கேணிவெட்டிய தோணியப்பன்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 8
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சங்கபுரம் என்னும் ஊரிலே தோணியப்பன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவனுடைய வீட்டி ற்குப் பின்புறமாகத் தோட்டம் ஒன்று இருந்தது. தோணியப்பன் தன்னுடைய தோட்டத்திலே கேணி ஒன்று வெட்ட விரும்பினான். கல் முதலானவற்றைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு நிலத்தில் இருபதடி ஆழம் வரையில் வெட்டி மண்ணை வெளிப்படுத்தி விட்டுக் கிணற்று வேலையைச் செய்யத் தொடங்கினான். ஒருநாள் இரவில் அந்தப் பள்ளம் இடிந்து விழுந்து மூடிப்போய்விட்டது. தோணியப்பன் மீண்டும் மண்ணை வெட்டி அப்புறப்படுத்த மறுமுறையும் இடிந்துவிட்டது. இவ்வாறு பல தடவை வெட்டியும் இடிந்துகொண்டே வந்தது.
தோணியப்பன் அவ்வாறு கிணறு இடிவதற்குக் காரணம் என்ன என்று நண்பர்களைக் கலந்து ஆராய்ந்தான். சிலர், “காலம் வந்தால் எல்லாம் தானாகவே கடக்கும்,” என்றனர். சிலர், ‘கிணறு வெட்டுமிடத்தில் பூதம் ஒன்று இருக்கிறது. அதற்குப் பலி கொடுத் தால் கேணிப்பள்ளம் இடிந்து விழாமல் இருக்கும்” என்றார்கள். தோணியப்பன் பூசை முதலியவற்றை நடத்திப் பலி கொடுத்து மேலும் கேணி வேலையைத் தொடங்கினான். அப்பொழுதும் இடிந்து விழுந்தது. சிலர், “எல்லாவற்றிற்கும் காலம் வரவேண்டும்; சிறிது நாளைக்குப் பொறுத்திரு,” என்றனர். தோணியப்பன் அவ்வாறே சிலகாலம் பொறுத்திருந்தான். பிறகு சில நல்ல குறிகளைப் பார்த்து மீண்டும் வேலையைத் தொடங் கினான். இப்பொழுது தோணியப்பனுக்கு நல்ல காலம் வந்துவிட்டபடியால், கேணி இடிந்து விழவில்லை. மிகுவிரைவாகக் கேணியைக் கட்டி முடித்தான்.
“எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஓக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.”
(உரை.) யார்க்கும் – எத்தன்மையோர்க்கும், புண்ணியம் ந்து எய்து போது அல்லால் – முன் செய்த நல்வினை வந்து கூடும் பொழுதல்லாமல், ஒரு கருமம் – ஒரு காரியத்தை, எண்ணி- ஆராய்ந்து, செய்யொண்ணாது – செய்து முடிக்க முடியாது, (செய்து முடிக்கத் தொடங்கினால்) கண் இல்லான் – குருடன், மாங்காய் விழ – மாங்காயை அடித்து வீழ்த்துதற்கு, எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் – எறிந்த மாத்திரைக்கோலைப் போலும், ஆம் காலம் – நல்வினை வந்து சேரும் பொழுது, அவர்க்கு ஆகும் – அவர்க்கு அக் காரியம் எளிதாக முடிவு பெறும்.
(கருத்து.) எடுத்துக்கொண்ட காரியங்கள் இனிது முடிவ தற்கு நல்லகாலம் வருதல் வேண்டும்; இன்றேல் கைப் பொருளையும் இழந்து துன்புற நேரிடும்.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026