வாழ்க்கைத் துணை
திறந்திருந்த ஜன்னலின் வழியாகக் குளிர் காற்று வீசியது. அந்த அறைக்கு அது குளிர்ச்சியைக் கொடுத் தது. கட்டிலிலே படுத்திருந்தாள், உமா. அவளைத் தவிர அந்த அறையில் வேறு எவருமே இல்லை.
கட்டிலிலே படுத்திருந்தாலும் அவள் நித்திரை கொள்ளவில்லை. அது ரித்திரை கொள்ளும் நேரமுமல்ல. அந்த அறையிலே இருந்த குளிர்ச்சியை அவளின் உள்ளத்திலே காண முடியவில்லை.
அவளின் கண்கள் எதிரேயிருந்க மணிக்கூட்டையே பார்த்துக் கொண்டிருந்தன. என்றுமேயில்லாத வகையில் அவளின் பார்வையிலே ஒரு புதுமை.
‘டிங்…டாங்…’
மணிக்கூட்டிலிருந்து புறப்பட்டது ஒலி. அது அவ ளின் இதயத்திலே ஆழமாகப் பதிந்தது.
எப்பொழுது வரும் வரும் என்று ஆசையோடு எதிர் பார்த்தாள், நாலு மணியை. அதற்கு இன்னும் முப்பது நிமிஷங்கள் இருந்தன.
எத்தனையோ பொருட்கள், அவளுக்கு முன் இருந்தன. அவற்றில் ஒன்றினையாவது அவள் பார்க்கவுமில்லை; அதைப்பற்றி நினைக்கவுமில்லை.
மணிக்கூட்டின் பெரியமுள்ளின் அசைவிலேயே அவளின் கண்கள் ஊன்றிவிட்டன.
உலகத்தில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆசை இல்லாமலில்லை. அதற்கு உமா விதிவிலக்கானவளல்ல.
எல்லாரையும் போல உமாவுக்கும் ஒரு ஆசை.
அவளின் அந்த ஆசை, நிறை வேறிவிட வேண்டும். அதைத்தான் அவள் விரும்பினாள். இந்த உலகத்தில் பெண்ணாகப் பிறந்து வாழ்ந்த இருபதுவருட வாழ்க்கையில் அதைப்போல வேறு ஆசையை அவள் ஏற்படுத்திக் கொள்ளவும் இல்லை. ஏற்படுத்திவிட முடியாது என்றும் எண்ணினாள். எவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தை அவள் தனது ஆசைக்கு அளித்து விட்டாள்.
அவளின் அதே ஆசையை உடையவர்கள், ஆயிரக் கணக்கானோர் இருந்தனர். அவர்கள் அவ்வாசையில் வெற்றிக் கொடியை ஏற்றிவிட்டதை அவள் அறியாமலில்லை. அவ்வெற்றிக் காட்சிகளை அவள் கண்ணாரக் கண் குளிரக் கண்டுமிருக்கிறாள். இக் காட்சிகள் அவளின் ஆசைத்திரியைத் தூண்டி விட்டன.
அவளுக்கோ வயதுமாகி விட்டது. “குமர்ப் பிள்ளையை எவ்வளவு காலத்துக்குக் கூடத் துக்குள்ளையே வைச்சிருக்கிறது?” – அவளுக்குக் கலியா ணம் நடக்கவேண்டும். ஒருவனை அவள் கைப்பிடிக்க வேண்டும். அதைத்தான் ஊர்விரும்பியது. ஊர்வாயை மூடமுடியுமா?
வேலையில்லாதவர்கள் முச்சந்திகளிலே, ‘லைட் போஸ்ட்டு’களின் கீழே, கூடியிருந்து கதையளப்பதற்கும் விஷயம் வேண்டுமல்லவா?
ஆனால் எல்லாவற்றிற்கும் அவள் முந்தி விட்டாள்.
அன்று-
ஊர்பேசவில்லை. உறவினர் கேட்கவில்லை – பெற்று வளர்த்து உரிமை பேசும் தாய்தந்தையரே அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை.
ஆனால் அதைப்பற்றி அவள் சிந்தித்து விட்டாள்.
எல்லாரையுமே அவள் முந்தி விட்டதற்கு அவளைப் பொறுத்தவரையில் காரணம் இருக்கத்தானே வேண்டும்?
அது-
அவளின் அங்கத்திலே ஒருகுறை.
அந்தக்குறை அவளோடு ஒட்டிப் பிறந்து விட்டது.
“வினைப் பயனால், அவளை அப்படிக் கடவுள் படைச் சுட்டான்!” – அவளிலே இரக்கப்பட்டவர்கள் சமாதான முந் தேடிக்கொண்டார்கள்.
ஆனால் அந்தக்குறை அவளின் உள்ளத்திற்கு ஒரு நிறைவை ஏற்படுத்திவிடவில்லை. ”இந்த நொண்டியை எவனாவது கலியாணஞ் செய்வானா?’ திருப்பித் திருப்பி இதேகேள்வி அவளின் உள்ளத்தை உலுப்பியது. விடை தேடும் முயற்சியிலே அவள் இரவைப் பகலாகக் கழித்த நாட்களை நினைவிலே வைத்திருக்க முடியாது.
கலியாணஞ்செய்து வாழ்க்கை நடாத்துகின்ற எத்த னையோ சோடிப்புறாக்களை உமா கண்டிருக்கிறாள். அவர் களில் எவருக்காவது தன்னைப்போலக் குறையிருப்பதாகக் காண முடியவில்லை.
அவள் படிப்பிக்கும் ‘சென்ரல் காலேஜ்’ஜில் கூட அவள் ஒருத்திக்குத்தான் அந்தக்குறை. இதனால் அவளின் சக ஆசிரியர்களினதும், மாணவர்களினதும் அனுதாபத்தையும் பெற்றாள். அவளுக்காக இரங்கியவர்கள் பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல வெளி உலகத்திலும் இருந்தனர். ஆனால் அவளின் உள்ளத்திலே மட்டும் ஒரு நம்பிக்கை வேரூன்றி வளர்ந்தது.
“என்னைப்போலக் குறையுள்ள பெண்கள் இல்லறச் சோலையிலே மணம் வீசும் மலர்களாய்த் திகழ முடியாது! அந்தத் தேனமுதின் சுவையை அள்ளிப் பருகமுடியாது!” இதை நினைத்து நினைத்து உள்ளம் உருகினாள்.
“அந்த நறுமண மளிக்கும் மலராக மாறமாட்டேனா”
“அந்தத் தேனமுது எனக்குக் கிடைக்காதா?”
ஏங்கினாள் அவள்.
“நான் மட்டுந்தானா இந்த உலகத்திலே ஒரேயொரு நொண்டி? ஏன், கிளாக்கர் ஏகாம்பரத்தின் மகள் மல்லிகா என்னவாம். அவளுக்கும் வயசாகிவிட்டது. இண்டைக்கும் அவள் நித்தியகன்னிதானே?” தன்னைப்போன்ற உலகத்தையே அவள் கண்டாள்.
“என் எதிர்கால வாழ்க்கையிலே நான் ஒளியைக் காண முடியாதா? என் எண்ணமெல்லாம் மின்னலாகிப் போகவேணுமா?”
திருப்பித் திருப்பித் தன்னையே கேட்டுக்கொண்டாள்.
உள்ளத்திலே கொந்தளிப்பு-
அதற்கு அமைதியைத் தேட ஒரு முடிவை உலகக் தான் அவளுக்குக் கொடுத்தது.
‘கன்னியாகவே வாழவேண்டும்’-
சூரியன் காலையிலே தோன்றி மாலையிலே மறைகிறான். அவளால் ஏற்படுத்தப்பட்ட அந்த ஆசை அவளின் முடிவால் மறைக்கப்பட்டுவிட்டது.
அன்று ஞாயிற்றுக்கிழமை-
‘கால்பேஸ்’ மைதானம்.
இருள் மங்கை தனது நீண்ட கூந்தலை விரிக்கின்றாள்.
சூரியன். இன்னுங்கொஞ்ச நேரத்திற் கடலினுள் முற்றாக மறையப்போகின்றான்.
ஆனால் அன்று தன்னைப் பொறுத்தவரையில் அந்த வேளை, சூரியனின் எழுச்சியாக அமையுமென்று சிறிதளவேனும் உமா எண்ணவில்லை.
தனது அக்கா மாலதியுடன் மைதானத்திற் புற்றரை வழியாக நடந்து வந்தாள், உமா.
ஞாயிற்றுக்கிழமை கால்பேசில் கூடும் கூட்டத்திற்கு அளவேயில்லை. இல்லற இன்பத்தை அனுபவித்த ‘பெரியவர்’கள்-இளஞ் சோடிகள்-பருவப் பெண்கள்-இளைஞர்கள்-பச்சிளம் பாலகர்கள்-இவர்களின் கூட்டம் மைதானத்தையே மறைத்துவிடும்.
அங்கு தமது அன்புக் கணவருடன் அழகுநடை போட்டுவரும் அஞ்சொல் மங்கையரைக் கடைக்கண்ணாற் கவனித்துவந்த உமாவின் பார்வை, திடீரென ஒரு பக்கந் திரும்பியது.
கலியாணஞ் செய்து இன்னும் அந்த மணக்கோலங் கலையாத களையுடன் செல்லும் இருவர், கிளிமொழிபேசி இன்பமயமாய்ச் செல்லும் அந்தக் காட்சிதான், அவளின் பார்வையை இழுத்துக் கொண்டது.
கால் பேஸ் மைதானத்திலே இதைப்போல எத்தனை யோ சோடிகளைப் பலமுறை கண்டு புளித்துப்போன அவளின் கண்களுக்கு இவர்களைக் குறிப்பாகக் கூர்ந்து கவனிப்பதற்கு அப்படி என்ன தான் நடந்து விட்டது?
அந்தச் சோடியிலே அவளின் பார்வையைச் கவர்ந்த அந்த மங்கைக்கும் உமாவுக்கும் ஒரு ஒற்றுமை.
அவளின் அன்றைய ஏக்கத்தைச் சிதறடித்துவிட்ட ஒற்றுமையைக் கண்டாள். எது நடக்காது என்று எண்ணினாளோ அந்த எண்ணத்தை மண்ணோடு மண்ணாய் மறைத்து விட்ட ஒற்றுமையைக் கண்டாள்.
உலகத்திலே இல்லை என்று எண்ணினாள் ஒன்றினை. ஆனால் அது இருக்கிறது, என்பதை அவளின் கண்முன் எடுத்துக் காட்டிவிட்டது, அந்தக் காட்சி. அன்று அவளின் உள்ளத்திலே எழுந்த ஒரு உணர்ச்சிக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தினாள்.
இன்று, அவள் கண்ட ஒற்றுமை, அவளின். உள்ளத்தின் அடித்தளத்தில் இவ்வளவு காலம் உறங்கிக் கிடந்த அந்த உணர்ச்சிக்கு எழுச்சியை ஏற்படுத்தியது.
“என்னைப்போல அவளும் ஒரு நொண்டி. அவளின் இல்லற இன்பத்திற்கு ஒரு துணைவன் கிடைத்து விட்டான்!”
நொண்டிக்கு எவன் மாலை சூட்டுவான், என்ற எண் ணத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டாள். “எனக்கும் ஒருதுணை கிடைக்காமலா போயிடும்!” – சூரியன் உதித்து விட்டான் மீண்டும். தனது ஆசைக்கு உரத்தைப் போட்டுக்கொண்டாள். அந்த உரத்திலேதான் அவளின் ஆசைக்கனவின் வளர்ச்சி அமைந்தது.
அக்கா இருக்கும்பொழுது உடன் பிறந்த தங்கைக்குக் கலியாணம் நடப்பதை எவர்தான் விரும்புவார்கள். “ஒருவரைக் கைப்பிடித்து வாழவேண்டும்!” என்று அவளின் அக்கா எண்ண முதலேயே உமா எண்ணிவிட்டாள். அந்த எண்ணத்தை யாரிடமும் அவள் கூறிவிடவில்லை. அதனால் தன்னை அடையும் பழிச்சொல்லை ஏற்பதற்கு அவள் தன்னைத் தயார் செய்யக் கனவிலும் எண்ணவில்லை.
ஆனால் அக்காவுக்கு விரைவிலே கலியாணம் நடந்திட வேண்டும், என்று அவள் வேண்டிக்கொண்டது அவளுக்கு மட்டுந்தான் தெரியும்.
அவளின் நெடு நாட் பிரார்த்தனையும் விரைவில் நிறைவேறியது. மூத்த மகள் மாலதிக்கு ஒரு துணைவனைத் தேடிக்கொடுத்தார், அவளின் தந்தை முத்துலிங்கம். இல்லறச் சோலையிலே புது மலராக மாறிவிட்டாள், மாலதி. நறுமலரிலிருந்து தேனைச் சுவைப்பதற்கு ஒரு வண்டு – சந்திரசேகர்.
அத்தான் சந்திரசேகரும், அக்கா மாலதியும் இன்பமாய்க் காலங்கழிப்பதைக் கண்டாள், உமா. அவர்களின் அன்புப் பிணைப்பினால் உமாவின் ஆசை, தீச்சுடர் விட்டுப் பிரகாசித்தது. அதை அவளாற் கட்டுப்படுத்திவிட முடியாது. அந்த எண்ணத்தைக் கனவிலும் அவள் நினைக்கவில்லை.
அவளின் எண்ணம்போல் அக்காவுக்கும் கலியாணம் நடந்துவிட்டது. உமாவும் ஒருவனைக் கைப்பிடிக்கவேண்டும்; அதைத்தான் அவளும் விரும்பினாள். அவளின் ஆசை வெள்ளம் குமுறிப் பாயும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் அவளோ அதை எவரிடமாவது தெரிவிக்க முடியாத நிலையில் தத்தளித்தாள்.
நாணம் – பெண்களின் இயற்கைக் குணத்தை யாரால் மாற்றமுடியும். அதற்குள் முத்துலிங்கமே பேச்சு வார்த்தையை ஆரம்பித்துவிட்டார். வரன் தேடும் படலத்தில் இறங்கினார். இதைக் கேள்விப்பட்ட உமா ஆனந்தத்தில் துள்ளினாள்.
‘என் ஆசைக் கனவு என்று நனவாகும்’ என்று ஏங்கிய அவள் ‘நனவாகும் நாள் கிட்டிவிட்டதே’ என்று மகிழ்ந்தாள்.
ஆசை வெள்ளத்தில் திக்குமுக்காடியவள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினாள்.
யாழ்ப்பாணத்திலே தனது மருமகனைத்தேடிய முத்துலிங்கத்தின் பொறுடபை, கரவெட்டித் தரகர் தணிகாசலம் வாங்கிக்கொண்டார். தேடிக் கொடுப்பதினால் தேடிக் கொண்டு, அதன் மூலம் தமது வாழ்க்கை ஓடத்தைச் செலுத்துபவர்கள் தான் தரகர்கள். இவர்களில் தணிகாசலமும் ஒருவர்.
“வெள்ளிக்கிழமை ஒரு முடிவோடு கொழும்புக்கு வாறன்! பின்னேரம் நாலுமணியளவிலை வீட்டிலை வந்து உங்களைச் சந்திக்கிறன்!” தரகரின் யாழ்ப்பாணக் காகிதம் முத்திலிங்கத்தாரிடங் கிடைத்தது. காகிதமுங் கையுமாக அந்தச் செய்தியை மகளிடம் தெரிவிப்பதற்காக அறையை நோக்கித் துள்ளிக்கொண்டே ஓடினார். இரண்டாவது மருமகனையுங் கூடிய விரைவிற் காணப்போகிறோமே என்ற நம்பிக்கை அவருக்கு.
வெள்ளிக்கிழமை எப்போது வருமென்று ஆவலோடு எதிர்பார்த்த உமாவைத் தேடி அந்த நாளும் வந்துவிட்டது. நாலு மணியை எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருந்தாள், உமா. இன்னும் முப்பது நிமிடங்கள் இருந்தன. ஆனால் அவளுக்கு ஒரு சந்தேகம்.
“தரகரின் முடிவு நல்ல முடிவாய் இருக்குமா, இல்லாவிட்டால் ..? சீச்சி, அப்படியிருக்காது. அதுவும் இண்டைக்கு வெள்ளிக்கிழமை” – அவளுக்கு வெள்ளிக்கிழமையிலே ஒரு நம்பிக்கை.
அப்பொழுது வீட்டில் அவளைத் தவிர முத்துலிங்கம் மட்டுமே இருந்தார். தரகரை எதிர் நோக்கிச் சுருட்டைப் புகைத்த வண்ணம் சாய்மனையிற் சாய்ந்திருந்தார், அவர்.
மாலதியோ தாயோடு கொட்டாஞ்சேனை மாரியம்மன் கோயிலுக்குப் போயிருந்தாள். அவர்களை நாலு மணிக்கு முன்பே வீட்டுக்குத் திரும்பிவிடும்படி பிடிவாதமாய்ச் சொல்லியனுப்பியிருந்தாள், உமா.
திருகோணமலைத் துறைமுகத்திலே ‘ஸ்ரோர் கீப்பரா’ யிருக்கும், அவளின் அத்தான் சந்திரசேகரரும், வீட்டிலில்லை. இன்னும் இரண்டொரு மாதங்களில் தந்தை என்ற அந்தஸ்தை அடையப்போகும் சந்திரசேகர், உமாவுக்கு மாப்பிள்ளை நிச்சயமாகிவிட்டால் தனக்குக்கடுதாசி போடும்படி மாமனாருக்கு எழுதியிருந்தான்.
மணிக்கூட்டையே பார்த்துக்கொண்டிருந்த உமாவுக்குத் திடீரென அத்தானின் நினைவு ஏற்பட்டது.
“அத்தானைப்போலவே எனக்குக் கணவராய் வரப் போற அவர் இருக்கவேணும்! அத்தானையும் அக்காவையும் போலவே நானும் இன்பமாக…!” எதிர்கால இல்லற இன்பத்தை மனக் கண்ணினாற் பார்த்தாள். வெளிக்கத வைத் தட்டுஞ் சத்தங் கேட்டது. தனது எண்ணத் திரையை விலக்கிவிட்டு மணிக்கூட்டைப் பார்த்தாள். இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன.
“தரகர் இப்பவே வந்திடுவார். அம்மாவும் அக்காவும் இன்னும் வரவில்லையே? அதற்குள்ளாக…”
கதவு திறக்குஞ் சத்தங் கேட்டது. படுத்திருந்தவள், நொண்டிக்கொண்டே அறைக் கதவடிக்கு நடந்து போய்க் கதவின் நீக்கலுக்குள்ளாக எட்டிப் பார்த்தாள், ஆவலோடு. வீட்டு வாசலிலே – பேப்பர்க்காரன் நீட்டிய பின்னேரப்பேப்பரை வாங்கிக்கொண்டிருந்தார், முத்துலிங்கம். நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டே கட்டிலுக்குத் திரும்பி வந்தாள், உமா.
அவளுக்கு ஒரு திருப்தி.
பெரியமுள் பதினொன்றில் வந்து விட்டது. நாலு மணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. மணிக்கூட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள், அவள். மீண்டுங் கதவைத் தட்டுஞ் சத்தம்; தரகர் தான் வந்திருக்கவேண்டும் என்று எண்ணி மீண்டும் கதவு நீக்கலுக்குள்ளாகப் பார்வையைச் செலுத்தினாள்.
சாய்மனையில் பேப்பர் பார்த்துக்கொண்டிருந்த முத்துலிங்கம் வாசலை நோக்கி நடந்தார். கதவு இன்னும் திறக்கப்படவில்லை.
“நேரமாச்சுது கட்டாயமாக அவராத்தான் இருக்க வேணும்! இந்த நேரத்திலை தானா அவை கோயிலுக்குப் போறது. கோயிலும் மண்ணாங்கட்டியும்!” அவளுக்கு ஆத்திரம் பொங்கியது. அந்த ஆத்திரத்தில், அவளே புனிதமென மதிக்கின்ற கோயிலைத்திட்டினாள். மணிக்கூட்டைப் பார்த்தாள்.
நாலு மணிக்கு நாலு நிமிஷம் இருந்தது.
வாசலைப் பார்த்தாள் உமா. அங்கே – ஒரு தந்திக் காரன்.
‘தந்தியா? ஒருவேளை தரகர் தன் முடிவைத் தந்தியில் அடிச்சிட்டாரோ? அல்லது..’ அவளின் மனதிலே பலவிதமான எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் உதித்தன.
“ஐயோ மேளே! நீ விதவையாகிட்டியா? இதற்குத் தானா உனக்கு நான் கலியாணஞ்செய்து வைச்சேன்….! அம்மா மாலதி! உனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு நீ என்னத்தைச் சொல்லப்போகிறாய்…?” என்று கூறிக் கொண்டே நடுங்குங் கைகளால் மாறி மாறித் தலையிலடித் துக்கொண்டு சாய்மனையில் தொப்பென்று விழுந்தார், முத்துலிங்கம். பேய்க் காற்று வீசியது. படார்’ என்ற சத்தத்துடன் திறந்திருந்த கதவு மூடிக்கொண்டது.
நொண்டிக்கொண்டே அங்கு வந்த உமா பேயறைந்தவளாகி விட்டாள். சிலையாகி நின்ற அவளின் காலடியில், அவளின் அக்கா விதவையாகிவிட்டாள் என்ற செய்தியைத் தெரிவிக்கும் அந்தத் தந்தி இருந்தது.
அவளின் எண்ணத்திலே ஏற்பட்ட சிந்தனைச் சிக்கல்களை அவிழ்க்க முடியாத நிலையில் அவள் தத்தளித்தாள், திக்குமுக்காடினாள்.
“எனக்குக் கலியாணமானபின், நொண்டியாகிய என் வாழ்க்கையிலும், துணைவனாக ஒருவனைத் தேடிய பிறகு. அக்காவுக்கு நடந்ததைப் போல எனக்கும் நடந்திட்டால்…?”
“விதவையாகி விட்ட அக்காவையும், பிறக்கப்போகும் குழந்தையையும், எதிர்காலத்தில் யார் காப்பாற்றப் போகிறார்கள்? அவர்களின் எதிர்கால வாழ்க்கை?”
“எனக்குக் கிடைக்கும் சம்பளத்தைக்கொண்டு என் அக்காவின் வாழ்க்கைக்குத் துணை செய்ய முடியாதா?”
“ஆனால், நான் கலியாணஞ் செய்தால் இந்தக் கடமையைச் சரிவர செய்யமுடியுமா?”
“அதற்காக நான் கலியாணஞ் செய்யாமல் இருக்க முடியுமா?”
“அந்த இன்பம் எனக்குக் கிடைக்காதா?”
“அக்காவுக்கு நடந்தது எனக்கும் நடந்தால்?”
“என் துணைக்காக என் அக்காவின் வாழ்க்கை பாழாக வேண்டுமா?”
“வேண்டாம் . வேண்டாம்!”
உமாவின் வாழ்க்கைக்குத் துணை வனைத் தேடிய தரகர் தணிகாசலம், தன் முடிவைத் தெரிவிக்க வருவதற்குள்ளாகவே, தனது ஆசையை அர்ப்பணித்து விட்டாள்; தரகரின் வருகையை அர்த்தமற்றதாக்கி விட்டாள் ; ஆமாம், தன் அன்புச் சகோதரியின் வாழ்க்கைத்துணைக்காக அவள் தனது ஆசையை அர்ப்பணித்துவிட்டாள்.
“டிங்…டாங் … டிங்…டாங்.. டிங்.. டாங் …….டிங்… டாங்…” மணிக்கூட்டிலிருந்து நாலுமணிக்கு அறிகுறியாய் புறப்பட்ட ஒலி அவளின் இதயத்தின் அடித்தளத்தில் உறைந்துவிட்டது. எதிரொலி கேட்கவில்லை.
அதைத் தடைசெய்துவிட்டது, அவளின் தியாகம். கதவை யாரோ தட்டினார்கள்.
ஆனால் அவளோ, வாசலைப் பார்க்கவில்லை.
அவளின் ஆசை மூடப்பட்டு விட்டதைப் போலக் சதவும் மூடப்பட்டேயிருந்தது.
– கதைப் பூங்கா – பல்கலை வெளியீடு, பேராதனை, இலங்கை – முதற்பதிப்பு ஜனவரி 1962
க.நவசோதி: குழந்தை இலக்கி யத்தை வளர்க்கவேண்டும் என்ற இலட்சியமுடைய இவ ரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்பன சுதந் திரன், வீரகேசரி, தினகரன், சஞ்சிகை, தமிழோசை, விவேகி, கலா நிதி, கலைமதி, வெண்ணிலா, சிறுவர் சுடர், மாணவ முரசு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன; வெண் ணிலா, தமிழோசை, என்பன இவர் நடாத்திய பத் திரிகைகள்; இலங்கை வானொலியில் இவரது கட்டுரை, கவிதை, நாடகங்கள் இடம்பெற்றுள்ளன; கொழும்பைச் சேர்ந்த இவரது புனைப்பெயர்-“ஆவிகன்.”