வர்ணமில்லா வானவில்…






(2003ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம்-4
நான் இந்த முறை வண்டி எடுத்துக்கிட்டு பேருந்து நிலையம் போகலை. நான் எந்த ஊருக்குப் போறதா இருந்தாலும் வண்டியைக் கொண்டு பேருந்து நிலைய நகராட்சி காப்பகத்துல போட்டுட்டு திரும்பும் போது எடுத்து வருவேன். இந்த தடவை என்னைத் தேடி நண்பர் ஒருத்தர் வீட்டுக்கு வந்தார். அவர் வண்டி பின்னால பேசிக்கிட்டே போய் பேருந்து நிலையத்துல இறங்கிட்டேன். திரும்பும்போது நடக்கனும்ன்னு ஆசை நடந்தேன்.

என் தெரு திரும்பினதும் என் பின்னால ரெண்டு பேர் வந்தாங்க. அவுங்களை எனக்கு முன்னே பின்னே தெரியாது. ஊருக்கு வந்து ரெண்டு மாசம் ஆனாலும் என் வேலை எனக்கு வெளிப்பழக்கம் அவ்வளவா கெடையாது. நான் ரொம்ப சுலபமா யார்கிட்டேயும் பழகமாட்டேன். ஆகாஷ் பழக்கம்கூட சுகுமாரி அறிமுகம். அவன் வந்து போற வழக்கம்.
“பட்டா ஒருத்தன். பயிர் வைக்கிறவன் வேறொருத்தன் !”- அப்படின்னு பேச்சை ஆரம்பிச்சான் பின்னால வந்தவன்ல ஒருத்தன்.
எனக்கு காதுல விழுந்துது. ஆனா எனக்கு யாரைச் சொல்றான்னு புரியலை தெரியலை.
அடுத்து வர்றவன் மௌனமா வந்தான். பேசலை.
“காசுக்குக் காசு. சுகத்துக்குச் சுகம். நல்லா அனுபவிக்கிறான்ய்யா !” முன்னாடி பேசினவனே பேசினான்.
இதுக்கும் அடுத்தவன் பதில் சொல்லலை. நமக்கு ஏன் வம்புன்னு பேசாம வந்தான் போல.
“பொறந்தாலும் இப்புடி பொறக்கனும். மச்சம் உள்ளவன் !” அடுத்தும் அவனே பேசினான்.
“ஆள் இல்லாத சமயத்துலதான் ஆட்டம் போட்டாங்கன்னா வந்த விறகும் போடுறாங்கப்பா.”
“தின்ன ருசி.” – இது இப்போ பேசாம வந்தவன் பதில்.
“திருட்டு மாங்காய்!” – முன்னாடி பேசினவன்.
“சில பேருக்கு சிலர்கிட்டத்தான் திருப்தி.”
“பசங்க பள்ளிக்கூடம் போயிடுறாங்க. வந்த ஆளும் வீட்டுல இல்லே. நாலு நாள் கொண்டாட்டம்தான்!”
இதைச் சொன்னதும்தான் இவனுங்க என்னைப் பத்தி பேசுறாங்கன்னு புரிஞ்சுது. காரணம் நான்தான் நாலு நாளா ஊர்ல இல்ல. வீட்டுல இல்லாம வெளி நாட்டுலேர்ந்து வந்தவன்.
சுகுமாரியைப் பத்திப் பேசுறான்ங்கன்னு மனசு கலவரமாச்சு.
“டேய் ! என்னடா சொல்றீங்க…?” ன்னு கேட்டு… அவனுங்க, ‘உன் பொண்டாட்டியைத்தான் சொல்றோம்!’ ன்னு திருப்பித் தாக்கினானுங்கன்னா கண்டிப்பாய் அவமானம்! தாங்கமுடியாது.
ஆத்திரம் ஏதாவது நடக்கும். இது ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு நடத்தி முடிக்கிற காரியம் இல்லே. கொஞ்சம் ஆவேசப்பட்டாலும் பதறின காரியம் சிதறும். மானம் போகும் அவமானம் நடக்கும். இது காதும் காதுமாய் நடத்த வேண்டிய காரியம். கண்ணி வைச்சி கையும் மெய்யுமாய்ப் புடிச்சாத்தான் தப்பு செய்றவங்க தப்பிக்க முடியாது.! – மனசுல முடிவு எடுத்துக் கிட்டு நடந்தேன்.
அவனுங்க என்னை விட்டு பிரிய வேண்டிய இடம் போல…
“அட்டகாசம் தாங்க முடியலை. இனியாவது புரிஞ்சு ஆம்பளையா நடந்துக்க.” ஒருத்தன் சொன்னான்.
சத்தியமா இது எனக்கு சொல்லப்பட்ட வார்த்தை !!
திரும்பிப் பார்த்தேன். அவனுங்க என்னைத் திரும்பிப் பார்க்காம போனான்ங்க.
‘மனைவி எனக்குத் துரோகம் செய்யுறாள். சுகுமாரிக்கும் ஆகாசுக்கும் தொடர்பு.!’ எனக்கு தெளிவாய்த் தெரிய… மனசும் உடம்பும் அப்படியே ஆடிப் போச்சு.
எப்புடி கண்டுபிடிக்கிறதுன்னு யோசனை. தலையை விண் விண்ணுன்னு வலிச்சுது.
பதறின காரியம் சிதறும் ! மனசுல நல்லா முடிவு பண்ணிக்கிட்டேன். கையும் மெய்யுமாய்ப் புடிச்சுதான் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கனும்ன்னு மறுபடியும் மனசுல ஏத்திக்கிட்டேன்.
ஊருக்குக் தெரிஞ்சிருக்கு! வீட்டுப் புள்ளைங்களுக்குத் தெரிஞ்சிருக்கனுமே..! ன்னு மனசுக்குள்ள சின்ன யோசனை.. எப்படி விசாரிக்கிறது..? ன்னு திட்டம். நடந்தேன்.
வீட்டுக்குள்ள போனபோது சுகுமாரி நல்ல விதமா வரவேற்றாள்.
“போன காரியம் என்னாச்சு”ன்னு அன்பா, அனுசரணையா விசாரிச்சாள்.
என்னதான் நான் மனசை இறுக்கிப் பிடிச்சிருந்தாலும் கசப்பு.! ஆளைப் பார்த்ததும் அது அதிகமாகி முகம் சுள்ளுன்னு ஆச்சு. அது எனக்கே நல்ல தெரிஞ்சுது.சரியா பதில் சொல்லலை.
“ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ?”ன்னு கேட்டாள்.
“தலை வலி! ”ன்னு சும்மா ஒரு பொய்யைச் சொல்லி அறைக்குள் போனேன். கொஞ்ச நேரம் கழிச்சி வழக்கமா இருக்கிறது போல நடிச்சேன்.
மறுநாள்.
அருணும், தருணும் பள்ளிக்கூடத்துக்குப் போட்டுப் போக ஷூ வாங்கனும்ன்னாங்க.
அவுங்களைத் தனியா அழைச்சுப் பேச வாய்ப்பு.
கூட்டிப்போனேன். ஷூ, வாங்கிக் கொடுத்து, பாரதி பூங்காவுக்கு அழைச்சி வந்து உட்கார வைச்சு, சுண்டல் ஐஸ் கிரீம்ல்லாம் நிறைய வாங்கிக் கொடுத்து அப்படி இப்படி பேச்சுக் கொடுத்து “ஆகாஷ் மாமா யார் ?”ன்னு கேட்டேன்.
பசங்க அவன் பேரைக் கேட்டதுமே மிரண்டு போய்ப் பார்த்தாங்க.
“இஞ்ஜினியர்தானே !” ன்னு அவுங்க பயத்தைப் போக்கினேன்.
ரெண்டு பேருமே ஆமாம்ன்னு சொல்றாப் போல ஒன்னா தலையாட்டினாங்க.
“எதுக்கு அவர் வீட்டுக்கு அடிக்கடி வர்றார் ?” ன்னேன்.
“சொல்ல மாட்டோம்!” – தருண் கடிச்ச வாய் துடைச்சாப்போல சொன்னான்.
“ஏன்?” – அதிர்ச்சியாய்ப் பார்த்தேன்.
அருண் கால் சட்டையை மெல்ல தூக்கினான். அவனைப் பார்த்து தருணும் அப்படியே செய்தான்.
“சொல்லக்கூடாதுன்னு அம்மா சூடு வைச்சிடுச்சு!” – ரெண்டு பேரும் ஒரே குரலில் சொன்னாங்க.
அடித்தொடையில இரண்டு இஞ்ச் அளவுக்கு சூடு வைச்ச தழும்பு!
வந்து இத்தனை நாளாகியும் புள்ளைங்க உடம்பைக் கவனிக்கலை ! அம்மா குளிப்பாட்டி விடுறாள். பள்ளிக்கூடம் கிளப்பி விடுறாள். நான் என்ன புதுசா கவனிக்கனும். ? அதுக்கு ஜோலியே இல்லே. எப்படி கவனிக்க முடியும் ?
அரண்டு போய், “ஏன்…?”ன்னேன்.
“அம்மாவும் ஆகாஷூம் ஒருநாள் பெட்ரூம் கட்டில்ல அசிங்கமா இருந்தாங்கப்பா. எதார்த்தமா பள்ளிக்கூடம் விட்டு வந்த நாங்க அதைப் பார்த்துட்டோம். அம்மாவுக்கு உடனே கோபம். அடி அடின்னு அடிச்சா. அடுத்து வெளியில சொல்லக்கூடாதுன்னு கரண்டியைப் பழுக்க வைச்சி சூடு வைச்சா.” – அருண் திக்கித் திணறி சொன்னான்.
“அடிப்பாவி ராட்சசி!”- நான் அலறிட்டேன்.
புள்ளைங்களுக்குச் சூடு வைக்கிற அளவுக்கு இருந்துதுன்னா இவுங்க மோகம் மோசம்ன்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன்.
சரி. இதை கையும் மெய்யுமாய்ப் புடிச்சாத்தான் கண்டிக்க முடியும், தண்டிக்க முடியும். இல்லேன்னா எப்போதும் போல தப்பிடுவாங்க…! தெரிஞ்சு போச்சு.
“வீட்டுக்குப் போனதும் அம்மா உங்ககிட்ட ஏதாவது அப்பா விசாரிச்சாரான்னு கேட்டா இல்லேன்னு சொல்லுங்க” ன்னு சொல்லி பசங்களை எச்சரிச்சேன்.
நான் எதிர் பார்த்த மாதிரியே புள்ளைங்களை நான் வீட்டுக்குள்ளே விட்டுட்டு கொல்லைக்குப் போய் முகம் கழுவி திரும்பறதுக்குள்ள சுகுமாரி அவனுங்க கிட்ட அப்பா ஏதாவது விசாரிச்சாரான்னு மெல்ல கேட்டாள். நான் அவளுக்குத் தெரியாம நின்னு கேட்டேன்.
“இல்லே ” சொன்னாங்க.
வந்தேன்.
தப்பு உறுதி ஆகிடுச்சு.
இனி …கையும் மெய்யுமாய்ப் புடிக்கிறதுதான் பாக்கி. எப்படி புடிக்கிறதுன்னு மூளையைப் போட்டு கசக்கினேன். வழி தெரிஞ்சுது.
“ஒரு முக்கியமான வேலை. நாலு நாள் கழிச்சு திரும்பறேன்”னு சுகுமாரிகிட்ட யோக்கியமா சொல்லி கிளம்பினேன். பேருந்து நிலையம் போய் பக்கத்து ஊர்ல கொஞ்ச நேரம் பொழுதைக் கழிச்சிட்டு உடனே திரும்பினேன்.
வாசல்ல கார்.!
அழைப்பு மணியை அழுத்தினா ஆபத்து. எழுந்து வந்து சமாளிச்சுடுவாங்க. என்ன செய்யலாம்ன்னு அக்கம் பக்கம், மேலே கீழே பார்த்தேன். பெட்ரூம் பக்கம் பதுங்கிப் பதுங்கிப் போனேன். என் அதிர்ஷ்டம் சன்னல் கதவு திறந்து… லேசா ஒட்டி மூடாம திறந்திருந்துது. விலக்கிப் பார்த்தேன்.
கண்கொண்டு பார்க்க முடியலை. ஒரு புருசன்காரன் பார்க்கக் கூடாதது !! என்னையும் மீறி உக்கிரம், உஷ்ணம். நெஞ்சுக்குழி திகு திகுன்னு எரிஞ்சுது.
“சுகுமாரீ.. .ஈ”- கூவினேன்.
அவ்வளவுதான். ரெண்டு பேரும் வாரிச்சுருட்டி எழுந்தாங்க. அவசரத்துல துணிமணிகளை அள்ளிப் போட்டு போர்த்தி……!
நான் ஆத்திரத்தையெல்லாம் அடக்கி வாசல்ல பொறுமையா காத்திருந்தேன். என்னையும் மீறி நடுங்கின உடம்பைக் கட்டுப்படுத்தினேன்.
சுகுமாரி கொஞ்ச நேரத்துல பயத்தோட கதவு திறந்தாள். முகம் முத்து முத்தா வேர்த்திருந்தது. கதவை ஒட்டி ஆகாஷ் இருந்திருப்பான் போல.
நான் உள்ளே நுழைஞ்சதும் புசுக்குன்னு வெளியேறி …காரை எடுத்துக்கிட்டு பறந்தான்.
நான் புயலுக்கு முன் அமைதியாய் சோபாவுல அமர்ந்தேன். புள்ளைங்க பள்ளிக்கூடம் விட்டு வரலை.
சுகுமாரி கதவைச் சாத்திட்டு பீதியாய் என் முன்னால வந்து நின்னாள்.
அவள் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் தரையைப் பார்த்தேன்.,
“நியாயமா….?”- கேட்டேன்.
அவள் வருத்தப் பட்டவள் போல் குனிந்த தலை நிமிரலை.
“வாயைத் திறந்து சொல்லு ?” – அதட்டினேன்.
“ம…..மன்னிச்சுடுங்க…”
மெல்ல சொன்னாள். குரல் கிணத்துக்குள்ளே இருந்து ஒலிக்கிறாப் போல இருந்துது.
“ஆளில்லாம தப்பு செய்தா மன்னிக்கலாம். இருக்கும்போதே செய்ஞ்ச தப்பை எப்படி மன்னிக்கிறது…?” – கேட்டேன்.
பதில் பேசலை.
“எத்தனை காலமா இந்த அசிங்கம் ?”
“நா..ன் இந்த ஊருக்குக் குடி வந்த காலமா.”
“அதாவது சுமார் நாலு நாலரை ஆண்டு காலம்? ”
மௌனம்.
“நியாயமா ?”- எனக்கு மறுபடியும் அதே கேள்வி.
“ம……மன்னிக்க வேணாம். கண்டுக்காதீங்க.” – நிமிர்ந்தாள். கண்கள்ல ஒளி. நெஞ்சுல துணிச்சல். முகம் தெளிவாய் இருந்துது.
இந்த பதிலை நான் சத்தியமாய் எதிர்பார்க்கலை. என்னையும் மீறி அதிர்ச்சி.
“சுகுமார்……” இடி விழுந்தவன் போல் அதிர்ந்தேன்.
“வீணா அலறாதீங்க. பெரிசு பண்ணினா உங்களுக்குத்தான் அசிங்கம். கம்முன்னு இருந்தா நாலு சுவத்துக்குள்ள அடங்கும்!”
உடம்புல நெருப்பை வாரிக் கொட்டினாப் போல இருந்துது.
“என்னடி சொன்னே…ஏ !” – ஆத்திரமாய் எழுந்தேன்.
“சும்மா ஆத்திரப்படாதீங்க. உங்களுக்கு உண்மை தெரிஞ்சு போச்சு. எங்களுக்குள்ள நாலு வருச பழக்கம். இந்த பழக்க வழக்கத்தினாலதான் அவர் நமக்கு நல்லது கெட்டது செய்யுறார். உங்களுக்காக அந்த ஆளை என்னால திடீர்ன்னு துறக்க, மறக்க முடியாது. அவர் வந்து போறதுனால உங்களுக்கு நஷ்டமில்லே. லாபம். என்னாலேயும் ஆகாஷை மறக்க முடியாது… நீங்க கண்டுக்காம இருக்கிறதுதான் முறை.”- சொன்னாள்.
‘கட்டின புருசன்கிட்டேயே என்ன பேச்சு.!’ எனக்கு உடம்பு கொதிச்சுப் போச்சு.
அடுத்த வினாடி….
“வெளியில போடீ….ஈ..”- கத்தினேன்.
அடுத்து அவள் சொன்ன வார்த்தை என் தலையில சம்மட்டியாய் இறங்கிச்சு.
அத்தியாயம்-5
“நான் போகத் தயார். ஆனா நீங்க சம்பாதிச்சது மொத்தமும் என் கையில. நீங்கதான் இந்த வீட்டை விட்டு ஓட்டாண்டியாய் வெளியேப் போகனும். தயாரா?…” – கேட்டாள்.
‘சரியான கிடுக்கிப் பிடி!’- எனக்கு உலகமே தலைகீழாய்ச் சுழன்றுச்சு. ஆடி அடங்கி அரண்டு அவளைப் பார்த்தேன்.
“என்ன தயாரா?” – அஸ்திரத்தை மீண்டும் ஏவினாள்.
சத்தியமா சொல்லப் போனா நான் இந்த நிமிசம் ஓட்டாண்டி. கடைசியாய் நான் வங்கியில போட்ட லட்சத்தைத் தவிர என் கையில ஒன்னுமில்லே. ஆனாலும் நம்பிக்கையை விடாமல் நான், “விவாகரத்து கொடுத்துடுறேன் விலகிடு.” – சொன்னேன்.
“திருப்பி நான் சொல்றேன் விலகிடுங்க.”- அவள்.
“நம்பிக்கைத் துரோகம்ன்னு போலீஸ் கோர்ட் போவேன்.”
“தாராளமா போங்க நான்தான் ஜெயிப்பேன்.”
“உங்க விவகாரம் ஆகாஷ் பொண்டாட்டி புள்ளைங்களுக்குத் தெரியுமா?”
“அவளுக்கு எப்பவோ விசயம் தெரிஞ்சி கைக் குழந்தையோட போய் அப்பன் வீட்டுல வாழாவெட்டியாய் இருக்காள்.”
“அடிப் பாவி!”
“என்ன பாவி! நான் சொல்றபடி இருந்தா நீங்க இந்த வீட்டுல இருக்கலாம். இல்லே நடையைக் கட்டலாம்!”- வாசலைக் காட்டினாள்.
“உனக்கு அவ்வளவு துணிச்சலா?! உன்னைக் கொன்னு போட்டுட்டு வெளியில போவேன்.” – குதிச்சேன்.
“அதுக்கு முன்னால நான் உங்களைக் கொலை செய்வேன். மனைவி நினைச்சாள்ன்னா கணவனைச் சுலபமாய்க் கொல்லலாம். சோத்துல விஷம் வைக்கலாம். சரசமாடி தூங்கும் போது தலையில கல்லைத் தூக்கிப் போட்டு கொல்லலாம்.”
“நான் இப்பவே உன்னைக் கழுத்தை நெரிச்சுக் கொல்வேன்.!” ஆத்திரத்துடன் எழுந்தேன்.
“உங்களால அது முடியாது. நான் இளிச்சவாய் இல்லே. நீங்க கொஞ்சம் அசைஞ்சாலும் உசுரோட இருக்க மாட்டீங்க. கதவைத் திறந்து வெளியில பாருங்க புரியும்.“ – அமர்த்தலாக சொன்னாள்.
“வெளியில எ…என்ன ?” – எனக்கே என் குரல் பின் வாங்கியது.
“நீங்க கண்ணால பார்த்து சுகுமாரின்னு குரல் கொடுத்த அடுத்த வினாடியே நாங்க சுதாரிச்சுட்டோம். ஆத்திரத்துல அசம்பாவிதம் ஏதாவது நடக்கும், நீங்க உடனே வெளியில போய் நாலு ஆளோட வாசலுக்கு வந்து தயாரா நில்லுங்க. எங்களுக்குள்ளே வார்த்தை முத்தி அசம்பாவிதம் ஆரம்பிச்சா கதவு திறந்துதானிருக்கும். என்னை முடிக்கிறதுக்குள்ளே எதிரியை முடிச்சிடுங்கன்னு சொல்லியே அனுப்பினேன். ஆகாஷ் சொன்னபடி வந்திருக்கார். உங்களுக்குச் சந்தேகமா இருந்தா கதவைத் திறந்து பாருங்க. உங்களுக்குத் துணிச்சல் இல்லேன்னா நானே திறந்து காட்டறேன் !”
சொல்லி விடுவிடுவென்று நடந்து வாசலுக்குச் சென்றாள். கதவைத் திறந்தாள்.
முதலில் நின்றது ஆகாஷ். அவனைச் சுற்றி வாசல் காவல் வீரர்களாய் நான்கு தடியன்கள். அவர்கள் கையில் உருட்டுக் கட்டை, சைக்கிள் செயின், கத்தி, அரிவாள்.
‘சரியான வில்லத்தனமாய் என்ன முன்னேற்பாடு!? வில்லி!’
சுகுமாரி கதவை லேசாய் ஒருக்களித்து விட்டு திரும்ப என்னிடம் வந்தாள். அவர்கள் அசையவில்லை.
“இதெல்லாம் எப்படி சாத்தியம்ன்னு நினைக்கிறீங்களா. விலாவாரியா சொல்றேன். நீங்க வீட்டைவிட்டு அந்தண்டை போனதும் ஆகாஷைப் போன்ல பிடிப்பேன். வருவார். உல்லாசமாய் இருப்போம். ஆகாஷ் சிவில் இஞ்னியரிங் முடிச்சவரு. கட்டிட காண்ட்ராக்ட் ஒரு மோசமான தொழில். சிமெண்ட் கம்பி தகராறு, பேசினப் பணம் சரியா வராமல் இழுக்கடிச்சு தகராறு பண்ணினாங்கன்னா… குண்டர்களை வைச்சிதான் பிரச்சனையை முடிப்பார். அதனால அவருக்குக் குண்டர்கள் பழக்கம். கூப்பிட்ட குரலுக்கு வருவாங்க. நீங்க உள்ளே வந்ததும் தாழ்ப்பாள் போடாம வந்தது நான் குரல் கொடுத்தால் அவர்கள் வரனும்ங்குறதுக்காகத்தான்.”
“ஆனந்தன்! ஆகாசுக்கும் எனக்கும் மொதல்ல கொடுக்கல் வாங்கல் தொழில் முறையிலதான் பழக்கம். அடுத்து… வயசு, தனிமை. தெரிஞ்சே தப்பு செய்ஞ்சோம். அதுவே பிரிக்க முடியாத அளவுக்குப் போயிடுச்சு. உங்க வரவுக்குப் பின்னால் எப்படி சமாளிக்கிறதுன்னு யோசனை செய்ஞ்சேன். டக்குன்னு இந்த சொத்து ஐடியா வந்துச்சு. இதுக்காக இதுன்னு நான் திட்டமிட்டு செய்யலை. இயற்கையாய் அமைஞ்சு போச்சு. நான் சாதகமா பயன் படுத்திக்கிட்டேன்.
இப்ப சொல்லுங்க எங்க உறவை பிரிக்க முடியாது. பிரிக்க முயற்சி செய்தால் விபரீதம் இப்படி. ஊர்ல உலகத்துல நடக்காதது இல்லே. நீங்க கண்டுக்காம போனீங்கன்னா சேர்த்த சொத்தை அனுபவிக்கலாம். மானம் ரோசம் பெரிசுன்னா தாராளமாய் இந்த வீட்டைவிட்டு ஓட்டாண்டியாய் வெளியேறலாம். உங்களுக்குப் பிறந்த பிள்ளைங்களைக் கூட்டிப் போகவும் எனக்குச் சம்மதம்!” – முடித்தாள்.
காமம் இவளை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது?!
வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி கஷ்டப்பட்டு நொந்து நூலாகி சம்பாதித்த பணம், சொத்து. எப்படி விட்டுப் பிரிய .?. சோர்ந்து அமர்ந்தேன்.
‘மான அவமானத்திற்குப் பயந்து பிரியலாம். அப்புறம் இந்த கேடு கெட்டவள் ரொம்ப பேருக்குப் பாடமாகிப் போவாள். இந்த சுருட்டல் துரோகமெல்லாம் மன்னிக்க முடியாதவை. இவள் தண்டிக்கப் படவேண்டியவள். நச்சு அழிக்கப் படவேண்டியவள்!’ எனக்குள் எழுந்தது.
சீறி சிதறுவதால் பயனில்லை. பதுங்கிப் பாய வேண்டிய கட்டாயம். எனக்குள் தெளிவாகத் தெரிஞ்சுது. இடிந்து போனவனாய் இருந்த என்னைப் பார்த்த சுகுமாரி… தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பணிந்துவிட்டான் என்பதைப் படம் பிடித்தாள் போல.
இனி அசம்பாவிதம் நடக்க வாய்ப்பில்லை தெளிந்தாள். வாசலுக்குச் சென்றாள்.
“ஆகாஷ் ! நீங்க ஆட்களை அழைச்சிக்கிட்டுப் போங்க. தேவைப்பட்டால் அழைக்கிறேன். வரலாம்.” என்றாள்.
“சுகுமாரி! நாங்க போனபிறகு உனக்கு ஆபத்துன்னா பாதுகாப்பு?”- ஆகாஷ் கேட்டான்.
“என்னைக் கொன்னா அவருக்குச் சொத்துக் கிடைக்காது. மீறி கொன்னார்ன்னா அவர் ஜெயிலுக்குப் போவார். புள்ளைங்க நடுத்தெருவுல நிக்கும். அதனால் கொல்ல வாய்ப்பில்லே. எல்லாத்தையும் மீறி கொல்ல முயற்சி செய்தார்ன்னா என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும். எப்பவும் ஜாக்கிரதையாய் இருப்பேன். கையில கத்தி வைச்சிருக்கேன்.” – சொன்னாள்.
அவர்கள் திருப்தியாய் கிளம்பினார்கள்.
சுகுமாரி கதவை அடைத்துவிட்டு திரும்பினாள். என்னை சட்டை செய்யாமல் படுக்கை அறையில் போய் படுத்தாள்.
இப்ப சொல்லுங்க அவளைக் கொல்லனுமா வேண்டாமா கட்டின புருசன் கிட்டேயே…. நான் அவன்கிட்ட அப்படித்தான் இருப்பேன். நீ கண்டுக்காதன்னு ஒரு மனைவி சொல்றாள்ன்னா அவளுக்கு என்ன திமிர் ?!
பொண்டாட்டியை இன்னொருத்தனோட இருக்க விட்டுட்டு வீட்டுல இருக்கிறவன் புருசனா.? எந்த ஆம்பளையாவது அப்படி இருப்பானா ?!
கண்ட கள்ளக் காதலை வெளியே சொல்லாதே!ன்னு தான் பெத்த புள்ளைங்களுக்கு ஒருத்தி சூடு வைக்கிறாள்ன்னா… அவள் மனுசி இல்லே. ராட்சசி ! தாய் இல்லே பிசாசு.!!
புருசன் கண்டுக்கிட்டாலும் இவனை இதாலதான் அடிக்கனும்ன்னு எப்பவோ திட்டம் போட்டிருக்காள். மாட்டும்போது தெரிவிக்கலாம்ன்னு கம்முன்னு இருந்திருக்காள். இப்போ தெரிவித்துவிட்டாள்.. அதனாலதான் கையும் மெய்யுமாய்ப் புடிச்சும் அவள் கவலைப்படலை.
இத்தினி நாள் பயந்து இருந்தாங்க. நாளைக்கு நான் இருக்கும் போதே தைரியம், சுதந்திரமா ஆகாஷ் வீட்டுக்குள் நுழைவான். இவள் அவனைப் படுக்கை அறைக்கு அழைத்துச் செல்வாள். கட்டின கணவன் எப்படி கைகட்டி இருக்க முடியும்…?
வம்பு வேணாம். சொத்தெல்லாம் போனாலும் பராவாயில்லேன்னு புள்ளைங்களை அழைச்சிக்கிட்டு வெளிக் கிளம்பிடலாம். அது இளிச்சவாய்த்தனம்.! கோழைத்தனம்.!!
இனிமே எக்காரணம் கொண்டும் சுகுமாரியை ஏமாத்தி, வெத்துப் பேப்பர்ல கையெழுத்து வாங்கி சொத்தை என் பேருக்கு மாத்த முடியாது.! சுதரிப்பா இருப்பாள். கொலைக்காரி.!
அவள் ஆகாஷ் பேர்ல எல்லாத்தையும் எழுதி வைச்சு அவனோட அடைக்கலம் ஆனாலும் ஆச்சிரியப்படுறதுகில்லே. மோகம் !
இதுக்காகவாவது நான் இவ கூடயே இருக்கனும். உழைச்ச சொத்தைத் திரும்ப பெறனும். துரோகம் செஞ்சவளைக் கொல்லனும். வழி ? – மூலையைக் கசக்கினேன்.
உடல் சோர்வு, மனக் கஷ்டம். சோபாவுல அப்படியே சரிஞ்சு கண்ணை மூடினேன்.
சுகுமாரி பெரிய அம்மிக் குழவியைத் தன் தலைக்கு மேல தூக்கி என் தலைமாட்டுல நிக்கிறாள் ! கனவா கற்பனையான்னு தெரியலை.
என்னையுமறியாமல், “சுகுமாரி!..” ன்னு அலறி கண்விழிச்சேன்.
பயத்துல உடம்பு தொப்பலா நனைஞ்சுது.
இந்த அலறல் சத்தத்துக்கெல்லாம் அசங்காம சுகுமாரி அசையாம படுத்திருந்தாள். இந்த நேரத்துல இவள் தலையில நாம கல்லைத்தூக்கிப் போட்டால் என்ன.? முகத்துல தலையணையை வைச்சி அமுக்கி கொலை செய்ஞ்சா என்ன? ன்னு சட்டுன்னு யோசனை.
நான் ஜெயில்! சொத்து கைக்கு வராது! புள்ளைங்க நடுத்தெரு! மொத்த வாழ்க்கையும் பாழ். சரிவராது.
இவளைக் கொல்ல வேண்டும் பழி வரக்கூடாது. நரகாசூரன்தான் அழிக்கப்பட வேண்டும். நாராயணன் அல்ல. சொத்து வரனும் புள்ளைங்களோட சந்தோசமா இருக்கனும். வழி ?
இதுவரைக்கும் முட்டாள்தானமா இருந்தாச்சு. இனி புத்திசாலித்தனமா இருக்கனும். வீட்டுல இருந்துதான் எல்லாத்தையும் முடிக்கனும். இப்போ பணிஞ்சு போறதைத் தவிர வேற வழி இல்லே. பணியறது, பதுங்கறதுங்குறது பாயறதுக்காக. – முடிவுக்கு வந்தேன்.
மெல்ல எழுந்து அறைக்குப் போனேன். கட்டில் பக்கம் நின்னேன்.
“சு…சுகுமாரி !”- அழைச்சேன்.
துணுக்குற்று விழிச்சாள். படக்குன்னு பயத்துடன் எழுந்தாள். சடக்குன்னு அசந்துட்டோமே…! இந்த நேரத்துல அசம்பாவிதம் நடந்தா என்ன ஆகி இருக்கும்? என்கிற பயம் வினாடி நேரம் முகத்துல வந்து மறைந்தது
“நமக்குள்ள ஒரு சின்ன ஒப்பந்தம்.” – கட்டிலில் அமர்ந்தேன்.
“என்ன?” – வார்த்தை தைரியமாய் வந்துது..
“என் கண்ணுக்கு முன்னால எந்த அசிங்கமும் நடக்கக்கூடாது. இந்த வீட்டிலேயும் நடக்கக்கூடாது ! சத்தியம் பண்ணு.” – கையை நீட்டினேன்.
இது சுகுமாரி எதிர்பார்க்காதது. முகத்தில் பளிச்சுன்னு சின்ன மலர்ச்சி. ஆனாலும் அசையலை. சந்தேகமாய்ப் பார்த்தாள்.
“சத்தியமா உங்க சுதந்திரத்துல நான் தலையிட மாட்டேன். கண்ணுக்கு நேர்ன்னா மனசு தாங்காது.” – நீட்டிய கையை மடக்கல நான்.
“……”
“இன்னொரு உண்மை. உன்னைத் தொட என் மனசு கூசும். நமக்குள்ளே எந்த உறவும் வேணாம். வெளியில கணவன் மனைவி. உள்ளே வேற வேற. இதுல நான் கொஞ்சமும் மாற மாட்டேன். இது சத்தியம்!” – நீட்டியிருந்த கையை அவள் தலையில் வைச்சேன். அசிங்கத்தைத் தொட்டாப் போல இருந்துச்சி.
சுகுமாரி வெகு நேரம் ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தாள்.
நான் வீட்டை விட்டு வெளியேறாமல் சாமார்த்தியமாய் கூண்டுக்குள் இருக்க வழி பண்ணியாச்சு.. இப்போ நான் என் பொண்டாட்டியைக் கொல்லனும். எதிரியும் லேசுப் பட்டவள் இல்லே புத்திசாலி. திறமையா செய்யனும்!
என்னதான் கூண்டுக்குள்ளே நுழைஞ்சி மனசுக்குள்ள தீ இருந்தாலும் வெளியே தலை நிமிர்ந்து நடக்க வெட்கம். எதையும் பார்க்கப் பிடிக்காம யாரோடேயும் பேச பிடிக்காம வீட்டுக்குள்ளேயே இருந்தேன் சார்.
அம்மா அப்பாக்குள்ளே சண்டைன்னு நினைச்சு அருண், தருண் எப்போதும் போல ஒதுங்கி படிக்கிற வேலையைப் பார்த்தாங்க.
நான்தான் இடிஞ்சி குமைஞ்சி கிடந்தேனேயொழிய ரெண்டு நாள்ல சுகுமாரி தெளிஞ்சுட்டா சார். அடுத்தடுத்த நாள்ல…புள்ளைங்க பள்ளிக்கூடம் கிளம்பிப் போனதும் இவ ஆகாஷுக்குப் போன் பண்றதும் அவன் அழைச்சிக்கிட்டுப் போறதுமாச்சு.
வெளியில போய் எங்கே எப்படி கொட்டமடிக்கிறாங்கன்னு தெரியலை. அவன் வர்றதும் இவ அவன்கூட உட்கார்ந்து கார்ல ஏறிப் போறதையும் பார்க்கும் போது…
நாலு பேரை வைச்சி நடு வழியில மடக்கி இவுங்களை தூக்கிப் போய் எங்காவது ஒரு இடத்துல அடைச்சி, அடிச்சி உதைச்சி, சுகுமாரிக்கிட்ட வெத்துப் பேப்பர்ல கையெழுத்து வாங்கி விடலாமா குத்திக் கொலை செய்யலாமான்னுபத்திக்கிட்டு வருது.
இன்னைக்கும் அப்படிதான் சார் பாரத் பூங்காவுல நடக்கிறேன். தூரத்துல எனக்கு முதுகு காட்டி செடி மறைவு வரிசையில ஆகாஷும் சுகுமாரியும் கணவன் மனைவி போல ரொம்ப நெருக்கமா தோளோடு தோள் உரசி பக்கம் பக்கம் உட்கார்ந்து பேசிக்கிட்டிருகாங்க.
“ரைட் சார்.! அவுங்க என்ன பேசுறாங்கன்னு நான் கேட்கனும். அதுக்குத் தகுந்த மாதிரி நடவடிக்கை எடுக்கனும். என் தலைக்கு மேல கத்தி வேலை. நாம அப்புறம் பார்க்கலாம். நீங்க என் பின்னாடி வாங்க இல்லே கதைப் பின்னாடி போங்க.”
அத்தியாயம்-6
ஆனந்தன் மெல்ல நடந்து அவர்களுக்குத் தெரியாமல் செடி மறைவுக்கு இந்தப் பக்கம் உட்கார்ந்தான்.
“ஆகாஷ்! புலி பதுங்குறது பாயறதுக்காகத்தான்னு நினைக்கிறேன்!” சுகுமாரி சொன்னாள்.
“எப்படி?”- மாதிரி அவன் அவளைப் பார்த்தான்.
“ஆனந்த் இந்த அளவுக்கு விட்டுக் கொடுத்திருக்கார்ன்னா கண்டிப்பாய் இதுல ஏதோ சூட்சமமிருக்கு.”
“ஒரு சூட்சமமுமில்லே. வெளிக்கிளம்பினா ஓட்டாண்டிங்குறது உன் புருசனுக்குத் தெரிஞ்சு போச்சு. அடங்கிப் போனாத்தான் உழைச்ச காசை ஓரளவுக்காவது அனுபவிக்கலாம்ன்னு தெரிஞ்சு பணிஞ்சுட்டான்.”- என்றான்.
“இல்லே. எந்த ஆம்பளையும் அவன் கையாலாகாத கோழையா இருந்தாக்கூட தன் மனைவி இன்னொருத்தன்கூட இருக்கிறதை விரும்பமாட்டான். ஏதாவது செய்வான். அந்த வகையில ஆனந்த் அடங்கிப் போய்ட்டார்ன்னு நினைக்கிறது தப்பு. மனசுல ஏதோ சூழ்ச்சி இருக்கு. அது என்னன்னு நமக்குத் தெரியலை. கண்டு பிடிக்கனும்.”
“…..”
“அது… என்னை, உங்களைக் கொல்ல திட்டமா கூட இருக்கலாம். அதுக்கு முன்னாடி நாம அவரைக் கொன்னுடுறது நல்லது.” சுகுமாரி விடாமல் சொன்னாள்.
‘அடி பாதகத்தி! நாம ஒதுங்கிப் போனாலும் விடமாட்டாள் போலிருக்கிறதே! நம்ம மனசுல இருக்கிறதை அப்படியே சொல்றாளே!?’- ஆனந்தன் துணுக்குற்றான்.
“ஆகாஷ்! எப்படி முடிக்கலாம் ?” – தொடர்ந்தாள்
இவன் மூச்சைப் பிடித்துக் கொண்டு காதுகளை இன்னும் கூர்மையாக்கினான்.
“நீயும் நானும் மாட்டிக்காம ஏதாவது செய்யனும்….”
“எப்படி எப்படி..?”
“என் கூலிப் படையை வைச்சுதான் முடிக்கனும்.”
“செய்!”
“காசு அதிகம் செலவாகும்.”
“நாம பிரியக் கூடாது. நான் கடைசிவரை உங்க கூடவே இருக்கனும். அதுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லே. எவ்வளவு ஆகும்?”
“நாலு பேர்களை அமர்த்தனும். தலைக்கு ஒரு லட்சம். நாலு பேருக்கும் நாலு லட்சம்!”
“அவ்வளவு தொகை ஆகுமா?!”- சுகுமாரி மலைத்தாள்.
“என்ன மலைக்கிறே ?! அவனுங்க மாட்டினா கடுங்காவல் ஆயுள் தண்டனை இல்லே.. தூக்கு.! வாழ்க்கையே பாழ். நாம எப்படி போனாலும் பரவாயில்லே. குடும்பம் பொழைக்கட்டும்ன்னுதான் துணிஞ்சு இறங்குறாங்க. யோசிச்சுப் பார்த்தா தொகை குறைவு.” – ஆகாஷ் சொன்னான்.
யோசித்துப் பார்க்கையில் சுகுமாரிக்கும் அது சரியாகத்தான் பட்டது. இவ்வளவு செலவு செய்ய வேண்டாம்! என்று நினைத்தாள்.
“கை காலை எடுக்க எவ்வளவு?”- கேட்டாள்.
“ஆளுக்குப் பத்தாயிரம்.!”
அவளுக்கு ஓரளவிற்குத் திருப்தியாய் இருந்தது.
“ஆனா இதுல பெரிய கஷ்டம் ஆள் அங்கே இங்கே நகராம கிடப்பான். அவன் கஷ்டம் நம்மை உறுத்தும். ஒரேயடியா தீர்க்கிறதுதான் நல்லது.” – ஆகாஷ் நிலைமையைச் சொன்னான்.
“அதுவும் சரிதான்!” என்று தலையாட்டி ஆமோதித்த சுகுமாரி, “எப்போ முடிக்கலாம்?” – கேட்டாள்.
“கூலிகளைக் கேட்டுச் சொல்றேன்.” – ஆகாஷ் சொன்னான்.
“சீக்கிரம் முடிக்கனும். இல்லேன்னா அவர் முந்திப்பார்!”
“விரைவில் நல்ல சேதி சொல்றேன்!” – எழுந்தான்.
இவளும் எழுந்தாள். அவன் தோளைத் தொங்கிக் கொண்டு நடந்தாள்.
‘தலைக்கு மேல் கத்தி!’ – ஆனந்தனுக்குச் சொரக்கென்றது.
‘அவர்களுக்கு முன் நாம் முந்திக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் நம் உயிர் நம்மிடம் இல்லை.!’ – தெளிவாகத் தெரிந்தது. அமர்ந்த இடத்தை விட்டு எழாமல் யோசித்தான்.
ஆகாஷ் போல கையாட்கள் நம்மிடம் இல்லை. தேடிப் போய் பிடித்தாலும் முகம் தெரியாத ஆள் இவன்… ஏதாவது வில்லங்கத்தில் மாட்டிவிடுவான் ! என்று யோசிப்பார்கள், மறுப்பார்கள். இல்லை… மலைக்கும் அளவிற்குக் கூலி கேட்பார்கள். மாட்டிவிடுவேன் ! மிரட்டுவார்கள்.
இவர்களையெல்லாம் அவர்களுக்குத் தொடர்பான, நம்பிக்கையான ஆட்களை வைத்துதான் முடிக்க வேண்டும். அதிலும் சங்கடம். மொட்டையாக இவர்களை அப்படி பேசி விடு என்று சொல்ல முடியாது. முன் விரோதம் அது இதுவென்று காரணம் சொல்ல வேண்டும். அப்போதுதான் இவர்கள் அவர்களிடம் பேசுவார்கள்.
கூலிப்படைக்குக் காரணமேத் தேவை இல்லை. பணத்தைக் கொடுத்து ஆளை காட்டி விட்டால் போதும். சொன்னதைச் செய்து வருவார்கள். இதில் சுகுமாரியும் சேர்வதால் சோடை காரணத்தைச் சொல்லிதான் ஆகவேண்டும். மூன்றாவது ஆளுக்குத் தெரிவது அவமானம். ஆனாலும் வழி இல்லை. அவமானம் பார்த்தால் ஆபத்து.! – யாரைப் பிடிக்க…?-
மனசுக்குள் தெரிந்த ஆட்களைப் புரட்டினான்.
“ஆனந்த் !” – யாரோ குரல் கொடுத்து கலைத்தார்கள்.
திடுக்கிட்டுப் பார்த்தான்.
எதிரில் ஆத்மார்த்த நண்பன் அழகுசுந்தரம். சிறுவயதில் கிராம பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து இவனோடு படித்தவன். தற்போது வெள்ளையும் சள்ளையுமாய்க் கரை வேட்டியில் புதுப் பொலிவில் நின்றான்.
இவனுக்கும் நண்பனைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
“சுந்தரம்! என்னடா கோலம்?” – எழுந்தான்.
“நான் ஆளும் கட்சியில இந்த மாவட்ட தலைவர். நீ இங்கேயா இருக்கே ?”
“ஆமாம். நீ ?’”
“இங்கேதான்!. நாம ரெண்டு பேரும் மறுபடியும் உள்ளூர்வாசியாகிட்டோம். ஏதாவது உதவித் தேவைப் பட்டா சொல்லு.” – தன் அதிகாரத்தைக் காட்ட சொன்னான்.
அரசியல்வாதிகளென்றாலே கையில் ஆட்களிருப்பார்கள். இவன்தான் நமக்கு சரியான ஆள்! – ஆனந்தனுக்குள் பட்டது.
“ஒரு சின்ன விசயம்!”- என்று மெல்ல சொல்லி அவன் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு தனியே தள்ளி வந்தான்.
அக்கம் பக்கம் பார்த்து, “ஒ…ஒரு சின்ன உதவி……” – இழுத்தான்.
“சொல்லு?”- அவன் கவனமாக கேட்பவன் போல் குனிந்து ஆனந்தன் காதோரம் காதைக் காட்டினான்.
“ரெண்டு உசுரை எடுக்கனும்!”
அழகு சுந்தரம் துணுக்குற்று பார்த்தான்.
“யார்?” கேட்டான்.
“ஒரு ஆண், ஒரு பெண்.”
“கள்ளக் காதலா?”
‘எப்படி கண்டு பிடித்தான் ?’ – ஆனந்தன் அவனை அதிர்ச்சியாகப் பார்த்தான்.
“என்ன பார்க்கிறே ? ஆண் பெண் உசுரை எடுக்கனும்ன்னா இதை விட்டா வேற சரியான காரணம் இல்லே! ஆள் யார்?”
ஆனந்த் மௌனமாக இருந்தான். கட்டுக்கதை கட்ட முடியாது.
கட்டினாலும் சரியாக இருக்காது. அதே சமயம் முழுதும் உடைக்கவும் மனமில்லை.
“எ…ன் மனைவி இன்னொருத்தன் பேச்சைக் கேட்டுக்கிட்டு ஆடறாள்..” என்றான்.
“அவன் உனக்கு மாமனா மச்சானா?”
“பொறத்தி.!”
“தொடர்பு இருக்கா?”
“ம்ம்….” – இதற்கே சங்கடமாக இருந்தது.
“அப்போ எடுத்துட வேண்டியதுதான்! இதுக்குக் காரணம்..?”-
ஆனந்தன் தான் குவைத் போய் திரும்பிய மொத்த கதையையும் அவனிடம் சொன்னான்.
அழகுசுந்தரம் எப்படி செய்யலாம் என்று யோசித்தான்.
“அழகு! உசுரை எடுக்கிற சமாச்சாரம் நம்ப மேல பழி வரக்கூடாது.”- ஆனந்த் எச்சரித்தான்.
“சரி….” – தலையாட்டிய அழகுசுந்தரம் மீண்டும் சிந்தனையிலிறங்கினான். சிறிது நேரம் கழித்து, “இதை இப்புடியும் தீர்க்கலாம்.!”- முணுமுணுத்தான்.
“எப்படி?””
“அவன் பொண்டாட்டி ஊர்ல இல்லேன்னு சொல்றே. கோவிச்சிக்கிட்டு அவ எந்தூர்ல அம்மா வீட்டுல இருக்கிறாள்ன்னு தெரியுமா ?”
“தெரியும். ஏன்?”
“விலாசம் சொல்லு?”
“கடிதம் எழுதப் போறீயா ?”
“நேரடியா அவள் அப்பா அம்மா, பொண்டாட்டிகிட்ட போய் ஆகாஷ் செய்யுறது நியாயமா. நீங்க கண்டிக்கிறது இல்லியா. வாழ வைக்க விருப்பமா விருப்பமில்லயான்னு உசுப்பி விட்டால் ஏதாவது நடக்கும். அண்ணன் தம்பி எவன் இருந்தாலும் சேர்ந்து வந்து கலாட்டா பண்ணச் சொல்லலாம். ”
“பண்ணினா?!…””
“பொண்ணுக்கு உதவி யாரும் இல்லேன்னா புருசனுக்கு இளக்காரம்தான் வரும். அடிப்பான், உதைப்பான், மிதிப்பான். பொறந்த வீட்டிலேர்ந்து நாலு பேரு தட்டிக் கேட்டா.. பயந்து அடங்குவான்.”
“அடங்கலைன்னா ?…”
“அவுங்களையே போலீஸ்ல புகார் குடுக்கச் செய்யலாம். சட்டப்படி வழக்கு, விவாகரத்துன்னு இறங்கலாம். இல்லே, அவளை உன் வீட்டுக்கு அனுப்பு. ஏன்டி இப்புடின்னு உன் பொண்டாட்டி தலை மயிரைப் புடிச்சி அடிக்கச் சொல்லு. வேப்பிலை அடிச்சா எந்த பேயும் ஓடும்.”
“இதனால் அவளுக்கு ஆபத்து ?”
“பாய்வாள், பாய்வான். போலீசுக்குப் போவேன்னு மிரட்டனும்.”
“போலீஸ்வரை போய் அசிங்கப்படனுமா?!.’’ ஆனந்தன் பரிதாபமாகக் கேட்டான்.
“வேற வழி இல்லே. இல்லேன்னா நீ சொல்ற வழியில சம்பந்தப்பட்டா… நாம கம்பி எண்ணனும்.”
“நாம காலம் தாழ்த்த தாழ்த்த என் உசுருக்கு ஆபத்து அழகுசுந்தரம்!” — ஆனந்தனுக்குச் சொல்லும்போதே குரல் அடைத்தது.
“அப்போ சீக்கிரம் போய் அவளைப் பார்த்து சேதி சொல்லு.”
ஆனந்தன் பேசாமல் நின்றான்.
“இதுல இன்னொரு சிக்கல்! ” – அழகுசுந்தரம்.
“என்ன?”- இவன் அவனை மிரட்சியாகப் பார்த்தான்.
“அவ புருசனோட வாழ விரும்பனும். திருத்த சம்மதிக்கனும். வம்பு வேணாம். எனக்கும் அவருக்கும் விவாகரத்து நோட்டீஸ் விட்டுட்டேன்னா நாம தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு வரனும். ஆகாஷே என் மனைவி என்னோட வாழலை. எனக்கு விவாகரத்து வேணும்ன்னு வழக்கு விட்டிந்தாலும் இந்த முயற்சி வீண்.”
ஆனந்தன் என்ன செய்வதென்று அறியாமல் குழம்பிப் போய் நின்றான்.
– தொடரும்…
– ஏப்ரல் 2003ல் Top-1 பாக்யா மாத இதழில் பிரசுரமான குறுநாவல்.
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |