கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 4, 2024
பார்வையிட்டோர்: 1,231 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நீங்கள் கல்கோட்டையை பார்த்திருப்பீர்கள், இல் லாவிட்டால் சரித்திர புத்தகத்தில் படித்திருப்பீர்கள்; கோட்டை என்றால் எதிரிகள் யாரும் அண்ட முடியாது. லேசில் அழிக்க முடியாது. உயிருக்கு நல்ல பாதுகாப் பளிக்கும் இடம் கோட்டை தான். கோட்டை என்றால் கல்லாலும் காரையாலும் அமைய வேண்டும் என்று தானே நினைக்கிறீர்கள். அப்படி இல்லாமலே ஒரு கோட்டை இருக்க முடியும். அந்த மாதிரி ஒரு கோட் டையைப்பற்றி சொல்கிறேன் கேளுங்கள். 

தூத்துக்குடி முத்துப் படுகையிலே ஒரு அழகிய இப்பி இருந்தது. அது கொழு கொழுவென்று வளர்ந் திருந்ததனால் அதைக் குண்டு முத்து என்று அழைத் தார்கள். கொழு கொழு வென்று இருந்த அழகு எப்படி உறவினர்களைக் கவர்ந்ததோ அதைப்போவவே அதனுடைய எதிரிகளையும கவர்ந்தது. 

கடலில் வாழும் பெரிய பிராணிகளுக்கு கடலில் வாழும் சின்ன பிராணிகள் தான் ஆளரம், தெரியுமா? பெரிய மீனுக்கு சின்ன மீன் இந்த மாதிரி, இப்பிக்கும் இந்த மாதிரி எதிரிகள் உண்டு – கடல் நண்டு, நக்ஷத்திர மீன், தட்டை மீன் முதலியன. 

குண்டு முத்து மற்ற எல்லா இப்பிகளைப் போலவே கோட்டையாகத் தான் இருந்தது. கோட்டை எவ்வளவு பத்திரமான இடமாக இருந்த போதிலும் கோட்டையின் மீது படை எடுப்பு நடந்ததென்று சரித்திரத்தில் படித் திருக்கிறீர்கள் அல்லவா? குண்டு முத்துக் கோட்டை யைக் கைப்பற்ற பல எதிரிகள் காத்திருந்தார்கள். படை எடுக்கும் திட்டத்திற்கு பல தந்திரங்களைப்பற்றி எண்ணு வார்கள். இப்பியின் தலைவாசல் திறந்திருக்கும் பொழுது கெட்ட எண்ணம் கொண்ட விருந்தாளிகளைப் போல் நுழையலாமா என்று எண்ணுவார்கள். ஆனால் வேறு சிலர் வெளியே இருந்தபடியே குண்டு முத்துவின் சதையை உறிஞ்சிப் பார்ப்பதுண்டு. 

அந்த மாதிரி எதிரி ஒரு தடவை குண்டு முத்துவின் ஓட்டில் துளை போட்டுப் பார்த்தது. குண்டு முத்து சும்மா இருக்கவில்லை. துளை போட்டு முடிப்பதற்குள் குண்டு முத்து உள்ளே சுவர் எழுப்பி துவாரத்தை அடைத்துக் கொண்டே வந்தது. சுவர் கட்ட நமக்குத் தான் கல், மண், காரை, வண்டி தேவை. இப்பிக்கு இவை எதுவும் தேவை இல்லை. ஒருவிதமான திராவ கத்தை சுரக்கச் செய்யும் சக்தி இப்பிக்கு உண்டு. அந்த திராவகம் சுரந்தவுடன் கெட்டியாக இறுகிவிடும் இந்த மாதிரி சுவரை எழுப்பி குண்டு முத்து தன்னைப் பாது காத்துக் கொண்டது. எதிரி தோற்றுப் போய் ஓடி விட்டது. 

இந்தக் கதை ஓரு கடல் நண்டுக்குத் தெரிந்தது. அப்படியா சேதி, நான் என்ன செய்கிறேன் பார் என்று அது கிளம்பிற்று. அதற்கு கொஞ்சம் தந்திரம் தெரி யும். எப்படியாவது இப்பியின் உடலுக்குள் தலைவாசல் வழியாக புகுந்து விட வேண்டுமென்று அது முடிவு செய்தது. 

ஆகையால் ஒரு நாள் கடலடியில் தண்ணீர் சுழ லொன்று புரண்டு ஓடிச்சென்றபொழுது, இந்த நண்டு தெப்பத்தைப் போல் அதில் மிதந்து சென்றது. சூழல் போகும் வேகத்துடன் வேகமாய் நண்டு சுழலும் குண்டு முத்துவின் தலைவாசலில் மோதி உள்ளே புகுந்துவிட் டன. தண்ணீரை சமாளிக்க குண்டு முத்துவுக்குத் தெரியும். தண்ணீரை வெளியேற்றிய பிறகு தான் சுழ லுடன் கடல் நண்டும் கோட்டைக்குள் புகுந்து விட்டதை அது கவனித்தது. நண்டுக்கோ இப்பியின் தள தளவென்ற மாமிசத்தைக் கண்டதும் நாக்கில் ஜலம் ஊறிற்று 

நண்டு தனக்கு எதிரி என்று குண்டுமுத்துவுக்கு தெரியும். ஆகையால் உடனே தலை வாசல் கதவை மூடிவிட்டது. 

கடல் நண்டுக்கு தனக்கு ஏற்பட்டிருக்கும் அபாயம் பற்றி எதுவும் தெரியாது. குண்டு முத்துவின் சதையை எந்த வாகாய்த் துண்டு போட்டு உண்ணலாம் என்று எண்ணிக்கொண்டே தன்னுடைய இரு முள் கிடுக்கி களையும் ஒன்றன் மீது ஒன்றைத் தேய்த்துக் கூராக்கிக் கொண்டிருந்தது. இடுக்கிகள் கூரானவுடன் சதையை எட்டுவதற்காக நண்டு நகர முயன்றது. ஆனால் கால்களை அசைக்க முடியவில்லை. கால்கள் ஒருவித பசையில் ஒட்டிக்கொண்டு விட்டன. இன்னம் அந்த மாதிரி பசை வந்து கொண்டேயிருந்தது. பசை கெட்டிப்பட்டு கால் களை அசைய முடியாமல் செய்தன. உடனே தன் கிடுக்கி களின் உதவியால் கால்களைப் பெயர்த்தெடுத்து வைக்க லாம் என்று நினைத்து கிடுக்கிகளைக் கால் மீது பாவிற்று அவ்வளவு தான். கிடுக்கிகளும் பசையில் ஒட்டிக் கொண்டன; அவற்றையும் எடுக்க முடியவில்லை. நண் டின் ஆசையில் மண் விழுந்து விட்டது. இப்பியின் மாமிசத்தைத் தின்ன அதன் கோட்டைக்குள் நுழைந்த நண்டு இப்பொழுது அங்கே கைதியாகிவிட்டது. கைதி யான முக்கால் மணி நேரத்திற்குள் நண்டு இறந்து விட்டது. 

குண்டுமுத்துக்கு தன் கோட்டையைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியுமே ஒழிய கோட்டைக்குள் எதிரி சிக்கி செத்தால் எதிரியை வெளியே எடுத்தெறியத் தெரியாது. எனவே வந்த நண்டின் சவத்தை அப்படியே வைத்துக் கொண்டு குண்டு முத்து வேறு கதியின்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்து கொண்டு வந்தது. 

அதுவரை குண்டு முத்து கடல் எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டே வந்துவிட்டது. ஆனால் பகுத்தறிவுள்ள மனிதர்கள் தங்களுக்கு எதிரிகளாக பூமி யில் வாழ்வது குண்டு முத்துவுக்குத் தெரியாது. 

ஒரு நாள் கடலடியில், முத்துப் படுகையில் ஏதோ கலவரம் போலிருந்தது. மறு நிமிஷம் குண்டு முத்தை யும் அதைப் போன்ற இப்பிகளையும் எங்கோ வெளிச்ச மான இடத்துக்குத் தூக்கிக் கொண்டு போவது போல் இருந்தது. கடைசியில் குண்டு முத்தையும் அதன் உற வினர்களையும் தண்ணீரில்லாத கட்டாந்தரையில் கொண்டு வந்து போட்டார்கள் என்பது தான் தெரிந் தது. உயிர் துடிக்க ஆரம்பித்துவிட்டது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் குண்டு முத்துக்கு ஒரே அடியாக இருட்டிவிட்டது. குண்டு முத்து இறந்துபோயிற்று 

குண்டு முத்தை போட்டிருந்த இடம்தான் தூத்துக் குடியில் முத்துக்களை ஏலம் போடும் இடம் இப்பிகளை சார்க்கார் அதிகாரிகள் ஏலம் கூறிக்கொண்டிருந்தார்கள். வியாபாரிகள் குப்பல் குப்பலாக வாங்கிக் கொண்டிருந் தார்கள். 

தூத்துக்குடிக்கு உல்லாசப் “பிரயாணமாக ஆசிரியர் கள் மாணவர்கள் கோஷ்டி ஒன்று வந்திருந்தது. முத் துக்குளிப்பை பார்த்துவிட்டு அவர்கள் முத்துக்குப்பல் ஏலம் போடும் இடத்துக்கு வந்தார்கள். “மாணவர் களே இப்பொழுது ஒரு இப்பியை உடைத்து உங்களுக் குக் காட்ட ஏற்பாடு செய்கிறேன். ஒவ்வொரு இப்பி யில் நல் முத்து இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இந்த இப்பியில் இருந்தால் உங்களுக்கு அதிருஷ்டம். இப்பியின் வயிற்றில் நல் முத்து எப்படிப் பொதிந்து கிடக்கிறதென்பதை நீங்களே பார்த்துக் கொள்ளலாம். பரீட்சையில் கேள்வி வந்தாலும் வரும்” என்று ஒரு ஆசிரியர் மாணவர்களுக்குத் தெரிவித்தார் மாணவாகள் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். 

குப்பல் ஏலம் எடுத்த வியாபாரியினுடைய வேலை யாள் ஒரு இப்பியை எடுத்து, கண்மூடி கண் திறப்பதற் குள் உடைத்துப் பிரித்து மாணவர்கள் முன்பு வைத் தான். அதிருஷ்டவசமாக ஒரு அழகிய முத்து நடுவில் இருப்பதைக் கண்டதும் மாணவர்கள் மகிழ்ச்சியும் பரபரப்பும் அடைந்தனர். மறுநிஷம் முத்துக்கருகில் ஒரு நண்டு உறைந்து போயிருப்பதைக் கண்டு திகைப்படைந்தனர். “இப்பி வயிற்றில் ஈண்டு எப்படி வரும் என்று மாணவர்கள் வேலையாளைக் கேட்டனர். அவன் விழித்தான். ஆசிரியரைக் கேட்டார்கள். அவர் விழிக்கவில்லை ஆனால் நேரடியாக விளக்கமும் தர வில்லை. 

ஆசிரியர் சொன்னார்: கிளிமூக்கு மாம்பழம் சாப்பிட்டிருப்பீர்களே. கொட்டை நடுவில் கருப்பாகத் துளைகள் இருப்பதைப் பார்த்து சில சமயம் எறிந் திருக்கிறீர்களல்லவா? மாம்பூவாக இருந்தபொழுது உள்ளே புகுந்த வண்டு வெளியே வராமல் அங்கே இருந்து விடுவதுண்டு. பூ பிஞ்சாகிக் காயாகி பழமாகும் மட்டும் அது உள்ளேயே கிடக்கும் அத்தனைக் காலம் வண்டால் உயிரோடிருக்க முடியுமா? வண்டு இருந்த இடத்தில் மாம்பழக் கதுப்பு சரியாக அமையாததுதான் அந்தத் தொளைகள், அந்தக் கருப்பு- புரிந்ததா? என்றார். புரிந்ததென்று பாதிபேர் தலையாட் டினார்கள். ஒருவருக்குமே தெரியாத ஒன்றிருந்தது அவர்களுக்குத் தெரியாது. குண்டுமுத்துதான் அந்த இப்பி என்று ஒருவருக்கும் தெரியாது. 

– 1934 முதல் 1968 வரையில் ஹனுமான், சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளில் வெளியானவை ஆகும்.

– காக்கைகளும் கிளிகளும், முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *