விருப்பம் – ஒரு பக்க கதை






கரண்ட் கட். மின்சாரம் திரும்ப வருவதற்கு இன்னும் மூன்று மணி நேரம் ஆகும்.
பொழுது போகாத திவ்யா, தன் ஐந்து வயது தர்ஷிணியைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.
பத்து நாள் பாட்டி வீட்டில் இருந்து விட்டு வந்த தர்ஷிணியின் அனுபவத்தைக் கேட்க தாயாரானாள்.
”நம்ம வீட்ல மாதிரி, அங்க ஏ.சி இல்லைம்மா”
”ம்!”
”டி.வி.இல்லை!”
”ம்!”
”ரேடியோ கூட இல்லை!”
”ம்!”
”போனும் இல்லை. நீங்களே என் கூடப் பேசறதுக்கு பக்கத்து வீட்டு போனுக்குத்தானே கூப்பிட்டீங்க?”
”ம்!”
”பாட்டிக்கு நூடுல்ஸ் செய்யவே தெரியலைம்மா!”
”ம்!”
”ஆனா, இங்க இருக்கிறதை விட அங்க நல்லா ஜாலியா இருந்ததும்மா!”
திவ்யாவின் முகத்தில் ஈயாடவில்லை!
– எம்.கோசலை ராமன் (7-7-10)