வசுந்தரா!




அது ஒரு மாலை வேளை, அவசர அவசரமாக பணியிலிருந்து வந்த வசுந்தரா விறு விறுவென்று சமைக்கத் தொடங்கினாள். இரவு உணவைப் பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டு அவர்களை நேரத்தோடு படுக்க வைத்தாள். தானும் கணவரோடமர்ந்து உரையாடிக்கொண்டே உணவை மென்று சுவைத்தாள். ஆனாலும் உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. எப்படி எங்கே தொடங்குவது என்ற கேள்விதான் அவளுக்குள் எழுந்துகொண்டே இருந்தது. எப்படியாவது கேட்டுவிட வேண்டும்.
“என் நண்பி சுபாவைத் தெரியும்தானே உங்களுக்கு, அவளும் நானும் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுவருவதாக முடிவு செய்திருக்கிறோம். அவள் ஏற்கனவே இருவருக்கும் சேர்த்து பதிவு செய்துவிட்டாள். நான் பொய் வரலாம் என்றிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்”. அவள் சொல்லி முடித்த போது அவனால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை.
ஒருவாறு கணவனின் சம்மதத்தைப் பெற்று புறப்பட ஆயத்தமானாள். இலேசான தங்க நிறம் கலந்த கைப்பெட்டி ஒன்று அத்தோடு ஒரு தோள்ப் பை. இவைதான் அவள் பயணத்திற்காக எடுத்துச் செல்பவை. முதலில் அதிவேக தொடருந்தில் செல்லவேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவு தூரம் சென்ற பின்பு தொடருந்து நிலையத்திலிருந்தே விண்வெளிப் கப்பல் புறப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.
தொடருந்து புறப்பட்டபோது அவளுடைய மகன் சாளரத்தினூடே அம்மா என்று கையசைப்பதைப் பார்த்தாள். நெஞ்சு படபடத்தது. மகன் பத்திரமாக இருக்கின்றானா, தொடருந்திற்கு அருகில் வந்தானா? என்று பல யோசனை அவளுக்குள் எழுந்தது. தொடருந்துச்சீட்டும் இன்னும் வாங்கவில்லை. அடுத்த தரிப்பிடத்தில் இறங்கிக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்வதற்குள் தொடருந்து பல மயில்கள் தூரத்தைக் கடந்துவிட்டது.
திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்கிறது. சாளரத்தினூடே வெளியில் பார்க்கிறாள். விண்ணை நோக்கி ஓர் ஏவுகணை வீசப்படுகிறது. வானை நோக்கிப் பறந்த ஏவுகணையின் பிற்பகுதியிலிருந்து நெருப்புக் கக்கிக்கொண்டு பொறியாகத் தெறிக்கிறது. அப்போது ஏவுகணை இரண்டாகப் பிரிந்து ஒரு குழல் போன்ற வடிவம் வெளிவருகின்றது. அதிலிருந்து ஒரு மனிதர் விண்ணில் பறக்கின்றார். அந்தக் கணத்தில் தொடருந்திலிருந்த வசுந்தரா அந்த மனிதரைப் பார்க்கிறாள். அந்த மனிதர் வசுந்தராவைப் பார்த்ததை வசுந்தரா அவதானிக்கவில்லை.
சில மணித்துளிகள் கடந்த பின் தொடருந்தைச் சுற்றி பலமுறை பறந்து கொண்டே வலம் வந்துவிடுகிறார் அந்த மனிதர். எதிர்பாராத விதமாக ஒலிபெருக்கியில் யாரோ பேசத் தொடங்குகிறார். இந்தத் தொடருந்தில் ஓர் இந்திய சாயலுடைய பெண் இருப்பதாகவும் அந்தப் பெண்ணைத் தான் திருமணம் செய்ய விரும்பியவதாகவும். அந்தப் பெண் இதை கேட்டுக் கொண்டிருந்தால் தானாகவே முன்வரலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
வசுந்த்ராவிற்கு என்ன நடக்கின்றதென்றே தெரியவில்லை. ஓர் தரிப்பிடத்தில் தொடருந்து நின்றபோது, வசுந்தரா தன் விண்வெளிப்பயணச் சுற்றுலாக் கனவை தூக்கியெறிந்துவிட்டு திரும்ப வீடு நோக்கிப் புறப்படத் தயாரானாள். வீட்டிற்கு வந்த வசுந்தரா தன் கணவர் குழந்தைகளைக் கட்டியணைத்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினாள்.