வளத்தையா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 7, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தச் சாதி நாட்டாண்மை வரச்சொல்லி ஆள் அனுப்பியவுடன், இவனுக்குள் திக்கென்றது. சங்கரனுக்குள் சிலீரிட்டுப் பாய்ந்தோடுகிற பயம். அடிவயிற்றில் ஐஸ் கட்டியை சொருகின மாதிரியிருந்தது. 

விதவிதமான யூகங்கள். கற்பனைக் காட்சிகள். ‘கட்டி வைத்து அடிப்பார்களோ’ ‘ஆள் ஆளுக்கு அரட்டுவார் களோ…’ ‘எண்ணெய் ஊத்தி எரிச்சு, ஒன்னைச் சாம்ப லாக்கிருவம்டா, சாக்கிரதை’ என்பார்களோ… 

போகாமலும் இருக்க முடியாது. போகாவிட்டால்… “பயந்தாரிப் பய, கூப்பிட்டு விட்டவுடனே குலைபதறிப் போய்ட்டான். இப்படிக் கோழைப் பயலுக்கெல்லாம் காதலாவது… கத்தரிக்காயாவது!” என்று பேசி விடுவார்கள். கேலிக்கிடமாகிப் போகும். 

இவனுக்குள் நெருக்கடி. கழுத்தாம்பிடியாகி விட்ட சிக்கல். நினைக்க நினைக்க உள்ளுக்குள் நழுவிக் கொண்டோடுகிற தைர்யம். குன்றிக் குழைகிற வீராப்பு. 

முந்தா நாள், ஆற்றங்கரையின் வேலிமர அடர்த்தி மறைவில் பேசிக்கொண்டிருந்தபோது முகம் வாடிக் போயிருந்த வீரம்மா. அவள் வலது கண்ணிலிருந்து மட்டும் திரண்டு வழிந்த கண்ணீர். அடி உதட்டை அழுந்தக் கடித்து, உள் உணர்ச்சித் தளதளப்பை உணர்த்திய விதம். அந்தச் சோகத்திலும் அவளிடம் வெளிப்பட்ட வைராக்யச் சொற்கள். மனசின் ரத்தமாய் வந்த வார்த்தைகள்… 

“நீங்க மனசு வைச்சு தைர்யமாயிருந்தா… நாம சேர்ந்து வாழுவோம். இல்லேன்னா… நா இல்லை. அரளிக் கொட் டையை அரைச்சுக் குடிச்சிட்டு ஒரு நொடியிலே மாண்டு ருவேன். அதுக்காக… இன்னொருத்தருக்குக் கழுத்தை நீட்டமாட்டேன். அதை மட்டும் மனசுலே குறிச்சு வைச் சுக்கங்க.” 

வழிந்த கண்ணீரைத் தொடர்ந்து அடி இமையில் திரண்டு நின்ற நீர்த்துளி. அந்தச் சிறு துளிக்குள் தெரிந்த இவனது கடுகு முகம். அதன் நடுக்கத்தில் நடுங்குகிற இவனும். அந்த நீர்த்துளியில், குழைந்த தைர்யம் இறுக்கம் பெற… ‘என்ன ஆனாலும் சரி’ என்கிற துணிச்சலுடன் புறப்பட்டான். 

இவன் பயந்தமாதிரி அதட்டல், அடாவடித்தனம் எதுவுமில்லை. 

நாட்டாண்மைக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். புது நிறம். கிருதா சற்று கூடுதலான அடர்த்தியாய் நீண்டிருந்தது. நரைத்திருந்தது. மைக்கோடு போன்ற மீசையில் ஒன்றி ரண்டு நரை. 

ரொம்ப மிருதுவாகப் பேசினார். சகல விளைவுகளையும் முன்னுணர்ந்த முதிர்ச்சியோடு- மனசுக்குள் மனசாய் பேசுகிற மாதிரி- பேசினார். 

“தம்பி … நம்ம பட்டிக்காட்டுலே எல்லாம் காதல் கீதல்ங்கிறது லாயக்கில்லே. நீங்க வேற சாதி. வீரம்மா வேற சாதி. அவள் சின்னப்பொண்ணு. என்ன தெரியும்? பொம்மைக்கு ஆசைப்படுற கொழந்தை மாதிரி. நீங்கதான் பக்குவமா வெலகிக்கிடணும். நாலாகாடு போய்வந்த வெவரமான ஆளு நீங்க…” 

“இல்லேங்க… சின்னப் புள்ளையிலேயிருந்து கல்மிஷமில்லாம பழகிட்டோம்…” 

“அந்தப் பழக்கம் வேற தம்பி, இப்ப வந்துருக்குற பிரச்னை வேற. பழக்கத்துக்கு – நட்புக்கு – சாதி பாக்க வேண்டியதில்லே. கல்யாணம், வாழ்க்கைன்னு வர்றப்ப சாதி ரொம்ப முக்கியமாயிடுது.” 

“சாதிங்கிறது நாமளா ஏற்படுத்திக்கிட்டது தானே?” 

“இல்லே தம்பி. ராசா ஆண்ட காலத்துலேயும் சாதி இருந்துருக்கு. இப்பவும் இருக்கு. இன்னும் நூறு வருஷம் ஆனப் பெறகும் சாதியிருக்கும். சாதியில்லாம கல்யாணம் காடேத்து எதுவும் கெடையாது.” 

“இல்லேங்க.” 

“பொறு தம்பி… எங்க சொல்லை மீறி நீங்க ஏதாச்சும் செய்ஞ்சா… என்னாகும்? ரெண்டு சாதிசனமும் சண்டை போட்டு மண்டையை ஒடைச்சுக்கிடும்? தேவையா? இல்லேன்னா… ‘குடும்ப மானம் போறதைவிட புள்ளை செத்தா பரவாலே’ன்னு பெத்தவுக அந்தப் பெண்ணை கொன்னு போடுவாக? ஒனக்கு அது சந்தோஷமா? யோசிச்சுப் புத்தியோடு நடந்துக்க. பேசாம… நாலைஞ்சு மாசத்துக்கு எங்கிட்டாச்சும் ஓடிப் போயிரு.” 

இது மிருதுவான மிரட்டல். கனிவான அச்சுறுத்தல். பனிப்பாளத்தால் வயிற்றைக் கிழிக்கிற சாணக்கியம். அகிம்சையான இம்சை. 

மறுநாள் நடக்கப் போகிற பயங்கரம் அறியாமல்… கொதிப்பான குழப்பத்தோடு வீடு வந்து விழுந்தான் சங்கரன். 

ராத்திரி உறக்கமே வரவில்லை. மனசுக்குள் ஏகப்பட்ட உளைச்சல். வகை வகையான பீதிக் காட்சிகள். வீரம்மா செத்து விறைத்துக் கிடக்கிற மாதிரியான குரூரத் தோற்றம். 

பாயில் புரண்டான். நள்ளிரவுக்கு மேல் பசியெடுத்தது. தண்ணீரைக் குடித்துவிட்டு மீண்டும் படுத்தான். உறக்கம் வரவிடாமல் மனசுக்குள் முள்முள்ளாய் நினைவுகள். 

அப்போதுதான்- 

வளத்தய்யா ஞாபகம் வந்தது. அவர் செத்துப்போய் ரெண்டு மூணு வருசமாகி விட்டது. அந்த வளத்தய்யா இவனுக்கு உயிர். ரொம்பப் பாசம். எந்நேரமும் அவரோடுதான் வாசம். 

இத்தனைக்கும்…அவர் ஒன்றும் சொந்த வளத்தய்யா இல்லை. நெருக்கமான சொந்தம் கூட கிடையாது. ஓடிக் கிடக்கிற உறவு முறைக் கொடியை தூக்கிப் பார்த்தால்… எங்கோ தூரத்தில் ஓர் இணைப்பு தெரியும். அவ்வளவு தூரத்துச் சொந்தம். 

பொதுவாக… அம்மாவைப் பெற்ற அய்யாவைத்தான் வளத்தய்யா என்பார்கள். இவர் எல்லாச் சிறுவர்களுக்கும் வளத்தய்யாதான். அவர் பின்னால் எப்பவும் ஒரு சிறுவர் பட்டாளம், சர்க்கரையை மொய்க்கிற ஈக்கூட்டம் மாதிரி இருக்கும். 

“கதை போடுங்க வளத்தியா… வளத்தியா கதை” என்று எந்நேரமும் நச்சரிப்பார்கள். நச்சரிப்பில் அவர் எரிச்சலடைய மாட்டார். பெருமைப்படுவார். 

“பொறுங்க பொடுசுகளா… போடுதேன் கதை” ம்பார். கதை என்றால்… அப்படிக் கதை போடுவார். கேட்கக் கேட்க ஆசையாயிருக்கும். அவர் கதை போடுகிற நேர்த்தியில் ஏதோ மந்திர மாயம் இருக்கும். காட்சி காட்சியாக மனசுக்குள் விரியும். 

…ராஜகுமாரியை பிடித்து சிறை வைத்திருப்பார்கள். காவலுக்கு ஈனாப் பூச்சிகள். ரெண்டு பூச்சி சேர்ந்தால் ஓர் ஆளைக் கொன்று தின்று விடும். எலும்பு தவிர எல்லா வற்றையும் தின்று தீர்த்து விடும். 

அந்த ஈனாப் பூச்சிகள் பௌர்ணமி அன்றைக்கு மட்டும் காட்டு மேய்ச்சலுக்குப் போகும். ராஜகுமாரியை மீட்க தவியாய் தவித்து ராஜகுமாரன் காத்திருப்பான். பௌர்ணமி. பட்டு போல் நிலா வெளிச்சம். ஒரு நொண்டி ஈனாப் பூச்சி மட்டும் காவல். மற்றதெல்லாம் மேய்ச்சலுக்கு. காதலன் வருவான். ராஜகுமாரியை மீட்டு குதிரையில் வைத்து தீயாய் பறப்பான். 

நொண்டி தாக்கல் சொல்லி… காட்டு மேய்ச்சலுக்குப் போன எல்லா ஈனாப் பூச்சிகளும் இவர்களைத் துரத்தும். குதிரை காற்றாய் பறக்கும். ஈனாப் பூச்சிகள் அதைவிட வேகம். கிட்டத்தில் நெருங்கி விடும். ராஜகுமாரன் பதறுவான். 

ராஜகுமாரி தன் கழுத்தில் கிடந்த நவரத்தின மாலையை அறுத்து, பின்பக்கமாய் வீசியெறிவாள். சிதறிக் தெறிக்கும் நவரத்தினங்கள், நிலா வெளிச்சத்தில் மண்ணின் நட்சத்திரங்களாய்… 

எல்லா ஈனாப் பூச்சிகளும் நட்சத்திரங்களை மொய்க்க… காதலர்கள் தப்பி ஓடி விடுவார்கள்… 

குழந்தைகளுக்கு அப்பத்தான் உயிரே வரும். “அப்பாடா… தப்பிச்சிட்டாகளா” என்று ஆவல் பரபரப் பாய் கேட்பார்கள். சங்கரனுக்குப் படுக்கப் போனால் கூட கண்ணுக்குள் ஈனாப் பூச்சி துரத்திக் கொண்டு வரும். ஆள் உயரத்துக்கு பருத்து வளர்ந்திருக்கிற ராட்சஸச் சிலந்திப் பூச்சி மாதிரி. பயத்தில் ‘ஒன்றுக்கிருந்து’ டவுசரை நனைத்துக் கொண்ட இரவுகள் நிறைய்ய. 

கொள்ளைக்காரன் ஜம்புலிங்கம் கதையை மட்டும் விட்டுவிட்டு ஏழெட்டு நாளைக்குப் போடுவார். வெள்ளைக்காரன் போலீஸ், ஜம்புலிங்கத்தைப் பிடிக்க முடியாமல் ஏமாந்து போகிறபோது… பிள்ளைகளுக்கு ஏகக் கொண்டாட்டமாயிருக்கும். 

இப்படி அவர் போட்ட கதைகள் வண்டி வண்டியா யிருக்கும். சங்கரனுக்கும் அவர் கூட ரொம்ப ஒட்டுதல். இவனுக்கு நீச்சல் சொல்லிக் கொடுத்தவரே அவர்தான். 

கிணற்றுக்குள் படியில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந் திருப்பான். தண்ணீருக்குள் மீன் மாதிரி ஒரே இடத்தில் நகராமல்- நீந்திக் கொண்டிருப்பார். “குதிடா…” என்பார். இவன் பயப்படுவான். 

“எதுக்கு தொடை நடுங்குறே? தண்ணிக்குள்ளே என்ன இருக்கும்னு இப்படிப் பயந்து சாகுறே?” 

“தண்ணிப் பேய்.” 

அவர் கேலி பண்ணிச் சிரிப்பார். 

“போடா கிறுக்குப் பயலே… தண்ணிக்குள்ளே பேய் எப்படி இருக்கும்? அதுக்கு எப்படி மூச்சுத் தாங்கும்?” 

இப்படிப் பேசித்தான் அவன் பயத்தைப் போக்கினார். நீச்சலும் சொல்லிக் கொடுத்தார். 

சங்கரனுக்கு அப்போது ரெண்டுங்கெட்டான் வயசு. பதினைந்து பதினாறு இருக்கும். அவன் வயசுப் பையன் களெல்லாம் சிறகு முளைத்து, வளத்தய்யாவை விட்டுப் பறந்து போய்விட்டனர், அவரவர் ஆகாயங்களில். இவனுக்கு எப்பவும் அவர்தான் ஆகாயம், கூடு, எல்லாம்… 

சினிமா பார்த்து விட்டு…. வார இதழ் கதைகளைப் படித்துவிட்டு அதைப் பற்றியெல்லாம் வளத்தய்யாவிடம் பேசுவான். கேள்வி கேட்பான்… 

…ஒரு சமயம். 

பைத்தியக்காரன் ஒருத்தன் ஒரு பெண்ணை கற்பழித்து விடுவான். அவள் கதறிக் கதறிழுவாள். அவனையே கணவ னாக ஏற்று… அவனைத் திருத்த படாதபாடுபடுவாள். 

அப்படி ஒரு சினிமா. அந்த வயசில் அதைப் பார்த்து விட்டு இவனால் ஜீரணிக்க முடியவில்லை. 

பைத்தியக்காரன் செய்த ஒரு காரியத்தை ரொம்ப முக்கியமாக எடுத்துக்கொண்டு அந்தப் பெண் தன்னைச் சீரழித்துக் கொள்வது அவனுக்கு நியாயமாகப் படவே யில்லை. எப்படி அநியாயம் என்று சொல்லவும் தெரிய வில்லை. வளத்தய்யாவிடம் வந்து கேட்டான். 

அவர் நரைத்த தாடையைச் சொரிந்து கொண்டே சிரித் தார். சிரிக்கிறபோது மிச்சமாயிருந்த மூன்று பல் மட்டும் கறையோடு தெரியும். 

“போடா போ… நீங்களும் உங்கள் எழவுச் சினிமாவும். இதை படிச்சிட்டு கதை எழுதுனா… இப்படித்தான் இருக்கும். ஊரு ஒலக நடப்பைப் பாத்துப் படிச்சு எழுதுனா…இப்படித் தப்பு வராது…” 

“ஏன் வளத்தையா, கற்புங்கிறது தப்பா?” 

“கற்புங்குறது ஒடல்லே இல்லேடா, ஒழுக்கத்துலே இருக்கு. கொணத்துலே இருக்கு…” 

“அப்படியா…” 

“ஆமா… அந்தக் கிறுக்குப் பயலை வசியம் பண்ணி, அவ ஒடல்ப் பசியை தீத்துக்கிட்டா… அதுதான் ஒழுக்கக்கேடு. அப்பத்தான் கற்பை இழந்தவ… அவா.” 

“நெசம்மாவா!” 

“அடேய்…கற்புங்குறது பொம்பளைக்கு மட்டுமில்லே, எல்லாருக்கும் வேணும். மனுசன் மனுசத்தனமா நடக்கலேன்னா.. ‘நீயெல்லாம் ஒரு மனுசனா’ன்னு கேக்குறோம்லே? அப்பன் அப்பனுக்குரிய கொணத்தோட நடக்கலேன்னா…. ‘நீயெல்லாம் ஒரு அப்பனா’ன்னு கேக்குறோம்லே? அப்படீன்னா… என்ன அர்த்தம்? அப்பன் அப்பனுக்குரிய கற்போட இல்லேன்னு அர்த்தம். அம்புட்டு தான்.” 

அம்புட்டுத்தான் என்று சொன்னாலும், இன்னும் நிறையப் பேசினார். அதற்கும் கதைகள் போட்டார்… 

ஒரு தாசியின். வீட்டிற்கு தினம் நிறைய வந்து போகிற காமுகர்கள். தாசி இப்படிப் பாவம் செய் கிறோமே என்கிற மன உளைச்சல் கொள்கிறாள். மனசில் லாமல் காரியம் பண்ணுகிறாள். மனம் பூராவும் ஒழுக்க மான வாழ்க்கை வாழ்கிற கனவிலேயே இருந்திருக்கிறது. 

அவள் வீட்டின் எதிர்ப்புறத்தில் ஒரு மடத் திண்ணை. அதில் ஒரு சன்னியாசி. ஆசை துறந்த ஞானி. இந்த வீட்டிற்குள் வந்து போகிற காமுகர்கள் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாராம்… ஒன்னு, ரெண்டு என்று. 

ரெண்டு பேரும் செத்தார்கள். தாசி சொர்க்கத் துக்கு அனுப்பப்பட்டாள். சன்னியாசியை நரகத்திற்கு அனுப்பினார்கள். சன்னியாசி கொதித்துப் போய் நியாயம் கேட்டார். 

“அனுதினமும் உடலால் பாவம் செய்த அவளுக்குச் சொர்க்கம். ஒரு பாவமும் செய்யாத எனக்கு நரகமா?” 

அவருக்கு கிடைத்த பதில்: “அவள் மனசாலே பாவத்தை வெறுத்தவள். நீ அதையே மனசுலே நினைத்துக் கொண்டிருந்தவன்.” 

…இப்படிக் கதையெல்லாம் நிறையப் போடுவார். அவர் தான் இவனுக்கு ஞானத்தந்தை. அக உலகம். சுபாவகர்த்தா. 

அந்த வளத்தையாவைப் பற்றி நினைத்துக் கொண்டே உறங்கிப் போய் விட்டான். விடிந்தால்… அந்தப் பயங்கரம். 

இவனை அழைத்ததைப் போலவே… நாட்டாண்மை வீரம்மாவையும் கூப்பிட்டு, வீட்டார் சம்மதத்தோடு தனிமையில் நிறையப் பேசியிருக்கிறார். கனிவாக மிரட்டி யிருக்கிறார். கதையாகவில்லை. அவள் ஒரே வைராக் கியமாயிருந்திருக்கிறாள். 

அவளை பலவந்தப்படுத்தி நாசக்காடு பண்ணி விட்டார். 

“இனிமே என்ன பண்ணுவே? கெட்டுப்போன இந்த ஓடம்போட சங்கரன்கூட நீ போயிருவீயா? இது வெளியே தெரிஞ்சா… அவன்தான் ஒன்னைக் கட்டிக்குவானா?” என்று எகத்தாளமாய்க் கேட்டிருக்கிறார். 

வீரம்மா மானஸ்தி. ஒருத்தரிடமும் மூச்சுக் காட்ட வில்லை. ஒன்றும் சொல்லவில்லை. ஆனால்… அவள் வந்த கோலத்திலிருந்து… பெண்கள் நுட்பமாய் புரிந்து கொண் டனர். விஷயம், தீயாய் பரவி விட்டது. 

அவர்கள் சாதிக்குள்ளேயே கோபம். ஆத்திரம். பணியா ரத்தை பங்கிடப் போன பூனைகள் கதையாகி விட்டோமே என்கிற குமுறல். தெரு முழுக்க ஒரே சண்டை சத்தம். 

சங்கரனுக்குப் பக்கென்றது. ஒரே ஓட்டமாய் ஓடினான். அவனுக்குள் பதைப்பு. விஷயம் கை மீறிப் போய் விடுமோ என்கிற திகில். 

ஊருக்குத் தெற்கே சற்றுத்தள்ளி பூந்தோட்டம். அதன் கரையில்தான் வரிசையாய் அரளிச் செடிகள். மஞ்சள் மஞ்சளாய் பூ பூக்கிற அரளிச் செடிகள். 

அவன் பயந்த மாதிரியே நடந்தது. கிணற்றுக்கல்லில் அரளிக்காய்களை அவசர அவசரமாக தட்டிக் கொண் டிருந்தாள் வீரம்மா. அவள் முகத்தில் ஓர் இறுக்கம். கண்ணில் வெறி. சாவைத் தழுவப் போகிற ஆவேசம். 

ஓடிப் போய் அவள் கையைப் பிடிக்கப் போனான், சங்கரன். 

அவள் சரேலென விலகிக் கொண்டாள். அவள் கண்களில் பதற்றமும் அழுகையும். 

“என்னைத் தொடாதீக… என்னை தொடாதீக” என்று கதறினாள். 

“ஏன்… தொடக்கூடாதுங்குறே…!” 

“என்னைச் சாகவுடுங்க…’ 

“அதான் கேக்கேன்… எதுக்கு?” 

“நா எதுக்கு உசுர் வைச்சுருக்கணும்?” 

“அறிவில்லாமப் பேசாதே… எதுக்குன்னு சொல்லு.”

அவன் நெருங்க… அவள் மேலும் ஒரு அடி பின் வாங்கினாள். “என்னைத் தொடாதீக…” 

“அதான் கேக்கேன், எதுக்குன்னு சொல்லு…” 

“பாழாகிப் போன இந்த ஒடம்பை நீங்க தொடக் கூடாது.” 

சாமி அருள் இறங்குற மாதிரி, அவனுக்குள் வளத்தையா. அவன் குரலில் வளத்தையா பேசினார். 

“அடக் கிறுக்கச்சி… நீ நாட்டாமைக்குச் சம்மதிச்சியா?”

அவன் கேள்வியின் தொனியும் ஆழமும் புரியாமல் திகைத்தாள். அவன் முகத்தில் நிலையற்றுப் பாய்கிற அவளது கண்கள். 

“நாட்டாமை காரியத்துக்கு நீ இஷ்டப்பட்டியா…? ஒத்துக்கிட்டீயா…?” 

புரியாத குழப்பத்தோடு ‘இல்லை’ என்பது போல தலையாட்டினாள். 

“அப்ப நீ பாழாகலே…” 

“அந்தப் பாவி என்னை நாசக்காடு பண்ணிட்டான்.”

“இல்லேம்மா… அவன்தான் நாசமாயிருக்கான். நீ நாசமாகலே. பாழாகலே. நீ நீயாவேதான் இருக்கே… நீ ஒழுக்கமுள்ள மானஸ்தியாத்தான் இருக்கே…” 

அவளுக்கு இன்னும் புரியவில்லை. ஆனா… தளர்ந்திருந்தாள். அவள் முடிவிலிருந்து உடைந்து சரிந்திருந்தாள். 

அவளை ஆதரவோடு பற்றிக்கொண்டான், சங்கரன். அவர்கள் ஆத்மாவிற்குள் ததும்பிய அன்புப் பிரவாகத்தின் வழியில் அவர்கள் மிதந்தனர். 

“உங்க சாதியாளுக நாட்டாமை கிட்டே வெவகாரம் பண்ணிக்கிட்டிருக்காக. இனிமே நம்மளை ஒன்னுஞ் செய்ய மாட்டாக. வா எங்கூட.” 

“எங்க?” 

“என் வீட்டுக்கு.” 

“எதுக்கு?” 

“வாழ்றதுக்கு.” 

“இனிமேயும் எனக்கொரு வாழ்வா?” 

“இனிமேயும்னா… என்ன அர்த்தம்? இப்ப ஒன்னுமே நடக்கலே. நீ மனசாலே பத்தினி. மானஸ்தி. வா… பேசாம்.” 

அவனோடு அவள்… அவனது ஆத்ம நிழலாய் அவள். 

சமூக மரபுகளை காலில் போட்டு மிதித்துவிட்டு, புதிய மரபில் நடைபோடுகிற புதிய மனிதனாகதான் இயங்கி யிருக்கிறோம் என்பது…. இன்று வரைக்கும் சங்கரனுக்குத் தெரியவே தெரியாது. 

இப்போது- 

அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவனுக்கு வளத்தய்யாவின் பெயர். 

– டிசம்பர் 1993, புதிய பார்வை.

– கணக்கு (சிறுகதைகள்), முதற்பதிப்பு: மார்ச் 1994, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *