வைகுண்டக் காதல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 2,382
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ராமகிருஷ்ணன் சிரித்தான். காரணம் இல்லாமல் இல்லை.’இந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள். பணக்கார இடம். பணம், குணம், அழகு எல்லாம் பொருந்தி சாக்ஷாத் லக்ஷ்மிதேவி போல இருக்கிறது பெண். பெயர்கூட லக்ஷ்மிதான். ஆகா, எவ்வளவு பொருத்தம்!’ என்று சொல்ல உரிமை பெற்றவர்கள் சொன்னார்கள்.
பணத்தோடு பெண்-தானாக வரும் லஷ்மியைத் தள்ளாதே. கல்யாணம் செய்து கொண்டால் வைகுண்டத்தின் இன்பம் பூ லோகத்திலேயே கிடைக்கும்’ என்றார்கள். இத்தகைய பேச்சுகள் அவனுக்குச் சிரிப்புதான் கொடுத்தன.
‘ஹூம், லக்ஷ்மியாம்! வைகுண்ட்மாம்! இன்ப வாழ்வாம்! அங்கு படுகிறபாடு..யாருக்குத் தெரியும்!’ என்று அவன் முணங்கினான். (அவனுக்கு மட்டும் தெரிந்து விட்டதா என்ன? அவன் ஞான திருஷ்டி பெற்ற ரிஷியா? இப்படி கேட்கத் தோன்றுகிறதல்லவா? சும்மா கேளுங்கள்! அதற்காக கதை நின்று விடாது.) அவனுக்கு மட்டும் சக்தி இருந்தால் பிரமாதமாகப் பேசுபவர்களை யெல்லாம் ‘வீண் பேச்சு ஏன், வைகுண்டத்தின் வண்டவாளத்தை இதோ நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று காட்டி விடுவான். ஆனால், பாழும் சிருஷ்டி சக்தி அவனுக்கு வல்லமை கொடுக்க வில்லையே.
பேச்சுக்குப் பதிலாக அவன் காட்டத் துடித்த காட்சிதான் என்ன?
வைகுண்டத்தில் நாராயண மூர்த்தியின் மாளிகை காத்தற் கடவுளான ஸ்ரீமந் நாராயணர் ஆடம்பரப் பிரியர், டாம்பீக மூர்த்தி என்பதைப் பொன்முலாம் பூசி சூரியன் ஒளியில் தக தகக்கும், அந்தக் கட்டிடம் ஒளி வீசிக் கொண்டிருந்தது. அதிலும் லக்ஷ்மியின் வாசஸ்தலம் – அப்பப்பா – கண்கூசச் செய்யும்படி பெருக்குடன் விளங்கியது.
தனது கடமையைக் கவனிக்கும்படி காரியதரிசியிடம் சொல்லிவிட்டுத் துளசிமணி மாலை மார்பிலே புரள, பீதாம்பரம் மென் மூச்செறிய, சங்கு சக்ர கமல தண்டம் சகிதமாக, பெருமித நடை நடந்து வந்தார் நீலமேக சியாமள வர்ணரான காத்தற் கடவுள். மாலை வெயிலின் மஞ்சள் ஒளி அவர் அணிந்திருந்த தங்க நகைகள், பீதக ஆடைமே லெல்லாம் பட்டு அற்புதமாக மின்னியது. தன்னைக் கண்டாலே அனைவரும் மயங்கி விடுவார்கள் என்ற கர்வத்துடன் வந்தார் அவர்.
அவரைக் கண்டதும் தான் மாளிகைக் கதவு அடைக்கப் பட்டதோ ? இவ்வளவு நேரமும் அடையா நெடுங் கதவாய் விளங்கிய வாசல் சடக்கென மூடுவானேன் ? நாராயணர் திகைத்துப் போனார். அன்பை உருக்கி மென் குரலாக்கி ‘பிரியே கதவைத் திற’ என்றார். மௌனம் தான் நிலவியது. மீண்டும் கெஞ்சவும் ‘கண்டு மயங்குபவர்களைத் தேடிச் செல்வது தானே’ என்ற சிறல் மொழி கிடைத்தது.
லஷ்மிதேவி தான் பேசினாள். லக்ஷ்மிக்கு, தான் செல்வத்தின் அதிதேவதை என்ற அகந்தை உண்டு. மண்ணில் நெளியும் ஜந்துக்களை அகம்பாவ மனிதர்களாக்குவதும், வெறும் பிணங்களாக்குவதும், நடைபிணங்களாக வாழ வைப்பதும் தனது கருணாகடாட்சம் தான்; காத்தற் கடவுள் என்று பெயர் பெற்ற அலங்கார பொம்மையால் அல்ல என்ற கர்வம். மேலும் ஸ்ரீமத் நாராயண மூர்த்தியைப் பற்றிய கதைகள் அவளுக்கு மகிழ்வு அளிக்கவில்லை. ஒவ்வோர் அவதாரத்திலும் நிகழ்த்திய நாடகங்களை எண்ணும்போது அவள் மனம் துடியாமல் என்ன செய்யும்? சமயம் வரட்டும் அவருக்குச் சரியானபடி போதிக்க என்று காத்திருந்தாள்.
காலம் வந்தது. கதவும் சாத்தப் பட்டது! நாராயணர் முதல் முறை கெஞ்சினார். (காமி சத்யபாமா கதவைத் திறவாய் என்று பாடியதாகவும் கேள்வி) ஆனால், அடிக்கடி இந்த சம்பவம் நடக்க ஆரம்பித்தால் அவர்பாடு எப்படி இருக்கும்!
அவளுக்குப் பட்டுப் புட்வை, நகை முதலியன வாங்கிக் கொடாமல் கணவன் உரிமையை நிலைநிறுத்தலாம். ஆனால், லக்ஷ்மி வசமிருந்த பணத்தால் உலகத்தையே வாங்கி விடலாம் என்பது அவருக்குத் தெரியும். அது மட்டுமல்ல. அவரது தேவைகளைப் பூர்த்தி செய்ய அந்தப்புரத்தின் தயவையே எதிர்பார்க்க வேண்டியிருந்தது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. கவலையால் அடிக்கடி தலையில் கை வைத்து, பிரமாத யோசனையுடன் படுத்திருப்பார். (இதைத்தான் பள்ளிக்கொண்டது. அனந்த சயனம் என்று பலர் சொல்கிறார்கள்.] வழிதான் பிறக்காது.
இந்த ஊடல் நாடகத்திற்கு ஏதாவது முடிவு காண வேண்டும். போனால் போகிறது. சமாதான ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளலாம் என்ற நினைவுடன் தான் வந்தார் திருமால். அன்று கூட கதவு அடைக்கப் பட்டது.
வெளியே நின்று யோசித்துக் கொண்டிருந்தார். ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்பது வெறும் வாக்கு தான் என்றாலும் நிரந்தரமான, பொதுவான உண்மை தானே. அதில் நம்பிக்கை வைத்திருந்து தட்டிக் கொண்டே நின்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு கதவு திறந்தது. பெருமாள் அசட்டுச் சிரிப்புடன் உள்ளே போனார். ‘ லஷ்மி உனக்கே இது நன்றாயிருக்கிறதா!” என்று விநயமாகக் கேட்டார்.
லக்ஷ்மி ஆத்திரமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளைத் திருப்தி செய்வது எப்படி என்று தெரியாமல் திணறிய மூர்த்தி, மெதுவாக சமாதானத்தைப் பற்றி பிரஸ்தாபித்தார். கவனித்தால் அல்லவா விளக்கலாம்! அவளோ உம் மென்று இருந்தாள்.
‘சே, இது தான் இந்தப் பெண்களிடம்! பணமும் கூடி விட்டால்..’ என்று முணங்கினார்.
லக்ஷ்மி சீறினாள் ‘பணம் இருந்தால் என்னவாம்?’ என்று. அவர் மௌனமானார். அவருக்குத் திடீரென ஒரு விஷயம் புலனாகி விட்டது. ‘தேவி, இந்த விளையாட்டு அடிக்கடி எதற்கு! வழக்கம் போல்…’
அவர் பேச்சை முடிக்க வில்லை. அவள் திகைப்படைந்தாள். ‘விளையாட்டா! விளையாட்டு என்றா…’
‘ஆமாம், தேவி! இந்த விளையாட்டு ஒரு முறை இரு முறை சந்தோஷமளிக்கும். அடிக்கடி ஏன்? வேண்டு மானால் ஒன்று செய்து விடலாம்’.
‘என்ன?’
‘பூலோகத்தில் மனிதர்கள் திருவிழா அது இது என்று நடத்துகிறார்கள் அல்லவா? அப்பொழுது இந்த விளையாட்டையும் திருவிழாவாக்கிடும்படி அவர்களுக்கு அருள் செய்து விடலாம்’.
ஸ்ரீதேவிக்கு என்ன சொல்வது என்றே விளங்கவில்லை. நாரணன் முகத்தில் பதித்த விழிக் கமலங்களை மீட்டு வாங்கும் உணர்ச்சியும் மறந்து, அப்படியே நிலைத்த பார்வையுடன் அமர்ந்து விட்டாள்.
‘இன்னும் வேடிக்கை செய்யலாம். நமது லீலா வினோதங்களைத் தமிழ் நாட்டு சினிமா உலகில் கொட்டி விடலாம். சினிமா கதாசிரியர்கள், படம் பிடிப்போர் நம்மைப் பற்றி இஷ்டம் போல் நாடகம் ஆடுவதற்கு ஞானம் அருள்வோமாக. இதோ தந்தோம் வரம்!’ என்று வரத்தை வீசி எறிந்தார் பகவான்.
‘ஸ்வாமி’ என்றாள் தேவி.
‘பிரியே, நாம் இனி குடியும் குடித்தனமாக வாழ்வோம்’ என்று சொல்லி காதல் நோக்குப் பரிமாறினார் விஷ்ணு.
‘அப்படியானால் எனது சக்தி, செல்வம் அளிப்பது…’
‘எல்லாம் நம்மை உபாசிப்பவர்களுக்கே – அவர்கள் தான் சினிமா முதலாளிகள் – போய்ச் சேரும். கவலைப்படாதே’ என்று திருவாய் மலர்ந் தருளினார் பகவான். தேவி மூர்ச்சையாகி விழுந்தாள்.
பூலோகவாசியான ராமகிருஷ்ணன் சிரித்தான். ‘லக்ஷ்மியாம் வைகுண்டமாம்! நாரணனும் சீதேவியும் வாழும் வகை தெரியாமல் திணரும் போது மனிதர்கள் ஏன் கஷ்டப்பட மாட்டார்கள்? காதலாவது, கல்யாணமாவது! சினிமாவுக்குப் போ தம்பி!’ என்று மேலும் மேலும் சிரித்தான்.
‘ஏலே என்னடா ஐயா. நீயா சிருச்சிக்கிட்டிருக்கே? என்னத்தைக் கண்டுட்டே இப்படிச் சிரிக்க’ என்று கேட்டுக் கொண்டே வந்தார் அவன் தந்தை.
பையனின் ‘ஞான திருஷ்டி’ சூன்யமாகி விட, அவன் மக்கு போல மாறி ‘ஹி ஹி’ என்று அசட்டுத்தனமாகச் சிரித்தான்.
– கல்யாணி முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, சினிமா நிலையம் வெளியீடு.