நீயா நானா?
கதையாசிரியர்: கோவிலூர் செல்வராஜன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2026
பார்வையிட்டோர்: 2
(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராகவன் டென்மார்க் நாட்டிலிருந்து தனது சொந்த ஊரான நாகர்புரம் வந்திருந்தார். ஒரு காலை வேளை அவர் தனது நடைப் பயிற்சிக்காக கடற்கரைக்கு சென்றார்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஊரில் தன் மைத்துனன் சந்திரனுடன் ஊருக்கு சென்றபோது இருவரும் காலாற கால்புதைய மண்ணில் நடந்து திரிந்த தருணங்கள் ராகவனுக்கு நினைவுக்கு வந்தன. இன்று சந்திரன் இல்லை. அவன் மறைந்து வருடங்கள் இரண்டாகிவிட்டன. தங்கள் ஊரிலிருந்து ராகவனும், சந்திரனும் சில வருடங்களுக்கு முன்னர் தங்கள் பிள்ளைகளின் அன்பு அழைப்பினால் அவர்கள் வாழும் கனடா நாட்டுக்கும், டென்மார்க் நாட்டிற்கும் சென்றவர்கள்.
ஊரில் அறுபதுகளில் அவர்கள் பாடசாலைக் காலங்களில் ஒன்றாக படித்து, ஒன்றாக விளையாடி இருந்தவர்கள். அந்தக் காலத்தில் அவர்களுக்கு என்று ஒரு நட்பு வட்டம் இருந்தது. சொந்தங்கள்தான் பெரும்பாலானவர்கள். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் இப்பொழுது இல்லை.
ராகவன் தனது வாலிப காலத்திலிருந்து சந்திரனை நேசித்தவர். அதேபோல் சந்திரனும் தனது மைத்துனன் ராகவன் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தான் . இருவரும் கஷ்டப்பட்டு படித்து முன்னுக்கு வந்தவர்கள், எல்லா துறைகளிலும் மிகுந்த திறமை உள்ளவர்கள். படித்து முடித்து அவரவர் துறையில் உத்தியோகம் பார்த்து திருமணம் முடித்து பிள்ளைகள் பெற்று வளர்த்து அவர்களை படிப்பித்து ஆளாக்கி எடுக்கும்போதுதான் நாட்டில் போர் மூண்டது. அந்த போர் இவர்கள் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. இவர்கள் குடும்பத்தில் பல இழப்புகளை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் பிள்ளைகளின் உயிருக்கே ஆபத்து வரும் என்ற அச்சத்தில்தான் அவர்களை முகவர்கள் மூலம் வெளிநாடு அனுப்பி வைத்தார்கள். அவர்களும் அங்கு சென்று கஷ்டப்பட்டு அந்த நாட்டு மொழிகளை படித்து நல்ல வேலைகளும் எடுத்துக் கொண்டபின் திருமண பந்தத்தில் இணைய தயாராக, ராகவனும்,சந்திரனும் மகிழ்ச்சியோடு அவர்கள் விருப்பதின்பால் நின்று திருமணம் செய்து வைத்தார்கள். இப்போது அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்து ராகவனையும், சந்திரனையும் தாத்தாவாக மாற்றி இருந்தார்கள். இவர்கள் இருவரின் மனைவிமார் சில வருடங்களுக்கு முன்னர் தவறியபோதே இவர்கள் இருவரையும் தங்களுடன் அழைத்துக்கொண்டனர்.
பிறந்து வளர்ந்து இருந்த தங்கள் சொந்த ஊரைவிட்டு இவர்களுக்கு போக விருப்பம் இல்லை. இருந்தாலும் வேறு வழியில்லாமலும், பிள்ளைகளின் விருப்பத்துக்காவும்தான் சென்றார்கள். பிள்ளைகளுக்கும் இது தெரியும். அதனால் அவர்கள் கனடாவிலிருந்தும், டென்மார்க்கிலிருந்தும் ஒவ்வொரு வருடமும் ஊர் கோவில் திருவிழாக் காலங்களில், கதிர்காம தீர்த்தம் நடைபெறும் காலங்களில் இவர்களை ஊருக்கு அனுப்பி வைப் பார்கள். பலதடவை அவர்களும் பிள்ளைகளுடன் சென்று இருக்கிறார்கள். அப்படி இவர்கள் செல்லும் போதும் சும்மா இருக்க மாட்டார்கள். ஊரில் உள்ள தங்கள் சொந்தங்கள், நண்பர்கள் என்று இருக்கும் ஒரு சிலரை சந்தித்து ஒன்றுகூடல் வைத்து பல சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் வைத்து அசத்துவார்கள். வயது எழுபதை தாண்டினாலும் இன்னும் இவர்களிடம் வாலிபத் துடுக்குத்தனம் இருந்தது. ஊரில் இருந்த காலங்க ளிலே இவர்கள் பாட்டு இசை என்று இருந்தவர்கள். பல பாடல்களை தங்கள் பகுதி கோவில்களுக்காக பாடிக் கொடுத்தவர்கள். ஒவ்வொரு தடவையும் ஊர் செல்லும்போது ஏதாவது ஒன்றை செய்வார்கள். இசை அல்பம் செய்வார்கள். புத்தகம் எழுதி வெளியிடுவார்கள். இப்படி பல முயற்சிகளில் இந்த வயதிலும் இவர்கள் முன்னேடுப்பதுபற்றி ஊரவர் விதந்து பேசுவதுண்டு.
இரண்டு வருடங்களுக்கு முன்னரும் இருவர் ஊர் சென்றிருந்த வேளை ராகவன் இசை அல்பம் ஒன்றும், சந்திரன் தனது சிறுகதை நூல் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்கள். அங்கு இருக்கும்போது தங்கள் கடற்கரைக்கு காலை வேளையில் நடந்து சென்று பயிற்சி செய்வது வழமை. ஆனால் இன்று ராகவன் மட்டும் செல்கின்றார். சந்திரன் இல்லை. இது அவருக்கு மிக வருத்தத்தை கொடுத்தது. கடற்கரையை அண்டியுள்ள ஊரின் மயானத்திற்கு வந்தபோதே ராகவன் மிகவும் உடைந்துபோனார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் சந்திரனுடன் அங்கு வந்தபோது அவன் சொன்ன விஷயங்கள் அவன் விரும்பிய விருப்பங்கள் எல்லாம் அவர் மனதுக்கு வந்தது. அதை அவர் மயானத்துக்கு முன் இருந்த பனை மரத்துக்கு கீழே இருந்து நினைத்துக்கொண்டார்.
“மச்சான் நம்மட மயானத்தில்தான் நாம் அடக்கம் செய்யப்பட வேண்டும். நம்மட அப்பா அம்மா அவர்கள் அடக்கம் செய்திருக்கும் இந்த மயானம். எங்கட சொந்தங்கள் அடக்கம் செய்திருக்கும் இந்த மயானம் எங்களுக்கும் உரிய மயானமாக இருக்க வேண்டும் என்ன மச்சான் சொல்லுறாய்”
“நான் என்னத்தடா சொல்லுறது. என்ற விருப்பமும் அதுதான். இங்கே பார் அம்மாவின் கல்லறை எவ்வளவு அழகாக இருக்கிறது. தொண்ணூ று வயசுக்குமேல் இருந்து மறைந்தவர். நிம்மதியா தூங்குறா. வா மச்சான் அம்மாவின் கல்லறையில் என்னைவைத்து ஒரு படம் எடு மச்சான் “
“சரி போனை தாங்க நான் முதலில் தனியாக ஒரு படம் உங்களை எடுக்கிறேன். பிறகு ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு செல்பி எடுப்போம்.” என்று சொல்லி சந்திரன் எடுத்த படங்களை தனது போனில் பத்திரமாக வைத்திருந்தார். அவற்றை இப்போது பார்த்து கண்ணீர் விட்டார் தொடர்ந்து அவர் நினைவலைகள் எழுந்து கொண்டன.
“மச்சான் என்னை அடக்கம் செய்ய நான் இங்கு இப்போதே ஒரு நிலையம் எடுக்கப்போகிறேன். நீங்களும் விரும்பினால் உங்களின் நிலையத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள். பிறகு நான் மட்டும்தான் எடுத்துவிட்டேன் என்று சொல்லக்கூடாது. சரியா”
“சரி சரி எனக்கும் உனக்கு பக்கத்தில பார்த்து எடன் மச்சான். இருவரும் பக்கத்துப் பக்கத்தில் கிடப்பம்”
“ஓகே சரி எடுக்கிறேன். மற்றது ஒரு விஷயம் சொல்லுறன். வடிவா கேட்டுக்கொள் மச்சான்.
எனக்கு அங்க கனடாவில சாக விருப்பம் இல்ல. அங்க செத்த பிறகு கொண்டுபோய் பிரேதபாதுகாப்பு அறையில் வைத்திருந்து பின் அதை எரிக்க மின் மயானத்தில் நாள் எடுத்து ஒரு கிழமைக்குபின் அங்குள்ள ஆட்கள் பார்க்க, பார்வைக்கு வைத்து, அதன்பின் கொண்டு வந்து ஐயரை கூப்பிட்டு கிரிகை செய்து உடனே மின் அடுப்புக்குள் செலுத்தி பின்னால் டப்பாவில் சாம்பல் வாங்க விருப்பமில்லை மச்சான்.”
“சரிடா உன்னோட விருப்பத்தை சொல்லன். என்ன செய்யவேணும் எண்டு” நல்ல மச்சினன். கேட்டுக்கொள்ளுங்கோ. நான் அந்திமக் காலத்தில் இருப்பதால் இங்கே அக்காட பிள்ளை, அல்லது அண்ணனின் பிள்ளை ஏதாவது ஒருவளிடம் கெதியில் வந்து இருப்பன். நான் இங்கே என் தாய் மண்ணில்தான் சாகவேணும். செத்தபின் எனக்கு ஆட்டோவில் ஸ்பீக்கர் கட்டி, என் பாட்டுகளையே அதில் போட்டு இன்னார் இறந்து விட்டார் என்று ஊருக்கு அறிவித்து விடவேணும். முதிரை மரக்கட்டிலில் வெள்ளை விரித்து, என்னைக் குளிப்பாட்டி சுத்தம் செய்து வேட்டி சட்டை உடுத்து,நெற்றியில நீறு சாற்றி இந்த சங்கிலி, மோதிரம்,கைக் கடிகாரம் ஒன்றும் போட்டு அலங்கரிக்காமல் சிம்ப்ளா கிடத்தி விட வேணும். ஒரு நல்ல பெட்டி வாங்கி வந்து அதற்குள் வைத்து விடவேண்டும். நான் கம்பீரமாக படுப்பதுபோல் இருக்கவேண்டும். என் தலைமாட்டில் நின்று என் பிள்ளைகள் அழட்டும். மருமகள். மருமகன் வந்தால் அவர்களும் சேர்ந்து அழட்டும்.
அவர்கள் என்னை எப்படி நடத்தினாலும் நான் அவர்களுக்கு மாமனார் தானே அந்த உரிமையை கொடுக்க வேண்டும். ஊரில் உள்ளவர்கள் வந்து சேரட்டும். வயசுக் கிழவிகள் சொல்லி அழவேணும் ஒப்பாரி கேட்கவேணும். அதைக் கேட்டு ஊரவர் கலங்க வேணும். பந்தலில் உள்ளவர்களுக்கு பாக்கு வெற்றிலை, சுருட்டு, சிகரெட், எல்லாம் என் பேரப்பிள்ளைகள் பகிரவேணும். பறையடிக்கும் சத்தம் ஊர் முழுதும் கேட்கவேண்டும். கொஞ்சம் உசாரா அடிக்க அவங்களை அடிக்கடி உற்சாகபானம் கொடுத்து கவனிக்க வேண்டும். பிள்ளைகள் பேர பிள்ளைகள் சுற்றி நின்று கண்ணீர்விட சுன்னப்பாட்டு,திருவாசகம்,ஐயர் மந்திரம் எல்லாம் முடித்து கடைசியில் பெட்டிய மூட விடாமல் சொந்தங்கள் மேலே விழுந்து அழவேணும். அங்கு தலையாரியாக இருக்கும் ஒருவரின் கண்டிப்புடன் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பெட்டி மூடபட்டதும். என் இறுதி ஊர்வலம் தயார். சவக்கார் இங்கு தேவையில்லை. சோடிக்கப் பட்ட தட்டியில் வைத்து சொந்தங்கள் தூக்கி செல்ல வேண்டும். மச்சான் நீயும்தான். உன்னால் கன நேரம் தூக்க முடியாது அல்லவா. கொஞ்சநேரம். துக்கிவிட்டு தோள் மாறலாம். ஏனென்றால் அது உரிமை. அது ஊரவருக்கும் போய் சேர வேண்டும். பறைச்சத்தம், வெடிச்சத்தம், திருவாசக பாட்டு என்று ஒலிக்க ஊர்வலம் செல்ல வேண்டும். இடைக் கிடையே ஓட்டோவில் உள்ள ஸ்பீக்கரில் நான் பாடிய பாட்டுகள் ஒலிக்க வேண்டும். அதை கவனித்துக் கொள்ளவேண்டியது உங்களின் பொறுப்பு மச்சான்.
பிறகு என்ன சந்திரன் அமக்களமாக ஊரவர் புடைசூழ மயானத் துக்கு வந்துவிடுவான். மறக்காமல் இந்தா இப்போது எடுக்கு நிலையத்தைக் காட்டி காந்தி அப்புச்சியின் பூட்டனிடம் சொல்லி மண் இடியாமல் எனக்குரிய குழியை தோண்டி பத்திரமாக என்னை இறக்கியபின் ஆரும் ஓரிரு வார்த்தை பேசலாம். நீங்க பேச முடியுமெண்டால் பேசுங்க மச்சான். ஏன் அப்படி சொல்லுறன் என்றால் உங்களால் முடியாமல் இருக்கலாம். அழுது தொண்டை அடைத்திருக்கும். அதனால் சொன்னேன். எல்லாம் முடிந்த பின் மண்போட்டு மூடுங்கள் மகன் கொள்ளி குடம் உடைத்து திரும்பிப் பாராமல் நேரே வீட்டுக்கு சென்று விடட்டும்.
பிறகு எல்லோரும் பேசுவார்கள்தானே நாமளும் இப்படித்தான் ஒரு நாளைக்கு போய் சேரவேண்டியதுதான். ஏதோ சந்திரன் கனடாவில் இருந்து சாகாமல் ஊரோட வந்து செத்துபோனான். அவன் கொடுத்து வைத்தவன் என்று சொல்ல வேணும் மச்சான். சுடலை ஞானம் பேசிக் கொண்டே வீட்டுக்கு வந்து கோப்பி தேத்தண்ணீ குடித்துவிட்டு போய் முழுகி துடக்கை கழிக்கலாம். அவ்வளவுதான் மச்சான். ஆ.. மறக்காமல் முப்பத்தியொண்டு அன்று நினைவு மலர் அடிக்கும் பொறுப்பை நீங்கதான் எடுக்கவேணும் மச்சான். உங்களைத்தவிர வேறு ஆரும் அதை செய்ய முடியாது. அதில் உங்கள் இரங்கல் உரைதான் முத்தாய்ப்பாக இருக்கும் இல்லையா மச்சான்”
“அடேய் யாருக்கு யார் இரங்கலுரை எழுதுறது என்று நாம எப்படிடா முடிவெடுப்பது எல்லாம் படைச்சவன் பார்த்துக்கொள்ளுவான்.நீதான் எனக்கு முதல் எழுதுவாய்”
“பார்க்கலாம் மச்சான் பார்க்கலாம் நீயா நானா என்று? நான்தான் முந்துவேன்” என்று சந்திரன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே இடத்தில் வைத்து பேசிய பேச்சு இன்றும் ராகவனின் நெஞ்சில் தீயாக எரிந்து கொண்டு இருந்தது.
பனைமரத்துக்கு கீழே இருந்து தன் மச்சான் அன்று பேசிய பேச்சுகளை அவன் வெளிப்படுத்திய விருப்பங்களை அவர் நினைத்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டார். காரணம் அவன் கனடாவில் திடீர் என்று காலமாகிவிட்டதால் அவனது எண்ணம் ஈடேற முடியவில்லை. அங்கு இறந்தபின். இங்கு கொண்டுவந்து அடக்கம் செய்வது எல்லாம் அவனின் பிள்ளைகளுக்கு பெரிய கஷ்டமான காரியம். அதனால் அவன் விரும்பாத மின் மயானத்தில்தான் அவனை அடக்கம் செய்தார்கள். அன்பு மைத்துனரின் மறைவு ராகவனுக்கு பெரும் துன்பத்தை தர, உடனே டென்மார்க்கிலிருந்து புறப்பட்டு கனடா சென்று அவனை இறுதியாக பார்த்து அழுது, அவன் விருப்பாத மின் மயானத்தில் அவன் உடலை செலுத்தியதை பொறுக்க முடியாமல் கதறி அழுததை அங்கு வந்திருந்த எல்லோரும் பார்த்து பின் ராகவனை சமாதானம் செய்ததையும் ராகவன் இன்று நினைத்துகொண்டார்.
நெஞ்சில் பாரத்தோடு கனத்த மனச் சுமையுடன் எழுந்துகொண்டு எதிரே இருந்த அவரின் அம்மாவின் கல்லறையை தரிசித்து வணங்கி விட்டு, சந்திரன் அன்று அவனுக்காக நிலையம் எடுத்த இடத்தைப் பார்த்தார். அதில் புதர் முளைத்து இருந்தது. மெதுவாக சென்று அந்த இடத்துக்கு பக்கத்தில் அவன் அன்று தனக்காகவும் நிலையம் எடுத்த நிலத்தைப் பார்த்தார். அவர் மனதில் ஆயிரம் கேள்விகள் தெறித்து விழுந்தன. அந்த கேள்விகளுக்கு விடைகள் தெரியாமல் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார் இன்னும் ஒரு கிழமையில் டென்மார்க் செல்ல வேண்டிய ராகவன். அவர் மனம் முழுதும் வியாபித்திருந்தான் அவரின் அன்பு மைத்துனன் சந்திரன்.
– கொத்து ரொட்டி (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: ஆடி 2018, லக்கி மீடியா, லண்டன்.
![]() |
கோவிலூர் செல்வராஜன் - ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இலங்கை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும்,பல்துறைக் கலைஞராகவும் இருந்தவர். இவரது இயற்பெயர் செல்வராஜன் இராசையா. இவர் கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் என்னும் ஊரிலே 18.09.1952 ல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும்,பாடசாலைக் கல்வியை திருக்கோவிலில் இருக்கும் தம்பிலுவில் மகாவித்தியாலதிலும் உயர் கல்வியை மட்டக்களப்பிலும், கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ரயில் செல்வியும்… WAP 7 என்ஜினும்…
உரு.வளவன்
September 12, 2026
ராப்பிச்சை
மா.வீ.தியாகராசன்
September 12, 2026
மரணம் நம்மைப் பிரிக்கும் வரை
இரா.துரைமாணிக்கம்
September 12, 2026
