புயலில் சிக்கிய பூக்கள்..!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2026
பார்வையிட்டோர்: 109
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம் – 10

மாலா, சிம்ரன் வீட்டினுள் நுழைந்ததுமே டீபாயிலிருந்த தினசரியை எடுத்துப் படித்தாள். அடுப்படியிலிருந்து வந்த தனவள்ளிக்கு பெண்கள் கூட்டத்தைக் கண்டதும் வயிற்றில் புளி. நெஞ்சில் கலவரம்.
“என்னடி! ஆபத்தா?” – ஓடிவந்து மகளைக் கேட்டாள்.
“இல்லியே?!” – சிம்ரன் பதில் சொன்னாள்.
“பின்னே எதுக்கு ஒட்டு மொத்தமா எல்லாரும் வந்தீங்க. கல்லுாரி விடுப்பா?”
“இல்லேம்மா.”
“ஏன் வந்தீங்க?” தனவள்ளிக்கு மகள் ஏதோ மறைக்கிறாள் என்று சந்தேகம்.
“அப்பாகிட்ட ஒரு முக்கியமான சேதி சொல்லனும் .”
“என்ன சேதி?”
‘சொல்லவில்லையென்றால் அம்மா விடமாட்டாள்!’ – என்பது தெளிவாக தெரிந்தது. சொன்னாலும் பாதகமில்லை. உணர்ந்த சிம்ரன், “அம்மா!” என்று ஆரம்பித்து சேதி சொன்னாள்.
“நல்ல யோசனைதான். ஆனா புலியை விட்டு சிங்கத்து வாயில விழுந்த கதையாய் அவனும் கெட்டவன்றதுதான் வயித்தைக் கலக்குது.” – தன் பயத்தை வெளியிட்டாள்.
“சரி அப்பா எங்கே சொல்?”
“வெளியில போயிருக்கார். அநேகமா இந்த விசயமாத்தான் யாரையாவது பார்க்கப் போயிருக்கனும். இரு சோத்தை வடிச்சிட்டு வர்றேன்.” – தனவள்ளி உள்ளே ஓடினாள்.
‘அப்பா எங்கே சென்றிருப்பார். யாரைச் சந்திப்பார். என்ன ஏற்பாடு செய்வார்?’- சிம்ரன் யோசனையுடன் தோழிகள் பக்கத்தில் சோபாவில் அமர்ந்தாள்.
“விடுடி. அப்பா ஒரு வழி. பொண்ணு ஒரு வழி போகலாம்.” – ஜோதிகா அவள் யோசனையைத் தடுத்தாள். “அது இல்லே. நமக்குப் புத்தி சொல்லி இவர் எங்காவது மாட்டிக்கிட்டார்ன்னா?!” என்று மெல்ல சொல்லி வாசலைப் பார்த்தாள்.
தர்மலிங்கம் வேகமாக வந்தார்.
வாசலில் லேடிஸ் செருப்புகளாய்க் கழன்றிருப்பதைப் பார்த்து மிரண்டார். உள்ளே நுழைந்ததும் சிம்ரன் தோழிகளுடன் இருப்பதைப் பார்த்து குழம்பினார்.
தனவள்ளி கணவர் குழப்பத்தைப் பார்த்து, இங்கே வாங்க அவரைத் தனியே அழைத்துக் கொண்டு சென்று அவர்கள் வந்த விசயத்தைச் சொன்னாள்.
தர்மலிங்கத்திற்கு முகம் திருப்திப்பட்டது.
“நல்ல யோசனைதான்!” – என்றவாறே மகள் அருகில் அமர்ந்தார். “ஆனா ஆளைப் புடிக்கனுமே?” – கவலைப்பட்டார்.
“தாபர்கன் பேட்டை போனா புடிக்கலாம் சார். இதோ தினசரியில போட்டிருக்கு” – மாலா படித்த தினசரியை அவரிடம் நீட்டினாள்.
வாங்கிப்பார்த்தவர், “அது எங்கே இருக்கு?” – தலையைச் செரிந்தார்.
“அநேகமா மந்தைவெளிப் பக்கம்ன்னு நெனைக்கிறேன்” – மாலா சொன்னாள்.
“சரி. நானே கிளம்புறேன்!” – எழுந்தார்.
“வேணாம் அங்கிள். நாங்க பேனாத்தான் சரி வரும்.”
“எப்படி?”
“பெண்ணுன்னா பேயும் இறங்கும். ஏகாம்பரம் பெண்கள் விசயத்துல நல்ல மாதிரின்னு கேள்வி. சட்டுன்னு சம்மதிச்சுடுவார்ன்னு தோணுது.”
“சொல்றது நியாயம்தான். உங்களை அனுப்பிட்டு நாங்க வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கனும்.”
“எனக்கு கராத்தே தெரியும் அங்கிள். பிளாக் பெல்ட்.”
“சரி. எத்தனைப் பேரைச் சமாளிக்க முடியம்?”
“நாங்க போருக்குப் போகலை அங்கிள். எங்களுக்குத் துணிச்சல் இருக்கு.”
“வேணாம். நான் நம்ம தோட்டக்காரன்கிட்ட விசயம் சொல்லி அனுப்பறேன்.”
“வேணாம் அங்கிள். நாங்களே நேராப் பார்த்து விசயம் சொன்னாதான் ஏகாம்பரத்துக்கும் நிலமை சரியாய்த் தெரியும் சரியாய் சொல்ல முடியும். ஆள் உதவ மனசு வைப்பார்.”
“எப்புடி சந்திப்பீங்க?”
மாலா தன் திட்டத்தைச் சொன்னாள். எல்லாரும் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“புத்திசாலிப் பொண்ணா இருக்கீயே?!” – தர்மலிங்கத்திற்கே வியப்பு வந்தது,
தொலை பேசி மணி அடித்தது.
தர்மலிங்கம் எடுத்தார்.
“ஹலோ!”
“யார் மாமா பேசுறீங்களா?”
“‘யார்டா நீ?” – இவர் டக்கென்று சூடானார்.
“உங்க பொண்ணுக்குப் புருசன்!”
“என்ன உளர்றே?” – சீறினார்.
“உங்க பொண்ணுக்குச் நான் சாந்தி முகூர்த்தம் முடிச்சு ரொம்ப நாளாச்சு. ஆக அவ என் பெண்டாட்டி. அப்படின்னா நீங்க எனக்கு மாமாதானே?! என்ன யார் பேசுறதுன்னு தெரியலையா?”
“….”
“சுலைமான்!”
“எந்த கம்மனாட்டி?!“
“ரொம்ப சூடாகாதீங்க. மருமகன்கிட்ட மாமனார் இப்புடியா பேசுறது? கொஞ்சம் அடக்கி வாசிங்க”
“எங்கே இருந்து பேசறே?”
“வேலுார் சிறையிலேர்ந்து”
“லோக்கல் கால் போல மணி அடிச்சுது?”
“புத்திசாலியா இருக்கீங்க. உள்ளுார் சிறையிலேர்ந்துதான் பேசறேன். மத்திய அமைச்சர் வர்றார்ன்னு சும்மாங்காட்டியும் ஒரு திருமண மண்டபத்துல அடைச்சு வைச்சிருக்காங்க.”
“எதுக்குப் போன் பண்ணினே?”
“உங்க மக வேணும்”
“எதுக்கு?”
“உசுரை எடுக்க.”
“விளையாடுறீயா?”
“விளையாடலை மாமா. ஏதோ கோபதாபம். பொண்டாட்டி புருசனை அடிச்சிட்டுப் போட்டுட்டு வந்துட்டான்னா அவளைச் சும்மா விடுறதா?”
மாமா மாமா என்று அழைப்பது இவருக்கு எரிச்சலைத் தந்தது.
“மரியாதையா பேசு” – எச்சரித்தார்.
“ஓ.கே. நாளைக்கு நான் அங்கே வர்றேன். உங்க மக சிம்ரனை என்கிட்ட ஒப்படைச்சிடுங்க.”
“மறுத்தா?”
“மறுத்தா சின்ன களேபரம் நடக்கும். அவள் உசுரு போறதோட உங்க உசுரும் சேர்ந்து போகும்.”
“மிரட்டறீயா? நான் பயப்படமாட்டேன்.”
“நானும் உங்களைப் பயமுறுத்தறதுக்காகச் சொல்லலை. நடக்கப் போறதைச் சொன்னேன்.”
“….”
“மாமா! நீங்க போலிஸ் அங்க இங்கன்னு எங்கேயும் பாதுகாப்புத் தேடி பிரயோசனமில்லே. நான் உள்ளே இருந்தாலும் என் ரெண்டு மூணு தோஸ்துங்களுக்கு விசயம் தெரியும் பொண்ணு மாட்டினா ஆபத்து, மாட்டுவா.” செல்லை அணைத்தான்.
போனை வைத்து நிமிர்ந்த தர்மலிங்கம் முகம் இருண்டிருந்தது. மற்றவர்கள் இவர் தொலை பேசி உரையாடலை முழுவதும் சொல்ல முகம் வெளிறினார்கள்.
“இப்ப சொல்லுங்க உங்க தலைக்கு மேல கத்தி இருக்கு எப்புடி ஏகாம்பரம் தேடி சந்திப்பீங்க?” – என்றார்.
“கஷ்டம்!” – ஜோதிகா சொன்னாள்.
“ஆனா சந்திச்சாத்தான் அங்கிள் நல்லது!” – மாலா விடவில்லை.
“நீ வழியைச் சொல்லு நான் சரியா சரி இல்லியா சொல்றேன்!” அவரும் அவரும் விடவில்லை விடவில்லை. மற்றவர்களைப் பார்த்து
“நீங்களும் யோசிக்கலாம்.” என்றார்.
ஆளாளுக்குச் சிந்தனையிலிறங்கினார்கள். வெகு நேர
யோசனைக்குப் பின் மாலா தன் மனதில் உதித்ததைச் சொன்னாள். கேட்ட அனைவர் முகத்திலும் திருப்தி.
அத்தியாயம் – 11
முகத்தை மூடிய கறுப்பு நிற பர்தாவில் ஆட்டோ ஏறி தாபர்கான் பேட்டையில் இறங்கிய உடனேயே மாலாவிற்கும் சிம்ரனுக்கும் சோதனை.
“எங்க தலைவரை நாலு பொட்டைக் குட்டிங்க ரவுண்டு கட்டி அடிச்சாலுங்கன்னா என்ன துணிச்சல்! அவளுங்க மட்டும் என் கண்ணுல மாட்டட்டும் குடலை உருவி மாலையாய்ப் போடறேன்.” குடி போதையில் ஒருவன் தள்ளாடி உளறிக் கொண்டே நடந்தான்.
கேட்ட இவர்களுக்குச் சொரக்கென்றது. அடிவயிற்றில் அமிலம் சுரந்தது. மேற்கொண்டு நடப்போமா வேண்டாமா என்பது போல சிம்ரன் நடையைத் தளர்த்தினாள்.
“பயப்படாம வாடீ!” – குசுகுசுத்து சிம்ரன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக நடந்தாள் மாலா..
அவனைத் தாண்டி வந்ததும் “ஏகாம்பரம் என்ன நாயகன் படத்து கமல் மாதிரியா?” – சிம்ரன் மாலாவிடம் சந்தேகம் கேட்டாள்.
“எப்படி இருந்தா என்ன? நமக்கு உதவினா சரி”. சொன்ன அவள் விரைவாக நடந்தாள்.
சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து வெளியே வந்தார்கள். ஏகாம்பரம் வீடு எது என்று தெரியவில்லை.
“யாரையாவது விசாரிடி?” – சிம்ரன் தோழி காதருகில் மெல்ல சொன்னாள்.
“ஊருக்குப் புதுசுன்னு நெனைச்சி சொல்றவன் தப்பான வழியைச் சொல்லி எங்காவது எக்குத் தப்பா மாட்டிவிட்டுடுவானோன்னு பயமாக இருக்கு” – என்றால் அவள் நடுங்கிய குரலில். மாலாவே பயப்படுவதைப் பார்க்க சிம்ரனுக்குள் உதறல் எடுத்தது.
“என்னடி துணிச்சலா வந்து நடு வழியில காலை வாருறே?!” – திகிலாய்ப் பார்த்தாள்.
“பயப்படாதே. ஏகாம்பரம் பேரைச் சொன்னாலே சொல்லலைன்னா நமக்கு நமக்கு பின்னால பிரச்சனை வரும் ஏன் வம்புன்னு சரியான வழி சொல்லுவாங்க” – மாலா அவள் பயத்தைப் போக்கினாள்.
‘ஆளை எப்படி சந்திக்கலாம்’ – சிந்தனையுடன் நடந்தாள்.
“சிரமம் பார்க்காம போலிஸ் ஸ்டேசன்ல்ல கேட்டிருந்தோம்ன்னா சரியான விலாசம் கொடுக்கிறதோட மட்டும் விடாம பாதுகாப்புக்கு ஒரு போலிஸ்காரரையும் துணைக்கு அழைச்சி வந்திருக்கலாம். அது சரியில்லேன்னா என் அப்பாவை விட்டே ஸ்டேசன்ல விலாசம் வாங்கி வரச் செய்திருக்கலாம்.” – சிம்ரனுக்கு நடக்க நடக்க கால் வலித்தது.
“அதையும் நான் யோசிச்சேன். ஏன் எதுக்குன்னு போலிஸ்காரங்க விசாரிப்பாங்க. நமக்கு உண்மையை மறைச்சி சரியா பதில் சொல்ல தெரியாது. உளறினோம்ன்னா வீண் வம்பு.”
இவர்கள் பேச்சு முடிந்ததும் எதிரே நோஞ்சான் போல ஒரு ஒல்லியான ஆள் போதையில் தள்ளாடி சாலையை அளந்து கொண்டு வந்தான்.
“இவனைக் கேட்கலாம்டி” மாலா சிம்ரன் காதில் ரகசியம் ஓதினாள்.
“கேட்கலாம். போதையில இருக்கிறவன்தான் உண்மையை ஒளிக்காம ஒழுங்கா பதில் சொல்வான்”. என்ற மாலா அவன் அருகில் வந்ததும் நடையைத் தளர்த்தி, “சார்! சின்ன உதவி!” – என்றாள்.
“என்ன?” – அவன் நிற்க முடியாமல் தள்ளாடினான்.
“எ…ஏகாம்பரம் வீடு..?”
“ஏட்டு ஏகாம்பரமா?“
“இ…இல்ல தாதா…தலைவரு…”
“தப்பா சொல்லாதே! தலைவரில்லே. வாத்தியாரு. அவரு வேணுமா?” – கேட்டு சரிந்த வேட்டியைச் சரி செய்தான்.
“அ…ஆமாம்”
“இன்னா பிரச்சனை? எவனாவது ராங் காட்டினானா?”
“அதெல்லாம் ஒன்னுமில்லே.”
“யார் கையக் காலையாவது எடுக்கனுமா?”
“இல்லே.”
“எவன் ஊடு பூந்து ஒதிக்கனும்?”
‘வகை தெரியாமல் மாட்டிக் கொண்டோம். இவனிடம் விபரமே வேண்டாம் எப்படி தப்பிப்பது?’ – மாலா தவித்தாள்.
“நீங்க யாரு?” – அவன் அடுத்த கேள்வியை வீசினான்.
‘என்ன சொல்வது?’ கையைப் பிசைந்தார்கள்.
“சரி. நான் கேட்கலை. கேட்டேன்னு தெரிஞ்சா ஒனக்கென்ன அநாவசியக் கேள்வின்னு ஒதிப்பாரு வழி சொல்றேன். இந்த சந்தால நேராப் போய் ரைட்டால பூந்து நாலு தப்படி நடந்து லெஃப்ட்ல கட் பண்ணி நடந்தீங்கன்னா நேரா வாத்தியார் வூடு, நான் போதையில உளர்றேன்ன நெனைக்காதீங்க. இங்கே பச்சப் புள்ளையக் கேட்டாலும் அவரு வூட்டுக்கு அழகா வழி சொல்லும்.” – நடந்தான்.
இவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று நடந்தார்கள். அவன் சொன்னது போல நேராய் நடந்து வலப்பக்கம் திரும்பியதும் மாலாவிற்கு தவறான பாதையில் நடக்கிறோமோ? – சின்ன சந்தேகம்.
“சார்! ஒரு நிமிசம்!” எதிரில் வந்தவனை நிறுத்தினாள். “ஏகாம்பரம் வீடு?” – இழுத்தாள்.
“இப்படியே போய் போய் லெஃப்ட்ல கட்பண்ணுங்க” அவன் சொன்னதையே இவன் சொன்னான். “என்ன விசயம்?” கேட்டான்.
“அ…வரைப் பார்க்கனும்.”
“இப்போ அவர் வீட்ல இல்ல. காலையிலேயே கட்டப் பஞ்சாயத்துக்குப் புறப்பட்டுப் போனார். நன்கொடையா வேலை விசயமா?”
“வே…வேலை விசயம் . எப்போ திரும்பவார்?”
“பஞ்சாயத்து முடிஞ்சதும் திரும்புவார்.”
“எப்போ முடியும்….?” சிம்ரன் கேட்டு வாய் மூடவில்லை. எதிரில் வந்த ஒருவன் “என்ன மச்சான்?” நின்றவன் தோள் மீது கை போட்டு “என்ன கேட்கிறாங்க?” – அவனை விசாரித்தான்.
“நம்ம வாத்தியாரைத் தேடிக்கிட்டு வந்திருக்காங்க. அவர் வெளியில போயிருக்கிற விசயத்தைச் சொன்னேன் நிக்கிறாங்க.”
“நான் இப்பதான் அங்கேயிருந்து வர்றேன். கட்டைப் பஞ்சாயத்து முடிச்சு தலைவரு கெளம்பிட்டாரு. இடையில ஒரு ஆள் மறைச்சான் பேசிக்கிட்டு நிக்கிறார். இப்போ வந்திடுவார்” என்றான்.
கேட்ட இவர்களுக்கு நெஞ்சில் பால் வார்த்த மாதிரி இருந்தது.
“ரொம்ப நன்றி சார்!” – இருவரும் சேர்ந்து சொல்லி நடந்தார்கள்.
‘குரல் நல்லா இருக்கு. பர்தாக்குள்ள குட்டிங்களும் ஷோக்காத்தானிருக்கனுமில்லே?’ நின்றவன் வந்தவனிடம் சொன்னான்.
“என்ன வம்பா? வாத்தியார் காதுல விழுந்துதுன்னா தொலைச்சப்புடுவார் தொலைச்சி!” – அவன் எச்சரித்தான்.
‘எங்கே சென்றாலும் பெண்கள் கற்பிற்குப் பாதுகாப்பு இல்லை. எங்கேயும் மோகம்!’ துணுக்குற்ற மாலா சிம்ரன் அடுத்து வந்த பதிலில் நிம்மதி மூச்சு விட்டு நடந்தார்கள்.
அந்த குப்பத்தில் ஏகாம்பரம் வீடுதான் பெரிது, ஆடம்பரம் நினைத்து வந்தவர்களுக்குப் பெரிய ஏமாற்றம்.
எதிரில் ஏழைகளுக்கு அரசு உதவிய மனையில் ஒரு ஆள் புகுந்து புறப்படுவது மாதிரி சின்ன ஓலைக் குடிசை.
‘இதுதானா வேறு வீடா?’ ஒருவருக்கு ஒருவர் நினைத்து சுற்றும் முற்றும் பார்த்தார்கள் குப்பத்தில் எல்லாம் குடிசை. தயங்கி நின்றார்கள்.
“என்னம்மா?” – பின் பக்கம் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
திரும்பினார்கள். கொஞ்சம் தள்ளி இதே போல் ஒரு குடிசை வீட்டைவிட்டு வெளியே வந்து கேட்டாள்.
“வாத்தியார்..வீ….டு ?…”. மாலா இழுத்தாள்.
“அந்த வீடுதான். உள்ளாற அவர் மனைவி இருக்காங்க கூப்பிட்டுங்க.”
இவர்கள் பேச்சைக் கேட்டு அவளே வெளி வந்தாள். உடம்பில் சாயம் போனஅரசு கொடுத்த இலவச புடவை ஜாக்கெட். உள்ளே பானை சட்டி தெரிந்தது. அடுப்பும் எரிந்தது, பானையில் சோறு கொதித்தது.
“சரசு! உன் வீட்டுக்காரரைத் தேடிக்கிட்டு வந்திருக்காங்க கவனி” – என்று எதிர் வீட்டுக்காரி கூறி தன் குடிசைக்குள் நுழைந்தாள்.
“வாங்கம்மா.” – சரசு வரவேற்றாள்.
“வா….த்தியாரைப் பார்க்கனும்.”
“உள்ளாற வந்து உட்காருங்க இப்ப வந்திடுவாரு”
குனிந்து உள்ளே நுழைவதே கஷ்டம் இதில் எப்படி உள்ளே போய் அமர…சிம்ரனுக்கு மனசில்லை.
“பரவாயில்லேங்க. நாங்க அப்படி மரத்தடியில காத்தாட இருக்கோம். ஐயா வந்ததும் வாரோம்” – சொன்னாள்.
“சரிம்மா.” – அவள் திரும்பி உள்ளே சென்றாள்.
இருவரும் பத்தடி துாரத்திலிருக்கும் வேப்ப மர நிழலை நோக்கி சென்றார்கள். எதிரில் வீடில்லை. வேரில் அமர்ந்தார்கள்.
“மாலா!”
“சொல்லு?”
“கஷ்டப்பட்டு வந்தது வீண்னு தோணுது.”
“ஏன்?”
“இந்த குடிசை வீடும் ஏழையான பொம்பளையையும் பார்த்தா ஏகாம்பரம் வீடாத் தெரியலை. வாத்தியார்ன்னு வேற சொல்லி குழப்புறாங்க. பெரிய ஆள் வீடு இப்புடியா இருக்கும்?” சிம்ரன் வாட்டத்துடன் சொன்னாள்.
“எனக்கும் அப்படித்தான் தோணுது. அந்த ஆள் இங்கே இருக்க வாய்ப்பே இல்லே!” – என்று பேசிக் கொண்டிருக்கும் போதே நாற்பது வயதில் ஒல்லியாய் சுமாரான உயரத்தில் வெள்ளை அரைக்கை கதர் சட்டை கதர் வேட்டி காலில் செருப்பு அணியாமல் அரசியல்வாதி போல் நடந்து வந்தவரைச் சூழ்ந்து ஒரு கூட்டமே வந்தது.
“டீ மாலா! அந்த ஆள் தாண்டி ஏகாம்பரம்!” – சிம்ரன் ஆச்சரியத்துடன் எழுந்தாள்.
பார்த்த இவளும், “ஆமாம்டி” வியந்தபடி எழுந்தாள்.
அதற்குள் அந்த ஆள் குடிசைக்குள் நுழைந்தார். கூட்டம் வெளியே நின்றது.
“பத்திரிக்கை போட்டோவுல சின்ன வயசு முரடன் மாதிரி தெரியமலை?”
“ஆமாம். அது பழைய போட்டோ போல.”
“இவரா தாதா? சுலைமானுக்கு எதிரி?“
“ஆளைப் பார்த்து எடை போடாத. மனசுல துணிச்சல் அதிகம் உள்ளவன் எவனா இருந்தாலும். தாதா ரௌடி.”
இவர்கள் பேசிக் கொண்டே குடிசையை நோக்கி நடந்தார்கள்.
குடிசை வாசலில் நின்ற ஒருவன் இவர்களை நோக்கி ஓடி வந்தான்.
“உங்களை வாத்தியார் கூப்பிடுறார்.” பவ்வியமாக சொன்னான்.
‘உள்ளே நுழைந்த கணவனிடம் மனைவி சொல்லி இருக்கிறாள். எவ்வளவு மதிப்பளித்து உடனே அழைக்கிறார்!’ – இவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவன் பின் நடந்தார்கள். குடிசை வாசல்வரை வந்தவன் ஒதுங்கி, “உள்ளே போங்கம்மா” – பவ்வியமாய் உள்ளே கை காட்டி வழி விட்டான்.
இருவரும் நுழைந்தார்கள். சாணி மெழுகி தரையில் கோரை பாய் விரிக்கப்பட்டிருந்தது. எதிரில் சின்ன தடுக்கில் ஏகாம்பரம் அமர்ந்திருந்தார்.
“உட்காருங்கம்மா” பாயைக் காட்டினார்.
அமர்ந்தார்கள்.
“சொல்லுங்கம்மா?”
அவரைப் பார்த்ததுமே இவர்கள் மனதில் தானாக ஒரு மரியாதை எழுந்தது.
“ஒரு உதவி சார்” – என்று ஆரம்பித்த சிம்ரன் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை முழுக்கதையையும் சொன்னாள்.
எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட ஏகாம்பரம், “ஆக இதுக்காகத்தான் அவனை அடிச்சீங்க?” கேட்டார்.
“ஆமா சார்.”
“நானே பொம்பளைங்க விசயத்துல அவன் மோசமா இருந்ததுனாலதான் கழட்டி விட்டேன். அடிச்சது சரி. எந்த வகையில நான் உங்களுக்கு உதவனும்?” – ஏறிட்டார்.
“நாங்க படிக்கிற புள்ளைங்க சார். எங்க உசுருக்கு உத்திரவாதம் குடும்பத்துக்குத் தொந்தரவு படிப்புக்கும் பாதகமில்லாம நீங்க எங்களுக்கு எந்த வகையில பாதுகாப்பு கொடுத்தாலும் சரி சார். செலவை ஏத்துக்கிறோம்” – மாலா சொன்னாள்.
“செலவா? அது கெடக்கு குப்பை!” என்று அலட்சியமாக சொன்ன ஏகாம்பரம், “என்கிட்ட நியாயம் நேர்மைக்குத்தான்ம்மா பேச்சு” – என்றார்.
மாலா, சிம்ரனுக்கு ஆச்சரியமாக இருந்தது,
ஏகாம்பரத்திற்கு மூளை வேலை செய்தது. வெகு நேரம் சிந்தித்தார்.
“என்ன சார் யோசனை கஷ்டமா?” மாலா பயத்துடன் பார்த்தாள்.
“கஷ்டம் ஒன்னுமில்லே. உங்களுக்கு எப்படியெல்லாம் பாதுகாப்பு கொடுக்க முடியும் எதிரி மோசமானவன் மட்டுமில்லாம எனக்கு எதிரி. எத்தனை காலத்துக்குக் குடுக்க முடியும். இதுக்கு முடிவு என்னன்னு யோசிக்கிறேன்.” – நிறுத்தினார். அடுத்தும் சிந்தனையிலிறங்கினார்.
சிம்ரன், மாலா மௌனமாய் இருந்தார்கள்.
“உங்களையெல்லாம் ஹாஸ்டல்லேயோ வேறு எங்கேயோ ஒரு இடமா சேர்த்து ஒட்டு மொத்தமா பாதுகாப்பு கொடுக்கலாம்ன்னா எதிரி உங்க குடும்பத்தைத் தொடுவான். சரி வராது, உங்க முதுகுக்குப் பின்னால நான் கல்லுாரிக்கும் ஆள் அனுப்பனும். என்கிட்ட உதவின்னு வந்தா முடிஞ்ச வரைக்கும் சரியா செய்ஞ்சு அனுப்பினாத்தான் எனக்குத் திருப்தி என்று சொல்லிக் கொண்டே வந்தவர் திடீரென்று. ஒரு முடிவிற்கு வந்தவராய், “நான் உங்களுக்குப் பாதுகாப்புத் தார்றேன்” உறுதியாக சொன்னார்.
“எ..எப்புடி சார்?” – சிம்ரன் கேட்டாள்.
“உங்களுக்குத் தெரியனும்ன்னு அவசியமில்லே. இருந்தாலும் நீங்க தைரியமா இருக்கனும்ங்குறதுக்காகச் சொல்றேன். உங்க அஞ்சு பேர் வீட்டிலேயும் ஒவ்வொருத்தன் காவலிருப்பான். அடுத்து உங்களுக்குப் பின்னாடியும் நிழலாய் என் ஆட்கள் எப்போதும் இருப்பாங்க. நீங்க அவங்களைக் கவனிக்கத் தேவை இல்லே. தானாய் இருப்பாங்க”. என்றவர் ”பஞ்சநாதன்!” – எவரையோ உரக்க அழைத்தார்.
“என்ன வாத்தியாரே?” வெளியே இருந்து உள்ளே ஒரு ஆள் வந்தான். அவனும் பலசாலி அடியாள் போலில்லாமல் சாதாரணமாகத்தானிருந்தான்.
“இவுங்க இன்னையிலேர்ந்து நம்ம புள்ளைங்க. இவுங்க ஆட்டோ பின்னால அஞ்சு பேர் போங்க. இவுங்க காட்டுற பொண்ணுங்க வீட்ல ஒவ்வொரு ஆளாய் இறங்கி காவலிருங்க. அடுத்து இந்த பொண்ணுங்க கல்லுாரி போகும்போதும் நிழலாய்த் தொடர்ந்து இருக்கனும். நாம் இந்த பொண்ணுங்களுக்குக் காவலிருக்கிறது சுலைமான் கோஷ்டிக்குத் தெரியனும். வேணாம் வம்புன்னு அவுங்க பின் வாங்கனும்”. தன் திட்டத்தைச் சொன்னார்.
“சரி வாத்யாரே !” – அவன் வெளியே வந்தான்.
ஏகாம்பரம் அடுத்து மாலா சிம்ரனைப் பார்த்தார்.
“என் பாதுகாப்புல இருக்கோம்ன்னு நீங்களும் அலட்சியமா இருக்கக் கூடாது. கொஞ்சம் அசந்தாலும் எதிரி நம்மை ஏமாத்திடுவான் மடக்கிடுவான். தலைக்கு மேல கத்தி தொங்கற நெனப்புல நீங்க விழிப்பா இருக்கனும். இந்த பாதுகாப்புல சுலைமான் பின் வாங்கலைன்னா அடுத்த கட்ட நடவடிக்கையைப் பத்தி அப்புறம் யோசிப்போம். கிளம்புங்க” – விடைகொடுத்தார்.
கேட்டது கிடைத்த திருப்தி இவர்கள் “நன்றி!” சொல்லிவிட்டு வெளியே வந்தார்கள்.
‘ஒரு சாதாரண குடிசை. அதில் சாதாரண மனிதன். இவனெப்படி மக்கள் பயப்படும் அளவிற்குத் தாதா ரௌடி!? சுற்றி கூட்டம் அழைத்த குரலுக்கு ஆள். ஏனென்று எதிர் கேள்வி கேட்காமல் உத்தரவை ஏற்கும் செயல். எப்படி வந்தது இந்த சக்தி மாயம்?’ – வியப்பு திகைப்பு மலைப்பாய் நடந்தார்கள்.
அத்தியாயம் – 12
“மூணு நாள் பொயப்பு போயிடுச்சி தலைவா?” – பக்கிரி ஆரம்பமே ஒப்பாரியாக இருந்தது.
“நாட்டுல எவன் ஒரு முக்கியப் புள்ளி காலடி எடுத்து வைச்சாலும் முதல் ஆளாய் நாமதான் உள்ளாற போறோம் தலைவா இதுக்கு மொதல்ல முற்றுப் புள்ளி வைக்கனும்.” – அடுத்து ரவி.
“ஆளுங்கட்சி சப்போர்ட்டுன்னு ஏகாம்பரத்தை உடனே வெளியில விட்டுட்டானுங்க. நம்மை மட்டும் வந்தவன் போற வரைக்கும் உள்ளே இருக்க வைச்சி நாரடிக்கிறானுங்க.” – செயபால்.
“இன்னிக்குத் தொழில்ல குதிச்சு பொண்டாட்டி கண்ணுல காசைக் காட்டலைன்னா வீட்டுல நொழைய முடியாது. பசி பட்டினியில வேற புள்ளைக் குட்டிங்க செத்துடும்.” – கோவிந்தன்.
சுற்றியுள்ளவர்கள் புலம்பல்களெல்லாம் சுலைமான் காதில் ஏறவே இல்லை. அவன் விஸ்கியைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே தள்ளி போதை ஏற்றிக் கொண்டிருந்தான். கண்கள் சிவப்பேறிக் கொண்டிருந்தது,
“மூணு நாள் அடை பட்டினிக்கும் இப்போ ஏத்துற போதைக்கும் எந்த பொண்ணு மாட்டினாலும் செத்தா!” – சுலைமான் குணத்தை அறிந்த பக்கிரி அடுத்தவன் காதில் குசுகுசுத்தான்.
“நிலைமை சரியில்லே தலைவா!” – கபாலி சொல்லிக் கொண்டே வந்தான்.
‘என்ன?’ என்பதைப் போல் சுலைமான் அவனை ஏறிட்டான்.
“நம்ம ரவி சொன்னது சரியா இருக்கு. அவன் வாயில சக்கரை போடனும்.”
எல்லாரும் அவனைப் புரியாமல் பார்த்தார்கள்.
“குட்டிங்க பலம் இல்லாம தலைவர் மேல பாயலை”. எல்லாரும் திகைப்பாய்ப் பார்தார்கள்.
“நீங்க சொன்ன தர்மலிங்கம் வீட்டான்ட போனேன் தலைவா. ஏகாம்பரம் ஆள் ஒருத்தன் அங்கே காவலிருக்கான்” தான் பார்த்ததைச் சொன்னான்.
“நீ பார்த்தியா?” – சுலைமான் திடுக்கிட்டான்.
“சத்தியமா என் ரெண்டு கண்ணால பார்த்தேன் தலைவா. ஆள் பக்கத்து வீட்டான்ட உட்கார்ந்து அவர் வீட்டையே நேட்டம் விட்டுக்கிட்டு இருக்கான். எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. உடனே திரும்பிட்டேன்.” – சொல்லும் போதே அவனுக்கு நடுக்கம் இருந்தது.
“பயப்படுறீயா?” – சுலைமான் அவனைக் கூர்ந்து பார்த்தான்.
“வாத்தியார் ஆளுங்க பார்க்கிறதுக்குத்தான் சாதாரண ஆள் மாதிரி தெரிவானுங்க அடிச்சா மரண அடி புடிச்சா குரங்குப் புடி புடிப்பானுங்க. அவனுங்க கிட்ட இருந்து தப்பிக்கிறது பெரிய காரியம். நீங்க நெனைக்கிற மாதிரியெல்லாம் குட்டிங்களைத் தொட முடியாது. அவமானம் அவமானம்தான்!” – நிறுத்தினான்.
“நான் அவளுங்களைக் கொன்னே ஆகனும்!” – சுலைமான் வெறியடன் சொல்லி பாட்டலை அப்படியே சாய்த்து எல்லா விஸ்கியையும் விழுங்கினான்.
“வாத்தியார்தான் வாழனும் நாம் தலை தூக்கக் கூடாதுங்குறதுல குறியாய் இருக்கார்.” – செயபால் தன் கோபத்தை வெளியிட்டான்.
“எதிரி எதிரியா இல்லாம இனிப்பானா?”. ரவி அவனுக்குப் பதில் சொன்னான்.
“நாம அவளுங்களை நடமாட விட்டா அவமானம்.”
“குட்டிங்க மேல கை வைக்கிற மாதிரி இருந்தா உசுரு மசுரு போறதைப் பத்தி கவலைப் படக் கூடாது, தடாலடியா இறங்கனும். போலிஸ் கேசெல்லாம் அப்புறம்”.
சுலைமான் இறுக்கமாக இருந்தான்.
“தலைவா! இப்போதைக்க அடிதடி கலாட்டா இல்லாம சுமூகமா காரியம் முடிக்கனும்ன்னா ஒரு வழி இருக்கு கேட்கிறீங்களாத் தலைவா?” – ரவி அடிக்கண்ணால் சுலைமானைப் பார்த்தான்.
இவன் அவனை ஏறிட்டான்.
“அப்புறம் மான அவமானம்ன்னு என் மேல குத்தம் கொறை சொல்லக் கூடாது?”
“சொல்லு?”
“நீங்க வாத்தியார்கிட்ட நேரடியாப் போகனும். நமக்குள்ள வம்பு வழக்கு வேணாம். எனக்கு அந்த பொண்ணுங்க மேல ஆசை கெடையாது, சும்மா இருந்தவனை வம்புக்கு இழுத்தது அவளுங்கத்தான். ஆண் அவமானப் படுறதுல உனக்குச் சம்மதமா? அதனாலதான் அவளுங்களை ஒரு வழி பண்ணனும்ன்னு துடிக்கிறேன். நான் பண்ணலை. நீயே பண்ணினாலும் எனக்குச் சம்மதம்ன்னா வாத்தியார் உருகி தானாவே அவளுங்களை நம்ம கிட்ட ஒப்படைப்பாரு. இல்லே அவரே தண்டிப்பாரு” நிறுத்தினான்.
“இது மகா கேவலம்!” – பக்கிரிக்கப் பிடிக்கவில்லை.
“அப்படின்னா பிரச்சனையை ஆறப்போடனும். வாத்தியார் கொஞ்ச நாளைக்குக் காவல் பார்த்து விட்டுடுவார். விட்டபிறகு நாம நெனைச்சதை முடிக்கலாம்.”
“ஆறின கஞ்சி பழங்கஞ்சி வேகம் தணிஞ்சிடும்!” – சுலைமானுகக்குச் சம்மதமில்லை.
“வேகம் விவேகம் இல்லே. வாத்தியார் இளிச்சவாயர் லேசப்பட்ட ஆளுன்னு நெனைக்க வேணாம். அடைக்கலம்ன்னு வந்தவங்களை சீக்கிரம் கைவிட மாட்டார். எதிரி குழம்பட்டும்ன்னு காவல் விலக்கிறா போல விலக்கி நம் முதுகைப் பார்ப்பார். நாமெல்லாம் அவர்கிட்டே இருந்தோம் அவர் குணம் எனக்கு நல்லா தெரியும்.” – ரவி சொன்னான்.
“அடித்தவள்களுக்கு வாத்தியார் பாதுகாப்பு என்றால் லேசில் தொட முடியாது.” – சுலைமானுக்குப் போதையிலும் புத்தி வேலை செய்தது, நிதானித்தான். பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய், “வா பக்கிரி!” எழுந்தான்.
“எங்கே தலைவரே!” – அவன் கேட்டும் பதில் சொல்லவில்லை.
சுலைமான் யமஹாவைக் கிளப்பி, “உட்கார்!” அவனைப் பார்த்து சொன்னான்.
பக்கிரி அமர்ந்தான். வண்டி நேராக ஏகாம்பரம் வீட்டை நோக்கி சென்றது.
‘ஒரு வேலை தலைவர் நேரடியாகவே வாத்தியாரைப் போட்டுத் தள்ள போகிறாரா?’ பக்கிரிக்குள் திகிலாக இருந்தது, வண்டி வாத்தியார் வீட்டு வாசலில் வந்து நின்றதும் இதே நினைவுதான் ஏகாம்பரத்தின் தோஸ்துகளுக்கும் நினைத்தார்கள்.
சுலைமானைப் பார்த்த ஏகாம்ரத்திற்கு இந்த நினைவு வரவில்லை. இவன் தன்னைத் தேடி வருகிறானென்றால் ஏதேபா பயங்கரத் திட்டம்! என்று மட்டும் நினைத்தார்.
சுலைமான் ஏதோ தாய் வீட்டிற்கு வந்தவன் போல் எந்த வித தயக்கமுமில்லாமல் குடிசைக்குள் நுழைந்து “வணக்கம் வாத்தியாரே!” – கை கூப்பினான்.
“வணக்கம்!” – ஏகாம்பரமும் எதிர் கும்பிடு போட்டார்.
“உட்காரலாமா?”
“ம்ம்” – எதிரிலிருந்த பாயைக் காட்டினார்.
அமர்ந்தான்.
‘குட்டிங்க அடி வாங்கியதிலிருந்து இவனனக்குப் புத்தி பிசகிப் போச்சு. எதிரிகிட்டேயே வந்து சரண்டர் ஆகிறான்!’ – பக்கிரி நினைத்து தோஸ்துக்கு அருகில் அமர்ந்தான்.
வண்டியில் வரும்போதே எதிரியிடம் எப்படியெல்லாம் பேச வேண்டும் என்று யோசித்து வைத்திருந்ததினால் சுலைமான், “ஒ….ஒரு விசயம் வாத்தியாரே!” – என்றான்.
ஏறிட்டார்.
“என்னை நீங்க எதிரியா நெனைக்கிறது மனசுக்குக் கஷ்டமா இருக்கு” – ஏதோ வருத்தப்படுபவன் போல் முகத்தைத் தொங்க வைத்துக் கொண்டு சொன்னான் சுலைமான்.
ஏகாம்பரத்திற்குச் சுலைமான் நடிப்புத் தெரிந்தது, நடிக்காமல் சொல் நினைத்தார் வீடு தேடி வந்தவனை அப்படி அவமானப் படுத்தி அனுப்ப விரும்பவில்லை.
“என்ன விசயம்?” – சுற்றி வலைக்காமல் விசயத்திற்கு வந்தார்.
“சொல்றேன் வாத்தியாரே! இப்போ நீங்க அஞ்சு பொண்ணுங்களுக்கு ஆதரவு குடுக்கிறதாக் கேள்விப் பட்டோ…” மெல்ல ஆரம்பித்தான்.
“ஆமா”
:அவங்க என்ன செய்ஞ்சாங்கன்னு உங்களுக்குத் தெரியும்.”
“தெரியும்.!”
“பொம்பளைங்க ஆம்பளைகிட்ட மோதுறது நியாயமா?”
“நியாய அநியாயமிங்கிறது ஆண் செய்யிற காரியத்தைப் பொறுத்தது.” – ஏகாம்பரம் நிதானமாக பதில் சொன்னார்.
சுலைமான் பேசவில்லை.
தொடர்ந்தார், “சுலை! ஒன்னா இருந்த நீயும் நானும் ஏன் பிரிஞ்சோம் எதுக்குப் பிரிஞ்சோம்ங்குறது உனக்கு எனக்கு மட்டுமில்லாம நம்ம தோஸ்துங்களுக்கும் தெரியும். நான் பெண்கள் விசயத்துல கறார். நம்ம மனைவி விபச்சாரி. விரும்பி வர்றவளை அனுபவிக்கலாம்ங்குறது இங்கே எழுதப்படாத சட்டம். அதை மீறினே. எனக்குப் புடிக்கலை கண்டிச்சேன். நீ நாலு கூட்டாளிங்களை அழைச்சிகிட்டு வெளிக்கிளம்பிட்டே இதுதான் நடந்துது. கற்புங்குறது பெரிய விசயம் அது பொம்னாட்டிங்களுக்கு உசுர். அதை பணம் காசுக்காக சீரழிக்கிறதுங்குறது பெரிய பாவம் தப்பு. அந்த பாவம் தப்பை நீ செய்யிறேங்குறது என் வருத்தம்.” நிறுத்தினார்.
“நியாயம். ஒத்துக்கிறேண்ணே! எனக்கு நாலு பேர் இருக்கிறது ஊர் உலகம் தெரிஞ்ச சேதி. பொம்பளைக் கையால அடிவாங்கினது தெரிஞ்சா தெரிஞ்சா என் மதிப்பு மரியாதை?” இழுத்தான்.
“இதெல்லாம் நாம செய்யிறதைப் பொருத்து தானா வரனும்”
அவர் மடக்கியதில் இவனுக்கு அடுத்துப் பேச தோன்றவில்லை. மௌனமாக இருந்தான். அந்த மௌனம் ஏகாம்பரத்திற்கு என்னவோ போலிருந்தது.
“விடு எல்லாத்தையும் மறப்போம் மன்னிப்போம். இப்போ விசயத்துக்கு வர்றேன். அந்த புள்ளைங்கனை நீ என்ன செய்ய விரும்பறே?” ஏகாம்பரம் சுலைமான் மனதை ஊடுருவது போல் பார்த்துக் கேட்டார்.
“சின்னதா ஒரு தண்டனை குடுத்து விடலாம்ங்குறது என் ஆசை”
“கையைக் காலை எடுத்துடலாம்ங்குறீயா?”
“ஐயோ அப்படியெல்லாம் இல்லேண்ணே!”
“உன் மனசுல உள்ளதைச் சொல்?”
‘நீ விலகு நான் அவளுங்களைக் கொன்னு குழி தோண்டிப் புதைச்சிடுறேன்!’ – எப்படி சொல்ல முடியும்? – சங்கடமாகப் பார்த்தான்.
ஏகாம்பரம் தொடர்ந்தார், “முன் பின் பழக்கம் பகை கோபம் எதுவுமில்லாத பொண்ணை நீ தொட்டு கெடுத்தது தப்பு. கெடுக்கப்பட்டவள் உடலால கெட்டுப்போறது மட்டுமில்லா மனத்தாலேயும் பாதிக்கப் படுறா.. ஏன் உன் குத்தம் கருவைச் சுமக்கிறதுக்கும் ஆளாக வேண்டிய கட்டாயம்., இப்படிப் பட்ட பெரிய தண்டனையை இந்த பெண்கள்ல ஒருத்திக்குக் குடுத்திருக்கே. பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு ஆத்திரம் நாலு தோழிங்களைச் சேர்த்துக்கிட்டு உன்னைத் தாக்கி இருக்காள். உன் அவமானம் உன் கூட சேர்ந்தவங்க துடிக்கும் போது அவளைச் சேர்ந்தவங்களும் துடிச்சிருக்காங்க. இதுதான் நடந்தது. உனக்கு உடல்ல மட்டும்தான் அடி. அவளுக்கு உடல் மனம் எதிர் காலமே அடி. இன்னும் அந்த பொண்ணுக்கு நீ என்ன தண்டனைக் குடுக்கப் போறதா உத்தேசம். அது எப்புடி நியாயம்?” – உற்றுப் பார்த்தார்.
சுலைமானுக்குச் சங்கடமாக இருந்தது.
“பலத்தினால நாம் நெனைச்சப்படி வாழலாம் நடக்கலாம்ங்குறதெல்லாம் தப்பு. பலம் நிரந்தரமில்லே. நாளைக்கு நம்மைவிட இன்னொரு பலசாலியை மக்கள் கண்டுட்டாங்கன்ன‘னா நமக்கு மதிப்பில்லே. அந்த பொண்ணுங்க விசயத்துல உன் முடிவு என்ன?” – கேட்டார்.
“ஆம்பளை அவமானம் உங்களுக்குத் தெரியும். அதிலும் நம்மைப் போல ஆளுங்களுக்கு அது பெரிய தலைக் குனிவு. இதையெல்லாம் உத்தேசித்து நீங்க என்ன செய்யலாம்ன்னு சொல்றீங்கண்ணே?”
“மன்னிச்சு விடுறதா விருப்பம். ஆனா உனக்கு அது ஒப்புதலா இருக்காது.”
ஆமாம் சொல்லவில்லை. பேசாமல் இருந்தான்.
“உன்னால அந்த பொண்ணுங்களுக்கு ஆபத்து இல்லேன்னு சொல்லு. என் ஆளுங்களை விலக்கிக்கிறேன்”.
சுலைமானக்குச் சம்மதமில்லை. இவன் எதிர்பார்த்து வந்து இது இல்லை. பேசமலிருந்தான்.
“விருப்பமில்லேன்னா விடு” – ஏகாம்பரம் முகத்தில் இறுக்கம் வந்தது.
“ஒரு சின்ன யோசனைண்ணே!” என்றான்.
“சொல்லு?”
“அந்த பொண்ணுங்க என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டா என் மனசு ஆறும். மன்னிக்கத் தயார்!” – என்றான்.
“நியாயம் பொது. அதுங்க உன்கிட்ட மன்னிப்புக் கேட்கனும்ன்னா நீயும் அதுங்க கிட்ட மன்னிப்புக் கேட்கனும்” – ஏகாம்பரம் நியாயத்தைச் சொன்னார்.
சுலைமான் யோசித்தான். ‘எப்படியாவது அவர்களைக் கண்ணால் கண்டால் போதும் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!’ முடிவுக்கு வந்தான்.
“சரிண்ணே!” தலையாட்டினான்.
“அப்போ பிரச்சனையை இன்னிக்கே முடிச்சிப்போம். பொட்டப் புள்ளங்க படிப்பு கெடுது”
“சரிண்ணே!” – தலையாட்டினான்.
ஏகாம்பரம் செல் போனை எடுத்தார். எண்களை அழுத்திக் காதில் வைத்தார்.
சிம்ரன் எடுத்தாள். “என்ன ஐயா?”
“உன் தோழிங்களை அழைச்சிக்கிட்டு இங்கே உடனே வர முடியமா?”
“எ..ஏதுக்கு?” – அவள் கேட்டதிற்கு விபரம் சொன்னார். அவர்கள் அரைமணி நேரத்தில் வந்து இறங்கினார்கள். சுலைமான் அவர்களை நன்றாக பார்த்து மனதில் குறித்துக் கொண்டான்.
“மன்னிச்சிக்கோ தங்கச்சி!” – முதலில் சிம்ரனிடம் மன்னிப்புக் கேட்டு அடுத்து மற்றவர்களிடமும் கேட்டான்.
“மன்னிச்சிடுங்க” – அவர்களும் ஒட்டு மொத்தமாய் இவனிடம் கேட்டார்கள்.
சுலைமான் திருப்தியாக புறப்பட்டான்.
பக்கிரிக்கு வயிறு எரிந்தது.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ரயில் செல்வியும்… WAP 7 என்ஜினும்…
உரு.வளவன்
September 12, 2026
ராப்பிச்சை
மா.வீ.தியாகராசன்
September 12, 2026
மரணம் நம்மைப் பிரிக்கும் வரை
இரா.துரைமாணிக்கம்
September 12, 2026
