கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: December 11, 2024
பார்வையிட்டோர்: 11,946 
 
 

(1958ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

13. தம்பித்துரை தேடி வந்த திருடன்! 

“வானப்பிரகாசம்” ஹோட்டல், மேல்நாட்டு பாணியில் நடத்தப்பட்ட ஹோட்டலாகும். அந்தக் காலத்தில், மதுவிலக்கு அமுலில் இல்லாததால் இம்மாதிரி ஹோட்டல்களில் தங்கி இருப்பவர்களுக்கு, சீமைச் சாராயங்கள் வழங்கப்பட்டு வந்தன. 

அளவுகடந்த அதிர்ச்சியடைந்திருந்த பொன்னம்பலம், தனது கலவரத்தை மறப்பதற்காக, ஓரளவு போதை பானம் அருந்தியிருந்தான். அதை அருந்திய பிறகும், அவன் மனம் நிம்மதி அடையவில்லை. இன்னும் கொஞ்சம் அவனுக்குத் தேவைப்பட்டது. ஆகவே, தன் அறையிலிருந்தபடி, ராமையாவை சத்தம் போட்டு கூப்பிட்டான். ராமையா, கடுகடுப்புடன் அவன் அறைக்குச் சென்று விட்டு திரும்பி வந்தான். 

கீழே ஹாலில் அலமாரியில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்துக் கொண்டு, மாடிக்குச் செல்லும்பொழுது, நீலகண்டனின் பக்கம் திரும்பி, “அந்தப் பயல் கண் மூடித்தனமாகக் குடிக்கிறான்” என்றான் ராமையா. 

“உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ!” என்று சீறி விழுந்தார் நீலகண்டன்.

பிறகு ஏதோ நினைத்துக்கொண்டவராய், “தமயந்தியின் அறையில் குஞ்சம்மாள் இருக்கிறாள். அவளைக் கீழே அனுப்பி இங்கு வருபவர்களைக் கவனித்துக் கொள்ளச் சொல். தமயந்தியின் அறைக்கு, வேலைக்காரி மரகதத்தை அனுப்பி துணையாக இருக்கச் சொல்!” என்றார். 

நிம்மதியாகத் தூங்கலாம் என்று நினைத்திருந்த குஞ்சம்மாளுக்கு அந்தப் புது வேலையைக் கேட்டதும் ஆத்திரமாக வந்தது. முனகிக் கொண்டே, கீழே ஹாலுக்கு வந்து சேர்ந்தாள். 

தம்பித்துரை வெகுநேரம் கழித்துத்தான் திரும்பி வந்தார். அவர் வந்தபோது, குஞ்சம்மாள் தான் ஹாலில் இருந்தாள். அவளை தம்பித்துரைக்கு முதலிலேயே தெரியும். அவளிடம் அவருக்கு அன்பும் அனுதாபமும் உண்டு. 

“இரவு ஒன்பது மணிக்குமேல் தாம்பரத்திற்குள் நுழைந்தால் சுடுகாடு மாதிரி அல்லவா இருக்கிறது!” என்றார் தம்பித்துரை. 

குஞ்சம்மாள், அது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டாள். 

“வெகு சீக்கிரத்தில் எல்லோரும் படுக்கைக்குப் போய் விடுகிறார்கள். கோழி கூவுவதற்கு முன்னால் வேலைக்குப் போய்விடுகிறார்கள்!” என்றார். 

பிறகு, தம்பித்துரை பேச்சை கிழவன் விஷயத்திற்குத் திரும்பினார். கிழவனைப் பற்றி, அவளுக்கு நிறையத் தெரிந்திருந்தது. ஆனால், கிழவன் விவகாரம் அவளுக்கு ஆத்திர உணர்ச்சியைத்தான் ஏற்படுத்தியது. நல்லவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் பைத்தியக்கார ஆஸ்பத்திரி கட்டி வைத்திருக்கிறார்களே என்று குறைப்பட்டுக் கொண்டாள். தம்பித்துரை புன்முறுவலுடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தச் சமயத்தில், நீலகண்டன் அந்தப் பக்கம் வந்ததால், அவள் பேச்சு தடைப்பட்டது. 

அன்றிரவு, நீலகண்டன் ரொம்ப சுறுசுறுப்பாகக் காணப்பட்டார். தம்பித்துரையோடு கூட, பேச அவருக்கு அவகாசம் கிடைக்கவில்லை. 

இருந்த போதிலும், தம்பித்துரை, “மிகச் சீக்கிரத்திலேயே ஊர் அடங்கிப் போய் விடுகிறது!” என்றார். 

“ஆம்!” என்று அவரை ஒரு தினுசாகப் பார்த்தபடி கூறிய நீலகண்டன், “ஒவ்வொரு நாள் இரவும் உங்களுக்கு ஒரு தீ விபத்து நடத்திக்காட்ட முடியாது, அல்லவா!” என்றார். 

தம்பித்துரை புன்னகைப் பூத்தபடி, “நான் தான் அதைப் பார்க்கத் தவறிவிட்டேன்!” என்றார். 

“தவறிவிட்டீர்களா? உங்களை தீ விபத்து நடந்த இடத்தில், விபத்து சமயத்தில் பார்த்ததாக பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்களே!” 

“நான் அப்போது சென்னையிலிருந்தேன்” என்றார் தம்பித்துரை. 

நீலகண்டன் குஞ்சம்மாளின் பக்கம் திரும்பி, அவள் போகலாம் என்று சைகை காட்டினார். குஞ்சம்மாள் அந்த இடத்தை விட்டு அப்பால் 

“தம்பித்துரை! நாம் இருவரும் கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாம்! நீங்கள் தாம்பரத்திற்கு இரண்டாம் தடவையாக வந்திருக்கிறீர்கள். முதல் தடவை வந்ததும், இங்கு யாரையோ விசாரித்து விட்டு உடனே திரும்பி விட்டீர்கள். நீங்கள் யாரைப் பார்க்கவோ, இங்கு வந்திருக்க வேண்டும்– அந்த நபர் இல்லாததால் நீங்கள் அப்பொழுது ஏமாற்றம் அடைந்து திரும்பி இருக்கிறீர்கள். நான் சொல்லுவது சரிதானா?” என்று கேட்டார். 

“ஆம். நான் ஒரு ஆளை எதிர்பார்த்து தான் வந்தேன். இலங்கையில் இருக்கும்போது, எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. இப்பொழுது, உன்னிடம் மனம்விட்டுப் பேசுகிறேன், நீலகண்டன்! எனது வருகையில், எந்தவித மர்மமும் இல்லை. தாம்பரத்தில் ஒரு கிழவன் பூட்டை உடைத்து உள் நுழைந்து பல இடங்களில் திருடுகிறான் என்ற செய்தியை இலங்கையிலேயே படித்தேன். இந்தத் திருட்டுக்களை கண்டுபிடிப்பதில் நான் நிபுணன் என்று பெயர் பெற்றவன். எனது அனுபவத்திலிருந்து எனக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு மனிதனுக்கும், தனித் தனியாகக் கையெழுத்து அமைவது போல், ஒவ்வொரு திருடனுக்கும், தனித் தனியான முறையில் திருடும் முறையும் அமைந்திருக்கிறது. ஒரு திருட்டைப் பார்த்தால், இதை இன்னவன் தான் செய்திருக்க வேண்டுமென்று சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம்! நான் தேடி வந்த ஆள், அந்தத் திருடன் தான்!” என்றார். 

“அப்படியானால் வெறும் தொழில் சுவாரசியத்தின் மீது தான் இங்கு கிளம்பி வந்தீர்களா?” 

“ஆம்!” என்று மெதுவாகக் கூறிய தம்பித்துரை, “நீலகண்டன் எனக்கு ஏராளமாகப் பணம் இருக்கிறது. நான் போலீஸ் படையிலிருந்தும் ஓய்வுப் பெற்றுவிட்டேன். ஊர் சுற்றுவது தான், எனக்கு வேலை…….எனக்குக் குழந்தைகளும் கிடையாது–ஒரே ஒரு பெண் இருந்தாள். அவளும், சில மாதங்களுக்கு முன்னால் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இறந்துவிட்டாள். அவள் இறந்தது, என் மனதிற்கு எவ்வளவோ வேதனைக் கொடுக்கிறது என்றாலும், அவளைப் பொறுத்த வரையில். சாவில் தான் அவள் நிம்மதி கண்டிருக்க முடியும்” என்று கூறிவிட்டு நீண்டப் பெருமூச்சு விட்டார். 

பிறகு தொடர்ந்து, “அதனால் தான் நான் இப்போது திரும்பி வந்திருக்கிறேன். என் பெண்ணைக் கொன்றவனை தேடிப்பிடிக்க வேண்டுமென்ற வெறியும், எனது பிரயாணத்திற்கு வழி கோலியது” என்றார். இதைச் சொல்லும்போது அவர் சாதாரணமாகச் சொன்ன போதிலும் அவர் குரலில் தொனித்த ரத்தவெறி, நீலகண்டனை நடுநடுங்கச் செய்தது. அவர் மனதில் படிந்திருக்கும் பழிவாங்கும் வெறி, ரொம்பவும் பயங்கரமானதென்று நினைத்தார் நீலகண்டன். 

தம்பித்துரை ஒரு சிகரெட் எடுத்து பொறுத்தியபடி, “நாம் இங்கு எங்காவது தனியாக உட்கார்ந்து பேசமுடியுமா?” என்று கேட்டார். 

“என் ஆபீஸ் அறைக்கு வாருங்கள்” என்றார் நீலகண்டன். 

இருவரும், அங்குபோய் அமர்ந்ததும், “நீலகண்டன், இங்குள்ள போலீஸாருக்குத் தெரியாத ஒரு விஷயத்தை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். அதாவது, இங்கு நடக்கும் திருட்டுகளைச் செய்பவனும், கிழவன் வேஷத்தில் இருப்பவனுமான அந்த ஆளின் பெயரைச் சொல்லப்போகிறேன்” என்று நிறுத்தினார். 

நீலகண்டன், அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார். 

“அவனுடைய பெயர் மாரப்பன். வாழ்நாள் பூராவும், குற்றம் புரிவதே அவன் தொழில். அவனைப்பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இருந்த போதிலும், அவன் நேர்மையாக நடக்க ஆசைப்படுகிறவன் என்று மாத்திரம் எனக்குத் தெரியும். இந்தத் திருட்டுப் பத்திரிகை செய்திகளைப் படிக்கும்போதெல்லாம், அந்தத் திருடன் தங்கச் சாமான்களைத் தான் திருடுகிறான் என்றும், தெரு பக்கமாகத்தான் உள்ளே நுழைகிறான் என்றும் அறிந்ததும், நான் அந்த ஆளை அடையாளம் கண்டு கொண்டேன். அதைத் தவிர, அந்த ஆள் மாரப்பன் தான் என்று நிச்சயம் செய்யக்கூடிய அளவிற்கு, எனக்குச் சில அனுமானங்களும் கிடைத்தன!” என்றார். 

நீலகண்டன் வியப்போடு, “இந்த ஊரில் மாரப்பன் என்ற பெயரில் யாருமில்லை. அதாவது, எனக்குத் தெரிந்து யாருமில்லை. இங்கு இருப்போர்கள் எல்லாம் பரம்பரைப் பரம்பரையாக இங்கு வசித்து வருகிறார்கள்!” என்றார். 

தம்பித்துரை தலையாட்டியபடி, “இங்கு மாரப்பன் என்று யாரும் இல்லை என்று எனக்கும் தெரியும். எப்படி இருந்தாலும், நான் மாரப்பனைத் தேடிக்கொண்டு வரவில்லை; அவனுடையக் கூட்டாளியாக ஓர் இளைஞன் இருந்தான். அவன் பெயர் தங்கையா. அவனைத் தான் நான் தேடுகிறேன்” என்றார். 

“அவனும் ஒரு கொள்ளைக்காரனா?” 

“இல்லை, அவனுக்கு அவ்வளவு துணிச்சல் கிடையாது. அவன், பெரிய மனிதனைப்போல் நடித்து, ஒவ்வொரு இடத்திலும் நுழைந்து, முதலில் சொத்து இருக்கும் இடத்தை தெரிந்துக்கொள்ளுவான். பிறகு, மாரப்பன் அங்குபோய் கொள்ளை நடத்துவான். ஐந்து வருஷங்களுக்கு முன்னால், ஒரு வங்கியில் கொள்ளை நடத்திய போது, இருவரும் சிக்கிக் கொண்டார்கள். அந்தச் சமயத்தில், தங்கையா போலீஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தான். அதற்காக, அவனுக்குப் பத்து வருஷக் கடுங்காவல் கிடைத்தது” 

“அப்படியானால் அவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்களா?” 

தம்பித்துரை ஒரு புன்னகையுடன், “அவர்கள் இருக்கவேண்டிய இடம் அதுதான். ஆனால், கோர்ட்டில் இருந்து அவர்களை சிறைக்குக் கொண்டு போகும்போது, வழியில் அவர்கள் தப்பித்து ஓடிவிட்டார்கள். மாரப்பன் என்ன கதியானான் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை–இதை மனதில் வைத்துக்கொள், நீலகண்டன்! அவனைப் பொறுத்த வரையில், அவன் இறந்துவிட்டதாகவே கருதுகிறேன்! ஆனால், தங்கையா கொஞ்சகாலம் கொழும்பு நகரத்திலே ஒரு பணக்காரன் போல் வேஷமிட்டுத் திரிந்திருக்கிறான். அப்பொழுது ஒரு நல்ல குடியில் பிறந்த பெண்ணைப் பார்த்து, அவளைக் காதலிப்பதைப்போல் நடித்து, அந்தப் பெண்ணின் தந்தையையும் ஏமாற்றி அவளை மணம் செய்து கொண்டு இருக்கிறான். அந்தப் பைத்தியக்காரத் தந்தை, தன் மகள் பெரிய பணக்காரியாகப் போகிறாள் என்று நினைத்து திருமணம் செய்து வைத்திருக்கிறான். அந்தப் பைத்தியக்காரன் வேறு யாருமில்லை; நான்தான்! கல்யாண சமயத்தில், சீர்வரிசையாக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தேன். நுவ்ரேலியாவில் ஒரு சிறு பங்களாவும் வாங்கிக் கொடுத்தேன். பெண்ணை சொர்க்க வாழ்வில் அமர்த்தி விட்டதாகவே கனவு கண்டு கொண்டு இருந்தேன். ஆனால், மறு வருஷமே என் கனவு கலைந்தது. அதற்குமேல், என்னால் எதுவும் செய்ய முடியாது போயிற்று. தங்கையா தன் மனைவியைப் பைத்தியமாக்கி, அவளை ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போகச் செய்துவிட்டான். அதன் பிறகு, ஏராளமாகப் பணத்தை அடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்–பணம் போனதைப் பற்றி எனக்குக் கவலையில்லை; என் பெண் போய்விட்டாள்–இதுதான் நடந்தது, நீலகண்டன்! இதில் உனக்கு ஏதாவது தெரிந்திருக்கக் கூடும்” என்றார். 

“இல்லை–எனக்கு ஒன்றும் தெரியாது. அவன் இப்பொழுது எங்கு ருக்கிறான்?” என்று கேட்டார் நீலகண்டன். 

தம்பித்துரை அலட்சியமாக தோளை உலுக்கியபடி, “எங்கோ இந்தப் பக்கம் இருக்கிறான்!” என்றார். 

“அவனைக் கண்டுபிடித்தீர்களா?” என்று விடாமல் கேட்டார் நீலகண்டன். 

கொஞ்ச நேரம் வரையில் பதில் சொல்லாமலிருந்த தம்பித்துரை பிறகு மெதுவாக, “ஆம்; கண்டுபிடித்து விட்டேன். எதிர்பாராத விதமாகப் பம்பாயில் அவனைப் பார்த்தேன். அவனையே தொடர்ந்து அலைந்தேன்” என்றார். 

“அப்படியா? இதற்கு முன்னால் நீங்கள் இங்கு வந்தது, எதேச்சையாகத் தான் வந்திருக்கிறீர்கள்? முதலில் மாரப்பன் தான் இங்கு நடக்கும் திருட்டுக் குற்றத்திற்கு காரணம் என்று நினைத்திருக்கிறீர்கள். இப்பொழுது அவன் இல்லை என்று தோன்றுகிறதா?” 

“அவன் இல்லை!” என்று கூறிய தம்பித்துரை “இருந்த போதிலும், நான் இங்கு வந்ததற்காக வருத்தப்படவில்லை– இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி சில விஷயங்களை ஆராய்ந்து தெரிந்து கொள்ள முயன்றார். ஒரு அளவு வரைதான் நான் அவருக்கு விஷயங்களைக் கூறினேன். மாரப்பனைப் பற்றியோ, தங்கையாவைப் பற்றியோ எதுவும் சொல்லவில்லை. அது என் சொந்த விஷயம். என்னுடைய ரகசியத்தை நீயும் யாரிடமும் சொல்லமாட்டாய் என்று நினைக்கிறேன், நீலகண்டன்!” என்றார். 

நீலகண்டன் புன்னகை பூத்தபடி, “இந்த அறையிலே ஏராளமான ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன, தம்பித்துரை!” என்றார். 

இருவரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். வானத்திலே சந்திரன் பவனி வந்து கொண்டு இருந்தது. ஆங்காங்கு, மேகத்திட்டுகள் சிதறிக் கிடந்தன. 

“நான் கூறிய வரலாறு, அவ்வளவு விசித்திரமாக உனக்குத் தோன்றி இருக்காது. அதைவிட விசித்திரமான விஷயங்கள் எல்லாம், இந்த வானப்பிரகாசம் ஹோட்டலுக்குள்ளேயே பொதிந்து கிடக்கலாம்!” என்றார் தம்பித்துரை. 

நீலகண்டன் எந்தவிதப் பதிலும் சொல்லவில்லை. ஏதோ ஒரு சாக்குக் கூறிவிட்டு, அவரிடமிருந்து கிளம்பி தோட்டத்தை அடைந்தார் நீலகண்டன். தோட்டத்திலிருந்து மாடித் தாழ்வாரத்திற்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுகளின் அருகே நின்று, மாடி அறைகளைக் கவனித்தார். அங்கிருந்து, மாடி ஜன்னல்களெல்லாம் நன்றாகத் தெரிந்தன. 

பவானியின் அறையில், மங்கலான விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. 

பொன்னம்பலத்தின் அறை இருண்டு கிடந்தது. இன்னும் கொஞ்ச தூரம் நடந்து சென்று, கடைசி அறையைக் கவனித்தார். முதலில் 

இருண்டு கிடப்பதைப் போல அந்த அறை தோன்றினாலும், கொஞ்ச நேரத்தில் காற்றடித்த வேகத்தில், அந்த அறையில் தொங்கிக் கொண்டு இருந்த திரைச் சீலைகள் இலேசாக நகர்ந்தபோது, உள்ளே விளக்கு எரிவது தெரிந்தது. 

நிம்மதி அடைந்தவராய் நீலகண்டன் ஹால் பக்கம் வந்தார். அங்கு நின்று கொண்டு இருந்த தம்பித்துரை, அதற்குள், எங்கோ மாயமாய் மறைந்து விட்டார்! 

14. தமயந்திக்கு திகைப்பு! பவானிக்குப் பரதவிப்பு!

தமயந்தி அன்றிரவு படுக்கவே இல்லை. சாமான்களை எல்லாம் கன்னா பின்னாவென்று அள்ளி மூட்டை கட்டிக் கொண்டு இருந்தாள். அவள் மனம் ஆத்திரத்தால் குமுறியது. விடியற்காலை அவள் சென்னைக்குச் செல்லத் தீர்மானித்து விட்டாள்–ஏனென்றால், அவள் ரொம்பவும் கதிகலங்கிப் போய் விட்டாள். தனது பயத்தை இப்பொழுது தான் அவள் ஒப்புக்கொண்டாள். பொன்னம்பலத்திடம் அவளுக்கு ஏற்பட்ட அனுபவம் முற்றிலும் புதுமையானது–அவன், ஒரு மனித மிருகம்! அவனைத் தன்னால் சமாளிக்க முடியுமென்று அவளுக்கு நம்பிக்கை இல்லை. 

எவ்வளவு தூரம் வெறுத்து ஒதுக்கினாலும், அவமதித்துத் துரத்தினாலும், பொன்னம்பலம் அவளை விடாப்பிடியாகத் துரத்தி வருகிறான். இப்படி எல்லாவற்றையும் உதறிவிட்டு அலையும் நபர் ரொம்ப பயங்கரமானவன் என்று அவளுக்குத் தெரியும்…… 

இந்தச் சமயத்தில் அவள் அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அறைக் கதவை உட்புறம் பூட்டி தாளிட்டுவிட்டு, ஒரு துணையுடன் இருந்த போதிலும், அவள் மனம் கலவரத்தால் நடுங்கியது. 

“தூங்கி விட்டாயா, தமயந்தி?” என்ற பவானியின் குரல் கேட்டதுந்தான், தமயந்தி தைரியமாகச் சென்று கதவைத் திறந்தாள். 

“ஏன் தமயந்தி; ரொம்பவும் வெளிறிப்போய் இருக்கிறாய்? உனக்கு ஏற்பட்ட அந்தப் பயங்கர அனுபவம், உன்னை ரொம்பவும் ஆடிப்போகச் செய்திருக்கிறது!” என்று கூறியபடி பவானி சில விநாடிகள் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள். 

பிறகு மெதுவாக, “இன்று மாலை நடந்ததை எல்லாம் நான் பார்த்துக் கொண்டு இருந்தேன்” என்றாள் பவானி. 

“பார்த்துக் கொண்டு இருந்தீர்களா?…… பூங்காட்டிற்குள் நடந்ததையா?” என்று கேட்டாள் தமயந்தி. 

‘ஆம்’ என்ற பாவனையில் தலையசைத்தாள் பவானி. 

தமயந்தியின் முகம் அவமானத்தால் சிவந்தது. “அவன் ஒரு மிருகம்! அவனை எனக்கு சரியாகத் தெரியாது” என்று மூச்சுவாங்கக் கூறினாள் தமயந்தி. 

“இதை யாரிடமாவது சொன்னாயா? செல்வராஜிடம் கூறினாயா?” 

“இல்லை. அதனால் விளையக்கூடிய சச்சரவை, நான் விரும்பவில்லை….இன்றிரவு என் அறைக்குள் பொன்னம்பலம் புகுந்து கொண்டு இருந்தான்–” 

“எனக்குத் தெரியும், அதையும் பார்த்தேன்! நீ வெளியே ஓடியபோது, நான் தாழ்வாரத்தில் நின்று கொண்டு இருந்தேன்” 

கொஞ்ச நேரம் வரை, இருவரும் ஒன்றும் பேச வில்லை. 

தமயந்தி தயக்கத்தோடு, “அந்த மனிதன் உங்களுடைய நண்பனா? அதாவது ரொம்ப நாளாகத் தெரிந்தவனா?” என்று கேட்டாள். 

“ரொம்ப நாளாகத் தெரிந்தவனல்ல” என்று கூறிய ராணி பவானி, தமயந்தியின் முகத்தைக் கவனித்தபடியே, “ஆனால் அவன் எனக்கு நெருக்கமான நண்பன் என்று இந்த ஊராரெல்லாம் சொல்லுகிறார்கள்!” என்றாள். 

“எனக்கு இந்த ஊர் வம்புகளெல்லாம் தெரியாது” என்று புளுகினாள் தமயந்தி. 

ஒரே ஒரு விஷயத்தைப்பற்றி தமயந்தியிடம் தெளிவாகத் தெரிந்து போக வேண்டும் என்றுதான் பவானி வந்திருந்தாள். அந்தக் கேள்வியை, தமயந்தியின் மனதை நோகச் செய்யாமல், எப்படி நளினமாகக் கேட்பது என்று தான் அவள் முயற்சித்துக் கொண்டு இருந்தாள். கடைசியாக “அவன் எவ்வளவு நேரம், உன்னோடு தங்கியிருந்தான்? அதாவது எவ்வளவு நேரம் உன் அறையில் இருந்தான்?” என்று கேட்டாள் பவானி. 

“ஒரு நிமிஷ நேரம்தான் என்று நினைக்கிறேன்” என்று கூறிய தமயந்தி சட்டென்று பவானியின் கேள்வியின் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாள்: “அவனிடம் சிக்காமல் தப்பி ஓடி வந்து விட்டேன்!” என்றாள். 

“அப்படியா?” என்று நீண்ட பெருமூச்சு விட்டாள் ராணிபவானி, பிறகு மெதுவான குரலில், “நீ ரொம்பச் சிறியவள். உலகத்திலேயே, நான் உன்னைத் தேடி யோசனை கேட்க வருவது உனக்கு அசம்பாவிதமாகத் தோன்றலாம். இருந்தாலும், நான் அதற்குத்தான் வந்திருக்கிறேன்– உதாரணமாக நீ ஒரு முட்டாளாய் இருக்கிறாய் என்று வைத்துக்கொள்……வடிகட்டிய முட்டாள் தனமாய் நடந்து கொண்டாய் என்று வைத்துக்கொள்; உன் அறைக் கதவின் இடுக்கு வழியாக ஒரு கடிதம் வந்து விழுகிறது என்று வைத்துக் கொள்….. இந்தக் கடிதத்தைப் போல!” என்று கூறியபடி ஒரு கடிதத்தை வெளியே எடுத்து அதைப் பிரித்தாள். பிறகு சிறிது தயங்கினாள். 

“உன்னிடம் இதை நான் காண்பிக்கலாமா, கூடாதா என்று எனக்குத் தெரியவில்லை, தமயந்தி! இருந்தாலும், உன்னை நான் ரொம்பவும் நம்புகிறேன்” என்று கூறிக்கொண்டே அந்தக் கடிதத்தை தமயந்தியிடம் கொடுத்தாள். 

தமயந்தி அந்தக் கடிதத்தை வாங்கிப் பார்த்தாள். அந்தக் கையெழுத்து, பொன்னம்பலத்துடையது என்று அவளுக்குத் தெரியும். 

“எனக்கு சனிக்கிழமையன்று முப்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. நான் நாட்டைவிட்டுப் போகப் போகிறேன். உன்னை இனி நான் தொந்தரவுபடுத்த மாட்டேன்-என்னை ராஜாபகதூரை சந்திக்கும்படிச் சொல்கிறாயா?” என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது. 

“அவனிடம் பணம் இல்லையா?” என்று வியப்புடன் கேட்ட தமயந்தி, “தான் பெரிய பணக்காரனென்றும், இலங்கையில் எஸ்டேட்டுகள் இருப்பதாகவும் என்னிடம் கூறினானே!–முப்பதாயிர ரூபாய்! மிகப் பெரிய தொகை ஆயிற்றே! அதை, அவனுக்குக் கடன் கொடுக்கப் போகிறீர்களா?” என்று கேட்டாள். 

ராணி பவானி அந்தக் கடிதத்தை மடித்து, தனது கைப்பையில் வைத்துக்கொண்டாள். 

“என்னிடம் முப்பதாயிரம் ரூபாய் இல்லை என்று அவனுக்குத் தெரியும். என் கணவரிடமிருந்து அதைப் பெறலாம் என்று எதிர்பார்க்கிறான்!” 

தமயந்தி முதலில் ஒன்றும் விளங்காமல் திகைத்தாள். பிறகுதான் அவளுக்கு விஷயம் விளங்க ஆரம்பித்தது: “என்ன! மிரட்டிப் பணம் பறிக்கத் திட்டம் போடுகிறானா?’ 

பவானி தலையை ஆட்டியபடி. “அப்படித்தான் தெரிகிறது! என் நிலைமை ரொம்ப சங்கடமாகி விட்டதல்லவா? என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை. என்னைப்போல ஒரு பெண் பைத்தியக்காரியாக இருந்தால் இப்படித்தான் சிக்கிக் கொள்ளுவாள்!” என்றாள். இதைக் கூறும்போது, அவள் முகம் ஆத்திரத்தால் கல்லாக இறுகியது. 

“ஆண்டவனே; இப்படிப்பட்ட மிருகமும் உயிரோடு வாழ வேண்டுமா? இம்மாதிரி மிருகங்களைப் படைத்து, என்னைப்போன்ற முட்டாள்களை ஏன் பரதவிக்க விடுகிறாய்!” 

தமயந்தி, ராணிபவானியைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

“தமயந்தி! நான் ஒரு வடிகட்டிய முட்டாள் தானே? –என்னைப் போன்ற முட்டாள் தானா நீயும் என்று தெரிந்து கொள்ளவே இங்கு வந்தேன்!” என்று கூறிவிட்டு, தனது ஆசனத்தை விட்டு எழுந்த பவானி, 

“இப்படியே பின்பக்கமாக தாழ்வாரத்தின் வழியாகச் செல்லுகிறேன்” என்று கூறிக்கொண்டு அந்த அறையின் பின்புறக் சதவுகளைத் திறந்து கொண்டு தாழ்வாரத்தில் ஓர் அடி எடுத்து வைத்தாள். உடனே சட்டென்று பின்வாங்கிக் கொண்டாள். 

“அங்கு ஒரு மனிதன் நிற்கிறான்!” என்று மெதுவான குரலில் கூறினாள். 

“எங்கே?” என்று கேட்கும் பொழுதே தமயந்தியின் இருதயம் பயத்தினால் படபடவென்று துடித்தது. 

“அதோ, அந்தக் கடைசியில்–பார்!” 

தமயந்தி கலவரத்தோடு மெதுவாக தலையை வெளியே நீட்டிப் பார்த்தாள். முதலில், அவள் கண்களுக்கு எதுவும் தென்படவில்லை. பிறகு தாழ்வாரத்தின் கோடியிலே, ஒரு உருவம் நகர்வது தெரிந்தது. அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே, அந்த உருவம் திருப்பத்தில் மறைந்தது. 

“அது…..அது…..?” என்று ஈனஸ்வரத்தில் திக்கினாள் தமயந்தி. 

“இல்லை; அது பொன்னம்பலமல்ல. அவனைவிட ரொம்பப் பெரிய உருவம் அது. முதலில், அது தம்பித்துரையாக இருக்கக்கூடும் என்று நினைத்தேன். ஏன் அப்படி நினைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஏனென்றால், என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.” 

இருவரும், ஐந்து நிமிஷங்களுக்கு மேல் தாழ்வாரத்தில் நின்றபடி காத்துக் கொண்டு இருந்தனர். அந்த உருவம் மீண்டும் காணப்படவில்லை. 

“நான் என் கணவரின் அறைக்குள் செல்லலாம் என்று நினைத்தேன். அங்கு ஒன்று இருக்கிறது….. அதாவது நான் எடுத்துவர வேண்டிய என்னுடைய சாமான் ஒன்று இருக்கிறது. தாழ்வாரத்துப் பக்கம் இருக்கும் கதவு ஒருக்கால் தாளிடப்படாமல் இருக்கலாம். அந்தப் பக்கம் போய், நான் முயற்சித்துப் பார்க்கிறேன்” என்று கூறி விட்டு, இருளில் நடந்தாள் பவானி. தமயந்தி அவளுக்காக சில விநாடிகள் காத்திருந்தாள். பவானி திரும்பி வரவில்லை. அந்தச் சமயத்தில், பவானியின் குரல் கேட்டது: 

“சரி, தமயந்தி! நான் என் அறைக்குச் செல்லுகிறேன்; நீ படுத்துக்கொள்” 

தமயந்தி தன் அறைக்குள் நுழைந்து, கதவை நன்றாகத் தாளிட்டுப் பூட்டினாள். ஜன்னல் கதவுகளை எல்லாம் நன்றாக இழுத்து சாத்தி கொக்கி மாட்டினாள். அன்றிரவு என்ன பயங்கரம் நடக்கப் போகிறதோ என்ற திகிலுடன், படுக்கைக்குச் சென்றாள். 

15. குடக்கண்ணதீசனின் கத்தி 

இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி எங்கோ வெளியே சுற்றிவிட்டு, வெகு நேரம் கழித்துத்தான் திரும்பி வந்தார். அவர் வந்தபோது முன் ஹாலில் இருந்த குஞ்சம்மாள் அரைத் தூக்கத்தில் இருந்தாள். 

அந்தச் சமயத்தில், மாடியின் மீது நின்றபடி பொன்னம்பலம், ராமையாவை சத்தம் போட்டு அழைத்துக் கொண்டு இருந்தான். ராமையா ஹாலில் நின்றபடி அவனை அண்ணாந்து பார்த்தான். 

“இரண்டு தடவை மணி அடித்தேனே; நீ ஏன் வரவில்லை?” என்று கத்தினான் பொன்னம்பலம். 

“உங்கள் அறையிலுள்ள மணிதான் கெட்டுப்போய் இருக்கிறதே” என்று குமுறிய ராமையா, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கடுமையாகக் கேட்டான். 

தனக்கு மதுபுட்டி ஒன்றை மேலே கொண்டு வரச் சொல்லிவிட்டு, ஆத்திரத்தோடு அறைக்குத் திரும்பினான் பொன்னம்பலம். அவனுக்கு ராமையாவைக் கட்டோடு பிடிக்கவில்லை. மணி சத்தத்தைக் கேட்டு விட்டே, வராமல் இருந்து விட்டு, வேண்டுமென்றே இப்போது புளுகுகிறான் ராமையா என்று நினைத்தான் பொன்னம்பலம். 

சில நிமிஷங்களில், அவன் கேட்டதை எடுத்துக் கொண்டு ராமையா அவனுடைய அறைக்குள் நுழைந்தான். 

“உங்கள் நீலகண்டனுக்கு யோக்கியமான வேலைக்காரர்கள் கிடைக்க மாட்டார்களா? சிறைச் சாலையிலும், கேடிகள் கூட்டத்திலும் தேடித்தான் அவர் ஆட்களை பொறுக்கி வருவாரா?” என்று விஷமத் தனமாகக் கேட்டான் பொன்னம்பலம். 

ராமையா ஒன்றும் சொல்லவில்லை. அவன் கண்களில் கொலை வெறி தாண்டவமாடியது. அதைப் பார்த்ததும் பொன்னம்பலத்தின் உடல் நடுங்கியது. ராமையா அந்த அறையை விட்டு வெளியே சென்றான். 

பொன்னம்பலம் பாட்டிலைத் திறந்துகொண்டு குடிக்க ஆரம்பித்ததும், வெளியே கார் சத்தம் கேட்டது. இந்த அகாலத்தில் யார் வரக்கூடும்? நீலகண்டனாக இருக்கக்கூடும் என்று அலட்சியமாக நினைத்தான் பொன்னம்பலம். 

நீலகண்டனும் அந்தக் கார் சத்தத்தைக் கேட்டார். வெளிப்புறம் சென்று, விளக்கைப் பொருத்தினார். அங்கு வந்து நின்ற காரை அதற்குமுன் அவர் பார்த்ததில்லை. அது ராஜாபகதூரின் சென்னை பங்களாவிலுள்ள கார். ராஜாபகதூரே அந்தக் காரிலிருந்து கீழே இறங்கினார். 

“நீங்களா?” என்று வியப்புடன் கேட்ட நீலகண்டத்திற்கு, அவர் பின்னால் இறங்கி வந்த செல்வராஜைப் பார்த்ததும் இன்னும் அதிக ஆச்சரியம் ஏற்பட்டது. 

“டவுனில் எனக்கிருந்த வேலை முடிந்துவிட்டது, நீலகண்டன். இன்றிரவு, இங்குதான் தங்கப்போகிறேன்” என்று சுருக்கமாகக் கூறிய ராஜாபகதூர், “அறைச் சாவியைக் கையிலேயே எடுத்துக் கொண்டு போய்விட்டேன். அதனால், உங்களுக்கு எந்தவிதச் சிரமமும் இல்லையே?” என்று கேட்டார். 

‘இல்லை’ என்ற பாவனையில் தலையாட்டிவிட்டு, வேலைக்காரனைத் தேடிக்கொண்டு நீலகண்டன் அப்பால் சென்றதும், செல்வராஜ், தான் முன்பு கூறிக்கொண்டு இருந்த விஷயத்தையே, மீண்டும் ராஜாபகதூரிடம் வலியுறுத்தி கூறிக்கொண்டு இருந்தான். 

“எல்லாவற்றையும் நான் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறிய ராஜாபகதூர், “இதைப்போன்ற அனுபவம் எனக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது, செல்வராஜ்! மீண்டும், என்னால் அதைத் தாளவும் முடியாது. எனக்கு நிச்சயமாகத் தெரிந்தாக வேண்டும்!” என்றார். 

“நேரடியாகக் கண்காணிப்பதைவிட, வேறு வழி இல்லையா?” என்று கேட்ட செல்வராஜ், “நீங்கள் சென்னைக்குப் போயிருந்தால் நன்றாக இருக்கும்” என்றான். மீனம்பாக்கத்தில் ஒரு சிறு ஓட்டலின் மாடியில் தான், அவரைச் சந்தித்து அழைத்து வந்திருந்தான் செல்வராஜ். 

மீனம்பாக்கத்தில் இருந்தபடி திடீரென்று கிளம்பி வந்து தன் மனைவியின் திருட்டைக் கண்டுபிடிக்கத்தான் அவர் திட்டமிட்டு இருந்தார். 

“நீங்கள் சந்தேகிப்பதை, கண்ணால் கண்டு ஊர்ஜிதம் செய்ய நேர்ந்தால், என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டான் செல்வராஜ், 

ராஜாபகதூர் அன்றிரவு அளவுக்கு மீறி கிழடுதட்டி காணப்பட்டார். இதுவரை காணப்படாத சுருக்கங்கள் எல்லாம், அவர் முகத்தில் காணப் பட்டன. வேதனையோடு புன்முறுவல் பூத்தபடி, “அது, என்னுடைய அப்போதைய மனோநிலையைப் பொறுத்தது. என் மனதிற்கு நிச்சயமாக விஷயம் புரிந்துவிட்டால், நா ன் எங்காவது போய்விடுவேன்– என்னை இனம் கண்டுகொள்ள முடியாதபடி மறைந்து விடுவேன்! அப்படியும் நடக்கலாம்; அல்லது, கொலை வழக்குக் கைதியாக நான் கூண்டில் ஏற்றப்பட்டாலும் ஏற்றப்படலாம்!” என்றார். 

அதைக் கேட்ட செல்வராஜ் நடுநடுங்கிப் போய்விட்டான். அந்தச் சமயத்தில், நீலகண்டன் திரும்பி வந்தார். 

“நீலகண்டன்! நான் திரும்பி வந்துவிட்டதாக ராணிசாகிப்பிடம் சொல்லவேண்டாம்! நாளைக் காலை என்னை எழுப்பி விடுங்கள்–நான் இங்கே இருந்தால்!” என்று கூறிவிட்டு, மேலே சென்றார். 

அவர் மேலே சென்றதும், நீலகண்டன் தன்னுடைய ஆபீஸ் அறைக்குச் சென்று தன் சட்டைப்பையிலிருந்த (பொன்னம்பலம் மாற்றுவதற்காகக் கொடுத்த) செக்கை ஒருமுறை எடுத்துப் பார்த்தார். பிறகு அதை மடித்து, பத்திரமாக இரும்புப் பெட்டிக்குள் வைத்தார். உள்ளபடியே, பொன்னம்பலத்திற்கு அளவு கடந்த மனோதைரியம் இருக்கிறது என்று நினைத்தார். 

மீண்டும் அவர் ஹாலுக்குத் திரும்பி வந்தபோது, இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி ஹாலில் சாய்ந்து கொண்டு ஏதோ ஒரு சர்வே படத்தை வைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தார். 

அந்தச் சமயத்தில் ராமையா, அளவுகடந்த ஆத்திரத்துடன் நீலகண்டத்திடம், தன்னைப் பொன்னம்பலம் கேவலமாக வைததைப் பற்றிப் புகார் செய்தான். 

“குடிகாரன் பேச்சை ஏன் கவனிக்கிறாய்?” என்று சீறி விழுந்த நீலகண்டன், செல்வராஜின் பக்கம் திரும்பி “உங்களுக்கு எதுவும் தேவையா?” என்று கேட்டார். 

செல்வராஜின் மனமும் எக்காரணத்தாலோ ரொம்பவும் கலங்கிப் போயிருந்தது. அன்றிரவு ஏதோ ஒரு பயங்கரம் நடக்கப் போகிறதென்ற கலவரம் அவன் மனதை ஆட்டி வைத்துக் கொண்டு இருந்தது. 

அந்தச் சமயத்தில் மேலேயிருந்து பொன்னம்பலம், “ராமையா!” என்று கூச்சல் போடுவது கேட்டது. 

“நல்லது! நான் அவனைக் கவனித்துக் கொள்ளுகிறேன். நீ போகவேண்டாம், ராமையா!” என்று கூறிவிட்டு நீலகண்டன் மேலே ஏறிச்சென்றார். 

ஹாலில் இருந்து பார்த்தால், பொன்னம்பலத்தின் அறை நன்றாகத் தெரிந்தது. அந்த அறைக்குள், நீலகண்டன் நுழைவதை கீழே இருந்தபடி பார்த்துக் கொண்டு இருந்தார் இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி. அந்த அறைக்குள் நுழைந்த உடனேயே, நீலகண்டன் வெளியே வந்துவிட்டார். வெளிவாசல் கதவைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டே, “பொன்னம்பலம்! உனக்கு அளவிற்கு மீறி பான வகைக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு மேலும் நீ மது அருந்தி இங்கு கலாட்டா செய்வதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். இந்த ஹோட்டலை விட்டு கிளம்புவதானால், கிளம்பிப் போய்விடு. ஒரு சனியன் விட்டதென்று நினைத்துக் கொள்வேன்!” என்றார். 

இதைக் கூறிவிட்டு அறைக் கதவைப் படீரென்று சாத்திக் கொண்டு நீலகண்டன் தம் கைகளைக் கால்சட்டைப் பைக்குள் திணித்தபடி ஆத்திரமாக கீழே இறங்கினார். அந்தக் கோபாவேசத்தோடேயே, நேராகத் தன் அறைக்குள் நுழைந்தார். 

“நீலகண்டன் ரொம்பவும் ஆத்திரமடைந்து இருக்கிறார்” என்றார் பரஞ்சோதி. 

“அது நியாயந்தானே?” என்றான் செல்வராஜ். பிறகு, ராமையாவைக் கூப்பிட்டான். “மாடிக்குப் போய் ராஜாபகதூருக்கு ஏதாவது தேவையா என்று பார்த்துவிட்டு வா” என்றான். 

“நீ ராஜாபகதூரின் மைத்துனன் அல்லவா?” என்று கேட்ட பரஞ்சோதி, “அவர் சென்னைக்குச் சென்றிருப்பதாக நினைத்தேன்” என்றார். 

“இப்பொழுது தான் திரும்பி வந்தார்” என்று சுருக்கமாகக் கூறினான் செல்வராஜ். 

அந்தச் சமயத்தில், தன் அறையில் இருந்து வெளியே வந்தார் நீலகண்டன். அவர் கண்கள் கோபத்தால் அனற்பிழம்பு போல் காட்சியளித்தன. 

“நமது நண்பர் என்ன தகராறு செய்கிறார்?” என்று கேட்டார் பரஞ்சோதி. 

அவர் பார்வை, அவரது கைக்கடிகாரத்தின் மீது சென்றது; பதினொன்றரை அடிப்பதற்கு இன்னும் சில நிமிஷங்கள் இருந்தன. 

“எல்லாக் குடிகாரர்களையும் போல, இந்தக் குடிகாரனும் கலாட்டா செய்கிறான்!” என்று கூறிய நீலகண்டன், மாடியிலிருந்து இறங்கி வரும் ராமையாவைக் கவனித்தார். 

“ராஜாபகதூர் தன் அறையில் இல்லை. அவர் தோட்டத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்” என்றான் ராமையா. 

நீலகண்டனின் முகம் சிவந்தது: உன்னை யார் அங்கு அனுப்பியது–?” என்று ஆரம்பித்தார். 

“நான் தான் அனுப்பினேன்” என்று கூறிய செல்வராஜ், “அவருக்கு எதுவும் தேவையா என்று பார்த்துவரச் சொன்னேன். தோட்டத்திலா இருக்கிறார்?” 

“அவர் தோட்டத்திலுள்ள படிக்கட்டுகளின் அருகே நின்று கொண்டு இருந்தார் என்று நினைக்கிறேன். நான் தாழ்வாரத்தின் பக்கம் சென்றேன்–” 

இந்தச் சமயத்தில் ஒரு பயங்கரமான வீரிட்ட அலறல் சத்தம் கேட்டது. பரஞ்சோதிக்கு ரத்தமே உறைந்து விடுவதைப் போல் இருந்தது. மீண்டும் அந்த அலறல் சத்தம் கேட்டது. யாரோ ஒரு பெண், கட்டு மீறிய பயத்தில் அலறுகிறாள் என்று தெளிவாகத் தெரிந்தது. 

மறு விநாடியே ராணிபவானி நிலை குலைந்த தோற்றத்தோடு, சவத்தைப்போல் முகம் வெளுத்து மாடிப்படிக் கட்டுகளில் பறந்தோடி வந்தாள். அவள் கட்டியிருந்த வெண்பட்டுச் சேலையிலே ஏராளமாக ரத்தம் ஊறி நனைந்து போயிருந்தது. அவள் கைகளில், பச்சை இரத்தம் கொட்டிக் கொண்டு இருந்தது. படிக்கட்டுகளில் தடுமாறி விழப்போன பவானியை செல்வராஜ் ஓடிப்போய் பிடித்துக் கொண்டான். 

“என்ன நடந்தது? இது என்ன?” என்று பதறினான் செல்வராஜ். 

“அங்கே–அங்கே!’ என்று நாக்குழற, மாடியை சுட்டிக் காட்டியபடி தடுமாறிய பவானி, “அவன் கொலையுண்டு கிடக்கிறான்…….பொன்னம்பலம் தாழ்வாரத்தில் கிடக்கிறான்……பிணமாகக் கிடக்கிறான்!” என்று கத்திவிட்டு மூர்ச்சையானாள். 

இன்ஸ்பெக்டர் பரஞ்சோதி சிறுத்தையைப் போல் பாய்ந்து மாடிப் படிக்கட்டுகளில் ஏறி, பொன்னம்பலத்தின் அறைக்கதவை வேகமாகத் தள்ளித் திறந்தார். அறை இருண்டு கிடந்தது; மின்சார விளக்கைப் பொருத்தினார். அறை காலியாகக் கிடந்தது. பின்புறத் தாழ்வாரத்தின் பக்கமிருந்த கதவு திறந்து கிடந்தது. அங்கு வேகமாக ஓடினார் பரஞ்சோதி. 

அவரது இடது கைப்பக்கம் காலடியிலே, சுவரை ஒட்டி, ஒரு உருவம் கிடந்தது. அது பொன்னம்பலம் தான்! அவன் மல்லாக்க பார்த்தபடி கிடந்தான். அவன் நெஞ்சிலே ஒரு கத்தி செருகப்பட்டிருந்தது–அந்தக் கத்தி, சரித்திரப் பிரசித்திப் பெற்ற குடக்கண்ண தீசனின் கத்தி! 

– தொடரும்…

– நீலகண்டன் ஹோட்டல் (துப்பறியும் நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1958, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *