காளத்தி முதலியார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பல ஆண்டுகட்குமுன்பு தொண்டைமண்டலத் திலே காளத்தி முதலியார் என்னும் பெயருடைய வள்ளல் ஒருவர் இருந்தார். அவர் மிகுந்த அருள் உடையவர். புலவர்கள் தம்மீது செய்யுள் பாடிக் கொண்டோ அல்லது வீணாகவோ பொருளுதவியை நாடி வந்தால் தகுந்தவாறு பொருள் கொடுத்து உதவி செய்வார். தம்மிடம் ஏற்று வந்தவர்களுக்கு இல்லையென்று இயம்பமாட்டார். இதனால் இவருடைய பெருமை நாடெங்கும் சிறந்தோங்கியது. இவருடைய புகழைக் கண்டு பொறாமைகொண்ட அரசன் இவரால் தன்னுடைய புகழ் மங்கிப்போகிறது என்று எண்ணினான். இவருடைய பொருள் முழுவதையும் பறிமுதல் செய்துவிட்டான். அதனால் இவர் மிகுந்த துன்பப்பட்டார். 

அந் நாளில் மதுரகவிராயர் என்னும் பெயருடைய புலவர் ஒருவர் இருந்தார். அவர் மிகுந்த வறுமையால் பெருந் தொல்லைப்பட்டார். காளத்தி முதலியாரிடம் நல்ல உதவி பெறலாம் என்று எண்ணினார். புறப்பட்டு வந்து காளத்தி முதலியாரைக் கண்டார். தமது வறுமைத் துன்பத்தைக் கூறினார். புலவருக்குக் கொடுப்பதற்குக் காளத்தி முதலியாரிடம் பொருள் யாதும் இல்லை, “என்னிடம் பொருள் யாதும் இல்லை,” என்று சொல்வதற்கு நாணினார். இல்லை என்பதை விட இறந்து போகலாம் என்று எண்ணினார். முதலியாருடை வீட்டிற்குப் பின்புறத்திலே பாம்புப் புற்று ஒன்று இருந்தது. முதலியார் அந்தப் புற்றிடத்திற்குச் சென்றார். தம்மைப் பாம்பு கடித்துக் கொல்ல வேண்டும். என்று எண்ணியவராய்ப் புற்றுக்குள் கையை விட்டார். பாம்பு அந்த வள்ளலைக் கடிக்க வில்லை. தன் முடிமணியை அவர் கையில் கக்கியது. முதலியார் அதனைப் புலவருக்குக் கொடுத்து. அனுப்பினார். 

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து.” 

(உரை.) ஆற்றுப்பெருக்கு அற்று – ஆற்றிலே தண்ணீர் வற்றிப்போய், அடிசுடும் அந்நாளும்-மணலானது வெயிலினாலே காய்ந்து நடப்பவருடைய அடியைச் சுடுகிற அக்காலத்திலும், அவ் ஆறு – அந்த ஆறானது, ஊற்றுப்பெருக்கால் – ஊற்றுநீர்ப் பெருக்கினாலே, உலகு ஊட்டும் – உலகத்தார்க்கு நீரைக்கொடுக் கும், (அதைப்போல்) நல்ல குடிப்பிறந்தார்-நல்ல குடியிற் பிறந்தவர்கள், நல்கூர்ந்தார் ஆனாலும்-வறுமையை அடைந்தார் களாயினும், ஏற்றவர்க்கு – இரந்தவர்களுக்கு, இசைந்து – மனம் இசைந்து-மனம் பொருந்தி, இல்லையென மாட்டார் – எம்மிடத்திலே யாதும் பொருளில்லையென்று சொல்லமாட்டார்கள். 

(கருத்து.) நற்குடியிற் பிறந்தவர்கள் தாங்கள் வறுமையை அடைந்தாலும் இரப்பவர்கட்குத் தம்மிடம் ஒன்றும் இல்லை யென்று சொல்லமாட்டார்கள். 

– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *