வைர நெக்லஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2025
பார்வையிட்டோர்: 386 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

தன் கணவருடன் பணி புரியும் எதிர் வீட்டு தனசேகரன் மனைவியின் கழுத்தில் வைரமாலையைப் பார்த்த பத்மஜாவுக்குப் பொறாமையாய் இருந்தது. தான் எப்போது அந்த மாதிரி மாலையை வாங்கப் போகிறோம் என்றெண்ணி ஆதங்கப்பட்டாள்.

அவளுக்கு அவர் கணவர் ரகுராமன் மேல் கோபமாய் வந்தது. மற்ற அதிகாரிகளும், ஊழியர்களும் லஞ்சம் வாங்கும்போது இவர் மட்டும் கொள்கை, நேர்மை என்று உத்தமனாய் இருக்கிறாரே, பிழைக்கத்தெரியாத மனிதர் என்று முணுமுணுத்தாள். எப்படியாவது நச்சரித்து அவர் மனசை மாற்ற வேண்டும் என்று நினைத்தாள்.

நகைகளின் மேல் ஆசையிருப்பது சில பெண்களின் இயற்கையான குணம். பத்மஜா அதற்கு விதிவிலக்கல்ல. அவளுக்குக் குறிப்பாக வைர நெக்லஸ் மேல் கொள்ளைப் பிரியம். கணவன் லஞ்சம் வாங்கியாவது தனக்கு வைரநெக்லஸ் வாங்கிக் கொடுக்க வேண்டுமென நினைத்தாள். அவள் மேல் தவறில்லை. அவள் கணவருடன் கூடப் பணிபுரியும் ஊழியர்களின் மனைவிமார்கள் கழுத்தில் வைரநெக்லஸ் இருக்கிறது. எப்படி வாங்கியிருப்பார்கள் என்று சொல்லாமலே புரியும்.

ரகுராமன் உணவு அருந்திவிட்டு அலுவலகம் கிளம்பத் தயாரானார்.

”ஏங்க நான் சொல்றதைக் கேளுங்க . நல்லா வசதியாய் வாழலாம்” என்ற அவளைக் கோபத்துடன் பார்த்த ரகுராமன், உனக்கு ஒன்றும் தெரியாது. என் விசயத்தில் நீ தலையிடாதே என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

ரகுராமன் அலுவலகத்தில் கோப்பை படிக்கும்போது அந்தக் கோப்பில் சிக்கல் இருப்பதுபோல் தோன்றியது. திருப்தி ஏற்படவில்லை.ஒருமுறைக்கு இருமுறை படித்தார்..

“சார், உங்களை மேனேஜர் கூப்பிடுகிறார்.” ” பியூன் சோமு சொல்லிவிட்டு சென்றான்..

அவர் கேபினை விட்டு வெளியே வந்து மேனேஜரின் அறைக்குள் சென்றார்.

முத்துசாமி அப்போது கைப்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். ரகுராமனை எதிரே நாற்காலியில் அமரும்படி சைகை காண்பித்தார்.

ரகுராமன் சென்னையில் உள்ள அரசாங்க அலுவலகத்தில் உதவி மேனேஜராக இருக்கிறார். இன்னும் இரண்டு வருடம் சர்வீஸ் பாக்கியிருக்கிறது. ஒல்லியான உடம்பு. தெய்வ பக்தியுடையவர். தன் வேலையை நேர்த்தியாய் செய்வார். நேர்மையானவர் . காந்திஜியைப் போல் உண்மை பேசுபவர். லஞ்சம் வாங்காத அபூர்வ மனிதர்.

மேனேஜர் முத்துசாமி இரண்டு மாதம் முன்புதான் மாற்றலாகி சென்னைக்கு வந்திருக்கிறார். அவர் வந்தது முதல் ரகுராமனுக்கு பிரச்சனை ஆரம்பித்து விட்டது.

வேறொன்றுமில்லை. முத்துசாமி குணத்தில் ரகுராமனுக்கு நேர் எதிரானவர். தாராளமாக பணம் வாங்குவார்.. பணத்தாசை அதிகம் கொண்டவர். தலையே தாறுமாறாயிருந்தால் அலுவலகத்தில் உள்ள மற்ற அலுவலர்கள் எப்படியிருப்பார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்ல. ஓநாய்களுக்கு நடுவில் ஓரே ஒரு வெள்ளாடு போல் ரகுராமன் இருந்தார்.

போனைப்பேசி முடித்த முத்துசாமி குறுநகை புரிந்தார்.

அவர் எதிரிலிருந்த நாற்காலியில் ரகுராமன் அமர்ந்தார்.

முத்துசாமி கரிய மேனியும் கனத்த சரீரமும் உடையவர். . முன்தலை வழுக்கை. பாகவதர் மாதிரி நீளமான தலை மயிர்.

“ரகுராமன், ராபர்ட் கம்பெனியின் கோப்பைப் பார்த்து விட்டீர்களா?”

“இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறேன்”,

“சீக்கிரம் பார்த்துவிட்டு எனக்கு அனுப்புங்கள். அந்த கம்பெனி மேனேஜிங் டைரக்டர் எனக்கு நெருங்கிய நண்பர்.”

“அவர்களுடைய கோரிகைக்கு கோரிகைக்கு விதிப்படி அனுமதி கொடுக்க முடியாது. சிக்கல் இருக்கிறது.”

“சாதகமாகப் பரிந்துரை செய்யுங்கள். தாராளமாய் கிடைக்கும். உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். ”

“நான் பாரபட்சமில்லாமல் என்னுடையக் குறிப்பை எழுதி அனுப்புகிறேன். உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்.” மனசுக்குள் மனசுக்குள் “சரியான பணப்பேயாக இருக்கிறாரே. இவரிடம் எப்படி அனுசரித்துப் போகமுடியும்” என்று நினைத்தார்.

“பிழைக்கத் தெரியாத ஆளாக இருக்கிறீர்களே?. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டாமா?. யோசித்துச்செய்யுங்கள். “

“அரசாங்க விதிகளுக்கு எதிராக நான் எதுவும் செய்ய முடியாது”

“நாமெல்லாம் எதற்கு இருக்கோம் ?. உங்கள் சிபாரிசை எழுதி அனுப்புங்கள். பணம் இருந்தால் பத்தும் செய்யலாம். ஊரோடு ஒத்து வாழ்’ என்பதை மறந்து விட வேண்டாம். “நான் சொல்வதை சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் விருப்பம். புன்னகையுடன் சொன்னாலும் மனதிற்குள் ” நான் இவ்வளவு சொல்கிறேன். இவன் கொஞ்சம் கூட மசியவில்லையே” “ என்று மனசுக்குள் நினைத்தார்.

“எனக்கு எது நியாயமாகப் படுகிறதோ அதைத்தான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.”

“மேனேஜர் கையை உதறினார் கோபமாக, “நீங்க எப்படியாவது போங்க “உரத்த குரலில் கத்தினார்.

“கோப்பையை முழுவதும் பார்த்துவிட்டு விரைவில் உங்களுக்கு அனுப்புகிறேன்.’ ரகுராமன் தன் இருக்கைக்கு வந்துவிட்டார்.

அரசாங்கவிதிப்படி அவர் ராபர்ட் கம்பெனிக்கு சிபாரிசு செய்வதில் சிக்கல் இருக்கிறது. மேலதிகாரி அவரிடமிருந்து சிபாரிசை எதிர்பார்க்கிறாரே ? இருதலைக்கொள்ளி எறும்புபோல் அவர் விழி பிதுங்கியது.

“ரகுராமன் மனசு மிகவும் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தது. அவருக்கு மனவுளைச்சல் அதிகமாகியிருந்தது. “என்ன ஆனாலும் தன் கொள்கையிலிருந்து பிறழக் கூடாது, நேர்மையிலிருந்து தவறக் கூடாது”என்று உறுதி செய்தார். மேனேஜர் சொன்னபடி அவர் பரிந்துரைக்கவில்லை. தலைவலி அதிகமாய் இருந்ததால் மேனஜரிடம் கோப்பைக் கொடுத்துவிட்டு நான்கு மணிக்கே வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

வீட்டுக்கு வந்ததிலிருந்து அவர் முகம் வாடியிருப்பதைக் கண்ட பத்மஜா, அலுவலகத்தில் ஏதோ நடந்திருக்கிறது; பிரச்சனை இருக்கிறது என்பதை ஊகித்து விட்டாள்.

“என்னங்க, ஏன் ஒரு மாதிரியாகியிருக்கிறீர்கள்? உங்கள் மனச்சுமையை என்னிடம் சொல்லி குறைத்துக்கொள்ளலாமே? “ என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

“மேனேஜர் முத்துசாமியால் பிரச்சனை”

“நீங்கள் அவரோடு ஒத்துப் போங்களேன். நாம் சௌகரியமாய் இருக்கலாம் அல்லவா?”

மனைவியை முறைத்தார்.

எதிர் வீட்டு தனசேகரன் மனைவியைப் பார்த்து பணம் வாங்குவது தவறில்லை என்று அவளும் நினைக்கிறாளே” என்று அவருக்குக் கோபம்.

“என்னுடைய கொள்கையிலிருந்து நான் பிறழ மாட்டேன். நேர்மையைக் கடைப்பிடிப்பதில் தடை வந்தால் என் வேலையைக் கூட விட்டுவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

“எதையும் நன்கு யோசித்து முடிவு செய்யுங்கள். வேலையை விட்டு விட்டால் நடுத்தெருவில் போய் நிற்க வேண்டும். என்னை மறந்துவிட வேண்டாம். நீங்கள் எது செய்தாலும் எனக்குச் சம்மதம்தான்?” என்று பூடகமாய்” சொன்னாள்.

அன்று இரவு அவர் வெகுநேரம் யோசனை செய்தார். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். உடனே ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்தார். கடிதத்தில் ராஜிநாமாவை எழுதிக் கையெழுத்திட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அன்று இரவுதான் நிம்மதியாக உறங்கினார். பத்மஜா வெகுநேரம் தூங்காமல் கணவரின் ராஜிநாமாவைப் பற்றிச் சிந்தனை செய்து கொண்டிருந்தாள்.

பொழுது விடிந்தது.

ரகுராமன் காபியை பருகினார். வாய் பித்தா–பிறைசூடி– என்று மெதுவாக ராகம் போட்டது.

செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு செய்தி அவரைத் திடுக்கிட வைத்தது. “பத்மஜா இங்கே வா. இதைக் கேள்” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினார். பத்மஜா உடனே அவருகில் வந்தாள்.

“லஞ்ச புகாரில் அதிகாரி கைது” என்று உரக்கப் படித்துவிட்டு மேலும் தொடர்ந்தார்.

”சைதாப்பேட்டையைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் தனது கட்டிடம் கட்ட ஒப்புதல் பெறுவதற்காக அதிகாரி முத்துசாமியை அணுகினார். அவர் ஒப்புதலுக்காக ரூபாய் 80 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வைத்தியநாதன் சென்னை இலஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் யோசனைப்படி நேற்று அரசு அலுவலகம் சென்ற வைத்தியநாதன், முத்துசாமியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் 80 ஆயிரத்துக்கான நோட்டுகளைக் கொடுத்தார். அப்போது அருகில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக முத்துசாமியை பிடித்தனர். அவரது அலுவலகத்தில் வைத்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெற்றது “.

வருத்தத்துடன், “அடடா ! ! இப்படி ஆகி விட்டதே” என்றார். மீண்டும் அந்தச் செய்தியை மனசுக்குள் படித்தார். தான் எழுதி வைத்திருந்த ராஜிநாமா கடிதத்தைக் கிழித்துப் போட்டார். ”நான் அலுவலகம் போகப் போகிறேன். உணவை எடுத்து வை” என்றார்.

பத்மஜாவுக்கு மிக்க மகிழ்ச்சி. “நல்ல காலம், அவர் வேலையை விட்டுவிடவில்லை. வைரநெக்லெஸ் வாங்கிவிடலாம்“ என்று நினைத்தாள்.

“நீங்க அலுவலகம் போங்க. எனக்கு எப்படியாவது வைரநெக்லஸ் வாங்கிக் கொடுத்திடுங்கள்“ என்றாள்.

மனைவி அல்லது மேலதிகாரி… யார் வற்புறுத்தினாலும் லஞ்சம் வாங்கக் கூடாது என்று உறுதி பூண்டார்.

“இருக்கிறதை வைத்து நிம்மதியாய் இருப்போம்” என்று சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பினார்.

அலுவலகத்தில் அவருக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. அவரை மேனேஜராகப் பொறுப்பு ஏற்கச்சொல்லி உத்தரவு வந்திருந்தது.

”நேற்று இரவு வேலையை ராஜிநாமா செய்துவிடலாமென்ற மனநிலையில் இருந்தோம். இன்று பதவி உயர்வு வந்திருக்கிறது. எல்லாம் அவன் திருவிளையாடல்” என்று எண்ணினார்.

ராபர்ட் கம்பெனியிலிருந்து அபிநயா என்னும் பெண்மணி அவரைப் பார்க்க வந்திருந்தார்.

நல்ல உயரம் .சிவந்த நிறம். பார்ப்பவரை வசீகரிக்கும் கட்டான உடல். நீல சுடிதார் போட்டிருந்தாள். வாராத கூந்தல் மார்பின்மேல் படர்ந்து மாராப்பு வேலையைச் செய்தது. உதட்டில் சிவப்பு வண்ணத்தைப் பூசி கறுப்பு கண்ணாடி அணிந்து நவநாகரீக மங்கையாய் தோற்றமளித்தாள். பேசுகிறபோது அபிநயாவின் குரல் கொஞ்சும்.

”சார், என் பேர் அபிநயா. ராபர்ட் கம்பெனியில் பி.ஆர்.ஓ ஆக ருக்கிறேன்.நீங்க மேனேஜர் ஆனதிற்கு என் வாழ்த்துக்கள். எங்க கம்பெனி பைலைப் பார்த்து கட்டடம் கட்ட அனுமதி கொடுத்துடுங்க. நீங்க எதிர்பார்க்கிறதையெல்லாம் நாங்க செய்யறோம்” என்று குழைந்தாள்.

”நான் பைலைப் பார்த்துவிட்டுத்தான் சொல்ல வேண்டும்.. விவரம் ஏதாவது தேவையென்றால் தொடர்பு கொள்கிறேன்” என்று பிடி கொடுக்காமல் பேசினார். எல்லா ஆண்களும் அழகுக்கு அடிமையில்லை. அதற்கு விதிவிலக்கு விதிவிலக்கு உண்டு. தான் வீசிய தூண்டிலில் மீன் சிக்கவில்லை என்பது அபிநயாவுக்குப் புரிந்தது.

“இது என்னுடைய விசிடிங் கார்ட்” என்று குறுநகையுடன் சொல்லி அவரிடம் ஒரு பளபளக்கும் அட்டையைக் கொடுத்தாள்.

“நீங்க எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடலாம் சார்” என்று கொஞ்சும் குரலில் கூறிவிட்டு வெளியில் வந்து சோமுவிடம் இருநூறு ரூபாய் கொடுத்ததும் அவன் பல்லிளித்தான். ”சார் வீடு எங்கே இருக்குது” என்று கேட்டாள், அவன் உடனே,” சார் மாம்பலத்தில் ஜெய்சங்கர் தெருவில் இருக்கிறார். சாய் பாபா கோவிலுக்கு எதிர் ஃபிளாட். முதல் மாடி”. என்று அவர் வீட்டு முகவரியைச் சொன்னான்.

கொஞ்சம் விட்டால் அவனே அவளை அங்கு அழைத்துக் கொண்டு போய்விடுவான் போலிருந்தது.

”தேங்ஸ்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்து காரை எடுத்து மாம்பலத்தை நோக்கிச் சென்றாள்.

அவளுக்கு ரகுராமனின் வீட்டைச் சிரமமில்லாமல் கண்டு பிடித்துவிட்டாள். வீட்டில் பத்மஜா மட்டும்தான் இருந்தாள்.

”நான் ராபர்ட் கம்பெனியிலிருந்து வருகிறேன். உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். இது என்னுடைய பரிசு” என்று ஒரு கருக மணி மாலையைக் கொடுத்தாள். அதன் விலை குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயாவது இருக்கும். எங்குத் தட்டினால் சப்தம் வரும் என்பதை நன்கு அறிந்தவள் அவள்.

பத்மஜா மிகவும் மகிழ்ச்சியடைந்து, ”உட்காருங்க . காபி குடிக்கிறீர்களா?” என்று அன்போடு கேட்டாள்.

”அதெல்லாம் வேண்டாம். நீங்க எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். எங்க கம்பெனி பைல் உங்க கணவரின் மேஜை மேல் இருக்கிறது . அவர் அனுமதி கொடுக்க வேண்டும். நீங்கள் உங்கள் கணவரிடம் பேசி அனுமதி வாங்கிக் கொடுத்துவிட்டால் உங்களுக்கு ஒரு வைர நெக்லஸை பரிசு கொடுக்கிறேன். நானே உங்களைக் கடைக்கு அழைத்துச் செல்கிறேன். உங்களுக்குப் பிடித்த மாடலில் நீங்க நகையை வாங்கிக்கொள்ளுங்கள். யாரிடமும் இதைப் பற்றி மூச்சு விட வேண்டாம். இது நமக்குள் இருக்கும் ஒப்பந்தம்.” என்றாள்

பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது பத்மஜாவுக்கு. எப்படியாவது வைர நெக்லஸை பரிசாக வாங்கிவிட வேண்டும் எனத் துடித்தாள்.

”நான் என் கணவரிடம் கண்டிப்பாகப் பேசுகிறேன்”

”நான் கிளம்புகிறேன் அப்புறம் அலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்” அபிநயா அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

அன்று இரவு பத்மஜா “ஏங்க ராபர்ட் கம்பெனிக்குத்தானே அனுமதி கொடுக்கப்போறீங்க” என்று கேட்க ரகுராமன் கோபத்துடன், “ என் அலுவல வேலையில் தலையிடாதே” என்று கத்தினார். ”நீங்க ஒரு அப்பாவி, எல்லாரையும் போல் நாலு காசு சேர்க்கத் துப்பில்லை” என்று சண்டையைத் தொடங்கினாள். ஒவ்வொரு லஞ்சம் வாங்கும் ஆணின் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பதை நிரூபிப்பது போல் இருந்தது அவள் செயல்.

பத்மஜா வைர நெக்லஸ் வேண்டுமென முரண்டு பிடித்தாள். ஆப்பிரிக்காவில் காந்திT கஸ்தூரிபாயிடம் ஹாரத்திற்காகப் புத்திமதி சொல்லியது போல் அவர் அவளுக்கு அறிவுரை கூறினார். அவர் எவ்வளவு சொல்லியும் பத்மஜாவின் வைர நெக்லஸ் ஆசை அவளை விட்டு நீங்கவில்லை.

யாரும் எதிர்பார்க்காத பேரதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்து விட்டது.

முத்துசாமி சிறையில் இருந்தது அவரது மனைவி மற்றும் மகளைப் பெரிதும் பாதித்தது. தெருவில் அவர்களால் நடக்க முடியவில்லை. மானம் போய்விட்டது என்று கருதிய அவரது மனைவி தூக்க மாத்திரையைப் பாலில் போட்டுத் தானும் அருந்தி தன் மகளுக்கும் கொடுத்தாள். இருவரும் இவ்வுலகை விட்டு மறைந்தனர். இதை அறிந்த முத்துசாமி அதிர்ச்சி அடைந்தார். நான் யாருக்காகப் பணம் சேர்த்தேனோ அவர்களே மறைந்து விட்டார்கள் நான்தான் காரணம்” என்று பிதற்றிக் கொண்டே இருந்தார். மனைவி மகள் இறுதிச் சடங்கைச் செய்யும்போது துக்கம் தாளாமல் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ரகுராமன் கூறியச் சோகச்செய்தியை கேட்டு அதிர்ந்த பத்மஜா லஞ்சம் வாங்கின முத்துசாமிக்கு கடவுளே தக்க தண்டனைக் கொடுத்து விட்டார். தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பதை உணர்ந்தேன். லஞ்சம் வாங்கினால் தவறில்லை என்று எண்ணிய என் அறியாமை முத்துசாமி இறப்பின் மூலம் நீங்கி விட்டது. எல்லோரும் செய்யும் தவற்றை நீங்கள் செய்யாமல் நேர்மையாய் இருந்ததை எண்ணி பெருமை படுகிறேன். விலை மதிக்க முடியாத கோஹினூர் வைரமான நீங்கள் எனக்கு ஆபரணமாயிருக்கும்போது வைர நெக்லஸ் எனக்கு எதற்கு?கிடைக்கிற வருமானத்தில் இனி மனநிறைவோடு இருப்பேன்” என்றாள்.

”தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்” என்ற பாரதியாரின் கவிதை வரி ரகுராமனுக்கு நினைவு வந்தது.

– எதிர்வீடு (சிறுகதைகள்), வெளியீடு: FreeTamilEbooks.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *