கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2024
பார்வையிட்டோர்: 3,471 
 
 

(2002ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

அது ஞாயிறுக் கிழமை. அலுவலக விடுப்பு நாள்.

‘இந்த ராமுவை என்ன செய்தால் விழுவான்..?!’ வசந்த் படித்துறையில் அமர்ந்து தீவிர சிந்தனையிலிருந்தான்.

இவனுக்குப் பின்னால் படித்துறை மூலையில் சின்ன மண்டபத்தில் பிள்ளையார் இருந்தார். அவருக்குப் பின் நிழலாய் பிரமாண்டமான அரசமரம்.

குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடின. தவளைகள் நான்கு கால்களையும் பரப்பிக்கொண்டு மிதந்தன. தொலைவில் அல்லிகள் இருந்தன. அவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பூக்கள் பூத்திருந்தது.

ஒரு முடிவிற்கு வரமுடியாத வசந்த்…

“பிள்ளையாரப்பா..! என்ன செய்யலாம்..?” அவரைப் பார்த்து மானசீகமாக கேட்டான்.

அவரும் சடனாக இவன் மனசுக்குள் வந்தார்.

“எவனைப் பத்தி எனக்கென்னப்பாத் தெரியும்..?” கேட்டார்.

“அட..! உன்கிட்ட அவனைப் பத்தி நான் சொல்லவே இல்லையா..?”

“இல்லே..!”- கையை விரித்தார்.

“சொல்றேன் கேள். ராமு என் பால்ய சிநேகிதன். என்னோட உயிர் நண்பன். நானும் அவனும் ஒரே ஊர். ஒரே இடத்துல வேலை. எனக்குத் திருமணம் ஆச்சு. அவனுக்கு ஆகல. 35 வயசு. பயல் வேண்டாம்ன்னு ஒரே முரடாய் நிக்கிறான். ஆள் இதுவரைக்கும் ஒருத்தியைக் கூட திரும்பி பார்க்காம திருமண ஆசையே விட்டுப் போய் இருக்கான்.!” நிறுத்தினான்.

பிள்ளையார் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம். முடியாமல்….

“விடு. யோக்கியமான பிள்ளை. என்னைப் போல” என்றார்.

இதைக் கேட்ட வசந்திற்கு உண்மையிலேயே சட்டென்று கோபம் வந்தது.

“நீ நல்ல பிள்ளையா..?!” முறைத்தான்.

“ஏன் அதிலென்ன சந்தேகம்..?” பிள்ளையார் அவனைத் திருப்பிக் கேட்டார்.

“நீ எதுக்கு குளத்தங்கரை அரச மரத்தடியில் உட்கார்ந்திருக்கே…?”

“குளிச்சு சுத்த பத்தமா என்னை வணங்கும் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்து அருள் கொடுக்க…” சொன்னார்.

“மொகரை..! குளிக்கிற பொண்ணு, பொம்பளைங்களைப் பார்க்க…”

பிள்ளையாருக்கு தன் வண்டவாளம் தண்டவாளம் ஏறியதில் திகைப்பு.

“சரி. அதை விடு. விசயத்துக்கு வா.” தாவினார்.

“அப்படி வா வழிக்கு!” என்று உறுமிய வசந்த்…

“ராமு! பொண்ணு, பொம்பளைங்களைப் பார்க்கலைன்னாலும் பரவாயில்லே பிள்ளையாரப்பா..” தொடங்கினான்.

“ஒரு நிமிசம்!” இடை மறித்த பிள்ளையார், “பொண்ணு, பொம்பளைங்க புரியலை.?!” என்றார்.

“உனக்குப் புரியலையா..?! ஏ..தொந்தி கணபதி..! யார்கிட்ட டபாய்க்கிற..? புரியாமலா வந்து குளத்தங்கரையில் உட்கார்ந்திருக்கே. சரி. சொல்றேன். பொண்ணுங்கன்னா. வயசுக்கு வந்து திருமணமாகாத குமரிங்க. பொம்பளைங்கன்னா திருமணம் முடிச்ச ஆண்டிகள்.”

“ஆண்டிகள் அழகுதானே. புரியுது. மேலே சொல்.”

“செக்ஸ் பேச்சு பேசினால் அசிங்கம்ன்னு முகம் சுளிக்கிறான் பிள்ளையாரப்பா. கல்யாணப் பேச்செடுத்தால் காத தூரம் ஓடுறான். எந்த உணர்ச்சியும் இல்லாத ஜடமாய் இருக்கான்.!”

“ஒரு வேலை எவளையாவது பார்த்து பயந்திருப்பானோ..?!”

“ஏ…! தொந்தி.! நீதான் குளத்தங்கரையில் குந்தி குளிக்கிற பொண்ணு பொம்பளைங்களைப் பார்க்கிறீயே. எதையாவது பார்த்து பயந்திருக்கிறீயா..?” வசந்த் கேட்டான்..

“ம்ம்….”பிள்ளையார் சங்கடமாய் முறைத்தார்.

“சரி விடு. விசயத்துக்கு வர்றேன். அப்படி இருக்க வாய்ப்பே இல்லே. எவளையும் திரும்பி பார்க்காதவன் எப்படி பார்த்திருக்க முடியும்..?”

“உ..உனக்குத் தெரியாம..” பிள்ளையார் இழுத்தார்.

“எனக்குத் தெரியாம அவன் ஒண்ணுக்குக் கூட போனதில்லே. சுத்தத் தங்கம்.!”

“சுத்தத்தங்கம் வேலைக்காகாது அப்பனே..!”

“அதேதான் பிள்ளையாரே!” என்று அடித்துச் சொன்ன வசந்த்…

“ராமுக்கு எப்படியாவது பெண்ணாசையை உண்டு பண்ணி திருமணத்தை முடிக்கனும் பிள்ளையாரப்பா..!” விசயத்திற்கு வந்தான்.

“உனக்கென்னப்பா…ராமு மேல அவ்வளவு அக்கறை. அவன் திருமணம் முடிக்கிறதுல ஆசை..?”

“இருக்கு பிள்ளையாரப்பா..! அலுவலகத்துல உள்ள எல்லோரும் திருமணம் முடிச்சு பிள்ளை குட்டியோட சந்தோசமா இருக்கோம். இவன் மட்டும் ஒண்டி ஓரியாய் நிக்கிறான். அதுமட்டுமில்லே… ராமு வீட்டு பக்கம் என்னால் தலை வச்சு படுக்க முடியல. என் தலையைக் கண்டால் போதும் பெத்தவங்க…’என் புள்ள மனசை மாத்தி எப்படியாவது திருமணத்தை முடிப்பா. நாங்க சாகிறதுக்குள்ள பேரன் பேத்திகளைப் பார்க்கனும்’ன்னு கண்ணீர் விட்டு கதர்றாங்க. அவுங்க ஆசை நியாயம்தானே! இதுக்காகவாவது ராமுவுக்குத் திருமணத்தை முடித்தே ஆகணும்”. சொல்லி மூச்சு விட்டான்.

“நல்லது கெட்டது சொல்லிப் பார்க்கிறதுதானே..?”

“எல்லா புத்திமதியும் சொல்லி பார்த்தாச்சு. ஆள் அசைஞ்சி கொடுக்க மாட்டேங்கிறான்.”

“விவரம்..? “

“அவனைக் கிட்ட வச்சுக்கிட்டே..பொண்ணுங்க அழகு, அவயங்களை வர்ணிச்சுப் பார்த்தாச்சு. உணர்ச்சிகளை கிளர்க்கிறாப் போல பலான சமாச்சாரமும் பேசி, கண்ணுக்குப் படுறாப் போல கெட்ட போட்டோக்களை யெல்லாம் வச்சு பார்த்து காட்டியாச்சு. கண்ணு காதுகளை மூடிக்கிறான் பிள்ளையாரப்பா. சரியான ஜடம்! மரக்கட்டை!” வசந்த் வெறுப்பாய் முகம் சுளித்தான்.

“திருமணம் வேணாம்ன்னு மறுக்க அவன் காரணம் ஏதாவது சொன்னானா..?” என்று பிள்ளையார் கேட்கவும்..

அவருக்குப் பின்னால் கரையில் பெண்கள் கலகல சிரிப்பொலி கேட்கவும் சரியாக இருந்தது.

வசந்த் காதில் பட்டு ஒலி வந்த திக்கை எக்கிப் பார்த்தான்.

தோளில் மாற்று துணி வகையறாக்கள், இடுப்பில் குடம், கையில் சோப்பு பெட்டி, ஐந்தாறு தாவணிப் பெண்கள் சிரிப்பும் கும்மாளமுமாய்க் குளியலாட வந்தார்கள்.

‘நான் இருந்தாதான் சங்கடம். ஆம்பளை இருக்கான் நினைப்பில் எவளும் அவிழ்க்க மாட்டாள், குளிக்க மாட்டாள். முறைப்பாளுங்க. நீ அனுபவி பிள்ளையாரப்பா!’ வசந்த் மனசுக்குள் பெருமூச்சு விட்டு எழுந்தான்.

பிள்ளையாருக்கு நிம்மதி மூச்சு, நமட்டுச் சிரிப்பு.

இவன் கரையேறி…வந்த பெண்களைத் தாண்டினான். மீண்டும் ராமு நினைவுகளில் மூழ்கி நடந்தான்.

அத்தியாயம்-2

ராமு. ஒரு தாய்க்கு ஒரே பிள்ளை இல்லை. ஒரு அக்காள். அடுத்து இவன். இவனுக்கு அடுத்து இரண்டு தங்கைகள். மொத்தம் ஐந்து உருப்படிகள்.

குடும்பமும் அதிக வசதி கிடையாது. ஏழ்மை. அப்பா, அம்மா விவசாய கூலிகள். குந்தி இருக்க ஒரு குடிசை. அடிமனை அரசாங்க இலவச மனைப்பட்டா. அம்மா, அப்பா உழைத்து வந்தால்தான் சோறு என்கிற நிலையில் அவனைக் கஷ்ட்டப்பட்டு படிக்க வைத்தார்கள். இவனை மட்டுமல்லாமல் இவன் கூடப்பிறந்த பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்தார்கள். ஆனால் பெண்கள் இவன் அளவிற்குப் படிக்கவில்லை. வயசுக்கு வந்ததும் நிறுத்தி விட்டார்கள்.

ஏழ்மை, அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற காரணமில்லை.?! எட்டு கிலோ மேட்டர் தொலைவு சென்று படிக்க அவர்களுக்கேற்ற பெண் பிள்ளைகள் ஊரில் துணைக்கில்லை. அந்த ஈச்சம்பட்டு கிராமத்தில் எல்லா பெண்களுமே இப்படி நிறுத்தப்பட்டதால் ஊரோடு ஒத்துப்போக வேண்டுமென்பதற்காக இவர்களும் அதையே கடைப்பிடித்து விட்டார்கள்.

ராமு ஆண் பிள்ளையென்பதால் அங்கேயே படிப்பை முடித்துவிட்டு அதையும் தண்டி ஐந்து கிலோமீட்டர் சென்று பட்டப் படிப்பபையும் முடித்தான். எடப்பாடி என்ற இடத்திலுள்ள சர்க்கரை ஆலையில் வெளிக்குச் சேர்ந்தான்.

இவனைவிட வசந்த் கொஞ்சம் வசதி. அவன்தான் தன் படிப்பை முடித்ததும் சிபாரிசு பிடித்து முதலில் அந்த கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். அடுத்து நண்பனை இழுத்துக்கொண்டான். வெளியாட்கள் தொந்தரவு இல்லாத நிர்வாகப் பிரிவு.

ராமுவும் வசந்தம் ஒரே ஊர். அத்தடுத்த தெரு. சிறு வயதிலிருந்தே இணை பிரியாத தோழர்கள். உயிர் நண்பர்கள். வேலையிலும் அவர்கள் ஒன்றாக ஆகிவிட்டது அதிர்ஷ்டம்.

வசந்த் பள்ளிக்கூடம் புறப்படுவது போல புறப்பட்டு சரியாக 8.30 மணிக்கெல்லாம் ராமு வீட்டு வாசலில் நிற்பான். ராமுவும் இவனை எதிர்பார்த்து நிற்பான். இருவரும் ஆளுக்கொரு சைக்கிளில் அலுவலகம் புறப்பட்டுச் செல்வார்கள். ஐந்தரை, ஆறு மணிக்கு திரும்புவார்கள். பிரிய மாட்டார்கள். இது இவர்கள் தினப்படி வழக்கம்.

ராமு தலையெடுத்தப்பிறகுதான் குடிசை வீடு சிறு ஒட்டு வீடானது. அக்கா, தங்கைகள் ஒவ்வொருவராக கரை ஏறினார்கள். இவன் வீட்டுக்கு ஒரு பிள்ளை சம்பாதிப்பவன் என்பதால் சகோதரிகள் திருமணம் நல்லது கெட்டது மொத்த குடும்ப சுமைகளையும் இவனே தாங்க வேண்டிய கடமை. இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு பெண்களின் தலைப்பிரசவத்திற்கும் வார்டில் தாய் மகள்களுக்குத் துணை இருக்க, ராமு மருத்துவமனை வாசலில் படுக்கைப் போட்டான்.

வேலைக்குச் சேர்ந்ததுமே ராமுவைக் கொத்திக்கொண்டு போக பெண்களைப் பெற்றவர்கள் வட்டமிட்டார்கள். அப்பா தணிகாசலமும் அம்மா செண்பகமும் பெரிய இடங்களைப் பார்த்து மயங்கினர்.

“திருமணம் முடிச்சுக்கோப்பா..!” சொன்னார்கள்.

“அக்கா, தங்கைகளுக்கெல்லாம் முடித்த பிறகுதான் அடுத்து எனக்கு” ஒரேயடியாக அடித்தான்.

”உன் கல்யாணத்துக்கு அவுங்க என்ன தடங்கல்..?” அவர்கள் கேட்க…

“வர்றவள் எப்படியோ. நல்லவளா இருந்தாலும் கெட்டவளா இருந்தாலும் கையைச் சுருக்குவாள். தனிக்குடித்தனத்திற்கு கூட்டிப் போகப் பார்ப்பாள். அப்புறம்… அக்கா தங்கச்சிகளைக் கரையேத்துறது கஷ்டம். ஒரு வம்பும் வேணாம். எனக்கு கடைசியில முடிச்சுக்கலாம்”. சொன்னான். அதே பிடிவாதத்தில் நின்றான்

‘நியாயம்! எதிர்த்து என்ன பேச முடியும்.?’ பெற்றவர்கள் மௌனமானார்கள்.

பெண்களுக்கெல்லாம் முடித்து அவர்களுக்காக வாங்கிய கடனையெல்லாம் முடித்து நிமிரும்போது ராமுவிற்கு வயது 35தைத் தாண்டியது.

“என்னப்பா! முடிச்சுக்கலாமா..?” என்று தணிகாசலம் கேட்டபோதுதான் சிக்கல்.

“வேணாம்ப்பா..!” பதில்.

“ஏன்ப்பா..?”

“பொண்ணுங்களைக் கரையேத்தி அவுங்களுக்கு நல்லது கெட்டது செய்தலிலேயே… நான் பெரிய வாழ்க்கை வாழ்ந்த திருப்தி ஏற்பட்டு போச்சு. கலியாணம் வேண்டாம். அவுங்களுக்கும் உங்களுக்கும் கடைசி வரைக்கும் நல்லது கெட்டது செய்யறவனாவே இருந்துடுறேன்”. தன் முடிவைச் சொன்னான்.

“இது சரியாப்பா..?” அப்பா தழுதழுத்தார்.

“மத்தவங்களுக்குச் சரியோ தப்போ. என் மனசுல படுற சரி இதுதான்.” முடித்தான்.

தணிகாசலமும் செண்பகமும் லேசுப்பட்டவர்களில்லை. பிள்ளை மனதை புரிந்தார்கள்.

“உனக்குத் திருமணமானால் வர்றவள் அக்கா, தங்கச்சிங்களை அண்ட விடமாட்டாள், நல்லது செய்ய விடமாட்டாள், எங்களைக் கஷ்டப் படுத்துவாள்ன்னு நெனைச்சி திருமணமே வேண்டாம்ன்னு ஒதுக்குறது தப்பு. வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். சமாளிச்சுப் போறதுதான் வாழ்க்கை. ஒதுக்குறது கோழைத்தனம்.” சொன்னார்கள். ராமு கேட்கவில்லை.

“தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீங்க. அப்படி வற்புறுத்தினாலும் நான் எடுத்த முடிவுல இருந்து மாற மாட்டேன். இதையும் மீறி எனக்குத் தொல்லை கொடுத்தால் உங்களுக்கு சுமையா இல்லாமல் எங்காவது போறேன்!” சொன்னான்.

அப்பாவிற்கும் அம்மாவிற்கும் வாயைத் திறக்க முடியாத அளவிற்கு அதிர்ச்சி.

ஆனாலும் அவர்கள் விடவில்லை. பெற்ற மகள்களிடம் சொல்லி மகன் மனதை கலைக்க முயற்சி செய்தார்கள்.

பெற்றவர்களையே சமாளித்த ராமுவிற்கு சகோதரிகள் எவ்வளவு தூரம்.?! வந்தவர்கள் வாயை அடக்கி தோற்றோடச் செய்து விட்டான்.

முயற்சி தோல்வி.! அடுத்துதான் பெற்றவர்கள் வசந்தைப் பிடித்தார்கள்.

“உன்னாலதான் முடியும். நீதான் ராமு மனசை மாத்தி திருமணத்தை முடிச்சு வைக்கனும்.” சொன்னார்கள்.

“ராமு ! மனைவி என்கிறவள் வாழ்க்கைத் துணை. அம்மா, அப்பாவிற்குப் பிறகு நாம் அனாதையாகாமல் இருக்க அவள்தான் துணை. பலான விசயம் பயமில்லே. பயப்படாதே. வாரிசு நமக்கு வேணும். எல்லா பெண்களும் கெட்டவர்களில்லே. வீட்டுக்கு வருகிறவள் உன் அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சிகளையெல்லாம் அன்பாய் அரவணைப்பாள்.”

வசந்த் போகிற வருகிற போதெல்லாம் துண்டு துண்டாக நிறைய புத்திமதிகள் சொன்னான்.

அதோடு மட்டுமில்லாமல்…

“நீ யாரையாவது காதலிச்சு இருந்தாலும் சொல்லு. அம்மா, அப்பாகிட்ட சம்மதம் வாங்கி நான் முடிக்கிறேன்.” என்றும் சொன்னான்.

ராமு பிடி தளரவே இல்லை.

இதோடு இல்லாமல் விசயம் இவர்கள் வேலை பார்க்கும் இடத்திற்கும் சென்றது.

சக ஊழியர்களான பாலு, கணேஷ், சேகர், வெங்கடேஷ் கொம்பர்கள்.

“நீ விலகு. நாங்க ராமுவை வழிக்கு கொண்டு வர்றோம்!” என்று வசனத்தை விட்டு வரிந்து கட்டி களத்தில் இறங்கினார்கள்.

முதல் கட்டமாய்…

“என்னப்பா..! சாமியாராகவாப் போறே..?” வெறியேற்றினார்கள்.

“உண்மையான சாமியாரா..? பிரேமானந்தா சாமியா..?” கேட்டு கலாய்த்தார்கள்.

ராமு இவர்களை ஒதுங்க ஆரம்பித்தான். பின் விலக ஆரம்பித்தான்.

இளைத்தவன், ஏமாந்தவன் கிடைத்தால் எதிரிக்கு ரொம்ப இளப்பம், கொண்டாட்டம். எப்படி சும்மா விடுவார்கள்..?

“மச்சி ! நீ ஆம்பளையா பார்க்கனும். லெட்ரீனுக்கு வா. வேணாம். நாங்களே வர்றோம்.” பின்னாலே சென்று அவனை ‘ஒன்னுக்கு’ போக விடாமல் ஓடச் செய்தார்கள்.

தோள்மீது கைபோட்டு..

“ராமு ! உடல் உறுப்புகள் ஒவ்வொன்னுக்கும் ஒரே வேலை கிடையாது. பல வேலைகள். மனுசனுக்கு ‘அதை’ மூத்திரம் விட மட்டும் ஆண்டவன் படைக்கல. வாரிசு வார்க்கிற வேலையும் அதுக்கு வச்சிருக்கான்.!” சொன்னார்கள்.

ராமு அவர்களிடம் எதிர்த்தே பேச மாட்டான்.

“விடுங்கப்பா. வேலை இருக்கு” உதறி நகர்வான். மேலும் அவர்களிடம் அனாவசிய பேச்சு வார்த்தைகள் என்பதையே விட்டான்.

“வழியில ஒரு டக்கர் பிகர் மடக்கினேன். சூப்பர்!” சேகர் உல்லாச பேர்வழி. அவன் வழியில் வந்து இவனைச் சாய்க்க வார்த்தைகள் விடுவான்.

“டேய்..! காண்டம் உபயோகிச்சுக்கோ. இல்லேன்னா…எயிட்ஸ் வந்து உடலை பாலிதீன் பையில போட்டு பொட்டலம் கட்டி தொடக்கூட முடியாம ஆகிடுவே.” பாலு அவனை எச்சரிப்பான்.

“பலான ‘படம் பார்க்கலாமா..?” கேட்பார்கள்.

பார்த்துவிட்டு வந்து விலாவாரியாக சொல்வார்கள்.

அப்புறம்.. கைபேசியில் ஆபாச படம், போட்டோ காட்டுவார்கள்.

“இது நல்லா இல்லே. அது நல்லா இல்லே.!” அவனுக்கு முன்னே காட்டி திருப்புவார்கள்.

ராமு எதையும் சட்டை செய்யாமல் இருப்பான். அளவுக்கு மிஞ்சி போனால் இருக்கையை விட்டு எழுந்து போவான். வெளியில் சென்று திரும்புவான். நண்பர்கள், கணவன் மனைவி கொஞ்சல், குலாவல், ஒட்டல், உரசல் எல்லாவற்றையும் உண்மை, கற்பனையாய்ப் பேசுவார்கள். இது இன்றும் தொடர்கதையாய் நடந்தாலும் புஜ்ஜியம்தான்!

‘எப்படி..எப்படி கவிழ்விப்பது…?’ வசந்த் மூளையைக் கசக்கினான்.

பத்து நிமிடத் தேடலில் பளிச்சென்று மூளையில் மின்னல் வெட்டியது.

புரட்டி அலச…பட படவென்று திட்டங்கள் தடதடவென்று உதித்தது. முகம் மலர்ந்து உற்சாகமாக நடந்தான்..!

அத்தியாயம்-3

தன் மனதில் உதித்ததை வசந்த் செயல்படுத்த நேரம் காலம் சரியாக இருந்தது.

ராமு அலுவலக வேலை சம்பந்தமாக ஒரு வார விடுப்பில் வெளியூர் சென்றிருந்ததால் வசந்த் காலா காலத்தில் அலுவலகம் வந்தான்.

சக ஊழியர்களான பாலு, சேகர், கணேஷ், வெங்கடேஷ்…ஆகியோரும் சரியான நேரத்திற்கு வந்து விட்டார்கள்.

அலுவலக மேலாளர் அம்மாவிற்குத் திதி. திங்கள்கிழமை அரை நாள் விடுப்பென்பது அனைவருக்கும் தெரிந்த சேதி.

உதவி மேலாளர் இல்லை. அவருக்கு இதைவிட…அதிக சம்பளம், உயர்ந்த வேலை கிடைக்க.. வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்.

தலைமை இன்றைக்கு ஹெட்கிளார்க் ஏகாம்பரம்தான். அவருக்கு மேலாளர் இல்லையென்றால் பத்து மணிக்குத்தான் அலுவலகம். அன்று அவர் தண்ணி தெளித்து விட்ட மனிதர்.!

நேரம் காலம் சரியாய் இருக்க, தன் இருக்கையில் வந்து வாகாய் அமர்ந்த வசந்த்…

“யாருக்காவது முக்கிய, அவசர வேலை இருக்கா..?” நண்பர்களைப் பார்த்து கேட்டான்.

“ஏன். ..? என்ன சேதி வச்சிருக்கே..?” பாலு தன் இருக்கையில்இருந்தபடியே அவனை நிமிர்ந்து பார்த்தான்.

“ராமுவைப் பத்தி ஒரு முக்கியமான சேதி..!”

“வேண்டாம் சாமி. அவன் வாழை மட்டை! பத்தவே மாட்டான். ஆளை விடு!” அவன் எடுத்த எடுப்பிலேயே கழன்றான்.

“முன்னே வச்ச காலை பின்னே வைக்கக் கூடாது. முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்!” – வசந்த் குரல் உயர்ந்தது.

“வேணாம்ப்பா… !” கணேஷ் கையெடுத்து கும்பிட்டான்.

இரண்டாவது ஆளும் அம்பேல். ஆள் அவுட்..!

“இப்போ நாம போடப் போற போடுல ராமு கண்டிப்பா கவிழ்வான், கல்யாணம் முடிப்பான். இது உறுதி, சத்தியம்!” வசந்த் அடித்துச் சொன்னான்.

“அவன் பேச்சு இல்லன்னா நமக்கும் பொழுது ஓடாது. அலுவலகமே போரடிக்கும் சொல்லு..?” வெங்கடேஷ் துணிந்து வந்தான்.

“வழக்கமா சொல்றது நீ. செய்யிறது நாங்களா..?” பாலுவும் மனசு மாறி எழுந்தான்.

“ஆமாப்பா. நம்மை மாதிரி வசந்தும் வெறியேத்தினால் அவுங்க நட்பு புட்டுக்கும் தெரிந்த சேதிதானே..!” சொல்லிக் கொண்டே கணேஷ் வந்தான்.

“சூத்திரதாரி! சேதி என்ன..?” சான்றிதழ் கொடுத்து சேகரும் தன் இருக்கையை விட்டு எழுந்து வந்தான்.

எல்லோரும் அலுவலகத்தில் தலைமை இல்லாததால் வசந்தைச் சுற்றி அமர்ந்தார்கள்.

வசந்த், சுற்றி உள்ள அனைவரையும் ஒரு முறை பார்த்து. ..

“இப்போ நாம பேசுற பேச்சு, செய்யிற செய்கை எவருக்கும் கண்டிப்பா தெரியக்கூடாது. குறிப்பா ராமு காதுல படவேக் கூடாது..!” எடுத்த எடுப்பிலேயே எச்சரித்தான்.

“சரி. சொல்லு..?” – சேகர்.

எல்லோர் காதுகளும் கூர்மையானது.

“இப்போ நாம செய்ய வேண்டிய காரியம் என்னன்னா… ராமுவுக்கு ஒரு பொம்பளையோட தொடர்பு இருக்கு. அதனால அவன் கலியாணம் முடிக்க அச்சப்படுறான்னு அக்கப்பேர் அதாவது வதந்தியைக் கிளப்பிவிடனும்…”

எல்லோர் முகம், மனங்களில் சுவாரஸ்யம் தட்டியது. வசந்த் முகத்தையே ஆவலாய்ப் பார்த்தார்கள்.

“ராமு அம்மா, அப்பா, ஊர்ல இருக்கிறவங்க, இவனுக்குத் தெரிஞ்சவங்க, நட்புன்னு எல்லார்கிட்டேயும் இந்த சேதியை நாம் சரியா பரப்பிட்டோம்ன்னா…ராமு எங்கே திரும்பினாலும் இதே பேச்சாய் இருக்கும். துணிஞ்சவங்க… அப்படியா..?ன்னு அவனைக் கேட்பாங்க. பையன் சுருண்டுடுவான். வம்பே வேணும்ன்னு உடனே பொண்ணு பார்த்து எவள் கழுத்திலாவது தாலி கட்டுவான். இல்ல, அவுனுக்காக காத்திருக்கிற மாமன் மகள் ரோஜா கழுத்துலேயாவது தாலி காட்டுவான்..!” நிறுத்தி எல்லோர் முகங்களையும் பார்த்தான் வசந்த்.

அனைவரின் முகங்களிலும் சிந்தனைக் கோடுகள்.

சிறிது நேரத்தில் சேகர், “இப்படி செய்றதைவிட நான் சொல்றபடி செய்யலாம்!”

“என்ன..?” வசந்த் அவனை ஏறிட்டான்.

“எவளையாவது செட்டப் பண்ணி, ‘கெடுத்துட்டேன்! ‘னு ராமுகிட்ட சொல்லவைக்கலாம். அவமானம்! பையன் பொசுக்குன்னு விழுந்துடுவான்.” சொன்னான்.

“அது கொஞ்சம் கஷ்டம். ஒருத்தி தயவை நாடனும். அவளை சம்மதிக்க வைக்கனும். அவள் கேட்கிற தொகை கொடுக்கனும். காசு பணம் செலவாகும். ராமு கண்டிப்பா அவமானப்படுவான். அந்த ஆத்திரத்துல. ..’சரிடி ! உன் கழுத்துல தாலி காட்டுறேன்’னு தயார்ன்னா அவள் அலறுவாள். நாடகம் அம்பலமாகும். நமக்கு அவமானம், தலைக்குனிவு.

அவள் அப்படி அலறாமல், ஒரு நல்லவன் கெடைச்சான் என்கிற நெனப்புல சரின்னு சம்மதிச்சா. ஒரு கெட்டவளை சேர்த்த பாவம் நம்மை வந்து சேரும். அது நட்புக்குப் பெரிய துரோகம். நான் சொல்லும் வழியில் இந்த பாதிப்பு, கஷ்டம் கிடையாது.

நாம இந்த வதந்தியைக் கிளப்பி விட்டுட்டோம்ன்னா அது பத்திக்கும். காட்டுத் தீயாய் மாறி சுட்டுப் பொசுக்கி ராமுவைக் கவிழ்த்திடும். தீ சரியாய்ப் பத்தலைன்னாலும் நாம விடாமல் பத்த வச்சு கவிழ்ப்போம், கவிழ்க்க வைப்போம்.! இதுல… நமக்கு சின்ன உடல் உழைப்புதான். ஆபத்து அதிகமில்லே. ரொம்ப எச்சரிக்கையைச் செயல் பட்டோம்ன்னா எந்த ஆபத்தும் இல்லே. ஆபத்து ராமுக்குத்தான். பார்க்கிறவங்களெல்லாம் கேட்க, கேட்க…. ஆள் நொந்து போய் வழிக்கு வருவான்! வந்துடுவான்.! வரவழைக்கலாம்..!” தெளிவாய் சொன்னான் வசந்த்.

கேட்ட நண்பர்கள் முகங்களில் கொஞ்சம் தெளிவு வந்தது.

“சரி. உன் மனசுல இருக்கிற எல்லாத்தையும் கொட்டு.” வெங்கடேஷ் சொன்னான்.

“சொல்றேன்! எங்கேயோ, எந்த ஊர்லேயோ.. எவளோ முகம் தெரியாத ஒருத்தி! அவளை நம்ம ராமு வச்சிருக்கான். என்பதுதான் நாம கிளப்பி விடும் அக்கப்போர். அந்த ஊர், அவள் பேர் எல்லாம் நம்மைச் சுத்தி அம்பது கிலோ மீட்டர் சுற்றளவுல இருக்கக் கூடாது. காரணம், ஊரும் பேரும் மெய்யாய் இருந்தால் சம்பந்தப்பட்ட ஆள்கள் தேடித் பிடித்து நம்மை, ராமுவை உதைப்பாங்க வெளுப்பாங்க. ஆகையால் பேரும், ஊரும் கற்பனையாய் இருக்கனும்.” நிறுத்தினான்.

“இது சாத்தியமில்லே.!” கணேஷ் இப்படியும் அப்படியுமாய்த் தலையசைத்தான்.

எல்லோரும் அவனைப் பார்த்தார்கள்.

“பேர், ஊரெல்லாம் கற்பனையாய் வைக்க முடியாது. எல்லா பேரும், ஊரும் எங்கேயும் இருக்கு. உதைக்க வர்றவன் அம்பது கிலோமீட்டர் தாண்டி இருந்தாலும் வந்து உதைப்பான்!” கணேஷ் உண்மையைச் சொன்னான்.

வசந்த் அசரவில்லை.

“சரி. ராமுவை வழிக்கு கொண்டுவர இது திட்டமேத் தவிர வேற எதுக்குமில்லே. அதனால், வதந்தியை இந்த ஊருக்குள்ளேயே பரப்புவோம். நமக்குத் தேவை. ராமுவை பத்து பேர்கள் அவன் முகத்துக்கு நேரா கேட்கனும். அவன் தலைக் குனியனும். மனசு மாறி கலியாணம் முடிக்கனும் . அதனால் வதந்தி இந்த ஊர்ல மட்டும்தான் சுத்தனும். இதை மீறி அதைத் தாண்டி போனாலும் நாம சமாளிச்சுதானாகனும். வேற வழி இல்லே. ஒரு காரியத்தில் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். சமாளிக்க வேண்டியதுதான்!” சொல்லி நிறுத்தினான்.

நண்பர்கள் முகங்களில் தீவிர சிந்தனை ரேகைகள் பரவியது. ஆளாளுக்குப் பரிதவிப்பதுபோல் அல்லாடினார்கள். சிறிது நேரத்திற்குப் பின்…

“சரி. சமாளிப்போம்!” பாலு துணிந்தான்.

“மேலே சொல்லு..?” என்றான் வெங்கடேஷ்.

“அவள் திருமணமானவள். புருசன் வெளிநாட்டுல வேலையாய் இருக்கான். இவள் இங்கே தனியாய் வாழறாள். கணவன். பிரிவு, ஏக்கம், தாக்கம் அவள் ராமுவிடம் கவுந்துட்டாள். இவனும் அவளை வச்சிருக்கான். விசயம், வெளிநாட்டுல இருக்கிற கணவனுக்குத் தெரிய. . அவன் உடனே இவளுக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பிட்டான்..!” வசந்த் நிறுத்தினான்.

நண்பர்கள் முகங்களில் திகில் அடித்தது.

“அவள், உன்னாலதான் நான் கெட்டேன். என்னைக் கைவிடாதே! கலியாணம் பண்ணு. மீறி கைவிட்டால் நான், போலீசுக்கு விலாவாரியா எழுதி வச்சுட்டு தற்கொலை பண்ணிப்பேன் ! சொல்றாள்..!” – இரண்டாவது முறை நிறுத்தி நண்பர்களைப் பார்த்தான் வசந்த்.

அவர்கள் முகங்களில் ஈயாடவில்லை.

“ராமு மிரண்டு போய், வெட்கக்கேட்டை வெளியில சொல்ல முடியாமல், அவளைக் கலியாணமும் பண்ண முடியாமல் கல்யாணம் வேணாம்! வேணாம்ன்னு இங்கே காலத்தைக் கடத்துறான்! இதுதான் நாம சொல்லப்போற சேதி, வதந்தி..!” என்று மூன்றாவது முறையாக நிறுத்தி நண்பர்களை ஏறிட்டான் வசந்த்.

அவர்கள் வாய் பேசவில்லை. இறுகி இருந்தார்கள்

“ஐடியா சரியா..? எல்லாம் கோர்வையாய் வருதா..? குறை உள்ள இடத்தைச் சொல்லுங்க. சரி செய்துக்கலாம்!” முடித்து நண்பர்களை பார்த்தான் வசந்த்.

அவர்கள் மத்தியில் மவுனம். மனங்களில் யோசனை, அலசல்.

பத்து நிமிடங்களுக்குப் பின்…

“இல்லே! கொஞ்சம் கூட பிசிர், குறை இல்லே..!” பாலு பலமாய் தலையாட்டினான்.

மீதி உள்ளவர்களும் மனங்களிலும் அதே பட்டது. ஆமோதிப்பது போல் தலையசைத்தார்கள்.

வசந்த் மனதில் தெம்பு தைரியம் வந்தது.

“இப்போ சொல்லுங்க ஆள் பேர், ஊர் என்ன வைக்கலாம்..?” சொல்லி நிமிர்ந்து அமர்ந்து அடுத்த கட்டத்திற்குத் தாவினான்.

மறுபடியும் நண்பர்களிடையே நிசப்தம். மனங்களில் யோசனை.

“மறுபடியும் சொல்றேன்! பேர், ஊர் கற்பனையாய் இருக்கனும். யாரையும் மனசுல வச்சு பழி வாங்குகிறதாய் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் பின்னால் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கு. நம்மளால சமாளிக்க முடியாது!” எச்சரித்தான் வசந்த்.

இந்த நேரத்தில் ஹெட்கிளார்க் ஏகாம்பரம் உள்ளே நுழைந்தார்.

எல்லோரும் வேலையைப் பார்க்காமல் கும்பலாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து முகம் சிவந்தார்.

“என்ன இங்கே சதி. .?! நான் ஒருத்தன் இல்லேன்னா யாரும் வேலை பார்க்க மாட்டீங்களா..?” சத்தம் போட்டார்.

கூட்டம் மிரண்டு, பம்மி கலைந்தது.

ஆனால்..?

– தொடரும்…

– 04-02-2002 மாலைமதியில் பிரசுரமான குறுநாவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *