ருத்ர தாண்டவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 5, 2025
பார்வையிட்டோர்: 1,836 
 
 

(இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் நிலையினை  எடுத்துச் சொல்கின்ற கதை)

“ஏங்க …இன்றைக்கு  எப்படியாவது வாட்ச் வாங்கிறலாம் .எனக்கே வெட்கமா இருக்கு. ஆபீஸ்ல தினம் மத்தவங்க கிட்ட டைம் கேட்க .இந்த பழைய வாட்சில் 20 நிமிடம் லேட்டா போறது.”

“தினம் உனக்கு இதே வேலையாப் போச்சு .வாட்ச் வாங்கணும். வாட்ச் வாங்கணும்னு. நீயே போய் ஈவினிங் வாங்கிட்டு வந்தா என்ன?. ஏன் என்னைய தொந்தரவு பண்றே.?”

“இதைப் போனவாரமே சொல்லியிருக்கலாமே. நானும் வரேன் போகலாம்னு சொல்லிட்டு இன்னிக்கி ஏன் இப்படி கத்துறீங்க? .எட்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணத்தப்போ வாங்கியது . இப்பதான் இதை மாத்தணும்னு நினைக்கிறேன். அதுக்கு கூட… உங்களுக்கு வர முடியாதா.?”

“சரி சரி விட்டா பேசிட்டே… போவ . இன்னிக்கு சாயங்காலம் பர்மிஷன் போட்டுட்டு நேர என் ஆஃபீஸ்க்கு வந்துரு. அங்கே இருந்து எச்.எம்.டி ஷோரூமுக்கு போகலாம்.”

ஒரு வழியா புவனாவும்  , பாலுவும் ஷோரூமுக்குள்  நுழைந்தனர். விதவித கைக்கடிகாரங்கள் புவனாவின் கண்ணைப் பறித்தது. ஏங்க…இது எப்படி இருக்கு?. நல்லா இருக்கா?

“ஏய்…வாட்ச் கட்டிக்க போறது நீ .ஏன் என் உயிரை வாங்குற .எது உனக்கு பிடிக்குதோ அதை எடுத்துட்டு கிளம்பு. அரை மணி நேரமா பார்த்துட்டு இருக்க. இன்னும் செலக்ட் பண்ணல. “

“நான் தான் கட்டிக்க போறேன். அதுக்காக நல்லா இருக்கா இல்லையா என்று ஒரு வார்த்தை சொல்ல கூடாதா? அப்போ எதுக்கு வந்தீங்க?“

பாலுவின் கண்களில் தீப்பொறி. புவனாவிற்கு  மூடு  அவுட். எதையோ எடுத்துக் கொண்டு கவுண்டரில் பணம் செலுத்தி விட்டு புறப்பட்டாள். 

“என்ன திருப்தியா” என்ற பாலுவின்  கேள்விக்கு, “திருப்தி என வேண்டி கிடக்கு. ஏதோ மணி சரியா காட்டினாப்  போதும்.“

இருவரும் நடந்து பஸ் நிலையம் வந்தனர். பஸ்ஸில் ஏறியவுடன் உட்கார இடம் கிடைத்தது. அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டாள் புவனா.. பஸ்ஸில் இடம் கிடைத்து, ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு,  நிமிர்ந்து பஸ்ஸில் உள்ளவர்களை நோட்டமிட்டாள். 

இரண்டு சீட்டு தள்ளி ஒருவர். எங்கேயோ பார்த்த உணர்வு. யாரது என வெகுநேரம் யோசித்தாள்.  சரியாக நினைவு வரவில்லை. ஆனால் நன்கு தெரிந்த முகம். இறங்குவதற்கு இன்னும் இரண்டு நிறுத்தங்கள் தான் இருந்தன.

“ஒரு நிமிடம்…” என கணவரிடம் சொல்லிவிட்டு , எழுந்து சென்று அந்த மனிதரை பார்த்து “எக்ஸ்கியூஸ் மீ”என்றாள்.

சிரித்தாள்  புவனா.

அந்த முகம் சற்று சுருங்கி, லேசாய் யோசித்து, புன்முறுவல் பூத்து, ரொம்ப ஆச்சரியப்பட்டு, “நீங்க புவனா. அமுதா ஃப்ரெண்ட். ஆம் ஐ  கரெக்ட்.”

எஸ் .எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. எதிர்பராமல் உங்களை பார்த்தது.  எத்தனை வருஷம் ஆச்சு, உங்களை பார்த்தது.? .எப்படி இருக்கீங்க?. அமுதா எப்படி  இருக்கா?. மேரேஜ்க்கு  அப்புறம் அவளை பார்க்கவே இல்ல. நீங்க எப்படி…இங்கே…?

இங்கே என் மாமா வீட்டுக்கு வந்தேன்.  ஒரு ஃபங்ஷனுக்காக.

அப்படியா?. நான் அடுத்த ஸ்டாப் இறங்கிடுவேன்.என்னோட வீட்டு அட்ரஸ்  இது. ஒரு நாள் வாங்க எங்க வீட்டுக்கு. ஊருக்கு போறதுக்கு முன்னாடி. 

நான் உங்கள பத்தி  என் கணவர் கிட்ட சொல்லி வைக்கிறேன். அதோ அந்த  கிரீன்  சர்ட்.  அவுங்க  தான். 

ஓகே என கூறியபடி ,அவளின் கணவரை பார்த்து சிரித்து, கை அசைத்தான். அவருக்கு எதுவும் புரியவில்லை.

அவரு   என் காலேஜ் ஃப்ரெண்ட் அமுதாவோட  அண்ணன்… எங்கே பார்த்த மாதிரி இருக்கேன்னு போனேன். அமுதா அண்ணனே தான். காலேஜ் படிக்கிற போது அவவீட்டுக்கு அடிக்கடி போவோம் பிரெண்ட்ஸ் எல்லாரும். அமுதாவும் மேரேஜ் ஆகி போயிட்டாளா. அவ அட்ரஸ் கூட இப்ப தெரியாது.   இங்கே ஏதோ ஃபங்ஷனுக்கு வந்தாராம். அதனால நம்ம வீட்டு அட்ரஸ் கொடுத்து இருக்கேன். முடிஞ்சா  வீட்டுக்கு வந்துட்டு போங்கன்னு சொல்லி இருக்கேன்.

பஸ்சை விட்டு இறங்கி, வீட்டுக்கு வரும் வழியில்,  ஏண்டி அவனை வீட்டுக்கு வரச் சொன்னே?.

சும்மாதான். என்ன இப்போ?  ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்திருக்கேன் .பஸ்ல என்னத்த பேசுவது?  அமுதாவும்  எப்படி இருக்கான்னு ஒன்னும் தெரியல .பார்த்ததால பார்மாலிட்டி வரச் சொன்னேன். 

இல்லை ..எதுக்கு தேவையில்லாம…  வீட்டுக்கு வந்துகிட்டு. 

ரொம்ப அலட்டிக்காதிங்க. அவர்  வந்தாலும் தான் வருவார். எதுக்கு இத போய் பெருசா பேசிட்டு. உங்களுக்கு தெரிஞ்சவங்க மட்டும் தான் வீட்டுக்கு வரணுமா? எனக்கு தெரிஞ்சவங்க வரக்கூடாதா?

ஏய்.. நான் அப்படியா சொன்னேன்.? 

வேற என்ன? ஏதாவது செலவு ஆகும்னா. வந்தா ஒரு கப் காபி கொடுப்பேன். வேறு ஒன்றும் கொடுக்க மாட்டேன். போதுமா? கவலைய விடுங்க. 

வீடு வந்து இரவு வேலை முடித்து, தூங்கி, காலை மணி ஐந்திற்கு எழுந்து பம்பரமானாள் புவனா.  சமைத்து, கிச்சன் கிளின் செய்து, எல்லாருக்கும் லஞ்ச் பேக் பண்ணி,  தானும் ரெடியாகி ஒன்பது மணிக்கு பஸ் பிடித்து ஆபீஸ் போனாள். குழந்தைகள் பள்ளி சென்றனர். மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய போது,  வீட்டுக்குள் யாரோ பேசிக் கொண்டிருப்பது கேட்டது. யாராயிருக்கும் என்று ஆச்சரியத்துடன் நுழைந்தாள் புவனா.. 

வந்திருப்பது அமுதாவின் அண்ணன்  என்பது தெரிந்து கொஞ்சம் ஆச்சரியப்பட்டாள்.பரவாயில்லையே நான் சொன்னதை பொருட்படுத்தி வந்திருக்காரே. 

“ஹலோ வாங்க.  வந்து  ரொம்ப நேரம் ஆச்சா.?”

சொல்லிவிட்டு கணவரை பார்த்தாள் புவனா. அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை. 

“அம்மா அப்பா எப்படி இருக்காங்க? அமுதா  எப்படி இருக்கா.?  எங்க இருக்கா?    அவ அட்ரஸ்சே தெரியாது.” 

“சேலத்துல இருக்கா . உங்க அட்ரஸ்சை அவளிடம் கொடுக்கிறேன்.”

“சரி பேசிட்டு  இருங்க. காபி கொண்டு வரேன்.” உள்ளே போனாள்.

காபி குடித்துக் கொண்டே,  உங்களை எதிர்பார்க்காமல் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.  அமுதாவிடம் சொல்கிறேன்.  அவளை உங்களுக்கு லெட்டர் போடச் சொல்கிறேன். இதுதான் அவ அட்ரஸ் .நீங்களும் லெட்டர்  போடுங்க.  கணவரிடம் கைகுலுக்கி  எழுந்தார்.( அது கைபேசி வருவதற்கு முந்தைய காலம்)

நீ லெட்டர் போடு. அவளும் லெட்டர் போடுவா.  எதுக்கு இந்த தேவையில்லாத உறவு எல்லாம்.  பெரிய ஃப்ரெண்ட்ஷிப். ஒரு கனல் பார்வையை வீசிவிட்டு ,போய் படுத்துக் கொண்டார் புவனாவின் கணவன். 

புவனா இரவு வேலைகளை முடித்து, குழந்தைகளை படிக்க வைத்து, சாப்பிட வைத்து விட்டு,  இவரை சாப்பிட அழைத்தாள். 

எனக்கு வேண்டாம். ஒரே  தலைவலி!!

தலைவலி  தலையிலா?  மனதிலா?  வலி இருக்கட்டும் .வாங்க சாப்பிட. 

வேண்டாம்ன்னு ஒரு தடவை சொன்னா புரியாதா?

இந்தா பாருங்க…சமைச்சதெல்லாம் வேஸ்ட்டா போயிடும். வாங்க. 

அப்போ வேஸ்ட்டா போயிரும்  என்றுதான்  என்னை சாப்பிட கூப்பிடுறியா?  ஏன் இப்ப வந்துட்டு போனானே தடியேன், அவனுக்கு சோறு போட்டு விருந்து வைத்து அனுப்பி இருக்க வேண்டியதுதானே? இவளுக்கு தெரியும் இவர் சாப்பிட வராததற்கு என்ன காரணம் என்று. எரிச்சலுடன் இருந்த புவனாவிற்கு கணவன் முனகியது இன்னும் ஆத்திரத்தை கிளப்பியது…

சும்மா பஸ்ல போனவனை கூப்பிட்டு, பேசி சிரிச்சு, வீட்டுக்கு வரச் சொல்லி, எதுக்கு இதெல்லாம்?  யாரோ போறான். எதுக்கு தேவையில்லாத இந்த உறவெல்லாம். இப்படி கண்டவனை வீட்டிற்கு கூப்பிடுற வேலையெல்லாம் உன் அப்பன் வீட்டோட விட்டுட்டு வந்து இருக்கணும். இங்க கண்டவனும் வருவதை நான் அலோ பண்ண மாட்டேன். குடும்பப் பெண்ணா அடக்க ஒடுக்கமா இருக்கிறதை விட்டுட்டு பெத்து வளர்த்திருக்கான் பாரு. பொட்டச்சிய எவ்வளவு லட்சணமா.?

இந்தா பாருங்க, எங்க அப்பாவை பத்தி, ஏதாவது சொன்னீங்க எனக்கு கெட்ட கோபம் வரும். 

என்னடி கோவம் வரும்.. என்ன கோவம் வரும் ? உன் கோபம் என்னைய என்ன செய்யும் . அப்பனை பற்றி சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வருதோ. தெரியாது உங்க அப்பன பத்தி. உங்க குடும்பத்தை பத்தி .எல்லாம் மறந்துட்டேன்னு நினைச்சிட்டியா ? 

விஷயம் எங்கோ திரும்புவதை உணர்த்தாள் புவனா.  எனினும் கேட்டாள் என்ன சொல்ல வர்றீங்க..?

கல்யாண வீட்டிலேயே தெரிஞ்சுக்கிட்டேனே உங்க குடும்பத்தை பத்தி. கல்யாண வீட்டுல பார்த்தா ஒரே பசங்க கூட்டம் .யாருனு விசாரிச்சா புவனாவோட  காலேஜ்ல படிச்ச பசங்கன்னு ரொம்பவும் சாதாரணமா சொல்லிட்டு போறான் உங்க அப்பா. எந்த அப்பனாவது இப்படி காலேஜ் பசங்களை எல்லாம் இப்படி பொண்ணோட கல்யாணத்துக்கு அழைப்பானா ? நீ தான் அவங்களை அழைத்து இருந்தாலும் உங்க அப்பா பெர்மிஷன் கொடுத்திருக்கானே. இது போதாது உன் குடும்ப இலட்சணத்தை காட்டுறதுக்கு. 

புவனாவிற்கு ஆத்திரம்  ஆத்திரமாய் வந்தது.  மணி இரவு ஒன்பது மணி. இந்த நேரத்துல இவனோட என்ன வாக்குவாதம் பண்ணறது.?

இப்ப பாரு… இவன் வீட்டுக்கு வந்தாலும் தான் வருவான்னு சொன்னாய்.. வந்துட்டான்.  இன்னொரு தடவை மாமா வீட்டுக்கு வரும்போது வருவான். இது தேவையா.?

என்னவோ சொன்னேன் வந்துட்டேன். என்ன இப்போ குடி முழுகி போச்சு? போன வருஷம் உங்களோட காலேஜ்ல படிச்சவள்ன்னு  சொல்லிட்டு எவளோ வந்து ரெண்டு மணி நேரம் கதை அளந்துட்டு போகல. ஏன் வந்தா அவ.? சும்மா தானே வந்தா .நான் ஏதாவது கேட்டேனா உங்கள.? ஆனால் இந்த ஆம்பளைங்களுக்கு மட்டும் ஏன் இப்படி  புத்தி போகுதோ!

ஆம்பளை புத்தி எப்படியும் இருக்கட்டும் .பொம்பள புத்தி ஒழுங்கா இருந்தா தான் வீடு உருப்படும்.

இப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்படி குதிக்கிறீங்க?

இப்ப பண்றது அப்போ பண்ணியது எல்லாம் சேர்த்து தான் கோபம் வருது. அன்றைக்கு என்னடானா, உன் ஆபீஸ்ல எவளுக்குகோ  கல்யாணம்ன்னு 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அவள் ஊருக்கு போகணும் என  ஒத்த கால்ல நிக்கிற நீ .எங்கே எவளுக்கு கல்யாணம்,  எவனுக்கு கருமாதி எல்லாம் உனக்கு நினைவிருக்கும் .வீட்ல எந்த பொருள் எங்கே வச்சோம்னு நினைவிருக்காது. பொம்பளைக்கு முழு கவனமும் புருஷன் மேலையும், புள்ள மேலையும் ,வீட்டு மேலயும் தாண்டி இருக்கணும். 

எதுக்கு இப்போ சம்பந்தமில்லாத விஷயங்களை இழுக்குறிங்க. ச்சீ.. வீடா இது.  நீண்டா குற்றம், உக்காந்தா  குற்றம் என்கிற  கதையாவுல  இருக்கு.

ஆமாண்டி நிண்ட  குத்தம், உட்கார்ந்த குத்தம் தாண்டி. எல்லாத்துலயும் பொம்பளையா நடந்துக்க .நிக்கிறதுலயும் ஒரு பணிவு வேண்டும். உட்கார்வதிலும் ஒரு அடக்கம் வேணும். நானும் தான் எம். ஏ படிச்சிருக்கோம். சம்பாதிக்கிறோம் என்கிற  திமிரு உனக்கு. அதுதான் இப்படி பேச வைக்குது. வேற என்ன.? 

இதற்கு மேல் எந்தவிதமான பேச்சையும் கேட்கிற சக்தி புவனாவிற்கு  இல்லை . பேச பேச வார்த்தை பரிமாற்றங்கள் நீண்டு கொண்டு தானே போகிறது. ராத்திரி நேரத்தில பக்கத்து வீட்டுக்கெல்லாம் கேட்க போகுது..ச் சே…”இப்போ சாப்பிட வர்ரீங்களா இல்லையா?” புவனாவின்  இந்த கேள்விக்கு “எல்லாத்தையும் எடுத்து குப்பையில கொட்டு” என பதில் வந்தது .

பெருமூச்சுடன் சோபாவில் அமர்ந்தாள் புவனா. மணி இரவு 10. குழந்தைகள் அயர்ந்து தூங்கினர். பக்கத்து வீட்டில் எட்டு மாத பெண் குழந்தை அழுது ஓய்ந்தது .சில தொலைக்காட்சி  ஒளிபரப்பு ஓசை தவிர , நல்ல நிசப்தம் . புவனாவின்  மனது பலத்த சிந்தனையில் மூழ்கி விட்டது. 

ஏன் இவர் இப்படி.?  சிலபேர் இப்படித்தான். இவர்களுக்கு தன்  மனைவி  இப்படித் தான்  இருக்கணும் என்ற ஆணவம்? பெண்களுக்கென்று  தனித்தன்மை, தனி சிந்தனை, தனி விருப்பம் இருக்கக் கூடாதா ?கணவர் சொல்வதற்கு  ,தஞ்சாவூர் பொம்மையா தலையாட்டனுமா? கணவருக்கு அடங்கி, ஒடுங்கி,  இருக்க வேண்டுமா?  அப்போதுதான் குடும்பம் அமைதியா ,சந்தோசமா இருக்குமா ? சில ஆண்கள் மனது அப்போதுதான் அமைதி பெறுமா?

அப்போ நான் உயிருள்ள மனுஷியா இருக்கக் கூடாது. உயிரற்ற ஜடமா இல்ல இருக்கணும். ஜடமான  பொண்ணைத்தான் பல ஆண்கள் விரும்புகிறார்களோ?. ஆண்களை விட பெண்கள் எந்த வகையில் குறைச்சல். உடல் ரீதியாக அவர்களுக்கு பலம் இருக்கு என்கிற ஒரே ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு ,இப்படி ருத்ர தாண்டவம் ஆடுகிறார்களே. நமக்கு உள்ள மனித உணர்வுகள் தானே அவளுக்கும் இருக்கும் என்பதை ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்ப்பார்களா? 

அந்தக் காலத்தில்  பெண்கள் வீட்டோடு இருந்தார்கள். கணவருக்கு எல்லாம் பார்த்து பார்த்து கவனிச்சாங்க. கணவனை ஏன் எதற்கு என்று ஒன்றும் கேட்க மாட்டார்கள். அதனால ஆண்கள் தன் இஷ்டப்படி ருத்ர தாண்டவம் ஆடினர் .இப்போ பெண்கள் படிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்சு உலக விஷயங்கள் எல்லாம் அவர்களுக்கும்  தெரிய ஆரம்பித்துவிட்டது .மனரீதியா ஆண்களை விட பெண்கள் உறுதியாக இருக்காங்க .இப்போதுதான் உயிருள்ள மனுஷியாய் மாற ஆரம்பித்து உள்ளார்கள் .ஆனால் இந்த ஆண்கள் இப்போதும் அந்தக் காலத்து வீட்டுப் பெண்களைப் போல , தனக்கு அடக்கி போகும் தன்மையான பெண்களையே விரும்புகிறார்களே.  ஆண்கள் இரத்தத்தில் ஊறிப்போன சுயநலம்.  ம்…இது எந்த வகையில் நியாயம்? 

பாரதி படைத்த புதுமைப் பெண்ணைப் போல தன் மனைவி இருக்கணும் என  எத்தனை ஆண்கள் ஆசைப்படுகிறார்கள்? ஆனால் பாரதியாரைப் பற்றி மணிக்கணக்கில் புகழ்ந்து பேசுவார்கள்.  மனைவியும் தன்னைப்போல் வேலைக்கு செல்லும் நிலையில் , வீட்டு வேலைகளை ஓரளவாவது பகிர்ந்து கொள்ளும் ஆண்கள் எத்தனை பேர்? எப்போது இவர்கள் மனைவியை புரிந்து கொண்டு , தான் என்ற ஆளுமை உணர்வைத் தவிர்த்து, அவர்களுக்கு நல்ல நண்பர்களாய் மாறுவார்களோ அப்போதுதான் குடும்பம் குதுகூலமாகும்.

ஆம்..இந்த இருபதாம் நூற்றாண்டில்.. பெண்கள் புள்ளைய கவனிக்கணும் .புருஷனை கவனிக்கணும். வீட்டை கவனிக்கணும். வீட்டுக்காரருக்கு சமமா சம்பாதிக்கணும். அவருக்கு அடங்கியும் போகணும். 

இந்த நூற்றாண்டின் இறுதியில் பெண்களின் நிலைமை எப்படி இருக்கும்? சொல்ல முடியாது நாட்டை  ஆளுகின்ற பொறுப்பும் இப்பவே பெண்கள் கைக்கு வந்தாச்சு.. இனி பெண்கள் எல்லாம் தன்னால்தான் முடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வுடன், பெண் சிங்கங்களாய், பிரியதர்ஷினிகளாய்  வீறுநடை போடலாம். ஆண்கள் ஆடிய ருத்ர தாண்டவத்தின் விளைவு இதுவாக இருக்கலாம்.

இப்படியாக ஏதேதோ புவனாவின் மனதில் ஆயிரக்கணக்கான எண்ண அலைகள் வந்து மோதி , எதற்கும் பதில் கிடைக்காமல்,  அசதியில் கண்ணயர்ந்து விட்டாள்.

ஆழ்ந்த தூக்கத்தில் புவனா….  இது என்ன இப்படி.? நிஜமா? எங்கும் மகிழ்வான  பெண்கள். மகிழ்வான குடும்பம் .நிமிர்ந்த நன்நடை, நேர்கொண்ட பார்வை ,நிமிர்ந்த ஞானச் செருக்கு கொண்ட பெண்கள்.  பெண்களை  நிஜமாய் புரிந்து கொண்ட கணவன்மார்கள்.    பெண்ணை தனக்கு சமமாய் பாவிக்கும் ஆண்கள். உண்மையான நேசம் . என்ன இது எப்படி.?  சொர்க்கமாய் தெரிகிறதே.

தூக்கத்தில் திடீரென்று எழுந்த புவனா, ச்சே இது கனவா?  என பெருமூச்சு விட்டாள்.  ஆம் இந்த கனவு நனவாகும் நாள் நிச்சயம் வெகு தொலைவில் இல்லை என்ற உறுதியுடன் மீண்டும் தூங்கிப் போனாள் புவனா.

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *