எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2026
பார்வையிட்டோர்: 133 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 10

பஞ்சாயத்து விஸ்வநாதனைப் பற்றியும், சிந்துவின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான வெறுப்பைப் பற்றியும், அவள் பாட்டியிடம் வளர்ந்தது. இறந்த பின் பெற்றோரிடமே மூன்றாம் மனுஷி போல் வந்து சேர்ந்தது, சுயமாய் டிபன் சென்டர் வைத்து முன்னேறுவது என்று அத்தனையும், சொல்ல, சொல்ல.. தேவாவுக்கு நெஞ்சம் கனத்தது. அது சிந்துவிற்கு ஏற்பட்ட துன்பத்தினால் மட்டுமல்ல.. இன்னும் அவள் மீது கூடிய நேசத்தின் சுமையினாலும் தான்.

“இதுக்கு மேலேயும் அந்தப் பொண்ணு மேல ஆசை வருமா தம்பி?”

“இது ஆசை இல்லைங்க சிந்து கையில என் வாழ்க்கையை முழுசா ஒப்படைக்கணும்ங்கிற நேசம். இந்த வயசுல இவ்வளவு பொறுப்பா, இருக்கிற பொண்ணுங்க கம்மி சார். நான் அவங்கப்பாவை பார்க்க ஏற்பாடு பண்ண முடியுமா?”

“இந்த விஷயத்திலே உறுதியா இருக்கே! சரி.. நீ எப்ப ஊருக்குப் போறே?”

“சின்ன சின்ன வேலை பாக்கியிருக்கு. மூணு நாள் ஆகும்.!”

”அப்ப… நாளைக்கு பார்த்துடலாம்!”

தேவாவின் அடர்த்தியான அளவான மீசையினுள் ஒளிந்திருந்த சதைப்பிடிப்பான உதடுகள் சந்தோஷத்தில் விரிந்தது.

பஞ்சாயத்து நிதானமாய் சொல்லி கொண்டிருக்க விஸ்வநாதனின் விழிகள், எதிரே அமர்ந்திருந்த தேவாவை அளந்துக் கொண்டிருந்தது. சமையலறை கதவிற்கு பின்னால் நின்றிருந்த கமலி ஹாலில் நடப்பவை அத்தனையும் பதற்றத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

”சும்மா சொல்லக்கூடாது. தேவா மாதிரி ஒரு பையன் கிடைக்கறது கஷ்டம். அவங்கப்பா பெரிய..”

“போதுமய்யா!” என்று கைநீட்டி தடுத்தார் விஸ்வநாதன்.

“எனக்கு இதிலே இஷ்டமில்லே. போய்ட்டு வர்றீங்களா?” முகத்தில் அடிப்பது போல் பட்டென சொன்னார்.

“அவசரப்பட்டு முடிவு..”

“என்னை மேற்கொண்டு எதையும் பேசவச்சிடாதீங்கய்யா! நான் ஒண்ணும் விபச்சாரம் பண்ணலே! ஒரு மொட்டைப் பையனை கூட்டிட்டு வந்து.. இவன் விரும்பிட்டான் பொண்ணைக் குடுங்கன்னு ஒரு பஞ்சாயத்து தலைவர் மாதிரியாப் பேசறீங்க? அசிங்கமா இருக்குங்க… புறப்படுங்க!”

வார்த்தையில் ஒளிந்திருந்த மோசமான வார்த்தையில் ஆடிப்போன பஞ்சாயத்து சட்டென எழுந்து கொள்ள தேவா விதிர் விதிர்த்து அவருடன் வெளியேறினான்.

என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துக் கொள்ளவே வெகுநேரம் தேவைப்பட்ட சிந்துவுக்கு… அப்பாவின் அரக்கத்தனமான வார்த்தைகளால் இடிந்துப் போயிருந்தாள். உள்ளறையில் கம்பில் கல்பொறுக்கிக் கொண்டிருந்தவளுக்கு அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் காய்ச்சலே வந்து விட்டது. நினைத்ததுப் போலவே வெடித்தார் விஸ்வநாதன்.

“பார்த்தியா கமலி? என்ன நடந்ததுன்னு பார்த்துக்கிட்டுதானே இருந்தே? சனியனை வீட்டுக்குள்ளே சேர்க்காதேன்னு சொன்னேன். கேட்டியா? அடுத்தமாசம் நம்ம பொண்ணுக்கு கல்யாணம். இந்த நேரத்துல.. எவனோ ஊர் பேர் தெரியாத சினிமாக்காரன் வீடு தேடி வந்து தைரியமா இவளை கட்டிக்கறேன்றான். யார் குடுத்த தைரியம்? அவகடை போட்டு பலகாரம் மட்டும் தான் விக்கிறாளாமா… இல்லே…”

அப்பாவின் ஆசிட் வார்த்தையில் உள்ளம் வெந்து துடித்துப்போனாள் சிந்து. கண்களில் கண்ணீர் நிற்காமல் சுரந்தது.

“நீங்க டென்ஷனாகாதீங்க… அவகிட்டே நான் பேசிக்கறேன்.”

“சொல்லி வை! இந்த வீட்ல இருக்கணும்னா.. அடக்கம் வேணும். ஆம்பளை வேணும்னா ஓடச் சொல்லு. விஸ்வநாதன் மானஸ்தன். பொலி போட்ருவேன்..கல்யாணம், கருமாதின்னு இனி எவனும் என் வீட்டு வாசப்படி ஏறி வரக்கூடாது.”

“சொல்றேங்க.. மூச்சு வாங்குது பாருங்க… நான் பேசிக்கறேன்.. ஏய் சனியனே எங்கேயிருக்கே?” உள்ளே கோபமாய் கத்திக் கொண்டே வந்த கமலி.. சிந்துவின் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள்.

“திமிராடி உனக்கு? அசிங்கப்படுத்தறியே! நான் வளர்த்தப் பொண்ணு… வித்யா எப்படியிருக்கா? உனக்கு ஏன்டி இந்த கூறுகெட்ட புத்தி? காதல் கேக்குதா? அவ்ளோ அலைபாயுதா மனசு.. ச்சீ…”

சிந்து கதறிக் கொண்டே அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டாள். “அம்மா.. அம்மா.. பிளீஸ்ம்மா… நீயாவது என்னை நம்பு! இப்ப வந்தவங்களுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனா டிபன் சென்டர்ல சாப்பிட வந்தப்ப… ஒண்ணு ரெண்டு முறை பார்த்ததா ஞாபகம். மத்தபடி எனக்கு எதுவும் தெரியாதும்மா! அந்த மாதிரி எண்ணம் எனக்கு வராதும்மா. இது… அவங்களா இஷ்டப்பட்டு வந்திருக்காங்க போல… இதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?”

“அதெப்படி உன் விருப்பம் இல்லாம…”

“பாட்டி மேல சத்தியம்மா! என் மனசுல எந்த எண்ணமும் இல்ல..” கமலி அந்த வார்த்தையில் கொஞ்சம் சமாதானமானாள்.

“சரி..சரி.. இனி இந்த மாதிரி எல்லாம் நடக்காம பார்த்துக்க…”

”ம்..”

தேவா… அவன் அறைவாசலில் வந்து நிற்கும் சிந்துவை எதிர்பார்க்கவில்லை.

“வா.. வாங்க.. உள்ளே வாங்க!”

உள்ளே வந்தவள், “எனக்கு உள்ளே வரப்பிடிக்கலே.. ஆனா, வெளியே நின்னுப்பேசற விஷயமும் இல்லே… எதுக்காகங்க.. ஏன் இப்படி நடந்துக்கிட்டீங்க?”

“மன்னிச்சிடுங்க சிந்து! உங்க குணம், தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ‘உங்களை நேசிக்கறேன்’னு சொல்லி உங்களை சங்கடப்படுத்தாம.. பெரியவங்களோட சம்மதத்தோட.. எல்லாமே நடக்கணும்னு ஆசைப்பட்டேன்!”

“அதை என்கிட்டயே கேட்டிருக்கலாமே சார்! மறுத்திருப்பேனோ அப்பா உங்களை ரொம்ப மோசமா பேசிட்டார். அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். ஒரு நல்ல நோக்கத்தோட பிலிம் பண்றீங்க. பாராட்டறேன். மத்தபடி என் மனசுல எதுவுமே இல்லை. நான் உங்க மனசுல இடம் பெறுறதை விடவும், என்னை பெத்தவங்க மனசுல இடம் பிடிக்கணும்னு தவமாயிருக்கேன். கலைச்சிராதீங்க!” என்று கை கூப்பினாள்.

சிலையாகிப்போனான் தேவா.

அத்தியாயம் – 11

திருமண வேலைகள் தடபுடலாய் நடந்தன. தன்னால் செய்ய முடிந்த அத்தனை வேலைகளையும் சிந்து செய்தாள். வித்யாவின் திருமண பட்டுப்புடவை எடுக்க மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் சென்றனர். சிந்துவை யாரும் அழைக்கவில்லை. வித்யாவிற்கு அழைக்க ஆசையிருந்தும்.. தடையுத்தரவு அவள் வாயை கட்டிப்போட்டது.

திருமண அழைப்பிதழ்கள் அத்தனைக்கும் மஞ்சள் தடவி கவரில் போட்டு அடுக்கி வைத்தாள்.

திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்க.. மெகந்திப் போட பியூட்டி பார்லர் செல்ல முயன்றவளை தடுத்தாள் சிந்து

“நான் உனக்கு மெகந்தி போட்டு விடறேன்க்கா!”

“நீயா.. வேணாம் சிந்து! இந்த நேரத்துல என் கைய வச்சு விளையா டாதே! சரியா வரலேன்னா… அழிக்க முடியாது!”

“தைரியமா கையக்குடுக்கா! இதையெல்லாம் சின்ன வயசுலேயே கத்துக்கிட்டேன். அத்தைக்கெல்லாம் நான் தான் போட்டு விடுவேன் தெரியுமா?” என்று இழுத்து அமர்த்தி.. அழகாய், நுணுக்கமாய் மருதாணியில் வரைய ஆரம்பித்தாள்.

அவள் வரைய வரைய பிரம்மித்துப் போனாள் வித்யா. அத்தனை அற்புதமாய் இருந்தது. அவளின் பளிச் சென்ற நிறத்திற்கு உள்ளங்கையிலிருந்து, முழங்கைவரை… அழகோவியமாய் ஜொலித்தது.

அன்றிரவு.. முகத்தில் தவிப்புடன் வித்யாவின் முன் வந்து அமர்ந்தாள்.

உறங்க முற்பட்டவள் இவளைப் பார்த்து புன்னகைத்தாள்.

“என்ன சிந்து?”

“நாளைக்கு நாம மண்டபத்துல இருப்போமில்ல?”

“ஆமாம்!”

“உன்னை சுத்தி.. சொந்தக்காரங்க கூட்டம் தான் இருக்கும்.”

“அதுக்கென்ன?”

“நாளைக்குக்கூட உன்கிட்ட பேசமுடியாதுக்கா! விடிய விடிய.. இன்னைக்கு என்கிட்ட பேசுவியாக்கா? அதுக்கப்புறம் என்கூட பேச இங்கே யாருமே இல்லே! எதையாவது… மனசுல தோணறதெல்லாம் பேசு. பிளீஸ்க்கா…!”

அவள் கெஞ்சலின் பின்னிருந்த நிஜம் வித்யாவைச்சுட்டது. வாத்சல்யத்துடன் அவள் தலையை கோதிவிட்டாள்.

“கெஞ்சற விஷயமா இது? எனக்கும் தான் உன்கூட விடிய விடிய பேசணும்போல இருந்துச்சு! நீ டயர்டா இருக்கியேன்னு தான் சும்மா இருந்தேன். இப்படி என் பக்கத்துல படுத்துக்க. எனக்கு பத்து வயசு இருக்கும் போது…” பேச ஆரம்பித்தாள் வித்யா.

நீண்ட நெடிய பேச்சில்.. இரு பெண்களுமே எப்போது உறங்கினார்கள் என்பது அவர்களுக்கேத் தெரியாது.

திருமணம் தடபுடலாய் நடந்து முடிந்தது. மாப்பிள்ளை வீட்டார். நாகரீகமான, நல்ல மனமுள்ளவர்களாக இருந்ததால்.. செலவுகளில் பாதியை ஏற்று தாராளமாய் செலவு செய்திருந்தனர்.

பாஸ்கரும், சாமுத்ரிகாவும் முன்னின்று திருமணத்தை நடத்த.. விஸ்வநாதன் பூரித்துப் போனார்.

திருமணத்தையொட்டி அடுத்தடுத்து நடக்க வேண்டிய சாஸ்திர சம் பிரதாயங்கள் நடந்து முடிந்தன. மறுவீடு, தாலிபிரித்து கோர்த்தல் எல்லாம். முடிந்து வித்யா புகுந்த வீட்டிற்கு நிரந்தரமாய் சென்றடைந்த போது தான்… சிந்து.. பாலைவன வெப்பத்தை விடவும் கடுமையான தனிமையை உணர்ந்தாள்.

அப்பாவும், அம்மாவும் வித்யாவை நினைத்து ஏதோ பேசியபடி கண் கலங்குவதைக் கண்டு வித்யாமேல் சற்று பொறாமைக்கூட எட்டிபார்த்தது.

‘இதே மாதிரி என்னையும் மணமுடித்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி எனக்காக கண்ணீர் சிந்துவார்களா?’ ஏக்கத்தில் உள்ளம் வெம்பின.

கமலி சோர்ந்த முகத்துடன் நடமாடுவதைக் கண்டு சிந்து மெனக் கெட்டு கோலம் வரைய கற்றுக் கொண்டு அம்மாவிற்கு முன்பாக எழுந்து வாசல் பெருக்கி கோலம் போட்டாள்.

தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த அம்மாவிடம் “இனி, இந்த வேலை எல்லாம் நானே பார்த்துக்கறேன்ம்மா? நீ போய் தூங்கு!” என்றவளை விநோதமாய் பார்த்தாள் கமலி.

“பாத்திரமெல்லாம் நானே தேய்ச்சிடறேன். பால் காய்ச்சி வச்சிடறேன். நீ வந்து அப்பாவுக்கு என்னப் போட்டுத் தரணுமோ அதைப்போடு. அக்காவைப் பிரிஞ்சதிலேர்ந்து உன் முகமே சரியில்லே.. உடம்புக்கு முடியலியாம்மா?”

“அதென்ன அபசகுனமா.. அக்காவைப் பிரிஞ்சதிலேர்ந்துன்னு சொல்றே? அவ வாழ்றதுக்கு புகுந்த வீட்டுக்குப் போயிருக்கான்னு சொல்லு! எல்லாமே அரைச் சொல்லாவே சொல்லிட்டிருக்கே.. அரை குறை வாயிலே பின்ன எப்படி.. “கடுகடுப்புடன்… அவளைத்தாண்டி சமையல் கட்டினுள் சென்றாள். அம்மா தன்னை எல்லாவற்றிலும் தனிமைப்படுத்துவதை அவளாய் ஜீரணிக்க முடியவில்லை. பின்னேயேச் சென்றாள்.

“நான் தான் இதையெல்லாம் பார்த்துக்கறேன்னு சொன்னேனம்மா.. நீ போய்…”

“இதென்ன பெரிய கம்பசூத்திரமா? வித்யா இருந்த வரைக்கும் ஆபீஸ்க்கு எடுத்துப்போக அதையும் சேர்த்து சமைப்பேன். அந்த வேலையும் இல்ல. என் வீட்டுக்காரருக்கு சமைக்கறது எனக்கு பெரிய கஷ்டமா என்ன? நீ உன் வேலையப் போய் பாரு!”

பருப்பை ஊறப்போட்டு, பாலை அடுப்பில் வைத்தாள் கமலி. “ஏம்மா.. எப்பப் பார்த்தாலும் கோவமாவேப் பேசறே?” என்றபடி அம்மாவின் பின்னால் நின்று கழுத்தை கரங்களால் வளைத்து, முகத்தைப் புதைத்து அவள் வாசனையை நுகர வேண்டும் போல் எழுந்த ஆசையை தன்னுள் அடக்கி சேமித்துக் கொண்டாள்.

அந்தத் தவிப்பு தொடர்ந்தது.

அம்மா தன்னிடம் பேசமாட்டாளா? என்று அவள் பின்னே பூனை யைப் போல அலைந்தாள்.

ஏனோ எரிச்சலை தான் கொட்டினாள்.

சிந்து உழைப்பை முன்னிலும் அதிகப்படுத்தினாள். உழைப்போடு பணமும் சேர்ந்தது.

ஹாலில் அம்மா வெற்றிலையில் பாக்கு வைத்து மடித்துத் தர அப்பா வாயில் போட்டு மென்றார்.

கிச்சனில் இரவு சாப்பாட்டை தட்டில் போட்டுக் கொண்டு சாப்பிட அமர்ந்தவளின் காதில் அவர்கள் பேசுவது விழுந்தது.

“என் கடமையெல்லாம் முடிஞ்சது… இப்ப எனக்கிருக்கிற ஒரே ஆசை என்ன தெரியுமா கமலி?”

“சொல்லுங்க!”

“வர்ற அக்டோபர்ல என்னோட அறுபதாவது பிறந்த நாள். நமக்கு அறுபதாம் கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்படறேன்டி.”

சாப்பிடுவதை நிறுத்திய சிந்து யோசனையாய் விட்டத்தைப் பார்த்தாள்.

அத்தியாயம் – 12

வீடு நிறைய கூட்டம். அதை வீடு என்று கூறுவதுக் கூட தவறு. இந்தத் தெருவிலிருந்து அந்தத் தெரு வரை நீண்டிருந்த பிரம்மாண்ட செட்டிமார் வீடு.

குலசேகரனுக்கு அண்ணன், தம்பி நான்கு பேர். இருவர் வெளிநாட்டிலும், மற்றவர்கள் சென்னையிலுமாக செட்டிலாகி விட, அந்த வீட்டில் குலசேகரன் மட்டுமே குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார். அண்ணன், தம்பிகள் அந்த வீட்டில் தங்களுக்கிருந்த உரிமையை அவரிடம் பணமாகப் பெற்றுக் கொண்டதால் முழு உரிமையும் இப்போது குலசேகரனுக்கு மட்டுமே! காரைக்குடியில் குலசேகரனுக்கென்று பெயரும், கவுரவமும் இருந்தது. சொந்தமாய் தியேட்டர், பட்டுத்தறி, ரைஸ்மில், சூப்பர் மார்க்கெட் என்று அவரது வியாபார ஸ்தலம் விரிந்திருந்தது. அவர் பேச்சிற்கு தலையாட்டும் அருமை மனைவி வாசுகி. மூத்த மகள் சாந்தினி.. வாழ்க்கைப் பட்டது மதுரையில், அடுத்தவன் விஜயகுமார், அடுத்து மனோரஞ்சன். இருவரும் தந்தைக்கு உதவியாய் பிஸினஸ் பார்த்துக் கொள்ள கடைக்குட்டி தேவா மட்டுமே விளம்பரபடம், டெலிபிலிம் என்று தனிப்பாதையை தேர்ந்தெடுத்தான். குலசேகரனுக்கு கடைசிப்பிள்ளை என்பதாலேயே அவன் மீது கொள்ளைப்பிரியம். அதனால் மகனின் லட்சியத்திற்கு குறுக்கே நிற்கவில்லை. மற்றவர்களைப் போல் சினிமாவை காரணம் காட்டி நடிகைகளின் பின்னால் ஓடாமல் குறும்படம், விளம்பரப்படம் என்று அதில் மட்டுமே தன் முத்திரையை பதித்த விதமும் பிடித்திருந்தது.

இன்னும் கூட வீடு முழுக்க பெரியவர்களும், வாண்டுகளும் குழுமியிருந்ததற்கு காரணம் தேவாதான். அவன் இயக்கிய குறுநிலமன்னர்கள் என்று குறும்படம் டெல்லி பிலிம் பெஸ்டிவலில் முதல் பரிசு பெற்றதாய் பேப்பரிலும், டிவியிலும் பார்த்து சென்னையிலிருந்த இரண்டு சித்தப்பாக்களும், அவர்கள் குடும்பத்தாரும் புறப்பட்டு வந்து விட்டனர். வாழ்த்துச்சொல்ல!

எல்லோரும் சாப்பிட்டப்பின்… வேலைப்பளுவால் கடைசியாய் டேபிள் முன் அமர்ந்தார் குலசேகரன். கூடவே அமர்ந்தான் தேவா. “இன்னுமாசாப்பிடலே?” பாசமும், பதற்றமுமாய் கேட்டார். தேவா புன்னகைத்தான்.

“உங்கக்கூட சாப்பிடணும்னுதாம்பா.. வெயிட் பண்ணிட்டிருந்தேன்.”

“அட.. என்ன புள்ள நீ… சின்ன வயசுல நேரத்துக்கு சாப்பிட வேணாமா? அம்மாடி விமலா டிபன் எடுத்து வையம்மா!”

தேவா சிரித்தான்.

“என்ன சிரிக்கிறே?”

“நான் இந்த வயசுல நேரத்துக்கு சாப்பிடணும்.. அப்ப நீங்க?”

“போன் பாட்டுக்கு வந்துட்டே இருந்துச்சா.. அதான்! எல்லாரும் உன்னைப் பத்திதாம்பா பேசினாங்க..”

விஜயகுமாரின் மனைவி விமலா கொலுசு சத்தம் சிணுங்க வந்தாள். இருவருக்கும் தட்டு வைத்து இட்லியும், காரச்சட்டினியும் வைத்தாள்.

பேத்திகளுடன் விளையாடிக் கொண்டிருந்த வாசுகியும் அங்கு வந்தாள்.

“ஏம்மா விமலா… தப்பா நினச்சுக்காதே! இந்த இட்லி, தோசை, பூரி, பொங்கல், வடை தவிர வேற எதையும் சமைக்கத் தெரியாதா? இந்த வயசுக்கு செமிக்கிற மாதிரி, அதே சமயம் சத்தானதா சமைக்கத் தெரியாதா?”

“என்ன வேணும்னு சொன்னாதானே அம்மணிக்குத் தெரியும்?” வாசுகி மருமகளுக்காக பேசினார்.

“கம்பங்களி, கம்பந்தோசை, ராகிபுட்டு, பால்போளி, பணியாரம்…” அவர் பேசப்பேச தேவாவுக்கு கண்முன்னே சிந்து தட்டில் அத்தனை பலகாரமும் எடுத்து வருவதுப் போல தோன்றியது.

“நீங்க சொல்ற தெல்லாம் எனக்கே சமைக்க வராது. பாவம் சின்ன புள்ளைங்களுக்கு எப்படித் தெரியும்?” வாசுகி சிரித்த படி சொல்ல.. மஞ்சள் மினுக்கிய அவளின் கன்னங்கள் இன்னும் பளீரிட்டன.

“அதைச் சொல்லு மொதல்ல! நீயே என் ஆத்தாக்கிட்டே தானே சமைக்க கத்துக்கிட்ட?”

“கவலைப்படாதீங்க… நம்ம கடைசி மருமகளை… இதையெல்லாம் சமைக்கத் தெரிஞ்சவளான்னு பார்த்து கட்டி வைப்போம்!”

“சுனந்தாவுக்கு தான் சமைக்கவேத் தெரியாதே அத்தே?!”

அந்த வார்த்தையை கேட்ட தேவாவின் முகம் சூம்பிப் போனதை குலசேகரன் கவனிக்கத் தவறவில்லை.

“என்னம்மா பேசறே… சாப்பிடற எடத்துல நின்னுக்கிட்டு?” என்றார் உறுமலாய்

“இ… இல்லை மாமா..சுனந்தா…”

“ஒண்ணுபுரிஞ்சுக்கம்மா… சுனந்தா உன் தங்கச்சிதான் நிறைய படிச்சவ… கண்ணுக்கு லட்சணமா இருக்கிற நல்லப் பொண்ணுதான்! தேவா மேல உசரா இருக்கிறான்னு நல்லாவேத் தெரியும். ஆனா, தேவாவுக்கு இஷ்டமில்லாத எந்த விஷயத்தையும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாதுன்னும் இந்த வீட்ல எல்லாருக்கும் தெரியும்… பிறகேன் மறுபடி மறுபடி அதைப் பத்தியே பேசணும்?”

விமலாவின் முகம் வருத்தத்தை பூசிக்கொள்ள…”புரியுது மாமா!” என்றாள்.

தேவா தட்டைப் பார்த்து சாப்பிட்டானேயொழிய.. எண்ணமெல்லாம்…அதில் தெரிந்த சிந்துவின் உருவத்தின் மீதே இருந்தது.

மனதுக்குப் பிடித்தவர்களை பார்க்காமல் பேசாமல் கூட இருந்து விட லாம். ஆனால் நினைக்காமல் இருக்க முடியாதல்லவா?

‘எனக்கு பரிசு கிடைத்த விஷயம் அவளுக்குத் தெரிந்திருக்குமா? டி.வி.யில் பார்த்திருப்பாளா?’ அவனுள் எழுந்த கேள்வியில் ஏக்கம் மிகுந் திருந்தது.

அன்றிரவு… தனிமையில் கணவருக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்த வாசுகி… மெல்லக் கேட்டாள்.

“நம்ம மருமகக்கிட்ட காலையில அப்படி பளிச்சின்னு பேசினது எனக்கு சரியாப்படலைங்க!”

“ஏன் வாசுகி?”

“சுனந்தா…தேவாவை தான் கட்டிக்கணும்னு வர்ற வரனையெல் லாம் தட்டிக் கழிச்சிட்டுருக்கா. நம்ம அந்தஸ்துக்கு ஏத்தவ… அழகான படிச்சப் பொண்ணு! தேவாவிடம் எடுத்துச் சொல்லி…”

“அறிவிருக்கா உனக்கு? தேவா என்ன சின்னப்பிள்ளையா? வற்புறுத்தி தலையில கட்ட? அவனுக்குத் தெரியாதா… சுனந்தாவோட தகுதி என்னன்னு வேண்டாம்னு சொல்றான்னா… அவனோட எதிர்பார்ப்பு வேறன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.”

“அதுக்காக…அவன் யாரையாவது காதலிச்சா?”

“தப்பென்ன இருக்கு? ஒரு படம் எடுத்து அத்தனை பேர் மத்தியில் முதல் பரிசு வாங்கறவனுக்கு நல்லது கெட்டது தெரியாதா? வேற ஜாதி பொண்ணு அவன் மனைவியா வந்தா சந்தோஷம் தான். நமக்கு புதுசா சொந்த பந்தம் வரட்டுமே! சும்மா…நமக்குள்ளேயே சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு பொண்ணு எடுத்து, பொண்ணு குடுத்துன்னு… புது சொந்தமே உருவாகலே! நாமளும் கொஞ்சம் பரந்த மனசுள்ள வங்களா இருக்கணும் வாசுகி! தேவா மனசுல என்ன இருக்குன்னு பேசி தெரிஞ்சுக்கணும்!”

கணவர் சொல்வதைக் கேட்டு நம்ப முடியாமல், அரண்டுப் போயிருந்தாள் வாசுகி.

– தொடரும்…

– எனக்கெனவே… நீ… கிடைத்தாய்! (நாவல்), தேவியின் கண்மணி, ஏப்ரல்-15, 2011.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *