வாசலில் குளம், கொல்லையில் காவேரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2025
பார்வையிட்டோர்: 255 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவனுக்கு அப்போது வயது பன்னிரண்டோ, பதிமூன்றோ இருக்கும். அவன் அப்பா ஓய்வு பெற்ற ஆசிரியர். அண்ணாக்கள், அக்காக்கள் அவர்களுடைய குழந்தைகள் என்று வீடு எப்போதும் ஜேஜேதான்.

ஒரு பெரிய குளத்தின் வடக்குக் கரையில் அவன் வீடு இருந்தது. ஊரிலேயே இரண்டாவது பெரிய குளம் அது. நாலு கரையிலும் குளத்தைப் பார்த்தாற்போல் வீடுகள். கீழ்க் கரையில் மட்டும் ஒரு தோட்டமும், அதன் மதில் சுவரும் இருந்ததால் குளத்தைப் பார்க்க முடியாது. குளம் நீள்சதுர வடிவம்.வடகரையிலும், தென் கரையிலும் இரண்டிரண்டு படித்துறைகள். மேற்கிலும், கிழக்கிலும் ஒவ் வொன்று. மேற்கு கரையில் ஓர் அனுமார் கோயில், மதில் சுவரைத் தாண்டிக் குளத்தை ஒட்டி ஏராளமான தென்னை மரங்கள்.

அவன் வீட்டின் பின்புறம் மிக மிக நீளமான ஒல்லி யான தெரு. கொல்லையில் சின்ன வாசல் உண்டு. அதன் வழியே இடது பக்கம் ஒரு சின்னத் தெருவில் சென்றால் ராயர் பங்களா. பிறகு ராயர் படித்துறை. காவேரி. வலது பக்கம் ஒரு சிறிய தெரு வழியே போனால் இன்னொரு படித்துறை, காவேரி.

அவனுக்கு நீச்சல் தெரியாது. காவேரியில் தண்ணீர் நிறைய வரும் சமயங்களில் படித்துறையில் ஏழெட்டுப் படி கள் இறங்கி, கால்கள் மணலைத் தொடும் அளவு வரை அல்லது கழுத்து மட்டம் வரை போய் நீச்சல் என்கிற பெய ரில் கையைக் காலை ஆனந்தமாக உதைத்துக் கொண்டு விட்டு, தலையில் ஈரம் சொட்டக் கொல்லை வழியாகவே வீட்டுக்குள் புகுந்து விடுவான்.

அப்பா கோபக்காரர். காவேரிக்குத் தனியே போகக் கூடாதென்பது அவருடைய கண்டிப்பான கட்டளை. அவன் அப்படித் திருட்டுத்தனமாகக் காவேரிக்குப் போய் விட்டு வரும்போதெல்லாம் அவன் பாட்டி – அப்பாவை பெற்ற பாட்டி – கொல்லைக் கதவை திறந்து வைத்துக் கொண்டு காத்திருப்பாள். சத்தம் போடாமல் உள்ளே போய் விடும் படி ஜாடையில் கூறுவாள்.

அன்று அவன் அந்த மாதிரி திருட்டுப் பிரவேசம் நிகழ்த் தியபோது பாட்டி சிறிது பதட்டத்துடன், “ஏண்டா இத்தனை நேரம்? இப்பத்தான் ‘நீ எங்கே?’ என்று கேட்டான் உன் அப்பன். முதுகுத் தோலை உரிக்கப் போகிறான். சீக்கிரம் போ’ என்று சொல்லி, தலையைத் துவட்டிவிட்டு (கட்டுக் குடுமி) வேறு உலர்ந்த வேஷ்டி கொடுத்துக் கட்டிக் கொள்ள வைத்தாள்.

நல்லவேளை. “எங்கே தான் தொலைந்தான் அவன்?” என்று அவன் அப்பா கேட்டுக் கொண்டிருந்த நேரம், “இதோ இங்கேதான் இருக்கேன்” என்று குரல் கொடுத் தான். ஈரத் தலையையும் நெற்றியில் ஒன்றும் இல்லா திருப்பதையும் எங்கே கவனித்து விடுவாரோ என்று அவன் பயந்திருந்தான். ஆனால் அவருக்கு வேறொரு அவசர வேலை இருந்தது.

“இங்கே வா. குதிருக்குள் இறங்கி நெல்லையெல்லாம் காலாலே தள்ளு. அந்தக் காளிமுத்துப் பயலை வரச் சொன் னேன். ஆளைக் காணோம்” என்றார்.

அரண்மனை மாதிரியான வீட்டின் கூடத்தின் கோடியில் குதிர் இருந்தது.

அந்த மரக்குதிர், நெல் குதிர். பத்தடி அகலம்,பதி னைந்தடி உயரத்துக்குச் சின்னத் தேர் போல் கம்பீரமாக இருக்கும். எல்லாப் பக்கங்களிலும் கெட்டியான இரும்புப் பட்டங்கள். மரச்சட்டங்கள். ஜாயின்ட்டுகளில் கால் வைத்து, மேலே ஏறி உள்ளே நெல்லைக் கொட்டுவதற்கு வசதியாகக் குதிரின் வெளிப்புறம் மரச்சட்டங்கள் உண்டு. மேற்புறம் இரண்டாக வாய் திறந்து கொள்ளும் கதவுகள் உண்டு. கீழ்ப் புறம் முக்காலடிக்கு ஒரு சிறிய பொந்து. அதற்குத் தாழ்ப்பாளும் பூட்டும் உண்டு.

குதிரில் நெல் நிறைந்திருக்கும் காலங்களில் அந்தப் பொந்துக் கதவைத் திறந்தால் அருவி மாதிரி நெல் வேக மாக வெளியே வந்து விழும். (கண் கொள்ளாக் காட்சி அவனுக்கு.) தேவையானதை எடுத்து மெஷினுக்கு அரைக்க அனுப்பி விடுவார்கள். குதிருக்குள் உள்ள நெல்லின் அளவு குறையக் குறைய அது வெளியே வந்து விழும் வேகமும் குறையும். கடைசியில் தரைமட்டத்துக்கு வந்தபின் தானாக வெளியே விழுவது நின்று விடும். குதிருக்குள் இறங்கிக் காலால் தள்ளிவிட வேண்டும். ஆனால் ரொம்பவும் ஒட்டத் தள்ளக்கூடாது. குதிருக்குள் கொஞ்சமாவது நெல் இருந்தால் தான் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

அந்தக் கடைசிக் காலத்துக்குத் தான், குத்தகைக்காரக் காளிமுத்துவின் உதவி தேவைப்படும். அன்று காளிமுத்து வரவில்லை.

அவன் ஏறினான். நெல் கொட்டும் கதவைத் திறந்தான். உள்பக்கம் ஒரே இருட்டு. நெல் வெளியேறும் பொந்து திறந் திருந்ததால் அந்தப் பக்கம் மட்டும் முழ நீளத்துக்கு வெளிச்சம் தெரிந்தது.

குதிருக்குள் இறங்குவதற்காக, ஓரங்களில் தடிமனான இரும்புக் கம்பிகள் பொருத்தியிருந்தார்கள். அதில் கால் வைத்து இறங்கினான் அவன். அடிப்புறம் கொஞ்சம்தான் நெல் இருந்தது. நெல்மணிகள், பாதத்தைக் குத்தின. தள்ளினான்.

தள்ளத் தொடங்கும்போதே ‘அஸ்க் அஸ்க்’ என்று தும்மல் வந்தது.

நெல்லின் புழுதி கண்ணையும் மூக்கையும் அடைக்கிற மாதிரி இருந்தது. ஈரம் உலராத தலையில் தூசி ஒட்டிக் கொண்டது. இரண்டு மூன்று முறை இருமினான்.

”என்னடா,ஆச்சா?” என்று வெளியேயிருந்து அப்பா குரல் கொடுத்தார்.

”ஊம்” என்று சொல்லிவிட்டு அதே இரும்புக் கம்பிகளில் கால் வைத்து ஏறி வெளியே வந்தான்.

மூக்கிலும், கண்ணிலும் நீர் வடிந்தது. தலையை அரித் தது. தொண்டைக்குள் பூனைக்குட்டி கத்துகிற மாதிரி மெல்லிசாய் ஒரு சத்தம் கேட்டது அல்லது கேட்ட மாதிரி தோன்றியது.

வெளியே விழுந்திருந்த நெல்லை அம்மா கையால் ஓர மாய்த் தள்ளிக் கொண்டிருந்தாள். தான்ய லட்சுமியைக் காலால் தள்ளக் கூடாது. துடைப்பத்தால் கூட்டக் கூடாது என்பது வீட்டில் சம்பிரதாயம். அப்பா மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். இருவரும் அவனுடைய நிலைமையைக் கவனிக்கவில்லை. பாட்டி மட்டும் தன் வெள்ளைப் புட வைத் தலைப்பால் அவன் முகத்தையும் தலையையும் துடைத்து விட்டு, ‘கட்டையிலே போறவன்! குழந்தைக்கு என்ன வேலை கொடுக்கிறதுன்னு கிடையாது?” என்று ரக சியமாகப் பல்லைக் கடித்து ரகசியமாக முணுமுணுத்தாள்.

அன்று சாயந்தரம் அப்பா கோயிலுக்குப் புறப்பட்டார். ரிடையராகி நாலைந்து வருஷமாகி விட்டதால் பார்வைக்கு ரொம்ப வயதானவராய் இருப்பார். அவருடைய ஏழாவது குழந்தை அவன். அப்பாவுடன் வெளியே போனால் அப்பா வும் பிள்ளையுமாகப் போகிறார்கள் என்று யாருக்கும் தோன் றாது. அப்பாவைத் தேடிக் கொண்டு வருகிறவர்கள் இவனி டம் ‘உன் தாத்தா இருக்கிறாரா?’ என்றுதான் கேட்பார்கள்.

“டேய் வாடா” என்று அவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார் அப்பா. அவருக்கு இரண்டு பொழுது போக்கு. ஒன்று, கோவிலுக்குப் போய் பிராகாரத்தில் வைதிக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது. இரண்டாவது, சித்தியாவின் பழைய இரும்புக் கடைக்குப் போய், லௌகிக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது. சித்தியா என்பது அப்பாவின் ஒன்றுவிட்ட தம்பி.

அன்று அப்பா கோவிலுக்குப் போகவில்லை. சித்தியா வின் கடைக்குப் போனார்.

தெருவில் நின்றபடியே கடைக்குள் பார்த்து, ”கிணத் தய்யங்கார் இருக்கிறாரா?” என்று குரல் கொடுத்தார்.

”அடியேன்!” என்று உள்ளேயிருந்து பதில் வந்ததும், “பார்த்து வாடா” என்று அவனுக்குச் சொல்லி விட்டு, உள்ளே போனார்.

‘கிணத்தய்யங்கார்’ என்று அப்பா அழைத்தது கிருஷ்ண சாமி என்ற சினேகிதரை.

சித்தியாவின் கடையில் பழைய இரும்புச் சாமானாக ஒரு இரும்பு ஈஸிசேர் இருந்தது. அதற்குத் துணி கிடை யாது. ஒரு பெரிய கோணிச் சாக்கை நீளவாட்டில் பிரித்து, அதற்கு மாட்டி, இரண்டு பக்கமும் தைத்திருக்கும். எல்லா ஈஸி சேர்களையும் போல ஈஸியாக இல்லாமல், நடுவே குட்டை போல் தொங்கும். கிருஷ்ணசாமிக்கு வழக்க மான இருக்கை அதுதான். ஈஸிசேருக்குள்ளேயே கால்களைக் குறுக்கி மடக்கி கொண்டு ‘ப’ எழுத்தை நெருக்கி எழுதி னது போன்ற வடிவத்தில் அதில் இருப்பார்.

அப்பாவுக்கு ஹாஸ்ய உணர்ச்சி உண்டு. கிணறு போலப் பள்ளமான ஈஸிசேரில் அவர் இருப்பதால், ‘கிணத் தய்யங்கார்’ என்று அவருக்குப் பெயர் சூட்டியிருந்தார்.

கடையின் பின்புறத்தை அடைந்தால் ஒரு திறந்த முற் றம் இருக்கும். அங்கேயே பழைய இரும்புப் பொருள்கள் கிடந்தாலும், அவற்றிலிருந்து முளைத்த மாதிரி ஒரு பெரிய வாதாமரம் உண்டு. பழுத்த வாதாம் கொட்டைகள் இங் கொன்று, அங்கொன்றுமாக விழுந்து கிடக்கும். எந்த இடுக்கிலே அது கிடைக்கும் என்று தேடி வேட்டையாடுவான்.

எப்பொழுதாவது ஒன்றிரண்டு அகப்படும்.

பழுத்து, மஞ்சளாகி, கையால் அழுத்தினால் பிசுக் கென்று மேல் தோல் பிதுங்கும். அதுவே கூட சில சமயம் தித்திப்பாக இருக்கும். ஆனால் கொட்டை கெட்டியானது. ஏதாவது ஒரு பட்டறைக் கருவியின் மீது வைத்துக் கல்லால் உடைத்து பிசிறு பிசிறான நார்களை அகற்றினால், பெரிய பருப்பு கிடைக்கும். வாதாங்கொட்டையை குறுக்குவாட்டில் வைத்து அடித்தால்தான் முழுப் பருப்பு கிடைக்கும். இல்லா விட்டால் அதுவும் சேர்ந்து நசுங்கி விடும். கொட்டைக்குள் ளிருந்து பருப்பைச் சுரண்டி எடுக்க நேரும்.

அன்று ஜாக்கிரதையாக உடைத்து, பருப்பை முழுசாக எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டிருந்த சமயம்-

இருமல் வந்தது. காலையிலிருந்து தொண்டைக்குள் கேட்டுக் கொண்டிருந்த சத்தம் கொஞ்சம் அதிகமாயிற்று.

“பையன் ஏன் இப்படி இருமறான்?” என்று கிணத்தய் யங்கார் விசாரித்தார் அவன் அப்பாவிடம்.

“அவன் பாட்டி காசு கொடுத்திருப்பாள். பெப்பர்மென்ட் வாங்கிச் சாப்பிட்டிருப்பான்” என்று கூறிய அப்பா, “இங்கே வாடா! ஏன் இப்படி இருமறே?” என்று அவனைக் கேட்டார். “ஒண்ணுமில்லே” என்று அவன் இருமலை அடக்கிக் கொண்டான்.

“ஏதாவது மருந்து வாங்கிச் சாப்பிடறதுக்கென்ன? ஊரிலே டாக்டருக்கா பஞ்சம்?” என்றார் சித்தியா.

அதற்குள் கிணத்தய்யங்கார், “இதோ இங்கேயே தெருக் கோடியில் முனிசிபல் ஆஸ்பத்திரி இருக்கே! நம்ம ராமநா தய்யர்தானே டாக்டர்? போடா, போய்க் காட்டிட்டு வா. மருந்து கொடுப்பார். அப்பா கிளம்பறதுக்குள்ளே வந்து விடலாம்” என்றார்.

“அதுவும் சரிதான். போயிட்டு வா” என்றார் அப்பா.

அழாத குறையாக அவன் ஆஸ்பத்திரிக்குப் போனான். மருந்து என்றாலே அவனுக்குப் பிடிக்காது. அப்பாவோ சொன்னதைச் சொன்னவுடன் செய்யா விட்டால் கிழித்து போட்டு விடுவார்.

டாக்டர் ராமநாதய்யர் அப்பாவின் மாணவர். அவனை யும் அவன் குடும்பத்தில் எல்லோரையும் அவருக்குத் தெரி யும்.

”என்னடா, எங்கே வந்தே?’ என்று கேட்டு, இவன் சொன்னதும், நாக்கை நீட்டச் சொல்லி, வாயைத் திறக்கச் சொல்லி, டார்ச் அடித்துப் பார்த்து, ஸ்டெதஸ்கோப்பை மார் பிலும், முதுகிலும் அழுத்தி விட்டு, கம்பவுண்டரிடம் சீட் டெழுதித் தந்தார். கம்பவுண்டர் சிவப்பு நிறத்தில் ஒரு மிக் ஸர் தயாரித்து நாலு மூலைப் படக்கான ஒரு சீசாவில் எடுத்து வந்து தந்தார். “சீசாவில் கோடு போட்டிருக்கு, பார். அதன்படி தினம் மூன்று வேளை சாப்பிடு” என்றார் டாக்டர்.

”சரி’ என்று அவன் தலையாட்டி விட்டு, சித்தியாவின் இரும்புக் கடைக்குத் திரும்பி வந்தான். சீசாவைக் காட்டி டாக்டர் சொன்னதையும் சொன்னான்.

கிணத்தய்யங்கார் உடனே, “இருமிண்டே இருக்கியே? ஆத் துக்குப் போற வரையிலும் மருந்து சாப்பிடாமல் இருப் பானேன்? ஒருவேளை மருந்தை இங்கேயே சாப்பிட்டுடு” என்று சொல்ல, சித்தியா டம்ளர் கொண்டு வந்து நீட்டினார்.

வேறு வழியில்லாமல், மிக்ஸரை அளவு பார்த்து டம்ள ரில் ஊற்றி, வாயில் ஊற்றிக் கொண்டான். தொண்டையை அடைவதற்குள் அந்த அசட்டுத் தித்திப்பும், அசட்டுக் கார மும் அவனைக் கொலை வாங்கி விட்டன. கண்ணில் நீர் வந்து விட்டது.

“ராமநாதய்யருக்கு நல்ல கைராசி. கரெக்டாய் மருந்து கொடுப்பார்” என்று கிணத்தய்யங்கார் சான்றிதழ் வழங்கி னார்.

மறுநாள் காலையும் இருமலும் தொண்டைக்குள் கர்கர் சத்தமும் தொடர்ந்தன. ஆனால் அந்த மருந்து சீசாவைத் தொடவே நடுங்கி, ரகசியமாக இருமி, சத்தமில்லாமல் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.

அப்படியும் அவன் அப்பா விடவில்லை. “மருந்து சாப்பிட்டியாடா?” என்று கேட்டார்.

“சாப்பிட்டேன்” என்றான்.

“சீசாவைக் கொண்டு வந்து காட்டு” என்றார் அவன் அப்பா. எதுவும் நிதர்சனமாகத் தெரிந்தாக வேண்டும் அவ ருக்கு. சின்னப் பையன்கள் கட்டாயம் கோவணம் கட்டிக் கொண்டுதான் வேட்டி கட்டிக் கொள்ள வேண்டுமென்பது அவருடைய கண்டிப்பான கட்டளை. ‘கோவணம் கட்டிக் கொண்டிருக்கியா?’ என்று கேட்பார். ‘கட்டிக் கொண்டிருக்கிறேன்’ என்றால், ‘எங்கே காட்டு’ என்பார்.

மருந்து சீசா பின்புறத்து இருட்டறை அலமாரியில் இருந்தது. சட்டென்று குறிப்பிட்ட அளவு மருந்தை முற்றத்தில் கொட்டி விட்டுக் கொண்டு வந்து காட்டினான்.

“சரி போ” என்றார் அப்பா.

இதன் பிறகு ஜாக்கிரதை உணர்வு வந்து விட்டது. அப்பா கேட்கும் வரையில் காத்திருக்காமல், வேளை தவறாமல் குறிப்பிட்ட அளவு மருந்தைக் கொட்டி விட்டு வந்தான். அப்பா அந்தப் பக்கம் வருவது கிடையாது. வந்திருந்தால் முற்றத்துச் சாக்கடை ஓரம் சிவப்பு நிற ஈரத்தையும் மருந்து நெடியையும் கவனித்திருப்பார்.

மூன்றாம் நாள் சாயந்தரம் அப்பா சித்தியாவின் கடைக் கும் போகவில்லை. கோவிலுக்கும் போகவில்லை. நல்ல வேளை, தப்பினோம் என்று அவன் சந்தோஷப்பட்ட சமயம், “ராமநாதய்யர் உன்னை இன்னிக்கு வரச் சொல்லியி ருந்தார் இல்லையா? போய், மருந்து வாங்கி வா” என்று சொல்லி விட்டார். “சீசாவை எடுத்துண்டு போ. இன்னொரு சீசா கேட்காதே” என்று வேறே சொன்னார்.

அழாத குறையாக அவன் கிளம்பினான். டாக்டரைப் பார்க்கவே பிடிக்கவில்லை. மிக்ஸரை நினைத்தாலே, குமட்டல் வந்தது. கையிலுள்ள காலி சீசாவைப் பார்த்தான். வீசி யெறிந்து உடைத்து விடலாம் போல ஆத்திரம் வந்தது.

ஈசுவரன் கோவிலைத் தாண்டவிருந்த போது, சட் டென்று ஒரு யோசனை.

டாக்டரிடம் போகாமல், சிறிது நேரம் கடைகளில் வேடிக்கை பார்த்து விட்டு வீடு திரும்பினான்.

வழியில் வராகப் பெருமாள் கோவில் திருக்குளம் இருந் தது. படிகளும், மதில்களும் உடைந்த பாசி பிடித்த குளம். அங்கே நின்று, தெருவோரம் இருந்த செங்கல் மண்ணைக் கொஞ்சம் எடுத்துச் சீசாவுக்குள் போட்டான். குளத்தில் இறங்கி, கொஞ்சம் அழுக்குத் தண்ணீரை அதற்குள் ஊற்றி னான். நன்றாய்க் குலுக்கினான், பார்த்தான், ஆஸ்பத்திரி மருந்தின் நிறம் அப்படியே வரவில்லை என்றாலும், கிட் டத்தட்ட அது மாதிரிதான் இருந்தது. ரொம்பக் கூர்ந்து பார்த் தாலொழிய அப்பா கண்டுபிடிக்க மாட்டார்.

வீட்டுக்குள் நுழைந்தபோது ரொம்ப இயல்பாக இருப்பது போல காட்டிக் கொள்ளப் படாதபாடு பட்டான். ஆனால் அவன் கையில் மருந்து சீசாவும் அதற்குள் ஒரு திரவமும் இருப்பதே அவருக்குத் திருப்தி தந்து விட்டது.

இதையும் வேளாவேளைக்கு ஒழுங்காக, அளவுப்படி முற்றத்தில் கொட்டினான்.

ஆனால் அதற்கடுத்த மூன்றாம் நாள் இப்படிச் செய்ய அவசியம் ஏற்படவில்லை. ஒரு வாரமாகவே என்னவோ ஜுரமும், வாந்தியுமாக இருந்த அவனுடைய அப்பா படுத்த படுக்கையாகி விட்டார். வீடு அமளிதுமளிப்பட்டது. உறவினர்கள் வருவதும், போவதும் டாக்டர்கள் வருவதும், மருந்துகள் வாங்கப்படுவதுமாக அந்தப் பெரிய குடும்பம் ஆடிப் போயிற்று.

அவனுக்கு அந்த நிலைமையின் தீவிரம் புரியவில்லை. ஆஸ்பத்திரி மருந்திடமிருந்து விடுதலை பெற்ற சந்தோஷத்துடன் சிநேகிதர்களுடன் விளையாடப் போனான். வீட்டில் எங்கு பார்த்தாலும் இறைந்து கிடந்த பணத்தில் அவ்வப் போது கொஞ்சம் எடுத்துக் கொண்டு கிளப்புக்கு போய் அல்வா சாப்பிட்டான்.

ஒரு மாதம் சென்றது. ஒருநாள் காலை, வீட்டில் பயங்கர நிசப்தம் குடி கொண்டது. தலைக்குத் தலை கண்ணைத் துடைத்துக் கொள்வதும், மெதுவாக அழுவதும் மூக்கைச் ந்துவதுமாக இருந்தார்கள். ‘மத்தியானத்துக்கு மேல் தாங்காது’ என்று யாரோ சொல்வது அவன் காதில் விழுந்தது.

பதினொரு மணி சுமாருக்கு அப்பா படுத்திருந்த அறையிலிருந்து ஹோவென்று அழுகைச் சத்தம் கேட்டது. எல்லோரும் தலையிலும் முகத்திலும் அறைந்து கொண்டு அழுதார்கள். ”கிச்சாமி! என்னை இந்த வயசில் விட்டுட்டுப் போயிட்டியே” என்று எண்பது வயது பாட்டி அலறினாள். ”அப்பா, எங்களை விட்டுட்டுப் போயிட்டீங்களே?” என்று அண்ணாக்களும், அக்காக்களும் அழுதார்கள்.

அவனுக்கு அழத் தெரியவில்லை. ஆனால் பாறாங்கல்லை வைத்த மாதிரி மனசில் ஒரு பாரம் தெரிந்தது. கூடத்தில் ஒரு பெரிய மரத் தொட்டில் உண்டு. அதில் போய் உட்கார்ந்து கொண்டான்.

“அப்பா! உங்களை நான் ஏமாத்திட்டேனே! உங்களை நான் ஏமாத்திட்டேனே!” என்று மட்டுமே சொல்லிச் சொல்லி அழுதான். வேறெதுவும் அவனுக்குத் தோன்ற வில்லை.

அப்பாவை ஏமாற்றினோம் என்று மட்டுமே அவனுக்குத் தெரிந்தது. தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டோம் என்பது அப்போது அவனுக்குத் தெரியவில்லை.

இன்று அவனுக்கு வயது எழுபத்தைந்து. தீராத ஆஸ்துமா நோயாளி.

– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *