கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2025
பார்வையிட்டோர்: 12,694 
 
 

தரகர் பையைத் திறந்தபோது டீ பாமீது எகிறி விழுந்தது ஒரு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ. அருகில் சோஃபாவில் அமர்ந்திருந்த சந்தானம் பாய்ந்து சென்று அந்த ஃபோட்டவைக் கையில் எடுத்துப் பார்த்தார்.

ஃபோட்டோவில் தெரிந்த பெண் மூக்கும் முழியுமாக இருந்தாள். சந்தானம் வாயெல்லாம் பல்லானார்!

“தரகரே! பெண் யாருய்யா…ஜோரா இருக்குறா?” 

“அது வேணாங்க!” 

“ஏன்யா வேணாங்குறீர்?” 

“ஐயா..பொண்ணு பரம ஏழைங்க! அம்மா கிடையாது. வேலைக்குப் போய்க்கிட்டிருந்த அப்பா திடீர்னு ஹார்ட் அட்டாக்குல போயிட்டாரு. பொண்ணு ப்ளஸ் டூ வரைதான் படிச்சிருக்கு. ஒண்ணுவிட்ட மாமா மாமியோட அரவணைப்புல இப்போ இருக்கு. பவானி சூப்பர் மார்க்கெட்ல வேலை செய்யுது!” 

“அடாடா ! இவ்வளவு அழகான பொண்ணுக்கு இத்தனை இடைஞ்சல்களா?” 

கிச்சனில் இருந்து வெளிப்பட்ட சந்தானத்தின் மனைவி கல்யாணி அங்கு நடந்த உரையாடல்களைக் காதுகொடுத்து கேட்டாள். பின்பு கணவர் கையிலிருந்த ஃபோட்டோவையும் வாங்கிப் பார்த்தாள்.

“நீங்க சொல்றது மெய்தாங்க! பொண்ணு அம்சமாயிரூக்கா! பேசாம இவளையே நம்மப் பையன் அஷோக்குக்கு கட்டி வச்சாலென்ன?” 

தரகர் இடைமறித்துக் கூறினார்.”அம்மா அவங்களால ஒண்ணும் தற்போதைக்கு செய்ய முடியாதம்மா! அந்தப் பொண்ணோட அப்பா பணம் கெடைக்க நாளாகும். அதுவும் எவ்வளவு பணம் கெடைக்கும்னு தெரியாது….இன்னி தேதிக்கு அவங்க பாபர்…” 

அதே நேரம் ஹாலில் நடக்கும் சல சலப்பைக் கேட்டு அங்கு வந்தான் அஷோக்.

அம்மா கையிலிரூந்த ஃபோட்டோவை வாங்கிப் பார்த்தவன் முகம் மலர்ந்தது.

“அம்மா…பெண் நல்லா இருக்கா. உன் அபிப்ராயம் என்ன?” 

“அஷோக்…பொண்ணு நல்லா இருந்து என்ன பிரயோஜனம்! அவளோட தலையெழுத்து நல்லா இல்லையே!” என்றார் சந்தானம்.

“நீங்க சொல்றது புரியல்லப்பா!” 

“பொண்ணுக்கு அப்பா அம்மா கிடையாது..ப்ளஸ் டூ வரைதான் படிச்சிருக்கு. பவானி சூப்பர் மார்க்கெட்ல சேல்ஸ் கேர்ளா வேலை பார்க்குதாம்! கல்யாணம் பண்ற அளவுக்கு அவங்களுக்கு வசதி கிடையாதுப்பா!” 

“நான் சொல்றேனேன்னு கோபப்படாதீங்க..நமக்கு இருக்கற ஆஸ்தியும் பணமும் எட்டு தலைமுறைக்கு வரும். நாமே செலவு செய்து கல்யாணம் பண்ணால் என்ன?” 

“அஷோக்..நீ சின்னப்பையன். உனக்கு ஒண்ணும் தெரியாது. நமக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. அதன்படி உனக்கு பொண்ணு தர நிறையப் பேர் காத்துக்கிட்டிருக்காங்க…” 

“சரிப்பா..பாத்து செய்யுங்க!” அப்போதைக்கு சமாதானமாகப் போனான் அஷோக்.

ஆனால் ஃபோட்டோவில் பார்த்த பெண் அடிக்கடி அவன் நினைவில் வந்தாள்.

முகம் பொலிவாகத்தான் இருந்தது. ஆனால் கூர்ந்து பார்த்தபோது அவள் கண்களில் மெல்லிய சோகம் இழைந்தோடியது தெரிந்தது! அவள் மன உணர்ச்சிகளை அப்பட்டமாய் காண்பித்தது.

தரகரைத் தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணைப் பற்றி அஷோக் விசாரித்தான். ஒரு நிமிட அவகாசத்தில் மூச்சு விடாமல் அனைத்தையும் கூறி முடித்தார் தரகர்.

பெண்ணின் பெயர் வெண்ணிலா. வெண்ணிலவைப்போலவே பளிச்சென்று இருக்கிறாள் – அஷோக் மனத்தில் கிளுகிளுப்பு!   

ஒருவாரம் கழிந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. அப்பா, பிள்ளைக்கு அலுவலகம் விடுமுறை.

கல்யாணி கோயிலுக்குச் சென்றிருந்தாள். ஹாலில் நாற்காலியில் அமர்ந்தவாறு வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் சந்தானம். ஹாலுக்குள் பிரவேசித்த அஷோக் தந்தை எதிரில் சோஃபாவில் உட்கார்ந்துகொண்டான்.

மகனையே சில வினாடிகள் உற்றுப் பார்த்த சந்தானம், “அஷோக்! உன் மனசில என்ன இருக்கு..உன்னோட கல்யாண விஷயம் பத்தி பேச்செடுத்தால் ஏன் பிடி கொடுத்து பேசமாட்டேங்குற?” 

“அப்பா…இன்னிக்கு ஒரு முடிவோட பேசப்போறேன்…அந்த சூப்பர்மார்க்கெட் பெண் வெண்ணிலாவுக்கு என்னப்பா குறைச்சல்?” 

“இன்னும் நீ அவளை மறக்கல்லியா…” என்றவர், “இதோபார்.அவளுக்கும் உனக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. நம்பளது ஹை ஸ்டேட்டஸ்…அவளுக்கு நோ ஸ்டேட்டஸ் அட் ஆல்!” 

அஷோக் மெலிதாகச் சிரித்தான்.”அப்பா இந்தப் பாழாய்ப் போகுற அந்தஸ்து மனுஷன் பிறந்து, சாகும்வரை இடையில் வந்து போகுற விஷயம்! அது இருக்கும் வரை பாடாய் படுத்தும். ஆனால் மனுஷனுக்கு ‘மனிதம் ‘ இருக்கணும்ப்பா…” 

சந்தானம் துணுக்குற்றார். அந்தக் காலத்தில் தான்  தன் தந்தையிடம் பேசியது போல் இன்று மகன் பேசுகிறான்! ஆனால் ஒரு சில மாற்றங்கள்…இது எப்படி சாத்தியம்!உள்ளுக்குள் மாய்ந்து போனார் சந்தானம்.

“சரி..இப்போ நீ என்ன சொல்லவரே?” 

“என்னை மன்னிச்சிடுங்கப்பா! நான் இப்படி கேட்குறனேன்னு தப்பா நினைக்காதீங்க! அம்மாவை நீங்க முதலில் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல பார்த்து ஆசைப்பட்டீங்க. அவங்களையே கல்யாணம் செய்துக்க விரும்புனீங்க. ஆனால் தாத்தா, பாட்டி ஆரம்பத்தில ஒத்துக்கல்ல. காரணம் அம்மா ஏழை. படிப்பு எஸ்.எஸ்.எல்.ஸி. அதனால ஸ்டேட்டஸ் பார்த்து தாத்தா பிடிவாதமா மறுத்தாரு. பிறகு பாட்டி சொல்லி ஒத்துக்கிட்டாரு தாத்தான்னு கேள்வி!  அம்மாவக் கல்யாணம் செய்துக்கும்போது நீங்கள் ஸ்டேட்டஸ் பார்க்கவில்லை. ஆனால் உங்கள் மகன் விஷயத்தில் மட்டும் பார்க்குறீர்கள். ஏம்பா இந்த டிஸ்கிரிமினேஷன்?” 

மகன் நெத்தியடிகளாய் வார்த்தைகளைக் கொட்ட வேர்த்துப் போனார் சந்தானம்.

‘உனக்கொரு நியாயம். எனக்கொரு நியாயமா?’  என கேளாமல் கேட்டு விட்டான் மகன். நியாயம்தான்.

“அப்பா ! உங்களைக் குத்திக் காட்டறேன்னு என்னை தவறாக நினைக்காதீங்க. எனக்கு வேற வழி தெரியல்ல.” 

இயல்பு நிலைக்குத் திரும்பிய சந்தானம் “ஆல்ரைட்! நீ விரும்புற பொண்ணையே கட்டிக்க நான் சம்மதிக்கிறேன்.” என்றார்.

“தேங்க் யு டாட்.” நிம்மதியாகச் சிரித்தான் அஷோக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *