வண்டவாளம்….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 5,116 
 
 

ரோட்டோர குழாயில் தண்ணீர் பிடித்து இடுப்பில் குடத்துடன் சென்ற வள்ளிக்குத் தன்னைத் தாண்டி சாலையோரம் மெல்ல நடந்து செல்லும் தம்பதிகளைப் பார்த்ததும் மனசுக்குள் குப்பென்று ஆத்திரம் அவமானம். சுள்ளென்று கோபம்.

வீட்டிற்குள் நுழைந்த அடுத்த விநாடி, ”என்னதான் காசு பணம் இருந்தாலும் மனுசாளுக்கு அடக்க ஒடுக்கம், மனசு கட்டுப்பாடு வேணும்….! ” சத்தமாக முணுமுணுத்துச் சென்றாள்.

நாற்காலியில் அமர்ந்து தினசரி படித்துக்கொண்டிருந்த கங்கதாரன் மனைவி குரல்; காதில் விழ… ”என்னடி ? ” கேட்டான்.

”ம்ம்… என் வயித்தெரிச்சலைக் கொட்றேன்.!” தன் சூடு மாறாமல் படக்கென்று சொல்லி டக்கென்று குடத்தை அடுப்படியில் வைத்தாள்.

”காலையில தண்ணீர் பிடிக்கப் போனவளுக்கு அப்படி என்ன திடீர் வயித்தெரிச்சல், வம்பு ? ”

”ம்ம்…. இந்தத் தெரு கடைசி வீட்டு வண்டவாளம்…கசுமாளம் !” வந்தாள்.

”விபரம் சொல்லு ? ”

”ம்ம்… பெத்துக்க வேண்டிய புள்ளைங்க ரெண்டும் சோடிப் போட்டுக்கிட்டு வண்டியில வேலைக்குப் போகுது. வயசான காலத்துல வீட்டுல சும்மா இருக்க வேண்டிய பெருசுங்க ரெண்டும் தனிமைக் கெடைக்கிற கும்மாளம்… வயித்துல புள்ள. இந்த அசிங்கம் புரியாம.. அக்கம் பக்கம் என்ன சொல்லுமோ என்கிற அறிவு..வெட்கம், மானம், ரோசம் இல்லாம புள்ள நல்லா பொறக்கனும்ன்னு நடைபயிற்சி வேற….” நீட்டி முழக்கி நிறுத்தினாள்.

”விபரம் புரியாம அறிவு கெட்டத்தனமா உளறாதே!” கங்காதரன் அதட்டினான்.

”உனக்கு ஏன்ய்யா சட்டுன்னு இந்த கோபம் ? ” கேட்டு அவள் திகைத்துப் பார்க்க….

”அந்தம்மா பாக்கியம் வேற யாருக்கும் கெடைக்காத தெரிஞ்சுக்கோ !”

”அப்படி என்ன பாக்கியம் ? ”

”காதல் கலியாணம் முடிச்சு வேலைக்குப் போகும் மகன் மருமகள் ஒரு குறை இல்லாம நல்லா இருந்தாலும் என்ன காரணமோ அஞ்சு வருசமா புள்ளே இல்லே. இந்தம்மா…வாடகைத்தாயாய் அவுங்க கருவைத் தாங்கி பேரனைச் சுமக்குறாங்க. அது நல்லா பொறக்கனம்ன்னுதான் புருசனோட நடைபயிற்சி. வாடகைத் தாய்க்கு கொடுக்க வேண்டிய லட்சக்கணக்கான பணம் மிச்சம். குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்கும். பந்த பாசம் அந்நியோன்யம்ன்னு…அந்த குடும்பத்துக்கு ஏகப்பட்ட பலாபலன் !” முடித்தான்.

தலை கிர்ரடிக்க……வள்ளி திறந்த வாய் மூடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *