தார். மோட்டார் பம்பு ஒரு குலுங்கலோடு மூளியாய் நின்றது.
பதறிப் போய் ஓடினார். கரண்டு இல்லை. சுற்று முற்றி லும் கண்ணை எறிந்தார். எல்லா பம்ப் ஷெட்களிலும் இவரைப் போலவே ஆள் தெரிந்தது.
இருக்கிற தண்ணீரை இறைக்க வழியில்லை, பீஸ் போடச் சொல்ல வயர்மேனும் இல்லை. கிணற்று நீரை எட்டிப் பார்த்தார். இருக்கிறதை எடுத்துச் சாப்பிட முடியாத பசித்த மனிதனின் ஏக்கமும் தவிப்பும்… அவருக்குள்.
எல்லாம் கோபமாகி வயர்மேன் மேல் திரும்பியது நினைக்க நினைக்க மனசு கிடந்து கொதித்தது.
“வரட்டும்… இன்னிக்கு என்ன ஆனாலும் சரி… ரெண்டுல ஒன்னு பாத்துர வேண்டியதுதான். அவன் ஆம்பளையா, நாம ஆம்பளையான்னு மோதிப் பாத்துர வேண்டியதுதான்.”
சுட்டிக்கிடக்கிற ஜல்லிக்கட்டுக் காளையாக அவர் மனசு மூர்க்கமாய்த் திமிறியது. மம்பட்டியை எறிந்து விட்டு, பம்ப் ஷெட்டை ‘டம்ம்’மென்று அறைந்து பூட்டி விட்டு… வேக வேகமாய் ஊருக்குள் வந்தார்.
ஊர் மடத்தில் இவரைப் போலவே நிறைய சம்சாரிகள். எரிச்சலில் தகித்துக் கொண்டிந்தனர். வாயிலிருந்து நெருப்புத் துண்டுகளைத் துப்பிக்கொண் டிருந்தனர்.
வயர்மேனையும், கரண்டாபீஸையும் கந்து கந்தாகக் கிழித்துப் போட்டனர். முட்டி மோதி வழியறியாமல் அலைகிற கோபம், திசையற்றுப் பாய்ந்தது.
சின்னையா நாயக்கர் ரொம்பக் கோபமும் கொதிப்புமாய் சீறினார். “ஆமா…! இப்படி பொம்பளைக மாதிரி புலம்பிப் புலம்பி பேசிக்கிட்டேயிருக்கப் போய்த்தான்… வயர்மேன் நம்மளை கிள்ளுக்கீரைன்னு நெனைச்சுட்டான்…
“இப்ப… என்ன செய்யணும்னு சொல்றீரு?’
“கட்டிவைச்சு ஒதைக்க வேண்டியதுதானே? அப்பத் தானே… நமக்குப் பயந்து வேலை ஜோலி பாப்பான்.”
“கட்டி வைக்கிறது பெரிசில்லே… அதாலே வர்ற வினையை யார் தாங்குறது?”
“என்ன வினை வந்துரும்? தலையை சீவிருவாகளோ?” “என்ன வினை வந்துருமா? நல்லாயிருக்கே ஒம்ம கதை” என்று பரிகாசமாய் கேட்ட அவன், சின்னையாநாயக்கரை ஒரு தினுசாய்ப் பார்த்தான். “பக்கத்து ஊரு கதை ஓமக்குத் தெரியாதா?”
“என்ன கதை?”
…உள்ளூர் தச்சாசாரியின் மகன்தான், வயர்மேன். தச்சாசாரி என்றால்…. ஒற்றை வீட்டுக்காரர். சம்சாரிகளை நம்பி, அவர்கள் நிழலை அண்டி வாழ்கிறவர். சம்சாரி மக்களிடம் வருஷக் கூலியாக தான்யம் வாங்கி ஜீவனம் பண்ணுகிறவர்.
அவர் மகன் என்பதால்… ஊருக்கே கட்டுப்பட்டவர் என்ற தொனியில் ‘தாம், தூம்’ என்று அதிகாரம் பண்ணி… ஆசாரியை அதட்டுகிற மாதிரியே வயர்மேனையும் போய் அதட்ட… அது ஒரு முரண்பாடாகி… வாய்ச்சத்தமாகி…
“ஒத்தை வீட்டுக்காரப் பயலுக்கு இம்புட்டுத் திமிரா…?” என்ற ஆவேசத்தில் அடி அடியென்று அடித்து, வேப்ப மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர்.
சங்கம் தலையிட்டு ஜே.இ.யிடம் மோதி… காவல் துறையில் மோதி… முடுக்கிவிட…
போலீஸ் கிராமத்திற்குள் வர, ஜனங்கள் கந்தர்வ கோளமாய் பயந்தோட… போலீஸ் கேஸ் ஆயிற்று.
ஊரில் பதினெட்டுபேர் மேல் கேஸ். அத்தனை பேரும் ‘வாய்தா, வாய்தா’ என்று கோர்ட்டுக்கும் ஊருக்கும் மூணு வருஷமாய் இழுபட்டு நொந்து கிடக்கிறார்கள்…
“ஆமய்யா சின்னையா நாய்க்கரே, அந்த ஊர்க்காரங்க சீரழிஞ்ச மாதிரி… நாமளும் சீரழியவா? நாசமாய்ப் போயிருவோம்…”
“அதானே! வழியிலே போற சனியனைக் கூப்பிட்டு முதுகுலே ஏத்திக்கிட்டு… சாகவா?”
”சம்சாரிகளுக்கு உள்ள நொம்பலம் காணாதுன்னு… இது வேற நொம்பலமா? வயர்மேனை அடிக்கவும் வேணாம், நாம வயித்துலே பயத்தைக் கட்டிக்கிட்டு அலையவும் வேணாம்…”
சின்னையா நாயக்கரை அம்போவென்று விட்டு விட்டு, ஆள் ஆளுக்கு ஒன்றை முணங்கி விட்டு கலைந்தனர்.
ஒற்றையாளாய்… இவர் மட்டும். இவருக்குள் ஏகமாய் கடுப்பு, வெறி.
கண்டமேனிக்கு மனசுக்குள் திட்டித்தீர்த்தார். ‘கோழைப்பயக, பயந்தாரிப்பயக’ என்று சக சம்சாரிகளை வசவாய் வைது ஆத்திரத்தைத் தணித்துக்கொண்டார்.
அப்பவும்… அவருக்குக் கோபம் தணியவில்லை. வயர் மேனுடன் சண்டை போட்டுவிட வேண்டியதுதான் என்று ஒரே முடிவில் இருந்தார்.
பயிர் வாடிக்கிடக்கிறது. தண்ணீர் பாய்ச்ச முடிய வில்லை. அதைவிடப் பெரிய விஷயம் என்றால்… காலையில் கேட்டதற்கு என்ன அலட்சியமாகப் பதில் சொன்னான்…
‘கரெக்டா கரண்டு வரும். லைன் க்ளீனாயிருக்கு’ன்னு சொன்னானே, நம்பளைக் கேணப்பயன்னு நெனச்சுட் டானே… வரட்டும்!
எழுந்து தெருவில் நடந்தார். டீக்கடைப் பக்கம் போனார். டீக்கடையில் ஆட்கள் நிறைய இருந்தனர்.
“ஒரு டீ போடப்பா” என்றார். ஒரு பெஞ்சில் உட்காரப் போனார். பக்கத்தில் முத்துச்சாமி இருந்தான்.
முந்தியொரு சமயத்தில் வயர்மேனைச் சுற்றி வளைத்துக் கொண்டு, ஆள் ஆளுக்கு எகிறினார்கள்.
“சங்கம் வைச்சிருக்கிற தைர்யத்துலேதான்… நீங்க இந்த ஆட்டம் போடுதீக?” என்றார் ஒரு சம்சாரி.
“நாங்க ஒன்னும் ஆட்டம் போடலை. நாங்க எங்க டூட்டியைத்தான் செய்றோம்…”
“டூட்டியைச் செஞ்சா… எதுக்கு கரண்டு இல்லாமப் போகுது?”
“மூணு பேரு பார்க்க வேண்டிய வேலையை ஒருத்தன் தலையிலே திணிச்சா… வேலை ஒழுங்கா நடக்குமா? அதான் குளறுபடி. நீங்க ஆபீஸர் மார்கிட்டே போய் மோத மாட்டீக… ஏங்கிட்டேயே மோதுதீக. நா என்ன செய்ய?”
“அப்போ… நாங்கதான் கூறுகெட்டுப் போய்த் திரியறோமா?”
“ஆமா… சர்க்காரு உங்களையும் என்னையும் மோத விட்டு வேடிக்கை பாக்குது. நீங்க சர்க்கார் செய்ற காரியங் களைப் பார்க்காம… எம்மேலேயே வந்து மோதுனா என்ன அர்த்தம்?”
“அர்த்தம் கெட்டுப் போய், அரை வேக்காடுகளாய் சம்சாரிக அறிவில்லாம அலையுறாக? அப்படித்தானே, சொல்றே? ஒனக்கு எம்புட்டுத் திமிர் இருந்தா…இப்படி பேசுவே? சங்கம் இருக்குங்கிற திமிர்தானே?”
“வார்த்தை ஒழுங்கா பேசணும்? திமிரு கிமிறுன்னு பேசக் கூடாது, ஆமா… சொல்லிட்டேன்…”
“ஏன்? பேசுனா… என்ன செய்வே?”
முறுக்கேறிப் போன உணர்ச்சி வெக்கை. வெப்ப வார்த்தைகள். பாம்புச் சீறல்கள். கலவர நிலவரம்.
அப்போதுதான்-
இந்த முத்துச்சாமி தலையிட்டான். வயர்மேனை நல்ல வார்த்தை சொல்லி அமர்த்திவிட்டு, சுற்றியிருந்த சம்சாரி களை ‘தடாபுடா’வென்று சத்தம் போட்டான்.
“சங்கம் சங்கம்னு… சங்கம் வைச்சிருக்கிறதையே ஒரு குத்தமா ஏன் சொல்றீக? அவங்க சங்கம் வைச்சுப் போராடி… சம்பளத்தை உசத்தி… அவங்க தொழிலுக்கு ஒரு கௌரவத்தை உண்டாக்கியிருக்காங்க. நீங்க சம்சாரிக. அவுக்கிட்டேயிருந்து பாடம் கத்துகிட வேண்டாம்? நீங்களும் சங்கம் வைச்சு… போராடி, சம்சாரித் தொழிலை கட்டுபடியாகிற தொழிலா மாத்த வேண்டாம்? அதைச் செய்யாம… சங்கம் வைக்குறதையே குத்தம் சொன்னா… நாம வெளங்குவமா? நாம உருப்படுவோமா?”-
என்று திகிடு முகிடாய் சத்தம் போட்ட பிறகுதான் கூட்டம் கலைந்தது.
அப்படி வயர்மேனுக்கு வக்காலத்துப் பேசியவன்தான்… இவன்.
இவனிடம் தான் வயர்மேனைப் பற்றிப் பேசணும்,
“முத்துச்சாமி இன்னிக்கு என்ன நடந்துச்சு, தெரியுமா?”
“தெரியாதே…”
நடந்ததையெல்லாம் சொல்லிமுடித்தார். கொதிப்பும் கொந்தளிப்புமாய் முடித்தார்.
“பார்த்தீயா… உங்க வயர்மேன் லட்சணத்தை. இன்னிக்கு சாங்காலம் வரட்டும். ரெண்டுலே ஒன்னு பாக்காம விடமாட்டேன்…”
முத்துச்சாமி சிரித்தான். நிதானம் குலையாத மென்மைச் சிரிப்பு. அவரது சீண்டலுக்குப் பலியாகாத பொறுமைச் சிரிப்பு. முறுவல்.
“என்ன சிரிக்கே?”
“ஒன்றுமில்லே… ரெண்டு மாசத்துக்கு முந்தி கனகவேலு வீட்டுக்கு கல்யாணத்தன்னிக்கு நீங்களும் இருந்தீகல்லே? என்ன நடந்துச்சுங்கிறதை நெனைச்சுப் பாருங்க…”
…கனகவேலு மகள் கல்யாணம், ஊர்ப்பந்தி வைக்கிற நேரம். திடுதிப்பென்று கரண்டு கட். சட்டென்று வந்து அப்பிக் கொண்ட இருட்டு. கூட்டம் திணறியது.
கிராமத்தில் அரிக்கேன் லைட்டும் அருந்தலாகி விட்டது. பெட்ரோமாக்ஸ் லைட்டும் கிடையாது. என்ன செய்ய? எப்படி ஊர்ப்பந்தி வைக்க? ரொம்பச் சிரமம். நடக்கவே நடக்காது.
அதைவிட வேறொரு சிக்கல். ஊர்ப்பந்தி முடித்த பிறகு தான், நிச்சயதார்த்தம். கரண்டு இல்லாமல் போனால்… அபசகுனமாய் மாப்பிள்ளை வீட்டார் நினைப்பார்கள்.
கல்யாணமே நின்றுபோகிற நெருக்கடி. பக்கத்து ஊரில் தான் வயர்மேன் வீடு. ஒரு மைல் இருக்கும்.
முத்துச்சாமிதான் ஒரு பையனிடம் சைக்கிளை தந்து, விஷயத்தைச் சொல்லி அனுப்பி வைத்தான்.
அடுத்த அரை மணி நேரத்திற்குள் வயர்மேன் வந்து விட்டார். “சட்டப்படி… இப்ப நா டூட்டி பாக்க வேண்டியது மில்லே. பாக்கவும் கூடாது. இப்ப எனக்கு ஏதாச்சும் ஆனாக் கூட நட்ட ஈடு கிடைக்காது. ஆனாலும்… நா செய்றேன். ஏன் தெரியுமா?”
சுற்றிலும் மௌனம்.
“நானும் மனுசன்தான்.”
அடுத்த பத்தாவது நிமிஷத்திற்குள்-
டிரான்ஸ்ஃபார்மரில் ஏறி, ப்யூஸ் போட்டு, கரண்டு வந்து விட்டது. ஊரெல்லாம் ஒளிமயம். கனகவேலு மகள் வாழ்விலும் தான்…
..இப்போது முத்துச்சாமி கேட்டான்.
“அந்த வயர்மேன் கூட மல்லுக்கட்டப் போறீகளா…?” சின்னையா நாயக்கர் தர்ம சங்கடமாய் நெளிந்தார். எதுவும் சொல்ல முடியாமல் வெறுமனே விழித்தார்.
“இப்பவும்…எங்கேயாச்சும் ஏதாச்சும் கோளாராகி கரண்டு போயிருக்கும். இதுக்கும் லீவு போட்டுருக்குற அவர்தான் பொறுப்பா?”
“அப்படியில்லே..
சம்சாரிகளுக்கு தண்ணிபாய்ச்ச முடியாமப் போச்சுல்லே? எதுக்கு லீவைப் போட்டுட்டுப் போகணும்?”
“எங்க போயிருக்கார், தெரியுமா?”
“போராட்டத்துக்கு.”
“யாரு போராட்டத்துக்கு, அது தெரியுமா?”
“அவுக போராட்டமாய்த்தான் இருக்கும்.”
“இல்லே”
“பெறகு?”
”சம்சாரிகளோட பம்ப் ஷெட்டுக்கு இலவசமின்சாரம் கிடைச்சிக்கிட்டிருக்கே… அது ரத்தாகப் போகுது. மத்திய அரசு உத்தரவு போட்டுருச்சு…”
“ம்… அப்புடியா…!”
“ஆமா. அப்படி ரத்து பண்ணக் கூடாது. விவசாயி களுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கெடைக் கணும்ங்கிற கோரிக்கைக்காகத்தான்… இன்னிக்கு மின்சார ஊழி யர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க.”
“நமக்காக… அவுக எதுக்குப் போராடணும்?”
“நாம புரிஞ்சிக்கிடாம இருக்கோம்லே, அதுக்காகத் தான். நமக்குப் போராடுற தைர்யம் குடுக்கத்தான். அவுக பின்னாடி நம்ம சம்சாரிக ஒண்ணு கூடிப் போனா… நம்ம தொழிலும் உருப்படும். நம்ம பொழப்பும் உருப்படும். இல்லேன்னா… சீந்த நாதியில்லாத அகதிகளா சம்சாரிக அலைய வேண்டியது தான்…”
மறுநாள்-
டீக்கடைக்குள்ளிருந்து வெறியேறிய வயர்மேனை சினேகிதமாய் பார்த்துச் சிரித்தார், சின்னையா நாயக்கர்.
“ஒரு டீ சாப்பிடுறீயா? சொல்லட்டா?”
வயர்மேன் மெல்லிய சிரிப்போடு மறுத்தான்.
“நீங்க இப்படிக் கேட்டதே போதும். வயிறு நெறைஞ்சு போச்சு.”
– 1993, தமிழ்நாடு மின் ஊழியர்கள் சங்க 8-வது மாநாட்டு மலர்.
– கணக்கு (சிறுகதைகள்), முதற்பதிப்பு: மார்ச் 1994, திருவரசு புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
வளர்கவி
September 18, 2026
இந்திரா
நீர்வை பொன்னையன்
September 18, 2026
இடைவேளை
எஸ்.சங்கீதா
September 18, 2026
