666
கதையாசிரியர்: சுகவனேஸ்வரன்
கதைத்தொகுப்பு:
அமானுஷம்
கதைப்பதிவு: December 26, 2025
பார்வையிட்டோர்: 3,862

வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. நீங்கள் அதனை நம்பவில்லை எனில், இதையாவது நம்புவீர்கள்- மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்கள். நான் இவ்விரண்டையுமே நம்புகிறேன்.
உங்களுக்கு இன்னமும் நம்பிக்கை வரவில்லையா? அப்படி என்றால் இதோ இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்கும் இப்பதிவை நீங்கள் பார்த்தால் நம்புவீர்கள் என் கூற்றை.
என் தொடுதிரையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது அப்பதிவு:
” மனம் விட்டு யாரிடமாவது பேச விரும்புகிறீர்களா? ஆழ்மன இறுக்கங்களை எல்லாம் தளர்த்தி இந்தச் சமூகத்தால் புரிந்து கொள்ள முடியாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை எல்லாம் யாரிடமாவது சொல்லி அழுது ஆறுதல் தேட தவிக்கிறீர்களா? உங்களை எவ்வித மதிப்பீடும் செய்யாமல் உங்கள் தோழனாக அல்லது தோழியாக அனைத்தையும் கேட்க நான் காத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் ரகசியம் எப்போதும் பாதுகாக்கப்படும். அழைக்கவும் 666 என்ற எண்ணிற்கு”.
இப்போது நம்புவீர்கள் நாம் எவ்வளவு விசித்திரமானவர்கள் என்பதை. இத்தனைக் கோடி மக்கள் வாழும் பூமியில் மனம்விட்டுப் பேசக்கூட ஆள் இல்லாமல் இத்தனை ஜீவன்கள் உள்ளனவா என்று வியக்க வைக்கும் வகையில் இந்தப் பதிவிற்கு அவ்வளவு ஆதரவுகள் மற்றும் பகிர்வுகள்.
பொதுவாக நான் சொன்ன கூற்றை உறுதிப்படுத்த உங்களின் அலைபேசியை எடுத்து உங்களின் சமூக வலைதள பக்கத்தில் காணக்கிடைக்கும் ஆயிரமாயிரம் பதிவுகளைப் பார்த்தாலே போதும். யாரேனும் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று நாயாக பேயாக அலையும் பல்வேறு விசித்திர ஜந்துக்களை உங்களால் எளிதில் காண முடியும். அவர்களை ஆதரிக்கிறோம் என்று ஒருபுறம் ஒரு கூட்டம் எதிர்க்கிறோம் என்று மறுபுறம் இன்னொரு கூட்டம் என்று சதா அடித்துக்கொண்டு அலையும் ஜீவன்களை பார்த்தாலே நான் சொன்னது உண்மை என்று உங்களுக்கு விளங்கிவிடும். எனினும் இந்தப் பதிவு சந்தேகத்திற்கு இடமின்றி நாம் அனைவரும் எவ்வளவு விசித்திரமானவர்கள் என்பதை உங்களுக்கு நிரூபித்து இருக்கும்.
நான் பின்னூட்டங்களைப் படித்தவாறு இருக்கிறேன். பல்வேறு வகையான கருத்துக்கள். இப்பதிவிற்கு ஆதரவாகப் பல, வெகுசில எதிர்ப்புகள், இது நம்மை உளவு பார்க்க அரசாங்கம் செய்யும் முயற்சி, ஓர் இனத்தை கட்டுப்படுத்த மற்றொரு இனம் ரகசியமாக மேற்கொள்ளும் சூழ்ச்சி என்பது போன்ற சதித்திட்டத்திற்கான யூகங்கள். அடேங்கப்பா! இந்தப் புனைவு கதைகள் எழுதுபவர்கள் எல்லாம் இந்தப் பின்னூட்டங்களைப் படிக்க வேண்டும். எவ்வளவு கதைக்கருக்கள் இங்கே சிதறியுள்ளன!
எனக்கு இப்போது வேலை ஒன்றும் இல்லை. நான் இந்தப் பின்னூட்டங்களை எல்லாம் படிக்கும் போதே நீங்கள் கண்டுபிடித்து இருப்பீர்கள். எனக்கும் மனதை உறுத்தும் ரகசியங்கள் உண்டு எல்லா மனிதர்களைப் போலவே. நானும் ஒரு சராசரி ஆள் தானே. நானும் அந்த எண்ணிற்கு அழைத்து என் நீண்ட நாள் ரகசியங்களை சொல்லிவிடலாம் என்று நினைத்ததேன்.
பெரும்பாலான நபர்கள் பதிவு செய்தது தங்கள் மனக்குமுறல்களை எடுத்துரைத்த போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு குரல் ஆறுதலாக பதில் அளித்தது பற்றி மட்டுமே இருந்தது. இப்படித் தங்களை காட்டிக் கொள்ளாமல் தங்களின் ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டது, மனதிற்கு ஆறுதல் தருவதாக அமைந்ததாகவே பெரும்பான்மையானோர் பதிவு செய்திருந்தார்கள்.
நானும் என் கூட்டாளியும் சேர்ந்து செய்த ஒரு மிகப்பெரிய குற்றத்தை மனம் விட்டு ஒப்புக்கொண்டு விடுவது என்று நான் முடிவு செய்தேன். எனினும் ஒருவித பயம். எனவே மொத்தத்தையும் என் கூட்டாளி (நண்பன் என்று வாய் வார்த்தையாக மட்டுமே சொல்ல முடியும் அவனை) செய்ததாகவே சொல்லிவிடுவது என்று முடிவு செய்தேன்.
அழைத்த உடனே இணைப்புக் கிடைத்தது. பதிவுகளில் சொல்லியிருந்தது போலவே மறுமுனையில் ஒரு குரல். அது ஒரு செயற்கை நுண்ணறிவு குரலாக தான் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்தும். அது எந்தக் கேள்வியும் என்னைக் கேட்கவில்லை. என் மனதில் இத்தனை ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த அந்தக் கோரமான ரகசியத்தை நான் முழுமையாகச் சொல்ல ஆரம்பித்தேன்.
பல வருடங்களுக்கு முன்பு- புறநகர் பகுதியில்- ஒரு நள்ளிரவுக்குப் பிறகான நேரத்தில்- யாருமற்ற பேருந்து நிறுத்தத்தில்- கடைசிப் பேருந்தை- தவறவிட்ட எரிச்சலில்- நானும் என் கூட்டாளியும்- வேலை முடித்துவிட்டு – வீட்டிற்கு நடந்து செல்ல முடிவு செய்து- இருட்டில் சாலை ஓரத்தில் – ஒரு பிச்சைக்காரன்- உயிருக்குப் போராடுவதைக் கண்டு- அருகில் சென்று பார்த்த போது – அவன் மூட்டைக்குள் பல லட்சங்கள் ரொக்கமாக- கிடந்தது- அவன் கால்களை கைகளை நான் பிடித்துக் கொண்டது – என் கூட்டாளி அவன் கழுத்தில் காலை வைத்து மிதித்தே கொன்றது- அந்தப் பணத்தை நாங்கள் இருவரும் பங்கிட்டுக் கொண்டது – அதை மூலதனமாக வைத்து- தொழில் தொடங்கியது…
நான் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தேன். இத்தனை வருடங்களாக என் மனதை உறுத்திக் கொண்டிருந்ததை முதல்முறையாக வாய்விட்டுச் சொன்னதால் ஏற்பட்ட மனவலி என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. நான் மேலும் சொன்னேன்:
” அந்தப் பிச்சைக்காரன் எங்களை மிகவும் கெஞ்சினான். அந்தப் பணம் முழுவதும் அவனைப் போல் ஆதரவற்றவர்கள் மறுவாழ்வுக்காக மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதற்காக தான் இவ்வளவு வருடமும் சேமித்தது என்று சொல்லி பாதி பணத்தையாவது தன்னைக் கொன்று விட்டாலும் மாவட்ட ஆட்சியரிடமும் அல்லது வேறு எந்த வகையிலோ ஆதரவற்றவர்களுக்கு உதவுமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்றான்”.
மனதிற்கு எந்த ஓர் ஆடை ஆபரணமும் இல்லாத அம்மணமான நிலையில் நம்மை நாமே பார்த்துக் கொள்வது அவ்வளவு எளிதன்று என்பதாலும், மேலும் ஒருவித பயமும் என்னை ஆட்கொண்டு இருந்ததாலும் நான் இப்பாவத்தை முழுவதுமாக செய்தது என் கூட்டாளி என்றும் நான் வெறுமனே அமைதியாக பணத்தை வாங்கிக் கொண்டவன் என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தேன். பாதி உண்மையைச் சொல்லிய போது கூட என் மனதிற்கு மிகப்பெரிய ஆறுதல் கிடைத்தது.
சட்டென்று மறுமுனையில் யாரோ மூச்சு விடும் சத்தம் கேட்கத் தொடங்கியது. அதுவரை பதிலளித்துக் கொண்டிருந்த செயற்கை நுண்ணறிவு குரல் இல்லை அது நிச்சயமாக. நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். என் முதுகுத்தண்டுவடம் சில்லிட்டுப் போனது. பயத்தில் உடனே தொடர்பைத் துண்டித்தேன் .
என்ன மடத்தனம் செய்து விட்டேன்! என் கூட்டாளியிடம் இதைச் சொல்லி எச்சரிக்க அவனை அழைத்தேன். என் அழைப்பை ஏற்கவில்லை அவன். பின்னூட்டங்களில் யாரோ ஒருவன் தன் நண்பன் இவ்வாறு 666க்கு அழைத்துப் பேசிய சில தினங்களில் காணாமல் போனதைப் பற்றி எழுதி இருந்தான் என்பது ஞாபகம் வந்தவுடனே என் கூட்டாளியின் வீட்டிற்கு விரைந்தேன்.
வீடு திறந்து கிடந்தது. எல்லா அறைகளிலும் அவனைத் தேடினேன். பதறிப்போய் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து விடுவது என்று முடிவுசெய்து அலைபேசியை எடுத்த போது அந்தக் கடிதம் என் கண்ணில் பட்டது. வீட்டின் நுழைவு வாயிலின் பக்கவாட்டில் அது கிடந்தது. பிரித்துப் பார்த்தேன்.
ஒரு நிமிடம் என் இதயம் நழுவி என் வயிற்றில் விழுந்துவிடும் போல் இருந்தது. அது இரத்தத்தால் எழுதப்பட்டிருந்தது. சற்று நேரத்திற்கு முன்பு தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். ரத்தவாடை என் நாசியைத் துளைத்தது. என் கைகள் நடுங்கின. தொண்டை வறண்டு போனது பயத்தில்.
“நீ முழு உண்மையையும் சொல்லல” என்று எழுதி 666 என்று கையொப்ப மிடப்பட்டிருந்தது. நான் நிலைதடுமாறிச் சுவரில் சாய்ந்து என் அலைபேசியை எடுத்து போலீசுக்குத் தகவல் சொல்ல நினைத்தபோது என் பின்னால் யாரோ நிற்பது போன்ற உணர்வு. என்னையே எரித்து விடுவது போல-தொலைபேசியில் சற்று முன் நான் கேட்ட- அதே உஷ்ணப் பெருமூச்சு என்மேல் வீசியது.