கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2026
பார்வையிட்டோர்: 47 
 
 

வாசலில் சைக்கிள் பெல் சத்தம் கேட்கவே ‘இந்த காலத்தில் சைக்கிளில் வருவது யாராக இருக்கக் கூடும்’ என்றவாறே கதவைத் திறக்க வந்தார் பரமேசன். பார்த்தால் பரமசிவன் தாத்தா!.

“வாங்க தாத்தா, உட்காருங்க. என்ன விஷேசம். ஒரு வருஷம் மேலே இருக்கும் உங்களப் பார்த்து!”.

தொண்ணுறு வயதை நெருங்கும் பரமசிவன் தாத்தா BP, சுகர், கொழுப்பு, தைராய்டு, மூட்டு வலி போன்ற எந்த வித நவ நாகரீக வாழ்க்கைமுறை தொந்தரவுகளும் இல்லாதவர். கண் பார்வையும் கன ஜோர். இன்னும் நரைக்க வில்லை. நாமளும் தான் ‘எதோதோ டயட் டயட் என்று அல்லாடுகிறோம். இவர் என்ன டயட் பண்றார்’ என்று கேட்க வேண்டுமென நினைத்துக் கொண்டார் பரமேசன்.

அதற்குள் அவரின் மனைவி சரசு சமையல் கூடத்திலிருந்து வெளியே வந்தாள்.

“என்ன சாப்படிரீங்க!” என்று அழுத்தம் திருத்தமாக வினவினாள்.

“காபி, டி, பூஸ்ட். என்ன இருக்கோ அதைக் கொடுங்க. எனக்குத் தான் எந்த ரெஸ்ட்ரிக்ஸன் கிடையாதே. சர்க்கரைப் போட்டே இருக்கலாம்”.

“அடடே, உங்களுக்கு எங்களைப் பத்தி ஒன்னும் தெரியாதுப் போலிருக்கு. நாங்க சர்க்கரை உட்டு 2 வருஷம் ஆகுது. காபி, டீ கூட ரொம்பக் கெடுதலாமே. அடிக்சனாமே. அதையும் விட்டுட்டோம். வீட்டிலே அதல்லாம் இருந்தா ஆசை வந்துடும்னு வாங்கறதேயில்ல”.

“அப்போ, என்னத் தான் குடிப்பீங்க?”

“எல்லாம் மூலிகை டீ. செம்பருத்தி, துளசி, கற்பூரவள்ளி இப்படி பல தினுசு. பால் கூட ரொம்ப டேஞ்ஜராமே. விலங்குகளின் நெறிமுறை சிகிச்சைக்கான மக்கள் அமைப்பு (PETA) வலைதளத்திலே விலாவாரியாப் போட்டிருக்கு. நம்ம உடம்புல இருக்கிற கால்சியத்தைப் பால் வழிச்சி எடுத்திடுமாம். ப்ரோஸ்ட்ராட் கான்சர், ஓவரின் கான்சர் எல்லாம் வரதுக்குப் பாலும் ஒரு காரணமாம்.. எல்லாம் மருத்துவ ஆராய்ச்சி சொல்லுதாம். எந்த மிருகமாவது பாலைக் குடிக்குதா? குட்டியா இருந்தப்போ குடிக்கும். வளர்ந்தப் பின்னாடிக் குடிக்காது. நாமளும் ஒரு வகைல பாலூட்டி இனம் தானே. நாம ஏன் குடிக்கணும்?”.

“ஆமாம், லாஜிக் சரியாத் தான் இருக்கு. அப்போ, டெய்ரி-பிரீ-டயட் (dairy free diet) தான் உங்களுக்கு?. நெய், சீஸ், வெண்ணெய் ஒண்ணுமே கிடையாது?. பால் என்ன விலை வைத்தாலும் உங்களுக்குக் கவலை இல்லை. சரி, விலங்கு பால் வேணாம். அதுக்குப் பதிலா, தாவர பால் சோயா மில்க் சாப்பிடுங்களேன்”.

“அதையேன் கேட்கிறீங்க. இன்டர்நெட்ல சோயாப் பத்தி இவரு எதோ நோண்டப் போக, அங்கியும் ஒரு டேஞ்சர் வந்திச்சி. பெரிய பூதம் மாதிரி. எதோ லெக்டின் (Lectin) -னு ஒரு கெமிக்கல் இருக்குற உணவு பொருள் எல்லாம் ரொம்ப கெடுதியாம். லெக்டின் குடலைச் சேதப்படுத்துமாம். அந்த லிட்ஸ்ல, இந்த சோயாவும் இருக்கு. கூட, தக்காளி, கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பாலிஸ் பண்ணாத கோதுமை, அரிசி, பருப்பு, நிலக்கடலை எல்லாமே ஆகாதாம். குண்ட்ரி (Gundry) என்கிற MD டாக்டர் ஆராய்ச்சிப் பண்ணி இதச் சொல்லியிருக்கார். உணவுப்பொருளோட தோல், விதையில இந்த கெமிக்கல் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. அத எடுத்துட்டு தான் சாப்பிடணும்னுச் சொல்றார். அவரே ‘லெக்ட்டின் -பிரீ-டயட்’ ன்னு வெளியிட்டுயிருக்கார்”.

“கெட்டோ (Keto) டயட்னு ஒண்ணு இருக்குமே. அதேப் பார்த்தீங்களா ?”.

“ஐயோ. அதயும் பார்த்தோம். கெட்டோ டயட்-யால் சிறுநீரகத்துக்கு ரொம்ப கெடுதலாமே. குண்டானவங்களுக்குத் தான் அது லாயக்காமே. கூடவே வெறும் மாமிசம் சாப்பிடணும். நாம வெஜிடேரியன் ஆச்சே. முடியுமா?. இல்ல, கிலோக்கணக்கா பாதாம் சாப்பிடச் சொல்லறாரே. கட்டுப்படியாகுமா?”.

“நீங்க பேசாம, காட்டுக்குப் போய் தவ வாழ்க்கைத் தான் வாழணும்”.

“அதே கூட முடிவு செஞ்சோம். ஒரு மலைக்காட்டுப் பக்கத்தில 2 லட்சம் பணம் போட்டுப் புரோக்கர் மூலமா ஒரு இடம் வாங்கினோம். அது வனத்துறைக்குச் சொந்தம்னுச் சொல்லிட்டாங்க. புரோக்கர் நம்மள செமத்தியா ஏமாத்திப்புட்டான். பேசாம, நம்ம பையன் இருக்கிற கனடாவுக்குப் போய்டலாம்னு இருக்கோம். அங்கே நம்ம பையன் இருக்கிற இடத்தில அடுத்த வீடே அஞ்சாறு கி.மீ தள்ளித்தானாம். சுத்தி எல்லாம் காடு தானாம். பனி காலத்தில வெள்ளையைப் பாப்போம். மத்த நேரத்திலப் பச்சையைக் காண்போம்”.

“நல்லா யோசிச்சு விவரமாப் பண்ணிட்டு வரீங்க. இப்போ சாப்பாட்டிற்கு என்னத் தான் சாப்பிடறீங்க”.

“அதான், ரொம்பக் குழப்பமா இருக்கு. ஒருத்தன் சொன்னதப் படிச்சா அது சரியாயிருக்கு. அதுக்கு எதிரா இன்னொருவன் சொன்னதைப் பார்த்தா அதுவும் சரியாத் தோணுது. எல்லாத்துக்கும் மருத்துவ ஆராய்ச்சி, கிராய்ச்சி பக்கபலம் இருக்குன்னுப் போடறாங்க. நாங்க சாமானியருங்க என்னப் பண்றது?.

சில சமண முனிவருங்க வெறும் காத்து, வெயில், தண்ணி மூலமாவே எல்லாச் சக்தியும் கிடைக்க வச்சி மாசக்கணக்கில கூட வாழுவாங்களாமே.

டயட்’டே வேணாமில்லையா?. அந்த மாதிரி எதாவது முடியுமான்னு இவரு ஆராய்ச்சிப் பண்ணப் பார்க்கிறாரு.”.

“அதெல்லாம் எதுவும் வேணாம். எங்கிட்ட சிம்பிளா ஒரு டயட் இருக்கு. ‘டயட் – ஃப்ரி – டயட் (diet-free-diet)’ ன்னு பேரு”.

“அதென்ன புதுசா இருக்கே. இன்டர்நெட்லே நாமப் பார்த்த வரைக்கும் அந்த மாதிரி ஒண்ணும் இல்லையே”.

“ஆமா , நீங்க தேடினா கிடைக்காது. ஏன்னா, அது மறைமுகமா இருக்கு. அதெல்லாம் நம்ம முன்னோர் வச்சது தான். ரெண்டே பார்முலா. முதலாவது ரெண்டே சொற்கள் – பசித்துப் புசி. ரெண்டாவதும் ரெண்டே சொற்கள் – அளவு மிஞ்சாதே”.

“எல்லாத்திலையும் நல்லது கெட்டது ரெண்டும் கலந்துத் தான் இருக்கும். சரி, அப்போ நான் வரட்டுமா!”. சொல்லியவாறே சோஃபாவிலிருந்து எழுந்துக் கொண்டார் பரமசிவன்.

நாம கேட்க வேண்டியதை நாம கேட்காமலே இவரு பதிலை இப்படி சுளுவா சொல்லிட்டாரே என்று பரமேசன் வியப்பில் ஒரு கணம் ஆழ்ந்து அவருக்கு விடைக் கொடுக்கவும் மறந்து நின்றார்.

முன்பு எல்லாம் தகவல் பஞ்சம் நிலவியது. ஆனால், இன்றைய யுகத்தில் தகவல் பெரு வெள்ளம். அதில் நாம் மூழ்கிவிடாமால் நிதானித்து செயல் பட வேண்டும். காதும் கண்ணும் கூடப் பொய் சொல்லி விடும் காலமிது. இந்த கதையானக் கட்டுரையைக் கூட நீங்கள் முழுமையாக நம்ப வேண்டாம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு..

– அமுதசுரபி ஜூன் 2025 இல் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *