வசந்தம் வந்து போய்விட்டது
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2026
பார்வையிட்டோர்: 254
(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
அத்தியாயம் – 3

மழை, காற்று, இடி மின்னல் என்பனவெல்லாம் பதறியழும் தாய் தகப்பனை பாடசாலைக்கு ஓடோடி வருவதை தடுத்தி நிறுத்த முடியவில்லை.
“என்ன நடந்தது எங்கள் குழந்தைகளுக்கு”
உலகத்து நாலா பக்கங்களிலுமிருந்த சனத்தொகை கூடிய நகரம் செயின்ட் அல்பேன்ஸ். அந்த சனத் தொகையில் கலாச்சாரங்கள், எத்தனையோ நிறங்கள், மொழிகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் உள்ளன. அத்தனையின் பிரதிபலிப்பும் அங்கு தெரிந்தன.
மிகவும் நாகரீகமானவர்கள் வாய்விட்டு அழாமல் கேள்வி கேட்டார்கள், சாந்தி போன்ற உணர்ச்சி வசப்பட்டவர்கள் கேவிக் கேவியழுது கொண்டிருந்தார்கள். அலிஸன் வழக்கம்போல் ஆசிரியர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தாள்.
“இந்த இடியும் மின்னலிலும் கண்டறியாத மியுசியம போகத்தான் வேண்டுமா” அலிஸன் திரும்பத் திரும்ப அதையே கேட்டுக் கொண்டிருந்தாள்.
“எந்த இடத்தில் விபத்து நடந்தது, எத்தனை சீரியசான குழந்தைகள்’ எமிலி ஒரு டொக்டர் மாதிரி நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
மோபைல் போனில் தொடர்பு கொண்டபடி இருக்கிறோம். . எல்லாக் குழந்தைகளும் லண்டனிலுள்ள ஒரு குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணப் பட்டிருக்கிறார்கள்” தலைமை ஆசிரியை விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“இவ்விடம் நின்று என்ன பிரயோசனம், நாங்கள் ஹொஸ்பிட்டலுக்குப் போவோம்” டேவிட் அலிஸன், எமிலி, சாந்தி மூவரையும் பார்த்துச் சொன்னான்.
எமிலி அவனின் முகத்தைப் பார்க்காமல் கொட்டும் மழையை வெறித்துப் பார்த்தாள்.
“தயவு செய்து எனது குழந்தையிடம் என்னைக் கொண்டு போங்கள்” சாந்தி தவித்தாள். ஒரு மணித்தியாலத்திற்கு முன்தான் தன் வயிற்றில் ஒரு குழந்தை வந்துவிட்டாதாகக் கூத்தாடினாள், இப்போதோ தனது வளர்ந்த மகளின நிலை குறித்துத் தவித்துக் கதறினாள்.
கணவருக்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொல்லலாம் என்றால் அவன் வெளியே போய் விட்டானாம், அவள் கணவன் நடராஜன் ஒரு வழக்கறிஞன். பெரும்பாலும் கோர்ட் கேஸ் இருக்கும். ஆனால் வீட்டை விட்டு இன்று போகமுதல் தான் பெரும்பாலும் ஒவ்விசிலேயே இருப்பதாகச் சொன்னான்.
“ஏதும் அவசர வேலையா” என்று றிஸப்ஸனிஸ்டைக் கேட்டாள் சாந்தி.
அந்த றிஸப்ஸனிஸ்ட் புதிதாக வேலைக்கு வந்தவள், ஏனோதானோ என்று மறுமொழி கூறினாள்.
“அவர் வந்ததும் உடனடியாக வீட்டுக்குப் போன் பண்ணச் சொல்லுங்கள்” என்று சாந்தி சொல்லிவிட்டு ஓடோடி பாடசாலைக்கு வந்தாள்.
பாடசாலைக்கு வந்ததும்தான் கட்டாயம் குழந்தைகளை அட்மிட் பண்ணியிருக்கும் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும் என்று.
“டேவிட் உங்கள் மோபைல் போன் ஒருதரம் இரவல் தரமுடியுமா” சாந்தியின் பதட்டம் அவனைப் பரிதாபப் பட வைத்திருக்க வேண்டும்.
“நிச்சயமாக சாந்தி நீங்கள் எனது மோபைல் போனைப் பாவிக்கலாம்” டேவிட் தனது போனைக் கொடுத்தான்.
“அவர் இன்னும் வரவில்லை, இன்று பின்னேரம் வரைக்கும் வரமாட்டேன் என்று போன் பண்ணிச் சொன்னார், நீங்கள் வீட்டுக்குப் போன் பண்ணச் சொன்னதைச் சொன்னேன்.” றிஸப்ஸனிஸ்ட் சொன்னாள்.
‘இன்றைக்கு என்று பார்த்து அவரும் ஒவ்விசில் இல்லை என்ன செய்வேன்” சாந்தி கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.
“நாங்கள் இருக்கிறோம், துக்கப்பட வேண்டாம். இப்போது நாங்கள் லண்டனுக்குப் போக வேண்டும். நான் வீட்டில் நின்றது நல்லதாகப் போய் விட்டது.”
டேவிட்டின் குரல் இதமாக இருந்தது. டேவிட்டின் மனைவி அலிஸனுக்கு எதிர்மாறானவன் டேவிட், மிகவும் கருணை மனம் கொண்டவன். சிந்தித்துச் செயற்படுபவன், சாந்திக்கு ஆங்கிலேயர்களுடன் அவ்வளவு பழக்கமில்லை. வேலைக்குப் போகாமல் வீட்டிலிருப்பதால் அவளுடைய உலகம் மிகவும் குறுகியதாக இருந்தது.
இரண்டு தமயன்களின் குடும்பம், உலகத்தில் ஒரு பிடிப்புமற்ற தம்பியின் தொடர்பு, ராஜனின் (நடராஜன்) குடும்பத்தில் அவனது தமக்கையை எப்போதாவது சந்திப்பாள். அவர்கள் டொக்டர்கள். கணவனும் மனைவியும் விழுந்து விழுந்து உழைக்கிறார்கள். வயது வந்த இரண்டு பிள்ளைகள் உண்டு. ராஜனை எப்போதாவது வந்து சந்திப்பார்கள்.
அலிஸன் ஓடிப்போய் குழந்தை சைமனைக் கூட்டிக் கொண்டு வந்தாள். சாந்தி பாடசாலை ஹோலில் உள்ள பப்ளிக் டெலிபோன் பூத்தில் போய் நின்று தனது தமயன்கள் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தாள்.
எமிலி அவசரமாக ரோட்டைத் தாண்டிக் கொண்டிருந்தாள். லண்டனுக்கு அவள் காரில் போவதில்லை. ரெயின் எடுத்துத்தான் வேலைக்குப் போவாள்.
அந்த ரெயினிற்தானே டேவிட்டைச் சந்தித்தாள். அன்றும் இப்படித்தான் மழைபெய்து கொண்டிருந்தது. ஸ்ரேசனுக்குப் போகும் படிகள் மழையில் வழுக்கிக் கொண்டிருந்தது.
அவள் ஓடிப்போன அவசரத்தில் கையிலிருந்த பைலைத் தவற விட, அந்தப் பேப்பர்கள் எல்லாம் கீழே விழ அவன் அவற்றைப் பொறுக்கி எடுக்க உதவி செய்தான்.
அவன் முகத்தைக் கூடப் பார்க்க நேரமில்லை. “தாங்க் யூ” சொல்லி விட்டு அவசரத்தில் ரெயினில் ஏறிக் கொண்டாள். அவனும் ஓடிவந்து அவள் பின்னாற் தொற்றி ஏறிக் கொண்டான்.
இருவரும் மழையில் தொப்பமாக நனைந்திருந்தனர்.
“என்ன வசந்த காலைமோ, சமர் தொடங்க மழையும் தொடங்கி விட்டது” அவன் இவளுடன் பேச வேண்டும் என்பதற்காக ஏதோ சொல்லி வைத்தான். நனைந்து விட்ட பொன்னிறத் தலைமயிரை ஒதுக்கிக் கொண்டு, அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்,
அவளுடைய ஆழமான நீலவிழிகளில் அவன் விழுந்துவிட்டான்.
அவன் ஒருதரம் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினான். “இப்படி ஒரு சோடி நீலக் கண்களை நான் ஒரு நாளும் கண்டதில்லை” என்று ஆனந்த் சொன்னது போல் இவனும் சொல்லப் போகிறானா?
அவள் தன்னையறிமுகம் செய்து கொள்ள நினைத்து வாயெடுத்தபோது ரெயின் அடுத்த ஸ்ரேசனில் பட்டென்று நின்றது. சனங்கள் அவசரத்துடன் ஏறினார்கள்.
அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வில்லை. எமிலி மழையைப் பொருட்படுத்தாமல் பஸ் ஸ்ரொப்புக்குப் போனாள். பாடசாலைக்கு வந்திருந்த எத்தனையோ தாய் தகப்பன் அவசர அவசரமாகத் தங்கள் கார்களில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
”உனக்கென்ன பைத்தியமா, யாரிடமாவது லிப்ட் கேட்பதற்குப் பதில் மழையில் இப்படி நனைகிறாயே” அலிஸன் தன் கீச்சுக் குரலில் எமிலியைப் பார்த்துச் சத்தம் போட்டாள்.
அலிஸனின் காரில் சாந்தியும் குழந்தை சைமனுடன் அலிசனும் பின் சீட்டுகளிலிருக்க டேவிட் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
அவள் அருகில் அவன் காரை நிறுத்தினான். அவளுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன் அவன் அவளருகில் காரை நிற்பாட்டினான். இப்போதும் அவள் அருகில் காரை நிற்பாட்டுகிறான்.
ஆனால் அவன் இவளைத் தன் காரில் ஏறிக் கொள்ளச் சொல்லவில்லை.
“என்ன டேவிட், காரைத் திறந்து விடுங்களேன்” அலிஸன் உத்தரவு போட்டாள்.
அவன் இடதுபக்கம் சரிந்து காரைத் திறந்து விட்டான். எமிலி சரியாக நனைந்திருந்தாள்.
“தாங்க் யு” சொன்னபடி டேவிட் அருகில் உட்கார்ந்தாள். அவன் முகத்தில் ஒரு கணம் குறும்புச் சிரிப்புத் தவழ்ந்ததை அவள் கவனிக்காமலில்லை.
“பாவம் எமிலி, தனியாக எவ்வளவு கஷ்டப்படுகிறாள். எனக்கும் சாந்திக்கும் இருககிற உதவி அவளுக்கில்லையே”
அலிஸன் பரிதாபம் எமிலிக்கு எரிச்சலையூட்டியது. அலிஸனும் டேவிட்டும் ஒருத்தருக்கொருத்தர் எப்படி ‘உதவிக்’ கொள்கிறார்கள் என்று அவளுக்குத் தெரியாதா என்ன?
“அலிஸன் நீ எனக்காகப் பரிதாபப் படுவதைப் பற்றி மிகவும் சந்தோசப்படுகிறேன். ஆனால் உங்களைப் போல் ஊர் உலகமெல்லாம் சொந்தங்கள் இல்லாவிட்டாலும் என் காலிலேயே நிற்கப் பழகிக் கொண்டு விட்டவள். எனது விடயங்களையும் எனது குழந்தையின் விடயங்களையும் முடியுமானவரையில் சுமுகமாகச் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்”.
எமிலியின் குரலில் அடக்கம் இருந்தாலும் அலிஸனின் தேவையற்ற ஸ்ரேட்மென்ட்டுக்கு’ எமிலியின் பதில் சாட்டையடியாகிறது என்று டேவிட்டுக்குத் தெரியாமலில்லை. அவன் தன் மனைவியின் குரலில் தொனிக்கும் ‘முட்டாள்’ தனத்தை முழுக்க முழுக்கப் புரிந்து கொண்டவன். சாந்தி இவர்களின் சம்பாஷணையில் சம்பந்தப்படாமல் மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தாள்,
“என்ன உன் குழந்தை உஷா மட்டுமா விபத்தில் சிக்கிக் கொண்டாள்? எங்கள் குழந்தைகளும்தானே விபத்தில் சிக்கிக் கொண்டார்கள்”
அலிஸன் சாந்தியைப் பார்த்துக் கூறினாள்.
டேவிட் கார் ரேடியோவைத் திருப்பி விட்டான். பகல் பன்னிரண்டு மணிக்குச் செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ்சுடன் இன்னொரு லொறி மோதியதால் குழந்தைகளில் பலர் காயமடைந்திருப்பதாகச் செய்தி சொல்லப்பட்டது.
“கேட்டாயா சாந்தி யாரும் செத்துப் போய் விட்டதாக இல்லையே” அலிஸன் சாந்தியைத் தேற்றும் தோரணையில் சொன்னாள்.
சாந்திக்கு இன்று எத்தனையோ அதிரடிகள். தனக்குக் குழந்தை தரித்திருக்கிறது என்ற சந்தோச செய்தியில் குதூகலப் பட்டவளுக்கு இப்போது உஷாவின் விபத்து மனக்கலக்கத்தை உண்டாக்கி விட்டது.
இன்றைக்கெல்லாம் ஒவ்விசிலேயே இருப்பேன் என்று சொல்லி விட்டுப் போன கணவன், ஒவ்வீசுக்கு வந்ததும் வராததுமாக வெளியே போய் விட்டானாம்.
ராஜன் எப்போதும் தான் எப்போது ஒவ்வீசில் இருப்பேன் வெளியிற் போவேன் என்று சாந்திக்குச் சொல்வான். அவசரமாக எங்கும் செல்வதானால் வீட்டுக்குப் போன் பண்ணி விட்டுத்தான் போவான். இன்றைக்கு என்ன நடந்தது?
அலிஸன் எப்போதும் வாய்விட்டுச் சொல்வதுபோல் சாந்தி ஒரு அதிர்ஷ்டசாலி. ராஜன் மிகவும் குடும்பப் பொறுப்புள்ள தகப்பன், நல்ல அன்பான கணவன், அவள் கொடுத்து வைத்தவள்.
அலிஸன் டேவிட் பற்றி எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருப்பாள். அவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்களாம். எப்போதும் எலியும் பூனையும் போல் இருக்கிறார்கள்.
சாந்தி கார் ஜன்னலுக்கு வெளியே பார்வையைத் தவழ விட்டாள். மோட்டோர் பாதை குழந்தைகளின் சின்னக் கார்களைக் குவித்து வைத்தாற்போல் அடுக்கடுக்கான கார்களால் நிறைந்திருந்தது. வேறு நகர்களிலிருந்து லண்டனுக்குச் செல்லும் லாரிகள், வான்கள், வேலைக்குச் செல்லும் மனிதர்கள், உல்லாசப் பிரயாணிகள் என்று எத்தனையோ பேர் இந்தப் பாதையில் அடைந்து கிடக்கிறார்கள்.
பாதையை அடுத்த வயல்வெளிகளில் கொழுத்துப் பெருத்த மந்தைக் கூட்டம் மழையில் நனைந்தபடி இரை தேடிக் கொண்டிருந்தன. மந்தைகள் கூட்டத்தை ஒரு மனிதன்’ தன்னுடைய பயிற்றப்பட்ட நாயுடன் மேய்த்துக் கொண்டிருந்தான்.
மட்டக் களப்பிலுள்ள அவளின் பெரியம்மா வீட்டுக்குப் போயிருந்த போது இப்படித்தான் பெரிய திறந்த வெளிகளில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் கொடிய வெயிலுக்கு நிழல் தேடும் மாடு மேய்க்கும்பையன் வயற்பரப்பில் விழுது விட்டுப் பரந்து நிற்கும் ஆல மர நிழலில் அமர்ந்திருந்து புல்லாங்குழல் இசைப்பான், சினிமாப் பாட்டு ராகங்களை மிகவும் இனிமையாக இசைப்பான்.
ஏதோ மரக் குழாய்களுக்குள் அந்த மாட்டுக்காரனின் இதய நாதம் இசையாய்க் கனிந்து மதிய வெயிலையும் குளிராக்கும் இனிமையுடன் தவழும்.
மதிய நேரங்களில் இளம் பெண்களை வெளியில்- அதாவது வயல் வெளிகளிற் போக விடமாட்டார்கள். பேய், பிசாசு பிடித்து விடுமாம்!
அவனுக்குக் காரை தீவுக்குப் போனால் காரைதீவின் கடற்கரையும் பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகளும் உள்ளத்தைக் கவர்ந்து விடும்.
திருகோணமலைக் கடற்கரையையண்டிய வீட்டில் பிறந்துவளர்ந்தவள். காலையில் சூரியன் கடலுக்குள்ளால் பிறப்பெடுத்து தாய்மையின் துவாலைக்குள்ளாள் தலை தூக்கும் குழந்தைபோல் முகத்தில் சிவப்பு ரத்தைத்தைப் பூசிக் கொண்டு இளம் கதிரால் கடலலைகளை முத்தமிடும் காட்சி அற்புதம் அற்புதம்.
குழந்தையாய் இருக்கும் போது அவள் தாத்தாவுடன் அவளின் மெல்லிய பாதம் பதித்துக் கடற்கரையில் நடை போடுவாள் சாந்தி. மணலுக்குள் தங்களை மறைத்துக் கொள்ளும் நண்டுகளைத் தேடித் தோண்டி விட்டுத் தோல்வியால் அழும் சாந்தியைப் பார்த்து நகைப்பார் பல்லிழந்த அவள் தாத்தா.
மட்டக்களப்புக் காரைதீவில் அவள் பெரியம்மா ஆசிரியையாயிருந்ததால், கொழும்பில் வெள்ளவத்தையில் அவளின் மாமா எக்கவுண்டனாக இருந்தார்.
விடுமுறையில் கொழும்புக்குப் போனால் வெள்ளவத்தைக் கடற்கரையும், மட்டக் களப்பு காரைதீவுக்குப் போனால் கடற்கரையும் மட்டுமல்லாமல் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகளும், அவற்றில் வடு வைத்தாற்போல் கிடக்கும் சில குளம் குட்டைகளும் அந்த குளங்களில் முகம் சிரிக்கும் அல்லிமலர்களும் தாமரை மொட்டுக்களும் அவளை ஒரு கலாரசனையாக்கி விட்டது.
தம்பி குமார் அப்போது சிறு குழந்தை. அவனையும் இழுத்துக் கொண்டு கடல் அலைகளைப் பிடித்து விளையாட அவளுக்கு ஆசை.
“என்ன காருக்கு வெளியால் கண்களைப் பறி கொடுத்து விட்டாயா”
அலிஸனின் குரல் அவளை இலங்கையிலிருந்து லண்டனுக்கு இழுத்து வந்தது.
அலிஸனின் தாய் தகப்பன் லண்டனுக்கு மிகவும் அருகில் இருக்கிறார்கள். அவள் ஒரு யூதப்பெண், டேவிட் ஒரு கத்தோலிக்க குடும்பத்திலிருந்து வந்தவன். ஆனால் கடவுளில் நம்பிக்கையில்லாதவன். குழந்தைகளை எந்தச் சமய அடிப்படையிலும் வளர்க்கவில்லை. ஆனாலும் குழந்தைகளுக்கு ஏதும் துன்பமென்றால் அலிஸனின் தாய் மூட்டை முடிச்சுகளுடன் மகளின் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவாள். தாய் வந்தால் டேவிட்டுக்கும் அலிஸனுக்கும் தர்க்கங்கள் இன்னும் கூடும். மாமியின் வருகையை அவன் பெரும்பாலும் வரவேற்பதில்லை. அகில உலகத்திலும் நடக்கும் பிரச்சினையா இது?
கார் ஓடிக் கொண்டிருந்தது. லண்டனையணுகியதும் வாகனங்களின் அதிகரிப்புக் கூடித் தெரிந்தது.
“அம்மாவும் அப்பாவும் இப்போது ஆஸ்பத்திரியில் இருப்பார்கள்” இது அலிஸன்.
“எப்போது எங்கள் குடும்பத்தில் வந்து நுழைவது என்று பார்த்துக் கொண்டிருப்பவர்களோடு இது ஒரு பெரிய சந்தர்ப்பம் இல்லையா’ டேவிட்டின் குரலில் நக்கல்.
“குடும்பத்தைப் பாராமல் அவள் இவள் பின்னால் நீங்கள் சுற்றித் திரிந்தால் எனது தாய் தகப்பன் எனக்குத் துணையா இருக்கத்தானே வேணும்” அலிஸனின் சாட்டையடி.
“தயவு செய்து அடுத்த அண்டக்கிரவுன் ரெயின் ஸ்ரேசன் வரும்போது என்னை இறக்கி விடுகிறீர்களா”
இது எமிலியின் வேண்டுகோள். கார் ட்ரவிக் லைட்டில் நின்றது.
எமிலி கதவைத்திறந்து ஓடிவிடுவாள் போலிருந்தது. எமிலியுடனும் அவன் சுற்றித் திரிந்தான் என்பது அலிஸனுக்குத் தெரிந்தால் என்ன செய்வாள்?
எமிலியின் பார்வை மழை பெய்யும் பாதையில் பதிந்திருக்க அவள் மனம் ஒரு வருடம் பின்னோக்கி ஓடியது.
எமிலியும் குழந்தை ரவியும் அப்போதுதான் செயின்ட் அல்போன்ஸ் என்ற நகருக்குக் குடியேறி வந்தார்கள். ஒரு காலத்தில் எமிலியின் பாட்டி செயின்ட் அல்பேன்ஸ் நகர்ப் புறத்திலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்தவள். அப்போது ஐந்து வயது எமிலி சில வார விடுமுறைகளைப் பாட்டியுடன் இந்த நாட்டுப் புறத்தில் கழிப்பாள். எந்த நேரமும் ஆரவாரமான லண்டனை விட்டு நாட்டுப்புறச் சூழ்நிலையை ரசிப்பது அவனுக்குப் பிடித்ததாக இருந்தது.
தமயன் தம்பி, தமக்கை, தங்கை என்று ஒருத்தரும் இல்லாமற் தனியாகப் பிறந்தவள் எமிலி. எமிலியின் தாய் ஐயர்லாண்டைச் சேர்ந்த மிகவும் கட்டுப்பாடான கத்தோலிக்கப் பெண், லண்டனுக்குப் படிக்க வந்தபோது எமிலியின் தாயின் அழகில் மயங்கி அவளை மணந்து கொண்டார் மிகவும் வசதி படைத்த மிஸ்டர் ஸிம்சன்.
உலகம் தெரியாத வயதில் ஏன் தாய் இரவில் தகப்பனுடன் ஏதோ தர்க்கப்பட்டு விம்முகிறாள் என்று புரியாமல் சில இரவுகளைத் தன் தனிமையான அறையில் கழிக்கும் எமிலிக்கு பாட்டியின் அன்பான அரவணைப்பு வாரவிடுமுறைகளில் மிகவும் இதமாக இருந்தது.
அதன் பிரதிபலிப்பு அவள் மனதில் படிந்திருக்க எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் அவளுக்கென்று ஒரு வீடு வாங்க வசதி வந்ததும் செயின்ட் அல்பேன்சுக்குக் குடிவந்தாள் எமிலி.
பாட்டியாள் உலகை விட்டுப் போய் எத்தனையோ வருடங்களாகி விட்டன. ஆனாலும் பாட்டியை நினைத்துக் கொண்டால் வரும் ஆறுதலை எப்போதாவது காணலாம் என்றுதான் வந்தாள்.
வந்து அடுத்த கிழமையில் ஒரு அடைமழை நேரத்தில் டேவிட்டுடன் ஸ்ரேசனில் மோதிய சந்திப்பு லண்டனில் அவனைத் தெருவிற் சந்தித்ததும் கோப்பி சாப்பிடும் பாருக்குப் போகுமளவுக்கு நீடித்தது.
அவன் செயின் அல்பேன்ஸில் வாழ்கிறான் என்றும் லண்டனில் ஒரு பிலிம் ஸ்டூடியோவில் எடிட்டராக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டான்.
தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும் தான் ஒரு பெண்கள் புத்தக சாலையில் பார்ட் ரைம் வேலையும் ஒரு கல்லூரியில் பார்ட் ரைம் ஆசிரியையாக இருப்பதாகவும் சொல்லிக் கொண்டாள் எமிலி.
இரண்டு பார்ட் ரைம் வேலையுடன் குழந்தையையும் பார்ப்பது கஷ்டமில்லையா” லெமன் ட்ரிங்கை உறிஞ்சியபடி அவன் கேட்டான்.
“இதைவிட எத்தனையோ கஷ்டமான வேலைசெய்யும் பெண்களுடன் ஒப்பிடும்போது எனது வாழ்க்கை ஒன்றும் பெரிதான கஷ்டமான வாழ்க்கையாகத் தெரியவில்லை. குழந்தையை நான் போகும் வரைக்கும் பார்த்துக் கொள்ள ஒரு நல்ல உதவி இருக்கிறது. அது ஒரு பெரிய காரியம்” அவள் அவளுடைய நீல விழிகளைத் தாழ்த்தியபடி சொன்னாள்.
அடுத்த தரம் அவள் அவனைச் சந்தித்த போது அவன் அவள் மனதில் எரிமலையைக் கொட்டி விட்டான்!
கார் ஆஸ்பத்திரி வாசலில் நின்றது,
சாந்தி விழுந்தடித்துக் கொண்டு கசுவல்டியை நோக்கி ஓடினாள். அவளைத் தொடர்ந்து எமிலியும் ஓடினாள். டேவிட்டும் அலிஸனும் குழந்தை சைமனைத் தூக்கிக் கொண்டு பின்னாற் சென்றார்கள்.
கசுவல்டி டிப்பார்ட்மென்ட் அல்லோலகல்லோலமாக இருந்தது. பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளூர் உறவினர்கள், பத்திரிகைக்காரர்கள், படப்பிடிப்பாளர்கள், T.V. றிப்போர்ட்டர்ஸ் எல்லோரும் சேர்ந்து திருவிழாக் கோலம் பூண்டிருந்தது கசுவல்டி.
மெடிகல் சுப்பிறீன்டன்ட் மேற்பார்வை செய்ய அவரின் உதவியாளர்கள் தாய் தகப்பனுக்கு அவர்களின் குழந்தைகளின் விபத்து பற்றிய விபரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
சாந்தி பதைபதைத்தாள். அவளின் மூத்த தமயன் சங்கர் வந்து தங்கையை அணைத்துக் கொண்டார்.
“ஒரு குழந்தையும் இறந்து போகவில்லையாம், ஆனால் சில குழந்தைகள் மிகவும் சீரியசான நிலையில் இருக்கிறார்களாம்” சங்கரின் குரல் தழுதழுத்தது. அவனின் ஒரே ஒரு தங்கை அவள். “அவர் வரவில்லையா” சங்கரின் கண்கள் மைத்துனரைத் தேடியது.
“இல்லை ஒவ்வீசில இல்லயாம், இப்ப ரேடியோ, டி.வி நியுஸ் கேட்டிருப்பார். இன்னும் கொஞ்ச நேரத்தில கட்டாயம் வருவார்”
அவள் நம்பிக்கையுடன் சொன்னாள்.
இருவரும் போய் உஷாவின் நிலையை விசாரித்தார்கள். ஒரு நேர்ஸ் அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு சிறிய அறைக்குச் சென்றாள்.
சாந்தியின் இதயம் படபடத்தது.
ஏதோ மிகவும் பயங்கரமாக நடந்து விட்டது. “கடவுளே என் குழந்தையைக் காப்பாற்று”.
கட்டிலில் இரத்தக் குவியலாகத் துவண்டு கிடக்கும் உருவமாக அவளின் மகள் உஷா?
பின்னேரம் நான்கு மணியாகி விட்டது. இப்போதுதான் உஷாவைத் தியேட்டருக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். தலையில் பலமான அடி. முதுகிலும் பலத்த காயம். நிறைய இரத்தம் போய் விட்டதாம்.
மூன்று பைந்த் இரத்தம் கொடுத்த பின் தியேட்டருக்குக் கொண்டு போகிறார்கள். பிழைப்பது ஐம்பது வீதம்தான் என்று திட்டவட்டமாகச் சொன்னார் டொக்டர்.
உயர்ந்து வளர்ந்திருந்த கம்பீரமான அந்த ஆங்கிலேய சேர்ஜன் அழுது வடிந்து கொண்டிருக்கும் இந்த ஆசியத் தாயை அன்போடு தடவிக் கொடுத்தபடி சொன்னார்.
“நீ அழுவதன் துயர் எனக்குத் தெரியும், ஆனாலும் என்னால் முடிந்ததை நான் செய்து உனக்கு உதவுவேன் என்பதையும் நீ நம்ப வேண்டும். தலையில் பெரிய காயம். இரத்தம் சில இடங்களில் கட்டி பட்டுமிருக்கலாம். இந்தச் சத்திர சிகிச்சை எத்தனை மணித்தியாலம் எடுக்கும் என்று எனக்குத் தெரியாது. அவ்வளவு நேரமும் நீ இந்த மூலையில் குந்திக் கொண்டிருந்து அழப் போகிறாயா?”
அவள் கேவிக் கேவியழுதாள். “உன்னுடன் யாருமில்லையா”
“எனது தமயன் நிற்கிறார்”
“அவருடன் இரண்டு மணித்தியாலம் வெளியே போய் விட்டு வா. மழை விட்டு விட்டது. இந்த ஆபரேஷனுக்குப் பின் எத்தனை மாதம் உன் குழந்தையுடன் நீ ஆஸ்பத்திரியில் இருக்க நேரிடுமோ தெரியாது. இப்போதே மனத்தைத் திடமாக வைத்துக் கொள்”
டொக்டர் தன் டியுட்டியின் தோரணையில் சொல்லி முடித்தார்.
எமிலி தன்னால் முடிந்த மட்டும் தன் கண்ணீரைக் கட்டுப் படுத்திக் கொண்டாள். மகன் ரவிக்கு இடுப்பெலும்பு ஒடிந்து விட்டதாம். அதன் தாக்கத்தால் அவனுடைய சலப் பைகள் பாதிக்கப்பட்டிருக்கலாமாம். குழந்தையின் முகம் பேதலித்துக் காணப்பட்டது. அவன் உஷாவைப் போல் நினைவிழக்கவில்லை. எவ்வளவோ இரத்தம் போயும் இன்னும் மூச்சு இழைக்க ஒன்றிரண்டு வசனங்கள் பேசினான். அவனையும் சத்திர சிகிச்சை நிலையத்துக்குக் கொண்டு போகப் போகிறார்கள்.
”அம்மா நாங்கள் சொன்னபடி பஸ்ஸில் குழப்படி செய்யாமற்தான் இருந்தோம். ஆனால் ஒரு பெரிய லொறி, எதிர்மாறாக வந்த லொறி எங்கள் பஸ்ஸில் மோதி விட்டது. பாவம் உஷா, செத்துப்போய் விட்டாளா?” குழந்தையின் குரல் மிகவும் பரிதாபமாக இருந்தது.
ரவி தேம்பித் தேம்பியழுதான்.
“இல்லைடா கண்ணே. அவள் மிகவும் ஸீரியசான நிலையில் இருக்கிறாள். கடவுள் அவளைக் காப்பாற்றி விடுவார்.”
“பீட்டர் எப்படியிருக்கிறான்”
“அவனின் கால்கள் இரண்டும் உடைந்து விட்டன. அதை விட பெரிதாக ஒன்றும் இல்லை.” அவள் எப்படிச் சொல்வது உஷாவின் காயம் மூளையைப் பாதிக்கும் என்றும், ரவியின் காயம் கிட்னிகளைச் சேதப்படுத்தும் என்றும் இந்தப் பிஞ்சு மனத்தில் பதிக்கத்தான் வேண்டுமா?
“சொறி அம்மா, உன்னை இன்று வேலைக்குப் போகாமற் பண்ணி விட்டேனே” ரவி வழக்கம்போல் பெரிய மனிதத் தனத்துடன் சொன்னான்.
“யோசிக்காதேடா கண்ணே; உனக்காக நான் வேலையை விட்டு விட்டு வாழ்க்கை முழுக்க உன்னருகில் இருப்பேன்.”
குழந்தை தாயை உற்றுப் பார்த்தான். என்ன சிந்தனை அவன் மனதில் ஓடும்?
இந்த டிப்பார்ட்மெண்ட் முழுதும் இன்று தாய், தகப்பன், பாட்டி, பாட்டன்களாக நிறைந்திருக்கிறார்கள், எனக்கு மட்டும் அம்மா ஒருத்திதான் நிற்கிறாள் என்று நினைக்கிறானா?
“அம்மா….”
குழந்தை ஏதோ சொல்லத் தயங்கினான்.
“என்னடா கண்ணே”
“ரவியின் மௌனம் அவளைப் பிழிந்தது.
“என்ன செல்வமே என்ன சொல்லப் போகிறாய்”
“கேட்டாற் கோபிக்க மாட்டீர்களே”
“…..” அவளுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அந்த நிமிடம் அவன் இவளின் உயிரைக் கேட்டாலும் கொடுக்கத் தயார்.
”அம்மா…’ தாத்தாவுக்கு நான் ஹொஸ்பிட்டலில் இருப்பதைச் சொல்வீர்களா”
அவள் திடுக்கிட்டாள்.
“எனக்குத்தான் அப்பா இல்லையே…. இருக்கிற தாத்தாவைக் கூட என்னை வந்து பார்க்கச் சொல்ல மாட்டீர்களா” ரவியின் குரலிற்தான் எத்தனை சோகம். தனக்குத் தகப்பன் இல்லை என்பதை எத்தனை சோகத்துடன் புதைத்து வைத்திருக்கிறான்.
“மகனே…” அவளால் கண்ணீரை அடக்க முடியவில்லை. குலுங்கிக் குலுங்கியழுதாள்.
அலிஸனின் தாய் தகப்பன், சொந்தக்காரர்கள் எல்லாம் பட்டாளமாக வந்திருந்தார்கள். பீட்டர் உடைந்த காலின் வேதனையில் ஓவென்று அழுது கொண்டிருந்தான்.
சாதாரணமாகவே பீட்டர் ஒரு அழுமூஞ்சி. தாய் ஒரு அவசரக்காரி, மகன் ஒரு அழுமூஞ்சி. பாடசாலைக் குழந்தைகளின் அழுகை, முனகல்களுக்குள் அவன் முனகல் எல்லாச் சத்தத்தையும் விட உரத்துக் கேட்டது.
டேவிட் மகனை அணைத்தபடி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். “இந்தக் காலத்து ரீச்சர்ஸ்சுக்கு நாங்கள் புத்திமதி சொல்ல வேண்டிக் கிடக்கு, இந்தக் கால நேரத்தில் யாரும் பிள்ளைகளை உல்லாசப் பிரயாணம் கொண்டு போவார்களா?” அலிஸன் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அலிஸன், குழந்தைகளைச் சமர் காலத்தில் கூட்டிக் கொண்டு போகாமல் எப்போது கூட்டிக் கொண்டு போவார்கள்? மழையும் காற்றும் எப்பபோதும்தான் வரும். வின்ரர் என்றால் என்ன சமர் என்றால் என்ன இயற்கையைத் தவிர்க்க முடியுமா”
பாவம் டேவிட் மனைவிக்காக மற்றவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் தோரணையிற் சொன்னான்.
அலிஸனின் பார்வை தூரத்தில் நிற்கும் சாந்தியிடம் பறந்தது “பாவம் சாந்தி, அவள் கணவன் இன்னும் வரவில்லை. எப்போது பார்த்தாலும் என் கணவரைப் போல் ஒருத்தரும் உலகில் இல்லை என்று புழுகிக் கொண்டிருப்பாள், இப்போதுதான் தெரிகிறது புழுகும் பொய்யும், இந்த நேரத்தில் அருகில் இருக்காத புருஷன் ஒரு மனிதன்தானா?”
எமிலிக்கு அலிஸனின் வார்த்தைகளைக் கேட்க ஆத்திரத்தில் உடம்பெல்லாம் நடுங்கியது.
இந்த அலிஸன் வாய் திறந்தால் நச்சுப் பொய்மை பெருக்கெடுக்குமா?
தன்னுடைய கணவனை எந்த நேரமும் மட்டம் தட்டுவதுபோல் மற்றவர்களையும் மட்டம் தட்டத் தொடங்கி விட்டாளே?
ராஜனுக்கு என்ன பிரச்சினையோ, டெலிபோனில் கதைக்க முடியவில்லை என்று சாந்தி சொன்னாள். அவன் அவசர வேலையாய் வெளியில் போயிருந்தால் T.V நியுஸ் அல்லது ரேடியோ நியுசும் கேட்டிருக்க முடியாது. அதை வைத்துக் கொண்டு ராஜன் ஒரு அனுதாபமில்லாத தகப்பன் என்று முடிவு கட்டலாமா?
சாந்திக்கு அலிஸன் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டால் எப்படியிருக்கும்?
“அலிஸன், சாந்திக்கு நீ சொல்வது கேட்டால் மிகவும் துன்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன்”.
எமிலியின் குரலின் கடினம் டேவிட்டுக்கு விளங்கியது. சங்கரும் சாந்தியும் ஒப்பரேஷன் தியேட்டர் வரைக்கும் சென்றார்கள்.
“ஒப்பரேஷன் முடிய மணிக் கணக்காக எடுக்கும் என்று டொக்டர் சொன்னார். நீ காலையிலிருந்து சாப்பிடாமலிருக் கிறாய். வெளியிற் போய் ஏதாவது குடிக்கலாம்” சங்கர் பாசத்துடன் சொன்னான்.
“அண்ணா தயவு செய்து என்னை வற்புறுத்த வேண்டாம் எனது நிலையில் என் தொண்டைக்குள் ஒரு துளி தண்ணீரும் இறங்காது.”
அவள் தமயனை ஏக்கத்துடன் பார்த்தபடி சொன்னாள்.
“அண்ணா நீங்கள் என்னுடன் ஒரேயடியாக நிற்க முடியாது. நீங்கள் வீட்டுக்கு போங்கள். அவர் எப்படியும் உடனே வந்து விடுவார். ஒவ்வீசில் மேஸேஜ் வைத்திருக்கிறேன்”
“என்ன சொல்கிறாய்? உன்னைத் தனியே விட்டுவிட்டு நான் தனியாகப் போவதா” சங்கர் உரிமையுடன் கேட்டான்.
எமிலி மகன் ரவியையும் இப்போது ஸ்ரெச்சர் வண்டியில் வைத்து ஆபரேசன் தியேட்டருக்குக் கொண்டு சென்றார்கள்.
“தாத்தாவுக்குப் போன் பண்ணச் சொல்லி ரவி சொல்கிறான்” தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் சாந்திக்குச் சொன்னாள் எமிலி.
எமிலியின் தகப்பனுக்கு எமிலி ஒரு ஆசியனிடம் உறவு கொண்டது பிடிக்கவில்லை. இங்கிலாந்து முழுதும் படித்த வசதி படைத்த எத்தனையோ ஆங்கிலேய வாலிபர்கள் இருக்கும்போது ஏன் தனது மகள் தற்காலிகமாக லண்டனுக்கு வந்த ஒரு தமிழனிடம் தன் வாரிசை வாங்கிக் கொண்டாள் என்று அவரால் விளங்க முடியாமலிருந்தது.
பரம்பரையாகவே ஆங்கிலேய சாம்ராச்சியத்தின் பிரதிநிதியாக உலகமெல்லாம் சென்ற ஆங்கிலேயர்களின் பரம்பரையில் வந்தவர் மிஸ்டர் ஸிம்சன்.
அவரிடம் உள்ள எத்தனையோ அகங்காரமான குணங்களில் எமிலிக்குப் பிடிக்காத எத்தனையோ குணங்கள் இருந்தன. அதன் பிரதிபலிப்பாக அவருக்கெதிராக எத்தனையோ விடயங்களைச் செய்தாள் என்று அவர் நினைத்தார்.
ஆனந்துடன் அவள் வைத்திருந்த தொடர்பை அடியோடு வெறுத்தார் சிம்ஸன். அதன் பிரதிபலிப்பு தகப்பன் மகள் உறவைத் துண்டு படுத்தி விட்டது.
‘பாவம் ரவி, பெரும்பாலான குழந்தைகள் அம்மா அப்பாக்களுடனிருக்கும் போது ரவிக்கும் அந்த உணர்வு வரும்தானே” சாந்தி தன் சினேகிதியை ஆறுதல் படுத்தச் சொன்னாள்.
“தகப்பன்கள் என்ற பெயரில் உப்புச் சப்பில்லாமல் சில மனிதர்கள் உறவைத் தொடர்கிறார்கள் என்று உணர்ந்து கொள்ள முடியாத வயது ரவிக்கு. அவனது தகப்பன் வித்தியாசமானவன். ஆனால் அந்தத் தகப்பனுடன் வாழும் நிலை ரவிக்கில்லை. அந்தக் குறையைத் தீர்க்க நான் எத்தனையோ தரம் முயன்று பார்த்திருக்கிறேன். ஆனாலும் சில வேளைகளில் எனது அப்பா எங்கேயிருக்கிறார்? எப்படியிருக்கிறார்? என்னைப் பார்க்க ஏன் என்றெல்லாம் என்கிறார் வரமாட்டேன் அவன் கேட்காமலில்லை”
எமிலி தன்னைப் பற்றி அதிகம் சொல்லிக் கொள்ளாதவள். சாந்தியும் தூண்டித் துருவி ஒன்றையும் கேட்பதில்லை. அவளாகச் சொல்வாள் என்று சந்தர்ப்பம் வரும்போது அவளாகச் நினைப்பாள்.
மழை நின்று விட்டது. வானம் வெறித்து சூரியன் இப்போதுதான் சோம்பல் முறித்தெழுந்துக் கொண்டு எழும்பும் கணவன்போல் மேகத்திரையை நீக்கிவிட்டு எட்டிப் பார்த்தான்.
சங்கர் எத்தனையோ சொல்லியும் சாந்தி தான் இருந்தவிடத்தை விட்டு நகர மாட்டேன் என்று சொல்லி விட்டாள். “நீங்கள் போய் ஏதாவது வாங்கிக் கொண்டு வாருங்கள்” தமயனிடம் சொன்னாள் சாந்தி.
அரைகுறை மனத்துடன் சங்கர் தெருவைக் கடந்தான். தெருவெல்லாம் இன்னும் மழையின் கொடுமை தெரிந்தது. அங்கும் இங்குமாகப் படிந்து கிடக்கும் நீர்க் குட்டைகளைக் கடந்து செல்லும் கார்கள் வருவோர் போவோரில் நீர் இறைத்துச் சென்றன.
“என்ன, உஷாவின் நிலைபற்றி டொக்டர் என்ன சொன்னார்” எமிலி சினேகிதியை அன்புடன் கேட்டாள்.
“தலையிற் பெரிய அடி, உணர்வில்லாமல் இருக்கிறாள். அத்துடன் முதுகிலும் பெலத்த தாக்கம், எப்படி அவள் நிலை சீரடையுமென்பது தங்களால் சொல்ல முடியாது என்று டொக்டர்கள் சொன்னார்கள்.”
“லண்டனிலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஹொஸ்பிட்டல் இது. எங்கள் குழந்தைகள் சரியான இடத்தில் தானிருக்கிறார்கள் என்று நம்புகிறேன்”
வாழ்க்கையை எதிர்த்துப் போராடப் பழகியவள் எமிலி. இந்த மாதிரியான கட்டங்களில் நிலைகுலையாமலிருக்கப் பழகியிருக்கிறாள். சாந்தியின் மனமே அலைகடலில் சிறுபடகாய்த் தழும்பிக் கொண்டிருந்தது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் பின்னேரம் ஐந்து மணியாகும். அதன்பின் ராஜன் வீட்டுக்குப் போக ஆயத்தம் செய்வான்.
சாந்தி சட்டென்று எழும்பினாள் “எமிலி அண்ணா வந்தால் நான் இவரின் ஒவ்ளீஸ் பக்கம் போய்விட்டேன் என்று சொல்”
எமிலியின் மறுமொழியை எதிர்பார்க்காமல் சாந்தி தெருவைக் கடந்தாள். ராஜனின் ஒவ்வீசுக்கு ஒன்றிரண்டுதரம் வந்திருக்கிறாள். எப்போதும் காரிற்தான் வந்திருக்கிறாள். இப்போது அண்டர் கிரவுண்ட் ரெயின் எடுத்துக் கொண்டு போவது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயமாக இருந்தது.
டாக்ஸியில் போவதானால் எவ்வளவு முடியும்? நல்ல காலம் கையில் கிரடிட் கார்ட் இருப்பது. தெருவைக் கடந்து காஷ் பொயின்டடில் கொஞ்சப் பணம் எடுத்துக் கொண்டாள்.
டாக்ஸி ஒவ்வீஸ் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. உஷாவை ஓபரேஷன் தியேட்டராற் கொண்டு வரும்போது அவளால் தனிமையாக எதையும் கிரகிக்க முடியாது. அவசர அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
டாக்ஸி ஒவ்வீசின் எதிர்ப்பக்கத்தில் நிற்கவும் ராஜன் ஒவ்வீசை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
யார் அவனை ஒட்டியபடி வரும் ஆங்கிலேயப் பெண்மணி? அவனை மிகவும் உரிமையுடன் தொட்டுப் பேசுகிறாளே யாரிது? புதிய றிசப்சனிஸ்ட் சாந்திக்குத் தெரிந்தவள். இந்தப் பெண் றிஸப்சனிஸ்ட் இல்லையே?
அத்தியாயம் – 4
ராஜன் வீட்டை விட்டு வெளிக்கிட்ட நேரத்திலிருந்து அதிசயமான விடயங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ராஜன் (நடராஜன்) அவனுடைய பதினெட்டாவது வயதில் லண்டனுக்கு வந்தவன்.
இலங்கையில் எழுபத்தி ஏழாம் ஆண்டுக் கலவரத்தில் இலங்கைத் தமிழர்கள் மிருகமாக வேட்டையாடப் பட்டபோது ஆங்கிலம் படித்த தமிழர்களில் பலர் ஆயிரக் கணக்காக ஊரை விட்டு ஓடி விட்டார்கள்.
கொழும்பில் வசதியான குடும்பத்தில் பிறந்த ராஜனின் மேற்படிப்பை லண்டனிற் தொடரலாம் என்று அவன் தமக்கை எழுதியிருந்தாள்.
ஒரு சில வருடங்களுக்கு முன் ராஜனின் தமக்கை பிரமிளா கணவருடன் இங்கிலாந்து வந்திருந்தாள். கணவரும் மனைவியும் டொக்டர்கள். மிகவும் கவனமாகத் தங்கள் குடும்பத்தைப் பார்ப்பவர்கள்.
இனி இலங்கையில் தமிழர் நிம்மதியாக வாழ முடியாது என்று முடிவு கட்டிய பலரில் நடராஜனின் குடும்பமும் ஒன்று.
எண்பதாம் ஆண்டில் – பதினெட்டாவது வயதில் லண்டன் மாநகரிற் காலடி எடுத்து வைத்தான் ராஜன்.
கொழும்பில் எத்தனையோ சாதிகளுடன் வாழ்ந்திருந்தாலும் லண்டனுக்கு வந்ததும் உலகத்து இனங்களில் அத்தனை முகத்தையும் சந்திப்பது அவனுக்குப் பிரமையாயிருந்தது. தமக்கையின் கட்டளைப்படி படிப்பில் கண்ணும் கருத்தும் செலுத்தினான் ராஜன்.
சென்ரல் லண்டன் கொலிச் ஒன்றில் ‘ஏ’ லெவலை முடித்துக் கொண்டு யூனிவர்சிட்டிக்கு இருபதாவது வயதிற்காலடி எடுத்து வைத்ததும் தமக்கையும் மைத்துனரும் ஸ்கொட்லண்ட் போய் விட்டார்கள்.
லண்டன் யூனிவர்சிட்டிகளில் ஒன்றிரண்டு மாணவர்களின் உறவும், பலதரப்பட்ட மறுசாதியினரின் உறவும் தமிழ் ராஜனின் உலகை விரியப் பண்ணியது.
“என்ன செய்தாலும் வெள்ளைக்காரியை மட்டும் பார்த்துவிடாதே” மைத்துனர் எத்தனையோ தரம் எச்சரித்திருக்கிறார்.
“கெதியாயப் படிப்பை முடித்து விட்டு ஊரிற் போய் நல்ல வசதியான பெட்டை ஒன்றைப்பார்” தமக்கையின் அறிவுரை இது.
ஆங்கிலேயர்களைப் பற்றி அவ்வளவு பயமிருந்தால் – அல்லது அருவருப்பிருந்தால் ஏன் லண்டனுக்கு ஆசிய நாட்டுப் படித்த மனிதர்களிற் பலர் பதறி அடித்துக் கொண்டு வருகிறார்களாம்?
“ஏய் பாக்கி ஏன் எங்கள் நாட்டை நாற்றம் செய்ய வந்தாய்” ஒரு மொட்டைத் தலை ஆங்கில வாலிபன ராஜனின் முகத்திற் காறித் துப்பினான்.
மாலை மயங்கிய நேரம். உலகம் பனிமழையில் நனைந்து கொண்டிருந்தது. வீதியிலுள்ள மனிதர்கள் விழுந்தடித்துக் கொண்டு தங்கள் வீடுகளுக்கோ அல்லது விடுதிகளுக்கோ விரைந்து கொண்டிருந்தார்கள். 1984 ம் ஆண்டில் திரும்பிய இடமெல்லாம் ஆங்கிலேயப் பிச்சைக்காரர். கை நீட்டிப்பிழைக்காத காலமது. ஒருத்தன் ராஜனை ஒரு பந்துபோல் உதைத்தான். அடுத்தவன் நெஞ்சில் ஏறி மிதித்தான். இன்னொருத்தன் இவர்களின் செய்கையைப் பார்த்து ரசித்தான்.
“ஐயோ எனது சக மாணவர்களைக் கொலை செய்கிறார்களே” ஸேரா வில்ஸன் கூக்குரல் போட்டிருக்காவிட்டால் அவன் அன்று கொலை செய்யப்பட்டிருக்கலாம்.
“இனம் தெரியாத ஒரு ஆசிய மாணவனின் உடல் லண்டன் யூனிவர்சிட்டியருகில்” கண்டெடுக்கப் பட்டது என்று அடுத்த நாள் லண்டன் பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கலாம்.
இந்த ஆசிய மாணவனைக் கொலை செய்தவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆறுமாத காலத்தின் பின் பொலிஸார் அறிக்கை விட்டிருக்கலாம்.
உலகம் மங்கிய வேளையில் உணர்வு இழந்து கொண்டிருக்கும் வேளையில் ஸேரா வில்ஸனின் கருணை முகம் தெய்வீகமாகத் தெரிந்தது.
“எனது இனத்தவர்கள் செய்த கொடுமைக்காக உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்” அவள் கலவரத்துடன் சொல்லிய அந்த வார்த்தைகள் எங்கேயோ கிணற்றுக்குள் கேட்பது போலிருந்தது.
அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் கண்விழித்தபோது அவனது கல்லூரிப் பேராசிரியர்களும் அவளும் அவனுடைய சினேகிதர்களும் கட்டிலைச் சுற்றியிருந்தனர். “ஸேரா சரியான நேரத்தில் உன்னைக் காப்பாற்றியிருக்கா விட்டால் என்ன நடந்திருக்குமோ தெரியாது” பேராசிரியர் தங்கள் நன்றியைச் ஸேராவுக்குச் சொன்னார்கள்.
ஸேராவை யூனிவர்சிட்டி மாணவர் மண்டபத்தில் எத்தனையோ தரம் கண்டிருக்கிறான் ராஜன். அவன் சட்டப் படிப்பு டிப்பார்ட்மெண்ட் அவள் கல்லூரியின் அடுத்த கட்டிடத்திலுள்ள பைன் ஆர்ட் டிப்பார்ட்மெண்ட்டில் படிக்கிறாள்.
மூன்றாம் வருட மாணவர்களின் கலாச்சாரக் கண்காட்சி நடந்தபோது ஸேராவின் ஓவியங்கள் எத்தனையோ பேரின் பாராட்டைப் பெற்றது. modern artist ஆகப் பிரபலம் எடுக்கப் போகிறாள் என்று எத்தனையோ பேர் அவர்களைப் புழுகியிருக்கிறார்கள்.
“என்னைக் காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி'” அவன் முனகிய படி சொன்னான். அவள் சிரிப்பு அவன் வீட்டு மல்லிகையை ஞாபகப் படுத்தின.
அவளின் பச்சை கலந்த கறுப்புக் கண்கள் எகிப்திய பூனைச் சிற்பத்தின் அதியற்புத சக்தியை ஞாபகப் படுத்தின. நீண்ட கூந்தல் பனியற்ற மேகத்தில் படம் போடும் மேகக் கூட்டத்தை மனத்தில் வரைந்தது.
கண்ணியமான அந்தப் பார்வை அவளிடம் ஒரு பிடிப்பை ஏற்படுத்தி விட்டது.
அடுத்த நாள் தமக்கையும் மைத்துனரும் ஸ்கொட்லாந்திலிருந்து ஓடோடி வந்தனர். அன்றைக்கு ஸேரா நிறைய சிவப்பு ரோஜாக்களுடன் ராஜனைப் பார்க்க வந்திருந்தாள்.
“யாரிந்தப் பெண்” பிரமிளாவின் கண்களிற் சந்தேகம்,
“எனது யூனிவர்சிட்டியில் பைன் ஆர்ட் பட்டப் படிப்பை படித்துக் கொண்டிருக்கிறாள்.”
“ஏன் கண்டவர்களெல்லாருடனும் கதை வைத்துக் கொண்டிருக்கிறாய்”
“அவள் கண்டவள் யாரோ இல்லை. கயவர்களிடமிருந்து என் உயிரைக் காப்பாற்றியவள்”
“சரி சரி டிஸ்சார்ஜ் பண்ணி விட்டு வீட்டுக்கு வா. ஹொஸ்பிட்டலில் இருக்க வேண்டும் என்று ஒன்றுமில்லை”
தலைக் கட்டுடன் ஸ்கொட்லாண்ட் போய்ச் சேர்ந்தான் ராஜன்.
அக்காவின் மனப்போக்கை அவன் அறிவான். லண்டனுக்கு வந்த நாளிலிருந்து ‘ஒரு நல்ல தமிழனாக’ வாழ வேண்டுமென்று சொல்லிக் கொண்டேயிருக்கிறாள்.
எங்கள் ‘கலாச்சாரத்தைப்’ பேண வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். கொழும்பில் இருக்கும்போது பக்கத்து வீட்டு பறங்கியர்களுடனும் முன் வீட்டு முஸ்லீம்களுடனும் ஆங்கிலத்தில் பேசியவள், பின்வீட்டுப் பெண்மணிக்குச் சிங்களம் தவிர ஒரு மொழியும் தெரியாதென்ற படியால் புன்முறுவலைத் தவிர ஒரு சொற்களையும் பரிமாறிக் கொள்ளாதவள்.
77ம் ஆண்டுக் கலவரத்தில் தமிழர்களுக்கு உதவி செய்தால் தங்களுக்கும் அடிவிழும் என்று பயந்தார் பறங்கியர்கள், முஸ்லீம்கள். இவர்களை உடனடியாக வீட்டைக் காலி செய்து விட்டு யாழ்ப்பாணம் போய் உயிரைக் காப்பாற்றச் சொல்லப் புத்திமதி சொன்னார்.
பின் வீட்டு மிஸ்டர் ஜெயசிங்கா இவர்களைத் தன் வீட்டுக் கழைத்துச் சென்று பாதுகாத்தார்.
மற்ற மனிதர்களுடன் கலந்து பழகாமல் அவர்களின் மொழி, கலை, கலாச்சாரங்களை உணர்ந்து கொள்ளாமல் “தமிழ்ச்’ சுயமை என்ற குறுகிய உலகத்துக்குள் வாழ்வதுதான் கலாச்சாரம் என்பது டொக்டர் பட்டம் பெற்ற அக்காவின் கருத்து.
மெடிகல் கொலிச்சில் உடம்பை வெட்டி, உதிரத்தைப் பரிசோதித்து, நிணநீரின் கெமிக்கல் தன்மையை ஆராய்ந்த பிரமிளாவுக்கு இந்த உலகில் கடவுளாற் படைக்கப்பட்ட மனித இனத்தின் பல தரப்பட்ட நிறம், கலை, மொழி, கலாச்சாரத்தின் பரிமாணங்களை யறிந்து கொள்ள அக்கறையில்லை.
ஸ்கொட்லாந் போயிருந்தபோது அவன் அக்கா நினைத்ததுபோல் “குழந்தையல்ல.” அவனுக்கு வயது இருபத்தி மூன்று. மூன்றாம் வருட சட்டப் படிப்பு மாணவன். சட்டக் கல்லூரியில் இதுவரை ‘ஆசிய’ மாணவர்களுடன் மட்டும் பிணைத்துக் கொண்டிருந்தான்.
இப்போது தனது வயது வளர வளர அறிவின் பல்வேறு பரிமாணங்களையும் அனுபவ ரீதியாக ஆராய முற்பட்டான். எதையும் பற்றித் தீவிரமாக ஆராயும் மனம் அவனுக்கு இயற்கையாகவே இருந்தது.
அக்காவின் ‘குறுகிய’ எல்லைக்கப்பால் மனிதர்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம். சினேகிதமாக இருக்கலாம், ஆத்மீகமான அன்பின் வளர்ச்சிக்கு இந்த உறவுகள் தேவை, இன்றியமையாதது என்று அவனுக்குத் தெரியும்.
தலையிற் பட்ட காயம் ஆறியபோது மனத்தில் பல வடுக்கள் தோன்றின. அக்கா போன்றோரின் சமூகப் பார்வைக்குப் பின்னால் படிந்திருக்கும் காரணங்கள் சுயநலத்தின் அடிப்படையில் வளர்ந்தது என்று தெரியும்.
தன்னால் லண்டனுக்கு வரவழைக்கப்பட்ட தம்பி தன்னுடைய சொற் கேட்டுத் தன்னைத் படுத்துவதையே பிரமிளா விரும்புகிறாள் என்று அவனுக்குத் திருப்திப் தெரியாததல்ல.
லண்டனிற் படித்தாலும் கலை கலாச்சாரங்களை மறத்தல் கூடாது என்று அடிக்கடி அவள் சொல்வது ஏன் என்றும் விளங்கியது.
“ராஜன் இளம் வயதில் எத்தனையோ யோசனைகள் வரத்தான் செய்யும். அனுபவிக்கிற காலத்தில் அனுபவிக்கத்தான் தோணும். சேறு கண்ட இடத்தில மிதி, தண்ணீர் கண்ட இடத்தில கழுவு என்று ஆண்களுக்கு ஏன் சொல்லப் பட்டிருக்கிறது என்றால் ஆண்கள் உணர்ச்சிகளை அடக்க முடியாதவர்கள். அவர்கள் தற்செயலாக விடும் தவறுகளை உலகம் கண்டும் காணாததுமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்” பிரமிளாவின் கணவரின் இந்தச் சொல் அவனுக்கு அருவருப்பையுண்டாக்கின. “இப்படி எளிய குணமுள்ள மனிதன் என்னவென்று ஒரு நோயாளிப் பெண்ணைப் பாரபட்சமற்ற கண்ணோடு பார்ப்பான்” அவன் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.
யூனிவர்சிட்டி தொடங்கியபோது ஸேரா வில்ஸன் அவளது ஆர்ட் எக்ஸிபிஷனுக்கு ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தாள்.
அவளுடன் நெருங்கிப் பழகாதே என்று தமக்கை பிரமிளா சொன்னதும் ஞாபகம் வந்தது.
ஆனால் ஸேராவுக்கோ யாருடனும் நெருங்கிப் பழக நேரமிருக்கவில்லை. இவன் தன்னை விட்டுத் தூர நிற்கிறான் என்பதையும் அவள் கண்டு கொள்ள நேரமில்லை.
ராஜன் வீட்டுக்கு வரவும் டெலிபோன் அடிக்கவும் சரியாயிருந்தது.
“என்ன ராஜன் இன்னும் ஆஸ்பத்திரிக்கு வராமல் வீட்டில் நிற்கிறீர்கள்” சங்கரின் குரலிற் தெரிந்த பதட்டம் ராஜனுக்கு விளங்கவில்லை.
“ஆஸ்பத்திரிக்கா ஏன்”
“அட கடவுளே, இன்டைக்கு ரேடியோ, டெலிவிஷன் ஒன்றுமே கேட்கவில்லையா”
“…” ராஜனுக்குப் பேச்சே வரவில்லை.
“ராஜன், உஷாவும் மற்றக் குழந்தைகளும் போய்க் கொண்டிருந்த பஸ் வண்டி ஒரு லொறியில் மோதிக் குழந்தைகளுக்குப் பலத்த காயம். மத்தியானத்திலிருந்து உங்களைக் கண்டுபிடிக்கத் தேடிக் கொண்டிருக்கிறோம். சாந்தி உங்களைத் தேடி ஒவ்வீசுக்கு வந்தாளே அவள் இப்போது எங்கே”
ராஜனுக்கு எல்லாம் திகைப்பாக இருந்தது. தனது வாழ்க்கையில் இன்றைக்கு ஒரு மறக்க முடியாத நாள் என்பது காலையில் ஒன்பது மணிக்குச் ஸேராவை அண்டர்கிரவுண்ட் ரெயினிற் சந்தித்த போது தெரிந்தது.
அந்தச் சந்திப்பை எப்படிச் சாந்திக்குச் சொல்வது என்று அவனுக்குத் தெரியாது என்று திண்டாடிக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது இன்னும் ஏதோ அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனவே.
“உஷாக் கண்ணுக்கு என்ன காயமோ” அவன் மனம் பதறியது. சாந்தி ஒவ்வீசுக்கு என்னைத் தேடி வந்தாளாமே எத்தனை மணிக்கு வந்திருப்பாள்? ஸேராவுடன் என்னைப் பார்த்திருப்பாளா? புதிதாக வேலைக்கு வந்திருக்கும் றிஸப்ஸனிஸ்ட் என்ன சொல்லியிருப்பாள்? காலையில் வேலைக்கு வந்த அடுத்த கணமே அவர் யாரோ ஒரு பெண்ணுடன் வெளியில் போய் விட்டார் என்று சொல்லியிருப்பாளா?
அவனுக்குக் கையும் ஒடவில்லை. காலும் ஓடவில்லை. பத்து வருடத் திருமண வாழ்வில் உல்லாசமாய்ப் போய்க்கொண்டிருந்த படகு இப்போது இருட்டில், மழையில், இடியில் அகப்பட்டு ஏதோ ஒரு பெரும் பாறையில் சிக்கி உடைபட்டுச் சிதறுவதை அவன் மனம் படம் போட்டது. “எனது குழந்தை உஷா விபத்தில் அகப்பட்டு உணர்வற்று ஆஸ்பத்திரியிற் கிடக்கிறாள். நானோ எனது பழைய வாழ்க்கையின் சிக்கலில் மாட்டுப் பட்டிருக்கிறேன்” ராஜனின் கார் அதி விரைவாக லண்டன் நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.
வழக்கமாக அவன் காரை ஸ்ரேசன் பக்கத்தில் பார்க் பண்ணி விட்டு ரெயினில் லண்டனுக்குப் போவான். பெரும்பாலான நகர்ப்புற வாசிகள் அப்படித்தான் செய்வார்கள்.
வீட்டுக்கு வந்ததும் வழக்கமாக அப்பா என்று அழைத்துக் கொண்டோடி வரும் அருமைமகள் உஷாவின் குரல் கேட்கவில்லை. பசியோடு வரும் கணவனுக்கு ருசிக்க ருசிக்கச் சமைத்து வைத்திருக்கும் சாந்தியின் சிரித்த முகம் வரவேற்கவில்லை. என்னடா ஒருத்தரையும் வீட்டில் காணவில்லையே யாரும் சினேகிதர்கள் வீட்டுக்கு போனார்களோ? டெலிபோன் அடித்ததும் இப்படித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
இப்போது மனம் எத்தனையோ குழப்பங்களுடன் போராட் கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.
காலையிலிருந்து காற்றும் மழையுமாயிருந்த சுற்றாடல் மாறி இப்போது பாதையெல்லாம் சரியான பிஸியாக இருந்தது. லண்டனிலிருந்து வீடு திரும்புவோர் கார்கள் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தன. லண்டனுக்குப் போவோரின் தொகை அவ்வளவாகவில்லை.
உஷாவுக்கு என்ன நடந்திருக்கும். கார் ரேடியோவைத் திருப்பி விட்டான். பின்னேர ஆறுமணி செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள். பாடசாலை பஸ் விபத்துக்குள்ளான செய்தி மிகவும் விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சில பத்திரிகையாளர்கள் விபத்தில் அகப்பட்ட குழந்தைகளின் தாய் தகப்பனை இன்டர்வியு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
“சாந்தி கண்ணீரும் கம்பலையுமாக இருப்பாள், ஒரு சின்ன விடயத்தையும் தாங்காத மனம் அவளுக்கு, அடக்கமான ஒரு குடும்ப அமைப்புக்குள் வளைய வந்த மனம் இப்போது இந்த அதிர்ச்சியை ஏற்றுக் கொள்ள என்ன மாதிரித் துடிக்குமோ”
கார் ரோட்டில் பறந்து செல்ல அவன் மனம் மனைவியிடம் பறந்து சென்றது.
அவளை முதற்தரம் சந்தித்தது ஞாபகமிருக்கிறது.
பத்து வருடங்களுக்கு முன் ஊருக்குப் போயிருந்தபோது தாய் தகப்பன் இவனைத் தங்களுடன் திருகோணமலைக்குச் செல்ல அழைத்தனர்.
இலங்கையில் சமாதானம் நிலவிய காலமது. இந்தியப் படை இலங்கைக்கு ‘சமாதானம்’ செய்து வைக்க வந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கைக்குப் போகப் பயந்திருந்த எத்தனையோ இலங்கைவாசிகள் ‘உல்லாசப்’ பிரயாணிகளாகப் போய் வந்து கொண்டிருந்தனர்.
யூலை மாதக் கடைசியில் தாயின் நச்சரிப்புத் தாங்காமல் இலங்கைக்குப் போனான். இவனுடைய வயதினை ஒத்த எத்தனையோ இளைஞர்கள் படிப்பு முடிந்ததும் ஊருக்குப் போய் ஒரு நல்ல விலையில் தங்களை ‘விற்று’க் கொள்ள ஓடிக் கொண்டிருந்தபோது இவன் ஊருக்குப் போகப் பயந்து கொண்டிருந்தான். ஊருக்குப் போனால் எப்படியும் தாய் தகப்பன் தனக்கு ஒரு கால்கட்டுப் போட்டு வைப்பார்கள் என்று தெரியும்.
ஸேரா எங்கே போனாள் என்று தேடிக் களைத்துப் போனவனுக்கு அம்மாவின் தொண தொணப்பு ஒரு பக்கம் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது.
பிரமிளா அக்கா எழுதியிருக்கலாம் இவனுக்கும் இவனுடன் படித்த ஸேரா என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்தது பற்றி.
அம்மா அப்பா அதுபற்றி ஒரு வரியும் எழுதவில்லை.
“Have a fun with white girls but always you must marry your own kind” என்ற இலங்கை, இந்திய மாணவர் சிலரின் தத்துவப்படி ஸேராவை இவன் தனது வேடிக்கைத் தோழியாக ஒரு நாளும் நினைக்கவில்லை.
அவளுடைய அழகிய மனத்தின் வெளிப்பாடு அற்புத சித்திரங்களாய்க் ‘கான்வசிலும்’ கடதாசிப் பேப்பர்களிலும் பிரதிபிம்பம் செய்யப்பட்டது.
நிற, இன, சமய, மொழிகளுக்கு அப்பாற்பட்டது ஒரு ஆத்மீகமான உறவு. அவளின் காருண்ய பாவம், கலையிலுள்ள ஈடுபாடு அவளிடம் இவனுக்கு மிகவும் ஒரு பிடிப்பை உண்டாக்கி விட்டது.
தன்னுடைய வயதுப் பையன்களுடன் ஸ்ருடன்ஸ் பார்களில் நேரத்தைச் செலவழித்தவனைத் தன் கலையுலகத்துக்கு அழைத்துச் சென்றாள் ஸேரா. லண்டனில் தியேட்டர்களில் உலகப் பிரசித்தி பெற்ற நாடகங்கள் மேடையேறினால் இவனையும் இழுத்துக் கொண்டு போவாள்.
லண்டனில் கிழக்கில் ஸ்ராட்போர்ட் றோயல் தியேட்டரில் கறுப்புக் கலைஞர்களின் அற்புதப் படைப்புக்களில் தன்னை மறப்பான் ராஜன்.
மியுசியம், ஆர்ட் தியேட்டர்ஸ் என்பன அவனால் இதுவரையும் முழுமையாக ரசிக்கப்படாமல் இருந்த பாகங்கள். கலையின் அரிய படைப்புக்களை நாடகங்கள் உருவில், சித்திரத்தின் பிரதிபிம்பத்தில், இசையின் ராகத்தில், நடனத்தின் நெளிவில், சிற்பத்தின் சிருங்காரத்தில் ரசிக்கச் சொல்லிக் கொடுத்தவள் ஸேரா.
அக்கா பிரமிளாவின் குறுகிய உலகமும் சினேகிதி ஸேராவின் பரந்த உலகமும் அவனுக்கு இரு துருவங்களாகப் பட்டன. கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில் அவன் ஒரு குழந்தையாய் உலகத்தை ரசித்தான்.
வெறும் சினேகிதம் இறுக்கமாகி அதன் எதிரொலி நான் ஸேராவைத்தான் திருமணம் செய்வேன் என்ற அவன் பிரகடனத்தில் முடிந்தபோது பிரமிளாவால் அதைத் தாங்க முடியவில்லை.
– தொடரும்…
– இந்த நாவல் 1997-1998 ஆம் ஆண்டுக்குரிய இலங்கை சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றது.
– வசந்தம் வந்து போய்விட்டது (நாவல்),முதற் பதிப்பு: டிசம்பர் 1997, குமரன் பதிப்பகம் , சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
June 29, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
June 29, 2026
சூடா இருக்க வேண்டிய மனசு
கல்பனா ராஜகோபால்
June 29, 2026
