பிணவறைக் கோபுரங்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 4, 2026
பார்வையிட்டோர்: 17 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

ஈழத்து மண் அப்போதுதான் எரிமலைக் குழம்பாய் வெடிக்கத் தொடங்கியிருந்தது. உதயனின் குடும்பம் காலம் காலமாகக் கொழும்பு அதிகார வர்க்கத்தோடு தமிழரசு, தனிநாடு, தாயகம் என்று பேசி, பாராளுமன்றக் கதிரைகளில் ஏறி அமர்ந்த பாரம்பரியம் கொண்டது. அவர்கள் வடக்கு, கிழக்கு,  ஏழை மக்களுக்கான அரசியலை, கொழும்பில் குடியிருந்து காலங்காலமாகச் செய்து தங்களை ஆலமரம் போல தக்க வைத்தவர்கள்.  கறுவாக்காட்டுத் தோட்ட முதலாளிகள் அவர்கள். எல்லோரும் சமம் என்பதில் எப்போதும் நம்பிக்கையற்றவர்கள். கம்யூனிச சித்தாந்தங்களை, அதன் கோட்பாடுகளை அது போதிக்கிற மனித நேயத்தை அவர்கள் என்றுங் கற்றுக் கொடுத்தவர்களோ, கண்டு கொண்டவர்களோ அல்ல . அது தமது சுயநல அரசியலை அசைத்து ஆட்டங்கொடுத்து விடும் என்பதை நன்கு உணர்ந்த அப்புக்காத்துகள்.
இத்தகு அரசியல் பேசி தம்மை வளர்த்த அரசியலாளர்களை இனங்கண்டு அவர்களை நிராகரிக்கத்,  தமிழர்களுக்கு இன்னமும் தான் துணிவு பிறக்கவில்லை. “அவங்கள் தமிழனுக்கும் தமிழ் உரிமைக்காகவும் தானே பேசுறாங்கள்” என்கிற  சொல்லாடலில் நூற்றாண்டு கழிந்திருந்தது.

இத்தகு அரசியல் கொழும்பில் நடக்க  யாழின் வீதியில் நின்ற குணசேகரனின் குடும்பத்திற்கோ கஞ்சிக்கு வழி தேடுவதே பெரும்பாடாய் இருந்தது. குணசேகரன் நல்ல கவிஞன். வார்த்தைகளால் நெருப்பைக் கக்குவான். வீதிமுனைகளில் அவன் கவிதை வாசிக்கும்போது இளைஞர்களின் இரத்தம் கொதிக்கும். “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்! அழிந்து படுமா இனியும் தமிழினம்” என்றெல்லாம் அவன் எழுதினான். வெளிநாடு போக முகவருக்கு காசு கட்டிய வேளையிலும் நிலம்பெயரா மனிதனுக்கே தன்மானமுண்டு என்றெழுதிய சூரன். அரசே அத்தனை அழிவிற்கும் காரணம் என்றும், தன் வீட்டுக் கிணறு உப்பாயிருப்பதற்கும்,போதையருந்திச் செத்தவனுக்கும், தமிழனைத் தமிழன் அழிப்பதற்கும் கூட அரசே காரணமென்றும் அவன் கவி பாடினான்.

அவனோடு கைகோர்த்து நின்ற சண்முகமோ, “அரசோடு சண்டை பிடித்துப்  பயனில்லை, அரிசி, சீனி எல்லாம் அவர்களிடமிருந்தே வருகிறது. சம்பளமும், பென்சனும் அங்கிருந்து தான் வருகிறது. நமக்கு அரசாங்க உத்தியோகம் தான் நிரந்தரம்” என்று கொழும்புக்கு ரயிலேறினான்.

இயக்கங்கள் நூற்றுக் கணக்காக முளைத்த காலம் அது. குணசேகரன் இயக்கங்களின் கொள்கை பரப்புரைக்குத் தன் பேனாவைத் தாரைவார்த்தான். கவிதையையும், கதைகளையும் ஆயுதமாக்கினான்.

ஆனால், யுத்தம் அவனது கவிதைத் வரிகளைப் போல அழகானதாக இருக்கவில்லை. அது மிகக் கொடூரமானது.

குணசேகரனின் பக்கத்து வீடு அவனது நண்பன் திவாகருடையது. திவாகரின் அக்கா  கற்பகம் எப்போதுமே தையல் மிஷினில் அமர்ந்து தைத்துக் கொண்டிருக்கிற நல்ல உழைப்பாளி. ஒருநாள் திடீரென அவர்களின் வீட்டினுள் புகுந்தனர் ராணுவ வெறியர்கள். அதன் பின் எழுந்தது மரண ஓலம். வாகனங்களின் சத்தம், கற்பகம் ராணுவத்தால் சீரழிக்கப்பட்டு, காவு கொள்ளப்பட்டாள் என்கிற பேரிடி. அந்த அலறல் சத்தம் குணசேகரனின் கண்களைத் தூங்க விடாமல்  துளைத்தது.

அவனுக்குள் இருந்த கவிதைப் ‘போராளி’ பயந்து நடுங்கினான். கவிதைகள் துப்பாக்கிகளுக்கு முன்னால் வெறும் காகிதங்கள் என்பதை உணர்ந்தான். அடுத்த சில வாரங்களில், கள்ளத்தோணி ஏறி, இந்தியா சென்று, பின் ஏஜெண்டுக்குப் பணம் கொடுத்து, ஐரோப்பாவின் பனி படர்ந்த ஜேர்மனிக்கு அகதியாகத் தப்பியோடினான்.

தன் வீடே பற்றி எரியும்போது தன் வீட்டைக் காப்பாற்ற முடியாத எலியைப் போல அவன் ஓடி அகதியாக ஒளிந்ததொன்றும் பாபகாரியமில்லை என்று அவன் உள்மனம் சொல்லியது.
புலம்பெயர்ந்த தேசத்தில் ஆரம்பத்தில் குளிர் கடித்தது. ஆனால், காலம் மாற மாற குணசேகரனுக்குப் புதிய பாதை புலப்பட்டது. அங்கே ‘தமிழ் உணர்வு’ என்பது ஒரு நல்ல முதலீடாக மாறுவதை அவன் கவனித்தான்.

தாயகத்தில் இனமானங் காக்கப் போராடிச் செத்தவர்களின் மாவீரர் நாள் வரும்போது, இவன் இங்கே குளிரூட்டப்பட்ட மண்டபங்களில் அவர்களிற்காக மலர்வளையம் வைப்பதற்காக விசேட பூக்களை, இறக்குமதியாக்கும் வியாபாரம் அற்புதம் எனக் கண்டான். மேடைகளில் கற்பகத்தின் மரணத்தையும், இயக்கங்களின் வீரத்தையும் கதைகளாகவும், கவிதைகளாகவும் வடித்தான். அவனுக்குப் புகழும் அங்கீகாரமும் தேடி வந்தன. அவன்தான் ஜேர்மனியில் கோவில் வைத்த முதல் ஆள். நிலவறையில் வைத்த கோவில் இன்று வீதிகளை தடுத்து ஜேர்மானியரே வியந்து மோற்றும் பெருங்கோவிலாக  உயர்ந்தது. வானைப் பிளந்தது தேர்..
அவனைத் ” தேசப்பற்றாளர் குணசேகரன்’ என்று ஊடகங்கள் எழுதின. மழைக் காலத்தில் முளைக்கும் காளான்களைப் போல, அவனது தமிழ் உணர்வு தையில், மாவீர வாரங்களில், என வசூல் காலங்களில் மட்டும் செழித்து வளர்ந்தது. கொழுத்த பணம் சுருட்டும் காலங்கள் அவை.

அவன் என்றும் சும்மா இருக்கவில்லை. தமிழ் உணர்வை மூலதனமாக்கி வியாபாரத்தைத் தொடங்கினான். தன்னோடு ஒத்த உணர்வு கொண்ட வியாபாரிகளை இணைத்து அவன் வைத்த ஒரு கடை, நான்கு கடைகளாகி, நாலாயிரம் கடைகளாகியது. பெற்றோல் நிரப்பு நிலையங்கள், கோவில்கள், வானொலிகள், தொலைக்காட்சி, பத்திரிகை, கட்டிடங்களென அது வியாபித்தெழுந்து. சுவிஸ், பிரான்ஸ் பெலஜியம், கொலன்ட, இத்தாலி, நோர்வே, டென்மார்க்கென அவன் சாம்ராட்சியம் சுழியோடி எழுந்தது. 

உள்நாட்டில் சாகின்ற மக்களின் நிழலில், இவன் புகலிடத்தில் மாமன்னனாக வாழ்ந்தான்.

அதே நேரத்தில், தாயகத்தில் இருந்த சாதாரண ஏழைகள், “தனிநாடு வேண்டாம், எங்களுக்கு வாழ வழியிருந்தால் போதும், ஏதோ ஒரு நல்ல தீர்வு கிடைத்தால் சரி” என்று உள்நாட்டிற்குள் ஒற்றுமையைப் பற்றிப் பேசத் தொடங்கினர். ஆனால், குணசேகரனும், அவனைச் சூழ்ந்த கட்டற்ற புலம் பெயர் வியாபாரிகளும், தேசியம் அழிவதாக  அதை வன்மையாக கண்டித்து எதிர்த்தனர்.. .

“, தனிநாடு மட்டுமே நமக்கான தீர்வு! அரசு நம்மை அழித்தே தீரும். இனத்திற்கு துரோகம் செய்யாதீர்கள்!” இனமானங் காக்க எழுவோம் என்று மேற்கு நாடுகளெங்கணும்,  முகநூலிலும்,  மேடைகளிலும் அவர்கள் முழங்கினார்கள். தேசபக்தர்களான இவர்கள் தெருக்களை மறித்தார்கள். கொடி நட்டார்கள். கொத்து றொட்டி வியாபாரம்்சூடு பிடித்தது. லாட்டரி விற்றார்கள்.

அதிலும் தூய தமிழ்த் தேசியம் பேசியவண்ணம்
கொத்து றொட்டி போடுவதில் வல்லவர்களான சிங்கள இளைஞர்களை வேலைக்காக இறக்கினார்கள . கொத்து றொட்டிக் கடைகளை, பலான உணவகங்களை, பெரு மண்டபங்ஙகளைத் திறந்தார்கள். அழகான உணவு வைகளை அடுக்கிவைத்துச் சோக் காட்டினார்கள். இலங்கை அரசின் மந்திரிகளை வரவழைத்தார்கள். ஓர்கானிக் வயல்களை இலங்கையில்  நடாத்த அவர்களோடு ஒப்பந்தம் செய்தார்கள். ஆடு பகை குட்டி உறவோ என்று அந்த வல்லவர்களைக் கேட்க யாருக்கும் துணிவில்லை.

பணமில்லாதவன் இங்கு செத்த பிணம். பணம் பாதளம் வரை பாயும்.
தமிழனை அழியக்கொடுத்தபடி, 
ஆற்றின் கரையில் பாதுகாப்பாக தாம் பாதுகாப்பு ஜக்கெற் அணிந்து  நின்று கொண்டு, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுபவனைப் பார்த்து வேகமாக நீந்தி வருமாறு கூச்சலிடும் சுயநலவாதியைப் போல அவர்கள்  செயல்பட்டார்கள்.
உள்நாட்டில்
தனிநாட்டிற்கான முப்பது வருட யுத்தம் முடிவுக்கு வந்தது. முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மண்ணோடு மண்ணாகின. தமிழரின் அனைத்து  வளங்களும் சூறையிடப்பட்டு அந்த மண்ணில்  எல்லாம் எரித்தழிக்கப் பட்டது.

ஆனால், மேற்கைரோப்பாவில் குணசேகரனின் கடைகளில் வியாபாரம் குறையவில்லை.

கொழும்பில் அரசாங்க உத்தியோகம் பார்த்து ஓய்வுபெற்ற அவனது பழைய நண்பன் சண்முகம், இலண்டன் வந்திருந்தார். தற்செயலாக லண்டனில் இருந்த குணசேகரனின் பெரிய மளிகைக் கடைக்கு அவர் வந்த போது குணசேகரனைக் கண்டு மகிழ்ந்து கட்டித் தழுவினார். . சண்முகத்தின் கண்கள் கலங்கியிருந்தன .

“குணா, ஈழத்தில்  மக்கள் இன்னும் போர்க்காலப் பேரிடரிலிருந்தும், அந்த வலிகளிலிருந்தும் மீள முடியாமல் தவிக்கிறார்கள். சொந்த நிலங்கள் இல்லை, வேலை வாய்ப்பு இல்லை. பணமில்லை. தனிநாடு என்ற பேச்சை விட்டுவிட்டு, இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக வெளிநாட்டவர் உதவலாமே? தனிநாடு என்கிற கோஷம் இனி அவசியம் தானா குணா?” என்றான் அப்பாவியாகச் சண்முகம்.
குணசேகரன் தன் விலையுயர்ந்த காரின் சாவியை மேசையில் வைத்துவிட்டு, சண்முகத்தைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான்.

“சண்முகம், உனக்கு அரசியல் தெரியாது. தனிநாடு தேவையா, தேவையில்லையா என்பதைவிடவும் அதன் ஆளத்தையும், நம் அரசியல் வாதிகளும் இயக்கங்களும் போராடி மாண்டதை நினைக்க வேண்டாமா??  அவர்கள் தியாகங்கள் வீணாவதா? கலாச்சரங்களை வீணடிப்பதா ??அதை   புரிய வேண்டாமா ?

அதை இப்ப புரிந்து… என்ன ஆவது .. நாம் தான் தோற்றுப் போன சமூகமாகவல்லவா இருக்கின்றோம்? என்று இழுத்தான் சண்முகம்.

தீ சிங்களவருக்கு சூ.. கொடுக்கிற ஆள். கொழும்பில அரச உத்தியோகத்தனாக இருந்த நீ இப்படித்தான் கதைப்பாய் என்று கடுப்பாகினான் குணா ..

எமக்கு தனி ஈழம் கண்டிப்பாகத் தேவை,” அதுதான் இலக்கு என்றான் குணா…

சண்முகம் குழப்பத்துடன், “எப்படியப்பா ? அங்கே இன்னும் இரத்தம் சிந்திப் பேராறு ஓடவேண்டுமா?” இன்னும்  எத்தனை பெண்களின் தாலியறுப்பது ? எத்தனை பிள்ளைகளைச் சாக்காட்டுவது ?  எப்படி அது சாத்தியம் ? என்றான்.

குணசேகரன் குறும்பாகப் புன்னகைத்து, சாத்தியமற்றது என்று எதுவுமில்லை உலகில். அனைத்தும் சாத்தியமென தன் பிரமாண்டக் கடையைச் சுற்றிக் காண்பித்தான். “இஞ்ச பார்… இந்தப்  பெருங் கடைகளுக்கு வருபவர்கள் யார்? பெரும்பாலும் தமிழ் வாடிக்கையாளர்கள் தான்.. அதனால்த்தான் நான் மாவீரர் படம் போட்டு, தமிழ் உணர்வைத் தூண்டி, மேடைகளில் முழங்குகின்றேன்.  அதனால்  இங்கு ‘கஸ்ரமர்கள்’ என் கடைக்கு நித்தம் வருவார்கள். என் கவிதைப் புத்தகங்களை வாங்குவார்கள். என் வியாபாரம் செழிக்கும். நான் சொகுசாக வாழ, என் கடைகளுக்குக் கஸ்ரமர்களைத் தக்கவைத்துக் கொள்ள எனக்கு அந்த ‘ஈழம்’ என்கிற முழக்கம் எப்போதும் தேவை!” என்றான்.

அவன் தன்னையறியாது அந்த உண்மையை பேசினான்.

சண்முகம் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். இயக்கங்களின் பெயராலும், மக்களின் தியாகத்தாலும்,மாவீரச் செல்வங்களின் இழப்பிலும் பிழைப்பு நடத்தும் இந்த ஒட்டுண்ணிகளை என்னவென்பது.. இவர்களை நம்பித்தான் உள்ளூரில் அவர்கள் ஈழத்திற்காகப்்போராடுகின்றார்களா ?சண்முகத்திற்கு தலை சுற்றியது.

 ஈழப் பற்றாளன், இன விடியல் தலைமகனென்றெல்லாம் கேசப்பட்ட குணாவின் குதர்க்க அரசியலைக் காண சண்முகத்திற்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவனை ஒன்றுமே செய்ய முடியாதே..   நண்பனின்  சுயநலங்கண்ட  அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல்  குணசேகரனின் அந்தப் பெரிய மளிகைக் கடையின் கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பால் வேடிக்கை பார்த்தான். அங்கே, குளிர்காலப் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் சில இளைஞர்கள் பதாகைகளைத் தாங்கி நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் முகங்களில் இருந்த ஏழ்மையும், கண்களில் இருந்த ஏமாற்றமும் தாயகத்து அகதி முகாம்களை நினைவுபடுத்தின. சண்முகத்திடம் அவர்கள் என்ன செய்கின்றார்களென வினவியபோது, குணசேகரன் அவர்கள் அகதி அந்தஸ்துக்காகக் காத்திருப்பவர்கள் என்றும், இலங்கையில் தனிநாடு வேண்டும்  என்று இப்படிப் போராடினால்தான்  அதைப் பெறலாமென்பதை விட இங்கு அகதி அந்தஸ்து பெறலாமென்பது  புலம்பெயர் ஐதீகம் என்றான்.

அதுவரை அவர்களுக்கு வேலை கொடுத்து  அகதி அந்தஸ்த்து பெற்றுத் தருவதாகக் கூறித் தன் கடைகளில் குறைவான கூலிக்கு அவர்களை மூட்டை தூக்கப் பயன்படுத்துவதாகப்  பெருமையடித்தான்.  அவர்கள் அகதி அந்தஸ்திற்காக,  இங்கு இலங்கை அரசிற்கெதிராக ஆர்பபாட்டம் நடாத்துகின்றார்கள். இது அவர்களுக்கு ஒன்றும் பெற்றுத்தரப் போஙதில்லை. ஆனால் இதனால் பயனடைவது எம் போன்ற ஆட்கள்தான்..

தடுக்கிற சக்தி தன்னிடமே இருக்கென்றும் வருங்கால இந்தப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர், மந்திரி என நான் தான் அவர்களைத் தீர்மானிக்கிற ஆட்களாய்  தன்னைத் தக்க வைக்காமல் விடப் போவதில்லை என்றான்

விழுந்த மரத்தை வேரோடு பிடுங்கி விறகாக்கும் விறகுவெட்டியைப் போல, இவன் அகதிகளின் இயலாமையைப் பயன்படுத்திக் கொண்டானே என்றெண்ணினான் சண்முகம்.

அப்போது அங்கே வந்த குணசேகரன்  கூட்டாளிகள்   ஒருவரையொருவர் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டனர். குணசேரனது நண்பன் ரவிச்சந்திரன் மாவீரர் நினைவுச் சுடர் விழாவுக்கான மண்டப முன்பதிவு முடிந்ததையும், தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதாகப் போஸ்டர் அடித்து வசூல் வேட்டை நடத்துவதையும், அஞ்சலி மலர் இறக்குதியையும் மெருமையாக  கூறினான்.
அங்கு நின்ற சண்முகம் இந்த பணம்  வன்னிப் பகுதி ஏழைப் பிள்ளைகளின் படிப்புச் செலவிற்காக செலவிட்டால் எத்துணை சிறப்பு என்று வெள்ளேந்தியாக கேட்டபோது, அவர்கள் படித்துப் பெரிய ஆளாகிவிட்டால் போராட்டம் என்ற உணர்வே இல்லாமல் போய்விடும் என்றும், வந்த பணத்தில் கொஞ்சத்தை தொண்டு நிறுவனத்திற்குப் படம் பிடித்துக் காட்டுவதற்காக அனுப்பிவிட்டு, மிச்சமனைத்தையும் லண்டனில் தாங்கள் வாங்கியுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் தவணைப் பணத்திற்குப் பயன்படுத்துவதாகவும் ரவிச்சந்திரன் கூறினான். வேலியே பயிரை மேய்ந்து , மக்கள் பணத்தில் உருவாகிற  பொய்யானஅறக்கட்டளைகள் மக்களின் நம்பிக்கையைத் தின்றன.

உண்மையில் மாமேதை மார்க்ஸ் சிந்தனைகளை மறுதலித்து விட்டு திருத்தல் வாதிகளெனும் திருடர்கள் ஆளுக்கொரு கொள்கையோடு முதலாளித்துவத்தை கட்டியாள்கிற கேவலமான பூமியிது. ட்ரம்ப் போன்ற மானிடவிரோதிகளிடம்  தான் உலக மக்கள் சிக்கிக் கொண்டுள்ளார்கள். குணா போன்றவர்கள் அதற்கு விதி விலக்கல்ல.

இந்த ஏமாற்று வியாபாரம் என்பது வெறும் மளிகைக் கடைகளோடு நிற்கவில்லை என்பதைச் சண்முகம் அடுத்தடுத்த நாட்களில் புரிந்துகொண்டான். குணசேகரன் இப்போது ஒரு ‘கார்ப்பரேட்’ முதலாளி. அவன் ஒரு புதிய தமிழ் ஊடகத்தைத் தொடங்கியிருந்தான். அவனது நவீன அச்சு இயந்திரங்கள் நள்ளிரவிலும் ஓயாமல் இயங்கிக் கொண்டிருந்தன. வாரப் பத்திரிகைகள், மாத இதழ்கள் என அடுக்கடுக்காகப் பிரதிகள் தயாராகின.  உலகெங்கும் புத்தக கண்காட்சிகளை அவன் நடாத்தினான். இதற்கான  அசல் முதலீடு அந்தந்த  நாட்டு அரசாங்கங்களிடமிருந்து பல்வேறு சமூகச் செயல்பாடுகள் என்ற பெயரில் மானியமாக வருகிறது என்ற ரகசியத்தை   குணசேகரன் சொல்லவில்லை. .  தன் கை நிறைய அள்ளித் தர்மம் செய்யும் போலி வள்ளலைப் போல, அரசாங்கப் பணத்தில், மக்கள் பணத்தில்  இவர்களின் பிராண்ட் வளர்ந்தது. ஆங்கிலக் கலப்பு இல்லாமல் இருந்த சங்கத்தமிழை  இது ஆங்கிலமா, தமிழா என்று கேட்கும் அளவிற்கு தமிழை முகவரி இல்லாமல் ஆக்கப் போகிற தமிழீழநாயகர்கள் இவர்கள் தான் என்பதை எவருக்கும் சொல்லுந் துணிவில்லை.

அச்சம் எங்கே இருக்கிறதோ, அங்கே தான் வியாபாரம் நடக்கும் என்பது குணசேகரனின் தாரக மந்திரம்.  மக்களிடம் பயத்தைக் காட்டித்தான் கடவுள்கள்கூட கோவில்களில் வியாபாரமாகி இருக்கின்றார்கள்.

கடைகளில் விற்கப்படும் ஈழத்துத் தயாரிப்புகள் என்று முத்திரை குத்தப்பட்ட பொருட்களுக்குத் தனி மவுசு இருந்தது. சாதாரண அரிசியை விட, தாயகத்து மண் வாசனை என்று ஸ்டிக்கர் ஒட்டி விற்றால், உணர்ச்சிவசப்படும் நம்மவர்கள் இரட்டிப்பு விலை கொடுத்து வாங்குவார்கள். வேம்பு இலையும், கற்றாளை இலையும் கூட இங்கு பெருமதிப்பானது இப்படித்தான்.. தமிழரசு என்ற பெயரில்  நாகதாளிச் சிகப்பு யூஸுள் கற்றாளை உள்ளீடுகளை போட்டு விற்பனை செய்தார்கள். வொட்கா மெலனோடு ஈழ உணவகம் தயரானது.

துயரமும், கண்ணீரும் தான் உலகிலேயே மிகச் சிறந்த மார்க்கெட்டிங் கருவிகள்.
அரசியல், ஊடகம் ஆகியவற்றைத் தாண்டி குணசேகரன் அடுத்ததாகக் கையில் எடுத்தது மக்களின் பலவீனமான ஆன்மீகம். லண்டனின் மையப்பகுதியில் மற்றுமொரு பிரம்மாண்டமான கோவிலை அவன் தலைமையிலான குழு உருவாக்கியிருந்தது. நம் ஊர்க் கோவில் என்ற உணர்ச்சியைத் தூண்டி, லட்சக்கணக்கில் பவுண்டுகளும் யூரோக்களும் மக்களிடம் இருந்து பொலிகின்ற இடமது.. . கும்பாபிஷேகம் என்ற பெயரில் பெரு இலாபம் தரும் விழாக்களை அங்கு ஏற்படுத்தியிருந்தார்கள்.   விளக்கு வெளிச்சத்தைத் தேடி வரும் விட்டில் பூச்சிகளைப் போல, மக்கள் பக்திப் பரவசத்தில் கண்ணீர் மல்கிக் காசைக் கொட்டினார்கள். பத்து பவுண்டுகள் செலவு செய்துவிட்டு, நூறு பவுண்டுகள் என்று கணக்கு எழுதி, அரச மானியத்தை கோவில் பெயரில் கும்பாபிஷேகத்தின் பெயரில் ஊர்ப்பணத்தைக் கொள்ளையடித்தார்கள். தங்கள் மீதான கறைகளைத் துடைக்கவும், தங்களைச் சமூகத்தில் பெரிய மனிதர்களாக நிலைநிறுத்திக் கொள்ளவும் குணசேகரனும் அவனது கூட்டாளிகளும் தன்னார்வ நிறுவனங்களை உருவாக்கி, வருடத்திற்கு ஒருமுறை பிரம்மாண்டமான விருது வழங்கும் விழாக்கள் நடத்தினர்.

காக்கை ஒன்றுக்கு ஒன்று சிறகுகளைக் கோதி அழகு பார்த்துக் கொள்வதைப் போல, ஆளுக்காள் விருது கொடுத்துக் கொள்ளும் விசித்திரமான நாடகம் அது. குணசேகரன் ரவிச்சந்திரனுக்கு ‘ஈழத் தாரகை’ விருது கொடுப்பான்; ரவிச்சந்திரன் குணசேகரனுக்கு ‘மனிதநேயச் செம்மல்’ விருது வழங்குவான்.

 நேற்று வரை இயக்க எதிர்ப்பான அரச ஒட்டுக் குழுக்களென ஒதுக்கியவர்களோடு  ஒன்றிப்  போயிருந்தான்  குணசேகரன்   அதைப் பற்றி சண்முகம் அதிசயத்தோடு விசாரித்த போது  , குணசேகரன் வாய்விட்டு உரக்கச் சிரித்தான். அவர்களும் தங்களைப் போன்றவர்கள் தான் , நாணயம் சேர்க்கிற ஒருபக்கம் நாமெனில் மறுபக்கம் அவர்கள் என்றான். 

தாங்கள் இயக்கப் பெருமை பேசிப் பணம் சம்பாதித்தால், அவர்கள் இயக்க எதிர்ப்பு மற்றும் மனித உரிமை என்ற லேபிளை ஒட்டிப் பிழைப்பு நடத்துகிறார்கள். சர்வதேச நிறுவனங்களிடமிருந்து நாங்கள் தான் பாதிக்கப்பட்டவர்களின் குரல் என்று மாறிமாறிக் கூறி, ஆளுக்காள் போட்டாபோட்டி போட்டு   அரச மானியங்களைப் பெறுகிறார்கள். இருதலைக் கொள்ளி எறும்பாக மக்கள் தவிக்க, இரண்டு பக்கமும் நெருப்பை மூட்டி குளிர் காய்வது இவர்கள் தான். சண்முகம் மனதிற்குள் பொருமினான்.

குணசேகரன் மதுக்கோப்பையை சுழற்றியபடி, தாயகத்தில் இருக்கிற மக்கள் எப்போதும் ஏழைகளாகவும், வறுமைக் கோட்டுக்குக் கீழேயும், ஒருவித அச்ச உணர்வோடுமே இருக்க வேண்டும் அப்போதான் அவர்களுக்கு தமிழின உணர்வேறும் என்றான்.

.ஒரு சமுதாயம் எப்போது நிமிர்ந்து நிற்கிறதோ, அப்போது அதற்குப் போலியான இரட்சகர்கள் தேவைப்பட மாட்டார்கள். அப்படி சிந்தனை மிக்க சமூகத்தை உயர்த்த எவனும் இங்கு பாடுபடுவதில்லை. சிந்திக்காமல் இருக்கிற மக்களின்  ஏழ்மைதான் இத்தகைய இடைத்தரகர்களின்  உயர்வுக்கான ஏணி. அறியாமையும், ஏழ்மையுமே சுரண்டல்வாதிகள் ஏறி மிதிப்பதற்கான ஏணிகள். அந்த ஏணி எப்போதும் மூடத்தனங் கொண்ட, ஏழ்மையானதாகவே இருக்க வேண்டும். அதுதான் இவர்களின் வன்மத்தின் மூலதனம். தன் பசி தீர சக மானிடனின் சதையைக் கிழித்துத் தின்னும் ஓநாயின் வன்மம் அது. இந்த வன்மந்தான் காலாதி பாலமாக உலகை வறுமைச்்சேற்றினுள் தள்ளுவது.

இந்த வன்மக் கோட்பாட்டின்படிதான் தாயகத்தில் உள்ள பெண்களுக்காகத் தையல் தொழிற்கூடத்தைத் தொடங்கப் போவதாகப் புகலிடத்தில் முழங்கி நிதி திரட்டிவிட்டு, களத்தில் அந்தப் பெண்கள் முன்னேறத் தொடங்கியபோது உள்ளூர் அரசியல்வாதிகளைக் கொண்டு அதற்கு முட்டுக்கட்டை போடுவது. அவர்கள் எப்போதும் கஞ்சிக்குக் கையேந்தும் நிலையிலேயே இருக்க வேண்டும், அப்போதுதான் அடுத்த வருடமும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் என்ற தலைப்பில் நிதி திரட்ட முடியும்.

லண்டன் மாநகரத்தின் குளிர்கால மாலைப் பொழுதில், குணசேகரன் நடத்திய ஒரு பிரம்மாண்ட பாராட்டு விழாவில் மேடைக்குக் கீழே, தாயகத்திலிருந்து அண்மையில் லண்டனுக்கு வந்திருந்த ஒரு முன்னாள் பெண் போராளி, தன் செயற்கைக் காலோடு நின்று கொண்டிருந்தாள். அவளது போர்க்காலக் கதைகளை இவர்களுடைய பத்திரிகையில் தொடராக எழுதிக் காசு பார்த்தார்கள். அவளது புகைப்படத்தைப் போட்டு நிதியுதவி பெற்றார்கள். ஆனால், புற்றுநோயால் தவித்த அவளது மருத்துவச் செலவுக்குப் பத்து பவுண்டுகள் கூடத் தராமல்  கொன்றார்கள்..

ஈழத்து மக்களை ஒரு தோற்றுப்போன, பிச்சை எடுக்கும் சமூகமாக உலகிற்குள் காட்டுவதில்தான் இவர்களின் சொகுசு வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்று அவள் அழுதுகொண்டே உயிர் விட்டாள் என்ற செய்தியையும் அறிந்திருந்தான் சண்முகம்.

இத்தணை மனப்போராட்டத்தோடு இருந்த சண்முகம் பயணித்த விமானம் தாயகத்து மண்ணைத் தொட்டபோது விடிந்திருந்தது. சண்முகம் வன்னிப் பெருநிலத்தின் வீதிகளில் நடந்தான். அங்கே குணசேகரன்களும், போலி இயக்க எதிர்ப்பாளர்களும் எதிர்பார்த்தது போல மக்கள் சோர்ந்து போய் உட்காரவில்லை. அவர்கள் தங்களின் சொந்த உழைப்பால், விவசாயத்தாலும், சுயதொழில்களாலும் மெல்ல மெல்ல நிமிரத் தொடங்கியிருந்தார்கள். வெளிநாட்டுப் பிச்சையையோ, போலிக் கோஷங்களையோ நம்பாமல், தங்களின் அடுத்த தலைமுறையைக் கல்வி நோக்கியும், உலகளாவிய தொழில் நுட்பங்களை நோக்கியும் நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.

மக்களை எப்போதும் கையேந்தும் நிலையிலேயே வைத்திருக்க நினைக்கும் இத்தகைய இடைத்தரகர்களின் வன்மக் கோட்பாட்டை உடைக்க, சமுதாயம் சிந்திக்கத் தொடங்க வேண்டும். விழிப்புணர்வும் சுயசார்பும் மட்டுமே இந்தச் சுரண்டல் சுழற்சியை முறிப்பதற்கான ஒரே வழி. சண்முகம் தன் பேனாவை எடுத்தான். குணசேகரன்களின் மளிகைக் கடைகளையும், கும்பாபிஷேகக் கொள்ளைகளையும், அனைத்திற்கும் மேலாக, தன் சொந்தச் சமூகத்தை எப்போதும் ஏழைகளாக வைத்திருக்கத் துடிக்கும் அவர்களின் வன்மத்தையும் அக்குவேறு ஆணிவேறாகத் துகிலுரித்து எழுதத் தொடங்கினான். மக்களின் ஏழ்மையையும், தியாகத்தையும் தங்களின் சொகுசுக்கான ஏணியாக மாற்றிய வன்மக் கூட்டமே, உங்கள் வியாபாரச் சந்தை இதோ முடிவுக்கு வருகிறது. ஈழத்து மக்கள் உங்களின் ஏமாற்று அரசியலையும், நிதி மோசடிகளையும் கடந்து நிமிரத் தொடங்கிவிட்டார்கள். சேற்றில் முளைத்தாலும் தாமரை சூரியனைக் கண்டு மலர்வதைப் போல, இந்தச் சமூகம் தன் சொந்தக் கால்களில் நிமிர்ந்து நிற்கும் என்கிற சுகமான செய்தியோடு விடிந்தது ஈழமண்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *