அப்பாவின் ஆசிர்வாதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2026
பார்வையிட்டோர்: 48 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சுசிலா..சுசிலா அந்த டிவியை கொஞ்சம் நிறுத்திப்போட்டு மேலே வாறீரே உம்மோட பேசவேணும்” ரகு வீட்டின் மேல்த் தளத்திலிருந்து தன் மனைவியை அழைத்தான். டிவியின் சத்தம் பெரிதாக இருந்த காரணத்தால் அவன் கூப்பிட்டது கேட்கவில்லை சுசிலாவுக்கு. அவள் தொடர்ந்து, டிவியில் அவள் பார்க்கும் சீரியல் நாடகத்தை பார்த்துக்கொண்டே இருந்தாள். ஒன்றா இரண்டா.. ஸ்டார் விஜய் டிவி,சண் டிவி,கலைஞர் டிவி,ஜீ தமிழ் டிவி, என்று அத்தனை டிவிகளிலும் ஒளிபரப்பாகும் தொடர் நாடகங்களை அவள் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். அவள் வேலையால் வந்து பிள்ளைகளை பள்ளிக்கூடத்திலிருந்து கூட்டி வர செல்லும் வரை இந்த நாடகங்களை பார்த்து விடுவாள். பிள்ளைகள் வீட்டுக்கு வந்தால் பார்க்க முடியாது. அப்படி பார்க்க முயன்றாலும் அவர்கள் கண்டிப்பாக பார்க்க விடமாட்டார்கள். “சரவணன் மீனாட்சி” என்ற நாடகத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்ததால் ரகு அவளைக் கூப்பிட்டது கேட்கவில்லை. அவன் திரும்பவும் அழைத்தான் 

“சுசி, நான் மேல வரச் சொன்னனான் அல்லே. உந்த சீரியல் கண்றாவியை பிறகு பாருமென். அது ஓடவா போகுது.” ரகு அழைத்தான் ஆனால் சுசிலா நாடகத்தில் மூழ்கி, ரசித்து பார்த்துக்கொண்டே இருந்தாள். பொறுக்க முடியாமால் கீழே இறங்கி வந்த ரகு,சோபாவில் கிடந்த ரிமோட்டை எடுத்து டிவியை நிறுத்தினான். இதை எதிர்பார்க்காத சுசி, கோபமாக கத்தினாள். 

“ஏன் டிவியை நிற்பாட் டினியள். நான் நாடகம் பார்த்துக்கொண்டு இருப்பது தெரியல்லியே உங்களுக்கு. சே! ஆறுதலாக இருந்து ஒரு நாடகம் கூட பார்க்க முடியல்ல. சரி என்ன பிரச்சினை ரகு. ஏன் இந்த வேலை செய்த நீங்கள்?” 

“நான் மேல இருந்து இரண்டு தடவை உம்மைக் கூப்பிட்டனான்.என்ன என்று கேட்டனீரே” 

“எனக்கு நீங்கள் கூப்பிட்டது கேட்கல்ல” 

“எப்படி கேட்கும் பெரிய சத்தமாக போட்டு டிவியை பார்த்தால் எப்படிக் கேட்கும்? அதுதான் நான் வந்து நிற்பாட்டினேன் ” 

“சரி என்ன விஷயம் சொல்லுங்க. சாப்பாடு எல்லாம் தயார் பண்ணி வச்சிட்டுதானே போனனான். 

“கொஞ்சம் அமைதியாக கேளுமன் ஏன் இப்படி சடுபுடு என்று இருக்கிறீர். சரி. என்ன விசயமென்றால் அண்ணை போன் பண்ணினவர். வருகின்ற சனிக்கிழமை அப்பாவின் திதி வருகிறதாம் நானும் அதை மறந்துபோட்டன். அதுதான்..” என்று தயங்கினான் ரகு. 

“அதற்கு என்னவாம் கோவிலுக்கு போய் ஒரு பூஜை செய்தால் சரிதானே”

“இல்லை சுசி. போனவருஷம் அப்பாவின் திதிக்கு அண்ணை என்ன செய்தவர் என்று தெரியும்தானே கோவிலில் எல்லா காரியங்களும் முடித்துவிட்டு. அவர்ர வீட்டில தானே சமைத்து, அப்பாவின் படத்துக்கு மாலை போட்டு, படையல் வைத்து எங்களையும், நண்பர்களையும் கூப்பிட்டு அப்பாவின் திதியை நினைவு கூர்ந்தவரல்லே.” 

“ஓம் அது அவர் மூத்த மகன் என்று செய்தவர்.” 

“இதில மூத்த மகன் இளையமகன் என்று என்ன இருக்கு சுசி. எல்லாரும் அப்பாவுக்கு செய்ய உரிமை இருக்குத்தானே.” 

“சரி அதற்கு என்ன இப்போ” 

“அவர் இந்த முறை என்னை செய்ய சொல்கிறார் சுசி. நேற்று போன் பண்ணி சொன்னார் “டேய் ரகு சனிக்கிழமை அப்பாவின் திதி வருகுதுடா. இந்த முறை செய்ய என்னால் முடியாமல் இருக்கு. மன நிலையும், உடல் நிலையும் எனக்கு ஒத்துழைக்குது இல்ல. அதனால அப்பாவின் திதியை இந்த முறை நீ செய் தம்பி’ என்று சொல்லிவிட்டார். நம்மட வீட்டில் இந்த முறை அப்பாவின் திதியை செய்தால் அவர் சந்தோசப்படுவார்.” “எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இறந்தவங்க வந்து சாப்பிடவா போறாங்க. அவர் செய்யிறார் அது அவருக்கு பிடித்திருக்கு. உங்களுக்கும் பிடித்திருந்தால் நீங்க அவரோட சேர்ந்து செய்யுங்க. இங்கே நான் வேலை, பிள்ளைகளின் பள்ளிக்கூடம், அவங்கட டியூசன், என்று அலையவே நேரம் போதாமல் இருக்கிறது. இந்த லட்சணத்தில் ஏழெட்டுக் கறிகள் சமைத்து போட்டோ வைத்து படைத்து. ஆட்களைக் கூப்பிட்டு. சாப்பாடு கொடுத்து அவர்களுக்கு அடுக்குப் பார்க்க எல்லாம் என்னால முடியாது சொல்லிட்டன்” 

“நீர் என்ன சொல்ல வாறீர். அப்பாவுக்கு வருடத்திற்கு ஒருதடவை அவரின் திதிநாளில் அவருக்கு ஒரு காரியம் பண்ணுவதில என்ன குறை வரப்போகுது. சுசி என்னைப் பெற்று வளர்த்த தகப்பன். அண்ணா போனமுறை செய்தார். இந்தமுறை அவரின் உடல்நிலை சரியில்லை. எல்லோருக்கும் தெரியும். மனசும் ஒரு நிலையில் இல்லை.அதனாலதான் அவர் என்னைக் கேட்கிறார். இல்லையென்றல் அவரே எல்லாம் செய்து முடித்து எங்களைச் சாப்பிட கூப்பிட்டிருப்பார். இந்த முறைமட்டும் நாங்கள் எங்களின்ற வீட்டில சமையல் செய்து அப்பாவின் திதியை நினைவு கூருவோம். அண்ணாவையும் அழைத்து நமக்குத் தெரிந்தவங்களையும் கூப்பிடுவோம் சுசி” 

“உங்களுக்கு இந்த வீட்டில நான் படுற கஷ்டம் தெரியுமல்லே.காலையில எழும்பினால் இரவு படுக்கைக்கு போகும்மட்டும் பம்பரமாக நான் சுழலுறன். இது உங்களுக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சுகொண்டும் என்னை கஷ்டப்பட வைக்க நினைக்கிறியள்.” 

“சுசி, எனக்கு தெரியாமல் இல்லையம்மா உன் கஷ்டம். நானும் என்னால முடிஞ்ச அளவிற்கு ஹெல்ப் பண்ணுறந்தானே. என்னதான் நமக்கு கஷ்டங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் மற்ற விசயங்களிலும் நாம் பங்கெடுக்க வேண்டும். எந்தநாளுமா நாம் செய்யப்போறோம். இது வருசத்துக்கு ஒரு முறை செய்யும் வேலை. வேலை என்பதை விட இது கடமை. அந்தக் கடமையை நாம் செய்ய வேண்டாமா? நான் சொன்னேனே. அண்ணா செய்திருப்பார். ஆனால் அவரால முடியாமல் போயிட்டு. அதனாலதான் என்னைக் கேட்டவர் நீ செய் என்று”

“என்னால சமையல் செய்ய முடியாதப்பா. வேணுமெண்டால் கடையில நல்ல சைவச்சாப்பாடு நாலைஞ்சு கறிகளோட ஓடர் பண்ணி உங்கள் அண்ணா வீட்டுக்கு அனுப்புவோம். அவர் அங்கே செய்துகொள்ளட்டும்”

“நீ என்ன சொல்லுறீர் சுசி, கடையில சாப்பாடு ஓடர் பண்ணி செய்வதற்கு இது என்ன பிறந்தநாள் கொண்டாட்டமே. அல்லது கல்யாண நாள் கொண்டாட்டமே. இது இறந்துபோன எங்கள் அப்பாவின் ஆண்டுத்திதி. இதற்கு வீட்டில் சமையல் செய்து, அவருக்கு விருப்பமான பொருட்களை வைத்து படைத்து அவரை நினைவுகூர்வதுதானே சடங்கு, சம்பிரதாயம். புரிந்து கொள் சுசி” 

“நீங்க உங்கபக்கத்து நியாயத்தை சொல்லுறியள். நான் எனது பக்கத்து கஸ்டங்கள சொல்லிட்டன். இனி உங்க விருப்பம் எனக்கு நேரமாகிறது பிள்ளைகளை ஸ்கூளில் இருந்து எடுக்கவேணும். வேலையால் வந்து ஒரு கொஞ்ச நேரம்கூட உந்த டிவியில சீரியல் பார்க்க முடியல்ல.”என்று சொன்ன சுசிலா தனது கணவனின் பதிலை எதிர்பார்க்காமலே கிளம்பிப் போனாள் தனது பிள்ளைகளை கூட்டி வருவதற்கு. ரகு பேச்சற்று, மனம் சோர்ந்து சோபாவிலேயே சாய்ந்துகொண்டான். அவனுக்கு இந்த வாழ்க்கையிலேயே வெறுப்பு ஏற்பட்டது.’என்னடா இந்த வாழ்க்கை இயந்திரமான வாழ்க்கை. இன்பமே இல்லாவாழ்க்கை துன்பத்தை கொண்ட வாழ்க்கை’ என்று ஒரு ஈழத்து கவிஞன் பாடிய பாடல் வரிகள்தான் அவனுக்கு நினைவுக்கு வந்தன. 

சே! ஊரில் இருந்திருந்தாலாவது நிம்மதியா இருந்திருக்கலாம். அப்பாவின் நினைவுநாளை எப்படியெல்லாம் நினைவு கூரலாம். கோவிலுக்குபோய் பூசை புனஸ்காரங்கள் செய்து இறந்த ஆத்மாவுக்கு சாந்திசெய்து,பின் வீட்டுக்கு வந்து உறவுகளுக்கு சொல்லி,வீட்டிலே பலர் கூடி சமையல் செய்து அப்பாவுக்கு படைத்து,பின்னர் எல்லோரும் அமர்ந்து பந்தியிலிருந்து சாப்பிட்டு அப்பாவின் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு சந்தோசப்பட்டுக் கொள்ளலாம். இங்கு நாலுபேருக்கு சமையல் செய்து கொடுக்கவே வழியில்லாத ஒரு வாழ்க்கை.என்ன வாழ்க்கை இது என்று அலுத்துக்கொண்டான். 

அதே நேரம் சுசிலா மீதும் பெரிதாக குறை குற்றம் சுமத்த அவனால் முடியவில்லை. காரணம் அவளின் நிலையும் அப்படி இருக்கிறது. அவளுக்கு வீட்டில் பயங்கர வேலை. அவள் வெளியில் தனது வேலையையும் பார்த்துக்கொண்டு,வீட்டு வேலைகளையும். பிள்ளைகள் இருவரின் வேலைகளையும், அவர்கள் படிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளையும் தனி ஒருத்தியாக இருந்து செய்ய வேண்டி உள்ளது. என்று ஒரு பக்கம் நினைத்தாலும், மறுபக்கத்தில் ஒரு நாள்தானே அப்பாவின் திதி. பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு ஓடியோடி செய்கிறாள் தானே. அதுபோல ஒரு நாளைக்கு, அதுவும் இந்தமுறை மட்டும்தானே அண்ணை கேட்டவர். அதைக் கூட அவளால் செய்ய முடியாட்ட இது என்ன வாழ்க்கை. பணம் மட்டும்தான் வாழ்க்கையா? அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளனவே. மன நிம்மதி, அன்பு, தவம், விட்டுக்கொடுப்பு, மரபு பேணுதல் என்று பல குணங்கள் எல்லாம் பணத்தால் வருவதில்லை என்று புரிந்து கொள்ளாவிடில் என்ன செய்வது?. எதுவும் நம்முடன் நிலைப்பதில்லை. வாழ்க்கையே நிலையற்றது தானே. இந்த வாழ்க்கையில் பல விசித்திரமான சுற்றுக்களை சந்திக்க வேண்டி உள்ளதே. அப்பா அம்மா அவர்கள் வாழ்ந்த காலம் உன்னதமானது.

அவர்களுக்கு எந்த மன உளைச்சலும் இருந்ததில்லை. ஐந்தாறு பிள்ளைகளை பெற்று, வளர்த்து படிப்பித்து ஆளாக்கிவிட்ட அவர்களுக்கு ஒரு பிரச்சினைகளும் பெரிதாக இருந்ததில்லை. இங்கு இரண்டு பிள்ளை களை பெற்று வளர்ப்பதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ‘சனிக்கிழமை அப்பாவின் திதியை நீ உன்ர வீட்டிலதானே செய்யிறே’ என்று அண்ணை இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னை கேட்டதற்கு,’ நான் பேந்து சொல்லுறன் என்று சொன்ன நான், அதன்பிறகு அவருக்கு பதில் சொல்லவே இல்லை. என்னிடம் அவருக்கான பதில் இல்லையே. நான் பதில் சொல்லாமல் இருக்கும் தார்ப்பரியம் அவருக்கு புரியாமல் இல்லை. இந்த வெளி நாட்டு வாழ்க்கையில் குடும்பங்களுக்கு இடையிலுள்ள தகராறுகள், மனக்கசப்புகள், ஒவ்வாமைகள், புரிதலற்ற தன்மைகள், விட்டுக்கொடுக்காத நிலைகள். சுயநலப் போக்குகள் எல்லாம் அவருக்கும் தெரியும். என் வீட்டில் என்ன நடந்திருக்கும், என்ன பதில் கிடைத்திருக்குமென்று அவர் அறிந்திருப்பார். 

இருந்தாலும் ஒரு நப்பாசையில் ஏதாவது நல்ல பதில் கிடைக்குமா என்று எதிர் பார்த்து எனக்கு அவர் பல தடவைகள் போன் பண்ணிவிட்டார். நாளை மறுநாள் அப்பாவின் திதி.நான் என்ன செய்ய முடியும். என் மனதின் பாரத்தை நான் அவரிடமே இறக்கி வைக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் அவரவர் நினைத்தபடி அமைவதில்லைத்தானே. எனக்கும் அப்படித்தான் அமைந்து விட்டது என்று அண்ணைக்கு தெரியும்.என்று அவன் தனக்குள்ளே எண்ணிக்கொண்டு இருக்கும்போது அவன் அலைபேசி அலறியது. எடுத்துப் பார்த்தான்.அது அவன் அண்ணாதான் அழைக்கிறார். இனியும் அவன் அவர் அழைப்பை நிராகரிக்க விரும்பவில்லை. தொடர்பை ஏற்படுத்தினான். 

“ஹலோ அண்ணே! நீங்க பலதடவைகள் எடுத்திருந்தீங்க என்னால் பேச முடியல்ல அண்ணே.” என்று சொல்லும்போதே அவன் குரல் தழுதழுத்தது. 

“சரி விடுறா தம்பி. நீ ஒன்றுக்கும் யோசிக்காத கண்டியோ. என் உடல்நிலை கொஞ்சம் ஒத்துழைக்காத படியாலதான் நான் உன்னைக் கேட்டனான்.”

“அண்ணே நான் எவ்வளவு பேசிப்பார்த்தன் முடியல்ல. கடையில சாப்பாடு வாங்கிக் கொடுப்போம் என்ற பதில்தான் வந்தது. எனக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டேன். அவசரத்தில கையை நீட்டி விடுவேனோ என்ற பயமும் இருந்தது. கோபத்தை அடக்கிக்கொண்டு இருந்துவிட்டேன். நீங்க சொன்ன நாளிலிருந்து, சுசிலாவிடம் இதுபற்றி பேச நாள் பார்த்துக்கொண்டு இருந்தேன். இன்றுதான் பேசினேன். அவள் பதில் எனக்கு நெஞ்சுவலியை தந்தது. அவள் பிள்ளைகளை எடுத்துவர ஸ்கூலுக்கு போனவுடன் நான் அப்படியே சோபாவில் சாய்ந்தவன்தான். என் இயலாமை பற்றிய நினைவுகளுடனும் இருந்திட்டன்.”

“சரி நீ ஒன்றுக்கும் கவலைப்படாத. இது நடக்குமென்று எனக்கு தெரிந்ததுதானே. பரவாயில்ல விடு. சனிக்கிழமை நம்மட அப்பாவின் திதியை நானே செய்கிறேன். அதற்கான உடல் பலத்தை அப்பா எனக்கு தந்திருக்கிறார். அவரின் ஆசிர்வாதம் எனக்கு கிடைத்திருக்கிறது. அதனால்தான் என் உடல் நிலை சரியாகி விட்டது. அப்பாவின் ஆண்டுத் திவசத்தை கோவிலிலும், வீட்டிலும் அந்தமாதிரி செய்து முடிப்போம். நீ ஒன்றுக்கும் யோசிக்காத நான் எல்லாம் பார்த்துகொள்கிறேன். நீ உன் குடும்பத்தோட வந்து கலந்துகொள் இதைச் சொல்லத்தான் நான் இப்போ எடுத்தனான். சரியடா தம்பி வைக்கிறேன்”என்று ரகுவின் தமையன் உரையாடலை நிறுத்திக் கொண்டார். 

ரகு வார்த்தையின்றி எதுவும் பேசாமல் வாயடைத்து இருந்தான். அண்ணாவின் பேச்சிலிருந்த உற்சாகம் அவனுக்கு இல்லையே.என்று கவலைப்பட்டான். ‘அப்பா! அண்ணாவுக்கு நீங்கள் கொடுத்த ஆசிர்வாதம் போல் எனக்கும் தரக்கூடாதா?’ என்று மனசுக்குள்ளே தன் தகப்பனாரை வேண்டிக்கொண்டான். அப்போது வெளியில் சுசிலாவின் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.ரகு சோபாவிலிருந்து எழுந்து மேலே சென்றான். 

– கொத்து ரொட்டி (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: ஆடி 2018, லக்கி மீடியா, லண்டன்.

கோவிலூர் செல்வராஜன் கோவிலூர் செல்வராஜன் - ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இலங்கை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும்,பல்துறைக் கலைஞராகவும் இருந்தவர். இவரது இயற்பெயர் செல்வராஜன் இராசையா. இவர் கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் என்னும் ஊரிலே 18.09.1952 ல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும்,பாடசாலைக் கல்வியை திருக்கோவிலில் இருக்கும் தம்பிலுவில் மகாவித்தியாலதிலும் உயர் கல்வியை மட்டக்களப்பிலும், கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *