வேப்பமரம் – ஒரு பக்கக் கதை






‘‘ஏங்க, இன்னிக்காவது இந்த வேப்ப மரத்தை வெட்டச் சொல்லப் போறீங்களா இல்லையா?’’ – காலையிலேயே ஆரம்பித்தாள் என் மனைவி ஜமுனா.
‘‘சொல்றேன்!’’

‘‘ஆமா, ஆறு மாசமா இதையேதான் சொல்றீங்க… மரம் வளக்குறது பக்கத்து வீட்டுக்காரங்கன்னுதான் பேரு. ஆனா, வேர் மட்டும்தான் அவங்க வீட்ல இருக்கு. மீதியெல்லாம் காம்பவுண்டு சுவர் தாண்டி நம்ம பக்கம்தான் இருக்கு. தினமும் நம்ம வீட்டு வாசல்ல காஞ்சு விழுற இலையெல்லாம் பெருக்கித் தள்றதுக்குள்ள உயிரே போகுது. அவங்ககிட்ட பேசுங்கன்னு எவ்வளவு சொன்னாலும் காதுல போட்டுக்க மாட்டேங்கறீங்க!’’ என்று ஜமுனா புலம்ப, ஊரில் இருந்து வந்திருந்த என் மாமியார் குறுக்கிட்டார்.
‘‘மாப்பிள்ளை, இவ பேச்சைக் கேட்டு அந்த மரத்தை வெட்டச் சொல்லாதீங்க. இந்த நகரத்துல மரங்களைப் பார்க்கிறதே அபூர்வமா இருக்கு. இவ ஆரோக்கியமா இருக்கறதுக்கு இந்த வேப்ப மரமும் ஒரு காரணம். தினமும் குனிஞ்சி பெருக்கறதுனால குண்டாகாம இருக்கா. வேப்பமரக் காத்து உடம்புக்கு ஆரோக்கியம். பசங்களுக்கு படிக்கறதுக்கும் விளையாடறதுக்கும் நிழலா இருக்கு’’ என்றார் அவர் அக்கறையாக! அதன்பிறகு ஜமுனா அதுபற்றி வாயே திறப்பதில்லை.
– பெப்ரவரி 2014