வெட்டிப்பெருமை!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 26, 2025
பார்வையிட்டோர்: 2,066

பூர்வீக ஊரில் தந்தையின் உறவினர் ஒருவரின் இறப்புக்காக குடும்பத்தினருடன் சென்றிருந்தான் முருகன்.
நிலையாமையைச்சொல்லும் இழவு வீடுகளிலும் கூட அதிகாரமும், அந்தஸ்தும், ஆடம்பரமும், ஆதிக்கமும், ஆணவமும், அகம்பாவமும், அவமதிப்பும் கோலோச்சுகின்றன என்பதை நினைத்த போது மனித சமுதாயத்தில் தற்போது ஊடுருவியுள்ள கலாச்சார முறைகள், அதிகம் கற்றவர்கள், சொத்து வைத்திருப்பவர்கள் நடந்து கொள்ளும் விதம் முருகனுக்கு வேதனையளிப்பதாக இருந்தது.
சிலரை எழுந்து நின்று வணங்குவதும், சிலரை அமர்ந்த நிலையில் வணங்குவதும், இன்னும் சிலரை வணங்காமல் உதாசீனப்படுத்துவதும் மனிதன் நிலையையில்லை என கண் முன்னே நடந்த பின்னும் நடக்கத்தான் செய்கிறது என்பதைத்தெரிந்தபோது வருந்தினான்.
கூட்டத்தில் பலரும் இறந்தவரைப்பற்றிப்பேசி வருந்தாமல் தங்களது பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தனர். வசதியில்லாத பிறரை ஏளனமாகப்பேசி இகழ்வதுமான உரையாடல்கள் இடம், பொருள், ஏவல் என பார்க்கும் போது பொருத்தமற்றதெனப் புரிந்தது.
“முருகா நீ பெரிய தப்பு பண்ணிப்போட்டே. உங்க தாத்தா சம்பாதிச்ச பூர்வீகச்சொத்த வித்திருக்கப்படாது. ஏக்கரா அம்பதாயிரத்துக்கு கொடுத்துப்போட்டு போயிட்டே. இப்ப ஒரு கோடியத்தாண்டி போகுது” என்று சொன்ன முருகனுக்கு சித்தப்பா முறையுள்ள குப்புசாமி என்பவரை இறந்தவருக்கு கோடி போட பங்காளிகள் அழைத்தபோது எழுந்து போனார்.
முருகனோடு பிறந்தது நான்கு குழந்தைகள். அவனது தந்தை சிறுவயதிலேயே இறந்து விட, இருந்த நான்கு ஏக்கர் பூர்விகச்சொத்தில் இருந்த கிணற்றில் தண்ணீரும் இல்லாததால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல் மானாவாரியாக காட்டு விவசாயம் வானத்தை நம்பி செய்ததில் மாடுகளுக்கு தீணி மட்டும் கிடைத்தது.
தாயால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் கடன் வாங்கி செலவு செய்ததில் சொத்தை விற்று கடன் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. விற்று கடனை அடைத்து விட்டு, படிப்பையும் பாதியில் நிறுத்தி விட்டு பக்கத்தில் இருந்த நகரத்தில் உறவினர் ஒருவரின் மளிகைக்கடை வேலைக்கு சென்று குடும்ப வறுமையைப்போக்கினான். தந்தைக்கு பதிலாக தந்தையின் குடும்ப சுமையை சிறுவயதிலேயே தானே ஏற்றான்.
“குப்புசாமி, இன்னைக்கிருக்கிற நெலைமையச்சொல்லறான்னா அன்னைக்கத்த நெலைமைய கொஞ்சம் நெனைச்சுப்பேசோனுமோ, வேண்டாமோ? தம்பி, அன்னைக்கு சொத்து வித்தாலும் வாங்க ஆளில்லை. இன்னைக்கு ஐடி கம்பெனியோ ஏதோ வந்ததுனால உச்சத்துல போயி நிக்குது. நாளுக்கொரு வெலை போகுது. மார்க்கெட்டோட நெலவரமில்லாம மனசுல தோணறத சொல்லறது தான் வெலைன்னு போகுது. அன்னைக்கு சோத்துக்கே கஷ்டம். இன்னைக்கு சொத்தில்லாட்டியும் மளிகைக்கடைல நல்லா சம்பாறிக்கிறையில்ல….. பொண்டு புள்ளைகளோட நல்லா இருக்கிறையில்ல…. அது போதுமெடு” ரங்கசாமி என்பவர் ஆறுதலாக பேசியது முருகனுக்கு பிடித்திருந்தது.
அப்போது பெரிய மனிதர்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய வசதி வாய்ப்புகளின் பெருமையைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர். பெண்கள் மட்டும் இறந்தவர் அருகில் அமர்ந்து கொண்டு சத்தமிட்டு மாறடித்து அழுது கொண்டிருந்தனர்.
“செத்துப்போனவருக்கு பத்து ஏக்கரா இருக்குது. கொறைஞ்சது இருபது கோடிக்கு போகும். என்ன நாப்பதுலயே போயிட்டாரு. போனாலும் உங்கள மாதர சொத்த அழிக்காம வாரிசுகளுக்கு காப்பாத்தி வெச்சுட்டு போயிட்டாரு” என மறுபடியும் முருகனின் மனதை பாதிக்கும் பேச்சை தொடங்கினார் சவத்துக்கு கோடி துணி போர்த்தி விட்டு வந்து பக்கத்தில் அமர்ந்த குப்புசாமி.
“சித்தப்பா… ஆருக்கு எது நிலைக்குமோ அது தான் நிலைக்கும். கெடைக்கறது கெடைக்காமப்போகாது. கெடைக்காதது கெடைக்காது” தத்துவமாகப்பேசினான்.
“முத்து படத்துல ரஜினி பேசுன மாதரையே பேசறே…. என்னமோ அண்ணம்பையன் சொத்தில்லாமப்போயிட்டானேன்னு வருத்தம் தான். நானுங்கூட படிக்காதவன் ஆடு, கோழிய மேச்சு ஆறேக்கறா பக்கத்துக்காட்ட வளைச்சுப்போட்டு மொத்தம் பத்து ஏக்கரா பண்ணிப்போட்டேன். இன்னைக்கு பத்துக்கோடிக்கு மேல போகும்… நானும் படிக்காமையே கோடீஸ்வரனாயிட்டனில்ல….” குப்புசாமி முருகனிடம் பேசிக்கெண்டிருந்த போது இறந்தவரை நான்கு பேர் தூக்கிச்செல்ல, அமர்ந்திருந்தவர்கள் எழுந்து சென்றனர். பெண்கள் முக்கூட்டு தடம் வரை வந்து அழுதுவிட்டு திரும்பிச்சென்றனர்.
காரியம் முடித்து விட்டு திரும்பியதும் “தர்மக்காசு போடுங்க சாமி” என சிலர் கேட்டு நின்றிருந்ததைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் விலகிச்செல்ல, முருகன் தனது பர்சிலிருந்து பணத்தை எடுத்து அனைவருக்கும் கொடுத்து விட்டு நகர்ந்தான்.
கூட்டத்தில் செல்லும் போது சிலர் பேசிக்கொண்டது முருகனின் காதில் விழுந்தது.
“ரங்கசாமி பையன் முருகனுக்கு பூர்வீக ஊர்ல ஒரு கை பிடி மண் இல்லீன்னாலும் கைல இருக்கறத தர்மம் பண்ணறதுல ஒன்னும் கொறைச்சலில்லை….” பேசியவர்களை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றான்.
‘சொத்துக்களை பத்திரமாக வைத்திருந்தும் அவசியச்செலவுக்கு பணமில்லாமல் வறுமையில் பெருமை பேசுபவர்களுக்கு மத்தியில் வாழத்தேவையான வகையில் வருமானம் பெறும் நிலையில் உள்ளவர்கள் சொத்துக்கள் நிறைந்து இல்லாதவர்களாக இருந்தாலும் சொர்க்கத்தில் வாழ்பவர்கள்’ என புரிந்து கொண்டான்.
“தம்பி சொத்து இருந்து என்ன பண்ணறது. ஊட்டுக்கு ஒறம்பற வந்தா சோறு போட வழியில்லை. சும்மா வெட்டிப்பெருமைதான் நம்ம ஊர்க்காரங்க கிட்ட கொட்டிக்கெடக்குது. சொத்து வெலை கோடிக்கணக்குல வித்தாலும் சொத்த விக்க மனசும் வராது. சொத்துக்காரனுங்கிற கௌரவத்த வெச்சுகிட்டு வேலைக்கு போயி சம்பாறிக்கவும் மனசு வராம ஒரு பிச்சைக்காரம்பொழப்புதான். நீ கஷ்டத்துல சொத்த வித்தாலும் சொந்தத்தோட மானத்த காப்பாத்த யோசிக்காம தருமக்காச கொடுத்த பாரு… அந்த மனசு தான் பெரிய சொத்து. இவனுக கெடக்கறானனுக. நீ உன்னைய எப்பவும் மாத்திக்காம இரு. எறைக்கற கெணறுதான் சொரக்கும்னு பெரியவங்க சொல்லுவாங்க. உனக்கு கடவுள் நெறைய குடுப்பாரு. உன்ற மனசுக்கு உன்ற குடும்பம் நல்லா இருக்கும் போ” தனது தந்தை பெயரைக்கொண்ட ரங்கசாமி சொல்லி வாழ்த்தியத்தைக்கேட்ட போது இறந்து போன தந்தையே அவர் மூலம் வந்து வாழ்த்திதாகப்பட்டது முருகனுக்கு.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
