வெந்து தணிந்தது காடு…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 3, 2024
பார்வையிட்டோர்: 2,850 
 
 

அந்த பாய் கடையில் மதியம் மூன்று மணி என்றால்கூட்டம் அலை மோதும். வேறொன்றுமில்லை.மதியம் மூன்று மணிக்குப் போடப்படும் வாழைக்காய் பஜ்ஜியும் அதைத் தொடர்ந்து போடப்படும் மசால் போண்டாவுக்காவும்தான் அந்தக் கூட்டம்.

அங்கே வரிசையில் காத்திருந்தான் ஆனந்த்.

‘பஜ்ஜி சூடா இருக்கு எவ்வளவு வேணும்?!’ என்றார் வயதில் மூத்த பாய்.

‘பஜ்ஜி வேணாம். மசால் போண்டா ஒரு நாலு கட்டுங்க!’ என்றான்.

பஜ்ஜி போண்டா சுடும் மாஸ்டரிடம் ‘சாருக்கு பஜ்ஜி அடுத்த லாட் பஜ்ஜி போடும் போது, அதோடு ஒரு அஞ்சு போண்டாவும் சேர்த்து போடு!’ ஆணையிட்டுவிட்டு அவனைப் பார்த்து,

‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…! போண்டாவோடு சேர்த்துப் போடச் சொல்லீருக்கேன் எவ்வளவு? நாலு தானே?! இஞ்சி டீ கட்டவா?’ என்று அன்பாய்க் கேட்டார்.

சர்ரென்று வளைந்து திரும்பியது அந்த ஸ்கூல் வேன். கடை வாசலில் காத்திருந்த பெற்றோர்கள் தங்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துப் போக ஆயத்தமானார்கள்.

தன் குழந்தைகளைக் கூட்டிப் போக வந்தவர் தன் குழந்தையை அழைத்துக் கொண்டு கடைக்குள் வந்து மகளிடம் பலகார ரேக்கைக் காட்டி என்ன வேண்டும்? என்றார்.

அதற்குள் அடுத்த பஜ்ஜியோடு போண்டாவும் வந்து ரேக்கில் வலை பில்ட்டரில் விழுந்தது. மூன்றாவது படிக்கலாம் அந்த பெண் குழந்தை. தன் அப்பாவிடம் ‘போண்டா நாலு…’ என்றது.

கடையின் மூத்த பாய்..’ பஜ்ஜி வாங்கிக்கோம்மா!. போண்டாவுக்கா சார் காத்திட்டிருக்கார். போண்டாதான்னா, ஒண்ணுதான் இருக்கும்.. அஞ்சில் ஒன்று கொடுக்கும் எண்ணத்தில் சொல்ல, முகம் வாடிப்போன அந்தப் பிஞ்சு ‘பஜ்ஜி வேண்டாம்!, இன்னும் வெயிட் பண்ண முடியாது ஏற்கெனவே ஹோமொர்க் நெறையா இருக்கு பசிக்குது வீட்டுக்குப் போகணும். போண்டா ஓண்ணு மட்டும் வாங்கினா தம்பிக்கு கொடுக்க முடியாதே?!’ என்றது முக வாட்டத்தோடு!.

பார்த்துக் கொண்டிருந்த ஆனந்த் படீரென எழுந்து பாயைப்பார்த்து ‘நான் ஆர்டர் பண்ணின அந்த நாலு போண்டாவும் அந்தக் குழந்தைக்கே கொடுங்க, நான் வெயிட் பண்ணி, அடுத்த லாட் போண்டா போடும் போது வாங்கிக்கறேன்,’ என்றான்.

பாய், குழந்தைக்காக அதை பார்சல் செய்ய போண்டா கைக்கு வந்ததும் அதன் அப்பா கண்கள் நிறைந்த அன்போடு ‘தாங்க்ஸ்’ என்றார்.

குழந்தையும் மகிழ்ச்சி ததும்பும் கண்கள் மிளிர ‘தாங்க்யூ அங்க்கிள்!’ என்றது.

‘வெல்கம் எத்தனாவது படிக்கறே? ‘ என்றான் பதில் நன்றி காட்டும் பாவனையில் ஆனந்த்!.

‘மூன்று!’ என்றது அது!

பாய் ஆனந்த் காதருகே வந்து ‘சார் இன்னைக்கு போண்டாவுக்கு நீங்க காசு தர வேண்டாம்!’ என்றார்.

அன்பைக் காட்ட எளிய வழி, அடுத்தவரை அனுசரித்துப் போவதுதானே?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *