கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2025
பார்வையிட்டோர்: 6,764 
 
 

(2019ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13

அத்தியாயம்-7

சின்ன மின்னதிர்வில் சொர்ணா தப்பித்துக்கொண்டாள்.

வாழ்க்கை என்கிற பாதை எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை. யாருக்கு யார் கடன் படுவார்கள் உடன் படுவார்கள் என்பது புரியாத புதிர்.

சொர்ணாவிற்குச் செலவழிப்பதைப் பற்றி கீதா, சுதாகரனுக்குக் கவலை இல்லை.

இவர்களின் வாரிசை தாங்கும் உயிர் அவள். அந்த உயிரையும் உடலையும் சரியான முறையில் பேணி காத்தால்தான் ஆரோக்கியமான நல்ல வாரிசு கிடைக்கும் என்பது அவர்கள் எண்ணம்.

“உங்க வாரிசைச் சுமக்கிறவள் எந்த விதத்திலும் கஷ்டப்படக்கூடாது, கவலைப்படக்கூடாது” – என்று டாக்டர் சந்திரசேகரன் சொல்லி வைத்திருக்கிறார்.

கீதா, சுதாகரன் மெத்த படித்தவர்கள் மட்டுமல்ல நல்ல பணக்காரர்கள் உலக நடப்புகளையும் அறிந்தவர்கள். திருமணம் முடிந்து ஒரு வருடம் கீதா வயிற்றில் புழு பூச்சி இல்லாமல் போனதும் அறிவு பூர்வமாய் முதலில் மருத்துவ உதவியைத்தான் நாடினார்கள்.

பரிசோதித்த டாக்டர், ‘ஏனில்லை….?’ மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொண்டார். கணவன் மனைவியைப் பல பரிசோதனைகள் செய்தார்.

“உங்களுக்கு ஒரு குறையில்லை. ஆனா ஏன் குழந்தை இல்லைங்குறதுதான் புரியாத புதிர். நுாத்துல பத்து இதுபோல உண்டு கவலைவேண்டாம். அடுத்த வருசம் பொறக்கலாம், இல்லே பத்து வருசம் கழிச்சியும் பொறக்கலாம். அப்படி நடந்திருக்கு. ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டு குறை தீரனும்ன்னு பிரார்த்தனை செய்யுங்க. நல்லது நடக்கும்.” – என்றார். இதை டாக்டர் சந்திரசேகரன் மட்டும் சொல்லவில்லை. இவர்களைப் பரிசோதித்த அத்தனை டாக்டர்களும் இதையேத்தான் சொன்னார்கள்.

‘மருத்துவர்கள் கைவிட்ட பிறகுதெய்வம்தானே எல்லோருக்கும் கை கொடுக்க வேண்டும்!‘ – இவர்கள் பார்வை கடவுள் பக்கம் திரும்பியது.

“பண்ணாரி அம்மனுக்கும் முண்டக் கன்னிக்கும் வேண்டு. காசிக்குப் போய் கருமம் தொலை. ராமேஸ்வரம் போய் வரம் வாங்கு. அந்தப் பரிகாரம் இந்தப் பரிகாரம் செய். அங்கே தொட்டில் கட்டு இங்கே கட்டு”- என்று ஆயிரத்தெட்டு அலைக்கழிப்புகள். அது அல்லாமல் சாமியார்கள் சமாச்சாரங்கள் வேறு.

“இரவு பன்னிரண்டு மணிக்கு நிர்வாண பூஜை நடத்த வேண்டும் மனைவியை மட்டும் அனுப்பு!” சொன்னார்கள்.

ஒரு சாமியார் “பொது பூஜை செய்துட்டு அறை பூஜை செய்யாமல் போனால் தெய்வ குத்தம் வரும்!“ – மிரட்டினான்.

இன்னொருத்தன் துணிந்து, “வாம்மா உள்ளே!” – அறைக்குள்ளிழுத்தான்.

“செருப்பு பிய்ஞ்சிடும்!” – கீதா யோசிக்கவே இல்லை. கத்தினாள்.

“சாமி மேல பழி போட்டு அநியாயம் பண்ற உங்களைச் சுட்டுக் கொன்னுபுடுவேன்!” – இவர்கள் வண்டவாளம் புரிந்த சுதாகரன் எச்சரிக்கையாகவே சென்றான். துப்பாக்கியைக் காட்டினான். தொலைந்து போனார்கள்.

ஒரு கொலைக்கார சாமி, “ஏழு வயசு தலைச்சன் புள்ளையை நரபலி கொடுத்தால் அந்த புள்ளையோட ஆத்மா வந்து உங்க வயித்துல கருவாய் மாறும்!” – சொன்னான்.

“புள்ளையைக் கொன்னு புள்ளையா?! அப்படி எங்களுக்குத் தேவை இல்லே.!” – அவனை விரட்டினார்கள். எல்லாம் பொய்யும் போலியுமாக இருக்க…சாமி, சாமியார்கள் மேலேயே இவர்களுக்கு வெறுப்பு வந்தது.

“மனுசனா இருந்து தப்பு பண்ணாம சாமி மேல பாரத்தைப் போட்டு அது பேர்ல அநியாயம் பண்ணினா சாமி அழிக்கனும் அதுதான் சாமி. அழிக்கலை. அதனால சாமியே சரி இல்லே!” – ஒதுக்கினார்கள்.

அடுத்து நாட்டு மருந்து வைத்தியம், பச்சிலை, மூலிகைகள்.

கடைசியாகத்தான் “ஏங்க தத்தெடுத்துக்கலாமா ?”- கீதா கேட்டாள்.

“வேணாம்!” – சுதாகரனுக்கு விருப்பமில்லை.

“ஏன்?” – நிறைய வாக்குவாதங்கள்.

“சோதனைக் குழாய்க் குழந்தை?”

அரைச் சம்மதம்.

“வாடகைத் தாய் வைச்சி பெத்துக்கலாமா?” – இறுதியாக சொன்னாள்.

சுதாகரன் யோசித்தான் புரட்டிப் புரட்டி சிந்தித்தான். சம்மதம் சொன்னான்.

“ஆள்?”

“விளம்பரம் குடுத்துப் பார்க்கலாம்!”

“வேணாம்!” – கீதா சம்மதிக்கவில்லை.

“ஏன்?”

“நமக்குப் புள்ளை இல்லாத குறை தெரியும்.. இரவல் எடுப்பு குழந்தைன்னு கேவலமா நினைப்பாங்க. விளம்பரமே கூடாது காதும் காது வைச்சாப் போல முடிக்கனும். சொந்தம் வேணாம் சொத்துக்கு ஆசைப்பட்டு குழந்தைக்கும் நமக்கும் ஆபத்து”. – சொன்னாள்.

நல்லது கெட்டது அலசப்பட்டது.

“நம்ம வீட்டுல கொண்டு வந்து கண்ணு முன்னாலேயே குழந்தை பெத்துக்கலாம்!” – சுதாகரன் முடிவாக தன் விருப்பத்தைச் சொன்னான்.

திட்டங்கள் தீட்டப் பட்டது.

பங்கஜம் வேலைக்காரியாக மட்டுமில்லாமல் குடும்பத்தில் ஒருத்தி.

“பேர் சொர்ணாம்மா. ரெண்டு புள்ளைங்களுக்குத் தாய். நல்ல குணநலன். கொஞ்சம் படிப்பு வாசனையும் உண்டு. கொஞ்சம் வசதி படைச்ச வீட்டுல பொறந்திருந்தா அவ எப்படியோ வாழ வேண்டியவள். ஏழையாய்ப் பொறந்த பாவம் ஒரு குடிகாரப் பயலுக்கு வாழ்க்கைப் பட்டு கஷ்டப்படுறா.” – விபரம் சொன்னாள்.

சொர்ணா அறிமுகப்படுத்தப்பட்டாள், அடைக்கலப்படுத்தப்பட்டாள்.

“சொர்ணா! மனசுல எந்த வருத்தம், கவலை கூடாது. எப்பவும் சந்தோசமா இருக்கனும். அதிர்ந்து நடக்க வேணாம். அதிக வேலை செய்ய வேணாம். பாரம் சுமக்கிறது குழந்தைக்கு ஆபத்து!” – என்று கருவை வைத்து தலைச்சன் பிள்ளைக்காரிக்குச் சொல்லும் உபதேசம். கீதா, சுதாகரன் மட்டுமில்லாமல் டாக்டரும் சேர்ந்து சொன்னார்.

முதன் முதலாக இவள் வயிற்றில் மணிமொழியைச் சுமந்த போது இந்த ஆரவாரமில்லை. அந்த குடிசை வீட்டில் அது ஒரு சாதாரண நிகழ்ச்சியாய் இருந்தது.

“என்னங்க! நான் உண்டாகி இருக்கேன்.” – பயம், படபடப்பு, மகிழ்ச்சி இவள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் கணவனிடம் சொன்னாள்.

சந்தோசம்! – என்று அவன் வார்த்தையில் கூட சொல்லவில்லை. “தலைசுத்தல், வாந்தி, மயக்கம்ன்னு படுக்காதே இது ரொம்ப சாதாரண விசயம். பெருசு படுத்தாம வேலையைப் பார். நொறுங்க வேலை செய்யனும் அப்பதான் சுகப்பிரசவம் நடக்கும்” – மாமியார்க்காரி சொன்னாள்.

தனிக்குடித்தனம். உதவி, ஒத்தாசைக்கு ஆளில்லை. வலி வந்து இவள்தான் அரசாங்க ஆஸ்பத்திரிக்குச் சென்றாள்.

வரம் வாங்கும் இங்கு அப்படியே தலைகீழ் மாற்றம்.


காலையில் எழுந்து நாயைப் பார்த்த கீதாவிற்குச் சின்ன அதிர்ச்சி. அதனிடம் சரியான துள்ளல், துடிப்பு இல்லை. தலையைக்கூட துாக்காமல் ரொம்ப வாட்டமாக படுத்து இருந்தது.

‘ஏன் என்னாச்சு?’ – தொட்டுப் பார்த்தாள். அன்புக்கு அடையாளமாய் அதற்கு வாலை ஆட்டவே தெம்பில்லை. சின்னதாய் ஆட்டி தன் இயலாமையைத் தெரியப்படுத்தியது. உடல் நிலை சரி இல்லை புரிந்து விட்டது.

‘மனிதர்களுக்கு நிறைய மருத்துவமனைகள் கை தட்டி அழைத்தால் ஓடி வர டாக்டர்கள். விலங்குகளுக்கு?!’ அரசாங்க மருத்துவ மனைகளைத் தவிர வேறு வழி இல்லை.

கீதா தோட்டக்காரனை அழைக்க சுற்றும் முற்றும் பார்த்தாள். இல்லை.

டிரைவர், சுதாகரனை அழைத்துக் கொண்டு மீனம்பாக்கம் விமானநிலையம் சென்றிருந்தான்.

கூர்க்காவை அழைக்க முடியாது. அவனுக்கு இந்த வேலை இல்லை.

மாருதியை எடுத்துக் கொண்டு இவள் செல்லலாமென்றால் மகளிர் மன்றத் தலைவி வருவதாக சொல்லி இருந்தாள். யாரை அழைக்கலாம் ? நினைக்கும் போதுதான் முத்துலட்சுமிதான் அவுட்ஹசை விட்டு வெளியே வந்தாள்.

கை காட்டி அழைத்தாள்.

அவள் அருகில் வந்தாள்.

“ஏதாவது வேலை இருக்கா?”

“இல்லை. ஏம்மா?“

“நாய்க்கு உடம்பு சரி மருத்துவ மனைக்குக் கொண்டு போகனும்.”

“சரிம்மா.”

“எங்கே இருக்குன்னு தெரியுமா ?”

“தெரியும்.”

“கஷ்டம் இல்லியே…?”

“இல்லே!”.

“எப்படி துாக்கிப் போவே?”

“சைக்கிள்ல கொண்டு போறேன்!”

“அதுல எப்படி முடியும்?”

சின்னதாய் சிந்தித்த முத்துலட்சுமி ஒரு அட்டைப் பெட்டியைக் கொண்டு வந்து அதில் நாயைத் துாக்கி வைத்து கேரியரில் கட்டினாள்.

“நீங்க கவலைப்படாதீங்கம்மா நான் பத்ரமா கொண்டு போய் திரும்பறேன்.” – சைக்கிளைத் தள்ளினாள்.

திரும்பும்போது ராஜசேகரன் நின்றான்.

அத்தியாயம்-8

“என்ன! நாயோட பயணம்?” – நிறுத்தினான்.

“எப்படித் தெரியும்?”

“போகும் போது பார்த்தேன்.”

“உ…உடம்பு சரி இல்லே.”

“நான் சொன்ன வேலை என்னாச்சு ?”

“…நடந்துக்கிட்டிருக்கு.”

“என்னென்ன செய்ஞ்சே?”

செய்ததைச் சொன்னாள்.

“பேசாம சோத்துல பல்லியைப் புடிச்சிப் போடு. உசுர் போவாது. அடி வயித்தை புரட்டிக்கிட்டு வாந்தி மயக்கம் வந்து கீழே விழுந்து ஏதாவது ஏடாகூடமாகட்டுமே!”

மௌனமாக இருந்தாள்.

அது அவனுக்கே திருப்தி இல்லை போல. யோசனையுடன் நாயைப் பார்த்தான்.

“இதை வைச்சி வைச்சி ஒரு விளையாட்டு விளையாடலாம்!” – பிரகாசித்தான்.

முத்துலட்சுமி அவனைப் புரியாமல் பார்த்தாள்.

“புரியும்படி சொல்றேன். எனக்கு பிரசவ வலி மருந்து தெரியும். வாங்கி ஒரு ஊசி போட்டு அனுப்பறேன். வலியில துள்ளும் துடிக்கும் வெறிகொள்ளும். சொர்ணாகிட்ட கொண்டு விட்டா கண்டிப்பா விரட்டும் துரத்தும் ஓடி தடுக்கி விழுந்து ஏதாவது நடக்கும். எப்புடி நம்ப ஐடியா?” – சிரித்தான்.

முத்துலட்சுமிக்குக் கற்பனை வர நடுங்கினாள்.

“பயப்படாதே. நமக்குக் காரியம் நடக்கனும்!” – இவளைக் கேட்காமலேயே அருகிலுள்ள மெடிக்கல் ஷாப்பை நோக்கி சென்றான். திரும்பும்போது கையில் மருந்தும் சிரஞ்சியுமாக வந்தான். சைக்கிளை எடுத்து மறைவாக கொண்டு சென்று சிரஞ்சியில் மருந்தை ஏற்றி நாய்க்குப் போட்டான்.

“பத்து நிமிசம் கழிச்சி மருந்து வேலை செய்யும் சீக்கிரம் கொண்டு விடு. தாமதிச்சா உன் முதுகை கடிச்சி குதறிடும்“ – எச்சரித்தான்.

முத்துலட்சுமிக்குக் குலை நடுங்கியது. சைக்கிளை எடுத்து வேகமாக மிதித்தாள்.


சொர்ணாவிற்கு, நாய்க்கு உடல்நிலை சரியில்லை என்பதைக் கேட்டதுமே மனசு சரி இல்லை. வந்த நாள் முதலாய் அது இவளுக்குச் செல்லப்பிராணி.

“நல்லா இருக்கில்லேம்மா?” – மணிமொழியும், மணிகண்டனும் அதன் புசுபுசு முடியைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்வார்கள். அது அது அவர்களுக்கு விளையாட்டுத் தோழன். கையில் எதையாவுது வைத்துக் கொண்டு துாக்கிப் பிடித்தால் சர்க்கஸ் நாய் போல் இரண்டு கால்களால் தாவி நிற்கும்.

‘கொண்டு போன முத்துலட்சுமியை இன்னும் காணோமே!‘ – அவுட்ஹவுஸ் வாசலில் தவிப்புடன் நின்றாள்.

சொர்ணாவை வாசலில் பார்த்ததுமே முத்துலட்சுமிக்கு முகம் மலர்ந்தது.

தொலைந்தாள்! – அருகில் கொண்டு வந்து வேர்க்க விறுவிறுக்க நிறுத்தினாள்.

“என்னாச்சு?”

“ஊசி போட்டாங்க” – இறங்கினாள்.

உடலில் ஒரு அசைவும் இல்லாமல் படுத்திருந்த நாயைப் பார்த்த சொர்ணாவிற்கு முகம் கலவரமாகியது. பயத்துடன் தொட்டாள்.

“ஐயோ…ஓ !” – அலறினாள்.

“என்ன?”

“செத்துடுச்சி!”

முத்துலட்சுமி இதை எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ந்தாள்.

ஓடிவந்து விபரம் அறிந்த கீதாவிற்கு பெரிய இடியாக இருந்தது.

“ஜுரம்ன்னு டாக்டர் ஊசிப் போட்டார்ம்மா. இப்படி ஆயிடுச்சி.” – முத்துலட்சுமி கையைப் பிசைந்து குரல் பம்மினாள். அழுதாள்.

கீதா துக்கம் தாளாமல் சொர்ணாவைப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தது, தன்னுடைய துக்கத்தைக் காட்டினாள் பாவம் வயிற்றுப் பிள்ளைத்தாச்சி உடைந்து விடுவாள் உணர்ந்த அவள், “சரி போகட்டும் விடு. தோட்டக்காரனை விட்டு பொதைச்சிடு லட்சுமி. வா சொர்ணா” – கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

சொர்ணாவிற்கு அவளுடன் நடக்கவே தெம்பில்லை.

“போகனும்ன்னு விதி” – கீதா அவளைத் தேற்றியபடி நடந்தாள்.

மும்பை சென்று நான்கு நாட்கள் கழித்து வந்த சுதாகரனுக்கும் நாய் போனதில் வருத்தம். சொர்ணா ரொம்ப துக்கமாக இருப்பதாக கீதா சொல்ல அவளைத் தேடிக் கொண்டு அவுட் ஹவுசிற்கு வந்தான்.

இவன் வந்ததைக் கவனிக்காமல் சொர்ணா ரொம்ப கவலையாக நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

அருகில் சென்று “சொர்ணா !“- அழைத்தான்.

துணுக்குற்று எழுந்தாள். வயிறு கொஞ்சம் பெரிதாக இருந்தது.

இரட்டைக் குழந்தையா? நினைத்தவன், “உட்கார்” சொன்னான்.

சொர்ணா அமரவில்லை. மரியாதை நின்றாள்.

நாயைப் பற்றி பேசினால் துக்கம் அதிகமாகலாம் நினைத்து, “வீட்டுக்காரர் இல்லேங்குற கவலையா…?” – பேச்சை வேறு திசையில் திருப்பிக் கேட்டான்.

“இல்லைங்கைய்யா!”

“எங்கே இருக்கார்ன்னு ஏதாவது தகவல் தெரியுமா?“

“தெரியாது”

“நாளைக்கு திடீர்ன்னு வந்து நின்னா என்ன செய்வே?”

பேசாமல் நின்றாள்.

“ஏத்துப்பியா?”

“மாட்டேன்னு சொல்லிட்டா!” – பின்னால் வந்த கீதா பதில் சொன்னாள்.

“ஏன்?”

“பொண்டாட்டி சோரம் போனா புருசன் ஏத்துப்பாரான்னு கேள்வி கேட்குறா”.

‘நியாயமான கேள்வி ! யார் பதில் சொல்ல முடியும்?’ – சுதாகரன் தடுமாறினான்.

“சொல்லுங்க?” – கீதாவே கேட்டாள்.

“ஏ…ஏத்துக்கமாட்டான்.“

“அப்படி இருக்கும்போது சோரம் போய் அடுத்தவள்கிட்ட குடும்பம் நடத்திட்டு வந்த புருசனை பொண்டாட்டி எதுக்கு ஏத்துக்கனும்?” – கீதா கொஞ்சம் காரமாகவே கேட்டாள்.

“இது வாதம் கீதா!” – சுதாகரன் மனைவியின் கேள்விக்கு மெல்ல பதில் சொன்னான்.

“வாதமில்லே. காலம் மாறிப் போச்சு. பெண்களுக்கு நல்லது கெட்டது தெரிஞ்சு போச்சு.”

“வாடின்னு அவன் அடம்பண்ணினா?“

“தாலியைக் கழற்றி மூஞ்சியில வீசிட்டு உறவை அறுத்துப்பா.”

‘சரியா?‘ – என்பதைப் போல் சுதாகரன் எதிரில் நின்ற சொர்ணாவைப் பார்த்தான்.

அவள் குனிந்த தலை நிமிரவில்லை.

“இதுதான் உன் முடிவா?”

இறுக்கமாக இருந்தாள்.

‘அப்போதே பெண்களுக்கு இந்த வீரம் துணிவு இருந்தால் மதுரை எப்படி எரியும்?’ – சுதாகரனுக்குள் நினைப்பு எட்டிப் பார்த்தது.


மாலை பள்ளி விட்டு திரும்பிய மணிமொழி முகத்தில் வருத்தத்தின் அடையாளமாக சோகம். குழந்தை ரொம்ப வாடி இருந்தாள். ‘ஏன்?‘ – பார்த்த சொர்ணாவிற்குச் சொரக்கென்றது.

“என்னம்மா ஆச்சு?” – அருகில் வந்த மகளை வாஞ்சையாக அணைத்தாள்.

குழந்தை பேசவில்லை.

“பாடம் படிக்கலைன்னு வாத்தியார் அடிச்சாரா?”

“இல்லே!“

“வேறு யாராவது திட்டினாங்களா?“

“இல்லே!”

“பின்னே ஏன் உம்முன்னு இருக்கே?”

“அடுத்த தெரு பொண்ணு. பேர் அனிதா. என்னோட நாலாம் கிளாஸ் படிக்கிறா.”

“அடிச்சாளா?“

“இல்லே. நாங்க எல்லாம் பள்ளிக்கூடத்துல கூட்டமா விளையாடும் போது உன் அப்பா எங்கேன்னு என்னைக் கேட்டா. நான் இல்லேன்னேன். அப்புறம் எப்புடி உன் அம்மா வயித்துல தங்கச்சி பாப்பா இருக்குன்னு கேட்டா. எனக்குப் பதில் சொல்லத் தெரியலை. அப்பா இல்லாததுக்கும் தங்கச்சி பாப்பா பொறக்கிறதுக்கும் என்னம்மா சம்பந்தம்?” – மணிமொழி விபரம் புரியாமல் கேட்டாள்.

என்ன பதில் சொல்ல முடியும்?!

நான்காம் வகுப்பு படிக்கும் பத்து வயது குழந்தைக்கு என்ன பேச்சு? – சொர்ணாவிற்குள் திகீரென்றது.

எல்லாம் வளர்ப்பு. குழந்தைகளை வைத்துக் கொண்டு எல்லாம் பேசினால் இப்படிதான்.

கோடி வீட்டுக் கோமளம். சரியான வம்புக்காரி. சொர்ணா காலாற நடக்க வெளியே தலைக் காட்டினால் போதும்…

“அவருக்கு சின்ன வீடு போலிருக்கு!” – இவள் காதுபட வேண்டுமென்றே மகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அடுத்தவளிடம் பேசுவாள்.

“அதெல்லாம் பெரிய இடத்துச் சமாச்சாரம். விபரம் தெரியாம பேசக்கூடாது.” – என்று கேட்டவள் ஒதுங்கினாலும் விடமாட்டாள்.

“பெரிய இடத்துச் சமாச்சாரம்ன்னா பணம் மறைச்சிடுதாக்கும்?!” – வம்புக்கிழுப்பாள்.

சில சமயம், “நல்ல சாதிப் பசு வருது” – என்பாள்.

“என்னடி?” – அவள் கேட்டால், “அதுக்குத்தானே ஊசிப் போட்டு சினைப் படுத்துவாங்க” – என்பாள்.

குப்பமென்றால் நடக்கிற கதையே வேறு. சொர்ணாவிற்குப் பொதுவாய் வம்பு சண்டை வெகுதுாரம். தாங்க முடியாத பட்சத்திற்கு திருப்பித் தாக்குவாள். தானும் வாயை மூடிக்கொண்டு போக புழு பூச்சி இல்லை என்பதை நிரூபிப்பாள்.

இப்படியெல்லாம்….அறியாத குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கவலை படாமல் பேசினால்.. அந்த குழந்தை தானும் பேசாமல் என்ன செய்யும்?

மணிமொழிக்கு எதை, எப்படி புரியவைப்பது என்று தவித்தாள். கையைப் பிசைந்தாள். தர்மசங்கடத்தில் முகம் வேர்த்தது,

கேட்ட முத்துலட்சுமிக்கும் ஆத்திரம் வந்தது.

“நான் போய் பெத்தவளை ரெண்டு புடி புடிச்சிட்டு வர்றேன்”. இவள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வேகமாக வெளியேறினாள்.

அத்தியாயம்-9

முத்துலட்சுமி அவளிடம் என்ன சொக்குப் பொடி சொடக்குப் போட்டாளோ தெரியாது. மறுநாளிலிருந்து அந்த கோடி வீட்டுக்காரியின் பேச்சையும் காணோம் மூச்சையும் காணோம்.

சொர்ணாவிற்கு அதுபற்றி அவளிடம் கேட்க ஆசை. கேட்க விடாமல் வேறொரு கவலை. அதுதான் பங்கஜத்தைப் பார்க்கும் கவலை.

பங்கஜம்… முத்துலட்சுமியைக் கொண்டு வந்து சேர்த்து, பொறுப்பை அவள் தலையில் கட்டி, கீதாவிடம் ‘முடியலைம்மா’ என்று சொல்லி நின்றதோடு சரி. அடுத்து ஆளையும் காணோம் தேளையும் காணோம்..

‘ஒருவேளை ஊரில் இல்லையா? உடல் நிலை சரி இல்லையா?’ – மனசுக்குள்ளேயே கேள்விகள் கேட்டாள்.

இவள் கேட்டும் கேட்காமலும் அவள் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறாள். இந்த வாழ்க்கை வாழ வழி செய்தவள் அவள். மேலும் அவள் மீது பற்று பாசம். எப்படி பார்க்காமல் விடுவது? சந்தித்துப் பேச ஆவல் வந்தது.

“லட்சுமி!“ – அழைத்தாள்.

“என்ன சொர்ணா?” – அவள் அடுப்படி வேலையை விட்டு வெளியே வந்தாள்.

“அக்கா வீட்டுல இருக்கா?”

“பங்கஜம் அக்காவா?”

“ஆமாம்.“

“இருக்கிறதா கேள்வி. அக்கா கடைசி தெருவுல இருக்கிறதுனால நான் என் வீட்டோட திரும்பிடுறேன். போய் பார்க்க முடியலை.“

“நாம பார்த்து வருவோமா?”

“செய்யலாம். ஐயா அம்மா விடுவாங்களா?”

“கேட்டா விடுவாங்க. நீ கேட்டு வர்றீயா?”

‘ரிக்ஷாவோ ஆட்டோவிலோதான் போகச் சொல்வார்கள் கவிழாதா?‘ – முத்துலட்சுமி ஆசைப்பட்டாள்.

“சரி வேலையை முடிச்சுப் போறேன்.” – அடுப்படிக்குள் நுழைந்தாள்.

ஆட்டோக்காரனுக்குப் நுறு ரூபாயை அழுத்தி வேண்டுமென்றே கரடு முரடு பாதையில் போகச் சொல்ல வேண்டும். அது கவிழவேண்டும். மடமடவென்று திட்டங்கள் போட்டாள்.

அவள் செல்லும்வரை சும்மா இருக்கப் பிடிக்காமல் சொர்ணா தானே எழுந்தாள். பங்களாவிற்குள் சென்றாள்.

சுதாகரன் தீவிரமாக பைல் பார்த்துக் கொண்டிருந்தான். சொர்ணாவைக் கண்டதும்…”கீதா!” – மனைவியை அழைத்தான்.

வெளியே வந்த அவள் இவளைப் பார்த்ததும், “வா” – வரவேற்றாள்.

இருவரும் தனி அறைக்குச் சென்றார்கள்.

“பங்கஜம் அக்காவைப் பார்க்கனும்…” – சொர்ணா சுற்றி வளைக்காமல் சொன்னாள்.

“ஏன்?“

“ஆளைக் காணோம் பார்க்கனும் போல தோணுது….”

“ஏதாவது முக்கியமான விசயமா?”

“இல்லே.”

கீதா சின்னதாய் யோசித்தாள்.

“சரி பார்த்து வா” – தலையசைத்தாள்.

“தனியா போறீயா?” – கேட்டாள்.

“முத்துலட்சுமி துணைக்கு வர்றா”

“எப்படி போகப்போறீங்க ?ஆட்டோவுல போங்க.” என்றவள் அலமாரியைத் திறந்து ஐநுாறு ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்தாள். இன்னொரு நுாறு ரூபாயைக் கொடுத்து, “பங்கஜத்துக்கு ஏதாவது பழம் வாங்கிப் போங்க நானும் பார்க்கனும்ன்னு சொல்லுங்க”. – என்றாள்.

“எப்போ திரும்பறதா உத்தேசம்?”

“உடனே திரும்பிடுவோம். புள்ளைங்க பள்ளிக்கூடம் விட்டு வர்றதுக்குள்ள வந்துடுறோம்.”

“சரி. ஜாக்கிரதையா போய் வாங்க”

சொர்ணா சந்தோசமாக வெளியே வந்தாள். அவுட் ஹவுசிற்கு வந்து விபரம் சொல்லி முத்துலட்சுமியையும் கிளப்பினாள்.

தன்னைக் கிளப்பிவிட்டு சொர்ணா முடித்து வந்ததில் அவளுக்கு வருத்தம். காட்டிக்கொள்ளவில்லை.

இருவரும் கிளம்பி வெளியே வந்தார்கள். வாசலில் நிற்கவும் ஒரு ஆட்டோக்காரன் வரவும் சரியாக இருந்தது. முத்துலட்சுமிதான் கைகாட்டி நிறுத்தினாள். சொர்ணா அருகிலேயே நின்றதால் அவள் நினைத்தது நடக்கவில்லை.

‘ஏதாவது ஆகுமா?’ – சொர்ணா கொஞ்சம் தயங்கினாள்.

இவள் மனநிலையைப் புரிந்த டிரைவர் “நீ கவலைப்டாம குந்து. எத்தினியோ புள்ளைத்தாய்ச்சிங்களை அலுங்கமா குலுங்காம கொண்டு போயிருக்கேன்.” என்றான்.

சொர்ணாவிற்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. ஏறி அமர்ந்தாள்.

“எங்கேம்மா போகனும்?”

முத்துலட்சுமி இடத்தைச் சொன்னாள்.

ஆட்டோ கிளம்பியது, ஆட்டோக்காரன் சொன்னது போல் அவன் சாலையில் குண்டு குழிகளில் இறங்காமல் வண்டியைப் பத்திரமாக ஓட்டினான். முத்துலட்சுமிக்குக் கடுப்பாக இருந்தது. கவிழ்ந்தால் தானும் காயம் படுவோமே நினைக்க பயமாகவும் இருந்தது. வழியில் நிறுத்தி பங்கஜத்திற்கு ஆப்பிளும் ஆரஞ்சும் வாங்கினார்கள். அரை மணி நேரத்தில் அவள் வீட்டின் முன் இறங்கினார்கள். ஆட்டோவை இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தார்கள்.

பங்கஜம் எங்கோ புறப்பட தயாராக இருந்தாள்.

இவர்களைப் பார்த்ததும் அவள் முகத்தில் வியப்பு, ஜொலிப்பு.

“வாங்க வாங்க” – வரவேற்றவள் “உன்னைத்தான் சொர்ணா பார்க்கப் புறப்பட்டேன். வந்து நின்னுட்டே நுாறு வயசு.” மகிழ்ந்தாள்.

“என்ன விசயம்க்கா ?” – சொர்ணா அவள் விரித்த பாயில் அமர்ந்தாள்.

முத்துலட்சுமிக்கு தன் வீட்டிற்குச் சென்று மகளைப் பார்க்கத்தோன்றியது.

“நீங்க பேசிக்கிட்டிருங்க. நான் ஒரே ஓட்டம் என் வீடு வரைக்கும் போய் வந்துடுறேன்.” ஓடினாள்.

“நல்லா இருக்கியாம்மா?” – பங்கஜம் சொர்ணாவை வாஞ்சையாக விசாரித்தாள்.

“உங்க புண்ணியத்துல நல்லா இருக்கேன்க்கா” – என்ற சொர்ணா வாங்கி வந்த பழங்களைக் கொடுத்தாள்.

“இதெல்லாம் எனக்கு எதுக்கு..” – ஒதுக்கிய பங்கஜம் “ஒரு முக்கியமான விசயம்!” – என்றாள் குரலைத் தாழ்த்தி.

“சொல்லுக்கா?”

“உன் புருசன் கோவிந்தன் வந்தான்”.

சொர்ணாவிற்குள் இடி விழுந்தது. அதிர்ச்சியாக பார்த்தாள்.

“காலையில வந்தான். செம மப்பு. பூட்டி இருக்கிற உன் வீட்டைப் பார்த்துட்டு எங்கே என் பொண்டாட்டின்னு என்னை வந்து கேட்டான். நீ இப்ப இருக்கிற நிலையைப் பார்த்தா கொன்னுபுடுவான்னு பயந்து தெரியாதுன்னேன். உனக்குத் தெரியாம அவ ஒரு அடி எடுத்து வைக்கமாட்டாள்ன்னு வாக்குவாதம் செய்ஞ்சான். அப்புறம்…ஓட்டிக்கிட்டுப் போனவள் ஓடிட்டாள்ன்னு உரிமை உள்ளவளைத் தேடி வந்தா இவ எவன்கூட ஓடினாள்ன்னு உளறினான்.”

“ஏன்டா! நீ ஊர் மேய்ஞ்சுட்டு வந்தா அடைக்கலமா வீடு? கண்டவள் கசந்தா கொண்டவள்தான் கதியா அப்புடி இப்புடின்னு கேட்க எனக்கு ஆசை. கேட்டா வீண் விவகாரம்ன்னு கம்ன்னு இருந்தேன். அப்புறம் உன்னைக் காணோம்ன்னு அசிங்கம் அசிங்கமாய்த் திட்டினான். அக்கம் பக்கம் உள்ளவங்களுக்கெல்லாம் கோபம் வந்து. தெருவுல நின்னு அசிங்கமா பேசாதேன்னு எச்சரிச்சாங்க. வாலைச் சுருட்டிக்கிட்டு அந்தண்டை போனவன் நம்ப எதிரி கோமளா வீட்டான்ட நின்னான். அவள் ஏதாச்சம் போட்டுக் குடுத்திருப்பாள்ன்னு தோணுது. இல்லே.. அவள் தான் இவனுக்கு விசயத்தைச் சொல்லி வரவழைச்சுருப்பாளோன்னு சந்தேகமா இருக்கு.” – முடித்தாள்.

“அந்த ஆள் இருக்கிற இடம் இவளுக்கு எப்புடிக்கா தெரியும்?”- சொர்ணா தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

“ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!” – என்று மேலே கைகாட்டிய பங்கஜம் “உன்னைக் கண்டு பிடிச்சு கண்டந்துண்டமா வெட்டிடுறேன்னுட்டு போனான். உன்னை ஜாக்கிரதையாய் இருக்கச் சொல்லி எச்சரிக்கை செய்யலாம்ன்னுதான் கிளம்பினேன். உன் உசுரு கெட்டி வந்துட்டே. ஆளை வழியில எங்கேயாவது பார்த்தீயா?” – கேட்டாள்.

சொர்ணாவிற்குத் தலை சுற்றியது. சமாளித்து, “இல்லே” – சொன்னாள்.

“ஆள் கேள்விப்பட்டு வந்திருக்கானோ, யாராவது கோள் மூட்டி வந்திருக்கானோ. இல்லே கெட்டு முறிஞ்சி தானா வந்திருக்கானோ தெரியாது. இங்கே நமக்கு வேண்டாதப் பட்டவங்க எப்புடியும் அவன் காதுல ஒன்னுக்கு ரெண்டா விசயத்தைப் போடுவாங்க. கண்டிப்பா அவன் கொதிச்சுப் போய் உன்னைக் கூறு போடக் கெளம்புவான். நீ ஜாக்கிரதையாய் இருக்கனும். ஆள் அடையாத்தைக் கூர்க்காகிட்ட சொல்லி கேட்டைத் தாண்டி உள்ளே விடவேணாம்ன்னு சொல்லு. நானும் உன் கூட வர்றேன். நீ பிரசவம் முடிச்சி புள்ளையைப் பெத்து அவுங்க கையில குடுக்கிற வரைக்கும் நான் உனக்குத் துணையாய் இருக்கிறதா முடிவுப் பண்ணிட்டேன்” – முடித்தாள்.

சொர்ணாவிற்குக் கொஞ்சம் தைரியம் வந்தாலும் கணவனை நினைக்க திக் திக்கென்றது.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *