பொய்விலை
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: செம்மலர்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 7, 2026
பார்வையிட்டோர்: 68
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நேற்று சாயங்காலத்திலிருந்தே அருணாசலத்துக்கு ரொம்பத் திகில். மனசின் ஆழத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்ட கவலை. ஆத்ம பங்காளியான பெஞ்சாதியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத முள்ச் சுமை.
ஆஸ்பத்திரியிலிருந்து நாலு வயது மகளை நெஞ்சோடு சேர்த்து முழங்கையில் சுமந்து கொண்டு, வலது கையில் டானிக், மாத்திரைகளோடு வீடு திரும்பிய அருணா சலத்தை பதற்றமும் தவிப்புமாய் வாசலிலேயே எதிர் கொண்டாள் கனியம்மா.
முற்றத்துக்கே ஓடி வந்து விட்டாள். மகளை ஆவலோடு வாங்கிக்கொண்டாள். ஆவி சேரத் தழுவிக்கொண்டு வார்த்தைகளை முந்துகிற உணர்ச்சி தவிப்போடு கேட்டாள்:
“டாக்டர் என்ன சொன்னாரு? ஊசி போட்டாரா? சரியாய்ப் போகும்னாரா? வேற என்னமும் சொன்னாரா? வாய்க்குள்ளே என்னத்தை வைச்சிருக்கீக? சொல்லித் தொலையுங்களேன்.”
சோகத்தின் கொதிப்பில் சீறுகிற கனியம்மாவை சலன மில்லாமல் பார்த்தான். நிஜத்தைச் சொல்லி விடலாமா என்று ஒரு கணம் யோசித்தான். கனியம்மா தாங்கிக்கிட மாட்டா. ஒன்னுகிடக்க ஒன்னா புரிஞ்சுக் கிட்டு, வீணா அழுது புலம்பிக் கரைஞ்சிருவா. அழுது கரைஞ்சா நோய் கொறைஞ்சிருமா என்ன?
“ஒண்ணுமில்லே. தடுமச் சளிதான். ரெண்டு ஊசி போட்டா சரியாப் போகும்னாரு.”
“வேற ஒன்னுமில்லையே?”
“இல்லே.”
“அப்பாடா…இப்பத்தான் மனசுக்கு ஆறுதலாயிருக்கு.”
“ரொம்பப் பயந்துட்டியா?”
“ஆமா. ராத்திரி பூராவும் புள்ளைக்கு மூச்சுத் திணறுற தையும், இளைப்பும், இருமலுமாய் இருக்குறதையும் பாத்துட்டு என்னமோ ஏதோன்னு பதறிப்போய்க் கிடந் தேன். நல்லவேளை, ஆத்தா புண்ணியத்துலே புள்ளைக்குச் சீராய்ப் போய்ட்டா போதும்.”
கனியம்மா பிள்ளையோடும் மனநிம்மதியோடும் வீட்டுக்குள் நுழைய, வாசலில் தேங்கிநின்ற அருணா சலத்திடமிருந்து கனத்த பெருமூச்சு.
டாக்டர் சொன்னது ஞாபகத்தில் உரசியது.
“செக்கப் பண்ணிட்டேன். சாதாரணச் சளியா தெரியலே. நாளைக்கு எக்ஸ்ரேயும், ப்ளட் டெஸ்ட்டும் பண்ணிடனும், அப்பத்தான். கிளீயரா தெரியும்.”
“சார்… ரொம்பச் செலவாகுமா?”
“ஆமா, கொஞ்சம் செலவாகும்.”
“புள்ளைக்கு என்னவாயிருக்கும்னு இப்ப யூகிக்க முடியுதா, டாக்டர்?”
“பயப்படுற மாதிரி ஒன்னுமில்லே. மார்புக் கூட்டுக்கு வெளிப்புறத்துலே பிசின் மாதிரி சளி அப்பியிருக்கும்னு நெனைக்கேன். அப்படியிருந்தா… நாப்பது ஊசி வரைக்கும் போட வேண்டியிருக்கும். தொடர்ந்து டானிக், மாத்திரை களோட… முட்டை, கீரைன்னு சத்தான உணவும் குடுக்க வேண்டியிருக்கும்.”
“சரியாயிடுமா… சார்?”
“நிச்சயமா சரி பண்ணிறமுடியும். சந்தேகமேயில்லை. ஆனா நீங்க தொடர்ந்து ட்ரீட்மெண்ட் எடுக்குறதுலே கவனமாயிருக்கணும்.”
“அப்படியா, சார்?”
“ஆமா. துட்டுச்சிக்கலை காரணம் சொல்லிட்டு வீட்டு வைத்தியம் பண்ணுனா… உரிய பலன் கிடைக்காது. கண்டின்யூசா பண்ணணும்ங்கிறதுதான் இதுலே ரொம்ப முக்கியம்.”
அருணாசலத்துக்கு நெஞ்சு கிடந்து அடித்துக் கொண்டது. ரெண்டு பெற்று சாவுக்கு கொடுத்துவிட்ட அனுபவங்கள். மூன்றாவதாகப் பிறந்து மழலைச் சுகம் வழங்கிய ராஜிக்கும் வந்திருக்கிற ஆபத்து.
ராவ்விலும் பகலிலும் அந்த அரும்பு படுகிறபாடு, இளைக்கிற இளைப்பும், வறட்டு இருமலும், மூச்சுத் திணறலும்… பார்க்கப் பார்க்க மனசு கிடந்து படபடக்கிறது. குலை கொதிக்கிறது.
வைத்தியச் செலவுக்கு என்ன வழி? ப்ளட்டெஸ்ட்டும், எக்ஸ்ரேயும் எடுக்கணும் என்றால் எப்படியும் நூறு ரூபாய் வேணுமே. ஏவாரத்துக்கு போய் விட்டு வந்தாலும், அன்றாடம் கணக்கு முடித்தாகணும். தப்பிக்க முடியாது. மிஞ்சுகிற லாபம் அம்புட்டுத்தேறாதே…
அருணாசலத்துக்கு இருட்டுக்குள் சிக்கிக்கொண்ட உணர்வு.
காலையில் எழுந்ததும் வியாபாரத்திற்குப் புறப்படும் முன்பு, கட்டிவில் கிடந்த மகளைப் பார்த்தான். மண்டி போட்டு உட்கார்ந்து, ராஜியின் தலையையும் முகத்தையும் வருடினான். மகளின் பார்வையைச் சந்தித்த தகப்பனின் மனத் தவிப்பு. குழையும் வார்த்தைகள்.
‘*கண்ணு, அம்மா குடுக்குற மாத்திரையும், டானிக்கையும் அடம் பிடிக்காம சாப்பிடு. என்னம்மா? அப்பா சாயங்காலம் வாரேன்…”
“ஆகட்டும்” என்பது போல தலையசைத்தாள், ராஜி.
ஜவுளிக்கடைக்கு வந்தான். முப்பது கைலி, பத்து வேட்டி, ஆறு பெட்டி பனியன் எடுத்து பொட்டலம் கட்டிக் கொண்டு பஸ் ஏறி விட்டான்.
ஆலங்குளம் போய் இறங்கினால்… அங்கே இவனது சைக்கிள் கிடக்கும். கேரியரில் கட்டிக்கொண்டு உட்கிரா மங்களில் ஊர் ஊராகச் சுற்றியலைந்து வியாபாரம் செய் வான்.
தெருக்களில் சைக்கிளை உருட்டியவாறே அடித் தொண்டையை இறுக்கிக் கொண்டு வேற்றுக்குரலில் ராகம் போடுவான்.
‘கய்ய்ய்லீ… வேஷ்டி…. டிக் கலர்ப்… பனியன்…’
வழக்கம் போல இன்றைக்கு சுதாரிப்பாக ராகம் போட இயலவில்லை. ஜீவனற்ற யந்திரமாய் இருண்டுபோய்ச் சுற்றினான். அவஸ்தைப்படுகிற மகள், உயிர் முழுக்க கவ்வியிருந்தாள்.
அருணாசலத்துக்கு ரொம்பக் களைப்பாக இருந்தது. தொடையெல்லாம் பிய்த்துப் பிடுங்குகிற வலி. இடுப்பைச் சுற்றிச் கடுகடுக்கிற வேதனை.
டீக்கடை முன்னால்- கண் பார்வையில் வண்டியை நிறுத்தி விட்டு கல்லில் உட்கார்ந்தான். டீக்கடையில் டீ போடுகிற சின்னப் பையன்.
“தம்பி ஒரு டீ போடுப்பா…”
முகத்திலும், கழுத்தடியிலும் அப்பிப் போய் நெறு நெறுத்த புழுதியை துண்டால் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
ஒரு வருஷமாய்த்தான் அருணாசலத்துக்கு இந்த வியாபாரம். இந்த வியாபாரத்திற்கே இவன் ரொம்பப் புதுசு.
வாலிப வயசிலிருந்து பவர்லூமில்தான் வேலை. விசைத் தறித் தொழிலாளி. அதற்கென்றே பிறந்தவன் போல… அத்தனை திறமையாய்- நுட்பமாய்- வேலை செய்வான். ‘டடக் டடக்’கென்கிற அந்த ஒரு சீரான கடூர இரைச்சல், அவன் உயிருக்குள் சங்கீதமாய் இறங்கி லயிப்பூட்டும். கொசுக் கூட்டமாய்ப் பறந்து வந்து தேக மெல்லாம் அப்புகிற பஞ்சுத் துகளின் வாசனை, அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.
அவனது தொழிற்சங்க ஈடுபாட்டை குற்றமாய் கருதி, வேறு ஏதோ காரணம் காட்டி வேலை நீக்கம் செய்யப் பட்ட அருணாசலம், லேபர் கோர்ட்டில் நடக்கிற வழக்கு முடிகிற வரைக்கும் வயிற்றுப் பாட்டுக்கு ஏதாச்சும் வழி பண்ணியாகணுமே என்கிற நிர்பந்ததத்தில்… இந்த வியா பாரத்திற்கு வந்து சேர்ந்தான்.
ஜவுளி கடைக்காரர் சொந்தக்காரர். ஆனாலும் நிபந்தனை போட்டார். ‘அன்றாடம் கணக்கு முடிக்க ஒப்புக் கொண்டால் தான் சரக்கு தருவேன்.’
சரியென்று சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை, அருணாசலத்துக்கு. குடும்பத்தின் வயிறு நனைத்தாக வேண்டுமே.
வந்த புதுசில் வியாபாரம் பிடிபடவேயில்லை. அன்றா டம் ஏமாந்த பிழைப்புத்தான். அலைந்து மாய்ந்தது தான் மிச்சம்.
சம்பளம் வாங்கி வஞ்சகமில்லாமல் வாழ்ந்து பழகிய தொழிலாளி, சிக்கலும் சிரமமும் நிறைந்த சில்லறை வியா பாரியாக நிறம் மாறுவதில் ஏகப்பட்ட இடைஞ்சல்கள்.
வியாபாரிக்குரிய பொய் குழைவான பேச்சும், போலிக் குளிர்ச் சிரிப்பும் அவனிடம் ஒட்டவே மறுத்தன. நேர்மை யோடு நிஜத்தை பட்பட்டென்று பேசிவிடுவான். நிஜ விலையை முதலில் சொல்லி விடுவதால் பேரத்திற்கு இடம் தரமாட்டான். மீறி யாராச்சும் பேரம் பேசிக் கசறினால் சள்ளென்று விழுந்து விடுவான்.
வியாபாரம் விற்காது. ‘என்ன இது, இந்த ஆளு ஏவாரம் பண்ண வந்த மாதிரி தெரியலியே…’ என்று எரிச்சலில் கிராமத்து ஜனங்கள் விலகிப்போய்விடுவார்கள். கொண்டு வந்த சரக்கை மேனி குறையாமல் சுமந்து போன நாட்கள் நிறைய்ய. அப்படியே… விற்றாலும் லாபம் இருக்காது.
போன வருஷத் தீபாவளிச் சமயம். நாலைந்து ஊர் சுற்றிவிட்டு… அந்த ஊருக்கு வந்து களைத்துப் போய் மடத் தில் உட்கார்ந்தான். பக்கத்தில் பள்ளிக்கூடம். வகுப்புகள் நடக்கிற சிறுவர் இரைச்சல். குழப்ப கூச்சல்.
மடத்தில் உட்கார்ந்திருந்த ஆட்களிடம் பேச்சுக் கொடுத்து களைப்பாறிக் கொண்டிருந்தான்.
அப்போது-
வெள்ளையும் சொள்ளையுமாய் ஒரு மனிதர் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். ஒன்றும் பேசவில்லை. பேசுகிற இவனையே ரொம்ப நேரம் கவனித்துக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரம் கடந்தது.
அயலூர்க்காரன் என்கிற வேற்றுமை தொனிக்காமல், நட்பார்ந்த அக்கறையோடு கேட்டார்:
“தம்பி, நீங்க எந்த ஊரு?”
அவன் தனது ஊரான அந்தச் சின்ன நகரத்தின் பெயரைச் சொன்னான்.
“சரக்கெல்லாம் எங்கே எடுக்கீக? ஈரோடா மதுரையா?’
“ஈரோட்டுச் சரக்கு.”
“நீங்களே நேரடியாகப் போய் பர்சைஸ் பண்றீங்களா?”
“இல்லே. எங்க ஊர்லே ஒரு ஜவுளிக் கடைக்காரரு. சொந்தக்காரரு. அவருதான் எடுத்துட்டு வருவாரு…”
‘அவரு… உங்களுக்கு கைலி ஒன்னுக்கு முப்பது ரூபா ரேட் போடுவாரா?”
“இல்லே இருபத்தாறு.”
“நீங்க என்ன விலைக்கு விப்பீக?”
“முப்பத்தைஞ்சு சொல்லுவேன். முப்பதுக்கு வந்தாலும் தள்ளிவிட்டுருவேன்.”
“அதான் சரி. ‘வைச்சுப் பாக்குறதைவிட வித்துப் பாக்குறது தான் ஏவாரத்துக்கு அழகு’ன்னு பெரியாளுக சொலவடை சொல்லுவாக.”
இப்படி ரொம்ப மனநெருக்கமாய் உறவினர் மாதிரி பேசிக் கொண்டிருந்தார். அந்யோந்யமாய் அவர் பேசப் பேச… இவனும் சாங்கோபாங்கமாய் சகலத்தையும் ஒளிவு மறைவில்லாமல் கக்கிவிட்டான்.
சட்டென்று காணாமல் போய்விட்ட அந்த மனிதர், சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் அங்கே தரிசனமானார்.
“தம்பி, எங்க டீச்சர்ஸ் எல்லோரும் கைலி வேணும்ங் கிறாக. பதிமூணு கைலிகுடுங்க.”
என்றவர், அவராகவே கலர் பார்த்து, கட்டம் பார்த்து, உருவ ஆரம்பித்து விட்டார்.
அருணாசலத்துக்கு கன்னத்தில் தேள் கொட்டின மாதிரியிருந்தது.
நட்பாய் பேசிக் கொண்டிருந்த மனிதர், இப்படி திடுதிப் பென்று வியாபாரம் பண்ண ஆரம்பித்து விட்டாரே… வஞ்சகமில்லாமல் எல்லா உண்மையையும் சொன்னவனி டமே… வஞ்சகமாய் வலையை விரித்து விட்டாரே…
மாறிப் பேச வழி தெரியாமல்- செய்வதறியாமல்- ஊமையாய் தவித்தான்.
முந்நூற்றி முப்பத்தெட்டு ரூபாயை எண்ணிக்கொடுத்த அவர் முகத்தில் ஒருவகையான மர்மச் சிரிப்பு. சிரிப்பில் கபட நிழல்.
“என்ன” என்றான் ஒன்றும் புரியாமல்.
“தம்பி, கணக்கு பாத்துக்கங்க.’
“இருப்பத்தாறு ரூபா ரேட்டா?”
“நீங்க சொன்ன ரேட் தானே?”
“இது அசல் விலைதானே? ஊர் சுத்தி சைக்கிள் மிதிக்கிற எனக்கு லாபம் வேண்டாமா?”
“லாபமா? அதை மத்த ஆளுக்கிட்டே பாத்துக்கோங்க. இதுலேயே விற்பனைக் கமிஷன் கிடைக்கும்லே? அது போதும்.”
அவர், கைலிகளை அள்ளிக் கொண்டு போக, வடையை பறிகொடுத்த காகமாய் விழித்தான், இவன்.
இவன் கக்கிய வார்த்தைகளாலேயே வலைபின்னி, இவனையே அடுக்கிக் கொண்டு போகிற அவரது சாமர்த்தியம்.
இந்தத் தோல்வியை ஓர் அவமானமாய் உணர்ந்தான், அருணாசலம்.
நேர்மையோடு பேசிய உண்மைக்கு இதுதான் மரியா தையா? வெள்ளந்தியாய் நடந்து கொண்டதற்கு இதுதான் பலனா?
வியாபாரம் விற்றும், வெறும் கையோடு போய்ச் சேர்ந்த அருணாசலம், ரொம்ப நொந்து போனான். நினைக்க நினைக்க அவமான அவஸ்தை.
இப்படிப் ‘பட்ட’ அனுபவங்கள் ஜாஸ்தி, உள் காயங் களால் ரணப்பட்ட சம்பவங்கள் நிறைய்ய. அதெல்லாம் அவனுக்குப் பட்டறையாயிற்று. அவனை வேறொன்றாக வார்க்கிற பட்டறை.
இப்போதெல்லாம்-
அருணாசலம் ரொம்பத் தேறி விட்டான். கைவந்து விட்ட வியாபார நெளிவு களிவுகள். உணர்ச்சிகளுக்கு உறைபோட்டு குளிர்ப் பேச்சு பேசக் கற்றுக்கொண்டான்.
போலிச் சிரிப்பு உதட்டில் சுவிட்ச் போட்ட மாதிரி பளிச்சென்று ஒளிரும். கலகலப்பான பேச்சு. எதிரியை அசர வைத்து வசீகரிக்கிற பொய்க் குழைவான பேச்சு.
‘வேற ஆளுக்கு வேற ரேட்டு, உங்களுக்காகத்தான் இந்த ரேட்டு’ என்ற அந்நியனிடம் கூட பந்தமாய் – பாந்தமாய் -அள்ளி விடுவான்.
பெற்ற தாய் வந்து விலை கேட்டால் கூட, நிஜ விலையைச் சொல்வதேயில்லை. நல்ல உறக்கத்தில் தட்டி எழுப்பி விசாரித்தாலும், ‘இருபத்தாறு’ என்று உளற மாட் டான். ‘முப்பத்தொன்னு’ என்று சத்தியத்தைப் போலத் தெளிவாய் அடிப்பான்.
ஒரு வரியில் சொன்னால்… தொழிலாளிக் குணத்தை யெல்லாம் தலைமுழுகித் தொலைத்துவிட்டு, சுத்தமான சில்லறை வியாபாரியாகி விட்டான்.
“இந்தாங்க அண்ணாச்சி. டீ” டீயை வாங்கி குடித்தான்.
கசங்கிக் கிடந்த பேப்பர்களை மேய்ந்தான். டீயின் அடர்த்தியான ருசி, நாக்கில் படிந்து நின்றது. ஒரு பீடியை பற்ற வைத்துக் கொண்டான்.
அவன் மனசுக்குள் மகள் ராஜி வந்தாள்.
திக்திக்கென்று திணறித் திணறி விம்முகிற மகளின் மார்புக்கூடு. சீராக மூச்சுப் போகாமல் முட்டி மோதித் தவிக்கிற உயிரவஸ்தை. வாட்டியெடுக்கிற வறட்டு இருமல். நோயின் உக்கிரம் தாளாமல் திண்டாடித் திணறுகிற அந்தப் பிஞ்சு.
டாக்டரின் அச்சுறுத்தல். தொடர் வைத்தியத்தேவை. இன்றைக்கு மட்டும் நூறு ரூபாய் வேண்டும். என்ன செய்ய? ரத்தப் பரிசோதனைக்கும், எக்ஸ்ரேக்கும் என்ன வழி?
விற்ற பணம் சொந்தப்பணம் இல்லையே… கணக்கு முடிக்காமல் தப்பிக்க முடியாதே… லாபமாக மிஞ்சினால்… முப்பது ரூபாய் தேறுவதே பெரும்பாடு.
யாரிடம் பணம் கேட்க? கடன் கிடைக்குமா? எதை ஈடு வைத்து கடன் கேட்க? கதி கெட்ட ஏழையிடம் ஈடு வைக்க என்ன இருக்கு?
பீடிக் கட்டையை தரையில் தேய்த்து எறிந்தான்.
“வாங்க அருணாசலம், எப்ப வந்தீக?” என்ற கனிவும் அன்புமாய் விசாரிப்பு.
நிமிர்ந்தான். அவனுக்குள் ஆச்சர்யம். குப்பென்று உடைப்பெடுத்துப் பாய்கிற பரவசம்.
முத்துக்கிருஷ்ணன் நின்றார். வயசு ஐம்பது இருக்கும். சொந்த விவசாயம். பொது வாழ்க்கையில் பாடுபடுகிற சுத்தமான மனிதர். விவசாயிகள் சங்கத் தலைவர். பிறருக்கு உதவி செய்வதில் நிஜமான மகிழ்ச்சியடைகிற தங்கமான மனிதர்.
பிரதிநிதியாக இவன் கலந்து கொண்ட ஒரு தொழிற் சங்க மாநாட்டிற்கு வாழ்த்துரை வழங்க இவர் வந்திருந்த போது, அறிமுகம். பந்தா, பகட்டு இல்லாமல் மனத் தோழ மையோடு பழகுகிற இனிமையான பண்பு.
அவரைப் பார்த்தவுடன்-
சட்டென்று எழுந்தான். மகிழ்ச்சியில் திணறினான். சகலத்தையும் மறந்துவிட்ட ஒரு மனப் பரவசம். புதிதாய் பிறப்பெடுத்த மாதிரி மனசுக்குள் ஒரு மலர்ச்சி.
“வாங்க… வாங்க… உக்காருங்க” என்று பவ்யமாய் ஒதுங்கி நின்றான்.
“நீங்களும் உக்காருங்க அருணாசலம்.”
‘பரவால்லே…” என்று அவன் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தான். அவர் முகத்தை குழந்தைக்குரிய குதூகல வியப்போடு பார்த்தான்.
“உங்க கேஸ் எப்படியிருக்கு?”
“போய்க்கிட்டிருக்கு. போன வாரம் தா வாய்தாவுக்குப் போய்ட்டு வந்தேன்.”
முத்துக்கிருஷ்ணன் தொழிற்சங்கம், நகர நிலவரம் பற்றி அக்கறையோடு விசாரித்தார். குடும்பம், வீட்டு வாடகை, வருமானம் பற்றியெல்லாம் இங்கிதமாய்க் கேட்க, இவனும் குழைவாய்ப் பதில் சொன்னான்.
வியாபார நிலவரம், வாங்குகிற இடம், விற்கிற விலை கட்டுபடியாகிறதா என்றெல்லாம் மென்மையாக விசாரித்தார்.
அந்தப் பரவசத்திலும் கூட, அவன் நா வியாபாரி வாயாகவே பேசியது. “வாங்குற வெலை முப்பத்தொன்னு விக்குற வெலை முப்பத்தஞ்சு” என்றே சொன்னான்.
சுவரில் மோதுகிற குருட்டு ஈ போல, அங்கு தொட்டு இங்கு தொட்டு மகள் ராஜியின் நோயில் வந்து உட்கார்ந்தது பேச்சு.
சொந்தச் சோகத்தை பகிரங்கப்படுத்த இயலாத தயக்கத் துடன் மெல்லச் சொன்னான்:
“புள்ளைக்கு ரொம்ப முடியலே. எக்ஸ்ரே, ப்ளட் டெஸ்ட் எடுக்கணும்னு டாக்டரு சொல்றாரு. ரொம்பச் செலவாகும் போலிருக்கு. கையிலே சுத்தமா காசு இல்லே.”
“ஏன் ரொம்பச் சிரமப்படணும்? கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போகலாம்லே?”
“நம்பிக்கையில்லே. போய் என்ன செய்றது? ஒன்னும் ஆகப் போறதுல்லே.”
“ஏன்… பெஸ்மிஸ்டிக்கா இருக்கணும்? நம்பிக்கையோடு அப்ரோச் பண்ணிப் பாக்கலாமே…?” என்ற முத்துக்கிருஷ் ணன், “இருங்க வாரேன்” என்று வீட்டுக்குப் போனார்.
பக்கத்தில்தான் வீடு.
அருணாசலம் கிளர்ச்சியுற்ற மனநிலையில் ததும்பிப் போயிருந்தான். டீக்கடையில் உட்கார்ந்திருந்த ஆட்களிடம் முத்துகிருஷ்ணனின் பெருமைகளைப் பற்றி உற்சாகமாய்ப் பேசினான்.
அவர்கள் உதடுகளில் ஒரு பரிகாசச் சிரிப்பு.
“எங்க ஊர்க்காரரைப் பத்தி, எங்ககிட்டேயே பேசு றீயா?” என்று கேட்காமல் கேட்கிற சிரிப்பு. அதை அவன் மனசால் உணர்ந்தாலும், அவரைப் பற்றிப் பேசுகிற ஆசையை அவனால் கட்டுப்படுத்திக் கொள்ள முடிய வில்லை.
முத்துகிருஷ்ணன் வந்தார். அவர் கையில் நாலாய் மடிக்கப்பட்ட ஒரு கடிதம்.
“உங்க ஊரு ஜி.எச்.லே. எங்க பெரியப்பா மகன்தா டாக்டரா இருக்காரு. கடிதத்தை கொண்டு போய்க் கொடுங்க, அங்கேயே ப்ளட் டெஸ்ட், எக்ஸ்ரே எல்லாம் எடுத்துக்கலாம். ட்ரீட்மெண்டும் கெடைக்கும்.”
கடிதத்தை வாங்கிக்கொண்டான். கழுத்தாம்பிடியாய் இருந்த ஒரு பிரச்சனை, இத்தனை சுலபமாய் விலகும் என்று அவன் கனாக்கூட கண்டதில்லை. ரொம்ப நிம்மதி யாயிருந்தது, மனசுக்குள். நன்றியோடு அவரைப் பார்த் தான்.
“அருணாசலம், நம்ம வீட்டுக்கு பத்துகைலி வேணும். வாங்குறதுக்கு ராஜபாளையம் போகணும்னு நெனைச்சுக் கிட்டிருந்தேன். உங்களைப் பார்த்தது நல்லதாய்ப் போச்சு. அலைச்சல் மிச்சம். நீங்களே குடுத்துட்டுப் போயிருங்க.”
முந்நூற்றைம்பது ரூபாய் தந்தார், முத்துகிருஷ்ணன்.
“சரி” என்று சொல்லிவிட்டு வாங்கியபோது கையில் நடுக்கம். மனசுக்குள் ‘நறுக்’கென்கிற உணர்வின் குத்தல். குற்ற உணர்ச்சியின் முள் முள்ளான உறுத்தல்கள்.
‘வாங்குன வெலை முப்பத்தொன்னு’ என்று வியாபாரி யின் மொழியில் இவரிடமும் சொன்னது, நினைவில் ஊசிக் குத்தலாக நெருடியது.
அன்பும் தோழமையுமாய் ததும்பும் இந்த மனிதரிட முமா… ஒரு வியாபாரியாய் நடந்து கொள்வது? வாங்கிய விலை முப்பத்தொன்று என்று சொன்ன வாயால், இருபத்தாறு என்கிற உண்மையை எப்படி ஒப்புக்கொள்ள? உங்களிடம் நான் பொய்யாய்ப் பேசினேன்’ என்று சொல்லவா? அது, மானக் கேடல்லலா? மானக் கேட்டுக்குப் பயந்து மவுனமாயிருந்தால்… மனச்சாட்சி அக்குற்றத்தைத் தாங்குமா? மன்னிக்குமா?
ராஜி உயிர் பிழைக்க, கேட்காமலேயே வழிகாட்டி உதவி செய்த இந்த உன்னத மனிதரிடம்… அசல் விலை என்று சொல்லியே ஐம்பது ரூபாய் லாபம் பார்ப்பதா? அது மோசடியில்லையா? மனுசத் தன்மையற்ற ஈனத் தனமில்லையா?
இருநூற்றியறுபது ரூபாய் போக மீதியை அவரிடம் மவுனமாக நீட்டினான், அருணாசலம்.
“என்ன இது?’ குழப்பமாய் கேட்டார் முத்துக் கிருஷ்ணன்.
“இது போதும்.”
”போதும்னா? அசல் விலைப்படி பார்த்தாலே முந்நூத்திப் பத்தாகுதே?”
அவருடைய கேள்வி, அவனுடைய உள் மனசில் காறித்துப்புவதைப் போல உணர்ந்தான். சங்கடத்தில் நெளிந்தான். உயிரற்ற குரலில் மீண்டும் சொன்னான்:
“இல்லே…இது போதும்.”
“அது சரியில்லே. லாபமில்லாட்டாலும் அசலாச்சும் தேற வேண்டாமா? நீங்க நட்டப்படுறதுக்கு நா காரணமாயிருக்கிறது… ஞாயமேயில்லை.’
ஐம்பதுரூபாயை எடுத்து மடித்து அருணாசலத்தின் மேல்ச்சட்டைப் பைக்குள் திணித்தார் முத்துகிருஷ்ணன்.
‘நா சொன்ன அசல் விலையே… அசல் இல்லே.. பொய்விலை’ என்று ஓங்கிக் கத்திக் கதற வேண்டும் போல அவனுள் ஓர் உத்வேகம், வெறி.
சொல்லமுடியவில்லை. சொன்னால் மானக்கேடு. சொல்லாவிட்டால்… மனுசக்கேடு. எதுவும் செய்ய கதியற்றுப் போய், மவுனத்தில் அவன் புதைய…
அவனைவார்த்தப்பட்டறையின்ஊனமே, இப்போதைய அவனாய் – பரிகாசத்துக்குரிய குற்றவாளியாய்-வடிவம் கொண்டு காட்சியளிப்பதாய்… அவனுள் ஒரு பிரமை.
அவனையே பரிவோடு பார்த்த முத்துகிருஷ்ணன் கனிந்த சிரிப்பாய் மலர்ந்தார்.
“மனசை ரொம்ப அலட்டிக்காதீக அருணாசலம். பரவால்லே.. போய்ட்டு வாங்க.”
கைலிகளோடு அவர் போய் விட்டார்.
பைக்குள் அவர் திணித்த ஐம்பது ரூபாயும், கடிதமும் அவன் நெஞ்சை ஊசிமுள்ளாய் உரசி உரசிக் கீறிக் கொண்டேயிருந்தன.
– டிசம்பர் 1993, செம்மலர்.
– கணக்கு (சிறுகதைகள்), முதற்பதிப்பு: மார்ச் 1994, திருவரசு புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
வளர்கவி
September 18, 2026
இந்திரா
நீர்வை பொன்னையன்
September 18, 2026
இடைவேளை
எஸ்.சங்கீதா
September 18, 2026
