அவள் சுவரோடு பேசுகின்றாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2026
பார்வையிட்டோர்: 102 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

லண்டன்.

வீடு என்றால் சொர்க்கம் என்று சொல்லுவார்கள். வதனா எங்கு சென்றாலும்; ‘எப்போது வீட்டுக்குத் திரும்புவேன்’ என்ற ஆவலோடுதான் இருப்பவள். வீடு அவளின் அலங்காரம் அல்ல அவளின் அடையாளம். வெளிநாடுகளுக்குப் பிரயாணம் செய்தாலும் எப்போது என் வீட்டுக்குத் திரும்புவேன் என்ற ஒரே எண்ணம்தான் அவள் மனசில் ஊசலாடும். அவள் இருக்கும் வீடு அவளது சொந்தவீடு இல்லாவிட்டாலும் தான் வசிக்கும் வீட்டை அலங்காரமாக வைத்திருப்பதில் அலாதியான விருப்பம் கொண்டவள்.

பெண்கள்தான் தங்களைப்;போல அதிகமாக வீட்டை விதம் விதமாக அலங்கரித்துப் பார்த்துச் சுத்தமாகவும் வைத்திருக்க முயல்வதை வதனா கண்டு ஆனந்தம் அடைந்திருக்கிறாள். வீட்டுக்கும் இந்த உலகத்திற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறதே என்றும் அடிக்கடி கற்பனை பண்ணுவாள். ஆனால் உலகம்தான் அவளுக்கு உன்னதமான மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. அவளது சமூக சேவையைப் பாராட்டி விருது கொடுத்திருக்கிறது. அவளுக்கு உற்சாகம் அளித்திருக்கிறது. இருந்தும் தான் இருக்கும் வீடு மட்டும்தான் அவளுக்குப் பாதுகாப்பானதென்று ஓடி வருவாள். எத்தனை இன்ப துன்பங்கள் வரும்போதும்; வீடு ஒன்றுதான் அவளை அரவணைத்து எல்லாவற்றையும் அங்கீகரிப்பதை வதனா உணர்ந்திருக்கிறாள்;.

ஆனால் இப்போது வதனாவுக்கோ சொர்க்கமாக இருந்த வீடு நரகமாகிக் கொண்டே இருக்கிறது. வீட்டை நாம் தான் நரகமாக்கிக்கொண்டு இருக்கிறோம். இன்றைய நவீன காலத்தை வதனாவால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. தொழில் நுட்பங்கள் அதிவேகமாக மாறிவிட்டது, செயற்கை நுண்ணறிவுச் செயலிகளின் வருகையும் வந்துவிட்டன, கணவன் மனைவி உறவு மாறிவிட்டது. பெற்றோர் பிள்ளைகளின் உறவுகள் மாறிவிட்டது. சகோதரர்களின் உறவு முறை மாறிவிட்டது. உலகம் எல்லாமே மாறிவிட்டது. உலகத்தில் அத்தனையும் விலை மதிப்பாக மாறிவிட்டது. எல்லாமே விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.

முன்பு உலகம் அவளுக்குக் கொடுக்காத அந்தப் பரிவு வீட்டில் கிடைக்கும் என்று ஓடி வந்தவளுக்கு இன்று எதுவுமே கிடைப்பதில்லை. வெளியில் வீட்டை விட்டுச் சென்றவர்கள் வீட்டுக்கு வந்தால் அவரவர் அறைகளுக்குள் சென்று விடுகிறார்கள். பேச்சுவார்த்தைகள் கிடையாது. ஆனால் தமக்குத் தேவையேற்படும்போது மட்டும் நாடகம்போல் நடித்து முடித்து விடுவார்கள். இவற்றை அவதானித்துக்கொண்டே வந்தவள்தான் வதனா. இருந்தும் தனது வேலைப்பணியோடு தொடர்ந்து வீட்டைத் துப்பரவு செய்வதும் அவற்றை அலங்கரிப்பதும் ஒழுங்காக கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதும், சமையல் வேலைகள்; செய்வது என்று கிரமமாக தொடர்கிறது வதனாவின் பணிகள்.

வதனாவுக்கு மாதுமை என்ற அழகான ஒரே ஒரு மகள் இருந்தாள். தனது ஆசை மகளை லண்டனில் உள்ள பிரத்தியேக பாடசாலையில் விட்டுப் படிப்பிக்க வேண்டும். லண்டனில் சிறந்த பல்கலைக்கழகத்திற்கு அவள் செல்ல வேண்டும். அவள் லண்டனில் பெரிய பதவியில் பணியாற்ற வேண்டும். அவளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைந்து சிறப்பாக வாழவேண்டும். இப்படிப் பல ஆசைக்கனவுகளை வளர்த்து வந்தவள்தான்; வதனா. இவள் மட்டுமல்ல இவள் போன்றுதான் புலம்பெயர்ந்து வாழும் அத்தனை பெற்றோரும் இப்படியான கனவுகளை வளர்த்து பிள்ளைகளுக்காகத் தங்களையே அர்ப்பணிப்பவர்கள். அதற்காக அவர்கள் அனுபவித்த துன்பங்களோ கொஞ்ச நஞ்சம் அல்ல. விசேட வகுப்புகளுக்காக ஏறி இறங்காத இடங்கள் இல்லை. அதனைவிட தமிழ் பாடசாலைகள், நுண்கலைப் பாடங்கள் என்று பிரத்தியேக வகுப்புகள் ஒரு புறம். மாதுமைக்கு

ஒரு குறிப்பிட்ட வயது வரும்வரை மாதுமையோ தன் தாய் வதனாவின் நிழலாகவே இருந்தாள். கொட்டும் பனியிலும், கடுமையான குளிரிலும் ஏன் தாங்க முடியாத வெக்கைக் காலங்களிலும்சரி பாடசாலைக்கு அழைத்துச் செல்வதும், பின்னர் வீட:;டுக்கு அழைத்து வருவதும் என்று மாதுமையோடு தனது அன்பையும் கருணையையும் கொட்டித் தீர்த்தாள்; அன்னை வதனா.

பாடசாலை வாழ்க்கையைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் தெரிவாகி அங்கும் கொண்டு சென்று பத்;திரமாக இருக்க வசதிகள் அமைத்துக் கொடுத்தார்கள். பின்னர் வாரா வாரம் சுவையான உணவுகளைத் தாயரித்து பல்கலைக் கழகத்துக்குக் கொண்டு செல்வது என்று அடுத்த ஒரு பெரிய காண்டமாக இருந்தது வதனாவுக்கு. அப்போ மகளுக்கு முக்கியமான பரிவு காட்டும் உலகம் அம்மாதான். வேறு எந்த ஒரு உயிரால் இப்படி இருக்க முடியும் இந்த உலகில்?

மனிதர்கள் கூடுதலாக தம் வாழ்க்கையில் நம்புவது வீட்டில் உள்ளவர்களைத்தான். உலகத்தை அல்ல என்பதை அவள் அனுபவ வாயிலாகப் புரிந்து வைத்திருக்கிறாள். ஆனால் பெற்றோர்களோ பிள்ளைகள், பிள்ளைகள் என்று அவர்களுக்காக பேரன்பு கொண்டவர்களாக வாழ்ந்து விடுகின்றார்கள். எந்த உறவுகளும் நிலையானது அல்ல என்பதைப் புரிந்து கொள்கின்றாள் இப்போது வதனா. அதிலும் யார் மீது அதிகமாக அன்பு செலுத்துகிறோமோ அவர்களால்தான் அதிகமாக விரட்டப்படுகின்றோம் என்பதையும் அனுபவத்தின் வாயிலாக உணரத் தொடங்குகின்றாள் வதனா.

இப்போ மாதுமை படித்துப் பட்டம் பெற்று பெரிய உத்தியோகத்தில் அமர்ந்துவிட்டாள். இப்போது அவள் ஒரு வித்தியாசமான பெண்ணாக வீட்டில் தென்படுகிறாள். முன்பு போன்று பெற்றோர்களுடன் கதைப்பதைப்பதைக்கூட குறைந்துக்கொண்டாள். அவளுக்கு தேவையேற்படின் ஏதாவது முக்கிய விடயங்களை மட்டும் பகிர்ந்து கொள்வாள். தனது நண்பர்களோடு உல்லாசமாகத் திரிவதும், தான் விரும்பும் இடங்களுக்கு தனது நண்பர்களோடு செல்வதும், சில நேரங்களில் நண்பர்கள் வீட்டிலேயே தங்குவதுமாக அவள் போக்கு மாறிக்;கொண்டது.

இன்றைய தலைமுறையினர் படித்துப் பட்டம் பெற்று புத்தித் திறமை மட்டும் இருந்தால் போதுமா? என்று வதனா வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்கின்றாள். படித்துப்பட்டம் பெற்றதும் உலக இலக்கியங்களையெல்லாம் படித்து முடித்தது மாதிரியெல்லோ இருக்கின்றார்கள். இப்போது. இன்றைய உலகில் அப்படித்தான் அதிகமானோர் தங்களைத் தாங்களே கிரீடமாக்கி எண்ணிக் கொள்கின்றார்கள். கல்வி வேறு, அறிவு வேறு என்பதைச் சமூகம் உணர மறந்து விடுகின்றது.

நாம் எல்லோரும் கல்வி கற்கின்றோம். ஆனால் அந்தக் கல்வியின் மூலம் பண்பாட்டை மாற்றிவிட முயற்சிப்பதா? எனது துயரம் போலத்; தான் மற்றவர்களும் துயரப்படுவார்கள் என்று ஒரு பரிவுணர்வைப் புலப்படுத்துகின்றார்களா? பட்டம் பெறுவதற்காகப் பாடமாக்கிப் படிப்பது எல்லாம் மதிப்பெண் வாங்குவதற்குத்தான் என்பதை நாம் உணரத் தவறி விடுகின்றோம். எமது பழக்க வழக்கங்களில் இருந்துதான் அவை பிரதிபலிக்கவேண்டும். அதனைப் பிரதிபலிக்கும் அறிவு இவர்களிடம் எங்கே இருக்கின்றது? ஆம் இருக்கின்றது. அதிகமானோரிடம் இருக்கின்றது. சமூகம் பற்றிய பார்வை இவர்களிடம் இருக்கிறதா? ஆம், அதிகமானோரிடம் இருக்கின்றது. அதனை விடுத்து இன்றைய தலைமுறையினர் மனிதர்களாக இருக்கிறார்களா? மிகவும் நல்லவர்களாகவும் இருக்கின்றார்கள். இப்படியாகப் பல கேள்விகள் வதனாவின் மனதைக் குடைந்து பதில்களை நல்ல எண்ணங்களாக்கிக் கொண்டே இருப்பாள்.

வதனாவுக்குக்கு திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறளும் மனதில் வரும்.

‘தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது’ என்பதுதான் தம்முடைய மக்கள் தம்மை விடக் கல்வி அறிவுடையவர்களாக இருப்பதுவும், தம்மைவிட உலகில் உள்;ளவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லைத்தான் ஆனால் மனிதநேயம் இல்லாமல், பாச உணர்வுகளே இல்லாமலே இந்தத் தலைமுறையினர் பலரைப் பார்க்க முடிகின்றதே! இவற்றை எண்ணும்போது வேதனை தரும் விடயமாக இருக்கின்றது என்று வதனா எண்ணுவாள்.

ஒரு வீட்டில் இருந்துகொண்டே பெற்றோர் ஈமெயில் வாயிலாக செய்திகள் அனுப்பி ஒன்றாக இருந்து சாப்பிடுவதற்கு வாங்கோ என்று அழைக்கும் பெற்றோர்களையும் வதனா அவதானித்து ஆச்சரியம் அடைந்திருக்கிறாள். இந்தத் தலைமுறையினர் எதனையுமே காதில் வாங்காத மாதிரியே நடமாடுவதைத்தான் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

இப்போ வதனாவுக்கு தன் மகளோடு கதைப்பதற்குக்கூட ஏதோ ஒரு வித மனப்பயத்தை அல்லவா உண்டு பண்ணுகிறது. இப்போது அம்மாக்கள் மகள்களுக்குப் பயப்படுவதுபோல இருக்கிறது. இப்போ உலகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற ரஷ்யாவும் உக்கிரேயினும்கூட ஒருவரை ஒருவர் பார்த்துப் பயப்பட மாட்டார்கள் போலத்தான் இருக்கிறது என்று வதனா நினைப்பதுண்டு.

மாதுமை அறையில் இருந்து எதாவது வேலைசெய்து கொண்டு இருப்பதுண்டு. அங்கே மாதுமை என்ன செய்கிறாள் என்பது அவள் அம்மாவான வதனாவுக்குத் தெரியாது.

கதவைத்தட்டி ‘என்னம்மா என்று எதாவது சாப்பிடன் பிள்ளை? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டால், கதவை லேசாக நீக்கி ஒருவித பார்வை பார்த்துவிட்டு…

‘என்ன அம்மா, பிளீஸ் என்னை ‘டிஸ்ரேப்’ பண்ணாதீங்கள் என்று பதில் சொல்லிக் கதவைச் சாத்தி விடுகிறாள். வதனாவுக்கு ஒன்றுமே புரிவதில்லை. இவளுக்கு என்ன பிடித்திருக்கிறது? படித்துப் பட்டம் பெற்று வேலை பார்க்கத் தொடங்கியவுடன் இதென்ன ஒரு புதுமாதிரியான மாற்றமாகத் தெரிகிறது.

இனி அவளுக்கு ஒரு நல்ல பொடியனைப் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். அவளுக்குத் திருமணம் செய்யும் வயதும் நெருங்கிக் கொண்டு வருகிறது என்று வதனா தன் உள்ளார்ந்த கற்பனையில் ஆழ்ந்து கொண்டிருப்பதுண்டு. ஆனால் இவள் பாவியோடு எப்படிக் கதைப்பது? அவளின் பார்வையே பயத்தைத் தருகிறதே! ஏன்று தனக்குள் விம்மிப் பொருமுவாள் அம்மா. என்போன்ற ஒரு தாய் இப்படி வாழ வேண்டுமா? ஏன்று அடிக்கடி தன்னுள் கவலை கொள்வதுண்டு வதனா.

அதற்டையில் ஒருநாள்:

‘அம்மா’ என்றாள்.

‘என்ன மாதுமை?’

‘நான் லண்டனில் கிழக்குப் பகுதியில் ஒரு வீடு வேண்டுவதற்கான முன்னெடுப்புகள் செய்துவிட்டேன்’

‘ஓ அப்பிடியா மாதுமை நல்ல விடயம்’ என்றாள் வதனா.

‘அம்மா அந்த வீட்டை வாங்கி அதனை மேலும் வசதிகள் செய்துபோட்டு, நான் வாடகைக்கு வேறு ஆட்களை நியமிக்கப் போகிறேன் அம்மா?

அதற்கும் வதனா: ‘அப்படியா? நல்ல விடயம் பிள்ளை’ எனப் பதில் கூறிவிட்டு இருந்துவிட்டாள்.

இவளோடு கதைப்பதால் எந்தவிதமான மாற்றமும் வரப்போவதில்லைத் தானே! அவள் விருப்பப்படி எதையாவது செய்யட்டும் என்று விட்டுவிட்டாள் வதனா.

வதனா வீட்டைத் தினமும் சுத்தம் செய்வதுண்டு. மாதுமை இல்லாத நேரம் பார்த்து அவளின் அறையையும் ஒதுக்கித் துப்பரவு செய்வாள் வதனா. காரணம் மாதுமையின் அரைவாசிப் பொருட்கள் அதாவது அவளின் உடுப்புகள் உட்பட நிலத்தில் விரிந்து அலங்கோலமாகக் காட்சியளிப்பது . வதனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதுண்டு. எந்தப் பொருளும் நிலத்தில் இருப்பதை அவள் மனம் ஏற்க மறுக்கும். அப்பிடி யார் செய்தாலும் வதனாவுக்கு அச்செயல் பிடிக்காததொன்று. எல்லாப் பொருட்களுமே எமக்குத் தேவையானது. எம்மை அழகு பார்ப்பது? எமக்கு எதாவது விதத்தில் உதவிகள் செய்யும் எந்தப் பொருளையும் நிலத்தில் போட்டு அவமதிக்கக் கூடாது. அவற்றிற்கு நன்றியுணர்வைக் காட்டி அவற்றை நாம் மதிக்கவேண்டும் என்று எந்தப் பொருளையும் நிலத்தில் வீசமாட்டாள் வதனா.

ஆனால் மாதுமையோ?

‘ஏன்ன அம்மா நீங்கள் எனது அறைக்குள் வந்திருக்கிறீர்கள் போல் இருக்கிறது’ என்பாள்.

ஏன் மாதுமை அப்பிடிக் கேட்கிறாய்?

நான் வைத்த இடத்தில் இருந்த சில பொருட்களைக் காணவில்லை.

அறைக்குள் இருந்த குப்பைக் கூடையைத் துப்பரவு செய்தீர்களா? அவற்றோடு சேர்த்து எறிந்திருப்பீர்கள்?

இல்லை மாதுமை. நான் தேவையில்லாதவற்றைத்தான் அகற்றியிருந்தேன்.

நீங்கள் என்னுடைய அறைக்குள் வந்து எதுவும் துப்பரவு செய்யவேண்டாம் அம்மா. ஒன்றும் எடுத்து வீசவும் வேண்டாம். நான் எனது அறையைக் கவனித்துக் கொள்வேன்.

வதனாவுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இப்படியும் தனது மகள் மாதுமை கதைக்க வெளிக்கிட்டிட்டாளே! பெரிய ஒரு பெருமூச்சு வெளிவந்து அவளை ஆசுவாசப்படுத்தியது. அவள் பதில் எதுவுமே கூறவில்லை. மௌனமாகிப் பொறுமையாக இருந்து விடுவாள். இந்தப் பூமி எவ்வளவு பொறுமையாக இருக்கிறது. எம்மைச் சுற்றிவரவுள்ள மரம், செடி, கொடிகள்கூட எவ்வளவு பொறுமையாக இருக்கின்றன. அவைகள் போன்று நாமும் இருந்துவிட்டுப் போவோமே!

நாம் எமது பெற்றோர்களுடன் வாழ்ந்தபோது எமது வீட்டிற்கு வந்து சென்ற விருந்தினர்களோ அளவி;ட முடியாது. இங்கையின் பல பகுதிகளில் வாழ்ந்த கலைஞர்கள் எழுத்தாளர்கள், கட்சித்தோழர்கள், உறவினர்கள், பாடசாலைத் தோழிகள் என்று விதம் விதமான மக்கள் வீட்டிற்கு வருவார்கள். என்ன ஒரு கலகலப்பும் சந்தோஷமும் அடைந்திருக்கிறோம். எல்லாரும் மகிழ்ந்து உணவு உண்டு கதைத்து, பகிடிகள் விட்டுச் சிரித்து மகிழ்வாக இருந்திருக்கிறோம். அவர்கள் வீட்டில் வந்து தங்கிச் செல்லும்போது எவ்வளவு சந்தோஷம். இவ்வண்ணம் குதூகலித்து வாழ்ந்திருக்கிறோம். அவை எல்லாமே ஒரு பொற்காலம் எனத்தான் வதனாவுக்கு எண்ணத் தோன்றுகின்றது. இப்போது வீட்டுக்கு விருந்தினர்களை அழைத்தால் அவர்களைப் பார்க்கக்கூட விரும்பாத ஒரு தலைமுறையிரைத்தான் நாம் பார்க்க முடிகின்றது.

இப்போ வதனா தனது நண்பிகளைக்கூட வீட்டிற்கு அழைப்பதில்லை. வீட்டிற்கு விருந்தினர் யாராவது வந்தால்கூட அவர்களை வந்து பார்க்க விருப்பமில்லாதது போன்று ‘ஹாய்’ என்று விட்டுப் போவதுதான். பின்னர்; தங்கள் அறையிலேயே சத்தியாக்கிரகம். அப்படி இல்லாவிடில் தமது நண்பர்களோடு பொழுதைக் கழிப்பார்கள்.

தனிமை சில வேளைகளில் எதைப் புரிய வைத்ததோ, இல்லையோ இவ்வளவு காலமும் மிகப் பெரிய முட்டாளாக இருந்திருக்கிறோம் என்பதைப் புரிய வைத்துவிடும். வதனா அதிகமான நேரங்களில் தனிமையைத்தான் உணர்ந்திருக்கின்றாள்.

மனிதர்கள் உறவுக்காகத்தானே ஏங்குகிறார்கள். தனது அன்பு மகள் மாதுமையோ முற்றாக மாறிவிட்டாளே! வதனா தன் வீட்டுக் கதையை யாரிடமும் சொல்வதற்கு விரும்பாதவள். சொல்லவும் முடியாதுதானே! அதுவும் உங்கள் வீட்டுப் பெண்ணா என்று ஏளனம் செய்வார்கள் என்று சிந்திப்பாள். வதனா தன் மனத்துயரங்களை யாரிடம் கூறுவது என்றே புரியவில்லை. சுற்றியிருக்கும் மனதர்களிடமிருந்துகூட அவளுக்கு எதுவித பரிவும் கிட்டவில்லை. அவளது உடலும் சோர்வடைய ஆரம்பித்துவிட்டது.

வதனாவுக்கு புத்தகங்கள் வாசிப்பது மிவும் பிடித்தமான செயல். அதிகமாகச் சிறுகதைகைள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று வாசித்துக்கொண்டே இருப்பாள். ஆனால், இப்போது எந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினாலும் அவளுக்கு அதனை முன்புபோல் உருசித்து, ரசித்து வாசிக்க முடியவில்லை. உலகின் சிறந்த விடயங்களை உள்வாங்கிக் கொள்ள சிறந்தவை புத்தகங்கள் தானே என எண்ணுகின்றவள். எமது பண்பாட்டை மாத்திரமன்றி, எம்மை மேலும் மேம்படுத்திக்கொள்ள, உலகைப் புரிந்து கொள்ள புத்தகம்தான் சிறந்தவை என்பாள் வதனா. ஆனால் ஏனோ தெரியவில்லை முன்புபோல் அவளால் இப்போது வாசிக்க முடிவதில்லை.

உடல்நிலை அதீத சோர்வை ஏற்படுத்தியது. வைத்தியரிடம் சென்று தன்னைப் பரிசோதிக்க வேண்டுமென எண்ணினாள். அதற்காக ஒழுங்குகளைச் செய்து கொண்டாள். குறிப்பிட்ட நாள் வந்ததும் வைத்தியரிடம் சென்று பரிசோதித்த வேளை, வதனாவின் உடல்நிலை சற்று வித்தியாசமான வெளிப்பாடுகளை உணர்ந்த வைத்தியர் அவளை இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டுமென்று கூறுகின்றார். அதற்கான நாளும் ஒழுங்கு செய்யப்பட்டது.

பரிசோதனையை வைத்தியசாலையில் சென்று மெற்கொண்டு வந்தவள். அந்த இரத்தப் பரிசோதனையின் முடீவுகள் வழமை போன்று நல்ல தகவல்களைக் கொண்டதாகத்தான் இருக்கும் என்ற முழு நம்பிக்கையோடுதான் காத்திருந்தாள் வதனா.

ஆனால்; வதனாவை மிகவும் சீக்கிரமாக பார்க்க வேண்டுமென்ற வைத்தியரின் தொலைபேசி அழைப்பு சற்று வதனாவை யோசிக்கத்தான் செய்தது. மீண்டும் வைத்தியரிடம் செல்கின்றாள் வதனா.

உங்கள் இரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. ஆனால் உங்கள் இரத்தத்தில் புற்று நோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன. யோசிக்க வேண்டாம் மிஸிஸ். வதனா. சிகிச்சை கொடுத்து அதனை நிவர்த்தி செய்யலாம். தைரியமாக இருங்கள் என்று வைத்தியர் ஆறுதல் கூறி உற்சாகப்படுத்துகின்றார். மிக விரைவில் அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு விட்டு உங்களுக்கு அறிவிப்போம் என்ற உற்சாகம் தரும் வைத்தியரின் ஆலோசனையோடு வீடு திரும்புகின்றாள் வதனா.

மனதில் ஒருவித அச்சம். இனம்தெரியாத சிந்தனைகள் அவளிடம் இருந்து புறப்பட்டன.

வீடு சென்றதும் எப்படி அதனை வீட்டில் தெரிவிப்பது என்பது வதனாவுக்குப் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. அதனைவிட அவளுக்கு தனது மகளின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைதான் மேலோங்கியது. எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் மாதுமை என்ன செய்வாள்? என்ன இருந்தாலும் என் ஆசை அருமையான பெண்குஞ்சு. பெற்றோர்களால் தானே தமது பிள்ளைகளின் துன்ப துயரங்கள் பற்றியோ, அவர்களின் சந்தோஷங்கள் குறித்தோ, அவர்களின் ஆரோக்கியம் குறித்தோ அக்கறையோடு பேச முடியும்.

உலகத்திலுள்ள மற்றவர்கள் அதில் அக்கறை கொண்டு பேசுவார்களா? என்று வதனா தன் இதயத்துள் புலம்பித் தீர்க்கின்றாள்.

இறுதியாக ஒரு முடிவுக்கு வருகின்றாள். தனக்கும் இப்படியான ஒரு நோயும் தலைகாட்டுகின்றதே! வதனாவின் வாழ்வும் எவ்வளவு காலத்திற்கோ தெரியவில்வை. இன்றைய காலத்தில் ஆரோக்கியமானவர்களே தீடீரென உலகத்திற்கு விடை கொடுப்பதைப் பார்த்து வியந்து கவலையில்; தோய்கின்றோம். இன்று அவள் எதிர்காலத் திட்டங்கள் பற்றி தன் அன்பு மகள் மாதுமையிடம் நேராகவே கேட்கவேண்டும் என்று வதனா உறுதி எடுக்கிறாள்.

பிள்ளை மாதுமை இன்று நான் உன்னோடு ஒருக்கா அவசரமாகக் கதைக்க வேண்டும் பிள்ளை?

ஏன்னம்மா அப்படி என்ன அவசரமாகக் கதைக்கப் போறீங்கள்?

மாதுமை வீட்டில் இருந்துகொண்டே வேலை செய்வதால்.

அம்மா இன்று எனக்கு ஐந்து மணிக்கு பிற்பாடுதான் வேலை முடிவடையும். அதன் பின்னர் கதைப்போமா அம்மா?

ஓம் பிள்ளை.

மணியும் ஐந்துக்கும் மேலாகிவிட்டது.

பிள்ளை மாதுமை உனது எதிர் காலம் பற்றி என்னயோசித்துக்; கொண்டிருக்கிறாய் அம்மா. வயதும் திருமண வயதைத் தாண்டுகின்றது. நீ யாரையாவது விரும்பியிருந்தால் நல்ல விடயம். அப்படி இல்லாவிட்டால் நாங்கள் யாரையாவது பார்த்து ஒழுங்குபடுத்துவதா?

என்ன அம்மா. நான் சந்தோஷமாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? கலியாணம் கலியாணம் என்று சும்மா கஷ்டத்துக்குள் மாட்டப் பாக்கிறீங்கள் அம்மா. நீங்கள் வேறு காலத்து மனிதர் அம்மா. உங்களுக்குச் சொன்னால் ஒன்றும் புரியாது.

எங்களுடைய பண்பாட்டில் வயது வந்த பெண் குடும்பமாகி வாழ்க்கையை சந்தோஷமாகத் தொடர வேண்டும் மாதுமை.

அம்மா நீங்கள் ஒரு தேவையில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் அம்மா. எதிர்காலத்துக்கு அது தேவையில்லாதது அம்மா. கவலைப்படுவது எல்லாம் ஒரு கற்பனை அம்மா. எனக்கு எனது எதிர்காலத்தைக் கையாளத் தெரியும் அம்மா.

இல்லைப் பிள்ளை இப்போது எனக்கும் உடல்நிலை வைத்தியரிடம் சென்று வந்தேன். எனக்கு இரத்தத்தில புற்றுநோய் இருப்பதாகக் வைத்தியர் கூறினார். அதற்கான சிகிச்சை நடைபெற இருக்கிறது. அதுதான் பிள்ளை உன்னைப் பற்றி, உனது எதிர்காலத்தைப் பற்றித்தான் எனக்கு ஒரே யோசனையாகவிருக்கு அம்மா.

நீங்கள் கவலைப்பட்டு யோசிக்கத் தேவையில்லை அம்மா. அப்பா இருக்கிறார் தானே! அவர் என்னைக் கவனித்துக் கொள்வார்தானே! உங்கள் உடலைக் கவனமாகப் பாருங்கோ.

வதனா மலைத்துப் போனாள். இப்படி ஒரு இலகுவான வார்த்தை… தன் ஆரோக்கியத்தைப் பற்றி தான் ஆசையாக உருவாக்கிய, தான் பெருமையாகப் பெற்ற பெண்பிள்ளையா இப்படிக்கூறுகின்றாள்?… நெஞ்சுக்கள் குமுறி வெடித்தாள் வதனா.. வதனாவுக்கு யாரிடம்தன் வேதைனையைக் கூறுவதென்றே தெரியவில்லை.

நமது ஆரோக்கியத்தை நாம்தான் கவனிக்க வேண்டும்! அப்படியானால் மகள்… மனதில் திடத்தை ஏற்படுத்திக் கொண்டாள் வதனா.

இன்றோ மொழி மாறிவிட்டது. இப்போது வாழ்க்கை மாறிவிட்டது. தரம்கூட மாறிவிட்டது. உலகம் மாறிவிட்டது என்பதால் நாம் ஒரு சுவரால் பிரிக்கப்பட்டிருக்கிறோம்;. இந்தச் சுவர் வெறும் ஒரு சுவராக வதனாவுக்குத் தெரியவில்லை. எமது வாழ்வோ தற்போது ஒரு சுவராகத்தான் வதனாவுக்குப் பட்டது. பண்பாட்டால், பல்வேறு நாடுகளால், பெற்றோர்கள் பிள்ளைகளால் பிரிக்கப்படுகின்றார்கள். உறவுகளுக்கிடையில் ஒரு ஆழமான உயரமான சுவர்கள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது சுவரைப்பார்த்து பேசுகின்ற ஒரு வாழ்க்கைதான் வதனாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. வதனாவோ அந்த வீட்டுச் சுவரைப்பாத்து தனது உள்ளக் கிடக்கைகளை, அவளின் உணர்வுகளை அந்தச் சுவருக்குத்தான் கூறிக்கொண்டிருக்கிறாள்… கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வடிக்கின்றது…

12.2.2025.

நவஜோதி ஜோகரட்னம் நவஜோதி, ஜோகரட்னம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அகஸ்தியர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், விமர்சனங்கள், வானொலி உரைகள், வானொலி நாடகங்கள், குட்டிக்கதைகள் என்பவற்றை எழுதியுள்ளதுடன் எனக்கு மட்டும் உதிக்கும் சூரியனின் கவிதை என்னும் நூலையும் எழுதியுள்ளார். இவரது நூல்கள் எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன் மகரந்தச் சிதறல் மேலும் விவரங்கள் இவர் எனக்கு மட்டும் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்."மகரந்தச் சிதறல்" என்ற இவரது படைப்பு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *