ஸ்ரீ வேங்கடேச மகாத்மியம்
கதையாசிரியர்: நெ.சி.தெய்வசிகாமணி
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: August 4, 2026
பார்வையிட்டோர்: 128
(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2

கங்கை நதிக் கரையில் கச்சியபர் முதலிய முனிவர்களும, தவசிகளும் உலகம் உய்யும்பொருட்டு மகா வேள்வி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார்கள். அச் சமயம் அங்கு நாரத முனிவர் வந்தார்.
நாரத முனிவரைக் கண்டதும் கச்சியபரும் மற்ற வர்களும் அவரை வரவேற்று உபசரித்தனர்.
சிறிதுநேரம் உரையாடிய பின் நாரத முனிவர் கச்சியபரை நோக்கி, “முனிபுங்கவரே! நீங்கள் உலகின் நன்மைக்காக மகாவேள்வியை நடத்துகிறீர்கள். வேள்வி முடிந்ததும் அதன் பலனை இறைவனுக்கு அளிக்கப்போகிறீர்கள். அவ்வாறு அளிக்கும்போது தீர ஆலோசித்து, மும்மூர்த்திகளில் எவர் மக்கன்பால் அன்பு கொண்டு மோட்ச உலகத்தை அளிக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறாரோ, அவருக்கே உங்கள் யாகத்தின் பலனை அளியுங்கள்” என்றார்.
முனிவர்களும் நாரதரின் உரையைக் கேட்ட பிறகு, மும்மூர்த்திகளையும் சோதனை செய்து, அவர்களில் எவர் மக்கள்பால் அதிக அன்பு கொண்டிருக்கிறார் என்று அறிந்து வர முயன்றனர். இதற்காகப் பிருகு முனிவரைத் தேர்ந்தெடுத்து அவரை மூவுலகங்களுக்கும் சென்று பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளையும் சோதனை செய்து பார்த்துவர அனுப்பினர்.
பிருகு முனிவர் முதலில் சத்தியலோகத்திற்குச் சென்றார். பிரமதேவன் அலங்கார மண்டபத்தில் அமர்ந்துகொண்டு படைப்புத் தொழிலைச் செய்து கொண்டிருந்தார். தம் சபைக்கு வந்த பிருகு முனிவரை வரவேற்காமல், அவர் தம்முடைய காரியத்தி லேயே கண்ணாயிருந்தார். நீண்டநேரம் காத்திருந்த பிருகு முனிவர் எதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்தார்.
இது நான்முகனுக்குப் பொறுக்கவில்லை. தம்மைப் பிருகு முனிவர் அவமானம் செய்துவிட்டதாகக் கருதினார். கோபத்தால் அவர் முகமும் கண்ணும் சிவந்தன.
இதனைக் கண்ட பிருகு முனிவர், “நான்முகனே! உன் சபை தேடிவந்த என்னை வருக வென்றும் அழைக்கவில்லை; உட்காரச் சொல்லி ஆசனமும் அளிக்கவில்லை. இந் நிலையில் உனக்குக் கோபம் வருவது எனக்கு வியப்பை அளிக்கிறது. தம் இருப்பிடம் தேடி வருபவர் எவராயிருந்தாலும் அவரை வரவேற்று உபசரிக்க வேண்டியது பெரியோர் கடமை. இக்கடமையைச் செய்வதினின்றும் நீ தவறி விட்டாய். எனவே, உனக்குப் பூவுலகில் கோயில்கள் இருக்காமல் போகட்டும். வந்தவரை உபசரித்துப் பூசிக்காத உன்னை மக்கள் எவரும் வணங்கார்” என்றி சாபமிட்டுவிட்டுச் சென்றார்.
பிறகு, பிருகு முனிவர் கயிலை மலைக்குச் சென்றார். அங்கே பரமசிவன் அந்தப்புரத்தில் பார்வதி தேவியாருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அச் சமயத்தில் பிருகு முனிவர் நேரே அந்தப்புரத்திற்கே சென்று விட்டார். இது சிவபிரானுக்குக் கோபத்தை அளித்தது.
‘தனிமையில் இருக்கும்போது இவர் இங்கிதம் தெரியாமல் வந்துவிட்டாரே’ என்று பிருகு முனிவர் பேரில் கோபம் கொண்டார் சிவனார்.
இதனை அறிந்துகொண்ட பிருகு முனிவர், ‘முக் கண்ணா, மக்கள்பால் அன்பு செலுத்தி அவர்களை நல் வழிப்படுத்துவது உன் கடன். அதை விட்டுவிட்டுப் போக போக்கியத்தில் சுகித்திருக்கும் உன்னைப் பூவுலகில் உள்ள மக்கள் அனைவரும் இலிங்க வடிவிலேயே பூசிக்கக் கடவர்” என்று கூறிவிட்டு, நேரே பரந்தாமனைக் காண வைகுண்டத்திற்குச் சென்றார்.
அங்கே திருமால் ஆதிசேஷன்மேல் சயனித்திருந்தார். கண்களை மூடியபடியே இருந்தாலும் பிருகு முனிவர் வருவதை அறிந்துகொண்டார். பிருகு முனிவர் அவர் எதிரே சற்றுநேரம் நின்றார். திருமால் எழுந்திருக்கவில்லை. உடனே கோபம் கொண்ட பிருகு முனிவர் திருமாலின் மார்பிலே எட்டி உதைத்து அவரை எழுப்பினார்.
உடனே விழித்தெழுந்த மகாவிஷ்ணு பிருகு முனி வரின் கால்களைப் பிடித்துக்கொண்டார்.
“குழந்தாய், ஒரு வார்த்தை கூறியிருந்தால் நானே எழுந்திருப்பேனே! இதற்காகவா இந்தப் பூப் போன்ற பாதத்தால் என்னை உதைத்து எழுப்பினாய். என் உடல் வச்சிரம் போன்றது. அதில் பட்ட உன் பாதம் மிகவும் துன்புற்றிருக்குமே! குழந்தாய், வலி யெடுக்கிறதா? இப்படி என் மடிமேல் அமர்ந்து கொள், உன் காலைப் பிடித்து விடுகிறேன்” என்று பிருகு முனிவரைப் பார்த்துக் கூறினார், திருமால்.
மகாவிஷ்ணுவின் அன்பு மொழிகள் பிருகு முனிவரின் உள்ளத்தைக் கவர்ந்தது. அவர் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. திருமாலின் கால்களைப் பற்றிக்கொண்டு, “இறைவா! இச் சிறியவன் செயலை மன்னித்துவிடு. உலகிலுள்ள மக்கள பால் அன்பு செலுத்தி அவர்களுக்கு மோட்சத்தை அளிக்கக்கூடிய கடவுள் யார் என்பதை அறிவதற்காகவே இவ்விதம் செய்தேன். இந்த ஏழையை மன்னித்துவிடு” என்றார் பிருகு முனிவர்.
பிருகு முனிவரை ஆசீர்வதித்து அவரை மன்னித்து அனுப்பினார் மகாவிஷ்ணு.
பிருகு முனிவர் கங்கைக் கரையை அடைந்து கச்சியபர் முதலான முனிவர்களிடம், ”மகாவிஷ்ணுவே மக்கள்பால் அன்பும் பிரியமும் உள்ளவர். அவரே மக்களுக்கு மோட்சத்தை அளித்து அவர்களை உய்விக்கக் கூடியவர். அத்தகைய குணங்கள் நிரம்பிய எம் பெருமான் மகாவிஷ்ணுவுக்கே யாகத்தின் பலனை அளியுங்கள்” என்று கூறினார்.
பிருகு முனிவர் திருமாலை உதைத்ததால் இலட்சுமி தேவி மிகவும் கோபம் கொண்டிருந்தார்.
“நாதா, தங்கள் மார்பில் வசிக்கும் என்னை ஓர் ஏழைப் பிராமணன் கால்களால் உதைப்பதா? அவ்வாறு உதைத்து என்னை அவமானப்படுத்தியவனைத் தாங்கள் கண்டிக்காமல், உதைக்கும் காலுக்கு முத்தமிடுவது போல் அவனிடம் அன்பு காட்டி அனுப்பினீர்கள். இனி நான் இங்கிருக்கமாட்டேன்” என்று கோபத்துடன் கூறியவாறு பூவுலகம் அடைந்து, கொல்லாபுரம் என்ற ஊரில் வசித்து வரலானார்.
திருமாலை விட்டு இலட்சுமி தேவி பிரிந்து சென்றதும் பாற்கடல் முழுவதும் சோபை இழந்துவிட்டது. திருமால் பித்துப்பிடித்தவர் போலானார். பிறகு அங்கிருக்கப் பிடிக்காமல் அவரும் பூலோகத்தை நோக்கிச் சென்றார்.
– தொடரும்…
– ஸ்ரீ வேங்கடேச மகாத்மியம், முதற் பதிப்பு: அக்டோபர் 1976, பைலட் பப்பிளிகேஷன்ஸ், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
உயிர் உனதானதே!
லாவண்யா ஸ்ரீராம்
August 4, 2026
அகல் விளக்கு
மு.வரதராசன்
August 4, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
August 1, 2026