விளக்கேத்த ஒரு பொண்ணு





வேறு ஏதோ ஒரு வேலையாக தியாகராய நகருக்கு வந்த தியாகு, பக்கத்தில்தானே நண்பன் பரமேஷின் வீடு இருக்கிறது. ஒரு எட்டு போய்ப்பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டான்.
பரமேஷின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தி னான். கதவைத் திறந்த பரமேஷ், ”ஹாய்… வாடா!” என்று அன்போடு வரவேற்றான்.

உள்ளே நுழைந்த தியாகு திடுக்கிட்டான். வீடே சந்தைக் கடை மாதிரி களேபரமாக இருந்தது. லாலி லாலியாக ஒட்டடை. தரை எல்லாம் பெருக்கப்படாமல் குப்பைக்காடு. கொடிகளில் அழுக்குத் துணிகள் கொத்துக் கொத்தாகத் தொங்கின. மேஜை மேல் புத்தகங்கள் இறைபட்டுக் கிடந்தன. டீபாய் மீது கழுவப்படாத காபி டம்ளர்கள்… டபராக்கள்.
”டேய்… என்னடா, வீடு இப்படி அலங்கோலமா இருக்கு?” என்றான் தியாகு.
”அதுவா… என் வொய்ஃப் பத்து நாளா ஊர்ல இல்லைடா. அதான்!” – சிரித்தான் பரமேஷ்.
”இப்ப புரியுதா..? வீட்டுக்கு விளக்கேத்திவைக்க ஒரு பொண்ணு வேணும்னு! பார், ஒரு பத்து நாளா உன் வொய்ஃப் இல்லேன்னதும் வீடு எப்படி நாறிடுச்சு. கல்யாணம்கிறது கால்ல போட்டுக்குற விலங்குன்னுவியே, இப்ப என்ன சொல்றே? அவங்க இருந்தாங்கன்னா, வீட்டை இப்படியா வெச்சிருப்பாங்க. அடிக்கடி வீடு பெருக்கி, ஒட்டடை அடிச்சு, துணி துவைச்சு…”
பேசிக்கொண்டே போனவனைக் குறுக்கிட்டான் பரமேஷ். ”டேய்… நிறுத்துடா! எல்லாத்தையும் என்னவோ அவதான் செய்ற மாதிரி சொல்றே! நான்தான் தினம் தினம் வீட்டு வேலை எல்லாம் செய்வேன். பத்து நாளா அவ இல்லாததனால, பேச்சுலர் லைஃபைக் கொஞ்சம் ஜாலியா அனுபவிப்போமேன்னு நினைச்சேன். ஹூம்… அவ வந்தா மறுபடி என்னை பெண்டு எடுக்கப் போறா!”
– 13th ஆகஸ்ட் 2008