வானமெல்லாம் ஆசைக் காற்றாடி





(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம்-10
மாமனார் ஈசுவரனோடு நடத்திய உரையாடல் ஒரு தொந்த யுத்தமாகப் பாரதிக்குத் தோன்றினாலும் அவருடைய வார்த்தைகள் மெல்ல மெல்லச் சிந்திக்க வைத்தன. அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், அவளுடைய மேற்படிப்பு மாபெரும் விபரீதங்களுக்கு விதை விதைக்கும் என்பதை உணர்ந்தாள்.

இரண்டு ஆண்டுகள் நிச்சயமாக அவள் இந்த வீட்டில் இருக்கமாட்டாள். அதற்குள அவளைப் பற்றிய விமர்சனங்கள் நடந்து முடிந்துவிடும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புகுந்த வீட்டிலேயே இடமே இல்லாமலும் போகலாம். பாரதி இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை எனறாலும் அம்மா – அப்பாவுக்கு நிச்சயமாகப் பதில் சொல்லியே ஆகவேண்டும். என்னதான் நாராயணனும், ஈசுவரனும் நல்லவர்களாக இருந்தாலும். அவர்களுடைய கௌரவமும், மானமும் அவளால் பாதிக்கப்படும்போது அடிபட்ட புலிபோல மாறுவார்கள். ஆனால் என்ன செய்ய அவர்களால் இயலும்? விவாகரத்துக்கு மேல் எதையும் செய்ய முடியாது. அவளுக்கு இந்தத் திருமணத்தில் ஆரம்பத்திலிருந்தே நாட்டமோ, விருப்பமோ இல்லை. அம்மாவின் உந்தலிலும், அப்பாவின் கெஞ்சலிலும் அவள் பலவீனப்பட்டு ஓர் அவசரமான முட்டாள்தனமான முடிவை எடுத்துவிட்டாள். மேற்படிப்புக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையையும் அம்மா கிளறிவிட்டாள்.
இப்போது மேற்படிப்புக்குச் சம்மதம் இல்லை என்று நாராயணனும், ஈசுவரனும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள். இரண்டு பேர்களையுமே அவளால் எதிர்த்துச் செயல்பட முடியும். மனைவிக்கு எல்லா சுக, சௌகரியங்களையும் அளிக்க முன் வரும் கணவர், நாராயணன் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கண்டிப்பாக இருக்கிறான் என்றால் என்ன காரணம்? அவனுக்கு தாம்பத்தியம் மிகவும் அவசியம். அவளுக்கும் தேவைதான். ஆனால் அதற்கு அவசரமில்லை. ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் வாங்கிய பிறகு நாராயணன் விரும்பும் தாம்பத்தியத்தைக் கொடுக்கலாமே? ஆனால் அதுவரையில் அவன் காத்திருப்பானா? ஈசுவரனும், தங்கம்மாவும் காத்திருப்பார்களா?
ஒன்றை மட்டும் அவள் அவள் ஒப்புக் கொண்டாள். குடும்பத்தின் விருப்பத்துக்கு மாறாக அல்லது எதிராக அவள் செயல்பட்டால் ஊர் சிரிக்கும். அவளைப் பார்த்துச் சிரித்தால் அவள் கவலைப்படமாட்டாள். கொடி கட்டிப் பறக்கும் ஒரு கௌரவமான பணக்காரக் குடும்பத்தைக் கண்டு சிரிக்கும். மறுபடியும் நாராயணனுக்குப் பெண் கொடுக்க அதே அந்தஸ்தில் உள்ள எவரும் முன் வர மாட்டார்கள். மெத்தத்தில் குடும்ப மானம், பறக்க நாராயனனுக்குத் துரோகம் செய்வதுபோல நடந்து கொள்ள அவளே காரணமாவாள்.
இப்படிப்பட்ட தண்டனையை பாரதி நாராயணனுக்கு தன்னையும் மீறி அளிக்கத் துணிகிறாள். இது அவசியம்தானா?
டாக்டர் பட்டம் வாங்கும் எண்ணத்தையே கை வி்ட்டால்? நினைத்துப் பார்க்கவே பாரதிக்குப் பிடிக்கவில்லை.
இதே பாலக்காடு.
இதே பள்ளிப்புரம்.
இதே வீடு.
உப்புச்சப்பில்லாத வாழ்க்கை. நாள்கள் நகராது. அவள் நகர்த்த வேண்டும். சகஸ்ரத்தின் சரித்திர புராணங்களைக் கேட்கவேண்டும். அத்தையின் சொல்லம்புகளுக்கு எதிர்க்கணை விடவேண்டும் பாட்டி பழைய கதைகளுக்கு இழுத்துப் போவாள். நாராயணன் என்கிற கணவன் வருவான்; போவான். ஓர் இரவு இல்லாவிட்டால் ஓர் இரவு முதல் இரவாக அமையும். யார் கண்டார்கள். அவள் தாய்மைக் கோலத்துக்கே ஆளாக வேண்டி வரும்.
இந்தக் கசப்பான வாழ்க்கை எங்கே? ஆங்கில இலக்கியம் எனும் மகா சமுத்திரத்தில் மூழ்கித் திளைத்து முத்துகள் பலவற்றை எடுத்து ரசிப்பது எங்கே?
சற்றே மறந்து போயிருந்த தேவகி மீண்டும் கண் முன் வந்தாள். அவள் டெலிபோன் செய்தால் உடனே அவள் வீட்டுக்குச் செல்லவேண்டும். ஒருவேளை அவளுடைய பிஎச்டிக்கு தேவகியே வழி வகுக்கலாம்; ஒரு கருவியாக அமையலாம்.
அவளுடைய கண்ணிதழ்கள் சோர்வுற்று மெல்ல மெல்ல இறுகிக் கொண்டன. ஆனால் அப்போதும் மன உறுதி கனவில் தலை நீட்டியது.
கண் விழித்தபோது காலை வெயில் ஜன்னல் மூலமாக அறையை ஒளிமயமாக்கியது.
பாரதி எழுந்தாள். முந்தின நாள் தாமதமாக எழுந்தமைக்கு பல்லோரும் முகம் சுளித்தார்கள். இன்றும் சுளிக்கப் போகிறார்கள். அவள் கவலைப்படமாட்டாள்.
மாடிப் படியில் இறங்கி முன் தாழ்வாரத்தை அடைந்தாள். தரைமேல்தரைமீது சப்பணமாகத்தாத்தா உட்கார்ந்திருந்தார்.
அவரைப் பாராமல் பாரதி செல்ல முயன்றாள்.
“பொண்ணே”
நின்றாள்.
“என்ன தாத்தா?”
“தாத்தான்னா என்னமோ மாதிரி இருக்கு பாட்டாப்பான்னுதான் என்னைக் கூப்பிடுவா!”
“இனிமே அப்படிக் கூப்பிடறேன்”
“நோக்கு ஒடம்பு சுகமில்லையோ?”
“அப்படி ஒண்ணும் இல்லே”
“க்ளாக்கைப் பாரு. மணி ஓம்பதே கால்… ஓம்பதே காள்…இத்தற நேரம் கழிச்சுத் தூங்கி எழுந்திருக்கலாமா?”
“நான் தூங்கப்போறப்ப ரொம்ப நேரம் ஆயிடுத்து.”
“எப்பப் போனாலும் ஆறு மணிக்குள்ளே எழுந்திருக்கணும். உச்சியார்த்தத் தூங்கிச் சரியாக்கிக்கலாம்”.
“சரி தாத்… பாட்டாப்பா.”
“ஓன் நல்லதுக்குத்தான் சொல்றேன். இந்நைக்கு அடுக்களையில் ஆர் போய் காப்பி போட்டா தெரியுமோ? என் புள்ளை ஈச்சா”
“இனிமே இப்படி நடக்காமப் பார்த்துக்கறேன்…”
“சரி போய் பல் தேய்ச்சுக் காப்பி குடி. பாட்டீம்மா கலந்து தருவள்”.
“சரி”
“ஏன்னு கேளேன், பொண்ணே?”
“ஏன், பாட்டாப்பா?”
“ஒன் அத்தை…இப்ப அத்தை அல்ல… மாமியார். ஓம் பேர்ல சீறி விழுவான்.”
“சரி பாட்டாப்பா…”
“இங்க வா”
பாரதி அருகே சென்றாள்.
“வந்த புதுசில அவளும் கார்த்தால நேர்த்த எழுந்திருக்கலே! ஏழு, ஏழரைக்குத்தான் எழுந்திருப்பள். சொல்லிச் சொல்லி அவள் சரியாயிட்டாள்…நீயும் சரியா விடுவே… ஹங் இன்னொரு வர்த்தமானம்.”
‘”வர்த்தமானம்” என்றால் என்ன என்று பாரதிக்குப் புரியவில்லை. அர்த்தம் கேட்கலாம் என்று யோசித்தாள். ஆனால் தாத்தாவே தொடர்ந்தார்.
“நேத்தைக்கு சகஸ்ரத்தோட ஆத்தில தேவகிங்சுற பொண்ணும், நீயும் பேசிண்டிருந்தேளாம். அவ போன் பண்ணினா”.
“என்ன சொன்னா பாட்டாப்பா?”
“பதினொண்ணு மணிக்கு வர்றாளம். ஒன்னை ரெடியா இருக்கச் சொன்னாள்.”
“இப்பப் போய் பல் தேய்ச்சுக் குளிச்சுடறேன் பாட்டாப்பா.”
முந்தின நாள் குளிக்காமல் சமையலறையினுள் பிரவேசிக்க முயன்றபோது, தங்கம்மா சீற்றத்துடன் நிறுத்தினாள். இன்று அவளை தடுத்து நிறுத்த முடியாது.
சமையலறை வெறிச்சோடியது.
அவள்தான் சமையல் வேலையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முந்தின தினம் தங்கம்மா கட்டளையிட்டிருந்தாள். இன்று பாட்டியையும் காணோம்.
காப்பியைக் கலந்து குடித்துவிட்டுத் தாழ்வாரத்துக்கு வந்தபோது, வேலைக்காரி தாட்சாயணி அவளை அழைத்தாள்.
“அம்மை நின்னை விளிக்குனனு” என்றாள்.
“அப்படின்னா என்ன அர்த்தம்? எனக்குப் புரியலே.”
“மனசிலாயில்லா, அல்லே…. நாராயணன் சாமி யிண்டே அம்மை தொழுத்துப் பெரையில் இண்டு. விளிக்குன்னு.”
இப்போது புரிந்தது.
தாத்தா போக வேண்டாம் என்று அவளை எச்சரித்திருந்தார். ஆனால் இப்போது அத்தையே வரச் சொல்லி இருக்கிறாள். என்ன செய்வாள்? தலையைச் சீவிடுவாளா? அதையும் பார்ப்போமே!
தொழுவத்தில் ஒரு பத்திரிகையும் கையுமாக தங்கம்மா உட்கார்ந்திருந்தாள்.
“அத்தே எதுக்குக் கூப்பிட்டீங்க?” என்றாள் பாரதி.
தங்கம்மா அவளைக் கண்டதும் எழுந்து நின்றாள்.
”வாங்கோ… வாங்கோ பாரதி! சுகமா, செளகரியமா இருக்கீங்களா… இந்த வீட்ல நானும், இப்ப உங்களை அழைக்க வந்தாளே தாட்சாயணி, அவளும் சமம். நீங்க யசமானி அம்மா. அதான் எழுந்து நின்னேன்.”
பாரதி, எட்டடிப் புலிக்குப் பதினாறு அடியாக மாறினாள்.
“பரவாயில்லே நீ உட்காரலாம். தாட்சாயணியும் நீயும் சமம்னு உன் வாயிலேந்து வந்ததைக் கேட்கவே திருப்தியா இருந்தது. இனிமே யசமானிகளைக் கூப்பிட்டு வரவழைச்கிற வழக்கத்தை வைச்சுக்காதே”.
சொல்லிவிட்டு பாரதி நகர்ந்தாள்.
“நில்லுடி!”
நின்றாள். பிறகு,
“என்ன அத்தே விரட்டறே…? ரெண்டாம் நாளா நேரம் தெரியாமத் தூங்கிட்டேன். தப்புத்தான். மெல்ல மெல்லத் திருத்திக்கிறேன். நீ வந்த புதுசுல எத்தனை மணிக்குத் தூங்கி எழுந்தேன்னு எனக்குத் தெரியும். இப்ப என்ன வேணும்?”
“யார் பொங்கிப் போடறது?”
“எனக்கு சாதம் மாத்திரம்தான் பொங்கிப் போடத் தெரியும். இன்னிக்கு எல்லாரும் மோர் சாதம் சாப்பிடட்டும்.”
தங்கம்மா அயர்ந்து போனாள். பிறகு மெல்லச் சமாளித்துத் கொண்டு, “அன்னிக்கே முட்டிண்டேன் என் அண்ணா பொண்ணுங்கற காரணத்துக்காக சம்பந்தம், பேச வேண்டாம்னு! யார் கேட்டா. இப்ப அனுபவிக்கிறேன்” என்றாள்.
“யார் யாருக்கெல்லாமோ லலிதகலா அகாடமியில் நடிப்புக்குப் பட்டமும், பரிசும் கொடுக்கறாங்க. உங்க நடிப்புக்கு எப்படி ப்ரைஸ் வராமப் போச்சு! அப்பப்பா என்ன நடிப்பு, என்ன நடிப்பு!”
“என்னடி உளர்றே?”
“நங்கவரம் வந்தபோது எப்படியெல்லாம் குழைஞ்சிங்க …. இங்க வந்த அன்னிக்கு இதோபதேசம் செஞ்சீங்க. கோயிலின் புராணத்தை பிரவானம் பண்ணினீங்க… இதெல்லாம் நடிப்பு இல்லேன்னா எது நடிப்பு? இப்பு சீறி விழறீங்களே, இதுதான் நடிப்பா? அன்னிக்கு நல்லவளா நடிப்பு, இன்னிக்கு வில்லியா நடிப்பா?”
“உன் உடம்பு பூராத் திமிர்.”
“திமிரோட திமிர் மோதறதை உங்களால ஜீரணிக்க முடியலே இல்லே?”
“இன்னிக்கு என் அண்ணாவுக்கு லெட்டர் போடறேன்.”
”கவரா, கார்டா, இன்லண்டா? என்னை உடனடியா அழைச்சுட்டுப் போக எழுப் போறதுன்னா அது அனாவசியச் செலவு. ஒரு வார்த்தை சொன்னா, நானே போயிடறேன்.”
“இப்ப என் முன்னால நிக்காதே போ”
“போறேன். ஆனா அதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லிடறேன், இந்த மாமியார் பூச்சாண்டி எல்லாம் எங்கிட்ட வைச்சுக்காதிங்க. வேற வழி தெரியாத சாதுவான பெண்களிட்டதான் மாழியார் விளையாட்டெல்லாம் நடக்கும். நான் வேற வழி தெரியாத பெண் இல்லே, சாதுவும் இல்லே. யார் வம்புக்கும் போக மாட்டேன். ஆனா வம்புக்கு இழுத்தா பதிலடி கொடுப்பேன். இதை நன்னா ஞாபகம் வைச்சுக்குங்க…” என்றாள். பாரதி பிறகு தொடர்ந்து, “இனிமே நீங்க எனக்கு அத்தை இல்லை. என் கழுத்தில தாலி ஏறினப்பலே அந்த பந்த சொந்தம் அறுபட்டிருக்கணும். கொஞ்சம் லேட்டா அதை அறுத்து எறிகிறேன்” என்றாள்.
திக்பிரமை பிடித்தவளைப் போல தங்கம்மா உட்கார்ந்திருக்க பாரதி அலட்சியமாக வெளியேறினாள்.
டில்லியில் எத்தனையோ மாமியார்களின் கொடுமைகளுக்கு ஆளான பெண்களை அவள் பார்த்திருக்கிறாள். சில மாமியார்கள் மருமகள்களை எரித்துச் சாம்பலாக்கியதுக்காக சிறை சென்றுள்ளதையும் அறிந்திருக்கிறாள். அதே சமயம் ஒரு சில மருமகள்கள் மாமியாரை ஓட ஓட விரட்டி அடித்திருப்பதையும் கேள்விப் பட்டிருக்கிறாள். ஒரு செய்தித் தாளில், மருமகள் மாமியாரின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்ற செய்தியையும் படித்திருக்கிறாள்
இங்கே வரதட்சணைப் பிரச்னை இல்லை. ஏழைப் பெண் என்கிற காரணம் இல்லை. அழகோ, படிப்போ இல்லாத பெண் என்ற எரிச்சலும். இல்லை. ஆனால் மாமியார் எதையோ மனதில் வைத்துக் கொண்டு அவளை வதைக்கப் பார்க்கிறாள். மேற்படிப்பு விஷயத்தில் அவளே வதைப்பட்டுக் கிடக்கும்போது, இன்னொரு பக்கம் இப்படி ஒரு வதையா? இதற்குப் பாரதியா அஞ்சுவாள்?
அவள் மீண்டும் முன் தாழ்வாரத்துக்கு வந்த போது தரைமேல் தரையில் தாத்தா இல்லை. காலையிலிருந்தே பாட்டியைக் காணோம். மாமனார் மாமனார் ஈசுவரன் புறப்பட்டுச் சென்றிருக்க வேண்டும்.
அவளுக்கு ஊஞ்சலில் உட்காரப் பிடிக்கவில்லை. அன்றைய தினசரியை எடுத்துக் கொண்டு நாற்காலியில் உட்கார வந்தாள். சுவர்க்கடிகாரம் யதேச்சையாகக் கண்ணில் பட்டது.
மணி பத்தரை.
பதினொன்றுக்கு தேவகி வருவாளே! பேப்பரைப் புறக்கணித்துவிட்டு எழுந்தாள். திடீரென போன் அடித்தது. எடுத்தாள்.
“ஹலோ”
”ஓ, பாரதி ஐ’ம் தேவகி, குட்மார்னிங்,”
“குட்மார்னிங் தேவகி! ஸாரி கார்த்தால பேச முடியலே.”
“டோண்ட் வொர்ரி…. நான் புறப்பட்டிருக்கேன்… லெவனோ க்ளாக்”
“நான் ரெடியா இருப்பேன்”
“சாப்பிட உட்காராதே, உனக்கு எங்க வீட்லதான் லஞ்ச்”
“ஓ கே. ஆனா என்னை நீ நாலு மணிக்கு முன்னால் ட்ராப் செய்துடணும்..”
“ஏன்?”
“நாராயணன் என்னை ஷாப்பிங்குக்கு அழைச்சுட்டுப் போறதா சொல்லியிருக்கார்.”
”ஓ.கே. நோ ப்ரோப்ளம்”
ரிஸீவரை வைத்துவிட்டு பாரதி மாடிக்கு ஓடினாள். நேற்று தேவகி ஜீன்ஸ் அணிந்திருந்தாள். அவளுடைய ‘வீட்டில்’ சுதந்தரம் இருக்கிறது. இங்கே ஜீன்ஸ் அணிந்து கிராமத்துத் தெருவில் நடந்தால் அவளை ஏற இறங்கப் பார்ப்பார்கள்; சிரிப்பார்கள், மாடியை அடைந்ததும் நிச்சயமாகப் புடவை இல்லை என்று தீர்மானித்தாள்.
அலமாரியைத் திறந்தாள். டில்லியிலிருந்து புறப்படுவதற்கு முன், கான் மார்க்கெட்டில் வாங்கின சல்வார் கமீஸ் கண்ணை அறைந்தது. இன்னும் ஒரு தடவைகூட அணியவில்லை.
ஊதா நிறம் கண்ணாடியில் மின்னுவதாகப்பட்டது.
அவள் கீழே இறங்கி வரும்போது பதினொன்று அடிக்க ஏழெட்டு நிமிடங்கள் இருந்தன.
வீட்டில் தாத்தா பாட்டி இருவரும் இல்லை. தொழுவத்தில் மாமியார் ஒதுங்கி உட்கார்ந்திருக்கிறாள்.
அவளும் வெளியேறி விட்டால் வீட்டை யார் பார்த்துக் கொள்வார்கள்? ஏற்கெனவே எல்லோருடைய முகச் சுளிப்புக்கும் இரையாகிவிட்டாயிற்று. பொறுப்பு இல்லாமல் வீட்டைத்திறந்து போட்டுப் போய்விட்டாள் என்ற ஏசல் தேவையா?
முன் பின் யோசியாமல் தொழுவத்தை நோக்கி விரைந்தாள்.
அவளையும் அவளுடைய உடையையும் கண்டு ஒரு கணம் திடுக்கிட்ட தங்கம்மா, வாயால் ஏதும் கேட்க வில்லை.
“நேத்து சகஸ்ரம் சித்தப்பா வீட்டுக்கு என்னைப் பார்க்க தேவகின்னு ஒரு பெண் வந்திருந்தா. இன்னிக்கு நான் அவ வீட்டுக்கு வரணுன்னு சொல்லியிருந்தா. இப்ப அவ காரை எடுத்துட்டு வரா. நான் அங்கே போறேன். அத்திம்பேர் அப்புறம் தாத்தா, பாட்டி, யாரும் வீடல இல்லாய். இதைச் சொல்விட்டுப் போகத்தான் இப்ப வந்தேன்” என்றாள் பாரதி.
“தாட்சாயணி!” தங்கம்மா கத்தினாள்
“எந்தா அம்மே?”
“வலியம்மை கமலம் வீட்லே இண்டு. இவ்விடே வேகம் வராம் பறையின்“
“ஆகட்டே அம்மே.”
தாட்சாயணி விரைவாகப் பாரதியைச் கடந்து செல்ல, தங்கம்மா முகத்தைத் திருப்பிக் கொள்ள, வீட்டு மருமகள் வாசலில் நோக்கி நடந்தாள். சல்வார் கமிஸ் எத்தகைய பாதிப்பை தங்கம்மாவின் மனத்தில் ஏற்படுத்தியுள்ளது என்று கற்பனை பண்னிப் பார்த்தபோது பாரதிக்கு உள்ளுறச் சிரிப்பு வந்தது.
கார் வந்தது.
பாரதி ஏறிக் கொண்டான்.
ஆனால் அதற்குள் கிராமஙகள் பலபேர் அவளைப் பார்த்து விட்டார்கள்.
அத்தியாயம்-11
சந்திரா நகர்.
அகலமான ஒரு வீதி.
வீதியில் தள்ளிக் தள்ளித் தள்ளிக் கட்டப்பட்டிருந்த பல பங்களாக்கள்.
தேவகியின் வீடு உள்ளடங்கி நின்றது. காம்பவுண்டு கேட்டிலிருந்து வீட்டு போர்ட்டிகோவுக்கு நடந்து சென்றால் குறைந்தது ஐந்து நிமிடங்களாவது ஆகும். கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் இருக்கும் என்று பாரதி நினைத்தாள். எட்டடி எட்டடி அகலமான காங்க்ரீட் பாதை வளைந்து வளைந்து சென்றது. இருமருங்கிலும் பூச்செடிகள், பற்பல விதமான பூக்கனைச் சுமந்து ஆரவாரித்தன. வீட்டின் முன்னால் ஒரு சிறு நந்தவனம். புல்தரை வெல்வெட் போல வழவழப்பாகக்காட்சி அளிக்க நானகு சிமென்ட் பெஞ்சுகள் சீராக வைக்கப்பட்டிருந்தன.
மாருதியைப் போர்டிகோவில் நிறுத்தி விட்டு, “கம் ஆன் பாரதி!” என்றாள் தேவகி.
“எல்லாமே பிரமாதமா இருக்கு”.
“பணம் இருந்தா என்ன வேணும்னாலும் செய்துக்கலாம். இப்ப மொதல்ல ஜில்லுன்னு கூல்டிரிங்க் சாப்பிடறோம். உனக்கு என்ன பிடிக்கும். ஆப்பிள், மாங்கோ, டொமேட்டோ… ஆர் லைம்?”
“எதானாலும் ஓகே”.
“எல்லாம்-வீட்ல ரெடி பண்ணினது”
“யாரு அம்மாவா?”
‘”அம்மாவா?” தேவகி சிரித்தாள், பிறகு “நோ மதர்”
“ஐ’ஆம் ஸாரி தேவகி”
“பட் ஐ’ம் நாட் ஸாரி”.
தேவகி சொல்லும் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் பாரதி விழித்தாள்.
“என்னைப் பெத்துப் போட்டுட்டு அம்மா யாரோ ஒருவனோட ஓடிப் போயிட்டா. அந்த யாரோ ஒருவன் என் அப்பாகிட்ட வேலை பார்த்தவன்”.
“ஓ மை காட்”
“ஓர் ஆம்பிளை பொண்டாட்டியை விட்டு இன்னொருத்தியோட ஓடிப்போனா அது நியூஸ் இல்லை. பாரதி! ஒரு பொண் புருஷனை விட்டு இன்னொருத்தனோடு சொல்லாமக் கொள்ளாம பணத்தையும் வாரிச் சுருட்டிக்கொண்டு ஓடினாத்தான் நியூஸ். இப்படிப்பட்ட நியூஸை என்னைச் சுமந்தவ, இந்த உலகத்துக்குக் கொடுத்திருக்கா”.
“நாம வேற ஏதாவது பேசுவோம் தேவதி!”
“சில உண்மைகள் கசப்பா இருக்கு இல்லே? எனக்கு ஒரு வயசு நடக்கறப்ப அவ போனா, கொஞ்ச நாள் அப்பா ஓடிஞ்சு போய் என்ன செய்யறதுன்னு தவிச்சார். ஆனா நான் ஒருத்தி இருக்கேனே? வளர்த்தாகணுமே? அப்புறம் என்ன? யார் யாரோ தந்த பால்லே எல்லாம் வளர்ந்தேன். அப்புறம் க்ளாஸ்கோ, அமுல்…”
“அப்பா…”
“எல்லாத்தையும் மறக்கச் சில பேர் குடிப்பாங்க. சிலபேர் போகப்படாத இடத்துக்குப் போய் வெறியைத் தீர்த்துப்பாங்க. ஆனா எங்கப்பா வியாபாரத்தில தீவிரமா இறங்கினார். அவருக்கு மதுப்பழக்கம் உண்டுதான். ஏன் நான்கூட ஒயின், ஷாம்பெயின், பீர் எல்லாம் குடிச்சிருக்கேன், நானும் அப்பாவுமா சேர்ந்து உட்கார்ந்தே குடிச்சிருக்கோம். ஆனா அவர் என்னிக்கும் தன்சோகத்தை மறக்கக் குடிக்கலே…இதெல்லாம் இப்ப ஏன் சொல்றேன்னா, நீ என் சிநேகிதியா வருவேன்னு எனக்குத் தோண்றது. என் வரலாறு என்னன்னு உனக்குத் தெரியணும்னும் நினைச்சேன்”.
“ஜூஸ்!”
“ஓ, நீ திசை மாத்தறே இல்லே?”
“ஒரு நாயர் பொண்ணா இருந்துக்கிட்டு எப்படி உன்னால் இவ்வளவு நன்னாத் தமிழ் பேச முடியறது”.
“அதான் நேத்தே சொன்னேனே, கோயமுத்தூர்ல இருந்திருக்கேன்னு” என்ற தேவகி ஃப்ரிஜ்ஜுக்குச் சென்றாள்.
இரண்டு கண்ணாடித் தம்ளருடன் திரும்பி வருகையில்,
“நீ ஹாட் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டதுண்டா?”
“ரெண்டு மூணு வாட்டி பீர் குடிச்சிருக்கேன். அதன் வாடை பிடிக்கலே. மத்த ஸ்டூடண்ட்ஸோட பார்ட்டிக்குப் போனா நிச்சயமா ஒயினோ, பீரோ இருக்கும்”.
“உனக்காகச் சாப்பிடணும்னு தோணியிருக்கா!”
“இல்லை.”
“ஜூஸ் நன்னா இருக்கா?”
“எக்ஸலண்ட்”
”சீசனுக்குத் தகுந்தாற்போல ஜூஸ் தயார் செய்வேன்”
“என்ன, தயார் செய்வியா?”
“ஆமாம்; ஏன்?” என்ற தேவகி சிரித்துக் கொண்டே, வீட்ல சமைக்கலாம்னா ஜூஸ் தயார் செய்யக் கூடாதா?” என்றாள்.
“சமையலா? நீதான் செய்யறியா?”
“வீட்டைக் காவல் காக்க எனக்குத் தைரியம் பத்தாது. அதனால வாட்ச்மேன். வீடு முழுதும் பெருக்கி மெழுகி, கண்ணாடி ஜன்னல்களைத் துடைத்து, அவ்வப்போது கர்ட்டன்களை மாத்த, என் உடம்பில் சக்தி இல்லை. அதனால இரண்டு வேலைக்காரிகள். அவசியம் ஆனா சமையல்? ஒருத்திக்குச் சமைச்சுப் போட எதுக்கு ஆள்?” சொல்லி விட்டுத் தேவகி சிரித்தாள்.
“நீ ஒரு காரெக்டர் ”
“நம்மால எதெல்லாம். சாத்தியமோ அதையெல்லாம் நாமதான் செய்துக்கணும். இது நான் என் அப்பாகிட்ட கத்துக்கிட்ட பாடம்.”
“அப்பா இங்கே வர்றதுண்டா?”
“எப்பவாவது. ஆனா நாள் விட்டு நாள் எங்கே இருந்தாலும் ராத்திரி ஒன்பது மணிக்கு ஃபோன்ல பேசுவார். ஒரு வாட்டி லண்டன் ஏர்போட்ல இருந்தார். அப்ப நம்ப ஊர்ல ராத்திரி ஒன்பது மணி, ஏர்போர்ட்லேந்து ஃபோன் பண்ணினார்”
“அவரும் ஒரு காரெக்டர்”
“நாம் எல்லாருமே காரக்டர்கள் தான் பாரதி! ஒவ்வொருத்தர்ட்டேயும் ஏதானும் ஒரு தனி அம்சம். அது நல்லதோ கெட்டதோ இருக்கும். உங்கிட்ட ஒரு தனிக் குணம் இருக்குன்று எனக்குப் படறது”.
“என்ன அது?”
“யாராவது ஏதானும் மனசை நோக அடிக்கிற மாதிரிப் பேசினா உனக்குச் சுருக்குன்னு கோபம் வரும்”.
“கரெக்ட், ஆனா உனக்கு எப்படித் தெரிய வந்தது? நேத்துதான் முதல் தடவையா மீட் பண்ணியிருக்கோம்”.
”நான் சில வார்த்தைகள் பேசினப்ப திடீர்னு உன் முகம் மாறிப் போச்சு”
“என்ன வார்த்தைகள்!”
“பிஎச்டி பண்ண முடியாதுன்னா எம்ஃபில்லுக்கே போயிருக்கப்படாது. பாதிக்கிணறு தாண்டற மாதிரி இருக்குன்னேன்”
“உண்மைதான் எனக்குச் சுருக்குன்னு தான் பட்டது”.
“பிஎச்.டி பண்ணப் போறியா?”
“திவிரமான ஆசை இருக்கு. அதே தீவிரத்தில் எதிர்ப்பும் இருக்கு. நான் செய்ஞ்ச பைத்தியக்காரத்தனம் அவசரப்பட்டுக் கலியாணத்துக்குச் சம்மதிச்சதுதான்.”
“ஏன் அதுக்கு முன்னால அம்மா, அப்பா ஆட்சேபிச்சாங்களா?”
“அப்பாகிட்ட போதிய நிதி வசதி இல்லாமப் போச்சு”.
”ஓ.கே! பாரதி உனக்கு டாக்டரேட் வாங்கணுமங்கூற துடிப்பு இருக்கு இல்லியா?”
“ஷ்யூர்!”
“அப்புறம் என்ன செய்வே?”
“அது தெரியலே.”
தேவகி சிரித்தாள். கேலி ஒலித்தது.
“ஒரு கோளேஜ்ல புரொஃபசராப் போகணும்னு தோணலையா?”
“எனக்கு டீச்சிங் லைன் பிடிக்கலே…”
‘”அப்ப என்ன செய்வே?'”
“நம்ப நாட்ல எத்தனையோ இங்கிலீஷ் பேப்பர். மாகஸின்ஸ் இருக்கு. நிறைய கட்டுரைகள் எழுதலாம். புத்தக விமர்சனங்கள் செய்யலாம்”.
“இது சரியான குறிக்கோளாகப் படலே எனக்கு”
“அப்படீன்னா?”
“டாக்டர் பட்டம் வாங்கணும்ங்கறது ஓர் ஆசை. உன் விஷயத்தில் பேராசை. ஆனா அதுக்கு அப்புறம்தான் லட்சியம் வர்றது. லட்சியமே வைச்சுக்காம வெறும் ஆசை மட்டும் இருந்துட்டா. அது தற்பெருமைக்காக ஏதோ செய்யற மாதிரித்தான் இருக்கும்”.
“நீ குழப்பறே தேவகி”
“ந்தான் குழம்பிப் போயிருக்கே. நான் இப்ப ஜெர்மன் படிக்கிறேன். அது என் ஆசைக்கு லட்சியத்துக்கு இல்லே. எம்.ஏ. படிச்சிருக்கிற நான் எம்ஃபில் படிச்சு தொடர்ந்து பிஎச்.டியும் பண்ண நினைக்கிறேன். எதுக்குத் தெரியுமா? நான் படிச்சதை நூற்றுக்கணக்கான பேர்களுக்குச் சொல்லிக் கொடுக்க! யார் கண்டா என் அப்பா எனக்காக ஒரு கோளேஜ் கட்டறதுக்குக்கூடச்சம்மதிப்பார். நீ பிஎச்.டி. பண்றதும் ஒண்ணுதான். பண்ணாம இருக்கறதும் ஒண்ணுதான். ஹங்… இப்ப என் வார்த்தைகள் உன் மனசில சுருக்குன்னு படறது. உன் முகம் சொல்றது”
பாரதிக்கு என்ன பதில் சொல்லிச் சமாளிப்பது என்று தெரியவில்லை,
“நேத்து உன்னை மீட் பண்ணினப்புறம் நான் சிந்திக்க ஆரம்பிச்சேன். இவளை மாதிரி நானும் பாதிக் கிணறு தாண்டினவளா ஆயிட்டா? ரெண்டு வருஷம் வேஸ்ட் தானே? எதுக்கு எம்.ஃபில் படிக்கணும்? அப்பாவுக்கு ஏற்கனவே ஹார்ட் டரபிள் வந்து அமெரிக்காவில பைபாஸ் சர்ஜரி நடந்தாச்சு. பாதி படிச்சுட்டிருக்கறப்ப அவருக்குத் திடீர்னு ஏதானும் நேர்ந்துட்டா, அப்புறம் இவ்வளவு பெரிய கம்பெனியை யார் நடத்துவாங்க. இப்படியெல்லாம சிந்திச்சேன்…”
“அப்புறம்?”
“இன்னும் முடிவு எடுக்கலே. எனக்கு உண்மையான லட்சியம் இருக்கு பாரதி. பி.எச்.டி. பண்ணி கோளேஜ்ல புரொஃபசரா ஆகணும்னு. ஆனா அதே சமயத்தில் இதைவிடப் பெரிய லட்சியத்தை என் அப்பா என் மடி மேல போடுவாரோங்கற பயமும் இருக்கு, அப்படிப் போட்டுட்டா, என் தனிப்பட்ட லட்சியத்தை மறந்துடுவேன்”
”யூ மீன்…”
“எனக்கு என் அப்பாதான் முக்கியம். ரெண்டு பேரும் அடிக்கடி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்றதில்லைன்னாலும் எங்க ரெண்டு பேர் மனசுகளும் சதா சர்வகாலமும் பேசிட்டேதான் இருக்கு.”
“கம்பெனியை நடத்த நீ ஒருத்திதான் இருக்கியா?”
“இப்ப நான் அதில ஒரு டைரக்டர், அப்பாவோட பங்கு எழுபது சதவிகிதம். என்னோடது இருபது. பாக்கி பத்து பத்து பேருக்குக் கொடுத்திருக்கார். அந்தப் பத்துப் பேர்ல ரெண்டு பேர் அவருடைய காரியதரிசிகள். மூணு பேர் பிராஞ்ச் மானேஜர்கள். பாக்கி அஞ்சு பேர் குமாஸ்தாக்கள். இவர்கள் எல்லோரும் அடி நாள்லேந்து அப்பாவோட சுகத்திலும், துக்கத்திலும் பங்கு கொண்டவர்கள்”.
வாய் திறவாமல் பாரதி கேட்டுக் கொண்டு வந்தாள். திடீரென்று தேவகி ஒரு கேள்வி கேட்டாள். “உனக்கு பிஎச்.டி பண்ண ஆசை இருக்கு ஓ.கே. ஆனா அதுக்கு யார் தடையா இருக்காங்க?”
“என் ஹஸ்பெண்ட், என் ஃபாதர் இன் லா”.
“என்ன காரணம்?”
”குடும்பத்தில் கால் வைச்சதும் படிப்பு காரணமாக வெளியேறி இரண்டு வருஷம் இருக்கிறது சரியில்லைன்னு சொல்றாங்க… நான் படிச்சு முடிச்சப்புறம் அதனால எனக்கு மட்டும்தான் பெருமை இருக்குமே தவிர வேற யாருக்கும் அது பிரயோசனப்படாதுங்கறார் என் மாமனார்”.
“கரெக்டாதான் சொல்லியிருக்கார்”.
“ஆனா என்னால இந்த ஊர்ல, இந்த கிராமத்திலே இருக்க முடியும்ணு தோணலை”
“ஏன்?”
“டில்லியில பொறந்து வளர்ந்து டில்லி நாகரிகத்தை அனுபவிச்ச என்னால், எப்படி ஒரு சின்ன இடத்தில அடைஞ்சு கிடக்க முடியும்?”
“இங்கேர்ந்து பிழைப்புக்காக டில்லி, மெடராஸ், பாம்பேன்னெல்லாம் போறாங்களே அவங்கள்ளாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலையா? நீ வேணும்னா டில்லியில் பிறந்திருக்கலாம், உன் அப்பா பிழைப்புக்காகத்தானே டில்லி போனார்?”
“நீ சொல்றதெல்லாம் சரிதான் தேவகி…ஆனா….”
“இதில ஆனா ஆவன்னாவுக்கு இடமில்லே பாரதி, ஓர் ஆம்புள்ளை பிழைப்புக்காசுப் பிழைப்புக்காகப் போய் அட்ஜஸ்ட் பண்ணிக்கறான். ஆனா நீ? வாழ்க்கையிலே ஒருத்தனுக்கு மனைவியாகி, உன் பிழைப்பை நடத்த வந்திருக்கே. டில்லியில பழக்கம் ஏற்பட என்ன காரணம்? நீ நாலு வீடுகளுக்குப் போனே…நாப்பது விடுகளை எட்டிப் பார்த்தே. இது சின்ன வயசில ஆரம்பிச்சது. இப்ப ஒரு புது மனைவியா நீ பொறந்திருக்கே…இனிமே நீதான் மத்தவங்களைப் பார்த்து அலங்களோட பழகி இந்த ஊரை உன்னுடையதாக்கிக் கொள்ளணும். உனக்குக் வரும்படியாச் சொல்றதுன்னா, நீ இன்னும் உன் முக்கு நுனியைத் தாண்டி எதையும் பார்க்கலே.”
பாரதி தளர்ந்து போனாள். உண்மையில் தேவகி மீது கோபம் வரத்தான் வந்தது. ஆனால் அது முட்டாள் தனமான கோபமாகப் பட்டது.
“இங்கே பேசற தமிழே நாராசமா ஒலிக்கிறது”.
தேவகி சிரித்தாள்.
“இது தமிழுக்கு மட்டுமில்லே. எல்லாபாஷைகளுக்கும் உண்டு பாரதி, பாலக்காட்டு மலையாளம் வேறு கொல்லம் திருவனந்தபுரம் மலையாளம் வேறு, ஏன் ஹிந்தியை எடுத்துக் கொள்ளேன்.டில்லியில ஒரு மாதிரி, ராஜஸ்தான்ல ஒரு மாதிரி பீஹார்ல, இன்னொரு மாதிரி. இதெல்லாமா உனக்கு உன் வாழ்க்கையில் ப்ரோப்ளம்? உன் ஹஸ்பென்ட் எப்படி நடத்தறார் அது முக்கியம். ஒருவரை ஒருவர் சரியாப் புரிஞ்சுகிட்டா ஒருப்ரோப்ளமும் இல்லை பாரதி”
“என் அவஸ்தையை என்னாலச் சரியாச் சொல்ல முடியலே, தேவகி,”
“வா, சாப்பிடப் போகலாம். உனக்கு நீயேதான் ப்ரோப்ளம். அதை நீயேதான் தீர்த்துக்கணும்…” என்ற தேவகி, “‘ஃப்ரைட் ரைஸ், குர்மா, ஆலு மட்டர், நான், சாலட், சூப் எல்லாம் ஹாட்பாக்கிலே வைச்சிருக்கேன் இதெல்லாம் டில்லியை நினைவுபடுத்தறது இல்லியா?”
“உம்” என்றாள் பாரதி,
“இந்த ஊர்ல ஒரு ராஜஸ்தானி ஓட்டல் இருக்கு. ஒரு நாள் அழைச்சுட்டுப் போறேன். புல்கா, சப்ஜி, பேல் பூரி எல்லாம் ஹைகளாஸா இருக்கும்.”
பாரதி எதுவும் பேசவில்லை.
“நான நறுக்குத் தெரிச்சாப்ல மனசில் பட்டதை அப்பட்டமா பேசினது உனக்குப் பிடிக்கலே, இல்லியா? பாரதி”
“நான் எதையோ எதிர்பார்த்து இங்கே வந்தேன்”.
“எதை?”
“உன் எம்.ஃபில்லைப் பற்றிப் பேசுவாய், நீ மெட்ராஸ் போறதானா நானும் உன்கூட என் பிஎச்.டிக்குப் புறப்படலாமான்னெல்லாம் யோசிச்சுட்டு வந்தேன்”
”மொதல்ல உனக்கு வாழ்க்கையில என்ன தேவை? என்ன லட்சியம்? இதெல்லாம் தீர்மானம் செய், பாரதி! பாலச்காடு, பள்ளிப்புரம் இதெல்லாம் அற்ப சமாசாரங்கள். நம்மை மீறின விஷயங்களா இது? நீ பாதிக்கிணறு தாண்டியவள்னு சொன்னது தப்போன்னு இப்பப் படறது!”
“தேவகி நீ என்ன சொல்றே?”
“நீ கிணத்துக்குள்ளேயே இருக்கிற தவளை. கோவிச்சுக்காதே. உன்னை எனக்கு ஏனோ ரொம்பப் பிடிச்சிருக்கு. அதான் உரிமையோட பேசறேன்.”
சாப்பாடு முடிந்தது.
இரண்டரை மணிக்கு வீட்டை விட்டுக் கார் புறப்பட்டது. பள்ளிப்புரத்தை நோக்கி வண்டி செல்லாமல், பாரதிக்குத் தெரியாத ஒரு பாதையில் கார் ஓடி ஒரு வீட்டின் முன் நின்றது.
அங்கே பாரதி திகைத்துப் போகும்படியான அனுபவம் அவளுக்கு உண்டாயிற்று.
அத்தியாயம்-12
ஈசுவரன் பன்னிரண்டு மணிக்கு வீடு திரும்பினார். ஜிப்பாவைக் கழற்றியபின் கை கால் அலம்பி விட்டு,அவர் வீட்டுக்கு நேர் எதிரே நிற்கும் தம்பி சகஸ்ரத்தின் வீட்டுக்குச் சென்றார்.
“வா, அண்ணா, ஒனக்காகத்தான் காத்துண்டிருக்கேன். ராஜி! அண்ணா வந்தாச்சு எலை போடு!”
“அண்ணா காரை விட்டு எறங்கி ஆத்துக்குள்ள போறப்பப் பாத்தேன். அப்பவே எலை போட்டாச்சு”
”வா அண்ணா சாப்பிடலாம்.” இருவரும் சாப்பாட்டு மேஜைக்கு வந்தார்கள்.
ராஜி முதலில் பச்சடி பரிமாறி விட்டு உள்ளே சென்றாள்.
“மனசுக்குச் சுசுமில்லைடா சகஸ்ரம்”
“என்னாச்சு?.”
“இப்ப ஆத்துக்கும் போனேன். அப்பா தூங்கிண்டிருக்கார். அம்மை சிவராமன் ஆத்ல இருக்கான்னு தாட்சாயணி சொன்னா. அந்தப் பொண் எங்கே போனாள்னு தெரியலை”.
சாதம் மற்றும் கறியுடன் வந்த ராஜி, “பாரதி தேவகியோட அவாத்துக்குப் போயிருக்கா” என்றாள்.
“எந்த தேவகி? சந்திரா நகர் தேவகியா?” என்றார் ஈசுவரன், இலையில் விழுந்த கறியை ருசி பார்த்துக் கொண்டே.
”ஆமாம்! நேத்தைக்கு அவ இங்க வந்திருந்தா… பாரதி எம்ஃபில் அல்லவா? தானும் எம்ஃபில் படிக்கலாமோங்கற எண்ணம் அவளுக்கு இருக்கு. அது காரியமா வந்திருந்தா”
“நான் பெரிய தப்பு சேதூட்டனோன்னு மனசு தவிக்கிறது. சகஸ்ரம்”.
“மின்னால சாப்பிடு அண்ணா. நீ ஒரு தப்பும் சேயலை”
“இல்லைடா. ஆத்யமே தங்கம் வேண்டாம்னா, கோந்தைக்கும் அத்ற இஷ்டமில்லை. அழகா இருந்தா மாத்தம் போராது. ஆத்துக்கு அனுசரணையாவும் இருக்கணும்னான், நான்தான் கேக்கலை. கொஞ்சம் பிடிவாதமா இருந்துட்டேன், நங்கவரத்துப் பொண்ணுனு வந்தா நல்லதுன்னு நெனைச்சேன்.”
”கோந்தைக்கு அவளைப் பிடிக்கலையா அண்ணா? அவன் எங்கிட்ட பேசறப்ப பாரதியைப் பத்தி ஒண்ணும் குறைவாச் சொல்லலியே?”
“கோந்தை எங்கிட்டேயும் ஒண்ணும் சொல்லலை. நேத்தைக்கும், இன்னைக்கும் ஒம்பது மணிக்கு அப்புறம் தான் தூங்கி எழுந்தா.”
“இது பெரிசாப் படலை”.
“எனக்கும் படலை. புதுசா வந்த இடத்தில எப்படி எப்படியெல்லாம் நடந்துக்கணும்னு அவளுக்குத் தெரியாதைக்கு இருக்கலாம். சம்மதிக்கறேன், ஆனா தங்கத்துகிட்ட வாயாடறாளோன்னு தோணுறது”
“மன்னி சொன்னாளா?”
”ஆமாம்”
“தர்க்கமா?”
“ஆமாம்”.
”அண்ணா நான் ஒண்ணு சொன்னா நீ எங்கிட்ட தேஷ்யப்படப்படாது. அண்ணா கலத்தில் பப்படாம் இல்லை, ராஜி கொண்டு வா…”
“உங்கிட்ட நான் என்னடா தேக்ஷ்யப்பட்டிருக்கேன்.”
“ஒனக்கு ஒறமை இருக்கா…? மன்னி வந்த புதுசில அம்மை சொன்னதைக் கேக்கமாட்டா. தர்க்கம் பண்ணுவா. ஆனா அப்றம் தன்னைச் சரியாக்கிண்டா”.
“இது தங்கம்மா மாதிரி கேஸ் இல்லை, சகஸ்ரம்.”
“எப்படிச் சொல்றாய்?”
“பாட்டி இந்தக் குடும்பத்தில் மின்னால வந்தா, அப்புறம் நீ வந்திருக்கே. இப்ப நான் வந்திருக்கேன். நீ என்னைவிட ஸீனியர், அம்படத்தான்னு பாரதி தங்கத்திடம் சொன்னாளாம்.”
இதைக் கேட்டதும் சகஸ்ரம் சிரித்தான், ராஜியாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“என்னடா நான் ஸீரியஸாகப் பேசிண்டிருக்கேன் நீங்க ரெண்டு பேரும் சிரிக்கறேன்?”
“கோவிச்சுக்காதே அண்ணா, நம்ப அப்பா இருக்கார். அவருக்கு முத்தபிள்ளையா நீ இருக்கே. ஒனக்கு பிள்ளையா கோந்தை. அதே மாதிரிதானே, அம்மை, மன்னி, பாரதி மூணு பேரும்? ஒருத்தர் பின்னால ஒருத்தரா வந்தவா தானே?”
“அப்ப நீ பாரதிக்குப் பரிஞ்சு பேசறாயா?”
“ஹேய்…நான் ஆருக்கும் பரியவில்லை. அண்ணா! பாரதி இப்படிச் சொல்லியிருக்கணும்னா, மன்னி அதுக்கு. மின்னால என்ன சொன்னாளோ?”
“தெரியாது”.
“நீ ரெண்டு பேரையும் விசாரிக்கறது நல்லதுன்னு நேக்குத் தோண்றது.”
“அதான் நேக்கும் தோண்றது. மாமியார் மாட்டுப் பொண் சண்டை பிடிச்சுக்சுறான்னு ஊர்ல நாறு பேர் காதில விழுந்தா அவமானமில்லையா?”
“இல்லை அண்ணா”.
“என்னடா சொல்றாய்?”
“இந்த மாமியார் மாட்டுப்பொண் பூசல் அநாதி சாலமா இந்த லோகத்தில் இருக்கு. அதை மத்தவா பெரிசு பண்ணாம இருந்தா தன்னைப்போல அடங்கிப் போகும். நீ வேணும்னா பாரதியைத் தனியாக் கூப்பிட்டு நல்லதனமா அட்வைஸ் பண்ணு. அவ ரொம்ப நலல பொண்ணாத்தான் நேக்குப் படறது. கொஞ்சம் சென்ஸிடிவ் டைப்பாக இருக்கலாம். சடக்குன்னு கோபம் வரலாம். கொஞ்ச நாளைக்கு மன்னி குத்தம் குறை சொல்லாம இருந்தா பாரதியும் அனுசரிச்சுண்டு போலாம் இல்லியா?”
ஏற்கனவே சாம்பாரை முடித்துவிட்ட ஈசுவரன் மோருக்காசுச் சாதத்தைப் பிசைந்து கொண்டிருந்தார்.
“இது மாற்றம் அல்லா என்னோட ஓர்ரி…”
“பிஎச்.டியா?” என்றான் சகஸ்ரம்,
“நோக்கு எப்படியடா தெரியும்?”
“இந்த ஊருக்குள்ளே அவ கால் வைச்ச நாள்வேந்து ஆர்ட்ட அவ அதிகமாப் பேசிண்டிருக்காள்னு நெனைக் சுறாய்? மௌலியும், சுசீலாவும் இந்தாத்துலதானே எறங்கினா? அதிலேந்து நேத்தை வரை அவ இங்க ரெண்டு மணிக் கூறாவது எங்ககிட்டப் பேசிண்டிருப்பாள், மௌலியும், சுசீலாவும்தான். அவ மேற்படிப்புக்குக் குறுக்கே வந்தாளாம்.”
“இந்த பிஎச்.டி பத்தி எங்கிட்ட அவ பேசினா…” என்றார் ஈசுவரன்.
“என்ன சொன்னா?”
“படிக்கணுமாம்.”
“நீ என்ன சொன்னாய்?”
“கழியாதுன்னு சொன்னேன்.’
“கோவிச்சுண்டு சொன்னியா?
“இல்லை! ரெண்டு பேரும் ரொம்ப சௌஜன்யமாத் பேசினோம். என்னை அவள் மாமனார் ஸ்தானத்தில் வைச்சும் பேசலை. அத்தை ஆம்படையான்கிற எடத்தில் வைச்சுப் பேசினா”
“நானும் சொன்னேன், பிஎச்.டி. அவசியம் இல்லைன்னு”,
“இந்தப் பாலக்காட்டிலேயே படிச்சு முடிக்கிற படிப்புன்னா நான் சரின்னு சொல்லியிருப்பேன், சகஸ்ரம். மதிராசிக்குப் போய்ப் படிக்கண்ட படிப்பு. எப்படி வீட்டுக்குப் புதுசா வந்த மாட்டுப் பெண் ஆம்படையானை விட்டு இரண்டு வருஷத்துக்கு வெளியூர்ல இருக்கலாம்?”
”கோந்தைக்கு இஷ்டமில்லை” என்றான் சகஸ்ரம்.
“நோக்கு எப்படித் தெரியும்டா?”
“நேத்தைக்குக் கனத்துக்குப் போறதுக்கு மின்னால இங்க வந்திருந்தான். அப்பச் சொன்னான்”
“அவளை எப்படி நல்ல வழிக்குக் கொண்டு வர்றதன்னுதான் தெரியலை”
“பிஎச்டி, தான் நல்ல வழின்னு அவ சொப்பனம் கண்டுண்டிருக்கா, அண்ணா”
“இப்ப என்ன சேய்றது?”
“ஒரு வழி இருக்கு”
“என்னடா அது?”
“அவ வழியிலேயே கொஞ்ச தூரம் போலாம். மனசை மாத்திண்ட மாதிரி நீ நடந்துக்கோ, மதராசி வரைக்கும் போயிட்டு வரட்டும். மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் அத்தறை வேகம் பிஎச்.டி.க்கு சான்ஸ் கிடைக்கும்னு நேக்குத் தோணலை”,
“எப்படிச் சொல்றாய்?”
“வர்ஷா வர்ஷம் குறைஞ்சது இருபது பேராவது எம்ஃபில் பாஸாறா. அதில பத்து பேராவது பிஎச்.டிக்கு ட்ரை பண்ணுவா. இவாளைத் தவிர போன கொல்லம், அதுக்கு மின்னாலத்து கொல்லத்தில் ட்ரை பண்ணிக் கிடைக்காதவாளும் இந்தக் கொல்லம் ட்ரை பண்ணுவா. செலக்ஷன்ல பாலிடிக்ஸ் நெறைய உண்டு. இன்னும் ஒண்ணு. மெட்ராஸ் யுனிவர்சிட்டியில இன்னைக்கெல்லாம் இருந்தா மூணு நாலு புரொபசர்களும் நாலஞ்சு ரீடர்ணும்தான் இருப்பா, ஒரு புரொபஸர் ஒரு காண்டிடேட்டைத்தான் எடுத்துப்பன். இப்படி இருக்கறச்ச நம்ப பாரதியை ஒருத்தன் எடுத்துப்பன்னு என்ன நிச்சயம்?'”
“அப்ப இவள் அப்ளை பண்ணீனாலும் கெடைக்கச் சான்ஸ் இலலைன்னு சொல்றாய், அல்லவா சகஸ்ரம்?”
“டெல்லின்னா அப்படிச் சொல்ல மாட்டேன். மெட்ராஸ்ன்னா சொல்ல முடியும். எத்தனை எம்ஃபில் படிச்சு அஸிஸ்டண்ட் புரொஃபசரா தவிக்கிறா தெரியுமா அண்ணா! இவ டில்லி யூனிவர்சி்ட்டி! மெட்ராஸ் யூனிவர்சிட்டி இவளை அத்தறை வேகத்தில சீண்டாது”.
“அப்ப என்ன சொல்றாய்?”
“மின்னால் எழுத்து கை அலம்பு. உண்ட எடத்தில் ஒக்கார்ந்தா கண்ட எடத்தில் கரிப்பா”
இரண்டு பேரும் எழுந்தார்கள்.
“ராஜி!அவரைக்காய்தோரன் ரொம்ப நன்னாயிருந்தது. சாம்பார்லதான் கொஞ்சம் புளி தலை நீட்டித்தோன்னு தோணித்து”
“எனக்கே புளியைக் கரைக்கறைப்ப தோணித்து. புதுப் புளியாச்சா. கணக்கு சரியாத் தெரியலை”.
அண்ணாவும், தம்பியும் கூடத்திலிருந்து முன் தாழ்வாரத்துக்கு வந்தார்கள்.
“அப்ப என்ன சொல்றாய்?”
“அவளை அப்ளிகேஷன் பாரத்துக்கு எழுதிப் போடச் சொல்லு. அது வர்றதுக்கு தீர்ச்சையா ரெண்டு முணு ஆழ்ச்சையாவது ஆகும். லயோலாவில் உங்ககூடப் படிச்சானே அனந்தகிருஷ்ணன். அவனுக்கு நான் இன்னைக்கே ஃபோன் பண்ணி விசாரிக்கச் சொல்றேன்”
“எந்த அனந்த கிருஷ்ணன்? சேகரிபுரம் அனந்த கிருஷ்ணனா?”
”அவன்தான்”
“இப்ப என்ன சேயறான்? அவன் பாம்பேயிலே இருக்கலியோ?”
“ரெண்டு வருஷமா மதிராசியிலதான் இருக்கான். இண்டியன் பாங்க்ல டெபுடி ஜெனரல் மானேஜராக இருக்கான். நல்ல இன்ஃப்ளுயன்ஸ் உண்டு”
“உண்டு,”
“அவன் மூலமா பாரதிக்கு ஸீட் கெடைக்காதைக்குப் பார்த்துக்கறேன்”.
“ஸீட் வாங்கறதுக்குத்தான் சிபாரிசுக்குப் போவா… நாம் என்னடான்னா…”
“இப்பக் காரியம் பெரிசா. வீர்யம் பெரிசா அண்ணா?”
“நாம இப்படிச் செய்யறது சரியா சகஸ்ரம்?”.
“நீ ஒன் பிஸினஸ்ல அரிச்சந்திரனா இருந்திருக்காயோ? ஆருக்கும் கைக்கூலி கொடுத்திட்டில்லையோ? லைசன்ஸுக்குப் பெர்மிட்டுக்கும் சிபார்சுக்குப் போனதில்லையோ?”
“எந்துக்குடா அதையெல்லாம் இப்ப இழுக்கறாய்?”
“துரோணர் சாகறதுக்கு தர்மபுத்திரனே சூழ்ச்சியாப் பேசினார். நீ அவனை விடப் பெரியவன்னு சொல்லு. நான் ஒதுங்கிக்கிறேன்”.
“சில சமயங்கள்ளே சாதுரியமும், சாமர்த்தியமும் ஆவசியப்படறது. அல்லவா?”
“இது ரெண்டும் இல்லை. அண்ணா, ஏமாத்து வேலை. ஆனா ஒரு நல்ல காரியத்துக்கு”
“நல்ல காரியம்னா?”
“நம்மாத்து மாட்டுப் பொண்ணால நமக்குச் சங்கடம் வரப்படாது. அவகிட்ட நாம் விரோதமா இருக்கோம்னு அவளும் நெனைக்கப்படாது. நம்ப கோந்தையும் அவகூட சுசுமா இருக்கணும்”
“இதுதான் என் ஆசை சகஸ்ரம்!”
“என் மனசில இன்னொரு காரணமும் இருக்கு“
“ஒருத்தனோட மண்டைக் கனத்தைக் குறைக்கனும்னா அவனோட மண்டையிலே ஒரு தட்டு தட்டனும். நான் டில்லிக்காரி. எம்ஃபில் படிச்சவள். என்னைப் போல ஆருமில்லைன்னெல்லாம் பாரதி சொல்லாமச் சொல்லிக் காட்டறா? இப்பவே அவ கனத்தை ஒரு தட்டு தட்டிட்டா சரியாயிடுவா. சின்ன மன்னி கமலம் எகனாமிக்ஸ் எம். ஏ., கோவிந்தன் ஓய்ஃப் பி. எஸ்ஸி., பி.எட். ராஜி பி.ஏ. பர்ஸ்ட்கிளாஸ்னு எதுவும் பாரதிக்கு தெரியாது. இவாவெல்லாம் எப்படிக் குடும்பத்துக்கு ஏத்தபடியா நடந்துக்கறாங்கதையும் அவ தெரிஞ்சுக்கலை. அவ இதை தெரிஞ்சுக்கணும். இந்த பாரதியையும் இவாளை மாதிரி நல்ல பொண்ணா மாத்தணும் அண்ணா!”
“எல்லாம் நீ பார்த்துக்கோடா சகஸ்ரம். அவ இங்க தான் அதிகமா வர்றா”
“ஆனா நீ உன் மனச மாறியாச்சுங்கறதை. அவளுக்குத் தெரியப்படுத்தணும் அண்ணா”
”சரி, சகஸ்ரம்! நான் போய்ட்டு வரேன்”
“கோந்தை எப்ப வருவன்?!”
”தெரியாது. மினிஸ்டரைப் பார்க்க அல்லவா போயிருக்கான்!”
“நீ மன்னிட்ட விபரமா எல்லாத்தையும் கேள். அப்றமா பாரதியை விசாரிச்சுக்கலாம்”.
ஈசுவரன் தலையாட்டி வீட்டுத் தம் வீடு திரும்பினார்.
ஈசுவரன் வெளியேறிய பிறகு ராஜி சிரிப்பும், களிப்புமாக சகஸ்ரத்தை அணுகினாள்.
“நீங்க சாணக்கியனா, இல்லே சாதாரண மனுஷனா?”
“ஏன் ஒனக்கு இப்படி ஒரு சந்தேகம் புதுசாக் கிளம்பியிருக்கு?”
“இல்லே பாரதிக்கு கூழும் ஊட்டி, மீசையும் வைக்கிறேளே, அதான் கேட்டேன்,”
“என் பிளானைப் பற்றி நீஎன்ன நினைக்கிறாய், ராஜி?”
“ஐடியா எக்ஸலண்ட். ஆனா கோந்தைக்கு தெரிஞ்சா தீர்ச்சையா தடுத்து நிறுத்துவன், அவனுக்கு அந்தத் தில்லு முல்லெல்வெல்லாம் பிடிக்காது. நேரே வா, நேரே போங்கற லட்சியம் உள்ளவன் அவன்”.
“அவனோட குடும்பமும், தாம்பத்தியமும் நந்நா இருக்கணும்னுதானே நான் இந்த ஐடியாவில் எறங்கினேன்?”
“இருக்கலாம். ஆனா கோந்தைக்குத் தெரிஞ்சா அவன் என்ன சொல்லுவன் தெரியுமா?”
“ஆர்ட்ட?”
”எல்லார்ட்டேயும், மின்னால பாரதிட்ட…. “
“என்ன சொல்லுவன், அதைச் சொல்லு ராஜி”
“‘இதப்பாரு பாரதி! நீ ஒன் டாக்டர் பட்டத்துக்கு ஓடணும்னர் ஓடிக்கோ, ஆனா அப்றம் இந்த வீட்டுப் படியில ஒங்க பொண்டாட்டி நான்னு சொல்லிண்டு ஏறாதே. பிஎச்.டி வேண்டாம்து நெனச்சா நீ ஜென்மம் பூரா என் ஆம்படையாளா இரு’ இப்படித்தான் சொல்லுவன் கோந்தை”.
“வேற என்ன வழிதான் இருக்கு ராஜி? ஆனை மேலேயும் ஏறணும். அங்காடி வழியாகவும் போகணும். ஆரும் பார்க்கவும்படாதுன்னா அது எப்படிச் சாத்தியம்?”
“நான் ஒரு வழி சொல்றேன்.”
“என்ன?”
“மெர்ஸி கோளேஜ்ல லெச்ச்சரர் வேலை வாங்கிக் கொடுங்கோ. ஒண்ணு ரெண்டு வர்ஷம் கழிச்சு பிஎச்.டிக்குப் போய்க்கலாம்னு சொல்லுங்கோ. கோந்தை கிட்டேயும் சொல்லி அவனையும் சம்மதிக்க வையுங்கோ.”
“பாரதி மாட்டேன்னு சொன்னா?”
“சொல்ல மாட்டா, நானும் அவகிட்டச் சொல்லிப் பாக்கறேன்.”
“அவ போற பேச்சைப் பாத்தாலெக்ச்சரர் வேலைக்குப் போறவளாத் தெரியலே.”
“அவ மாட்டேன்னு சொன்னா அப்புறம் இந்த அஸ்திரத்தை ஒடுக்காம லாஸ்ட்டா பிரயோகம் பண்ணலாம். ஆனா அதுவும் கோந்தைக்குத் தெரிஞ்சுதான்.”
“கோந்தை வரட்டும்.”
“அவனுக்கு நூறு வயசு. அதா வர்றான்,”
“குஞ்சப்பா”,
“வாடா கோந்தே. மினிஸ்டர் பாலகிருஷ்ண மேனன் என்ன சொல்றான்?”
“அதை அப்றமாச் சொல்றேன். இந்தைக்கு அம்மைக்கும் பாரதிக்கும் இடையில என்ன நடந்தது?”
“ஏன் கேக்கறாய்?”
“தொழுத்துப் பெரையில் அப்பா அம்மையைத் திட்டிண்டிருக்கார், நான் நின்னு கேக்கலை. பேச்சில பாரதியோட பேரு அடிபட்டது”.
“தெரியாதுடா கோந்தே.”
“இந்த ஆத்திலே நான் இல்லாதப்ப என்னவெல்லாமோ நடக்கறது. என்ன வேணும்னாலும் நடக்கட்டும், நான் எஸ்டேட் வீட்லேயே இருந்துக்கறேன்”.
“அப்படி இருக்கறதானா ஒரு காரியம் சேய்.”
“என்ன குஞ்சப்பா அது?”
“ஒன் ஓய்ஃப் பாரதியையும் கூட்டிண்டு போய் வைச்சுக்கோ”
நாராயணன் பதில் சொல்லவில்லை. அவன் திரும்பி நடந்தான்,
“இருடா, கோந்தே” என்ற சகஸ்ரம் “இவனுக்குக் எனக்கும் காப்பி கொண்டு வா, ராஜி” என்றான்.
“இப்பத்தானே சாப்பிட்டுக் கை அலம்பினேஸ்?”
“காப்பி எப்ப வேணும்னாலும் குடிக்கலாம்டீ, ராஜி!”
“அவளை அஞ்சுமணிக்கு பாவெஸ் ஹவுஸுக்குக் கூட்டிண்டுபோய் ஏழெட்டு புடைவை வாங்கிக் கொடுக்கலாம்னு இருக்கேன்.”
உள்ளே போய்க் கொண்டிருந்த ராஜியின் காதில் இத்த வார்த்தைகள் விழுந்ததும் “இன்னைக்கு தேவகி ஆத்துக்குப் போகக் காசில் ஏறினப்பப் பார்த்தேன். வயலட் கலரில் சல்வார் கமீஸ் போட்டுண்டிருந்தா. ரொம்ப எடுப்பா அழகா இருந்தது” என்றாள்.
“இன்னம் நிறைய நேரம் இருக்கு” என்ற சகஸ்ரம்,
“கோந்தே. உன் ஆம்படையாள் பிஎச்.டி பண்ண நீ பெர்மிஷன் கொடுக்கறதுதான் நல்லதுன்னு எனக்குத் தோண்றது”.
“குஞ்சப்பா!”
“அண்ணாவுக்குச் சம்மதம்”
“அப்பா சொன்னாரா?”
“நீயே கேளேன்'”
“அவளைக் கூட்டிண்டு எஸ்டேட்டுக்குப் போன்னு சொன்னாய். எப்போ? இப்போ! அதுக்குள்ளே பேச்சை மாத்தறாய், குஞ்சப்பா!”
சகஸ்ரம் சிரித்தான். அவனால் அப்போதைக்குச் சிரிக்கத்தான் முடிந்தது.
– தொடரும்…
– வானமெல்லாம் ஆசைக் காற்றாடி (நாவல்), முதற் பதிப்பு: மார்ச் 1995, கங்கை புத்தகநிலையம், சென்னை.