விடியல் விளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2024
பார்வையிட்டோர்: 1,150 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“தாத்தா! ஸ்கூலுக்கு நேரமாச்சு ஷுவைத் துடைச்சி வெளியிலே வை தாத்தா!”

“இருப்பா குளிப்பாட்டி விட்ட துண்டைக் காயப் போட்டுட்டு வந்துடுறேன். நீ சாப்பிடறதுக்குள்ளே எல்லாம் ரெடியாயிடும்.”

“தாத்தா போவோமா?”

“சரி வாப்பா.”

தாத்தா பேரனின் கையைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் புத்தகப் பையைத் தாங்கியபடி பள்ளி நோக்கிப் புறப்பட்டார். இரண்டு பெருஞ் சாலகளைக் கடந்து சென்றாலே பள்ளியை அடைந்துவிடலாம்.

ஒரு சாலையைத் தாண்டியவுடன், பேரனின் நண்பனை எப்போதும் அழைத்துவரும் பணிப்பெண் இன்றும் அழைத்துக் கொண்டு வந்தாள். இரு பேரன்களும் ‘காச் மூச்’ சென்று ஆங்கிலத்தில் கொண்டே சென்றார்கள். பணிப்பெண் தாத்தாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு நடையில் இணைந்து கொண்டாள்.

சிறுவர்கள் இருவரும், தாத்தாவைப் பார்த்துப் பார்த்துப் பேசுவதற்கும், கிண்டலாய்ச் சிரிப்பதற்கும் நேரிடைச் சொல் விளக்கம் தெரியாவிட்டாலும், மறைந்திருக்கும் பொருள் விளக்கத்தை யூகித்துக் கொள்ளத் தாத்தாவால் முடிந்தது.

“தாத்தா இன்றைக்கு இருந்துட்டுதானே போகப் போறீங்க?”

“ஆமாம்மா… இன்றைக்கு எனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறே?”

“வாங்க சொல்றேன்” என்று பணிப்பெண் சொல்லி முடிந்த சில நிமிடத்திலேயே பள்ளியை அடைந்துவிட்டார்கள். பணிப்பெண், பிள்ளையை வகுப்பில் விட்டுவிட்டு வருவதற்குச் சிறிது நேரம் ஆனதால், தாத்தா மட்டும் அந்த மரத்தடி நிழலில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்….

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் அவர் சாலைத் துப்புரவுப் பணியில் இருந்ததையும் அறுபதுகளில் திருமணம் செய்து கொண்டதையும் அதன்பின் ஏழெட்டு ஆண்டுகள் கழித்து முதல் குழந்தையை ஈன்ற நாளிலேயே மனைவி இறந்ததையும், பின்னர்த் தொடர்புத்துறை கம்பிவடம் புதைக்கும் பணியில் சேர்ந்ததையும், வேலை நடக்குமிடத்திலேயே துணியில் தொட்டில் கட்டித் தூங்கவிட்டுக் கொண்டே, பசித்தபோது பால் புட்டியால் பாலூட்டிக்கொண்டே வேலையைக் கவனித்ததையும், அரும்பாடுபட்டுக் கைக்குழந்தையிலிருந்து தம் மகனைச் சிரமப்பட்டு வளர்த்ததையும் நினைத்துப் பார்த்தக் கொண்டே உட்கார்ந்திருந்தார்.

தம் ஆசா பாசங்களையும் ஆசைச் செலவினங் களையும் கட்டுப்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்திக் குழந்தை வளர்ப்பிலேயே ஈடுபட்டு வளர்த்தார். அந்தப் பிள்ளைக்கு நலமில்லாதபோது, மருத்துவரிடம் தூக்கிச் செல்வது; வழிந்து கிடந்தபோது துடைத்தெடுத்தது; கழிந்து கிடந்தபோது கழுவிவிட்டது; சீருடை வாங்கி உடுத்திவிட்டுப் பள்ளிக்கனுப்பி அழகு பார்த்தது; அவன் படிப்புச் செலவிற்கென்றே, வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி ஈட்டியதில் மிச்சப்படுத்தியது, பெரும் வசதி படைத்தோருக்கு ஈடாகத் தம் மகனும் படித்தது; என்றெல்லாம் அனைத்தையும் எண்ணிப் பெருமிதம் அடைந்து கொண்டிருந்தபோது பணிப்பெண் வந்துவிட்டாள்.

தாத்தா கொஞ்சம் கொஞ்சம் படிக்கிறீங்கள். இன்னும் வடிவாப் படிச்சிகிட்டா நாலு விஷயத்தை விளங்கிக் கொள்ளலாமே. நம்ம அறிவை வளர்த்துக் கொள்ளலாமே!”

“அம்மாடி… என் அனுபவத்திலேயே அந்த அறிவைச் சம்பாதிச்சிருக்கிறேன்! இருந்தாலும் நீ சொல்றபடி படிப்பறிவு அவ்வளவா இல்லேதான். இந்த வயசுக்கப்புறம் படிப்பு என்ன வேண்டிக்கிடக்கிறது?”

“படிப்பதற்கு வயது இல்லே தாத்தா…”

படித்துக் கொண்டேயிருக்கலாம். இப்பகூட பேப்பர்லேயும், ரேடியோவிலேயும் அதைப்பத்தி விளம்பரப்படுத்திகிட்டு வர்றாங்க.”

“அது என்ன புத்தகம்?”

“ஔவையாரின் ஆத்திசூடி தாத்தா!”

“அதப் படிச்சிச் சொல்லும்மா.”

“இதிலே தாத்தா… சின்னச் சின்ன வரிகள். ஒருசில வார்த்தைகள். நல்ல நல்ல கருத்துகளை வடிவா சொல்லியிருக்கிறார்.”

“அறம் செய விரும்பு’, ‘ஆறுவது சினம்’ போன்ற வரிகளுக்கு வரிசையாகப் பொருள் சொல்லி விளக்கம் சொல்லிக் கொண்டே வந்தாள். தாத்தா கவனமாகக் கேட்டுக் கொண்டே வந்தார்.

“வஞ்சகம் பேசேல்” என்றால், அடுத்தவங்களைப் பத்தி தவறாகப் பேசக்கூடாது. யார் மனமும் புண்படும்படியும், பின்னாலேயிருந்து புறம் பேசக் கூடாது. அடுத்தது ‘அழகு அலாதன செயேல்’ எது தீமை தரக்கூடியதோ எது நமக்கு அவப்பெயரைத் தரக் கூடியதோ, அதையெல்லாம் நாம் செய்யக்கூடாது”. என்று பணிப்பெண் விளக்கம் சொல்லிக் கொண்டே வந்தபோது, தாத்தா இடைமறித்தார்.

“இப்போ புரியதாம்மா? நீ உன் வாழ்க்கையிலே செய்ய இருந்த தப்பு என்னன்னு…”

“அது எப்படித் தாத்தா? இதையெல்லாம் படிக்காம, என்னைப் புரிஞ்சிகிட்டு, என் வாழ்க்கை யிலே இவ்வளவு பெரிய உதவி செஞ்சி என் பாதையையே திருப்பி விட்டுட்டீங்க?”

எல்லாம் அனுபவம்தாம்மா. இப்ப நீ படிச்சியே அறம் செய்ய விரும்பணும்னு… அதாம்மா நான் செஞ்சேன். நீ படிச்சும் தெரிஞ்சிக்காததை, நான் படிக்காம தெரிஞ்சுகிட்டேன். என்னுடைய சி.பி.எப். பணத்தை என்ன செய்யப் போறீங்கன்னு என் பையன் கேட்டான். ஏதாவது நாராயணண் மிஷன் போன்ற இடங்களுக்குத் தருமம் செய்யலாம்னு சொல்லியிருந்தேன். அப்படிச் செஞ்சிருந்தா பொதுவான திருப்திதான் கிடைச்சிருக்கும். இப்படிக் குறிப்பிட்டு உனக்குன்னு செஞ்சி, நீ திருந்தினதாலே எனக்குப் பரிபூரண சந்தோஷம் கிடைச்சிருக்குமா அதை என் வாழ்கையிலே செஞ்ச பெரிய காரியம்னு நினைக்கிறேன்.

“தாத்தா! அடுத்த செய்யுள்.”

“இளமையிற் கல்’, அப்படின்னா, சின்ன வயசிலேயே படிக்க வேண்டும். என்றெல்லாம் விளக்கத்தைப் பணிப்பெண் சொன்னது தாத்தாவுக்கு நிறைவைத் தரவில்லை.

‘சின்ன வயசிலே மனம் கல்லா இருக்கும். வயது ஆக, ஆக மனம் இளகிப் பழமாகிவிடும்’ அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.”

“அய்யய்யோ அப்படியில்லே தாத்தா! சின்ன வயசிலேயே, கல்வியைக் கற்க வேண்டும். ஐந்தில் வளைகிற உடம்பு ஐம்பதில் வளையுமா? சிறு வயசிலே படிச்சாதான் அறிவு வளரும், எல்லாத் திறமைகளும் வரும். நாலு விஷயங்களையும் தெரிஞ்சிகிட்டாதான், மொழி நல்லா வரும் அதன்மூலம் நாகரிகமும், பண்பாடும் வளரும்.”

இந்த உலகம் போட்டி மிகுந்த உலகம். எங்க யாழ்ப்பாணத்திலே, நிர்ப்பந்தம் காரணமாகக் கல்வி கற்றாங்க. புலம் பெயர்ந்து உழைச்சாங்க! படிச்சாதான் மற்றவங்க நம்மை மதிப்பாங்க. நம்மையே நாம குறைவாகவும் இழிவாகவும் நினைக்கும் நிலை மாறும்.”

பணிப்பெண் தொடர்ந்து விளக்கம் சொல்லிக் கொண்டே வந்த மற்ற வரிகளுக்குப் போகாமல் தாத்தாவின் பார்வையும் கருத்தும் ‘இளமையில் கல்’ என்கிற வரியிலேயே நிலைகுத்தி நின்றது.

“தாத்தா… எங்க மணிமாறன் வந்துட்டாங்க. நான் வரேன்… நாளைக்குப் பார்க்கலாம்… என்று பணிப்பெண் சொல்லிச் சென்றபோதுதான் தாத்தா சுய நினைவுக்கு வந்தார்.

தம் பேரன் இன்னும் வராததால் பக்கத்தில் இருந்த கால்பந்து விளையாட்டுத் திடல் அருகில் சென்று ஓரத்தில் இரந்த பலகை மீது அமர்ந்து கொண்டார். பந்து அந்தப் பக்கம் வந்தால், சிறு பிள்ளையைப் போல் ஓடிப்போய் எடுத்துப் பலம் கொண்ட மட்டும் உதைப்பார். அப்போது விளையாடும் மாணவர்கள் ‘தேங்க்ஸ் பெரிசு’ என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவார்கள்.

ஒருமுறை பக்கம் வந்த பந்தை எடுத்து முறை தெரியாமல் வெறும் காலால் ஓங்கி உதைக்கும்போது கால் சதை பிசகிக் கொண்டது. வலி பொறுக்க முடியாமல் துடித்துவிட்டார். மறுபுறம் ஏற்பட்ட இந்த விபத்தைக் காட்டிக் கொள்ளவும் வெட்கப்பட்டார்.

தாங்கித் தாங்கி நடந்துகொண்டே பேரப்பிள்ளை வகுப்புக்கு எதிரில் சென்று உட்கார்ந்து கொண்டார். பேரன் வகுப்பு முடிந்து வெளியே வந்தவுடன், தாத்தா எழுந்து நொண்டி நொண்டி நடந்து வருவதைப் பார்த்தவுடன்,

“என்ன செஞ்சீங்க தாத்தா? உண்மையைச் சொல்லுங்க?” என்று கேட்டவுடன் இவரும் நடந்ததைச் சொன்னார்.

பேரன் உடனே முதலுதவி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே உள்ள ஓர் ஆசிரியை, தாத்தாவுக்கு, நெட்டி முறித்து, பிசின்மருந்து போட்டுத் தேய்த்துவிட்டு, எப்படிக் காலை ஊன்றி நடக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்து அனுப்பிவிட்டார். எவ்வளவோ தேவலாம். இருந்தாலும் வீக்கம் பெரிதும் குறையவில்லை.

சமாளித்துக் கொண்டு வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார். பேரனே பள்ளிப் பையை முதுகில் கட்டிக்கொண்டான்.

போகும் வழியில், ஒரு பெரியவர் கிளியை வைத்து ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தார். சுற்றிச் சிறுகூட்டம். ஒருத்திக்குக் கிளி சீட்டு எடுத்துக் கொடுக்க, அதை வாங்கிப் பிரித்து ராகம் போட்டுப் படித்தார். அதைக் கேட்டுகொண்டிருந்த தோழிகள் வரிக்கு வரி உள்ள பொருள் குறித்துக் கிண்டல் செய்ததைக் ததாத்தா நின்று பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்.

“வேடிக்கை பார்த்தது போதும் தாத்தா! வா போவலாம்.” என்று தாத்தா கையைப் பிடித்து இழுத்த பின்புதான் அதிலிருந்து விடுபட்டு நடக்க ஆரம்பித்தார்.

வீட்டிற்குச் சென்றவுடன், பேரனைக் குளிப்பாட்டி, இரவு உடையை உடுத்திவிட்டார். சிறிது நேரம் தொலைக்காட்சியில் பேரன் ஆங்கிலப் படம் பார்க்க ஆரம்பித்தான். தாத்தா வந்து பக்கத்தில் உட்கார்ந்தார். கார்ட்டூன் படத்திற்கு மாற்றும்படி கேட்டுக்கொண்டார்.

“என்ன தாத்தா…ஒரு படத்தை ஒழுங்கா பார்க்க விடமாட்டேங்கிறியே” என்று சொல்லி அலுத்துக்கொண்டே மாற்றினான். அவனுக்கும் கார்ட்டூன் பிடிக்காதா என்ன?”

“அப்பா வருகிறவரையில் தானப்பா.”

“சரி சரி பாரு.”

சேனல் மாறி, வந்த கார்ட்டூன் படத்தை இருவரும் வயது வித்தியாசம் இல்லாமல், குதூகலித்துக் கைதட்டி ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் மகனும் மருமகளும் வீட்டிற்கு வந்தவுடன் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டுப் பேரன், படிக்கும் அறைக்குள் சென்றுவிட்டான். தாத்தா தன் கால் காயத்தைக் காட்டிக்கொள்ள விரும்பாமல் நழுவி முன்பக்கம் போய் உட்கார்ந்து கொண்டார்.

சாப்பாடு உட்பட அனைத்து இரவு வேலைகளும்

முடிந்த பின்பு, பேரனுடன் படுக்கச் சென்றார் தாத்தா. படுத்து விளக்கை அணைக்க எழுந்தவுடன் கதை ஒன்று சொல்லும்படி பேரன் நச்சரித்தான்.

“ஒரு ஊரிலே ஒரு ராஜா…” என்று ஆரம்பித்தார்.

“ஆரம்பிச்சுட்டியே! போரடிக்கிறது” தாத்தா.

ஏதாவது புதுக்கதை சொல்லேன்.”

“சரி சொல்றேன் கேளுப்பா…. இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வீட்டுக்கு வேலைக்காரப் பெண்ணா, ஒரு பெண்ணை சிங்கப்பூரிலே ஒருவர் வரவழைத்தார்.

“ஏன் தாத்தா அந்த நாட்டிலேருந்து வரவழைக்கணும் சிங்கப்பூரிலேயே கிடைக்க மாட்டாங்களா?”

“நல்ல கேள்வி! நம்ம நாடு கொஞ்சம் பணக்கார நாடு. இந்த நாட்டுப் பெண்கள் வேற வேலைக்குப் போவாங்க. கொறஞ்ச சம்பளத்துக்கு இந்த மாதிரி வேலைக்கெல்லாம் வரமாட்டாங்க. நாம கொடுக்கிற இருநூறோ முன்னூறோ நமக்குச் சின்னதா இருக்கலாம். ஆனா அவுங்க நாட்டு மதிப்பில பதினஞ்சாயிரம் ரூபா. அத சம்பாதிக்கிற அளவுக்கு அங்கே வழியில்லே. அந்த நாட்டுலே சண்டை வேற நடக்குது. வறுமை அதிகம். நம்ம நாட்டைப்போல் இல்லாம அந்த நாட்டுலே தமிழர்களுக்குச் சம அந்தஸ்து கொடுக்காம பெரும்பான்மையா வாழுற சிங்களவங்க அந்த நாட்டை ஆண்டதனால, பிரச்சினை உண்டானது. ஏரோப்பிளான்ல திடீர்ன்னு வந்து குண்டு போடுவாங்க. ஒளிஞ்சிகிட்டிருந்து துப்பாக்கியாலே சுடுவாங்க. பீரங்கியிலே வந்து சுடுவாங்க. நிறைய புலிங்க செத்தாங்க.”

“புலிதான செத்தது. அது மனிதர்களைக் கடிச்சிடும். செத்தா பரவாயில்லையே.”

“புலின்னா நாலுகாலு காட்டிலே வாழுற புலி இல்லேப்பா. அந்த நாட்டு விடுதலைக்காகப் போராடுகிறவங்க, தங்களை விடுதலைப் சொல்லிகிட்டாங்க. இந்தச் சண்டை பதினெட்டு வருஷமா நடந்துகிட்டிருக்கு. அந்தச் சண்டையிலே, வந்தாள்ள வேலைக்காரப் பொண்ணு, அவளோட தம்பி ஒருத்தன் ஒரு காலை இழந்துட்டான். அந்தப் பையன் கம்ப்யூட்டர் படிக்கிறதுக்குக் கனடா போயிட்டான். காலு இருந்தா அங்கேயே வேலை செஞ்சிகிட்டுப் படிக்கலாம். இவனுக்கு மாதா மாதம் பணம் அனுப்பினாதான் படிக்க முடியும். நோயாளியான அப்பா சம்பாதிக்க முடியாத அம்மா. இவங்களுக்கும் ஜீவனத்திற்குப் பணம் அனுப்பணும். இந்த நிலமையிலேதான் அந்தப் பெண்ணு சிங்கப்பூர் வந்தா. இந்தக் குறைஞ்ச சம்பளத்தை சமாளிக்க முடியாது. ஏதாவது குறுக்கு வழியிலே பணம் பண்ணினாத்தான் முடியும்னு நெனச்சா. அதுக்காக வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே, வரவழைச்ச வீட்டுக்காரர்கிட்டே என்ன சொன்னா தெரியுமா!

எனக்காக நீங்க கட்டுற லெவியையும் சேர்த்து நூற்றி ஐம்பது வெள்ளி மேற்கொண்டு கொடுத்துடு றேன். என்னை விட்டுடுங்க என்றாள். அவர்களும்அந்த நூற்றி ஐம்பது வெள்ளிக்கு ஆசைப்பட்டு, விட்டுடு றேன்னு ஒத்துக்கிட்டாங்க. அதுதான் கொடுமை. அதவிட கொடுமை அந்தப் பொண்ணு தவறான வழியிலே போயி சம்பாதிக்கலாம்ன்னு திட்டம் போட்டதுதான்.

“அதென்னா தாத்தா தவறான வழி?”

பேரன் கேட்ட கேள்விக்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல், தவிர்த்து மழுப்பினார்.

“சட்டத்திற்கும், பண்பாட்டுக்கும் எதிராக யாருக்கும் தெரியாமல் செய்யற தொழில்ப்பா.” நாம விடியல்லே எழுந்திருப்போம்.அவ விடியல்லேதான் விளக்கை அணைப்பா. அப்பதான் அவளுக்கு இரவே ஆரம்பிக்கும்.”

“அப்புறம் தாத்தா?”

“அந்தப் பொண்ணை ஸ்கூல்லே சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைச்சி, முழு விவரத்தையும் தெரிஞ்சிகிட்டாரு ஒரு கிழவர். புத்திமதியெல்லாம் சொன்னார். ஒரு பெண்ணுக்குப் பெருமையே கற்புதான். அதுக்குச் சேதாரம் வர்றாப்பல நடந்து வாழ்ந்தென்ன பிரயோஜனம் என்று என்னென்னமோ சொன்னார். அவ கண்ணீர்விட்டு அழுதாள். கிழவர் என்ன சொல்லியும் திருந்துற நிலையில் அவ இல்ல. கடைசியா, அந்தக் கிழவர் கணக்கிலே இருந்த சி.பி.எப். பணத்தை எடுத்துக் கொடுத்துக் கனடாவுக்கு அனுப்பச் சொன்னார். அதுக்கப்புறந்தான் அந்தக் கிழவர் கால்லே விழுந்து கதறிக் கதறி அழுது எந்தத் தப்பும்இனிச்செய்ய நெனைக்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சி கொடுத்துட்டு, செய்ய இருந்த இருட்டு வேலை நெனப்பே விட்டுட்டுத் திருந்திப் பகல் வேலய ஆரம்பிச்சுட்டா நல்ல பொண்ணு. நல்லா இருப்பா.

“கொர்…. ர்ர்ர்…”

“தாத்தா தாத்தா நம்ம மணியை அழைச்சிக்கிட்டு வருவாங்களே ஒரு அக்கா அவங்க வோலவா தாத்தா…” பதிலில்லாததால் தலையைத் தூக்கிப் பார்த்தான் பேரன். குறட்டை விட்டுத் தூங்கும் தாத்தாவுக்குப் போர்வையை இழுத்துப் போர்த்திவிட்டுப் பேரனும் படுத்துக்கொண்டான்.

படித்தவர் பார்வையில்

பாலு மணிமாறன்
Blk 430;#02-364
Clementi Avenue 3
Singapore – 120430.

எப்போதோ பார்த்த, எளிமையான, அலங்காரமற்ற கிராமத்துப் பெண் நினைவுகளின் தாழ்வாரத்தில் இருந்து போவது மாதிரி… இந்தக் கதை மனசுக்குள் பதிந்து போகிறது! இயற்கை அழகிக்கு ஒப்பனை எதற்கு? இது இயற்கை அழகி போன்ற கதை!

இலாடம் கட்டின குதிரை போல் ஒரே திசையில் ஓடாமல், உலாப் போகையில் பலதிசையும் பார்ப்பது மாதிரி, பல விஷயங்களையும் பார்த்திருக்கிறார் கதாசிரியர். அதில் அவரது அனுபவ அறிவையும், பரந்து விரிந்த உலகப் பார்வையையும் அடையாளம் காண முடிகிறது.

கரு, நடை, உத்தி போன்ற சங்கதிகளை எல்லாம் ஓரம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், இந்தக் கதையில் வருகிற தாத்தா, தன் பேரனைக் கைப்பிடித்து வழிநடத்திச் செல்வது போல்,கதாசிரியரும் வாசகனைக் கைப்பிடித்துச் சரியான வழிக்கு இட்டுச் செல்ல தவிப்பது புரிகிறது.

இது அர்த்தமுள்ள அவசியமான இலக்கியத் தவிப்பு! இது போன்ற ‘விடியல் விளக்குகள்’ சிங்கப்பூர் இலக்கியப் பாதை நெடுக நிறையத் தேவை!

– விடியல் விளக்குகள், முதற்பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *