கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2026
பார்வையிட்டோர்: 6,423 
வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 13

கடமைக்கு ஒரு பூச்செண்டை வாங்கி வந்து கொடுத்துவிட்டு, சம்பிரதாயமாய் பேசிவிட்டுச் சென்ற தாய் மாமன் கணேசனை சங்கமேஸ்வரனோடு ஒப்பிட்டது அவள் மனசு.

கணேசன் கொடுத்த பூச்செண்டுக்கும், சங்கு கொடுத்த ‘கர்ப்பக் கிருஹம்’ கதைக்கும் நடுவே இருக்கும் மடுவுக்கும் மலைக்குமான வித்தியாசம் அவளை ஆட்கொண்டது.

இதோ, இந்தப் பூச்செண்டை தூக்கி ஓரமாய்ப் போட்டாயிற்று. அவ்வளவுதான் அதற்கு மதிப்பு.

ஆனால் அந்தக் கதையைப் படித்தபின் மனதில் ஏற்பட்ட உணர்வுகளும், உந்துதல்களும் அவளைச் செலுத்திய அந்த நாளை நினைக்கும்போதே மனம் நிறைந்தது.

ஏதோ ஒரு விவரிக்க முடியாத உணர்வினால் உந்தப்பட்டு, குற்ற உணர்வு கலந்த பயத்தோடு, தன் ஸ்டேட்டஸ் குறித்த யோசனைகளும் ; அதைத் தாண்டிச் செல்லும் அசட்டுத் துணிச்சலையும் மனசில் போட்டுக் குழப்பிக்கொண்டே, சங்கமேஸ்வரனை முதன் முதலில் நூலகத்தில் சந்திக்கச் சென்ற நாள்… அப்பப்பா… அதை இப்போது நினைத்தாலும் குலை நடுங்கியது.

‘கருப்ப – கிருஹம்’ கதையை தன் முன் வைத்துவிட்டுச் சென்றபிறகு, மயூரிக்குள் ஏற்பட்ட உணர்வு மயக்கங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாதெனில் அது மிகையில்லைதான்.

சங்கமேஸ்வரனை தனிமையில் சந்திக்க வேண்டும் என்ற வேட்கை எழுந்தது மயூரிக்குள்.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தாள்.

வேட்கையைத் தீர்த்துக் கொள்ளும் ஆர்வம் வந்துவிட்டால் மனிதர்கள் மனதில் கபடு வந்து விடும். கபட்டுத் தன்மையை தொடர்ந்து நிலை நிறுத்த கள்ளம் கபடோடு கை கோர்த்துக் கொள்ளும். பிறகென்ன.. கள்ளம் கபடமே இல்லாது போல பேசி நடிக்கக் தொடங்கி விடுவார்கள்.

இந்தக் கணம் மயூரிக்குள் ‘கபடு’ புகுந்துவிட்டது. நொடிக்கு நொடி வளர்ந்து விருட்சமாய் உயர்ந்து கிளைப் பரப்பி நின்றது..

உள்ளத்தின் கள்ளத்தை உணர்வில் கலக்கத்தான் எத்தனை எத்தனை கபட நாடகம் ஆடுகிறான் கண்ணன்.

மகாபாரதக் கதையை நுணுகிப் பார்த்தால், அதன் போக்கு முழுவதும் ஒரு கபடம் ஓடுவது தெரிகிறதே.

கீதையை உபதேசித்த கண்ணனை இந்த உலகம் கபடன் என்று சொல்வதில்லையே. ; தெய்வமாகத்தானே தொழுகிறது.

அடுத்தடுத்து நடைபெறப் போகிற அனைத்துக் காட்சிகளையும் நன்கு அறிந்தவர்தானே கண்ணன். கண்ணன் மனம் வைத்திருந்தால் எத்தனை எத்தனையோ வேண்டாத நிகழ்வுகளைத் தவிர்த்திருக்கலாமே!

பஞ்சபாண்டவர்களையும், கௌரவர்களையும், பகடைக் காயாய் உருட்டி, குருக்ஷேத்ரத்தில் எதிரெதிரில் நிறுத்தி, கபடத்தின் உச்சக் கட்டமாய் மனச்சஞ்சலத்தை உருவாக்கி அந்தச் சஞ்சலத்திற்கு ஆறுதல் கூறுவதுபோல, மனித மனத்தின் மாசுகளைத் துடைக்கும் பகவத் கீதையை உபதேசிக்கிறானே…!

கள்ளத்திற்கு அடுத்த படி கபடு.

கபடு புகுந்த பிறகு, சுலபத்தில் சமநிலைக்கு வருவதில்லை.

புகுந்தது, கள்ளம் என்பது தெரிந்தபின் அதிலிருந்து சுலபமாக விடு பட்டுவிடலாம் என்பதற்குச் சாட்சியாகத்தான், திருஞான சம்பந்தர், தோடுடைய செவியனை தரிசித்து ஞானம் பெற்றபின் ‘உள்ளம் கவர் கள்வன்’ என்றாரோ?

கபடம்தான் தன்னை முற்றிலும் உணரவும் வைக்கிறது;

உள் முகமாகப் பார்க்கவும் வைக்கிறது;

தன்னுள்ளேப் புதைந்துக் கிடக்கும் அத்தனை எண்ணங்களையும் செயல்படுத்தத் தூண்டுவதோடு, அதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொடுக்கிறது.

“தாயே யசோதா, உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி…”

கோபியர்களின் நோக்கம் கண்ணனைத் துதி பாடுவது மட்டுமல்ல.

ஜாலம் பிறரை ஈர்க்கும்.

ஈர்த்த பின்தான் அது ஜாலம் என்று தெரியும்.

ஜாலமெனத் தெரிந்தபின் அதிலிருந்து விடுபட நினைத்தாலும் முடியாமல் தவிப்பதே மனித இயல்பு;

கள்ளம்.

அதைத் தொடர்ந்து கபடம்..

இறுதி கட்டமாக ஜாலம்…

சங்கமேஸ்வரன் ஜாலம் காட்டுகிறான் இப்போது.

ஜாலத்தால் ஈர்க்கப்பட்டு விட்டாள் மயூரி.

விரும்பியதைப் பெறவேண்டும் என்ற வேட்கையை போகிற போக்கில் அடைய விடாமல் செய்கின்றன உலகியல் கோட்பாடுகள்.

உலகம் ஏற்காதபோது, தேவையானதைப் பெற மனதில் கள்ளம் புகுந்து விளையாடுகிறது.

கள்ளத்தை நேரடியாய் பிரயோகப் படுத்தும்போது, கள்வனென்ற எதிர்மறைப் பட்டம் சுமக்க வேண்டியிருக்கிறது.

புத்தியின் சாதுரியத்தால், கள்ளத்தை, கபடநாடகமாக மாற்றி ஜாலம் புரியும் போது, நேர்மறையாக உறுமாறி விடுகிறது.

டிபார்ட்மெண்டில் பலரும் இருந்தாலும் கபடம் நிறைந்த மயூரி, தான் மட்டும் துறையின் ஓய்வரையில் ஏகாந்தமாக இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டாள்.

ஆசை வெட்கமறிவதில்லை.

தனிமையில் மனம் ஒருமுகப் பட்டது.

மரம், கிளைகள், இலைகள், பழுப்புகள், சமித்துக்கள், பின்னணியாய் அரும்புகள், மொட்டுக்கள், புஷ்பங்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் , நீல வானம், பறவையின் சிறகுகள், அதன் மெல்லிய கால்கள், குறுகுறுக்கும் கண்கள்… எதுவும் கண்ணில் படாது பறவையின் நெற்றிப் பொட்டு மட்டுமே தெரிந்த, அர்ஜூனின் ஏகாக்ர பார்வையுடன் இருந்தது மயூரியின் தற்போதைய மனநிலை.

ஒருமுகப் பட்ட மனசுக்கு வெற்றி நிச்சயம்.

பாதைகள் எல்லாம் தெளிவாகப் புலப்படத் துவங்கின மயூரிக்கு.

கையில் அகப்பட்ட ஒரு புத்தகத்துடன், நூலகம் நோக்கிச் நடந்தாள் மயூரி.

சங்கமேஸ்வரனிடம் நூலக விஷயமாகப் பேசவேண்டும் என்ற சாதாரண எண்ணமாக இருந்தால், இத்தனை முஸ்தீபுகள் தேவைப்பட்டிருக்காது.

சந்திக்கும் நோக்கத்தில் கபடம் இருந்ததால், ஒரு கள்ளத்திற்கு இன்னொரு கள்ளம் என்று அண்டை கொடுத்துக் கொண்டே இருந்தது

மயூரி நூலகத்துக்குச் செல்வதை மொத்தக் கல்லூரியும் விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது அவளுக்கு.

‘ஏன் நான் நூலகத்துக்குப் போகக் கூடாதா?

எல்லாரும்தானே போகிறார்கள்..

நான் இந்தக் கல்லூரியின் விரிவுரையாளர்.

நான் போவதில் என்ன தப்பு?’

செய்யும் செயல்கள் அனைத்திற்கும் தன்னளவில் ஞாயம் கற்பித்துக் கொண்டது மனசு.

‘மயூரி நீ அங்கே போகும் நோக்கம் என்ன?’

மயூரியின் எண்ணத்தித்திடம், கேள்வி கேட்டது புத்தி.

புத்தியின் கேள்வியை அலட்சியப்படுத்தினாள் மயூரி.

மயூரி யைச் சுருக்கி மயூ என்று விளித்தான் சங்கமேஸ்வரன்.

மயூரியும், மயூவும் இருவராகி இரு வேறு குணக் கூறுகளுடன் போராடத் தொடங்கிவிட்டனர்.

மயூவின் வலிமைக்கு முன் மயூரி மண்டியிட வேண்டியிருந்தது.

‘சங்கமேஸ்வரன், நூலக உதவியாளர் என்ற பார்வை மட்டும் உனக்கு இருந்திருந்தால், கல்லூரிக்கு வந்து எட்டு மாத காலமாக அவரை நீ போய் பார்த்து வரவில்லையே ஏன்?

இந்தனை காலமாய் நீ யாரோ, அவர் யாரோ;

அவர் வந்து உன்னைச் சந்தித்தபின் அவரின் ஏதோ ஒன்றில் நீ விழுந்து விட்டாய் மயூரி;

உன்னை மீறி நீ செயல் பட்டுக் கொண்டிருக்கிறாய் மயூரி. நீ பொது நூலகத்துக்குப் போகாதே, டிபார்ட்மெண்டுக்குத் திரும்பு.

அடுத்தாற்போல உன்னை வந்துச் சந்திக்கும்போது, அவர் கொடுத்த கதைப் புத்தகத்தை அவன் முகத்திலேயே தூக்கி அடித்துவிட்டு அவரை விட்டு விலகு ;

உன் ஸ்டேட்டஸ் என்ன? அவன் ஸ்டேட்டஸ் என்ன? ; நீ அஸிஸ்டெண்ட் ப்ரொபஸர், அவன் நூலகத்தில் கிடக்கும் சாதாரண அலுவலக உதவியாளன் ; இருவருக்கும் எத்தனை ஏணி வைத்தாலும் எட்டாது.

புத்தி, விடாமல் மயூரியை எச்சரித்துக்கொண்டே இருந்தது.

ஸ்டேட்டஸ் பார்த்து வருவதில்லையே காதல்.

வாதம் செய்த புத்தியை விதண்டா வாதம் பேசி அடக்கியது மனசு.

“மயூரி. இது கல்லூரி. இளைஞர்கள் தங்கள் அறிவை விரிவு செய்துகொள்ளக் கூடும் இடம். இங்கே இப்படிப்பட்ட முரண்தொடைகள் கூடாது. பொறுப்பான ஆசிரியர் பதவி உன்னுடையது.

இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பெரிய பொறுப்பில் இருக்கும் நீ இப்படிச் சபலத்துக்கு ஆளாகித் தடம் மாறினால் உன்னை அது கேவலப்படுத்தி விடும் மயூரி. எச்சரிகை செய்கிறேன் .

வக்ர குணம் கொண்ட மாணவர்கள் உன்னைப் பற்றி கரிக்கோடுகளால் விமர்சிப்பார்கள் என்பதை அறிவாயா நீ ?

உன் செயலால் உன் குடும்ப கௌரவம் மட்டும் அல்ல, அவன் வாழ்வும் சீர்குலையும். எச்சரிக்கிறேன்.’

புத்தி விடாமல் அனைத்துக் காரண காரியங்களையும் உணர்த்தி, மயூரியை எச்சரிக்கை செய்தது.

“நான் கேவலமானவள் இல்லை.. நூலக உதவியாளரான சங்கமேஸ்வரனை சாதாரணமாகச் சந்திக்கத்தான் செல்கிறேன்.” என்று புத்தியோடு எதிர் வாதித்தது அவள் மனது.

புத்தி விடவில்லை. “நீ கேவலமானவளில்லைதான். ஒத்துக் கொள்கிறேன். எட்டு மாத காலமாக அவன் யாரோ நீ யாரோ என்று இருந்தாய் அல்லவா..?” பொட்டிலடித்தாற்போல் கேட்டது.

“ஆமாம்…”

“இன்று மதியம் அவன் வந்து உன்னிடம் ஒரு சிற்றிதழைக் கொடுத்த பின், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு காரணமே இல்லாமல் அவனைச் சந்திக்க ஆவலுடன் புறப்பட்டுப்போகிறாயே ஏன்?”

“………………..”

“ஏன் மௌனம் காக்கிராய் மயூரி. ம்… காரணம் சொல்லு?”

புத்தி சற்றே அதட்டிக் கேட்டதும், காரணம் ஏதும் சொல்லத் தெரியவில்லை மயூவால்.

“அ….அ……………….”

ஏன் தடுமாறுகிறாய் மயூரி ?; நீ நோக்கமின்றிச் செல்லுவதை இப்போதாவது உணர்கிறாயா..? ; நோக்கமின்றிச் செய்யப்படும் எதுவும் வெற்றி பெறாது என்பது உனக்கேத் தெரியுமே..?

நீ தடம் மாறுகிறாய் என்று இப்போதாவது உணர்ந்துகொள்.”

இப்போது மயூவின் மனது விழித்துக் கொண்டது.

“நான் தடுமாறவில்லை. அங்கே செல்வதற்குப் பல காரணங்கள் உண்டு என்னிடம்.

“முதல் காரணம் சங்கு’வின் சிநேகிதத்துக்காகச் செல்கிறேன்.”

“அவன் ஸ்நேகிதத்துக்கு இப்போது என்ன அவசரம், அவசியம் ?”

மயூரியின் புத்தியும், மனசும் மாறி மாறித் தர்க்கம் புரிந்து கொண்டிருந்த நேரத்தில் சீனியர் ப்ரொபசர் குஞ்சிதபாதம் அங்கு வந்தார்.

“ஆஃடர்-நூன் உங்களுக்குக் க்ளாஸ் ஏதும் கிடையாதே. வீட்டுக்கு போறதானா போங்களேன்..!’னு சொல்ல வந்தேன். நீங்களே வீட்டுக்குத்தான் கிளம்பறாப்ல இருக்கு..!”

“வீட்டுக்குக் கிளம்பலை சார். லைப்ரரீக்குப் போறேன்…!” என்றாள் மயூ.

“நீங்க லைப்ரரிக்குப் போவானேன். டிபார்ட்மெண்ட் லைப்ரரீல இல்லாதது அங்கே என்ன இருக்கு? அப்படியே ஏதாவது வேணும்னா, சங்கமேஸ்வரன வரச் சொல்லி அவன் கிட்டேக் குறிச்சிக் கொடுத்தா, கொண்டு வந்து தரான்.”

மனசு மறுகியது மயூரிக்கு. சங்கமேஸ்வரன் என்ற அறிவு ஜீவியை எவ்வளவுத் தரக்குறைவாகப் பேசுகிறார்..?’

“………………..” –அமைதி காத்தாள் மயூரி.

இவனுக்குப் பதவி தந்த பந்தாவில் , அதிகாரம் தந்த திமிரில், அகங்காரத்தில். ஆணவத்தில் பேசுகிறான்..’ – மயூரியின் அமைதியின் உள்ளடக்கம் இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

“நீங்க அங்கேயெல்லாம் போயி உங்க கௌரவத்தை குறைச்சிக்காதீங்க. உங்க தகப்பனாருக்கு இதெல்லாம் கொஞ்சம் கூடப் பிடிக்காது. ஓ ஏ கேடர்ல உள்ளவாளை நிமிந்துகூடப் பார்க்க மாட்டார் அவர்.”

‘………………..’ – ‘அகங்காரம் … பவித்ர அகங்காரம் … இது ஒழிந்தால்தான் இந்த தேசம் உருப்படும்..’ என்று நினைத்துக் கொண்டாள்.

பேச்சின் போக்கு இயல்பாக மாறியது.

அரியர் சாங்ஷன் ஆனதை அப்பாக் கிட்டேச் சொல்லிட்டு வந்தேன். அவர் மட்டும் இல்லேன்னா இழுத்துக்கிட்டுத்தான் கிடக்கும் அரியர்.

“………………..” – இதற்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக இருந்தாள்.

சங்குவைச் சங்திக்க ஆர்வமாய்ச் செல்லும் நேரத்தில் இந்தக் குறுக்கீட்டை மயூரி சிறிதும் விரும்பவில்லை. வேறு வழியின்று அவர் சொல்வதைக் காதில் வாங்கிக் கொண்டாள்.

“அப்பாவைப் பார்த்து தேங்க்ஸ் சொன்னப்போ, இன்னொரு சேதியும் சொல்லிட்டு வந்தேன்; செய்யறேன்னார். “என்ன சேதின்னு கேளுங்க..?” – என்று தூண்டினார்.

“………………..” – என்ன சேதி என்ற பார்வையாலேயே வேண்டா வெறுப்பாகக் கேட்டாள் அவள்.

“யுனிவர்சிடி ‘வைவா பேனல்’ல என்னை ஒரு கேண்டிடேட்டா புட்டப் பண்றேன்னு சொன்னார். ஒரு சிட்டிங் போயிட்டு வந்தா சுளையா ஆறாயிரம் ஏழாயிரம் கிடைக்கும். ஹி…ஹி..;

அப்பா ஞாபகம் வெச்சிப்பார். நீங்களும் சமயம் வரும்போது ரிமைண்டர் கொடுக்கணும்..”

வழக்கம்போல் பல்லிளித்தார் குஞ்சிதபாதம்.

வாய்த் துடுக்காய் பேசத் தோன்றியது மயூரிக்கு, ஆனால் தன்னை அடக்கிக் கொண்டு, “சொல்றேன் சார்.” என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.

“நீங்க டிபார்ட்மெண்டுக்குத் திரும்புங்க. நான் இன்டர்காம்ல சொல்லி சங்கமேஸ்வரனை வரச் சொல்றேன்.”

“ஏன் அவரைச் சிரமப்படுத்தணும். எனக்கு ஃப்ரீ அவர்தானே நானே போறேன்.. உங்க உதவிக்குத் தாங்க்ஸ் சார்.” என்று நடந்தாள் மயூரி.

சீனியர் ப்ரொபசர் குஞ்சிதபாதம் மனதில் படை வீரன் ஒத்தெல்லோவும், ‘அரசவை செனட் உறுப்பினரின் மகளான’ டெஸ்டிமோனாவும், வந்து போனார்கள்.

அத்தியாயம் – 14

குஞ்சிதபாதத்தின் மனதில் ஓடிய சந்தேக ரேகைகளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது மயூரியால்.

“உடனே குஞ்சிதபாதத்திடம், உண்மையைச் சொல்லிடு. இல்லையானால் அவராக எதையாவது கொளுத்திப் போட்ருவார்..” – மயூரியை எச்சரித்தது உள்ளுணர்வு.

அதோடு மட்டுமல்லாமல், ‘Truth is beauty, Beauty Truth’ என்ற ஜான் கீட்ஸ்’ன் வைர வரிகளும் அவள் முன் பிரகாசமாய்ப் பளிச்சிட்டன.

பத்துத் தப்படிகள் சென்றுவிட்ட குஞ்சித பாதத்தை அழைத்தாள் மயூரி.

“சார்…!”

“சொல்லுங்கம்மா?”

“இன்-ஃபாக்ட் நான் வேற ஒருக்காரணமா, சங்கமேஸ்வரனைப் பார்க்கப் போறேன் சார்… !”

“………………..” ? என்ன காரணம் என்று கேட்டது குஞ்சிதபாதத்தின் உடல் மொழி.

‘சங்கு’ங்கற புனைப்பெயர்ல கதை, கவிதை, கட்டுரை யெல்லாம் எழுதறார்னு ஸ்டூடண்ட்ஸ் அடிக்கடிச் சொல்லுவாங்க. எனக்கும் படைப்பிலக்கியத்துல நாட்டம் உண்டு…. அதான் அவரைப் பார்த்து…”

“பார்த்து..?”- என்று அந்தாதி போல் முடித்த இடத்தைப் பிடித்துக் கேள்வியாக வளைத்துக் கேட்டார் குஞ்சிதபாதம்.

“இன்னிக்குத்தான் அவரோட சிறுகதை ஒண்ணு படிக்கக் கிடைச்சது, வாசிச்சேன். அதான், நேர்ல அவரைப் பாராட்டிட்டு வரத்தான் போறேன் சார்.”

‘ம்…ம்… கண்டுபிடிச்சிட்டேன், உன் மனசுல இப்படி ஏதாவதுதான் இருக்கும்னு, ரெஃப்ரன்ஸ்… அது – இதுன்னு என்னென்னமோ நீ உளரும்போதே, உன் திருட்டுத்தனம் புரிஞ்சிடுச்சு. நடக்கட்டும், நடக்கட்டும்;’ – என்று அற்பத் தனமாய் அழுத்திச் சொன்னார்.

மயூரியைப் பதில் பேச்சுப் பேச விடாமல் தொடர்ந்து குஞ்சிதபாதமே பொரிந்து பொரிந்துப் பேசினார். புகைந்துப் புகைந்து கரித்தார்.

“மயூரி, அந்த சங்கமேஸ்வரன் ஒரு எக்ஸெண்ட்ரிக்..” என்று ஏளனக் குரலில் சொல்லி, எள்ளி நகையாடினார்.

“எல்லாரும் படிக்கற வெகுஜனப் பத்திரிகைகள்’ல அவன் எதும் எழுதமாட்டான்; ‘ஓணான்’, ‘வேலி’, ‘பல்லி’, ‘பாச்சை’, ‘ழ’, ‘சீ’, ‘தூ’.. இப்படி ரெண்டாம் பேருக்குத் தெரியாம வந்துட்டு, துர்மரணம் அடையற பத்திரிகைகளுக்கு எழுதுவான்; – என்று சிறுமைப் படுத்தினார்.

காலேஜ் ஸ்டாஃப் யாரும் அவனண்ட பேசவே மாட்டாத் தெரியுமோ?; – என்று தீண்டாமை பேசினார்.

லைப்ரேரியன் கூட இன்னிக்கு லீவு. அவன் மட்டும்தான் இருக்கான். பாராட்டோ, சீராட்டோ, ஏதோ நடத்து.. போ..” – நமட்டுச் சிரிப்புச் சிரித்து நான்காம் தர கமெண்ட் கொடுத்தார்.

செனட் மெம்பரின் மகள் என்பதாலும், அவரால் நிறையக் காரியங்கள் ஆகவேண்டி உள்ளதாலும், மயூரியை மிகவும் மரியாதையாக வாங்கோ போங்கோ என்று அழைத்துக் கொண்டிருந்த குஞ்சிதபாதம், இப்போது திடீரென்று, தன்னை ஒருமையில் பேசியதும் துச்சமாகவும் தரக்குறைவாகவும் பேசியதும் மனத்தாங்கலாய் இருந்தது மயூரிக்கு.

இப்போது, மயூரியின் புத்தி விழித்துக் கொண்டது.

‘அவசரப்பட்டு இவரிடம் உண்மையைச் சொல்லிவிட்டோமோ?’

‘ஒருவேளை…, குஞ்சிதபாதம் சங்கமேஸ்வரனைப் பற்றிச் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்குமோ..? ;

‘இன்று அங்கே போவதைத் தவிர்த்து, டிபார்ட்மெண்ட்டுக்கேத் திரும்பி விடுவோமா?

திடீரென புத்தி விழித்துக் கொண்டு குஞ்சிதபாதத்திற்குச் சாதகமாகப் பேச, நிறைய குழம்பினாள் மயூரி.

புத்தியின் போதனைகளைப் பின்னால் தள்ளிவிட்டு, முன்னே வந்தது மனசு.

“மயூரி… இத்தனை நாளும் இல்லாமல், உன்னைப் பற்றிப் பூசி மெழுகி வைத்திருக்கும் குலப் பெருமைகளை எல்லாம் ஏன் இந்தக் கணத்தில் பெரிதாக நினைக்கிறாய்?

போலி கௌரவம் என்று இத்தனை நாளும் நினைத்ததை இந்த நொடியில் நீ மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம்தான் என்ன ? ;

உன் அப்பாவின் அதிகார நிழலில், அம்மாவின் புடைவைத் தலைப்பிலேயே எத்தனை நாள்தான் நீ மறைந்து மறைந்து வாழ்ந்து கொண்டிருப்பாய் ? ;

உன் சுயத்தை எப்பொழுதான் வெளியே காட்டப் போகிறாய்?

நீ இப்போது குழந்தையில்லை, அடல்ட் . இது உன் வாழ்க்கை.

உன்னைப் பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு முற்றிலும் உனக்கு உரிமை உண்டு.

குழம்பாதே . எடுத்த முடிவில் பின் வாங்காதே.

சங்கமேஸ்வரன் ஒரு முதல் தரமான இலக்கியவாதி, புரட்சிகரமான சிந்தனையாளர். சுயமரியாதை உள்ளவர் ;

அவராக உன்னைத் தேடி வந்து அறிமுகப்படுத்திக் கொண்டதனால், நீ அவரைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

போ ! அவர் எப்படி உன்னிடம் ஒளிவு மறைவின்றிப் பேசிவிட்டு வந்தாரோ, அதேப் போல, நீயும், வெளிப் பூச்சுக்களோ, தேவையற்ற சுற்றி வளைத்தலோ இன்றிப் தெளிவாக, வெள்ளையாகப் பேசிவிட்டு வா.

உனக்குள் அவன் புயலாய் நுழைந்துவிட்டான் என்பதை நீ மறுக்க முடியுமா?

அந்தப் புயலில் உன்னுள் இருந்த எத்தனையெத்தனையோ வேண்டாத விஷயங்களும், போலிப் பகட்டுகளும் அடித்து வீழ்த்தப் பட்டுள்ளன என்பதை இல்லை என்று மறுப்பாயா நீ?

உன் வாழ்வில் வசந்தம் பிறக்கும் நாள் இது.

“போ; யோசிக்காமல் போ” விடாமல் தூண்டித் துரத்தியது மனம்.

மலர் அலங்காரத்துடன், நூலகத்தின் முகப்பில் வைக்கப்பட்டக் கல்விக் கடவுளின் பாதத்தில் சிரித்தபடிப் படுத்திருந்தது வெள்ளைத் தாமரை, புன்னகையோடும் வெள்ளந்தியோடும் மயூரியை நூலகத்துக்கு வரவேற்றது.

‘டிஸ்ப்ளே – ஷோ-கேஸ்’ – ல் சமீபத்திய வாராந்திரிகள், மாதாந்திரிகள் எல்லாம் நேர்த்தியாக பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.

ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் உட்கார்ந்து கொண்டு படித்துக் கொண்டும் , புத்தக அலமாரிகளின் முன் நின்றுகொண்டு புத்தகம் புரட்டிக் கொண்டும், குறிப்பெடுத்துக் கொண்டும் நூலகம் பிஸியாக இருந்தது.

கண்ணாடி ஷோ-கேஸ்’ க்குள் பகட்டாக அமர்ந்திருக்கும் புத்தகங்களை கண்களில் தீராக் காதல் பொங்க நோக்கும் மாணவர்கள் ;

அந்தப் புத்தகங்களின் உள்ளடக்கத்தைப் படித்துப் பார்த்துப் வியந்து, பிரமிக்கும், மாணவர்கள்.

உள்ளடக்கத்தின் கனம் தாங்காமல் விழிக்கும் மாணவர்கள்.

உள்ளடக்கத்தின் யதார்த்தம் கனக்க, மருளும் மாணவர்கள்.

இப்படிப் பட்ட சூழல், அவள் கண்களுக்குக் காட்சிகளாயின.

ஒரு மாணவி, அட்டையில்லாத, மிகப் பழமையான ஒரு புத்தகத்தை தன் முன் வைத்திருந்தாள். அந்த நூலை நிதானமாக, கவனமாகத் திருப்பிப் திருப்பிப் பார்த்துப் படித்து, எதிரில் வைத்திருந்த குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.

‘உள்ளடக்கம் உயர்வாய் இருக்கும்போது, புத்தகத்தின் புற அழகையோ, அலங்காரங்களையோ யாரும் பார்ப்பதில்லையே.

உயர்ந்த உள்ளடக்கம் மிகுந்த புத்தங்களுடன் சங்கமேஸ்வரனை ஒப்பிட்டாள் மயூரி.

சங்கமேஸ்வரன் வந்துத் தன்னைக் காட்டிக் கொண்டதையும், பதிலுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள தான் செல்லுவதையும் பெருமையாக எண்ணிப் பார்த்தாள் மயூரி.

‘சங்கமேஸ்வரன் உள்ளடக்கமாய் வந்து உருவத்தைப் பார்த்துவிட்டுச் சென்றார், பதிலுக்கு உருவம் உள்ளடக்கத்தைப் பார்க்கச் செல்கிறது.’ – என்று தன் வருகையை கவித்துவமாக உய்த்து உணர்ந்து கொண்டாள் மயூரி.

ரீடிங் ஹால் கடந்து சென்றாள். ரெஃப்ரன்ஸ் பிரிவு .

ரெஃப்ரன்ஸ் பிரிவில் ஒரு மாணவனும், மாணவியும், மேஜையில் தங்கள் முன்னால் அகலமும், கனமுமான பெரிய புத்தகத்தைச் சாட்சிக்காக விரித்து வைத்துவிட்டு, ஒருவரோடு ஒருவர் ஒட்டி அமர்ந்தபடி ஒருவரையொருவர் விழுங்குவதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த மயூரிக்குப் பொறாமையாகக் கூட இருந்தது.

‘பூடகமான’ புதுக் கருத்துக்களுக்கும், வார்த்தைகளுக்கும், தெளிவாய் விடை கொடுப்பதுதானே ‘பார்வை’ நூல்கள்.

இங்கேயும் ஓசையின்றித் தன் பணியைத்தான் செய்துகொண்டிருக்கிறதோ?’ என்றுத் தோன்றியது மயூரிக்கு.

வார்த்தைகளோ, மொழிகளை உள்ளடக்கிய உரையாடல்களோ இன்றி, அமைதியாக ஒருவரை ஒருவர் நோக்கி, நுட்பமாய்ப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த அந்த காதலர்களைப் பார்க்கும்போது, கல்லூரிப் பருவத்தில் இதுபோன்ற பலவற்றை இழந்துவிட்டோமே என்று வருந்தினாளா?

நல்ல காலம், இதுபோலத் திசை மாறாமல் குதிரைக்கு லகான் கட்டியதைப் போல இருந்து, இந்த நிலைக்கு உயர்ந்ததை நினைத்து மகிழ்ந்தாளா..? – என்பதை அறிய முடியாத நிலையில் அவள் முகக் குறிப்புக் குழப்பமாய் இறுகியது.

சற்று நேரம், அந்தக் காதல் ஜோடியையேக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலத் தோன்றியது மயூரிக்கு.

அந்தக் காதல் ஜோடிகள் எவ்வளவு நேரம்தான் வாய்திறந்து பேசினாலும், எத்தனை பக்கங்கள்தான் வரிந்து வரிந்து எழுதினாலும், பார்வையால் அவர்கள் பரிமாரிக் கொள்ளும் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்திவிட முடியுமா?;

இது போன்ற காதல் ஜோடியை சமூகம் ஏன் எப்போதும் குற்றவாளிகளாகவேப் பார்க்கிறது?

ஏன்? எனக்கேக் கூட ‘சங்கு’வின் சந்திப்பிற்கு முன் இப்படிப்பட்டக் கண்ணோட்டம் இருந்ததில்லையே. இப்படியான பற்பல சிந்தனைகளோடு கடந்து போனாள் மயூரி.

அடுத்த ஹால் பீரியாடிக்கல்ஸ் செக்‌ஷன்.

அதற்கு அடுத்த பிரிவு டெக்னிகல் செக்‌ஷன். சங்கமேஸ்வரன் என்கிற சங்கு என்ற அறிவு ஜீவியின் இடம் அதுதான்.

புதிய வரவுகளை ‘ஆக்ஸஷன்’ பதிவேட்டில் முறையாகப் பதிந்து, புத்தகங்களில் நூலக முத்திரை இட்டு, நுலின் எண் , பதிவு செய்த நாள் எல்லாம் எழுதி, ISBN எண்களை வைத்துச் சரியான கேட்லாக்கிங் செய்து குறிப்பிட்ட பிரிவுக்குறிய எண்களை நூலின் பல இடங்களில் எழுதிப் பதிவு செய்து, உரிய பிரிவில், உரிய அலமாரியில் கொண்டுபோய் அடுக்குவது அவர் வேலை.

அந்த இடத்திற்கு வந்தாள் மயூரி.

நான் ஏன் ஒரு பயித்தியக் காரியைப் போல இங்கே வந்து நிற்கிறேன்…?

நான் ஏன், எதனால், எப்படி, எப்போது இப்படி மாறினேன்?

நான் மாறிய அந்த நொடி எது?

சங்கமேஸ்வரன் டிபார்ட்மெண்டுக்கு வந்து எதிரில் நின்ற நொடியா?

உன்னைத்தான் பார்க்க வந்தேன் என்று கம்பீரப் பார்வையுடன் சொன்னானே அந்த நொடியா?

ஸ்ரீ என்ற சிற்றிதழை மேஜைமேல் வைத்த நொடியா?

சடாரெனத் திரும்பிப் போனாரே, அந்த நொடியா?

அவர் எழுதிய கதையைப் படித்து முடித்த நொடியா?;

கதையைப் படித்தபின் அசைப் போட்ட நொடியா?

ஏதோ ஒரு நொடியில் தான் மனம் மாறியிருக்க வேண்டும்.

அந்த நொடியை விளக்க இந்த நூலகத்தில் புத்தகம் உண்டா?

புத்தகத்தில் எழுதிவிட்டால் அது எப்படி நுட்பமான உணர்வாக இருக்க முடியும்?

அப்படியானால் இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்ந்து மடிந்த, வாழ்கின்ற பலகோடிக்கணக்கானப் பிரஜைகளில், சில ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் எழுதிக் குவித்த எழுத்துக்களை பல ஆயிரக்கணக்கான மக்கள் படிக்கிறார்களே எதற்கு?

‘எதைத் தெரிந்துகொள்ளப் படிக்கிறோம்?

வாழ்க்கை சொல்லித்தராத எதை, இந்தப் புத்தகங்கள் சொல்லிக் கொடுத்து விட முடியும்?

எதை ஸ்தாபனப்படுத்த இதுபோன்ற ஸ்தாபனங்கள்?’

இப்படிக் கொத்துக் கொத்தாய் கேள்விக் கனைகள் தாக்கித் துளைத்தன மயூரியை.

தவித்தாள், துவண்டாள். தனக்குள் ஊடுருவிப் பார்த்தாள்.

‘நான் ஒரு ஆங்கில விரிவுரையாளர். அதனால் நான் ஆங்கில இலக்கியத்தில் கரைகண்டு விட்டேன் என்று அர்த்தமா?

நானே கரைக் காணாமல் அடுத்தவரை எப்படிக் கரை சேர்க்க முடியும்?

நான் எதைத் தெரிந்து கொண்டேன் என்பது தெரியாமலே, எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கும் பதவியில் அமர்ந்திருக்கிறேனே?’

இந்த நிலை எங்கே சென்று முடியப் போகிறது?

பிரபஞ்சத்தில் உள்ளும் வெளியுமாகப் பரந்து கிடக்கும் பொருண்மைகளை, அவரவர், அவரவருக்குப் பிடித்தமானவற்றைத் தெரிந்தெடுத்து, அதை அவரவர் வழியில் வியாக்கியானம் செய்துவிட்டுச் சென்றிருப்பதை, அடுத்தடுத்தத் தலைமுறையினருக்குக் கடத்தி, அதையே ஸ்தாபிக்கும் பம்மாத்துக்குக் காரணம் என்ன?

இந்த விஞ்ஞானி இந்த சூத்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டான். அதைத் தெரிந்து கொண்டு, நீ வேறு சூத்திரம் கண்டுபிடி’ என்று அறிவிப்பதற்காகத்தான் இத்தனை புத்தகங்களுமா?

முன்னவனின் வழித்தோன்றலாகத்தான் இருக்க வேண்டும் என்று இன்னவனைக் கட்டாயப்படுத்துதல் முறையல்லவே.

இருப்பது ஒரே வாழ்க்கைதான் என்றாலும் அதை வெவ்வேறு வாழ்க்கை போலக் கூறுகட்டி வைத்து ஏன் இப்படி ஜனங்களை ஆட்டு மந்தைகள் ஆக்குகிறார்கள்?

இந்த நூலகத்தில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான புத்தகங்களும் எதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன?

நூல் நிலையங்கள் இல்லையென்றால் உலகம் இயங்காமல் போய் விடுமா?

அலை அலையாகத் கிளம்பும் நினைவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை மயூரியால்.

குறிப்பிட்ட அலமாரியில் அவள் கண்களுக்குத் தெரிந்தது ‘மானுடவியல்’ என்ற மகத்தான நூல்.

ஆதிமனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்ததாகப் பேசுகிறது மானுடவியல்.

எப்படியோ, வாழ்ந்தார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதுவும் ஒரு வாழ்க்கைதானே? அந்த வாழ்க்கையில் இன்பம் அனுவிக்காமலா இருந்தார்கள்?

பிறத்தலும், வாழ்தலும், மடிதலும் கற்பகோடிக் காலமாய் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கிறது?

பச்சை மாமிசம் தின்றான் ; சிக்கி முக்கிக் கல் உரசி தீ மூட்டி வேகவைத்துத் தின்றான் ; இன்று அந்த நிலையில் இருந்து எந்த வகையில் மாறிவிட்டோம்?

அதே பச்சை மாமிசத்தை இன்றும் தீயில் பொசுக்கித்தானே தின்னுகிறோம் ; ஒரே வித்தியாசம், சிக்கி முக்கிக் கற்களுக்கு பதிலாக, தீப்பெட்டிகளும், லைட்டர்களும்…

சூரியன் பார்த்து, சந்திரன் பார்த்து, விண்மீன்களைப் பார்த்து, தூங்குவதும், எழுவதும், உழுவதும், தொழுவதும், வேட்கைகளைத் தீர்த்துக் கொள்வதும், சந்ததிகளைப் பெறுக்குவதும், சாவதுமாக, என்றும் மாறாக் கோட்பாட்டில்தானே இன்றும் நாம் வாழ்கிறோம்?

மண்ணில் தோன்றி, தன் போக்கில் வளர்ந்து, கால நிலைகளால் பாதிப்புக்கு உட்பட்டு, இற்று விழுந்து மடியும் மரங்களின் சுயத்தைக் கெடுத்து, அதை அற்ப ஆயுளில் வெட்டி வீழ்த்திக் கூழாக்கிக் காகிதங்களாக்கி, அதில் மானிடவியல் பற்றி எழுதியதை நினைத்தபோது ஆயாசமாக இருந்தது மயூரிக்கு.

நூலகம் முழுதும் மரங்கள் மடமடவென்று முறிந்து விழும் ஓசைக் கேட்டது அவளுக்குள்.

அச்சிட்டுக் கட்டப்பட்டு அடுக்கப்பட்டிருக்கும் அந்தப் புத்தகங்களை விட அடுக்கப்பட்ட அலமாரிகள் உயர்வாகத் தோன்றியது மயூரிக்கு.

புத்தகங்களை விட அந்த அலமாரிகள் அதிக ஆபத்தில்லாவையாகத் தோன்றியது அவளுக்கு.

மரத்தை உளி கொண்டுக் கொத்திச் கோர்த்தால் , அலமாரிகள், மேசை நாற்காலிகள் உருவாகிவிடும்.

அதே மரத்தை மேலும் சிதைத்துக் கூழாக்கி, அதன் சுயத்தையே அழித்து உருமாற்றி அதில் அச்சிட்டால் அது புத்தகம்.

மரங்களை, மரங்கள் தாங்கிக் கொண்டிருப்பதுதான் நூலகம் என்று ஒரு புதிய கோட்பாடு உருவானது அவள் மனதில்.

மரமாய்ச் சமைந்து நின்ற மயூரியை நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தார் எதிரில் நின்ற சங்கமேஸ்வரன்.

“மயூ, என்ன பலமான யோசனை?”

“ஹலோ, சாரி, நீங்க வந்ததையே கவனிக்கலை. ஏதோ யோசனைல இருந்துட்டேன்.”

“அதான் என்ன யோசனைனு கேக்கறேன்?”

“இது போல லைப்ரரியெல்லாம் தேவையானு யோசிச்சேன்..”

“அய்யய்யோ, அடி மடீல கை வைச்சிட்டியே மயூ! இந்த மாதிரி லைப்ரரியெல்லாம் இல்லைன்னா என்னை மாதிரி ‘சி எல் ஐ எஸ்’ படிச்சவனெல்லாம் சந்தீல நிக்க வேண்டியதுதான்.” – சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் சங்கமேஸ்வரன்.

அவரேத் தொடர்ந்தார்.

“மயூ…! நீ மழலை பேசறே இப்போ. உன்னோட அழகான மழலை மொழில இருக்கற மிகக் பெரிய உண்மையை இந்த உலகம் ஏத்துக்காது மயூ..”.

சங்குவை பிரமிப்பாய்ப் பார்த்தாள் மயூரி.

“இது ஒரு பொய்யான உலகம் மயூ. யதார்த்தம் எதையும் யதார்த்தமாவே இருக்க விடாது. கொஞ்சம் கொஞ்சமாவோ, மொத்தமாவோ யதார்த்தத்தைக் குத்திக் குதறிப் போடும் ஈவிரக்கமில்லாத உலகம் மயூ இது.!”

இப்போது விழி விரித்து சங்குவை விழுங்கினாள் மயூ.

“எப்படித்தான் உருத் தெரியாமச் சின்னாபின்னப் படுத்தினாலும், சுயம் எப்படியும் தலையைத் துருத்திக்கிட்டு எட்டிப் பார்க்கும். இருபத்தி இரண்டு வருஷமா பொசுங்கிச் சாம்பலாகிவிட்ட உன்னோட சுயம், இப்போதான் பீனிக்ஸ் பறவையாய் உயிர்ப்பித்து எழுந்து வர ஆரம்பிச்சிருக்கு.”

குறி சொல்பவரைப் போல மிகச் சரியாய்க் கணித்துச் சொன்ன சங்குவை வியப்போடு பார்த்தாள் மயூரி.

“மயூ… சுயம் எழத் தொடங்கிட்டா நிக்காது. எப்படி அழிஞ்சிதோ, அதே வேகத்துல திரும்பவும் வந்துரும். உன்னை நீயா மோல்டு பண்ணிக்க நான் உனக்கு உதவறேன். ஓ கே யா”

ஆதரவான, கனிவான, ஆறுதலான சங்குவின் அந்தப் பேச்சும், அன்பும் அவளை முழுமையாய்க் கரைத்தது.

தன்னை விட ஏழெட்டு ஆண்டுகள் அதிகமாக உலகத்தைப் பார்த்துக் கற்ற அனுபவம் அது.

கற்பதுவும், கேட்பதுவும், கருதுவதும் சொப்பனம் தானோ, தோற்ற மயக்கங்களோ? – என்று பாரதிக்குச் சந்தேகம் வந்ததுபோல மயூரிக்கும் வரத் தொடங்கிவிட்டது.

சந்தேகம்… மனித இனத்திற்கே உரிய தனிப் பெரும் சொத்து.

திடீரென்று, மயூரிக்குள் தன் முனைப்பு எழுந்து பிடரியில் தாக்கியது.

‘ஒரு சாதாரண ‘ஓ ஏ’ முன்னால், கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் தான் நின்று அவசியமில்லாமல் மதிப்பைக் கெடுத்துக் கொள்கிறேனா ?’ – என்று தோன்றியது.

‘இன்டர்காம் மூலம் அழைத்து, டிபார்ட்மெண்ட்க்கு வரச்சொல்லி எதிரில் நிற்க வைத்துப் பேசவேண்டிய ஒருவனைத் தேடி வந்து அவன் முன் நிற்கிறோமே?’ – என்ற மனப்பான்மையும் தலை தூக்கியது.

நூலகத்தில் இருந்த அனைவரும் தன்னையே பார்ப்பதுபோல பிரமை ஏற்பட்டது அவளுக்கு.

“லைப்ரேரியன் இல்லையா?” சமாளிப்பதாக நினைத்து அசட்டுத்தனமானக் கேள்வியைச் சங்குவிடம் கேட்டாள் மயூரி.

“இந்த மாதிரி லைப்ரரியெல்லாம் தேவையா?” – என்று சங்குவைப் பார்த்தவுடன் முதன் முதலில் கேட்ட யதார்த்தமான கேள்விக்கும்,

“லைப்ரேரியன் இல்லையா?” – என்று ‘நான் உன்னைப் பார்க்க வரவில்லை, நூலகரைப் பார்க்கத்தான் வந்தேன்’ என்ற தொனியை ஸ்தாபிதப்படுத்த தற்போது கேட்க்கப் படுகிற கேள்விக்கும் இருக்கும் வேறுபாட்டை நினைத்து மனசுக்குள் சிரித்துக் கொண்டார் சங்கமேஸ்வரன்.

தன்னைத் தேடி வந்த மயூரிக்கு, திடீரென்று தன்முனைப்பு எழும்பி அவளை ஆட்டுவிக்கும் ரசவாதத்தை சங்கமேஸ்வரன் என்ற அறிவு ஜீவியால் உணர முடியாதா என்ன…

“……………” – தன் அமைதியால் மயூரியின் தன்முனைப்பைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார் சங்கு.

யதார்த்தமும், தன்முனைப்பும் எதிரெதிர் துருவங்கள்.

அவை எந்தக் காலத்திலும் ஒன்று சேர்வதில்லை. யதார்த்தத்தை அனுபவிக்க தன்முனைப்பை மொத்தமாக வெளியேற்ற வேண்டும்.

தன்முனைப்போடு எதார்த்தம் பேசுனால், அது சமுதாயத்தில் கேலிக் கூத்தாகி விடுகிறது.

மகாத்மா காந்தி யதார்த்த உலகை ஸ்வீகரிக்கும் முன், தன் பின்னணி, புகழ், தன்முனைப்பு அனைத்தையும் துறந்து, அறையில் ஒரு துண்டு மட்டும் கட்டியபடி தேசச் சேவை செய்தார்.

என்றென்றும் காந்தி போற்றப்படுவதற்குக் காரணம், அவரின் தொண்டு என்பதை விட, அவரின் நிலைத்தப் புகழுக்கு அவர் விலக்கி எறிந்தத் தன்முனைப்பேக் காரணம்.

இப்போதும், புகழ் போதைக்காக, பாண்ட் சூட்டுடன், பட்டுப் புடவையுடன், கையில் துடப்பம் பிடித்தபடி புகைப்படத்துக்குப் போஸ் கொடுக்கும் தேசத் தொண்டர்கள் இருக்கவேச் செய்கிறார்கள்.

அதுபோன்றவர்கள் காலத்தை வென்று நிற்பதில்லையே.

எது ஒன்று முற்றிலும் துறக்கப் படுகிறதோ, அதைத்தான் மக்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள். துறக்க வேண்டும் என்று துறப்பதை விட, உண்மையிலேயேத் துறக்கும்போது, அந்த மனிதரின் கண்கள், உண்மையான துறவியின் கண்களாய்ப் பளபளக்கிறது. தலைக்குப் பின் ஒளி வட்டமும் ஒளிர்ந்துப் பிரகாசிக்கவும் செய்கிறது.

வெறும் புகழ் போதைக்காகக் கொடுக்கும் போஸ்களில் காணப்படுவது வெறும் அசட்டுத்தனம்தான்.

மயூரியின் கண்களில் அசட்டுத்தனம் அப்பட்டமாய்த் தெரிந்தது.

அத்தியாயம் – 15

“மேடம் நீங்க இங்கே இருக்கீங்களா?” – மயூரியைக் கேட்டுக் கொண்டே “ வணக்கம் சார்..” என்று சங்குவைப் பார்த்துக் கைக் கூப்பினார் நவீனன்.

“உட்காருங்க…!” – என்று நவீனனுக்கு நாற்காலி காண்பித்த சங்கமேஸ்வரன், எதிர் நாற்காலியை மயூரிக்குக் காட்டினார்.”

“பேசிக்கிட்டிருங்க..” – என்று நகர்ந்த சங்குவை, “நீங்களும் உட்காருங்க சார்..” என்றார் நவீனன்.

“சரி..” என்று அமர்தார் சங்கு.

உங்க வகுப்புல படிக்கற நவிஷ்னி, ட்ரக் அடிக்ட் ஆகக் காரணமான ராமுவைச் சந்திச்சிப் பேசியாச்சு மேடம்.” என்று மயூரியைப் பார்த்து பேசினான் நவீனன்.

அப்படியா ரொம்ப நல்லக் காரியம் செஞ்சிருக்கீங்க சார்.” – என்று பாராட்டினாள் மயூரி.

“பேசிண்டே இருங்கோ.. இதோ வந்துடறேன்..” என்று சொல்லிவிட்டு ஏதோ அவசர வேலை இருப்பதாகக் காட்டிக் கொண்டே, அவர்கள் இருவரின் அனுமதிக்குக் காத்திராமல் எழுந்து சென்றுவிட்டார் சங்கு.

ராமுவைப் பற்றியும் தற்போதைய அவன் ஸ்டேட்டஸ் பற்றியும் விலாவாரியாகச் சொன்னார் நவீனன்.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்ட மயூரி, “எனக்கு ஒரு சந்தேகம் சார்..?”- என்று வினா எழுப்பினாள்.

“கேளுங்க..?” என்றார் நவீனன்.

“இது பொருந்தாக் காதல்னு தெரிஞ்சும், எப்படி நவிஷ்னி அவன் மேலே இவ்வளவு பற்று வெச்சி, அவன் பிரிவு தாங்காம ‘ட்ரக் அடிக்ட்’ நிலை வரைக்கும் போனா..?”

“இதுக்கு பேரு மனவியல்ல ‘Delusional Disorder’ னு சொல்வாங்க. மனச்சிதைவு நோய்ல் இது ஒரு வகை மேடம் ;

அதாவது, தங்களைக் காட்டிலும் அறிவிலோ, அந்தஸ்திலோ, அழகிலோ, திறமையிலோ…… ஏதோ ஒரு வகைல உயரமா உள்ளவங்களை, தன்னோட நெருக்கமான உறவா கற்பனை பண்ணிக்கிட்டு, அவங்களோட கற்பனையா வாழ்க்கை நடத்தவே ஆரம்பிச்சிடுவாங்க ;

நவிஷ்னியும் அப்படித்தான் ராமுவோட திறமைல மயங்கி, “ராமுதான் என்னோட கணவர்’னு உறுதியா நம்பி வாழ்ந்திருக்கா ;

அதுக்கு நடுவுல ராமு வெளிநாட்டுக்குப் படிக்கப் போய். படிப்பை முடிச்சிட்டு, ஒரு பாபுலர் ட்ரேடரா பரிமளிச்சி, டிரேடிங் கம்யூனிடிலயே பெண் பார்த்துக் கல்யாணமும் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிட்டான்.”

“அடடா அப்பறம்..”

“ராமுகிட்டே நவிஷ்னியைப் பத்திச் சொன்னதும், அவனுக்கு நவிஷ்னியை நினைவே இல்லை. பிறகு கல்லூரிச் சூழலையல்லாம் சொன்னதும்தான் அவனுக்கு நினைவுக்கு வந்தா நவிஷ்னி. பிறகு அவளோட தற்போதைய நிலையை நினைச்சி வருத்தப்பட்டான் ராமு.

“கல்லூரில படிக்கும்போது, நான் அவளுக்கு மூணு வருஷம் சீனியர். என்னோட திறமைகளை அடிக்கடி என்கரேஜ் பண்ணுவா நவிஷ்னி. என்னை என்கரேஜ் பண்ணி, நிறைய சாதனைகளைப் புரிய வெச்ச நவிஷ்னி, இப்படி என்னைத் தன் கணவரா வரிச்சி வாழுவானு, கனவுலயும் நினைச்சதில்லே சார். அவள் அடிக்‌ஷன்லேந்து வெளிவந்து நிறை வாழ்வு வாழ நான் என்னாலான உதவிகள் செய்வேன்” ன்னு உறுதியும் அளிச்சி என்னோட வந்துட்டான் ராமு.

ராமுவையும் நவிஷ்னியையும் எதிரெதிரே வெச்சி, நானும், மன நல ஆலோசகர் வரதராஜனும் சேர்ந்து கவுன்சிலிங் கொடுத்தோம். மூணே சிட்டிங்தான் தெளிவாயிட்டா நவிஷ்னி.

‘Eratic Delusion’ னு சொல்ற தீவிர மனச்சிதைவால ட்ரக் அடிக்‌ஷன்ல இவ்வளவு நாள் இருந்தேனா..? அதுக்காக வெட்கப்படறேன் சார்னு..” சொல்லி அழுதுட்டா நவிஷ்னி. என்று முடித்தார் நவீனன்.

திறமைகளை என்கரேஜ் பண்ணின நவிஷ்னி, என்னைக் கணவரா வரிச்சி வாழ்ந்து, மனச்சிதைவுல ட்ரக் அடிக்ட் ஆவா’னு நான் கனவுல நினைச்சிப் பார்க்கலை..” என்று ராமு சொன்னதாக நவீனன் சொன்னது பொட்டிலடித்தாற்போல இருந்தது மயூரிக்கு.

நவீனன் அமைதியாய் அமர்ந்து மயூரியின் மனதில் நிகழும் வேதியியல் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்தார்.

அறியாமல் செய்த பிழைக்கு அதிகமாய் வருந்தும் குழந்தை முகம் போல மயூரியின் முகம் தெரிந்தது நவீனனுக்கு.

வேதிவினைகளெல்லாம் முடிந்து, விளைவுகள் வெட்ட வெளிச்சமாய்த் தெரிந்தவுடன் நனவு நிலைக்கு வந்தாள் மயூரி.

“நவீனன் சார், மனச்சிதைவு நோயால பாதிக்கப்பட்டு முற்றிய நிலைல ட்ரக் அடிக்ட் ஆகி, சீர் கெட்டுப் போன நவிஷ்னியின் வாழ்க்கையை சீராக்கிப் புதுப்பிச்ச உங்க செயலை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு சார். – தழு தழுத்தது மயூரியின் குரல்.

இதைக் கேட்டுக் கொண்டே அருகில் வந்தார் சங்கு என்கிற சங்கமேஸ்வரன்.

“…………” இருவரும் அவரைப் பார்க்க,

“நவீனன் நீங்க கல்லூரி மாணவி நவிஷ்னியை மட்டும் கரையேத்தலை.” என்று ஒரு போடு போட்டார்.

“என்ன சார் சொல்றீங்க?”

அந்த நவிஷ்னிங்கற ஸ்டூடண்டோட டீச்சரையும் கரை சேர்த்திருக்கீங்க.” – என்று சொல்லிவிட்டு வெள்ளந்தியாகச் சிரித்தார் சங்கு.

இப்போது மயூரியைப் பார்த்துப் பேசினார் சங்கு.

மயூ, நீ என் எழுத்துகளைத் தீவிரமாப் படி, மனசார என் எழுத்தை நேசி. வாசி.. என்னை ஆதர்ஸமா வைச்சிக்கணுமா வெச்சிக்கோ.” என்றவர், இந்த நவீனன் இருக்கானே என்னோட விசிறிதான் என்று சுட்டிக் காட்டி, இந்த நவீனன் மயூரிங்கற ஒரு பெண்ணை உயிராக் காதலிக்கறான்.” என்று கேஷூவலாகச் சொல்லிவிட்டு, இதற்கும் ஒரு வெள்ளந்தியான சிரிப்பைப் படரவிட்டுவிட்டு, தன் வேலை முடிந்துவிட்டது என்பதைப் போல, எழுந்து அப்பால் சென்றுவிட்டார் சங்கமேஸ்வரன்.

மயூரியின் கைகள், மேஜைமீது நட்டுக் கொண்டிருந்த நவீனனின் கைகளை அனிச்சையாகப் பற்றின.

“என் உயிரே………! மயூரி…!” – நவீனனின் உதடுகள் அசைய அதிர்வுகள் கிறங்கடித்தன இருவரையும்.

பற்றிய கைகள் இறுகத் தொடங்கின.

(முற்றும்)

– என் உயிரே… மயூரி…! ( நாவல்), 19-03-2025, தேவியின் கண்மணி.

ஜூனியர்-தேஜ் இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *