உண்மைச் சுதந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2026
பார்வையிட்டோர்: 83 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

“எனக்கு இந்த வீட்டில் சுதந்திரமேயில்லை” என்று கோபத்தில் கத்தியபடியே கதவைத் திறந்து வெளியே வந்தாள் மாலதி. மாலதி ஒரு அரசு நிறுவனத்தில் மேலதிகாரியாகப் பணிபுரிந்து வந்தாள். கை நிறைய சம்பளம். அவளது கணவன் தினேஷ், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தான். ஆனால் கணவனை விட மாலதியின் வருமானம் அதிகம். அலுவலகத்தில் பலருக்கு வழிகாட்டும் பொறுப்பில் இருந்தவளுக்கு வீட்டில் மட்டும் நிம்மதியும் சுதந்திரமும் இல்லாமல் போனது.

தினேஷிற்கு குடிப் பழக்கம் இருந்தது. வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது மது அருந்திவிட்டுதான் வருவான். அதோடு பல கெட்ட நண்பர்களின் சகவாசமும் இருந்தது. அவர்களும் வீட்டுக்கு அடிக்கடி வந்து அரட்டை அடித்து விட்டுச் செல்வதும் உண்டு. ஆனால் மாலதிக்கு இதெல்லாம் அறவேப் பிடிக்கவில்லை.

“இது வீடா நண்பர்களின் கேளிக்கை விடுதியா? உங்க மனசில என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்” என்று மாலதி அடிக்கடி கேட்கும் போதெல்லாம் என் வீட்டில் நான் நண்பர்களோடு பேசி சிரித்து மகிழ எனக்கு உரிமையில்லையா? என்று தினேஷ் கோபித்துக் கொள்வான்.

ஒருநாள் இரவு நண்பர்கள் அனைவரும் வீட்டில் கூடி கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் மாலதிக்கு அலுவலகத்தில் முக்கியமான வேலை இருந்தது. அதற்காக இரவு முழுவதும் தயாரிக்க வேண்டுமென்று திட்டமிட்டிருந்தாள். தினேஷிடம், “நாளைக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது. உங்கள் நண்பர்கள் வீட்டிற்கு வருவதைத் தவிருங்கள. அப்படியே வந்தாலும் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்” என்றாள்.

அதற்கு தினேஷ், “ஓ நீ அதிகமாகச் சம்பாதிக்கிறாய் என்றத் திமிரில் பேசுகின்றாயா, எல்லாவற்றையும் உன் விருப்பப்படிதான் செய்ய வேண்டுமா எனக்கு இந்த வீட்டில் சுதந்திம் இல்லையா” என்று கோபமாகப் பேசி சண்டை போட்டான். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. மாலதியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

“சுதந்திரத்தை இருட்டில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை” என்பது நாட்டிற்கும் சரி இந்த வீட்டிற்கும் பொறுந்துவதாகவே இருக்கின்றது. என்று தினமும் புலம்பிக் கொண்டிருக்கின்றேன். இந்த வாழ்க்கைக்கு எப்போது விடியல் வரும் என்று மனதிற்குள் அழுது கொண்டே தினேஷிடம் கோபித்துக் கொண்டு அடுத்த நாள் அம்மா வீட்டிற்குக் கிளம்பிளாள் மாலதி.

ஒரு வாரம் உருண்டோடியது.

அன்று சுதந்திர தினம். வீட்டிற்குப் பக்கத்திலிருந்த மேநிலைப்பள்ளியில் விழாவிற்கான ஏற்பாடுகள் வெகு தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. வீட்டில் சும்மாதானே இருக்கின்றோம். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று மாலதி பள்ளிக்குச் செனறு கூட்டத்தில் அமைதியாக அமர்ந்தாள். முக்கிய பிரமுகர் வந்தார். கொடியேற்றினார். ஜனகணமன பாடல் அனைவராலும் பாடப்பட்டது. அனைவருக்கும் மிட்டாய் வழங்கப்பட்டது.

ஒலிபெருக்கி அருகில் சென்ற அவர் “நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற சுதந்திரம் மிகவும் விலைமதிப்பற்றது. ஆனால் சுதந்திரம் என்பது நமக்குப் பிடித்ததைச் செய்வது மட்டும் அல்ல. பிறருடைய சுதந்திரத்தையும் உரிமையையும் மதிப்பதுதான் உண்மையான சுதந்திரம். மகாத்மா காந்தி பிரச்சனைகளை வன்முறையால் தீர்க்கவில்லை. மாறாக, அமைதி. பொறுமை, ஆழமானச் சிந்தனை கொண்ட உரையாடல் ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்டு “கத்தியின்றி இரத்தமின்றி” அகிம்சை முறையில் சுதந்திரம் வாங்கித் தந்தார்.

இது நாட்டுக்கு மட்டுமல்ல வீட்டிற்கும் பொருந்தும். வீடுகளிலும் கோபம் பிரச்சனைகளைத் தீர்க்காது. அமைதியான பேச்சும், பரஸ்பர மரியாதையும் தான் குடும்பத்திற்கு விடியலையும் வெற்றியையும் தேடித் தரும் என்று கூறினார். அந்த வார்த்தை மாலதியின் மனதை ஆழமாகத் தொட்டது. குடும்பங்களில் விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை என்பதை உணர ஆரம்பித்தாள்.

நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தும் அதை பேணிப்பாதுகாக்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம். அதுபோலத்தான் குடும்ப அமைதியையும் தினமும் பாதுகாக்க வேண்டும். என் கணவனின் தவறுகளை நான் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் கோபத்தால் அவற்றை மாற்றவும் முடியாது. தீர்க்கவும் முடியாது. அமைதியாகப் பேசித்தான் த|Pர்க்க வேண்டும் என்று உணர ஆரம்பித்தாள்.

வீட்டிற்குத் திரும்பிய மாலதியைப் பார்த்த கணவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கணவனை வணங்கி அமைதியாகப் பேசினாள். நம்முடைய வாழ்க்கை இப்படியேப் போகக் கூடாது உன் குடிப்பழக்கமும் வீட்டிற்கு நண்பர்களை அழைத்து இரவு முழுவதும் அரட்டை அடிப்பதும் நம் குடும்ப அமைதியைப் பாதிக்கின்றது. அதே நேரத்தில் நான் சம்பாதிப்பதை ஒருபோதும் பெருமையாக நினைத்து உன்னைத் தாழ்வாகவும் பார்ப்பதில்லை. நாம் இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து வாழு முயற்சிப்போம் என்று அமைதியாயக் கூறினாள்.

அதைக்கேட்ட தினேஷ் மாலதி, நீ என்னிடம் சண்டையில்லாமல் பேசிய விதம் என் மனதை முற்றிலுமாக மாற்றி விட்டது. இரு மாடுகளும் ஒழுங்காக ஓடினால்தான் வண்டி சாலையில் சிறப்பாக ஓடும் என்பதைப்போல கணவனும் மணைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தால்தான் இல்லறம் சிறப்பான அமையும் என்பதை நான் புரிந்து கொண்டேன். நானும் என்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன் இது உறுதி என்றான். அன்றிலிருந்து அவர்களின் வாழ்க்கையில் மெதுவாக மாற்றம் தொடங்க ஆரம்பித்தது.

மாலதி அன்று ஒரு உண்மையைப் புரிந்து கொண்டாள். சுதந்திரம் என்பது வாழ்க்கை பிடிக்கவில்லை என்று வீட்டை விட்டு வெளியேறுவதில்லை. கோபம், அகந்தை, பிடிவாதம், பொறாமை. காய்மகாரம், ஆகியவற்றிலிருந்து விடுபட்டு அன்போடும் மரியாதையோடும் மனம் ஒருமித்து வாழ்வதுதான் உண்மையான சுதந்திரம் என்பதை இருவரும் புரிந்து கொண்டனர்.

அப்ப உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். சுதந்திர தின நல் வாழ்த்துகள்.

நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *