ராசாத்தி மகன்..!




“நானும் வர்றேன்ம்மா..! ”
வேலைக்குக் கிளம்பிய ராசாத்தி முந்தானையைப் பிடித்தான் பத்து வயது சிறுவன் சின்னராசு.
“வேணாம் ராசா ! நான் அங்கே வேலை பார்ப்பேன். நீ தனியா வாசல்ல உட்கார்ந்திருக்கனும்…”சமாதானப்படுத்தும் முகமாக மகனின் தாடையைப் பிடித்தாள் ராசாத்தி.
“உட்கார்ந்திருக்கேன்ம்மா…!” பிள்ளை பிஞ்சு கையால் தாயின் கையைத் தள்ளினான்.
தர்மசங்கடமாகிப் போனது ராசாத்திக்கு.
‘பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் இவனுடன் இது ஒரு தொல்லை!’ – மனம் சலித்தது அவளுக்கு.
மகனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
அவன் முகத்தைத் தூக்கிக் கொண்டு பிடிவாதமாக நின்றான்.
ராசாத்தி படிப்பறிவு அற்றவளென்றாலும் மகன் மனதை நிறைவேற்ற ஆசை. ஆனால் வீட்டு வேலையில் இவனை எங்கே வைத்துக் கொள்வது..?
வாசலில் இருக்கச் சொல்லலாம். துறுதுறு பிள்ளை சும்மா இருக்குமா…? ஓரிடத்தில் உட்காராது. சுற்றுச் சுவருக்குள்தான் வீடு என்றாலும் அங்கே இங்கே போகும். மரம் மட்டைகளில் ஏறும்.
தாசில்தார் குடும்பமோ பூச்செடிகள் வைத்து, கொரியன் புற்கள் வளர்த்து அழகாக வைத்திருக்கிறார்கள். கால்பட விடுவார்களா..?
புத்தம் புதிய விலை உயர்ந்த கார் நிற்கிறது. தொடவிடுவார்களா…?
இதை எல்லாம் விட முக்கியம்…. அந்த வீட்டுப் பிள்ளைகள் வெள்ளை வெளேர் சொக்காய்களில் பந்து விளையாடுவார்கள். இவன் அவர்களைப் பார்த்து ஏங்கி நிற்பான். வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காமல் பந்து பொறுக்கிப் போடுவான்.
தன் பிள்ளை அப்படி செய்வதை இவளுக்கு ஏற்காது. மனசு பொறுக்காது.
இன்றைக்கு ரொம்ப படுத்துகிறான். மணி வேறு ஆகிவிட்டது.
“சரி. வா.” -அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.
அந்த வீட்டு வாசல் படி ஏறும்போதே…
“யாரு.. உன் பையனா…?” வீட்டு எஜமானி அன்னபூரணி கேட்டாள்.
“ஆமாம்மா. ரொம்ப படுத்தினான்….” சங்கடத்துடன் நெளிந்தாள் ராசாத்தி.
“அதனால் என்ன..? பரவாயில்லை. !” என்ற அன்னபூரணி…
“பையா ! உன் பேரென்ன…?” கேட்டாள்.
“சின்னராசு !” சிறுவன் கொஞ்சமும் பதட்டம் தயக்கமில்லாமல் சொன்னான்.
அன்னபூரணிக்கே வியப்பு…
“பரவாயில்லே. தைரியமா பேசறான். என்ன படிக்கிறே…?” அடுத்துக் கேட்டாள்.
“அஞ்சாவது !” அதற்கும் உடனே பதில் சொன்னான்.
அன்னபூரணி அவனுடனான பேச்சை முறித்துக் கொண்டு…
“சரி ராசாத்தி. பையனை அப்படி உட்கார வைச்சுட்டு உன் வேலையைப் பாரு.” என்றவள்..சிறுவனைப் பார்த்து…
“பையா ..! அங்கே சமர்த்தா உட்கார்ந்துக்கோ. இங்கே பூச்செடியெல்லாம் பிய்க்கக்கூடாது. புல் தரை மேல் நடக்கக் கூடாது!” என்று உத்தரவு விட்டுவிட்டு அகன்றாள்.
இவனை ஒத்த இரு பையன்கள். ஒரு சிறுமி. தாசில்தார் பிள்ளைகள் .
பெரிய பந்தைத் தூக்கிக் கொண்டு மாடியிலிருந்து குதித்துக்கொண்டு வந்தனர்.
சின்னராசுவைப் பார்த்ததும்…
“அம்மா..! வாசல்ல யாரு..?” பெரியவன் கேட்டான்.
“ராசாத்தி மகன் !” அன்னபூரணி பதில் சொன்னாள்.
“ஹய்யா! அவனையும் சேர்த்து நாலு பேர். ரெண்டு ஜோடி!” கூவினான்.
அவனுக்கு குறைக்கு ஆள் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.
“ராகுல் ! அவன் வேண்டாம்..!” அன்னபூரணி சட்டென்று சொன்னாள்.
“ஏன்ம்மா…?” – பிள்ளைகள் முகத்தில் திகைப்பு.
“அவனுக்கு உங்க ஆட்டம் தெரியாது.!”
“தூக்கிப் போட்டு விளையாடுறதுதானே..! தெரியும் !”
“தெரியாது.! வேணாம் !” என்று அதட்டல் உருட்டலாய்ச் சொன்ன அன்னபூரணி… ராசாத்தி தலையைக் கண்டதும்…
“அவன் உங்களைவிடச் சின்னவன். விளையாடத் தெரியாது. அடி பட்டுடும் !” பேச்சை மாற்றினாள்.
தாய் பேச்சைக் கேட்ட பிள்ளைகள் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் பந்துடன் வாசல் புல் தரைக்கு வந்தார்கள்.
ஆளாளுக்குத் அதைத் தூக்கிப் போட்டு விளையாடினார்கள்.
சின்னராசு உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை என்றாலும்…அவர்களோடு சேர்ந்து விளையாட ஆசை.
கண்கள் மின்ன அவர்கள் விளையாடுவதைப் பார்த்தான்.
ராசாத்திக்கு மகனைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
சிறிது நேரத்தில்……..
அன்னபூரணி குளித்து முடித்து சாமி அறைக்குள் நுழைந்தாள். விளக்கு ஏற்றி சாமி படங்களுக்குப் பூக்கள் வைத்தாள். அருகிலிருக்கும் டப்பாக்களைத் துழாவினாள்.
சாம்பிராணி இல்லை.
அதை விட்டு வெளியே வந்து கையில் காசு எடுத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தாள்.
“ராசாத்தி!” – அழைத்தாள்.
“இதோ வந்துட்டேனம்மா..” இவள் ஈரக் கையைப் புடவைத் தலைப்பில் துடைத்துக் கொண்டு எஜமானி எதிரில் வந்து நின்றாள்.
“உன் பையன் பேரென்ன…?”
“சின்னராசும்மா…”
‘இந்தா. இந்தக் காசைப் பையன் கையில் கொடுத்து கோடி கடைக்குப் போய் சாம்பிராணி வாங்கிவரச் சொல்” நீட்டினாள்.
‘தன் பிள்ளைகளோடு விளையாடச் சொல்ல விருப்பமில்லை. பார்க்கவே விருப்பப் படாத கவுரவக் குறைச்சல். ஆனால்…சாம்பிராணி வாங்க மட்டும் இவன் தேவை. என்ன மனம்…?!! வேலைக்காரி மகனை வேலைதான் வாங்க வேண்டுமா…?! – ராசாத்திக்கு சுள்ளென்று முகம் சிவந்தது.
“என்னடீ…?”
“நான்தான் உங்க வீட்டு வேலைக்காரி. என் மகனில்லே. கொடுங்க காசை நான் வாங்கிக்கிட்டு வர்றேன்!” கறாராய்ச் சொல்லி கையை நீட்டினாள்.
‘பொளேர்!’
அன்னபூரணிக்கு செவிட்டில் அறை விழுந்தது போலிருந்தது. இதயத்தில் எங்கோ உதை விழுந்த உணர்வு. ராசாத்தியின் தன்மானத்தை கிளறி விட்ட தவறு. மன்னிப்புக் கேட்க மனமில்லாமல்……
தலையைக் குனிந்து கொண்டு அவள் கையில் காசைக் கொடுத்தாள்.