கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2025
பார்வையிட்டோர்: 5,467 
 
 

(2019ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13

அத்தியாயம்-10

முத்துலட்சுமி வர அவளுக்கும் சேதி தெரிய…ராஜசேகரன் கிளப்பி விட்டிருப்பானோ? சந்தேகப் பட்டாள்.

சொர்ணாவுடன் இருப்பதால் தனக்கும் ஏதாவது ஆபத்து வருமோ?! – நினைத்தாள். பங்கஜம் வருவது தனக்கு முட்டுக்கட்டை யென்றாலும் துணை என்று நினைக்க இவளுக்கும் திருப்தியாய் இருந்தது.

துணைக்கு ஆள் வந்தாச்சு. இனி நம்மால் முடியாது. இந்தா பணம் திருப்பிக் கொடுத்துவிடலாம் வம்பே தேவை இல்லை நினைவும் வந்தது.

மூவரும் ஆட்டோவில் ஏறினார்கள்.

‘கடவுளே! எமன் கண்ணில் பட்டுவிடக்கூடாது!’ – சொர்ணாவும் பங்கஜமும் வேண்டிக் கொண்டார்கள்.

“வழியில யார் நிறுத்தினாலும் நிறுத்தாதேப்பா!” – பங்கஜம் ஆட்டோக்காரனுக்குக் கட்டளையிட்டாள்.

“வழியில நிறுத்தி யார்கிட்டேயும் பேச்சுக் குடுக்கவேணாம்!” – என்றும் சொன்னாள்.

சொர்ணாவிற்கு மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. ‘இந்த நிலையில் கோவிந்தன் பார்த்தால் எவனுக்குடி புள்ளப் பெக்குறே?! – கண்டிப்பாய்க் கொலைதான்!‘ – இதயமே அறுந்து விடும்போல் தோன்றியது.

‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. என்ன ஏது கேட்க மாட்டான். இழுத்து வைத்து ஒரே வெட்டு..!’ – வேர்த்தது

“பயப்படாதே!” – பங்கஜம் தைரியம் சொன்னாள்.

‘நல்லது செய்யப் போய். இவளுக்குக் கெடுதல்’ – அவளுக்கு உறுத்தல்.

ஆட்டோ பாதி வழியில் ரோட்டில் நின்றது.

“என்னப்பா?“ – பங்கஜம் துணுக்குற்றாள்.

சொர்ணாவிற்குச் சொரக்கென்றது.

“எதிர்ல பாருங்க ஒரு குடிகாரன் அவன் அப்பன் வீட்டு ரோடு போல அப்புடியும் இப்பும் ஆடி அளந்து வர்றான்.” – டிரைவர் சொன்னான்.

திகிலாய்ப் பார்த்தார்கள். கோவிந்தன்!

இடுப்பு வேட்டி அவிழ்ந்து தொங்கி அண்டர்வேர் தெரிவது கூட தெரியாமல் கையில் வீச்சரிவாளுடன் முழு போதையில் தள்ளாடி வந்தான்.

சொர்ணாவிற்கு இறங்கி ஓட வேண்டும் போல் தோன்றியது.

“வண்டியைத் திருப்பு வந்த வழியே ஓட்டுப்பா!” – டிரைவர் நகர்த்தவில்லை.

பங்கஜம் பதற்றினாள்.

“வேண்டாம்மா. நாம இவனுக்குப் பயந்துகிட்டு போறதா நெனைச்சி நம்மை துரத்துவான்.” என்றான்.

“ஆட்டோ வேகத்துக்கு அவனால வர முடியாது திருப்பு.”

“முடியாதுதான். அரிவாளை வீசினான்னா தொலைஞ்சீங்க.”

இதுவும் சரிதான். இப்போது என்ன செய்வது? இறங்கி ஓடினாலும் ஆபத்து.! – மூவரும் விழித்தார்கள்.

“பயப்படாதீங்கம்மா. நான் காப்பாத்துறேன்.”

‘இது ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் சமாச்சாரம்!‘ – இவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது.

டிரைவர் விபரம் புரியாமல் தன் வண்டி சேதம் ஆகக் கூடாதென்று நிற்கிறான். இப்போது என்ன செய்வது எப்படி தப்பிப்பது? என்று தீவிரமாக சிந்தித்த பங்கஜம் தன் புடவை முந்தானையை எடுத்து சொர்ணா தலையில் போட்டு மூடி அவளை முடியாதவள் போல் தன் தோள்மீது சாய்த்துக்கொண்டாள். தானும் அவள் மீது சாய்ந்து தன்னையும் மறைத்துக் கொண்டாள்.

“அவன் வந்து கேட்டான்னா பிரசவ கேசு. ஆஸ்பத்திரிக்குப் போறோம்ன்னு சொல்லுப்பா!” – சொன்னாள்.

‘பூனைக் கண்ணை மூடினா பூலோகமே இருண்டிடும்ன்னு நெனப்பு. பங்கஜம் சிறுக்கி சேதி சொல்லலைன்னா வேற யாரும் சொல்ல மாட்டாங்களா?!…நான் ஆள் சொல்லிதான் வந்தேன். சிறுக்கி! நான் உசுரோட இருக்கும் போது எவனுக்கோ வப்பாட்டியா இருக்காளாம். தொலைச்சிப்புடுறேன் தொலைச்சி. இந்த திருவாச்சி அரிவாளால ஒரே போடு. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு” – கோவிந்தன் உளறிக்கொண்டே அருகில் வந்தான்.

“ஏ சொர்ணா! ஆம்பளை ஆயிரம் பேர்கிட்ட போவான்டி. நீ பொம்பளை. தாலி கட்டின பொண்டாட்டி. கண்ணியமா இருக்கனும். ஆம்படையான் அந்தண்டை போனதும் நீ ஒரு ஆம்படையானைத் தேடிக்கிட்டீன்னா என்ன அர்த்தம்.?! நான் ஆம்பளை சிங்கம்டி. மானம் ரோசம் உள்ளவன். உன்னையும் அவனையும் வெட்டிப் போட்டுட்டு அந்த ரத்தத்துல தலைமுழுகி உனக்குத் துணையாய் இருக்கிற சொறுக்கிகளையும் வெட்டிப் போட்டுட்டு செயிலுக்குப் போனாத்தான்டி என் மனசு ஆறும் துாக்கம் வரும்.” – தள்ளாடி வந்து ஆட்டோ முன்புறம் சாய்ந்தான்.

மூவருக்கும் உயிர் உடலிலில்லை.

டிரைவர் அவனை தெனாவட்டாக பார்த்தான்.

“அந்த ஆட்டக்காரி என்னடான்னா…என்கிட்ட பாசம் உள்ளவ மாதிரி வேசம் போட்டு என் காசையெல்லாம் சுருட்டிக்கிட்டு இன்னொருத்தனோட ஓடிட்டா. இடையில வந்தவ இருக்க மாட்டாள்ன்னு நெனைச்சி கட்டினவளைத் தேடி வந்தா கை மாறிட்டா. என்ன உலகம்டா இது. ஏய் ஆட்டோ! உள்ளாற யாரு?” – சரிந்து நின்று முன் பக்க கண்ணாடியைத் தட்டினான்.

டிரைவர் அலட்டிக் கொள்ளவில்லை. பயப்படவில்லை.

‘குலைக்கிற நாய் கடிக்காது. மேலும் இவன் வெட்டும் அளவிற்கு இல்லை அதிக போதை. அதிகம் ஆட்டம் காட்டினால் இறங்கி இரண்டு போடு போட்டு அரிவாளைப் பிடுங்கி அனுப்ப வேண்டியதுதான்’ – என்கிற நினைப்பில் “பிரசவ கேஸ். ஆஸ்பத்திரிக்குப் போறோம்!” – என்றான்.

“என்னடா பெரிய பிரசவ கேஸ்!” முன் பக்க கண்ணாடியைத் தட்டிய கோவிந்தன், “என் பொண்டாட்டியைத் தெரியுமா?” – கேட்டான்.

டிரைவருக்குக் கோபம் வரத்தான் செய்தது. இருந்தாலும் அடக்கிக் கொண்டான்.

“தெரியாது!” – பொறுமையாக சொன்னான்.

இவர்களுக்குக் கெட்ட காலமோ கோவிந்தனுக்குக் கெட்ட நேரமோ தெரியவில்லை.

“பேரு சொர்ணா. எவன் கூடயோ இருக்காளாம். அவன்கிட்ட நான் போகனும்”.

டிரைவர் பேசவில்லை. பொங்கும் ஆத்திரத்தை அடக்கி பொறுமையாய் இருந்தான்.

“என்னை நீ கூட்டிப் போகனும். முடியாதுன்னா வெட்டிடுவேன்.”

‘இது உதை வாங்குற கேஸ் !’ – தீர்மானித்த டிரைவர் “எங்கே வெட்டு?” – கீழே குனிந்து காலுக்கடியில் கச்சிதமாய் இருந்த கடப்பாரை போல் இருந்த ஆயுதத்தை எடுத்து இறங்கினான்.

ஆயுதத்ததைப் பார்த்ததுமே கோவிந்தனுக்குச் சப்த நாடியும் ஒடுங்கியது. ஆறடிக்கும் அதிகமான ஆளைப் பார்த்ததும் மிரண்டான்.

“நீ போ தலைவரே!” – விலகி வழி விட்டான்.

உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு உயிர் வந்தது.

“நீ யெல்லாம் ஒரு ஆம்பளை. உனக்கு கையில அரிவாள் ஒரு கேடு. உங்களை மாதிரி ரவுசு பண்ற ஆளுங்களுக்காகத்தானே ஒரே போடு மண்டையை பொளக்க இந்த ராடை கையில வைச்சிருக்கேன்!” – என்று ஆத்திரத்துடன் கூறி கம்பியை வண்டிக்குள் போட்டு டிரைவர் ஆட்டோவைக் கிளப்பினான்.

‘டிரைவர் இந்த துணிச்சலில்தான் நின்றிருக்கிறான்!‘ – பெண்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ரொம்ப துணிச்சல்ப்பா!” – பங்கஜம் வாய்விட்டே சொன்னாள்.

“இந்த துணிச்சல் இல்லேன்னா நாங்க வண்டி ஓட்டி பிழைக்க முடியாதும்மா. எங்களை நம்பி வண்டியில உட்கார்ந்திருக்கிற பயணிகளையும் காபந்து பண்ண முடியாது. நாட்டுல ரௌடிங்க அட்டகாசம் தாங்கமுடியலை. நாலு பேர் மறைச்சாலும் தாக்கத்தான் இந்த கம்பி. இதுல உசுரும் போகும். ஆனாலும் எங்களுக்குப் பயணிகள்தான் முக்கியம்.” – அவன் பேசிக் கொண்டே வண்டியை விட்டான்.

‘தொழிலில் எவ்வளவு கஷ்டம் அக்கரை!’ – சொர்ணாவிற்கு அவனைப் பார்க்க பெருமையாக இருந்தது.

இருந்தாலும் கோவிந்தன் காலைச் சுத்தும் பாம்பு நினைத்தாள்.

அத்தியாயம்-11

சுதாகரனுக்கும் கீதாவிற்கும் பங்கஜம் வந்ததில் மகிழ்ச்சி.

“இந்த பொண்ணு புள்ள பெத்து உங்க கையில குடுக்கிறவரைக்கும் நான் இங்கேதான் இருப்பேன்.” – என்று பங்கஜம் சொன்னதில் அவர்கள் மகிழ்ந்து போனார்கள்.

“எங்களுக்கு நீ தாயே வந்தது போல” – கீதா அவளைக் கட்டிக் கொண்டாள்.

முத்துலட்சுமிதான் கொஞ்சம் சுணக்கமாக இருந்தாள்.

“நான் வந்ததுனால உன் வேலை போகாதுடி” – பங்கஜம் அவளைத் தேற்றினாள்.

தன் மனதிலுள்ளதைச் சொன்னதால் அவள் சங்கோஜப்பட்டுப் போனாள்.

மூவரும் அவுட்ஹவுஸில் வந்து தங்கினார்கள்.

டியூசன் விட்டு வந்த மணிமொழி, மணிகண்டன் பங்கஜத்தைக் கண்டதும் “ஹை! பாட்டி!” – வந்து ஒட்டிக் கொண்டார்கள். இவளும் அவர்களைப் பாசமாக அணைத்துக் கொண்டாள். எல்லோரும் இரவு சாப்பாடு முடித்து வரிசையாக படுத்தார்கள். இங்கு பேய் உலாவுறது உண்மையா அதனால் முதல் வேலைக்காரி வேலையை விட்டு நின்னது மெய்யா என்று சொர்ணா கேட்க நினைத்தாள்.

திருட்டு குற்றத்திலிருந்து தப்ப அவள் ஏதோ கொளுத்தி போட்டு விட்டு சென்றிருக்கிறாள். இப்போது அது முக்கியமில்லை. பங்கஜம் கெட்டவளாக இருந்தால் தனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்து ஆபத்து என்றதும் ஓடி வந்திருக்க மாட்டாள். பேய் பிசாசு இல்லை. நடந்தது அன்றே தெரிந்து விட்டது. மனதை மாற்றினாள்.

“அக்கா…!” – திரும்பிப் படுத்து பங்கஜத்தை அழைத்தாள்.

“என்னம்மா?” – அவளும் இவள் பக்கம் திரும்பினாள்.

“நம்ப தலைக்கு மேல கத்தி இல்லே?”

“ஆமா”

“தப்பிக்க வழி?”

“நான் கோமளத்தை டோஸ் விட்டா மாதிரி உன் புருசன் கையைக் காலை உடைச்சி அப்பால துாக்கிப் போடனும்.” – முத்துலட்சுமி சொன்னாள்.

“என்ன கோமளத்தை நீ டோஸ் விட்டியா ?! எதுக்குடி?” – பங்கஜம் சேதி தெரியாமல் கேட்டாள்.

சொர்ணா நடந்தது சொன்னாள்.

“அவளுக்கு வாய்க்கொழுப்பு திமிரு அடக்கினது சரி” – என்று ஆமோதித்த பங்கஜம் “விசயம் கேள்விப் பட்டு நானும் அன்னைக்கே டோஸ் விட்டேன். ஏன்டி நீ குழந்தைப் பெத்தவளா குடி கெடுத்தவளான்னு எடுத்த எடுப்புலேயே எகிறினேன். மனசுல இருக்கிறதுதான்டி வார்த்தையில வரும். நீ சரியா நடந்தாத்தான்டி மத்தவங்களும் சரியாத் தெரிவாங்க. நீ கோணல் பார்வை பார்த்தீன்னா சரியா இருக்கிறதும் உன் கண்ணுக்குத் கோணலாத்தான் தெரியும். பெத்தவங்க பேச்சுதான் புள்ளைங்க வாயில வரும். அதைத்தான் தாயைப் போல புள்ளை நுாலைப் நுாலைப் போல சேலைன்னு பெரியவங்க சொல்வாங்கன்னு விட்டேன்.”.

“அவ கம்முன்னு இருந்தாள். நான் விடலை.”

“நீ படிச்சிருக்குறீயா? படிச்சவங்க வாயைத்தான் பார்த்திருக்குறீயா? நாலெழுத்துப் படிச்சிருந்தால் நல்லது கெட்டது தெரியும் உள்நாட்டு வெளிநாட்டு சேதி, நடப்பெல்லாம். தெரியும். ஆம்பளைத் தொடாம பொம்பளைப் புள்ளை பொத்துக்கிற காலம் இது. விஞ்ஞானம் அவ்வளவு துாரம் முன்னேறி இருக்கு. சோதனை குழாய் குழந்தை, வயித்துல கரு வைச்சி வளர்ற குழந்தைன்னு விதவிதமா பெத்துக்கலாம். இந்த கதைதான் என் எசமான் வீட்டுல நடக்குது. சொர்ணா வயித்துலேயும் இப்புடித்தான் குழந்தை இருக்குது. இனி அவுங்களைப் பத்தி நாக்கு மேல பல்லு போட்டுப் பேசினே பேசின நாக்கை இழுத்து வைச்சி வெட்டுவேன்.”

“என்னைப் பத்தித் தெரியனும்ன்னா காளாஞ்சு குப்பம் கண்ணுசாமியைக் கேள். கதைக் கதையாய்ச் சொல்வான். சின்ன வயசுல அவன்தான் என்னைத் தப்பாப் பார்த்தான். டாப் எகிறிப் போச்சு. தொட்டவன் ஒருத்தன் கையை முறிச்சி இருக்கேன். மரியாதை இல்லாம பேசினவன் பல்லு காணாம போயிருக்கு. இன்னைக்கும் என் உடம்ல தெம்பு இருக்கு. மனசுல தெகிரியம் இருக்கு. கெழவிதானேன்னு நெனைக்காதே டாப் எகிறிடும். அப்புடி இப்புடின்னு இன்னும் என்னென்னமோ விட்டேன். ஆள் கப்சிப்.“ – நிறுத்தினாள்.

‘இந்த வயதில் எவ்வளவு துணிச்சல்!?‘ பங்கஜத்தை நினைக்க சொர்ணாவிற்கு பிரமிப்பு வந்தது.

“அக்கா! நீங்க விட்ட டோஸ்ல இவ என் புருசனுக்குச் சேதி சொல்லி அனுப்பி இருப்பாளா?!” – சொர்ணா தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

“அப்புடியெல்லாம் இருக்காது. கோமளத்துக்கு அவ்வளவு துணிச்சல், தெம்பு இல்லே. இருந்திருந்தால் அவள் திருப்பி என்னை எகிறி இருப்பாள். கோமளமெல்லாம் பயந்து ஓடுற நாயைக் கல்லெடுத்து துரத்துற சாதி. நிமிர்ந்து நின்னா பயந்துடுவா. அடுத்து உன் புருசன் முகம் அவளுக்குத் தெரியாது. தெரிய வாய்ப்பில்லே. அப்படி இருக்கும்போது அவன் இருப்பிடம் எப்படி தெரியும்?” – கேட்டாள்.

நியாயமாகத்தானிருந்தது. சொர்ணா மௌனமாக இருந்தாள்.

“நான் கோமளத்தை விட்டா போல கோவிந்தனை யாராவது நிறுத்தி ஏன்டா நீ யெல்லாம் ஒரு ஆம்பளையா? ஒரு நாளாவது புருசனா யோக்கியமா நடந்து பொண்டாட்டி புள்ளைங்களுக்கு உழைச்சுப் போட்டிருக்குறீயா? உழைச்சதைக் குடிச்சிட்டு படுக்கப் பாய் தேடுற நாய் போலதானேடா வீடு, பொண்டாட்டியைத் தேடிப் போறே. அதையும் சரியாய்ச் செய்யாம எவளோ ஒருத்தியோட ஓடிட்டே! நியாயமா?“

“இன்னைக்கு ஏன் திரும்பி வந்தே புருசன் ஓடிப் போய் திரும்பினா பொண்டாட்டி சேர்த்துக்கனுமா? பொம்பளை மனசு சத்திரம், சரணாலயமா இருக்கனுமா? அந்த கண்ணகி தப்புப் பண்ணிட்டாடா. மாதவி வீட்டிலேர்ந்து திரும்பிய கோவலனை அப்படியே போன்னு அடிச்சு விரட்டி துரத்தி இருந்தாள்ன்னா அவ பொம்பளை. மனுச் மனசு மேல இரக்கம் வைச்சு போனாப் போவுதுன்னு மன்னிச்சு சேர்த்துக்கிட்டாப் பாரு அது தப்பாப் போச்ச. அதையே எல்லா ஆம்பளைங்களும் கெட்டியாப் புடிச்சிக்கிட்டு புருசன் கட்டின பொண்டாட்டியை விட்டு எவளோட குடித்தனம் நடத்தி திரும்பினாலும் சேர்த்துக்கனும்ன்னு முறை வைச்சிட்டீங்க. பொண்ணைக் குளிப்பாட்டுறதுக்கு இதுதான் பண்பாடு கலாச்சாரம்ன்னு பேர் வைச்சிடீங்க. உதைக்கனும் உங்களைன்னு ரெண்டு போடு போட்டான்னா ஓடிடுவான்” – நிறுத்தினாள்.

‘அக்கா எவ்வளவு தெளிவாய் சொல்கிறாள்!’ – நினைக்க சொர்ணாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

“நீ ஒன்னும் கவலைப் படாதே. அந்த ஆள் வீரம் ஆட்டோக்காரன்கிட்ட தெரிஞ்சுப் போச்சு. கோவிந்தன் நம்பளைத் தேடி வரட்டும் நானே விளக்கமாத்தால அடிக்கிறேன்.” – என்றாள்.

‘தேடிவருவானா இப்படியெல்லாம் நடக்குமா?!’ – சொர்ணாவிற்கு யோசனை வந்தது.

‘யார் சொல்லி இருப்பா?’ – யோசனை ஓடியது.

ராஜசேகரன் – முத்துலட்சுமி மனசுக்குள் சொல்லிக் கொண்டாள்.

அத்தியாயம்-12

இரவு சரியான துாக்கம் இல்லாதததினால் சொர்ணா காலையிலேயே சுரத்தை இல்லாமலிருந்தாள்.

“அம்மா!“ – மணிமொழி அழைத்தாள்.

“என்ன கண்ணு?” – சொர்ணா மகள் தாவங்கட்டையைப் பிடித்தாள்.

“எங்க வாத்தியார் உங்களை பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிவரச் சொன்னாங்கம்மா.”

புருசனுக்குப் பயந்து வெளியே தலைக் காட்டக்கூடாது என்று முடிவிலிருந்தால் இது என்ன சோதனை? – திகைத்தாள்.

“ஏன் ஏதாவது தப்புப் பண்ணுனீயா. சரியாப் படிக்கலையா?” – கேட்டாள்.

“இல்லைம்மா. என் படிப்பைப் பத்தி பத்தி அவர் என்னமோ உங்ககிட்ட சொல்லனுமாம்!”

‘குழந்தை நன்றாக படிக்கிறாள். சொல்ல என்ன இருக்கிறது?’

“அம்மா! வாத்தியார் என்னையும் அம்மாவைக் கூட்டிவாடான்னார்ம்மா.” – மணிகண்டன் மழலையில் சொன்னான்.

‘இது என்ன புதுப் பிரச்சனை? ஆண்டவனுக்கு தான் உயிரோடு இருக்கக்கூடாது என்கின்ற எண்ணமா? கோவிந்தன் கையால் வெட்டுப் பட்டுச் சாகவேண்டும் என்பது விதியா?!’

“என்னம்மா யோசனை?” – மகன் உலுக்கினான்.

“நாளைக்கு வர்றேன்!” – அவர்களை இப்போதைக்குச் சமாதானப்படுத்த நினைத்தாள்.

“இன்னைக்கே கூட்டி வரச் சொன்னாங்க.” மணிகண்டன் விடாமல் உலுக்கினான். அழைத்து வரவில்லையென்றால் வாத்தியாரிடம் அடி விழும் என்கின்ற பயம் அவனுக்கு.

பங்கஜத்திற்கு சொர்ணாவின் சங்கடம் தெரிந்தது.

“அம்மாவுக்கு வயிறு பெரிசா இருக்கில்லே. நடக்க முடியாது. உடம்பு வேற சரியில்லே. நாளைக்கு வருவாள் போ” – பங்கஜம் அவனைச் சாமாதானம் படுத்தினாள்.

“ஐயோ! சார் அடிப்பார்! அம்மாவை ஆட்டோவுல கூட்டிக்கிட்டு துணைக்கு நீங்களும் வாங்க பாட்டி” – மணிகண்டன் அவர்களுக்கு ஐடியா சொன்னான்.

பிள்ளைகளுக்கு அடிவிழும் என்ற போதே சொர்ணாவிற்கும் பங்கஜத்திற்கும் சொரக்கென்றது.

ஒருவரையொருவர் பார்த்தார்கள்.

போகவில்லையென்றால் குழந்தைகள் அடிக்குப் பயந்துகொண்டு பள்ளிக்கூடம் போக அடம் செய்வார்கள். அவர்களுக்கு எப்படி தெரியும் தலைக்கு மேல் ஆபத்து. சொன்னாலும் புரியாது.

அவர்களுக்குப் படிப்பு, வாத்தியார் பயம். அவர்கள் சொல்படி கேட்பதைத் தவிர வழி இல்லை.

“எத்தினி மணிக்கு வரனும்?” – கேட்டாள்.

“பத்திலேர்ந்து பன்னிரண்டுகுள்ள வரனும்.”

“வர்றேன் போங்க.”

“கண்டிப்பா வரனும் ! வரலைன்னா எங்களுக்கு அடி விழும்.”

“கண்டிப்பா வர்றேன்!“

அதன் பிறகே அவர்கள் விலகினார்கள்.

“எப்படி போறது?” – அவர்கள் தலை மறைந்த பிறகு பங்கஜம் சொர்ணாவைக் கேட்டாள்.

“முகத்தை மூடிகீடி ஆட்டோவுலதான் போய்த் திரும்பனும்.”

“எதுக்கும் நான் கீதாம்மாகிட்ட சொல்லிட்டு வர்றேன்” – பங்கஜம் எழுந்தாள்.

“அவுங்க அனுமதியோட சொல்லிட்டுத்தான் வெளியில போகனும். யார் வீட்டை விட்டு வெளியில போனாலும் பெரியவங்ககிட்ட சொல்லிட்டுத்தான் போகனும். அப்பதான் நாம திரும்பி வர லேட்டானாலும் அவங்க தைரியமா இருப்பாங்க இல்லே தேடி வருவாங்க. இது நல்ல பழக்கம் என்ற பங்கஜம் சொன்னா கார்ல கீதாம்மாவே கொண்டுவிட்டு அழைச்சி வரலாம்” – என்றபடி நடந்தாள்.

பங்களாவில் யாரும் இல்லை. போர்டிகோவில் கார்களும் இல்லை.

திரும்பி தொய்வுடன் வந்தாள். அவர்கள் இல்லாத சேதி சொல்லி, “ஆட்டோவுலதான் போகனும்” அமர்ந்தாள்.

முத்துலட்சுமியிடம் சொல்லிவிட்டு ஒன்பதரை மணிக்கெல்லாம் இருவரும் வாசலுக்கு வந்தார்கள்.

ஆட்டோ பிடித்து ஏறினார்கள். அது கிளம்ப….இருவரும் கோவிந்தன் கண்ணில் படுகிறானா என்று கண்கொத்தி பாம்பாக அக்கம் பக்கம் சாலையைக் கவனித்தார்கள்.

ஆட்டோ பள்ளியில் நுழையும்போது மணி 10.10

கேட் காவல்காரன் “யாரைங்க பார்க்கனும்?”- ஓடி வந்து இறங்கியவர்களிடம் கேட்டான்.

“வாத்தியாரைப் பார்க்கனும்ன்னு புள்ளைங்க சொன்னாங்கப்பா” – பங்கஜம் சொன்னாள்.

“புள்ளைங்க எந்த வகுப்பு சொல்லுங்க ?”

“மணிமொழி நான்காம் வகுப்பு. மணிகண்டன் இரண்டாம் வகுப்பு“ – சொர்ணா சொன்னாள்.

அவன் சொன்றான். ஐந்து நிமிடத்தில் அவர்களுடன் திரும்பி வந்தான்.

“வாங்கம்மா” – மணிமொழி அவர்களைக் கூட்டிக் கொண்டு தலைமை ஆசிரியர் அறையை நோக்கி நடந்தாள். பின் தொடர்ந்தார்கள்.

அவர் பெரிய மேசையின் பின் உள்ள நாற்காலியில் மர்ந்திருந்தார். இவர்கள் எதிரில் சென்றதும்

‘உட்காருங்க” – நாற்காலிகளைக் காட்டினார்.

சொர்ணா, பங்கஜம் அமர்ந்தார்கள்

“நீங்களும் உட்காருங்க” – மணிமொழி, மணிகண்டனுக்கும் நாற்காலிகளைக் காட்டினார்.

சொர்ணா வியப்பாய்ப் பார்த்தாள்.

“என்ன! தலைமை ஆசிரியர் குழந்தைங்களை நிக்க வைச்சி பேசாம உட்காரச் சொல்றாரேன்னு பார்க்கிறீங்க. குழந்தைங்களுக்கும் நாம மதிப்பு கொடுக்கனும், மதிப்பாய் நடத்தனும் அப்பதான் அவுங்க மனசிலேயும் மதிப்பு மரியாதை வளரும். வாத்தியாருக்குப் புள்ளைங்க அடிமை இல்லே நிக்க வைச்சுப் பேசுறதுக்கு. இது ரொம்ப பேருக்குத் தெரியமாட்டேங்குது. வாத்தியார்கிட்ட புள்ளைங்க வாய்ப் பொத்திதான் நிக்கனும் கை கட்டிதான் பேசனும்ன்னு நினைக்கிறாங்க. வளர்ற புள்ளைங்களும் அதையேத்தான் பின்பற்றும். அப்புறம் எப்படி பாசம் நேசம் மனித நேயம் மிளிரும்.” என்றார்.

மணிமொழி, மணிகண்டன் அமர்ந்தார்கள்.

“இந்தாங்கம்மா ரேங்க் கார்டு. நாங்க வருசத்துக்கு ஒரு முறை பெத்தவங்களை அழைச்சி நேரா ரேங்க் கார்டு கொடுப்போம் குறை நிறைகள் சொல்வோம். உங்க புள்ளைங்க நல்லா படிக்கிறாங்க. குறை இல்லே நிறைவா இருக்காங்க..” – சொர்ணாவிடம் கொடுத்தார்.

பார்த்த தாய்க்கும் பங்கஜத்திற்கும் பெருமையாக இருந்தது.

அதேசமயம் ‘அடப்பாவி! இதைச் சொல்லத்தானா அழைச்சே?!. நாங்க உசுரைக் கையில புடிச்சிக்கிட்டு வந்திருக்கோம்ய்யா. திரும்பி வீட்டுக்கு உசுரோட போறோமா பொணமா போறோமா தெரியலைய்யா’ – பங்கஜத்திற்குச் சொல்ல வேண்டும் போல் தோன்றியது.

இதுபோன்ற பள்ளிக்கூடம் ஆசிரியரிடம் படித்தால் எந்த பிள்ளையும் உருப்படும் சொர்ணா நினைத்தாள்.

“நன்றிய்யா” – ரேங்க் கார்டில் கையெழுத்துப் போட்டு அவரிடம் கொடுத்தாள்.

அறையை விட்டு வெளியே வந்தார்கள்.

பிள்ளையைப் பெற்றுக் கொடுக்க இன்னும் மூன்றே மாதம். அதற்கடுத்து குழந்தை ஆரோக்கியம் கருதி தாய்ப் பால் கொடுக்க வேண்டுமென்றால் மேலும் மூன்று மாதங்கள் இல்லை ஆறு மாதங்கள். அதற்கடுத்து இந்த வாழ்க்கை இல்லை. மீண்டும் குப்பத்து வாழ்க்கை. பிள்ளைகளுக்கு இந்த பள்ளிகூடமில்லை படிப்பு இல்லை. சொர்ணா கவலைப்பட்டாள்.

“என்ன யோசனை?”- பங்கஜம் கேட்டாள்.

சொன்னாள்.

“அதை அப்புறம் பார்த்துக்கலாம். நாம இப்போ உசுரோட போற வழியைப் பாரு.”

இது சொர்ணாவைக் கலக்கியது.

பயத்துடன் ஆட்டோவில் ஏறினார்கள். மீண்டும் அதே திக் திக் பயணம். நல்ல வேளை வீடு வரும் வரை எந்த தொந்தரவுமில்லை. ஆட்டோவை விட்டு இறங்க கேட்டில் கூர்க்கா இல்லை.

‘எங்கே?’ – பார்த்தார்கள்.

அவன் அதிசயமாக போர்டிகோவில் முகம் வாட்டமாக இருந்தான். அருகில் டாக்டர் சந்திரசேகரன் கார்.

‘யாருக்கு என்ன?’ – இருவர் மனதிலுமே திகில் பரவியது.

‘கோவிந்தன் நுழைந்துவிட்டானா?!’ – பரபரப்பாக நுழைந்தார்கள்.

“என்னப்பா?” – பங்கஜம்தான் தாங்கமுடியாமல் கூர்க்காவிடம் கேட்டாள்.

“கீதாம்மா…கீதாம்மா…” – அவன் சொல்ல முடியாமல் விம்மினான்.

பங்கஜம் வேகமாக பங்களாவிற்குள் நுழைந்தாள். அவளைத் தொடர்ந்து சொர்ணாவும் சென்றாள்.

கட்டிலில் துவண்ட கொடியாய் கீதா கிடந்தாள். அருகில் முகம் இறுகி அவள் கணவன் டாக்டர்.

“என் அல்லிக் கொடிக்கு என்னய்யா?” – பங்கஜம் தாங்கமுடியாமல் சுதாகரனைக் கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் போக டாக்டரைப் பார்த்தாள்.

“பதற்றப் படாதீங்க. மயக்கம் படுத்திருக்காங்க.” – என்றார் அவர்.

பங்கஜத்திற்கு நம்பிக்கை இல்லை “மயக்கத்துக்கா நீங்க வந்திருக்கீங்க?” – கேட்டாள்.

கீதா கண் விழித்தாள்.

“எனக்கு என்ன டாக்டர்?” – தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்தாள்.

சந்திரசேகரன் மெல்ல புன்னகைத்து “சுதாகரன் அப்பாவாகப் போறார்!” என்றார்.

“டாக்டர்!” – அவன் கூவினான்.

கீதா நம்ப முடியாமல் அவரைப் பார்த்தார்.

“நிசம் மேடம். நீங்க பீரியட் தள்ளிப் போறதைப் பத்தி கவலைப்படலை. வழக்கமா அப்பப்ப விட்டு வர்றதுன்னு அலட்சியமா இருந்திருக்கீங்க. இப்போ நீங்க சத்தியமா கர்ப்பம்.” என்றார்.

கீதாவிற்கு ஆச்சரியமாக இருந்தது,

“இது ஆச்சரியம் அதிர்ஷ்டமில்லே சுதாகரன். இனி நமக்கு குழந்தையே பொறக்காதுன்னு முடிவெடுத்து தத்தெடுப்பாங்க வளர்ப்பாங்க. அந்த குழந்தை வளர்ப்பிலேயே அவுங்க கர்ப்பம் ஆவாங்க. காரணம் மனசெல்லாம் அந்த குழந்தையை நோக்கியே போகுது, கையில குழந்தை இருக்குங்குற தைரியம் உள்ளுக்குள்ள இருக்கிற இறுக்கம் தளருது, விளைவு கர்ப்பம் ஆகிறாங்க. இது மனசு செய்யுற மாற்றம். இதைத்தான் சில பேர் தப்பா எடுத்துக் கிட்டு சாமி கொடுத்தார் வரம் வாங்கினேன் அப்படி இப்படியெல்லாம் சொல்லி வீணா வேண்டுதல் நிறைவேத்துறாங்க.”

சொர்ணா சிலையாக நின்றாள்.

அத்தியாயம்-13

கீதா உண்டாகி இருப்பது உண்மையிலேயே எதிர்பாராதது. சந்தோசமென்றாலும் சொர்ணாவிற்குள் அவளையுமறியாமல் ஒரு நெருடல்.

“ஏன் சொர்ணா திடீர்ன்னு ஒரு மாதிரியாகிட்டே?“ – கவனித்த பங்கஜம் கேட்டாள்.

“கீதாம்மா உண்டாகிட்டாங்க இந்த குழந்தை?” – தன் வயிற்றைத் தொட்டுக் காட்டி கேட்டாள்.

“அதுக்கென்ன?”

“ஒப்புக்கு ஏத்துக்கப்படலாம். நாளை நிராகரிக்கப்படலாம்.”

“ஏன் உனக்கு இந்த திடீர் சந்தேகம்?”

“உரியவங்களுக்கு இல்லேங்குற போதுதான் இதுக்கு மதிப்பு மரியாதை.”

“உன் தலையில விடுஞ்சிடும்ன்னு கவலைப்படுறீயா..?”

“அப்படி விடிஞ்சா கவலைப்டாமாட்டேன் சந்தோசமா ஏத்துப்பேன். செலவு செய்ஞ்சவங்க விடமாட்டாங்க. ஏழைகிட்ட ஏன் பாவம் விடனும்ன்னு ஏத்துப்பாங்க. ஆனா வளர்ப்பு விதம் வேறு விதமா இருக்கும்”.

“பாரபட்சமா வளர்ப்பாங்கன்னு சொல்றீயா?”

“நிச்சயமா. கெடைக்காதவங்களுக்குக் கெடைச்சிருக்கு. அது உசுரைவிட மேலான பொக்கிசம். கொண்டாடுவாங்க. இது இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாய் ஏத்துக் கொள்ளப்பட்டது. கொண்டாட்டம் பராமரிப்பு எல்லாம் கொஞ்சம் கம்மியா இருக்கும். இது குழந்தை மனசைக் காயப்படுத்தும். ஏம்மா என்னைப் பெத்தேன்னு தனியே நின்னு அழும் ஏங்கும். ஐயோ! ஏன் பொறந்தோம்ன்னு தன்னையே நொந்துக்கும்” – சொர்ணாவிற்குச் சொல்லச் சொல்ல அழுகை முட்டியது. தொண்டை கரகரத்தது.

பங்கஜதத்திற்கும் முத்துலட்சுமிக்கும் உண்மை புரிய வருத்தமாக இருந்தது.

சொர்ணா தொடர்ந்தாள். “இந்த புள்ளையைக் கலைக்க நிறைய ஏற்பாடுக்கா. மறைமுக எதிரிங்க. நான் தைரியமா நின்னு சமாளிச்சேன். வெளிப்பார்வைக்கு வேணும்ன்னா இந்த குழந்தைக்கு இந்த வயிறு வெறும் தங்குமிடமாத் தெரியலாம். ஆனா இதுல என் ஊண், உறக்கம், இரத்தம் இருக்கு. சத்தியமா இந்த குழந்தை மேல எனக்குத் துளி பாசம் கெடையாது. என்னால் இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தை நாளைக்கு கஷ்டப்படும்போது மனசு வேதனைப்படும் தாங்காது. நானும் சராசரி மனுசி. பணத்துக்குத்தான் பஞ்சமேத் தவிர மனசுக்கில்லே.” குரல் கம்மினாள்.

“கீதாம்மா உண்டானதை நீ விரும்பலையா சொர்ணா?” – முத்துலட்சுமி கேட்டாள்.

”நான் விரும்பறேன். வாடிப்போனவங்க ஒன்னுக்குப் பத்து பெத்து ஆசையா வளர்க்கலாம் தப்பே கிடையாது. எனக்கு இது வேண்டாத குழந்தை ஆகிடுமோன்னுதான் கவலை. வேலைக்காரிக்குப் பொறந்ததுன்னு நினைச்சி ஒதுக்கி ஓரம்கட்டப்பட்டுவிட்டால் ஒரே ரத்தம் திண்ணையில சுருண்டுடுமோன்னுதான் வருத்தம்”.

“ஐயாவும் அம்மாவும் அப்புடி பண்ண மாட்டாங்க.”

“கௌரவத்துக்காக வாங்கி அனாதை ஆசிரமத்துல விடுவாங்கன்னு சொல்றீயா?”

“நீ ரொம்ப யோசிக்கிறே, குழப்பிக்கிறே” – பங்கஜம் சொன்னாள்.

“என் வேதனை யோசிக்க வேண்டிய நிலையில நானிருக்கேன்.” என்றவள். சிறிது நேரம் அமைதியாக இருந்து எதைப் பற்றியோ தீவிரமாக சிந்தித்து, “ நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.!” – என்றாள் திடமாக

“என்ன?”

“இது என் குழந்தை நானே வளர்க்கப் போறேன்”.

“சொர்ணா.!!”

“இது எனக்கு சுமைதான். இருந்தாலும் இது எதிர்காலம் பாதிக்கக்கூடாது நல்லா இருக்கனும்ன்னா இதுதான் வழி.”

“கீதாம்மா, சுதாகரன் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க.”

“பேசனும் ஒத்துக்கனும் ஒத்துக்க வைக்கனும். ஒப்பந்தத்தை மீறி குழந்தை மேல நீ பாசம் வைச்சிருக்கேன்னு என் மேல குத்தம் சொன்னாலும் ஆமாம்ன்னு சொல்லத்தயார். இதை நான் கூலியாகத்தான் சுமந்தேன். அதுக்காக எக்கேடாவது கெட்டுப்போகட்டும்ன்னு என்னால உதறி தள்ளிட்டுப் போக முடியாது. நான் தப்பப் பண்ணிட்டேன். இப்படி ஒரு நிலைமை சூ ழ்நிலை வரும்ன்னு தெரியாம யோசிக்காம எதையும் பேசாம தலையாட்டிட்டேன். யோசிச்சிருந்தால் உங்களுக்குன்னு ஒரு சொந்த குழந்தை பொறந்தா இதையும் அப்படி வளர்ப்பீங்கன்னு சத்தியம் பண்ணிக் கொடுங்கன்னு கேட்டிருப்பேன்.”

“உனக்கென்ன அக்கறைன்னு துாக்கிப் போட இது ஒன்னும் மண்ணோ பொருளோ இல்லே. உயிர். மனுக உயிர். இது இல்லையேன்னுதான் அவுங்களுக்கு இத்தனைப் பாடு. சொந்தத்துல வந்ததும் வந்ததை விட்டுட்டாங்கன்னா எப்படி பொறுத்துக்க முடியும் ?”

“உங்களுக்குத் தெரியாது. ஒருநாள் நீங்க இல்லாத சமயம். மணிமொழியும், மணிகண்டனும் என் மடியில உட்கார்ந்துக்கிட்டு இது என்ன பாப்பாம்மான்னு என் வயித்தைத் தொட்டுக்காட்டி கேட்டாங்க. நான் தெரியாதுன்னேன். அது நம்ப பாப்பாதானே. தம்பிப் பாப்பாவா இருந்தா நான் வைச்சிப்பேன். தங்கச்சி பாப்பாவா இருந்தா அக்காக்கிட்ட குடுத்துடுவேன். என்னைக்கும்மா இந்த பாப்பாவை நம்ம வீட்டுக்குக் கொண்டு போறோம்ன்னு கேட்டாங்க. நமக்குப் பாசம் இல்லே. இதுங்களுக்கு இதன் மேல பாசம் பிடிப்பு இருக்கேன்னு நான் அப்படியே ஆடிப்போயிட்டேன். இதுங்களைப் பிரிச்சி எப்படி கொண்டு போறதுன்னு ரொம்ப குழம்பிப் போனேன். பரிச்சா பிள்ளைங்க மனசு நோகும் வழி இல்லேன்னு மனசைத் தேத்திக்கிட்டேன். இது நம்ம பாப்பா இல்லே. இந்த வீட்டுப் பாப்பா. இதை விட்டுட்டுப் போகனும்ன்னு அதுங்களுக்குப் புரியுதோ புரியலையோ சொல்லி வைச்சேன். இப்போ அந்த கவலை விட்டுப் போச்சு. நானே எடுத்துப் போறேன்.!” அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

‘வாடகை தாய்க்குள் எத்தனைப் பிரச்சனை!‘ – பங்கஜமும் முத்துலட்சுமியும் ஆடிப் போனார்கள்.

“நீ அவசரப் படாதே. நான் பங்களாவுக்குப் போய் பேசி முடிவு சொல்றேன்!” – பங்கஜம் எழுந்தாள்.

உடனே திரும்பி வந்து அந்த அதிர்ச்சியான செய்தியைச் சொன்னாள்.

“என்னக்கா சொல்றீங்க?” – சொர்ணாவும் முத்துலட்சுமியும் சேர்ந்து அலறினார்கள்.

“ஆமாம். இந்த கருவைக் கலைச்சே ஆகனும்ன்னு கீதாம்மா சுதாகரன்கிட்ட பிடிவாதம் பிடிக்க..அவர் தட்ட முடியாமல் சந்திரசேகரன் மலர் மருத்துவ மனைக்குக் கொண்டு போயிட்டாராம்.!” – என்றாள்.

“யார் சொன்னா?!”

“தோட்டக்காரன்.!”

“இதை தடுத்தே ஆகனும்!” – சொர்ணா தன் நிலையை மீறியும் பரபரப்பாக எழுந்தாள்.

மூவரும் வெளியே வந்து ஆட்டோ பிடித்து விரைந்தார்கள். மருத்துவ மனை வாசலிலேயே சுதாகரன் நின்றான்.

“ஐயா! அம்மா எங்கே?” – பங்கஜம் பதற..

“நீங்க போய் பார்த்தும் புண்ணியமில்லே.” – என்றான் அவன் அமைதியாக.

“என்னய்யா சொல்றீங்க?!” – என்றாள் சொர்ணா அதிர்ந்து.

“கீதா எடுத்த முடிவுல தப்பில்லே. எப்படியா இருந்தாலும் நாம பெத்த குழந்தை மேலதான் நம்மையும் அறியாம பாசம். நேசம் வரும். இத்தனை நாள் அதே கனவா நினைவா ஊட்டி வளர்த்தப் புள்ளைக் காணாம போயிடும். எனக்குத் தலைப் புள்ள அந்த புள்ளைதான் அதுதான் எனக்கு வேணும். இது தேவை இல்லேன்னுட்டா. இனி எனக்கு கருவே தரிக்கக் கூடாதுன்னு கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யனும்ன்னு முடிவைச் சொல்லிட்டா. ஏம்மான்னு கேட்டேன். மறுபடியும் இந்த பிரச்சனை தலை துாக்கி நம் மனசு சபலப் படக்கூடாதுன்னுட்டா. சொர்ணா பெத்துக் கொடுக்கிற புள்ளதான் நம்ம ஒரே வாரிசு. இந்த கரு நான் மலடி இல்லேங்குற குறையைத் தீர்த்து வைச்சிடுச்சு நன்றின்னு சொல்லிட்டா. எனக்கும் முழு சம்மதம் கொண்டு வந்தேன். எல்லாம் முடிஞ்சிப்போச்சு இப்போ கீதா பெட்டுல மயக்கத்துல இருக்கா”- முடித்தான்

இடி விழுந்த அதிர்ச்சி.

“ஐயோ…ஓ அம்மா…ஆ..!” சொர்ணா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டாள்.

அள்ளி எடுத்து ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அரை மணி நேரத்தில் தங்க விக்கிரம் போல ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாயையும் சேயையும் கொண்டு வந்து கீதாவிற்கும் பக்கத்தில் உள்ள கட்டிலில் போட்டார்கள்.

கீதா கண்விழித்தாள். சொர்ணா கட்டிலை தன் கட்டிலோடு சேர்த்து இணைத்துப் போடச் சொன்னாள்.

ஒட்டிப் போட்டார்கள்.

சொர்ணா கண்விழித்தாள்.

தாயையும் சேயையும் ஆசையாகப் பார்த்த கீதா “நீ எங்களுக்குத் தலைப் பிள்ளை கொடுத்தவள். நீ எங்களுக்குத் தத்துப் பிள்ளையாய் கடைசிவரை குழந்தை குட்டியோட எங்களோட இருக்கனும். அப்போதான் என் குழந்தையை நான் தொடுவேன்.” என்றாள்.

“அம்மா….ஆ” – சொர்ணா தழுதழுத்தாள்.

“முத்துலட்சுமி யாருங்க?” – கேட்டுக் கொண்டே வார்டு பாய் வந்தான்.

“நான்தான். ஏன் என்ன?” – முத்துலட்சுமி அவனைக் கேட்டாள்.

“இதை ஒரு ஆள் உங்ககிட்ட குடுக்கச் சொன்னார்.” – தாளை நீட்டினான்.

நான்காக மடிக்கப்பட்ட அந்த தாளைப் பிரித்துப் படித்தாள்.

‘முத்துலட்சுமி, பங்கஜத்திற்கு…. ராஜசேகரன் எழுதியது.

நான் உண்மையில் நல்லவன். காதல் தோல்வி என்னைக் கொஞ்சம் மாத்திடுச்சு. கீதாவை பழி வாங்கனும்ன்னு புத்தி வேலை செய்ஞ்சிடுச்சு. அதனால கீதாவைக் கண்கொத்தி பாம்பா கண்காணிச்சேன். என் துரோகம் அவளுக்குக் குழந்தை இல்லேன்னு நினைச்சு சந்தோசப்பட்டேன். வாடகைத் தாய் வந்ததும் ஆடிப்போனேன். சொர்ணா கருவைக் கலைக்கும்ன்னு உன்னை மிரட்டி பணம் குடுத்து பணிய வைச்சேன். நீ அரைகுறையாய்த்தான் ஒத்துழைச்சே. உன்னால அவ்வளவுதான் செய்யமுடியும். எனக்குத் தெரியும். கோவிந்தனைக் கண்டுபிடிச்சு துாண்டிவிட்டேன். அவனும் சரி இல்லே. கடைசியா நானே இறங்கினேன். கீதாவைக் கொலை செய்யனும்ங்குற நோக்கத்துல பங்களா போனேன். அப்போதான் புருசனுக்கும் பொஞ்சாதிக்கும் கருவைக் கலைக்க வாக்குவாதம். கீதாவுக்கும் சுதாகரனுக்கும் எவ்வளவு பெரிய மனசு. அப்படியே ஆடிப்போனேன். இந்த நல்ல மனசுக்கா நாம தொல்லைக் குடுத்தோம் கொலை செய்ய முயற்சிச்சோம்ன்னு வெட்கமாப் போயிடுச்சு. காதல் தோல்வி சகஜம் அது வெறியாய் மாறக்கூடாதுன்னு புத்தி வந்துது. கீதா சொல்படி கேட்டு நீங்க நல்லா இருக்கனும். கோவிந்தன் உங்களுக்குத் தொல்லை கொடுக்கமாட்டான். அவனைக் கொன்னுட்டேன். மன்னிக்கவும்.
-ராஜசேகரன்‘

முடித்தாள்.

எல்லாரும் சிலையாய் நின்றார்கள்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *