என் உயிரே… மயூரி..!
கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2026
பார்வையிட்டோர்: 6,488
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம் – 10

குஞ்சிதபாதத்தின் செயல்பாட்டைக் கண்டு முற்றிலும் விட்டுப் போனது மயூரியின் மனம்., கூடவே, பல்கலைக் கழகம் கொடுத்தப் பதவியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும், தன் தந்தையின் செயலையும் அவர் பகட்டையும் நினைத்து அருவருப்பாய் இருந்தது அவளுக்கு.
‘இந்தக் குஞ்சிதபாதம் ஒரு வகையில் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார் என்றால், அதிகாரங்களும் செல்வாக்கும் பெற்ற தன்னைப் பெற்ற தந்தை, வேறு விதத்தில் அவரைத் தாழ்த்திக் கொள்கிறார்.’ என்றே தோன்றியது அவளுக்கு.
கல்லூரியில் விரிவுரையாளர் வேலையில் சேர வந்தபோது, ஒரு தந்தையாகத் தன்னை அவர் நடத்திய விதமோ ;
கல்லூரி நிர்வாகம் தன் தந்தையிடம் நடந்து கொண்ட முறையோ, சிறிதும் ஏற்புடையதாக இல்லை ;
அதே-சமயம், இதையெல்லாம் தட்டிக் கேட்கவோ, தன்னிச்சையாக மனதில் பட்டதைச் சொல்வதும், செய்வதுமான பழக்கமோ, துணிவோதான் அவளிடம் இல்லையே.!
“ஃபர்ஸ்ட் ‘பி ஏ’ தானே போறீங்க?”
“ம்.. ”
“பொயட்ரி’ உங்களுக்கு ஓகே தானே?”
“ஓ கே சார்!”
“சரிவராதுன்னா சொல்லுங்க, ட்ராமாவோ, ப்ரோஸோ மாத்திக் கொடுக்கறேன் ஹி… ஹி…!”
‘எந்தப் பாடம் கொடுத்தாலும், எடுக்கப் பயிற்சிப் பெற்றவள்தானே நான். ஏன் என்னிடம் ‘ஆப்ஷன்’ கேட்கிறார் இவர்? ;
தன்னைத்தான் இப்படிக் கேட்கிறாரா? ; இல்லை ; யாராக இருந்தாலும் இப்படிக் கேட்டு ஈடுபாடு உள்ளதைக் கொடுப்பார்களா…?’
மயூரியின் மனதில் எழுந்த இந்தக் கேள்விகளையெல்லாம் அவள் முகம் பிரதிபலித்துக் காட்டியது.
இந்தச் சந்தேகத்துக்குக் குஞ்சிதபாதத்திடமிருந்தே பதில் வந்தது.
“நான் இருபது வருஷமாப் ‘ப்ரோஸ்’தான் எடுக்கறேன். உங்களுக்கு வேணுமானாச் சொல்லுங்க. அதை தந்துட்டு, நான் பொயட்ரி எடுத்துக்கறேன்.. கொஞ்சம் சிரமம்தான். இருந்தாலும் ‘பிக்-அப்’ பண்ணிக்குவேன். ஹி..ஹி”
‘இருபது வருடங்களாய் வகுப்பில் கற்பித்துக் கற்பித்துப் பழக்கப்பட்ட ஒன்றை என்னிடம் தந்துவிட்டு, இதுவரை ‘ஹாண்டிலே’ச் செய்யாததை எடுத்துக் கொண்டு ‘பிக்கப்’ செய்துக் கொள்வாராமே?;
ஏன் அவர் இப்படிச் செய்ய வேண்டும் ;
ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் இவர் ;
உனக்கு இந்தப் பாடம் ஒதுக்கியிருக்கேன் ; என்று ரைட் ராயலாகச் சொல்லலாம்.
இது உன் ஒர்க் – அலாட்மெண்ட். ; நீ இந்தப் பாடத்தை இந்த சிலபஸ்படி நடத்தணும். ; என்று உத்தரவிடலாம்.
நல்லாப் ப்ரிபேர் பண்ணிச் சிறப்பாப் பாடம் நடத்து ; ஸ்டூடண்ட்ஸ் மத்தீல நல்ல பேரு எடுக்கணும்…” – என்று அட்வைஸ் செய்யலாம்.
‘ இவ்வாறெல்லாம் அவர் நடந்து கொண்டிருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும் ;
இப்படியெல்லால் வழி நடத்த வேண்டிய வயதும் பதவியும் அனுபவமும் உள்ளவர்தானே இவர் ;
‘நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி’ ன்னு பாரதியார் சொல்லும் கேரக்டர் இவர் தானா?’ ;
கல்லூரி முதல்வர், தலைமை எழுத்தர், ஹெச் ஓ டி, சீனியர் ப்ரொபசர் என அனுபவத்திலும், வயதிலும் மூத்த எல்லோரும், தங்கள் கௌரவத்தை ஏன் குறைத்துக் கொள்கிறார்கள்?’ ;
தங்கள் சுய மரியாதையை ஏன் காலுக்குக் கீழ் போட்டு நசுக்கிக் கொள்கிறார்கள்? ;
இப்படியெல்லாம் சிந்தனைகள் ஓட, கஷ்டப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் மயூரி.
“நான் பொயட்ரியே எடுக்கறேன் சார். அதான் ப்ரிபேர் பண்ணிக்கிட்டு இருக்கேன்.” என்றாள்.
அத்தியாயம் – 11
குஞ்சிதபாதம் சென்றபின், ‘ஹெச்.ஓ.டி’ யைப் போய்ப் பார்த்தாள் மயூரி.
“குட்மார்னிங் சார்..” – மரபாய், மரியாதையாய் வணங்கினாள்.
“குட்மார்னிங்..”
“சார்… இரண்டாவது அவர், பி ஏ முதலாமாண்டு வகுப்புக்கு போகச் சொன்னீங்க. போயிடறேன் சார்.
“ம்…!”
“மத்த அவர்ஸ்க்கு ஒர்க் அலாட்மெண்ட் சார்..?”
“அதெல்லாம் நாளை-மறுநாள் பாத்துக்கலாம். இன்னிக்குத்தானே ஜாயின் பண்ணியிருக்கீங்க.!”
“இன்னிக்கு வேற வகுப்பேக் கிடையாதா சார் எனக்கு?”
“ஃபோர்த் அவர் ‘எம்.ஏ-ஃபஸ்ட் இயர்’ இருக்கு, வழக்கமா, ஆசிரியர் இல்லைன்னு, ஸ்டூடண்ட்ஸ் வகுப்பை விட்டுப் போயிடுவாங்க.”
“அதான் நான் இன்னிக்கு வேலைல ஜாயின் பண்ணிட்டேனே சார். மாணவர்களுக்கு இன்ஃபாம் பண்ணி, வகுப்புலயே ரீடைன் பண்ணச் சொல்லுங்க சார். சீரியஸ்ஸா பாடம் நடத்தாட்டியும் பரஸ்பரம் ஒரு அறிமுகமாவது பண்ணிக்கலாமே ?”
“ஜாயின் பண்ணின அண்ணிக்கே ‘டைட்-ஷெட்யூல்’ கொடுத்தா, உங்கப்பாவுக்கு யார் பதில் சொல்றது ?.”
எச் ஓ டி சொன்னதைக் கேட்ட மயூரிக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.
ஹெச்.ஓ.டி இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் அதை காதில் வாங்ககியபடியே சீனியர் ப்ரொபஸர் குஞ்சிதபாதம் அங்கே வந்தார்.
நடத்தின பாடங்களையெல்லாம் ‘ஃபிங்கர்-டிப்ல’ வெச்சிக்கிட்டு, புதுசா நடத்தமாட்டாங்களானு காத்திருக்காங்களாக்கும் ஸ்டூடண்ட்ஸ். பாத்துக்கலாம் விடுங்க. ஹ… ஹ… !” – என்று ஏளனச் சிரிப்புடன் கொசுராய் ஒரு கருத்தை குறுக்கேப் புகுத்தினார் குஞ்சிதபாதம்.
முதலிரவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டப் பிறகு, கடைசீ நேரத்தில், பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைத்து விட்டால், எப்படி அந்த இளம் தம்பதிகள் விரக தாபத்தாலும், உணர்வுகளின் வேட்கையாலும் துன்புற்று மருகித் தவிப்பார்களோ, அதை விடப் பன்மடங்கு ‘மனத் தளர்ச்சிக்கு’ ஆளாகிப் போனாள் மயூரி.
துறைத் தலைவரையும், சீனியர்களையும் மீறி அவளால் என்ன செய்ய முடியும்..?
ஒன்றும் செய்ய முடியவில்லை. முற்பகலில் ஜாயினிங் ரிப்போர்ட் எழுதிக் கொடுத்தாகி விட்டது.
இன்று காலை முதல், எனக்கு, யு.ஜி.ஸி, சம்பளம் கணக்குச் செய்து விடும்.
‘வேலையில் சேர்ந்த முதல் நாளே, தன் கடமையை முழுமையாய்ச் செய்யாமல் வாங்கும் முழு தண்டச் சம்பளம்.’ – மனசு வெதும்பியது மயூரிக்கு.
கடமையைச் செய்யத் தயாராகத்தான் இருக்கிறாள் அவள். செய்ய விடாமல் தடுக்கப்பட்டதால், முதல் நாளின், வகுப்பறை அனுபவத்தையும் இழந்து விட்டாள் மயூரி.
அதை விடக் கொடுமை, ஆசிரியர் இருந்தும், பாடம் கேட்கும் வாய்ப்பை இழந்து விட்ட மாணவர்கள்.
இவற்றையெல்லாம் நினைத்து நினைத்து வருந்தியது அவள் மனம்.
துறைத் தலைவர் அனுமதிக்காததலல் எம் ஏ வகுப்புக்கு இவள் செல்லவில்லை. மாணவர்கள் வழக்கம்போல் வகுப்பை விட்டுக் கலைந்து சென்று விட்டார்கள்.
அந்தப் பிரிவேளைப் முழுவதும், ஆங்கிலத் துறைக்கான ஓய்வறையில் முள் ஆசனத்தில் அமர்ந்திருப்பதைப் போல உணர்ந்தாள் மயூரி.
உத்யோக காண்டத்தின் முதல் நாளில், தன் கடமையைச் சரிவரிச் செய்யாத, வீராங்கனையை அழைத்துச் செல்ல மோட்டார் கார் வந்து விட்டது.
கார் ஓட்டுநர், இறங்கி வந்து மயூரி ஏறுவதற்காகப் பின் கதவைத் திறந்தபடித் தயாராக நின்றார்.
அத்தியாயம் – 12
‘இந்தக் கார் ஓட்டுனர், ஒரு சில மணித்துளிகள்தான் காலம் கடந்து வந்து விட முடியுமா? ;
இப்படிக் காரின் கதவைத் திறந்தபடி பணிவாக நிற்கவில்லையானால்…? ; இவனை உண்டு-இல்லை என்றல்லவா ஆக்கிவிடுவார் அப்பா ;
“சொன்ன நேரத்துக்கு வர முடியலைன்னா, எதுக்கு நீயெல்லாம் வேலைக்கு வரே? நான்ஸென்ஸ்..?” – காட்டுக் கத்தலாய்க் கத்துவார் ;
“உன்னோட டூட்டியைச் சரியாச் செய்ய முடியாத நீ எனக்குத் தேவையில்லை.” – சட்டமாய்ப் பேசுவார் ;
வேலைக்கு வந்த நாட்களுக்குச் சம்பளம் கணக்குச் செய்துத் தீர்த்துவிட்டுச் சீட்டுக் கிழித்து வீட்டுக்கு அனுப்புவார் ;
இப்படி, தோட்டக்காரன், சமையலர் என சீட்டுக் கிழித்து அனுப்பியவர்களின் பட்டியல் கண் முன் வந்தது மயூரிக்கு ;
இதோ, அவரின் ஒரே மகள், இன்றைய சம்பளத்திற்கு வேலை எதுவும் செய்யாமல் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்..” – கழிவிரக்கத்தில் கலங்கினாள்.
வீட்டிற்குள் நுழைந்ததும், வரவேற்பரையில், ‘பொக்கே’- யுடன் காத்திருந்தான் தாய் மாமன் கணேசன்.
கணேசன் ;
அந்தச் சிறு நகரத்தில் இயங்கி வரும் வங்கி ஒன்றில் கிளை மேலாளர். பார்ப்பதற்கு வாளிப்பாகவும், நல்ல நிறத்துடன் இருக்கும் இளைஞன்.
மயூரியின் வருங்காலக் கணவனாக, அவள் பிறந்த அன்றே கணேசனை நிச்சயித்து விட்டார்கள் பெரியவர்கள்.
துவக்கக் கல்வி படித்து முடிக்கும் வரை மயூரியின் பாட்டியும் இருந்தாள்.
கணேசன் இங்கே வரும்போதெல்லாம், “மயூரீ உன் புருசன் வந்துருக்கான் பாரு…” – என்றுதான் எப்போதும் சத்தமாகச் சொல்லிச் சந்தோஷிப்பாள்.
“கணேசா, போ, உள்ளே போயி உன் பொண்டாடியப் பாரு…” – என்பாள் அவனிடம்.
பாட்டி பழைய காலத்து மனுஷி என்பதால் , அப்பாவும் அம்மாவும் எதுவும் சொல்லாமல் அடங்கிப் போனார்கள்.
சிறு வயதிலிருந்தே இப்படிச் சொல்லிச் சொல்லி வெறுப்பேற்றியதாலோ என்னவோ, மயூரிக்கு, கணேசன் மீது நிரந்தரமாக ஒரு வெறுப்பே வந்துவிட்டது.
மற்றபடி கணேசன் பேரில் தனிப்பட்டக் கோபமோ, தவறான எண்ணங்களோ கிடையாது அவளுக்கு. அவனைத் திருமணம் செய்து கொள்வதில் மட்டும் எள் முனை அளவும் இஷ்டமே கிடையாது அவளுக்கு.
“ஹலோ!” – என்று பதிலுக்குச் சொல்லி விட்டு, உள்ளேச் சென்று ஷோபாவில் தன் கைப் பையை இறக்கி வைத்தாள் மயூரி.
“கன்கிராட்ஸ்” – மகிழ்ச்சிப் புன்னகையுடன், அவள் கையில் ‘பொக்கே’ கொடுத்தான் கணேசன்.
‘வித் லவ்’ என்று எழுதியிருந்தது ‘பொக்கே’யில்.
‘ஐ டூ லவ் யூ’ கணேசா, பட் நாட் லைக் டு மேரி யூ’ என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் சொல்லவில்லை.
‘தாங்க்ஸ்’ என்பதுடன் நிறுத்திக் கொண்டாள்.
“ரொம்ப டயர்டா வந்திருப்பே மயூ. ரெஸ்ட் எடு. ஸீ யூ லேடர்.” – டிப்ளமேட்டாகப் புறப்பட்டுச் திரும்பிச் சென்று விட்டான் கணேசன்.
அப்பாவும் அம்மாவும் இனோவாவில் வந்து இறங்கினார்கள்.
“ஹாய்…!” அப்பாதான் சந்தோஷத்துடன் மயூரியின் தோள் பிடித்து அணைத்துக் கொண்டார்.
அவள் தோளின் மேற்புறம் வழியாக, பின்புறத்தில், ஷோபாவின் மேல் கிடந்தப் பொக்கேயைப் பார்த்தார் அப்பா..
“கணேசன் வந்தானா?” – ஆர்வமாய்க் கேட்டார்.
“எப்போ வந்தான் கணேசன்? அவனுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் கொடுத்தியா மயூரி – தன் உடன் பிறந்த தம்பியைப் பற்றி ஆசையாய்க் கேட்டாள் அம்மா.
– தொடரும்…
– என் உயிரே… மயூரி…! ( நாவல்), 19-03-2025, தேவியின் கண்மணி.
![]() |
இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கலையாத வேடம்
எஸ்.மதுரகவி
June 17, 2026
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
June 17, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
June 17, 2026
