வாஸ்துக் காய்ச்சல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 1, 2024
பார்வையிட்டோர்: 4,264 
 
 

பீதாம்பரம் முதலாளி புது வீடு கட்டப்போகிறார் என்று தெரிந்ததுமே பழக்கப்பட்டவர்கள், சொந்தக்காரர்கள் என எல்லோரும் சொன்னது வாஸ்து பார்த்துக் கட்டுங்கள் என்றுதான். முன்பே அவருக்கும் அவ்வெண்ணமிருந்தது.

இப்போதுதான் கக்கூசுக் குழி தோண்டுவதற்குக் கூட வாஸ்து பார்க்கவேண்டும் என்றாகிவிட்டதே! கணிணி, இணையம், மாற்று மூளை மைக்ரோ ச்சிப்ஸ் என்று நுண் அறிவியல் ஒருபுறம் மானுடனை அதிமானுடனாக ஆக்கிக்கொண்டிருந்தாலும் சித்தா, ஆயுர்வேதம், உழிச்சல், தியானம், யோகா, வாஸ்து என்று புராதன மகத்துவங்கள் புனர்ஜென்மம் எடுத்துக்கொண்டும் இருக்கின்றன. இடிப்பதற்கும் வாஸ்து, கட்டுவதற்கும் வாஸ்து என்று நகர்ப்புறங்களில் உற்பத்தியான இந்தத் தொற்று வியாதி, குக்கிராமங்களையும் இடித்துக் கட்டத் தொடங்கி காலம் கொஞ்சம் ஆயிற்று. த்ரேதா யுகத்தில் எஞ்சினீயரிங் காலேஜ் இருந்ததா என்கிற பொது அறிவு உங்களுக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வாஸ்து பற்றி கை வைத்தியமாகவாவது நாலைந்து குறிப்புகள் தெரிந்திருந்தால்தான் நீங்கள் நவீன மனிதன் என்பதாக இது ஃபேஷனாகிவிட்டது. புதிய கண்டுபிடிப்புகள் எது வந்தாலும் முதலில் அதை வல்லடியாக எதிர்த்துவிட்டு, பிறகு சமரசமாகி, முடிவில் அதன் புகழ்பாடியாக மாறிவிடும் இயல்பைக் கொண்ட பீதாம்பரம் முதலாளிக்கு இப்போது இந்த ஃபேஷன் ஃபீவர் 108 டிகிரியில் கொதித்துக்கொண்டிருந்தது. இதெல்லாம் மூட நம்பிக்கை என்று விவாதித்துக்கொண்டிருந்தவர், ஊரெங்கும் இதே பேச்சும் நடப்புமாக ஆனதினால், நிஜமாக இருந்தாலும் இருக்கலாம் என சந்தேகபரமாக நம்ப ஆரம்பித்திருந்தார். ஆகிற செலவோடு அஞ்சோ பத்தோ கூட; அவ்வளவுதானே! வந்தால் மலை. இல்லாவிட்டாலும் முடி உதிர்வு அவருக்கு உண்டு.

எந்த ஒரு காரியத்தையும் பலரிடமும் ஆலோசித்து, அபிப்ராயங்கள் கேட்டுக் குழம்பி, தீர்மானத்துக்கு வர முடியாமல் திண்டாடுவதும் அவரது குண விசேஷங்களில் ஒன்று. அப்போதெல்லாம் அவருக்கு கீதோபதேசம் செய்கிறவன் அவரது அள்ளக்கை கந்தசாமிதான். அவன் ஒரு கருத்துக் கந்தசாமி. சூரியனுக்குக் கீழே உலகில் உள்ள எந்த விஷயமானாலும் அவனுக்கு அது பற்றி கருத்து இருக்கும். சாதாரணமாக நீங்கள், “ஏப்பா கந்தசாமி, ஒரு டீப் போடலாமா?” என்று உபசரித்தால் கூட, “போடலாமுங். ஆனாட்டி அதுல ஒரு கருத்து என்னுன்னா, நமக்கு லைட் டீ; சக்கரை கம்மி” என்பான்.

நல்ல வாஸ்து நிபுணர்கள் யாரையாவது சொல்லுங்கள் என்று தனது கெளரவ ஆலோசகர்களைக் கேட்டு, ஆளாளுக்கு ஒவ்வொருவரைப் பரிந்துரைத்து பீதாம்பரம் முதலாளியை வட்டத்திரிச்சபோது, கந்தசாமி உபதேசித்தான்: “அகுடியாக் கேக்கப் போனா அப்புடித்தானுங் மொதலாளி, ஆளாளுக்கு ஒண்ணச் சொல்லுவாங். ஒரு கருத்துச் சொல்றன் கேட்டுக்குங்.

அத்தன அகுடியாவுல நாமளே ஒண்ணப் பாத்து அகுடியாப் பண்ணிக்க வேண்டீதுதான்.”

“அட, நானே அது தெரியாமத்தானப்பா கண்ணாமுளி திருகீட்டிருக்கறன்.”

“ஆனாட்டி இப்புடிப் பண்ணீட்டா என்னுங் மொதலாளி? அதுதான் கரைக்கிட்டு.”

“காரியமென்னன்னு மொதல்ல சொல்லப்பா,… கரைக்கிட்டா இல்லியான்னு அப்பறம் பாத்துக்கலாம்.”

“அதுதானுங் மொதலாளி, நம்மகிட்ட அகுடியாக் குடத்ததுல அஞ்சாறு பேரு சொன்னது அந்த வண்ணாமடை மூத்தாசாரியாரத்தானுங்ளே…! அவுரு மந்தரம் கிந்தரமெல்லாம் தெரிஞ்சவுரு. ஓமம் கீமெமெல்லாம் நடத்துவாருன்னு வேற சொல்றாங்ளே…! அவுரயே பாத்துட்டா என்னுங்?”

“அப்புடீங்கறே?”

“அப்புடியும் பண்ணலாம்ங் மொதலாளி. இல்லீன்னா இன்னொரு கருத்துச் சொல்றன் கேட்டுக்குங்…” என்று தொடங்கியவனை முதலாளி அவசரமாக இடைமறித்தார். “வேண்டாமப்பா, நீ உன்னொண்ணச் சொல்லி மறுச்சும் கொளப்பரேசன் பண்ணியுட்றாத. ஒரே அய்டியால நிப்போம். தாமசம் பண்ண வேண்டாம். கையோட போயிப் பாத்துட்டே வந்தர்லாம். பொறப்படு.”

தீர்மானத்துக்கு வருவதற்குத்தான் குழம்புவாரே தவிர, முடிவெடுத்துவிட்டால் முதலாளிக்கு உடனே செயல்படுத்தியாக வேண்டும். “ஆனாட்டி அதுல ஒரு கருத்துங் மொதலாளி. மூத்தாசாரியாரப் புடிக்கோணும்னா வெடியால எட்டரைக்குள்ள போயாகோணும்னு சொன்னாங்ளே! நாளைக்குப் போயிட்டா என்னுங்? வெடியக்காலம் ஏளு ஏள்ரைக்குப் பெறப்பட்டாச் செரியா இருக்கும்.”

காலை எட்டு மணி வாக்கில் கார் வண்ணாமடை ஜங்ஷனை அடைந்தது. அங்கே யாரைக் கேட்டாலும் மூத்தாசாரி வீட்டுக்கு வழி சொல்வார்கள் என்றிருந்தனர். அவ்வளவு பிரபலியமாம். புள்ளாச்சி, வேட்டைகாரம்புதூர், உடுமலைப்பேட்டை கட்டி அவரைத் தேடி வந்து காரெடுத்துக் கூட்டிச் செல்வார்களாம். இருந்துமென்ன,… முற்றத்து முல்லைக்கு மணமில்லை என்பதை அஞ்சாறு பேரின் பதில் நிரூபித்தது. ஏழாமத்து ஆள்தான் சகாதேவன் மூத்தாசாரியா என்று கேட்டார். இவர்களுக்குப் பெயர் தெரியவில்லை. மார்பு வரை வெண் தாடி கொண்ட, ருத்ராட்சமணிந்த, சாமியார் மாதிரி உள்ள மூத்தாசாரி என்றதும், “எந்நா அது சகாதேவன் மூத்தாசாரியேதான்” என்று குக்கிராமத்தைக் குறிப்பிட்டு, அங்கே போய்க் கேட்டால் போதும் என்று வழி காட்டினார்.

தார்ச் சாலையில் மேற்கே பின்னும் சென்று, தெற்கே மண் சாலையில் கார் திரும்பியது. பசிய வயல்களும், தென்னந் தோப்புகளுமான செழுமை, “தேனுங் மொதலாளி, குரியார்குற்றிக் கெனாலு இங்க வந்துருச்சாட்டத்தான்

இருக்குதுங். வடகரப்பதிப் பஞ்சாயத்துக்குத்தான் வல்லீங்ளா? என்னு பஞ்சாயத்துங் நம்ம பஞ்சாயத்து? எம்மெல்லேவ மாத்தோணும்” என்று கந்தசாமியைக் கருத்து சொல்ல வைத்தது. வெட்ட வெடியால என்னத்துக்கு அவனோடு அரசியல் என்று பீதாம்பரம் முதலாளியும், “மந்திரியவே வேண்ணாலும் மாத்திப்போடலாம்” என்றார். ஊரை அடைந்தபோது ஆற்றில் குளித்துவிட்டு வெறுமேலில் ஈரத் துண்டும் போர்த்தி, ஈர வேட்டியையே உடுத்திவரும் ஏட்டன்களும், ஈரத் தலை விரித்த சேச்சிகளும் எதிர்ப்பட்டனர். அவர்கள் எடத்தோட்டு, வலத்தோட்டு என்று காட்டிய வழியில், மூங்கில் விளாறு வேலி கட்டிய குறுகிய பாதையில், வளைந்து நெளிந்து ஊர்ந்த கார், ஆசாரித் தறயில் மூத்தாசாரி வீட்டு முன்பு நின்றது.

இது மூத்தாசாரியின் பூஜை நேரம். அவர்கள் காக்க வைக்கப்பட்டனர். ஓம் – க்ரீம் – க்ளீம் உச்சாடனங்கள், சிறுமணி ஓசை, ஊதுபத்தி – சாம்பிராணிப் புகைமண்டலம் ஆகியன இவர்களைச் சற்றே மருட்டி பயபக்தியாக்கின. பூஜை முடித்து ப்ரசன்னமான மூத்தாசாரியாரைக் கண்டதும் அறியாமலே இருவரும் எழுந்து கும்பிட்டார்கள். காவி வேட்டி, ஜடாமுடி, புருவ மத்தித் திலகம், தீட்சண்ய முழிப்பு, ஞானத் தாடி, பஞ்சமுக ருத்ராட்சம், ஒருமுக ருத்ராட்சம், துளசி மணிமாலைகள், பூணூல், விபூதி – சந்தன – குங்குமக் காப்புகள் என்று மலையாள மாந்தரீகர்களின் சாமுத்ரிகா லட்சணங்களோடு, உருண்டு திரண்டு இருந்தார் மூத்தாசாரி. கொள்ளிவாய், குறளி, ஒடியன் இத்தியாயிகளைக் கூட ஓட்டுவாரோ என்னவோ.

இவர்களை உட்காரக் கையமர்த்திவிட்டு மூத்தாசாரி தானும் கம்பீரமாக அமர்ந்தார். விபரங்கள் அனைத்தையும் கேட்டுக்கொண்டார். பிறகு அவரது உபன்யாசம் தொடங்கியது.

“வாஸ்துங்கறது நீங்க நெனைக்கற மாதிரி சாமானிய விஷயமொண்ணும் அல்ல. அது சாஸ்த்ரமாக்கும். புராதன விஷயங்களுக்குப் புது மவுசு வந்தப்போ, இப்ப கொத்தனார்களும், சிவில் எஞ்சினீயர்களும் ஏதோ நாலு புஸ்த்தகத்தப் படிச்சுட்டு, வாஸ்துன்னு சொல்லி, வீட்டுக்கும் ரூமுக்கும் அளவு சொல்றது, எங்க எதைக் கட்டறதுன்னு ஜனங்கள ஏமாத்திப் பணம் பறிச்சுட்டிருக்கறாங்க. பாரம்பரியமாயிட்டு அது எங்களுக்கு, அதாயது ஆசாரிமார்க்கு உள்ளதாக்கும். தமிழ்ல மனையடி சாஸ்த்ரம்னு சொல்றதுதான் சம்ஸ்க்ருதத்துலயும் மலையாளத்துலயும் வாஸ்துன்னு சொல்றது. ஆசாரிமாருக எப்பவும் இந்த மாதிரி மூத்தாசாரிகள் மூலமா கணக்குப் போட்டுத்தான் வீடு பணிவாங்க. இப்பப் பின்ன வாஸ்துவுக்குப் புது மவுசு வந்ததும், அரையும் குறையுமாப் படிச்சுட்டு, நானும் வாஸ்துகாரன்னு பல ஜாதிகள்லயும் கெளம்பிட்டாங்க.

“இன்ன ஜாதிக்கு இன்ன வேலைன்னு மனு சாஸ்த்ரம் சொல்றதெல்லாம் இப்ப நடைமுறைல பெசகியாச்சுன்னு வெச்சுக்குங்க. எந்நாலும் செலது அவங்கவங்கதானே இப்பவும் செய்யறாங்க. வண்ணாரு செரைக்கறதோ, நாசுவரு வெளுக்கறதோ உண்டா? சூத்திரன் ப்ரோஹிதம் பண்ண முடியுமா? ப்ராமணன் தோட்டிப் பணி செய்யறதுண்டா? நான் சொல்றது என்னன்னா,… எந்த ஜாதியோ, குலமோ, கோத்திரமோ ஆகட்டும். முறைப்படி கத்துகிட்டு, சாஸ்த்ரம் தவறாம செய்யணம். அதாக்கும் அதோட செரி.

“ஸ்மராங்கண சூத்ரஸாரம், ப்ருஹத் ஸம்ஹிதா, ப்ருஹத் வாஸ்துமாலா, வசிஷ்ட ஸம்ஹிதா, அபராஜித் ப்ருச்சா, தைவக்ஞ மனோஹரம், வாஸ்து ராஜ வல்லபம், வாஸ்து ப்ரதீபம், வாஸ்து தர்ப்பணம், வாஸ்து ரத்னாகரம் தொடங்கி அனேக வாஸ்து சாஸ்த்ரங்கள் இருக்கு. இதெல்லாம் படிச்சு, ஆராய்ஞ்சு, அனுபவத்துல கண்டு, பின்னத்தான் வாஸ்த்து சாஸ்த்ரியாக முடியும். அல்லாமப் பின்ன அம்பதோ நூறோ குடுத்து கண்ட புஸ்த்தகமும் வாங்கி, அதுல உள்ள கணக்குகள மட்டும் வெச்சுட்டு வீடு கட்டுனா பலன் உண்டாகாது.

“வாஸ்துங்கறது வெறும் எஞ்சினீயர் ப்ளானிங் அல்ல; இத்தற அடி நீளம், இத்தற அடி வீதி (அகலம்), இத்தற அடி பொக்கம்(உயரம்)னு அளவுகள மட்டும் குறிச்சு கெட்டிடம் கெட்டறதுக்கு. வீடு ப்ளானிங் குறிக்கறதுக்கு முன்னாடி, மொதல்ல ஒடமஸ்த்தனோட (உரிமையாளரோட) ஜாதகத்தப் பாக்கணம். கெட்டியவ, மக்களோடதும் பாத்து, அதுல யாருக்கு வீட்டு யோகம் கூடுதலோ, அவுங்க பேருல வீடு கட்டணம். அதுக்கு முன்னாடியே மனையோட அளவையும் மண்ணையும் பரிசோதிக்கணம். எந்நுட்டே வேலை தொடங்கக் கூடும். அல்லாமக் கூடாது.”

அந்த விவரணையிலும் தோரணையிலும் வசியப்பட்டுவிட்ட பீதாம்பரம் முதலாளி, “நீங்க சொல்றாப்புடியே பண்ணிக்கலாம்ங் சாமி. மொறப்படி பண்ணுனாத்தான் நமக்கும் ஒரு நிதா இருக்கும்” என்றார்.

“எந்நா,… மொதல்ல உங்க ஜாதகத்தயும், வீட்டுல உள்ளவங்களோடதும் கொண்டு வாங்க, பாக்கலாம்.”

“ஏனுங் சாமீ, அதுல ஒரு கருத்துச் சொல்றனுங். நாங் அங்கயே ஆருகட்டயாவுது சோசியம் பாத்துக்கறதுங்ளா? இல்ல, அதுக்குன்னு உங்குளுக்குத் தெரிஞ்சவீக ப்பெசலாப் பாக்கறவீக உண்டும்ங்ளா?”

“ஜோல்சியம் அடியனே பாக்கறதுதான். அதுவும் சாஸ்த்ரத்துல பட்டதல்லவா…! மூத்தாசாரின்னா வெறும் கணக்குப் பலம் மாத்ரம் படிச்சாப் போதாது. ஜோல்சியம், ப்ரோஹிதம் எல்லாம் தெரிஞ்சிருக்கணம். எல்லா மூத்தாசாரிகளும் அப்படி இல்ல. அடியன் அப்படித்தான். ஆசாரிமார்க்கு விஸ்வகர்மான்னும், விஸ்வப்ராமணன்னுமாக்கும் சாஸ்த்ரத்துல ஜாதிப் பேரு. ப்ராமணர்கள் செய்யற ப்ரோஹிதம், க்ரியாதி, பூஜா கர்மங்கள் எல்லாமும் அவங்களும் செய்யலாம். பூணூலும் போட்டுக்கலாம். சில்பிகள் எல்லாரும் அப்படித்தான்.”

“ஏனுங் மொதலாளி,… அப்ப ஒரு கருத்துங். சாமி எப்படியானாலும் மனையப் பாக்கோணும்ங்றாருங்ளே…! கையோட கூட்டீட்டுப் போயிட்டா அதையும் பாத்துட்டு, அப்புடியே சோசியத்தயும் பாத்தறலாமல்லங்?”

“வண்டியோ காரோ இருந்தாத்தான் நான் வர முடியும். பஸ்சுல ப்ரயாணம் பண்றத நிறுத்தியாச்சு. பின்ன, இங்க பஸ்சுக்கும் மூணு கிலோ மீட்டர் நடக்கணம். எனக்கு மூட்டு வலி ப்ரச்சனை உண்டு. வயசாயிடுச்சில்லையா?” மூத்தாசாரி கம்பீரத்தைத் தளர்த்தி மூட்டுகளைப் பிடித்துவிட்டுக்கொண்டார்.

“அதுக்கென்னுங்,… நாங்களும் கார்லதான் வந்திருக்கறம்.”

“அப்ப சரி, எந்நாலும் எனக்கு இன்னைக்குப் பதினோரு மணிக்கு அப்பாய்ன்மென்ட் இருக்கு. குழல்மந்நத்துல ஒரு ஃபேக்டரி ஓனரோடது. சரி, நாம அதுக்குள்ள வந்துடலாம் இல்லையா? நீங்க டிஃபன் சாப்பிட்டுட்டு வந்திருப்பீங்க. நானும் சாப்பிட்டுட்டு வந்தர்றேன். ‘மோளே,… இவர்க்கு ச்சாய கொடுக்கூ…’ அஞ்சு மினிட்டு, வந்தர்றேன்” என்று அந்தர் த்யானமாகிவிட்டார்.


பீதாம்பரம் முதலாளியின் வீட்டில் காரிலிருந்து இறங்கியதுமே மூத்தாசாரி வாசலில் நின்று வீட்டையும் சுற்றுப்புறங்களையும் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு நோக்கினார். “உங்க வீட்டுல யாருக்காச்சும் கண்ணு, காது சம்மந்தமான நோய்கள் உண்டா?” என்று கேட்டார்.

முதலாளி ஆச்சரியத்தோடு, “ஆமாங் சாமீ…! எங்கம்மாவுக்கு ஒரு காது மந்தமாயிருச்சு. அய்யனுக்கு ரெண்டு கண்ணுமே பொரை ஆப்பரேசன் பண்ணியிருக்குது. எப்புடிங் சாமீ கண்டுபுடிச்சீங்கொ?”

“கெட்டியவளுக்குத் தீராத வியாதி எதாச்சும் இருக்கணுமே…!”

“அ – ஆமுங் சாமீ! அவளுக்கு எளைப்புக் கம்ப்ளைண்டு இருக்குதுங். என்னென்னுமோ நாட்டு மருந்து, இங்ளீஸ் மருந்து சாப்ட்டும், ம்-னு கேக்கறதில்ல, ஏன்னு கேக்கறதில்ல. ஒட்டஞ்சத்தரம் கூடப் போயிப் பாத்தாச்சு.”

“மூணு மக்கம்மாருன்னு சொன்னீங்களே,… அதுல யாருக்காச்சும் வாய் வராமயோ, திக்கு வாயோ எதாச்சும் உண்டுமா?”

“ரெண்டாமத்த பையனுக்கு கொன்னவாய்தானுங் சாமீ. சாமீ,… தெப்புடீங் சாமீ இதையெல்லாம் புட்டுப் புட்டு வெக்கறீங்?” முதலாளி பிரமித்தார்.

“சாமி சாமானியமான ஆளில்லீங் மொதலாளி…! அவுரு நானி மகானாக்கும்னு கண்டுக்குங் கருத்து!”

“ஓ…! அப்படியொண்ணும் இல்ல. அடியன் சாமான்ய மனுஷ்யன்தான். பின்ன, கொஞ்சம் சாஸ்த்ரம் தெரியும். கற்றது கை மண்ணளவுன்னு சாஷாத் சரஸ்வதி தேவியே சொல்லலியா? அவளோட கை மண்ண அடியனோட நாக்குல துள்ளி நுள்ளிப் போட்டிருக்கா; அதனாலயாக்கும் சொல்றது பலிக்குதுன்னு ஜனங்க சொல்றாங்க. எல்லாம் தேவி கடாட்சம். ‘அம்மே, பகவதி…! நல்லது வருத்தணே!” என்று கை கூப்பி ஆகாயத்தைத் தொழுதுவிட்டு, “வீட்டுக்கு முன்னாடி இருக்கற முருங்கை மரத்தையும் மாதுளாஞ் செடியையும் வெட்டிருங்க. வீட்டுல தலைவாதிலுக்கு சைடுல இப்படி ஒத்தை ஜன்னலா இருக்கக் கூடாது. இந்தப் பக்கமும் இடிச்சு அதே மாதிரி ஜன்னல் வெக்கணம்” என்று திருத்தங்கள் சொல்லிக்கொண்டே படியேறினார். ஆகுட்டுங் சாமீ, ஆகுட்டுங் சாமீ என்று பணிந்துகொண்டே முதலாளியும், அதைவிடப் பணிவாக கைத்தடியும் கிலேசத்தோடு தொடர்ந்தனர்.

வீட்டுக்குள் வந்ததும் அறையை சுற்றுப் பார்வையால் சுழற்றிவிட்டு, “ம்ம்,… லட்சுமி கடாட்சம் உங்களுக்கு உண்டு. ந்நாலும் மூத்தவளோட பார்வையும் இருந்திட்டிருக்கு. போட்டி, பொறாமை, கடன் தொல்லை,… இப்படியெல்லாம் இருக்குமே!”

“ஆமாங் சாமீ, ஆமாங் சாமீ! அப்புடியே கண்ணாரக் கண்ட மாற, காதாரக் கேட்ட மாற சொல்றீங்ளே சாமீ. நாங் கும்படற மீன்கொளத்தி பகவதியேதான் உங்கள எங்குகட்ட – தப்பு, தப்பு; எங்கள உங்குகட்டக் கொண்டாந்து சேத்தியிருக்குது” முதலாளி கன்னத்தில் போட்டுக்கொண்டார். உணர்ச்சிவயத்தில் அவர் கந்தசாமிக்குச் சேரவேண்டிய புண்ணியத்தை மீன்கொளத்தி பகவதிக்குத் தாரை வார்த்துவிட்டார். மூத்தாசாரியின் மகிமைகளில் மென்மேலும் பக்திப் பரவசமாகிக்கொண்டிருந்த கந்தசாமிக்கும் அது கருத்தில் படவில்லை.

குடும்பத்தாருக்கும் இதையெல்லாம் தெரிவித்துவிடவே, அவர்களும் காலில் விழுந்து விபூதி கேட்காத குறைதான்.

ஜாதகங்கள் அனைத்தும் வந்தன. ராசிக் கட்டங்களுக்குள்ளும், அண்டவெளியிலும் சுழன்றுகொண்டிருக்கும் க்ரகங்களையும் நட்சத்ரங்களையும் விரல் மடக்குக்குள் கொண்டுவந்து புள்ளி விவரக் கணக்கெடுப்பு நடத்திய மூத்தாசாரி, அஷ்டமத்தில் சனி, பித்ரு தோஷம், பத்தாம் வீட்டில் பிதுர்காரன் என்று பீதி கிளப்பிவிட்டு, “இந்த வீட்டு ஒடமஸ்தனுக்கு புது வீடு யோகம் உண்டு. எவ்வளவு சீக்கிரம் அதைக் கட்ட முடியுமோ, கட்டிக் குடி போகறது நல்லது” என்று பரிகாரம் சொன்னார்.

உள்ளூரிலேயே முதலாளி வாங்கியிருந்த இருபது சென்ட் மனைக்குப் போனார்கள். அங்குள்ள மண்ணை எடுத்து மூத்தாசாரி முகர்ந்தும், ஒரு துள்ளி நாவில் போட்டும் பார்த்தார். “மண்ணுல பச்சை நிறம் காணுது. புளிப்பு ருஜி. கோரை (கேழ்வரகு) மணம். வியாபாரம் செய்யறவங்களுக்கு ஏத்த நிலம். ஆனா, மனையோட அமைப்பு தகுந்த வடிவத்துல இல்ல. அக்னி மூலைல நீட்டிட்டிருக்கு பாருங்க, அது கூடாது. நேரா செவ்வகமா இருக்கணம். ஆகையினால, நீட்டியிருக்கறத நேர் பண்ணி வேலி போட்டிருங்க. மிச்சம் வர்ற துண்டு ரெண்டோ, மூணோ சென்ட் வரும். அதை வேற எதுக்காவது தனிச்சு உபயோகிச்சுக்கலாம். யாருக்காவது வித்துட்டா ரொம்ப நல்லது. வடக்குப் பகுதி மேடா இருக்கே,… அது கூடாது. அந்த மேட்ட செதுக்கி சமப்படுத்தணம்.”

“ஆகுட்டுங் சாமீ!”

1’x1’x1 ‘ அளவில் குழி தோண்டி, அதில் நீரூற்றி, வற்றுவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்று கவனிக்கச் சொன்னார். எவ்வளவு எஸ்டிமேட்டில் எம் மாதிரி வீடோ, அதை ப்ளானிங் போட்ட பிறகு, நல்ல நாள் பார்த்து பாலக்கால் நட்டி வேலை நமஸ்தம் பண்ணலாம். மறுக்கவும் வீடு திரும்பி அந்த விஷயங்களைக் கலந்துரையாடிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி மூத்தாசாரியின் செல்ஃபோன், ‘அம்மே நாராயணா,… பத்ரீ நாராயணா…’ ராகத்தை ஒலித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் பதில்கள் சொல்லிவிட்டு, “இப்பக் கூப்பிட்டது குழல்மந்நம் ஃபேக்டரி ஓனர்தான். சமயம்

இங்கியே பதினொண்ணரை ஆயிருச்சே…! எந்நா நமக்கு பொறப்படலாம் இல்லியா?” என்றார் கடைசியில்.

“செரீங் சாமீ…! உங்குளுக்கு ப்பீஸ் எப்புடீன்னு சொன்னீங்ன்னா….”

“ஆங்,… அதுக்கு ஃபிக்ஸடா சொல்ல முடியாது. வேலையப் பொறுத்து ஆகும். ப்ளானிங் போட்டுட்டு சொல்றேன். ஃபோன் இருக்கில்லையா? இப்பத்திக்கு ஆயிரத்தி ஒந்நு அட்வான்ஸ் மாத்ரம் குடுத்தாப் போதும்.”

முதலாளிக்கு அதுவும் ப்ரமிப்பாகவே இருந்தது. இங்கத்திய ஆசாரிப் பணிக்கு மூன்று நாள் கூலி அது. இவரோ உளி மழுவும் தூக்காதவர். வாஸ்துப் ப்ரகடனம் மட்டுமே. அதற்கு அட்வான்ஸே ஆயிரத்தொன்று என்றால், பண்ணையத்துக்குப் படல் சாத்த வேண்டியதுதான்.

கந்தசாமியை உள்ளே கூப்பிட்டு முணுமுணுக்கவே, “ஒரு கருத்து நீங்களே ரோசனை பண்ணிப் பாருங் மொதலாளி. ஏளும் மூணும் பத்துன்னு கூட்டிக் கணக்குப் போட்டு நீட்டறவுரா அவுரு? எத்தற சாஸ்த்தரம் – சாங்கியம் படிச்சிருக்கறாரு; அதும்பட லிஸ்ட்டே அரை மைலுக்கு வருமாட்ட இருக்குது. ஊட்டப் பாத்தே நல்லது – பொல்லது, ஆரெவுருக்கு என்னு சீக்கு – ஏது சீக்குன்னு அத்தனயும் நானத்துலயே கண்டு சொன்னாரு பாத்தீங்ளா? நானி மகானாக்கும்ங் மொதலாளி. குடம்பத்துக்கே சோசீம் பாத்திருக்கறாரு. மண்ணத் தின்னு, குளி தோண்டி டெஸ்டுக் கிஸ்ட்டெல்லாம் பண்ணாரல்லங்,… அதுக்கே குடக்கோணும். மலையாள மந்தரவாதம் தெரிஞ்சவருங் மொதலாளி. லச்சுமியக் கட்டிவெச்சுக் கறந்துபோடுவாரு. லச்ச லச்சமாக் கொட்டப்போகுது. ஆயர்ருவாய்க்குக் கணக்குப் பாக்காதீங் மொதலாளி. அவுருக்குக் குடக்கற காணிக்க, திருப்பதி உண்டீல்ல போடற மாற; போட்டதுக்கு நூத்தெட்டு மடங்கு திருப்பிக் கெடைக்கும்” என்று ரகசியக் குரலில் கருத்தரங்கமே நடத்திவிட்டான்.

இருந்தாலும் அவருக்கு ஒராள் அபிப்ராயத்தில் உடன்பாடில்லையாதலால், மார்கழி மாத இளைப்பில் கேருகேரென மூச்சு இளைத்துக்கொண்டிருந்த மனைவியின் படுக்கைக்குப் போனார். “ஏனம்முணி,… அவுரு அப்புடிக் கேக்கறாரு; இவன் இப்புடிச் சொல்றான்; நீயெப்புடி?” என்கவும், அவள் மூச்சிரைப்பு மற்றும் மாரத்தான் இருமல்களுக்கிடையே ஒவ்வொரு சொற்களாக, “அவுரு – நம்மூட்ல – காலடி – எடுத்து – வெச்சதே – புண்ணியம்” என்று ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாகச் சொல்லிவிட்டாள். அய்யங்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாமா எனத் தருகியவர், மனைவி சொல் மிக்க மந்திரமில்லை என்று பீரோவைத் திறந்தார். நூறு ரூபாய்த் தாள்களை நான்கு முறை எண்ணினார். அம்மாவின் சுருக்குப் பையிலிருந்து வாட்ட வெற்றிலை இரண்டும், வெட்டுப் பாக்கு ஒன்றும் வாங்கி, ருவ்வாய்க் காசொன்றையும் சேர்த்து ஆயிரத்தொன்றாக மூத்தாசாரியிடம் காணிக்கை செலுத்தினார்.

உபதேசங்கள் செய்யாதபோது அவருக்கு சாரதியாகவும் பார்ட் டைம் பணி புரிகிற கந்தசாமி, காரெடுத்து மூத்தாசாரியைத் திரும்ப விடச் சென்றான்.


கல்யாணம் பண்ணியபோது பீதாம்பரம் முதலாளிக்குக் கஷ்டம் ஏதும் தெரியவில்லை. ஏனென்றால் ஐம்பது பவுன் நகை, ஐந்து லட்சம் ரொக்கம் என்கிற விகிதாச்சாரத்துக்குத் தம்மை விற்றுக்கொண்ட லாபகரமான வியாபாரம் அது. வம்ச விருத்தியும், தொழில் விருத்தியும், மூச்சிரைப்புகள் நடுவே மனைவியினால் உண்டாயிற்று. ஆனால் வீட்டைக் கட்டத் தொடங்கியதிலிருந்து பாதிப் பழமொழி அவருக்கும் உண்மையாகிவிட்டது.

கருங்கல், செங்கல், ஜல்லி, மணல், கம்பி, சிமெண்ட், மரம் என்று ஒவ்வொரு சாமான்களுக்குமான தேவை. எங்கே வாங்கினால் விலைக் குறைச்சல் என்று தேடி, மணல் மற்றும் மரங்களை கருப்பில் வாங்கிவரப் பட்ட பாடு. செலவைக் குறைக்கும் இந்த முயற்சியில் போலீஸில் சிக்கி, கேஸாகாமல் தப்பிக்க தெண்டம் அழுத வகையில் ரெட்டிப்பு இழப்பு. கட்டுக்காரர்களின் இழுத்தடிப்பு, மழைத் தொல்லை, பத்துப் பதினைந்து விதமான யோசனைகள், ஆலோசனைகள். தொழில்களுக்கும் வீடு கட்டலுக்குமிடையே ஓடி ஓடி, மனைவியின் மூச்சிரைப்பு அவருக்குக் கூடு பாய்ந்து விட்டது. 17 லட்சத்துக்குப் போட்ட எஸ்டிமேட் தொகை முடிந்தும், வீடு முக்கால் பாகம்தான் முடிந்திருந்தது. பூர்த்தியாக்க வேண்டுமென்றால் இன்னும் ஏழெட்டு லட்சங்கள் வேண்டும். வீட்டுப் பத்திரம், காட்டுப் பத்திரம், அந்தப் பத்திரம், இந்தப் பத்திரமென்று எல்லாப் பத்திரங்களும் ஏற்கனவே பத்திரமாக வங்கிகளிலும் வட்டிக்காரர்களிடமும் இருந்தன. மிச்ச மீதிகளையும் வாரிச் சுருட்டித்தான் வீட்டுப் பணியில் இறங்கியிருந்தார். வட்டிக் கணக்கை நினைக்கும்போது அள்ளை வயிறு முதல் அள்ளை வயிறு வரை கலக்கியது. பகல் முழுக்க நெட்டோட்டம், குறுக்கோட்டம்; ராத்திரி முழுக்க பேனா, பேப்பர், கால்குலேட்டர்களை வைத்துக்கொண்டு கணக்குப் பரிசீலனை. எப்படிக் கூட்டிக் கழித்து, எப்படிப் பெருக்கி வகுத்தாலும் ஆறு இலக்கத் தொகைகள் பயமுறுத்தின.

உறக்கமின்மையாலும், ‘உள்ளிருப்பா’லும் சிவந்த கண்களோடு அவர் புலம்பும்போதெல்லாம் கந்தசாமி சொல்வான்: “எதுக்குங் மொதலாளி வெசனப்படறீங்? ஊடு கட்றதுன்னா செலவு ஆகத்தானுங்ளே செய்யும். அதுல ஒரு கருத்து என்னுன்னாங் மொதலாளி,… நீங் இதைமே யேவாரமாட்டவே பாக்கறீங். யேவாரத்துல காசு போட்டாக் காசு லாவத்தோட வரும். ஊட்டக் கட்டுனா அப்புடீங்ளா? ஆனாட்டியும் மொதலாளி, நீங் வேண்ணாப் பாருங்,… நம்ம புதூட்டக் கட்டறது யேவாரம்னே வெச்சுக்கலாம். கட்டி மூஞ்சு குடி போனவிட்டுப் பாருங், உங்குளுக்கு செந்தூக்கு தூக்கீரும்.”

“அப்புடீங்கற?”

“பின்னியென்னுங் மொதலாளி! மூத்தாசாரி சாமி லேசுப் பட்டவருங்ளா? நானி மகான். நம்ம அனுவத்துலர்ந்தே கருத்துக் கண்டுக்குங். முரங்க மரம், மாதளாஞ் செடி வெட்டி, தலவாசச் சன்னல் எஸ்டாச் சன்னல் வெச்சதுமே மாசி மாசத்துலர்ந்து சின்ன மொதலாளியம்மாவுக்கு எளப்பில்ல பாத்தீங்ளா?”

பனிக்காலம் போய்விட்ட ஓர்மையின்றி அவரும் ஆமாஞ்சாமி போட்டுக்கொண்டார். பெரிய சீவன்களின் மந்தக் காதோ, காட்ராக்ட் கண்களோ, மகனின் கொன்னவாயோ, எழுப்புதல் பெருவிழாவில் பால் தினகரன் தொட்டாற் போல் குணமாகிவிடும் என்று விசுவாசிக்கிற அளவுக்கு அவர் அந்த விசுவாசியொன்றும் அல்ல. வியாதிகள் வேறு, இயற்கை ஊனங்கள் மற்றும் மூப்புத் தேய்மானங்கள் வேறு என்று புரிந்தவர்.

மேலும் ஆசாரிச் சாமிகளின் சாஸ்த்ர விற்பன்னத்தில் அவருக்கு, அவரே நினைத்தாலும் மறுக்க முடியாதபடி நம்பிக்கை. க்ருத்தியமாக எது எது எப்படிச் செய்யப்பட வேண்டுமோ, அப்படித்தான் செய்யப்பட வேண்டும் என்பதில் அவரும் விடாப்பிடியாக இருந்தார்.

வேலை நமஸ்தம் செய்யும்போது பாலக்கால் நட்டி பூஜை செய்த பிறகு, முதலில் தென்மேற்கு மூலையில்தான் முளை நடவேண்டும். பிறகு மூலை மட்டம் வைத்து கயிற்றை இழுத்துப் பிடித்து தென்கிழக்கு மூலை. அடுத்தது தென்மேற்கிலிருந்து வடமேற்கு, அங்கிருந்து வடகிழக்கு. அஸ்திவாரம் தோண்ட வேறு வித திசைக் கணக்கு. கட்டுவதற்கு வேறொன்று. வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கில் கிணறு வெட்டி, அதிலிருந்துதான் நீர் எடுத்து வீடு கட்ட வேண்டும். கிணறு வேண்டாமென்றால் போர் போட்டுக்கொள்ளலாம். அதுவும் முடியாதென்றால் அங்கே தொட்டி கட்டி, அதில் நீர் சேமித்து, பிறகு பயன்படுத்த வேண்டும். வேறு இடங்களிலிருந்து கொண்டு வரும் நீரை நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது. நாள்தோறும் வேலை முடியும்போது தென்மேற்குப் பகுதி உயர்ந்திருக்க வேண்டும். கட்டுமானப் பொருட்களை மேற்கிலோ, தெற்கிலோதான் போட்டு வைக்க வேண்டும்.

இப்படி வீடு கட்டுதலின் ஒவ்வொரு அம்சங்களிலும் சாஸ்த்ரங்கள் இருந்தன. அத்தனையும் ஒரே சமயத்தில் சொன்னால் மறந்துவிடுமென்று, அவ்வப்போது வந்து, நேரடியாகப் பார்த்து, முறைமைகளும் திருத்தங்களும் சொல்லிக்கொண்டிருந்தார் மூத்தாசாரி. அங்கிருந்து வேலை மெனக்கெடுத்தி இங்கு வருகிறவரை வெறுங்கையோடு அனுப்ப முடியுமா? நானி மகானுக்கு ஐநூற்றொன்றாவது தட்சணை கொடுக்காமல் எப்படி?

அவருக்குக் கொடுத்த தட்சணைக் கணக்கு பீதாம்பரம் முதலாளியின் செலவுக் கணக்குப் பேரேடுகளின் பக்கங்களை ஆக்ரமித்துக்கொண்டேயிருந்தது. திருப்பதி உண்டியலில் பணத்தை எண்ணிப் போடக் கூடாது; அப்படிச் செய்தால், திரும்புகாலிலேயே மீதிப் பணம் திருடுபோகும் அல்லது தொலைந்துபோகும் என்பதான கருத்துக் கதைகளை கந்தசாமி சொன்னான். எனவே, அவர் எழுதி வைத்ததோடு சரி, மொத்தக் கணக்குப் பார்க்கவில்லை. இருந்தாலும் தோராயமாக மனக் கணக்கில் கூட்டியபோது, வீடு கட்டும் செலவில் கணிசமான சதவீதத்தை வாஸ்துவே விழுங்கிவிட்டது தெரிந்தது.


வீடு கட்டி முடித்தபோது பீதாம்பரம் முதலாளியின் வங்கி இருப்புகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தன. கடன் பத்திரங்களோ மிகுந்த கவலைக்கிடம். இந்த வயசுல நகை நட்டுப் போட்டு மினுக்கவா போறன்? புள்ளைக்குத்தானே…! அவ பெருசாகும்போது பாத்துக்குலாம் என்று இளைப்புக்கார முதலாளியம்மா, துக்கம் விசாரிக்கும் பெண்களுக்கு ஆறுதல் சொல்லலானாள்.

ஆனாட்டியும் பார்க்கிறவர்கள் எல்லாருமே வீடு ஐஸ்வர்யமாக இருக்கிறது, லட்சுமிக் களை தாண்டவமாடுகிறது என்று சொல்லும்போது அவளுக்கும் ஆசுவாசம்; முதலாளியும் பட்ட கஷ்ட நஷ்டங்களுக்குப் பன்மடங்குப் பலன் வரப்போவதன் அறிகுறி என்று தேற்றிக்கொள்வார்.

கிரகப்ரவேசத்துக்கு நாள் குறித்து. பத்திரிகைகள் விநியோகித்தாயிற்று. மறுநாள் வைகறைப் பொழுதில் வாஸ்து பூஜையுடன் நவக்ரக சாந்தி, வாஸ்து சாந்தி ஹோமம் செய்து, இல்லத்தார் பிரவேசம் மற்றும் பால் காய்ச்சுதல். காலையில் விருந்து.

ஹோமம் முடிந்து தம்பதி சமேதராக வீட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முன்பு ஒரு பசுவைப் பிரவேசிக்கச் செய்வது உத்தமம் என்றிருந்தார் மூத்தாசாரி. பசு லட்சுமியின் அம்சம் என்பதால் பசுப்ரவேசம் லட்சுமிப்ரவேசம் என்பதாக ஐதீகமாம். அதற்கு ஒரு பசு பக்கத்தில் எங்கே இருக்கிறது என்று வீட்டில் கேட்டதும், இவர்கள் வீட்டு வேலைக்காரியின் வீட்டிலேயே பசுமாடு இருப்பது தெரிந்தது. அவளைக் கூப்பிட்டு பூஜை நேரத்துக்கு பசுவைக் கொண்டுவரச் சொல்லிக்கொண்டிருந்தபோதுதான் அவளது சின்ன மகள் பேரும் லட்சுமி என்பது முதலாளியின் ஓர்மைக்கு வந்தது. அப்போது அவரது மனதில் ஒரு யோசனையும் எங்கிருந்தோ எட்டிக் குதித்தது. அந்த லட்சுமியையே பசுவைக் கொண்டுவரும்படி செய்தால் பெயர்ப் பொருத்தமும் ப்ரமாதமாக இருக்குமே! லட்சுமியின் அம்சமான பசுவும், லட்சுமி என்ற பெயருள்ள குமரியும் வந்தால் லட்சுமியே வந்த மாதிரிதான்!

இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. அதனால் அவர் யாரிடமும் அபிப்ராயம், ஆலோசனைகள் கேட்டுக் குழம்பவும் இல்லை. மிகத் தெளிவாக அவரே முடிவெடுத்து, வேலைக்காரியிடம் சொன்னார்: “மாட்ட நீ கொண்டுட்டு வர வேண்டாம். சின்ன மககட்டக் குடுத்துத் தாட்டியுடு. அன்னேரத்துக்கு எப்புடித் தனியா அனுப்பறதுன்னு பாக்காத. வீதில லைட் இருக்கறதாச்சு. அப்பறம் நாங்களும் இங்கியேதான் ஓமம் நடத்திட்டிருப்போம். ஒரு வீதியுட்டு அடுத்த வீதிதான! சந்துக்குள்ள வந்தா, சாணி போட்டுக் கோமயம் பேயற தூரம்” என்று சொன்னார். அவளும் சம்மதித்துப் போய்விட்டாள்.

கோழி கூப்பட ஹோமங்கள் நடந்துகொண்டிருந்தன. இல்லத்தாரும் நெருங்கிய உறவினர்களும் மட்டும் இருந்தனர். அப்போது வெளியே, “ங்கோ…! ங்கோவ்…!” என்று பெண் குரல் அழைப்பு. புது வீட்டு முதலாளி வெளியே வந்துகொண்டே, “தாருது லட்சுமியா?” எனக் கேட்டு, “உள்ள வா!” என்று சொல்லிவிட்டார்.

“இல்லீங்கொ… லச்சுமியோட அக்கா!” என்று பதில் வந்தது. முதலாளிக்கு நெஞ்சத் துடிப்பு ஒரு கணம் ஸ்தம்பித்தது. பின் படபடவென குறுக்கோட்டம்

நெட்டோட்டம் ஓடலாயிற்று. வாசலில் வேலைக்காரியின் மூத்த மகள் நின்றுகொண்டிருந்தாள்.

“லச்சுமிக்கு சிக்கனுக்குனியாக் காச்சல் வந்து ராத்திரீலருந்து அனத்திட்டுக் கெடக்கறாளுங் மொதலாளி. கை முளி, கால் முளி, இடுப்பு முளின்னு முளி முளியா வலிக்குமாச்சு. நீங்கதான் ங்கம்மாள மாடு கொண்டுட்டு வரவேண்டாம், மககட்டக் குடுத்துடுன்னு சொன்னீங்ளாமா. அதனாலதானுங் அவளுக்கோசரம் என்னையத் தாட்டியுட்டுதுங்.”

காரணங்களை அவர் ஆராயப் புகவில்லை. காரியம் மட்டுமே மனதில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. லட்சுமியோட அக்கா!

லட்சுமியோட அக்கா…

லட்சுமியோட அக்கா…


நாட்கள், வாரங்கள், மாதங்களாக அந்தக் குரல் பீதாம்பரம் முதலாளியைத் துரத்திக்கொண்டேயிருந்தது. லட்சுமியோட அக்கா…! லட்சுமியோட அக்கா…! அப்படியானால் மூதேவி. உள்ளே வா என்று அந்த க்ரகப்ரவேச வேளையில் அழைத்துவிட்டோமே,… அது பலித்துவிடுமோ…?

சதா நேரமும் இதே சிந்தனை. மூத்தாசாரி உட்பட எல்லோருமே, அப்படிச் செய்திருக்கக் கூடாது என்றே சொன்னார்கள். கலக்கம் அதிகமாகி, அவரால் தொழிலில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் போயிற்று. ஊண் உறக்கம் கொள்ளாமல் ஆறே மாதத்தில் ஆள் தேவாங்கின் எலும்புக்கூடாகிவிட்டார். கடன்காரர்கள் நெருக்கடி. தொழில்களை கவனிக்காததால் நஷ்டம். வட்டிக்கு வட்டி பெருகி, காய்கறி ஏற்றுமதி, அரிசி வியாபாரம், வளக் கடை, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ரைஸ் மில் என ஒவ்வொன்றாக முழுகின. புது வீட்டைப் பூட்டிவிட்டு பழைய வீட்டுக்கே வந்த பிறகும், அவரோ அவரது தொழிலோ பழையபடி எழுந்து நடமாடவே முடியவில்லை.

காரையும் அடிமாட்டு விலைக்கு விற்ற பிறகு கந்தசாமி வேறு முதலாளியை நியமித்துக்கொண்டான். இந்த சம்பவங்கள் குறித்து யாரிடமாவது பேச நேரும்போது அவன் கூறுவது இதுதான்: “கடைசியாச் சொல்ற கருத்த கெவனமாக் கேட்டுக்குங். விதிய மாத்த முடியாதுன்னு விதி இருந்துச்சுன்னா, அந்த விதிய மாத்தறக்கு விதியினாலதான் முடியும்.”

எனக்குப் புரியவில்லை. உங்களுக்காவது புரிந்தால் சரி.

– உயிர் எழுத்து, ஜனவரி 2008.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *