ரிக்க்ஷா நண்பர்





சித்திரை வீதி வங்கி வாசலில் ரிக்க்ஷா சத்தம் கேட்டால் இரண்டு அர்த்தம். ஒன்று, இன்று பென்ஷன் தினம். அடுத்தது கிழவர் பாட்டியுடன் ஆஜர்.கணக்கு பிசகாத நியதி.
பாட்டி வாசலில் காத்திருப்பாள். ரிக்க்ஷாவில்தான் அமர்ந்திருப்பாள்.
“அவங்களை ஏன் சிரமப்படுத்தணும்.”
கிழவர் மெலிதாகச் சிரிப்பார்.
“பென்ஷன் பணத்துக்குச் சொந்தக்காரி அவதான். நான் ஜஸ்ட் பேரர்…”
இந்த வயசிலும் ப்ளீஸ்…
பாக்கெட் ரெடியாக எடுத்து வைத்திருப்பேன்.
“தேங்க்ஸ்!”
நிதானமாய் எண்ணி, தொகை சரி என்று உணர்ந்ததும் இன்னொரு “தாங்கஸ்.”
வியாட்நாம் வீடு சிவாஜி போல, வேறு வம்பு எதுவுமின்றி ஸ்டைலாய் திரும்பிப்போவார்.எழுபத்தைந்து வயது. ரிடையரான மறு மாதம் முதல் அதே ரிக்க்ஷா. ரிக்க்ஷாக்காரனும் கிழம். இன்னும் ரிடையர் ஆகாத கிழம்.
“பத்து ரூபா அவனுக்கு…”
“உங்க வயசு எழுபத்தைந்தா?”
“இதே ஜாஸ்தி. போதும். ஐயாம் ஹேப்பி. எப்ப வேணா ரெடி” என்பார் அலட்டாமல்.
பணம் தருவதற்குள் அந்த ஐந்து நிமிட இடைவெளியில் ஒவ்வொரு மாதமும் நிகழ்கிற உணர்வின்றி விட்டுப் போன இடத்திலிருந்து தொடரும்.
“என்ன பண்ணுவீங்க. இரண்டாயிரத்துல?”
“மருமகள் கையில ஆயிரம்… அப்புறம் எங்க மெடிசின்ஸ் ஐந்நூறு… பர்த்டே… மேரேஜ் டே… தீபாவளி, பொங்கல், கார்த்திகை.. இப்படி ஃபங்ஷனுக்கு ஆசீர்வாதம்…”
பட்பட்டென்று பதில் வரும்.
“ஒரு ரூபா சில்லறை.”
“வாசல்ல கீரைக்காரி… கட்டு மூணு ரூபாய். தினமும் பாட்டிக்குக் கீரை வேணும்.”
கேலியாய்க் கண் சிமிட்டுவார்.மடிப்புக் கலையாத லாண்டரி டிரஸ். தற் செயலாக ஒரு தரம் கோவில் மணல் வெளியில் பார்க்க, அப்போதும் அதே பளீர் ட்ரஸ்.
“ரிக்க்ஷாதான் சகிக்கவில்லை. ஆணி துருத்திண்டு. எப்ப டிரஸ்ஸைக் கிழிக்குமோ. ஆட்டோல வரலாமே…’
என்னை நேராகப் பார்த்தார்.
“ஸாரி… ஜென்டில்மேன்… பத்துப் பதினைஞ்சு வருஷமா வரான் . பொறுமையா வந்து நிதானமா கொண்டு விடறான். அவனை நிறுத்தறதுங்கிறது ‘ பைனலாத்தான்’. அப்புறம் நோமோர் பேஷன் விசிட்!”
“யூ வில் லிவ் லாங்.”
இதற்குண்டான பதில். எழுபத்தைந்து என்பது அதிகம் .”எப்ப வேணா ரெடி.”
எனக்கும் அவரைப் பிடித்திருந்தது. பிற வாடிக்கையாளர்களை மீறி, அவர் வரும் தினம் சற்று முன்னுரிமை தருவேன்.ஒரு ரூபாய் நாணயங்கள் நூறு எடுத்து வைப்பேன். அவர் திருப்தியுற்று நகரும் வரை லட்ச ரூபாய் டிபாசிட்காரன் கூட எனக்குப் பொருட்டில்லை.
“என் மருமகளுக்கு பென்சன் பணம்னா ஒரு அலட்சியம்” என்று ஒரே ஒரு தரம் வாய்தவறிச் சொல் விட்டதிலிருந்து அவர் மீது கூடுதலாய்க் கரிசனம்.
“நான் உன்னை ரொம்பவும் தொந்தரவு செய்கிறேனா?” என்றார் ஒரு தரம்.
தலை அப்படியே இலவம்பஞ்சு போல. நீண்ட மூக்கு. உதடுகளில் பிடிவாதம். தங்க ஃ பிரேமில் கண்ணாடி.
“நோ… நோ… ஏன் கேட்கறீங்க?”
“சும்மா ஜஸ்ட் லைக் தட்,”
பெஞ்சில் அமர்ந்திருப்பார். எதையும் கவனிக்காத மாதிரி அலட்சியத் தோற்றம். ஆனால் உள்ளுர நிமிடக் கணக்கு. அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள். பணத்துடன் வெளியேறிவிட வேண்டும்.
“ரிக்க்ஷால உட்காரருத்துக்கு முன்னால அவ கையில கொடுத்துருவேன். அவ இஷ்டப்பட்டாதான் எனக்கே ரிக்க்ஷா சவாரி.”
எத்தனை வயசானால் என்ன. மனைவியைக் கேலி செய்வது ஆண்களின் சுபாவம்.
“பீரோ நிறையப் பட்டுப்புடவை. எப்பா கட்டிக்கன்னு வைச்சிருக்காளோ… வாரத்துக்கு ஒரு தடவை எடுத்து வாசனை பார்ப்பா. பைத்தியம்… என் டிரஸ்… ரெண்டே செட். பனியன். ஷர்ட், வேஷ்டி… கிழிஞ்சாதான் அடுத்தடுத்து.”
நான் அவரருகில் வந்து நிற்பது உள்ளூர அவரைச் சந்தோஷப் படுத்தியிருக்க வேண்டும். அதே நிமிஷம் நான் கடமையிலிருந்து தவறி விடவும் கூடாது.
“நீ ஏன் இங்கே நிக்கறே?..”
“இன்னிக்கு எனக்கு வேற டூட்டி… கொஞ்சம் ஃ ப்ரீ… கேஷ் வந்ததும் உங்களை அனுப்பிட்டு…”
“நான் பார்த்துக்கறேன்…போ…”
என் நண்பர் என்ற அடையாளம் வங்கியில் அவருக்கு. சற்றே வினோதம். இரண்டொரு வார்த்தைகள் பேசியதால். நானும் அவரும் நண்பர்கள் என்றாகிவிட முடியாது. ஆனாலும் இந்த விசித்திரப் பிணைப்பு அதன் போக்கில் தொடர்ந்தது.
அந்த மாதம் கிழவர் வரவில்லை. ரிக்க்ஷா சப்தம் கேட்ட பிரமையில் நான் ஓடியது சற்று அதிகம்.
இல்லை.. ஊருக்குப் போயிருக்கலாம். அடுத்த மாதம் சேர்ந்து எடுக்கலாம். பிற அலுவல்கள் என்னை சுவீகரிக்க கிழவரின் நினைவு பின்னுக்குப் போனது. இரண்டு மாதங்களாக வராதது மனத்தில் உறுத்தியது.
எடுத்து வைத்த ஒற்றை ரூபாய் நாணய பாக்கெட் பத்திரமாய் இருந்தது. ‘வேண்டும்’ என்று கேட்ட சகாவிடம் மறுத்து விட்டேன்.கிழவர் நாளையே வரக்கூடும். தர இயலாமல் சங்கடப்பட முடியாது.அவர்தான் வரவே இல்லை.
என்னால் பொறுக்க முடியவில்லை. லெட்ஜரில் அட்ரெஸ் பார்த்து, வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். தெரு முனையில் திரும்பிவிட்டேன்.
கோடியில் வடம் போக்கித் தெருவுக்குள் கடைசி வீடு. மதிலை ஒட்டிய வீடு.
“வயசானவன்னு இரக்கப்பட்டுத்தான் நீ என்னை அட்டெண்ட் பண்றிய?” என்றார் ஒரு தரம்.
“சேச்சே. எனக்கு எல்லாரும் காமன்… வயசானது.. லேடீஸ்… முடியாதது… இப்படி பேதம் இல்லே… ஈக்வல் ரைட்ஸ் … ஃபர்ஸ்ட் கம்… ஃ பர்ஸ்ட் ஸர்வ்டு… பாலிசி… நீங்க டாண்ணு ஃபர்ஸ்ட் கஸ்டமரா வரீங்க ஒவ்வொரு தரமும்… ஸோ… முதல் கவனம்…!’
“அதானே…”
கிழவர். முகத்தில் தெரிந்த நிம்மதி… ஞாபகம் வந்தது.
அவர் வீட்டுக்குள் போகவில்லை. திரும்பி விட்டேன். அதுவாக விபரம் தெரிகிறவரை நான் வாசலில் ரிக்க்ஷா எதிர்பார்த்தே காத்திருக்கப் போகிறேன்.
– செப்டம்பர் 2010