அடங்காத காதல்
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: May 1, 2026
பார்வையிட்டோர்: 9,233

நான் வெளியூர்களுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வேளாங்கண்ணிக்குத் திரும்பி வருவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. கும்பகோணத்திற்கு அருகிலே உள்ள எனது பெரியம்மா வீட்டுத் திருமணம், சித்தி வீட்டு புதுமனைப் புகுவிழா, சொந்த பந்தங்களின் வீட்டு விழாக்கள், நிச்சயதார்த்தம், வளைகாப்பு, நண்பர்களின் வீட்டு விழாக்கள் எனத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு நான் வேளாங்கண்ணிக்கு மீண்டும் வந்து சேர்ந்தேன்.
நான் தங்கியிருக்கும் செல்வேந்திரன் மாமா வீட்டிற்கு வந்தபோது, மாமாவின் வீட்டில் எவரும் இல்லை. அந்த வீட்டில் என் பிரியத்திற்குரிய மகாலட்சுமியையும் காண வில்லை. வீட்டின் வாசற்கதவு பூட்டப்படாமல் தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டிருந்தது.
நான் ஓவியக் கூடத்திற்கு வந்தவுடன், காலை பத்தரை மணி அளவில், மகாலட்சுமியின் சாயலில் ஓர் ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தேன்.
மகாலட்சுமி, சண்முகவேல் இருவரும் அப்பாவின் நண்பர், செல்வேந்திரன் மாமாவின் இரு பிள்ளைகள். பையன் மூத்தவன். பெண் இளையவள். சண்முகவேல் இப்போது உயிரோடு இல்லை. அவன் இறந்து, இப்போது 5 ஆண்டுகள் ஓடி விட்டன.
மகாலட்சுமியின் அண்ணன் சண்முகவேல் இறந்தபோது நான் வேளாங்கண்ணியில் செல்வேந்திரன் மாமா வீட்டில் தான் தங்கியிருந்தேன். மாமாவின் புதிய வீட்டிற்கு அருகில் இருந்த பழைய சிறிய வீடுதான் எனது குடியிருப்பு. நான் அந்த வீட்டின் கூடத்தை எனது ஓவியக் கூடமாக மாற்றி அங்கு எனது ஓவியப்பணிகளை செய்துவந்தேன். இப்போது துணி ஓவியங்கள் மூலம் எனக்கு மாதம் முப்பதாயிரம் வரை கிடைத்து வருகிறது.
எனக்குச் சொந்த ஊர் திருவாரூர். அப்பா அம்மா இருவரும் இறந்தபின் நான் திருவாரூரில் எனது சொந்த வீட்டில் இருக்கவில்லை. அந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு எனது தொழில் நிமித்தமாக நான் வேளாங்கண்ணிக்கு வந்து விட்டேன். எனக்கு சாப்பாடு மகாலட்சுமிதான் சமைத்துக் கொடுப்பாள். அவள் சின்ன வயதில் இருந்தே நன்றாகச் சமைப்பாள். அந்த வயதிலேயே எனக்கும் அவளுக்கும் ஓர் உன்னதமான பிரியம் இருந்து வந்தது.
காலை பதினோருஒ மணி அளவில் மகாலட்சுமி என்னைப் பார்க்க வந்தாள்.
“என்ன மாமா! நல்லா இருக்கீங்களா? என்ன ஒரு மாசமா ஆளையேக் காணோம்?” இப்படிக் கேட்டபடி அவள் என் அருகில் நின்றாள்.. அவள் குரலில் அப்போது இனிமையும் மென்மையும் கூடியிருந்ததை நான் உணரவில்லை.
நான் எனது ஓவியத்தையே பார்த்துக்கொண்டு, அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்யலாமா என யோசித்தபடி இருந்தேன். அதனால் நான் அவளை சரியாகப் பார்க்கவில்லை. வழக்கம்போலத்தான் வந்திருக்கிறாள் – என நான் நினைத்திருந்தேன். நான் வரைந்த ஓவியத்தின் முகச்சாயலும் அவளது முகச்சாயலும் ஒன்றாகவே இருந்தது.
அவள் நான் வரைந்த ஓவியத்தையே பார்த்து ரசித்தபடி இருந்தாள். அடுத்து அவள் ஆனந்தமாய் என்னைப் பார்த்தாள். அவள் பார்வையில் அன்பும் ஆசையும், அடுத்து புதிதாய் மற்றொன்றும் கூடியிருந்தது. அவள் உடல் முன்பை விட இப்போது நன்கு மெருகேறி இருந்தது. அவள் என்னையே சில மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்த்தபடி இருந்தாள். பார்த்தாள்… பார்த்தாள்… அப்படியே கண்ணைச் சாய்த்தாள்.
அடுத்த கணம் என்னை ஆரத் தழுவி அணைத்துக் கொண்டாள். ஆவேசமாய் என் கன்னங்களில் முத்தமிட்டாள். உல்லாசமாய் அவளது உதடுகள் எனது உதடுகளில் மேய்ந்தன. அவளது இளமை ததும்பும் மென்னுடல் மேன்மையாய் என்னைத் தீண்டி என்னைக் கிறங்க வைத்தன. நான் காதல் சுரங்கத்தில் சிக்கித் தவித்தேன். அடுத்த கணம் அவளது உதடுகள் திரும்பத் திரும்ப எந்தன் உதடுகளில் மேய நான் காதல் வெள்ளத்தில் மிதந்து தத்தளித்தபடியே, இந்திரலோகத்திற்குச் செல்வதற்கான இரண்டு பயணச்சீட்டுகளுக்கு முன்பதிவு செய்தபடி முனகிக் கொண்டிருந்தேன்.
திடீரென்று “மகா… மகா…” என்ற ஒரு பெருங்கூக்குரல் ஒரு புயலாய் வந்து, எங்களைப் பிரித்து விட்டு, எங்களைக் கடந்து சென்றது. மகாலட்சுமி என்னிடமிருந்து வெடுக்கென்று விலகி விரைந்து வெளியேறிவிட்டாள். அன்று நான் அவளிடம் அகப்பட்டு சுகப்பட்ட நிமிடங்கள் இன்னும் என்னுள் தடதடக் என்று கடிகாரத்தின் பெரிய முள்ளாய் ஓடிக்கொண்டிருக்கிறது. அது ஒரு சுகமான ராகம். இந்த ராகத்தின் தாகம் இன்னும் என் தேகத்தில் தவித்தபடியே இருக்கிறது.
மகாலட்சுமி இன்னும் சாதாரணமாகத்தான் இருக் கின்றாள் என்று நான் அதுவரை நினைத்திருந்தேன். அவள் என்னைக் கட்டித் தழுவிய பின்னர்தான் அவள் பெரிய மனுஷியாகிவிட்டடாள் என்ற உண்மை எனக்கு, பின்னர்ப் புரிந்தது. நான் ஒரு மாத காலம் வெளியூரில் இருந்ததனால் அந்த விஷயம் எனக்குத் தெரியவில்லை. மாமாவும் அத்தையும் இதுபற்றி எனக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. நான் மாமாவிடம் இதுபற்றிக் கேட்டபோது அவர், .
“மாப்ள அந்தக் காலத்துல பொண்ணு வயசுக்கு வந்துட்டா நல்ல மாப்பிள்ளையா வேணும் னு நினைச்சு ஊரையே கூட்டி சடங்கு சம்பிரதாயம் சீர் செனத்தின்னு பண்ணுவாங்க. என் பொண்ணுக்கு நீங்கதான் மாப்பிளங்கிறத நாங்க முன்னாடியே, உங்க அப்பா அம்மா உயிரோட இருக்கிறப்பவே முடிவு பண்ணிட்டோம். அப்புறம் எதுக்கு தேவையில்லாத சடங்குகள். மேலும் அந்த சமயத்துல நீங்க உங்க சொந்த பந்தங்களோட விசேஷங்கள்ள இருந்தீங்க. தனியனாய் இருந்து நீங்க ரொம்ப சிரமப்படக்கூடாதுன்னு நினைச்சுதான் நாங்க இத உங்ககிட்ட சொல்லல மாப்பிள. இதுக்காக நீங்க வருத்தப்பட வேண்டாம்!” என்றார்
மகாலட்சுமிக்கும் எனக்கும் திருமணம் என்பது எப்போதோ நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான், என்றாலும் திருமணத்திற்கு முன்பு இப்படிப்பட்ட காதல்வயப்பட்ட செயல்களில் ஈடுபடுவது தவறு என்பதை என் மனம் எனக்கு உணர்த்தியது. அதனால் நான் அவளிடம் இருந்து சற்று விலகியே இருக்க விரும்பினேன்.
மகாலட்சுமி இப்படி நடந்து கொண்டது அவளின் அந்தரங்க ஆய்வா? அவளது மோகத்தின் தாகமா? என்று எனக்கு எதுவும் புரியவில்லை. நான் ஆழ்ந்த யோசனையில் மூழ்கி மூழ்கி நோயாளியாய் ஆனேன்.
எனக்குள் பயமும் படபடப்பும் அதிகமாக, அதன் பின், நான் அவளிடம் இருந்து சற்று விலகியே நின்றேன்.
“மாமா நான் ஆசையா உங்களைத் தேடி வரேன். நீங்க ஏன் விலகி விலகிப் போறீங்க? நீங்கதான் என்னைக் கட்டிக்கப் போறீங்களே, அப்புறம் ஏன் மாமா பயப்படுறீங்க?” என்றாள்.
நான் அவளது பேச்சைக் கேட்காமல், எங்கோ பார்த்தபடி யோசனையில் இருந்தேன். அவள் அப்படியே அங்கிருந்து அவளது வீட்டிற்குச் சென்று அழ ஆரம்பித்தாள். அடுத்தடுத்த நாட்களிலும் அவளது முயற்சிகள் தொடர்ந்தன. நான் எதுவும் பேசாமல் விலகியே நின்றேன்.
“மாமா நீங்க என்ன மறந்துட்டீங்க. வேறு யாரையோ மனசுல நினைக்க ஆரம்பிச்சுட்டீங்க. இந்த ஒரு மாசத்துல உங்க மனசு மாறிப்போச்சு. அதனாலதான் இப்படி விலகிவிலகிப் போறீங்க” என்று அழுதபடி சொன்னாள். நான் அவளிடம் பொறுமையாகவும் அன்பாகவும் சொன்னேன்.
“இல்லடிச் செல்லம், நமக்குக் கல்யாணம் ஆன பிறகு இதெல்லாம் வச்சிக்கிட்டா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன். அதுதான் சரியா இருக்கும். அதுக்கு முன்னாடியே நீ ஏன் அவசரப்படுற? ” என்று நான் பொறுமையாகச் சொன்னேன்.
நான் சொன்னவற்றில் பாதியைக் கூட அவள் காதுகள் ஏந்திக் கொள்ளவில்லை. அவள் தேம்பித் தேம்பி அழுதபடியே வெளியேறிப் போனாள். நான் எனது பணியில் மீண்டும் பதுங்கிக் கொண்டேன். அவள் என்னிடமிருந்து ரொம்பவும் ஒதுங்கிக் கொண்டாள்.
அடுத்த ஒரு வாரம் திருவாரூரில் தேர்த்திருவிழா மிகச் சிறப்பாக நடந்தது. அதில் நான் நண்பர்களுடன் கலந்து கொண்டேன். மனதிற்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒரு வாரம் சென்றபின் நான் மீண்டும் வேளாங்கண்ணிக்கு வந்தேன்.
மகாலட்சுமி என்னைப் புரிந்து கொண்டு விட்டாள் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் கதை வேறு பக்கம் திரும்பி விட்டது. மூன்று நாட்களுக்கு முன்பு அவள் வேளாங்கண்ணித் திருவிழாவிற்கு வந்த யாரோ ஒருவருடன் ஓடிப் போய்விட்டாள் என்ற தகவலைக் கேட்டு நான் ஆடிக் காற்றில் அறுந்து விழுந்த பட்டமாய் ஆகிப்போனேன்.
நான் மகாலட்சுமியின் ஆசைக்கு இணங்கி, அவளோடு ஐக்கியமாகி இருந்திருந்தால், இப்படி எல்லாம் நடந்திருக்குமா? என எனது மேல் மனம் சொல்ல, எனது ஆழ்மனம் நடந்த வரைக்கும் சரிதான்! வேலையப் பாரு! என என்னைச் சமாதானப். படுத்தியது. ஆனாலும் போயும் போயும் இவளுக்கு ஏன் இப்படி புத்திக் கெட்டுப் போனது? என்று எனக்குப் புரியவில்லை.
செல்வேந்திரன் மாமா இதைப்பற்றிக் கொஞ்சம் கூட வருத்தப்படவோ வேதனைப் படவோ இல்லை. எனக்கு பெருத்த ஏமாற்றமாகத்தான் இருந்தது. இப்படியும் மனிதர்களால் கல்லுப்பிள்ளை போல கவலையும் சுரணையும் இன்றி இருக்க முடியுமா? என என் மனம் அதிர்ச்சிக்குள்ளானது.
“தொலைஞ்சது வீணாப் போன கழுதை. போகட்டும் விடுங்க. மாப்ள! நீங்க அவளை நினைச்சுக் கவலைப்படாதீங்க. உங்களுக்கு நானே நல்ல பொண்ணாப் பாத்து சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று சொல்லியபடி செல்வேந்திரன் மாமா என்னை நளினமாகப் பார்த்தார். ஆனாலும் எனக்குள் மகாலட்சுமி மீண்டும் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கை இருந்தது.
கடந்த வாரம் சனிக்கிழமை எனது ஓவியக் கூடத்திற்கு ஒரு பிரெஞ்சு நாட்டு இளம்பெண் வந்திருந்தாள். நான் வரைந்த அழகிய ஓவியத்தைப் பார்த்து பரவசப்பட்டு என்னையும் ஓவியத்தையும் திரும்பத் திரும்பப் பார்த்தாள். அவள் என்னை தனது கண்களால் ஆழ்ந்தும் ஆர்வத்தோடும் விரும்பி விரும்பிப் பார்த்தாள். அவளது காந்தப் பார்வை எனக்குள் போதையேற்ற நான் அவளையே வெறித்தனமாகப் பார்த்தேன்.
இருவரின் இதயங்களும் பரபரத்தன. படபடத்தன. பரிதவித்தன. ஒரு நீண்ட பெருமூச்சு அவளிடமிருந்து வேகமாக வெளியேறியது. அதன் பின் அந்த ஓவியத்தின் விலை என்னவென்று ஆங்கிலத்தில் கேட்டாள். நான் எதுவும் சொல்லாமல் அவளைப் பார்த்தபடியே நின்றேன். அடுத்து அவள் தமிழில் தடுமாறாமல் பேச, நான் தடுமாறிப் போனேன். அதன் பின்னர் இருவரும் தமிழிலேயே கலந்து கலந்துரையாடினோம். அடிக்கடி அவளது கைகள் எனது கைகளோடு கலந்து இருந்தன.
சில மணி நேரம் எங்களைக் கடந்து சென்றது. நாங்கள் நேரம் போவது தெரியாமல் பிரியமாய் கதைத்துக் கொண்டிருந்தோம். அவள் அந்த ஓவியத்திற்கான விலையாக முப்பதாயிரம் ரூபாயை என்னிடம் நீட்டினாள். நான் அதனை வேண்டாம் என்று கூறி அவளிடமே திணித்தேன். அவளது அன்பு என்னைக் கட்டித் தழுவியது. அதன் பின் அவளது சேலை நழுவியது. எங்களுக்குள் இடைவெளி இடையூறு செய்யாமல் விலகியது. நான் இப்போது மகாலட்சுமியாய் மாறிப் போனேன். வெகு நாட்களாய் ஏக்கத்தில் இருந்த நான், அவளது தேகத்தின் மோகத்தில் திளைத்து, தீவிர தாக்கத்தை அவளிடம் ஏற்படுத்த, அவள் கிறங்கிப் போனாள். நான் அவளுக்குள் ஒன்று கலந்து உருமாறிப் போனேன். எங்களின் உச்ச நிலையில், எனது இச்சை எல்லாம் மிச்சம் இன்றியும் அச்சமின்றியும் அவளுக்குள் இறங்கி, அவளை மேலும் ஆனந்தப்படுத்தியது.
என்னவள் பெயர் லாரா. பிறந்தது பிரான்ஸ். தாய்மொழி பிரெஞ்சு. பிடித்தது தமிழும் தமிழ் மக்களும். படித்தது ஆங்கிலம், பிரெஞ்சு, இவற்றுடன் தமிழ் இலக்கியமும். வயது 22 ; ஆசை: ஒரு தமிழனோடு வாழ்நாள் முழுவதும் ஒரு தமிழச்சியாய் தமிழ்நாட்டில் வாழ வேண்டும். தமிழில் நிறைய எழுத வேண்டும் என்ற ஆசையை உடையவளாய் அவள். இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?
நான் மகிழ்ச்சியில் மயங்கி கிறங்கிப் போனேன். இனி லாராவின் பெயர் மகாலமி. மகாலட்சுமியின் நினைவாக நான் என்னவளுக்கு வைத்துள்ள சுருக்கப் பெயர் இது. இந்த பெயரில்தான் இனி நான் என்னவளை அழைத்து மகிழப் போகிறேன். மகாலட்சுமியையும் என்னால் எப்படி மறக்க முடியும்? அதனால் என் மனம் இப்படி ஒரு ஏற்பாட்டை இறக்கி வைத்துள்ளது.
அன்று இரவு எனக்கு நல்ல தூக்கமும் இருந்தது. மகாலமி இடத்தில் ஏக்கமும் அதிகரித்தது.
என்னவள் என்னுடன் மூன்று நாட்கள் முழுமையாக இருந்து, சமைத்து, சாப்பிட்டு முத்தமழை பொழிந்து என்னை உன்னதமாக்கினாள். அவள் பிரான்சிற்குச் செல்லும் முன் எனது புத்தக அடுக்கில் இருந்த ஜெயகாந்தனின் பாரிசுக்கு போ என்ற புதினத்தையும், அகிலனின் சினேகிதி எனும் புதினத்தையும் எடுத்துக் கொண்டாள். கண்டிப்பாக ஒரு தமிழ்ப்படைப்பாளி ஆவதற்கு உரிய அனைத்துத் தகுதிகளும் அவளிடத்தில் இருப்பதை நான் உணர்ந்தேன்.
பிரான்சைச் சேர்ந்த என்னவளின் தமிழ்ப் பற்றை நினைக்கும்போது நம் தமிழ் மக்களின் மீது கோபம் கொஞ்சம் கூடுதலாகவே வருகிறது. நம் தமிழ் மக்களின் இன்றைய நிலை பற்றிய நினைவுகள் என்னை அடிக்கடி பயமுறுத்திவிட்டுப் போகின்றன. நாம் எல்லாம் தமிழன் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றோம். ஆனால் தமிழனாக வாழவில்லை. வாங்கும் பொருட்களில் மட்டும் அல்ல பேசும் தமிழிலும் கலப்படம். தமிழைக் கூட ஆங்கில எழுத்தில்தான் நம்மால் எழுத முடிகிறது. தமிழ் இலக்கியங்கள் என்னவென்றும் அவை எப்படிப்பட்டவை என்பதும் நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. வணிக நிறுவனங்களின் பெயர்களில் தமிழ் காணாமல் போய்விட்டது. திரைப்படங்களின் பெயர்களிலும் தமிழ் மறைந்து ஆங்கிலம் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறது. பள்ளிகளில் அதிகமாகத் தமிழ்ப் பாடங்களில் தான் மாணவர்கள் தோல்வி அடைகின்றார்கள். நமது பிள்ளைகளின் பெயர்கள் கூட தமிழ்ப் பெயர்களாக இல்லை. அவை இந்துகுஷ் மலையிலிருந்து வீசும் கடும் பனிப்பொழிவைப் போலவும், கைபர் போலன் கணவாய்கள் வழியே வரும் கடும் குளிர் காற்றைப் போலவும் நம்மை நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்தப் பெயர்கள் ‘உஷ்’ என்றும் ‘புஷ்’ என்றும் கருநாகத்தின் சீரலைப் போல் நம்மைப் பயமுறுத்துகின்றன. இன்றைய தமிழனையும், தமிழையும் நினைத்துப் பார்த்தாலே, கோபம் என்னுள் இருந்து கொந்தளிப்புடன் வெளி வருகிறது. சரி விடுங்கள்!
அயல் தேசத்திலிருந்து ஓர் அருமையான எழுத்தாளினி தமிழுக்கு வரப்போவதை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவளைப் பார்க்கின்றபோது கால்டுவெல், ஜி யு போப், வீரமாமுனிவர் போன்றவர்கள் அடிக்கடி என் பக்கம் வந்து போனார்கள்.
அடுத்த மாதம் பதினோராம் தேதி நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்து கொண்டோம். மகாலமி பிரான்சுக்குச் செல்வதற்குப் புறப்பட்டாள். நான் அவளை விமான நிலையம் வரை சென்று வழி அனுப்புவதற்காக அவளுடன் ஒரு வாடகை ஊர்தியில் பயணித்தேன்.
எங்கள் ஊர்தி விமான நிலையத்தை நெருங்கிய போது, வழியில் கிழிசல் ஆடையுடன் ஒரு பெண் தள்ளாடித் தடுமாறி வந்து கொண்டிருந்தாள். திடீரென்று அவள் எங்களது ஊர்தியின் முன் தடுமாறி விழுந்தாள்.
“ ஐயோ.. ஆ..” என்ற பெரும் சத்தம் வெடித்துச் சிதறி, பின் மெல்ல மெல்ல அடங்கி ஒடுங்கியது. எங்கள் ஊர்தி சாலை ஓரமாக நிற்க, நானும் மகாலமியும் இறங்கி முன்புறம் சென்று பார்த்தோம்.
அங்கே கந்தல் ஆடையில், சிந்தை சிதைந்தபடி, மகாலட்சுமி உயிரற்றுக் கிடந்தாள். நான் அதிர்ச்சியில் உறைந்தபடி நின்று கொண்டிருந்தேன்.
குறிப்பு: இக்கதை எனது “இசையின் எதிரொலிகள்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள 11 கதைகளில் நான் தங்களுக்கு அனுப்பும் 4ஆவது சிறுகதை. இந்த நூல் கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.
![]() |
எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
June 9, 2026
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
June 6, 2026
பால்ய காலத்துச் சிநேகிதி!
வ.ந.கிரிதரன்
June 3, 2026
